Loading

பூ-17

 

மறுநாள் காலை…

 

காவல் நிலையத்தில் அமர்ந்திருந்த சிவப்ரியன் மனதில் பல கணக்குகளை வகுத்துக்கொண்டிருந்தான்.

 

திலகா, சந்தோஷ் மற்றும் ராம் உள்ளே நுழைய, அவர்கள் மூவரின் முகத்தையும் ஆராயும் விதமாய் பார்வையிட்டான்.

 

“சார்.. ஒரு நாய் கடித்துக் கொண்டுவந்ததா நாம குடுத்த கையுறை துண்டும் இதுவும் அந்தக் கொலைகாரனோடதுதான்னு உறுதியாகிடுச்சு சார். வரும்போது தடயவியல் துறையில் விசாரிச்சுட்டு தான் வந்தேன்” என்று சந்தோஷ் கூற,

 

“அந்த க்ளொஸ் ஒரு புல்லட் ப்ரூஃப் க்ளௌஸ் சார். அன்ட் அவன் போட்டிருந்த டிரஸ் முழுசாவே புல்லட் ப்ரூஃப் தான். சாதாரணமா ஆன்லைன்ல அல்லது கடைகள்ல வாங்குற பொருள் இல்லை இது. அதனால கண்டிப்பா அவன் டார்க் வெப் மாதிரியான கள்ள சந்தைகளைத் தான் பயன்படுத்தியிருக்கனும்” என்று திலகா கூறினாள்.

 

முந்தைய நாள் நடந்தவற்றை நினைத்து மனவருத்தத்துடனும் சோர்வுடனும் வராது, அடுத்து செய்ய வேண்டியவற்றை முன்பே ஆலோசித்துவிட்டு வந்த தன் படையைக் கண்டு மெட்சியவன், ராமைக் காண, 

 

“நமக்கு அந்த க்ளௌஸ் துண்டைக் கொடுத்த நாயையைப் பிடிச்சுட்டு வந்திருக்கேன் சார்” என்று கூறினான்.

 

தெரு நாய்களைக் கொண்டு அப்படியென்ன செய்திட இயலும் என்று சாதாரணமாகக் கணக்கிடவில்லை அவன். நாய்கள் தங்களுக்குள் எல்லை வகுத்துக் கொள்வன. புதிதாக யாரேனும் அவர்கள் எல்லைக்குள் நுழைந்தாள், அவ்வெல்லையை அவர்கள் கடக்கும் வரை விடாது துறத்தித் தொல்லைக்கொடுக்கவும் செய்யும்.

 

அந்த நன்றிமிக்க ஜீவனின் உதவியைத் துச்சமாய் நினைக்காமல், ராம் செய்த காரியத்திற்கும் அவனை மெச்சவே செய்தான் சிவப்ரியன்.

 

“வெரி குட் டீம். நாம அடுத்து இல்லீகல் வெப்சைட்ஸ்ல புல்லட் ப்ரூஃப் டிரஸஸ் வாங்கினவங்களைப் பற்றித் தகவல் திரட்ட முடியுதானு பார்ப்போம். சந்தோஷ் அன்ட் திலகா நீங்க அதுபற்றி விசாரிச்சுட்டு வாங்க” என்று சிவப்ரியன் அவர்களை அனுப்ப,

 

ராம் அவனைப் பார்த்துத் தனக்கான வேலைக்காகக் காத்து நின்றான்.

 

“நீங்கப் பிடிச்ச நாய் எங்க ராம்?” என்று சிவன் கேட்க,

 

“வெளிய தான் சார்” என்று கூறினான்.

 

“ம்ம்..” என்றபடி எழுந்த சிவப்ரியன், “போய் அந்தக் கில்லரோட க்ளௌஸ் வாங்கிட்டு வாங்க ராம்” என்று கூறி, தானும் புறப்பட்டு வெளியேச் சென்றான்.

 

சில நிமிடங்களில் மீண்டும் அனைவரும் காவல்நிலையம் கூடினர்..‌

 

ராமிடமிருந்து அந்தக் கையுறையை வாங்கிய சிவப்ரியன் அந்தத் தெருநாயிடம் அதைப் போட்டான்.

 

மோப்பம் பிடித்த தெருநாய் சில நிமிடங்கள் அந்த கையுறையையே சுற்றிச் சுற்றி வந்தது.

 

பின் அதை மீண்டும் அந்த நாய் மோப்பம் பிடிக்க, பிரியன் அதன் கட்டினை அவிழ்த்து விட்டான்.

 

நாய் அந்த கையுறையைத் தூக்கிக் கொண்டு ஓடிவிட, “சார்.. நாய் ஓடுது” என்று மற்றவர்கள் பதறினர்.

 

“போகட்டும்.. பிடிச்சுடலாம்” என்ற ப்ரியன், “நீங்க போன வேலை என்னாச்சு?” என்றான்.

 

“சார்.. நாய் போயிடுச்சே” என்று திலகா கேட்க,

 

“பரவால்ல திலகா.. அந்த நாய் அதோட இடத்தை விட்டு எங்க போயிடப்போகுது” என்று கூறினான்.

 

“ம்ம்..” என்று அரைமனதாய் கூறியவள், “சைபர் டீம் வர்க் பண்றாங்க சார்.. கண்டுபிடிக்கிறது கஷ்டம் தான். இருந்தாலும் முயற்சி செய்றோம்னு சொன்னாங்க” என்று கூற,

 

“ம்ம்.. பழைய கேஸ் ஃபயில்ஸ் ரெஃபர் பண்ணிப் பார்ப்போம். குறிப்பா திருநங்கைகளுக்கு எதிரா நடந்த வழக்குங்கள் எதுவும் எடுத்துப் பார்ப்போம். ஒன்னு நாமத் தேடும் கில்லர் திருநங்கையா இருக்கனும். இல்லை திருநங்கை யாருக்கும் ரொம்ப நெருக்கமானவனா இருந்திருக்கனும்” என்று கூறினான்.

 

அதன்படியே அவர்களது அடுத்தத் தேடல் துவங்கியது.

 

சிலநிமிடத் தேடலுக்குப் பின், “சார்.. வழக்கா சேர்க்கப்பட்ட நிகழ்வுகள் மட்டும் தான் இங்க நம்மகிட்ட இருக்கும். ஆனா வழக்கில் சேராம நடந்த விபத்துக்கள்னு இருக்குல்ல?” என்று சந்தோஷ் கேட்க,

 

“நல்ல கேள்வி சந்தோஷ்” என்று சிவப்ரியன் கூறினான்.

 

“நியூஸ் பேப்பர்ஸ்ல தான் தேடனும் சார். ஆனா எத்தனை வருடங்களுக்கு முன்ன நடந்த சம்பவத்துக்காக கில்லர் இதைத் துவங்கினானோ தெரியாதே?” என்று திலகா கேட்டாள்.

 

“சார்.. ஆன்லைன் நியூஸ்ல தேடி பார்க்கலாமா சார்?” என்று ராம் கேட்கவும்,

 

“ஸோர்ஸ் நிறையா இருக்கு. ஆனா நமக்கு குறிப்பிட்டக் காலநேரம் தெரியாதது தான் பிரச்சினை. நடந்த ஒரு சம்பவத்துக்கு பல வருடம் கழிச்சு அவன் இப்பதான் இந்தக் கொலைகளைத் துவங்குறானா? இல்லை, இப்பத்தான் சம்பவம் நடந்ததானு தெரியலை. அதனால முதல்ல சமீபமா நடந்த வழக்குகளைத் தேடுவோம். பொதுவா திருநங்கைகளுக்கு எதிரா நடக்கும் கொடுமைகள் நடைமுறையில் அதிகமா இருந்தாலும் வழக்குகள் மற்றும் செய்திகளில் கம்மியா தான் இருக்கும். இதில் அந்த கொலையாளிக்கு சம்மந்தப் படும்படி எதுவும் நமக்கு சிக்கினா சரி.. இல்லாத பட்சத்தில் நம்ம பாடு கொஞ்சம் கஷ்டம் தான்” என்று சிவப்ரியன் கூற,

 

மற்ற மூவரும் தலையசைத்துக் கேட்டுக் கொண்டனர்.

 

அதன்படி அவர்கள் அனைவரும் தேடலைத் துவங்கினர். திலகா செய்தித்தாள்களில் தகவல் திரட்ட, ராம் வழக்குகளில் தேடினான். சந்தோஷ் இணையத்தில் செய்திகளைத் தேட, சிவப்ரியன் அமைதியாய் தனது அலைபேசியில் எதையோ கவனித்துக் கொண்டிருந்தான்.

 

இரவு வெகு தாமதமாகவும் “கைஸ்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. எல்லாரும் கிளம்புங்க” என்று சிவப்ரியன் கூறினான்.

 

“சார் நாம எடுத்த லிஸ்ட்ல மீதி உள்ள நால்வரையும் நோட் பண்ண எல்லா ஏற்பாடும் செய்துருக்கோம் சார்” என்று திலகா கூற,

 

“ம்ம்.. ஆனா அவங்களை இனி அவன் சூஸ் பண்ண மாட்டானோனு ஒரு எண்ணம். எதுக்கும் அவங்க நம்ம சர்வைலென்ஸ்லயே இருக்கட்டும்..” என்று கூறினான்.

 

மூவரும் புறப்பட்டுச் செல்லவும், தானும் புறப்பட்டு வந்தவன் வீட்டை அடைந்தான்.

 

தனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் செல்லத் திரும்பியவன் காதுகளை எட்டியது, திடீரென்று நாய் கத்தும் சப்தம்.

 

அதில் ஒருநொடி உண்மையில் பதறி நின்றவன், பின், நாய் குறைக்கும் சப்தத்தில் புருவம் சுருக்கி, மிக அமைதியாய், வாசல் பக்கம் வந்தான்.

 

அவன் வீட்டிற்கு பக்கவாட்டில் செல்லும் சாலையில் நாயின் சப்தம் கேட்டது. அமைதியாய் தன் அடிகள் வைத்து அவன் நகர, நாய் கத்தும் சப்தம் ஓய்ந்தது. அதில் பரபரப்பானவன் சட்டென்று வேக எட்டுக்கள் வைத்துச் செல்ல, அங்கு தூரத்தில் வெறித்தபடியே நின்றுகொண்டிருந்தது, ஒரு நாய்.

 

அதன் கழுத்துப்பட்டையில் இருந்த கருப்பு நிற பட்டியைக் கண்டதுமே அவனுக்கு அந்த நாயை அடையாளம் தெரிந்துவிட்டது. ஆம்! அந்த கொலைநடந்த பகுதியில் அவர்கள் கண்டுகொண்ட நாய்தான் அது.

 

அவன் வீட்டை தேடிக் கொண்டு வந்ததாக நினைத்தவன், அதன் அருகே சென்று, ஒற்றைக்கால் மடக்கியமர்ந்து, அதன் தலையைக் கோதினான். அவன் வாசம் உணர்ந்துகொண்ட நாய், வேகமாய் அவன் வீட்டுப் பக்கச் சுவரின் அருகே ஓடியது.

 

அதில் புருவம் சுருக்கியபடி அவன் எழ, சுவரின் கீழே புதருக்கு நடுவே எதையோ துலாவி, எடுத்துவந்து அவன் பக்கமாக நீட்டியது.

 

அதில் கண்கள் விரிய அதிர்ந்து போனவன், அதன் வாயில் இருந்த கையுறையைத், தன் கைக்குட்டைக் கொண்டு பிடித்து வாங்கினான்.

 

அவன் மூளை பரபரப்பானது. அந்த நாயைத் தன் வீட்டிற்குள் விட்டவன், அந்தக் கையுறையைத் தன் வாகனத்தில் பத்திரப்படுத்திவிட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு விரைந்து சென்றான்.

 

அவன் வீட்டைச் சுற்றியுள்ள தெருக்கலையெல்லாம் பார்வையிட்டுப் பரபரப்பாய் தேடியவன், குவார்டர்ஸ் பாதுகாவலரைச் சென்று சந்தித்துப் பேசினான்.

 

“இல்லைங்களே சார்.. நான் முழிச்சுதான் இருந்தேன்.. நான் ரவுண்ட்ஸ் வந்தவர யாரும் இல்லையே” என்று அவர் கூற,

 

அந்த ஒரு பாதுகாவலரை மீறி உள்ளே செல்வது அந்தக் குற்றவாளிக்கு அத்தனை சிரமமாக இருக்காது என்றும் புரிந்துகொண்டான்.

 

மீண்டும் விரைந்து சென்றவன் வீட்டை அடைய, அந்த நாய் அவன் வாகனத்தின் அருகே ஓடி வந்தது.

 

அதனை அமைதியாய் பார்த்தவன், அதன் கழுத்துப் பட்டியைக் கழட்டினான்.

 

மெல்ல அதன் தலை கோதிக் கொடுத்தவன், அதற்குப் பருக நீர் கொடுத்துவிட்டு, உள்ளே செல்ல, கூடத்தில் முகத்தைக் கரங்களில் புதைத்தவண்ணம் மூச்சுவாங்க அமர்ந்திருந்தாள், அக்னிகா.

 

நொடியில் மீண்டும் அவனுள் அட்ரினலைன் ரஷ்!

 

அவளிடம் பதறி வந்தவன், “ஹே ஸ்பார்கில்.. என்னாச்சு?” என்க,

 

பதறி நிமிர்ந்தவள், அவனைப் பார்த்த பின்பே ஆசுவாசம் அடைந்தாள்.

 

“என்னாச்சுடி?” என்று பதட்டமும் அக்கறையுமாய் அவன் குரல் ஒலிக்க,

 

அவள் உடலில் சிறு நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது.

 

“ப்ர..ப்ரியன்.. கக்..கனவு.. கனவு வந்து எழுந்தேன்.. தத்..தண்ணி குடிக்கலாம்னு வந்தேன்.. யா..யாரோ ஜன்னல்கிட்ட இருக்குற போல ஃபீல் ஆச்சு.. கரென்ட் வேற போயிடுச்சு. எனக்கு மூச்சு முட்ற போல ஆகவும் அப்படியே உக்காந்துட்டேன்” என்று தட்டுத்தடுமாறி அவள் கூற, அவன் மனம் தடதடத்தது.

 

அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டவன் கரங்கள், அவள் நடுக்கம் உணர்ந்து மேலும் வலிமை பெற்றது.

 

அவள் தலை கோதி, முகம் வருடிக் கொடுத்தவன், “ஹே ஸ்பார்கில்.. நான் தான் இருக்கேன்ல? ஒன்னுமில்ல.. பயப்படாத. ஜன்னலுக்கு வெளிய இருக்குற மரத்தோட நிழலைக்கூட பார்த்துப் பயந்திருப்ப” என்று கூற,

 

நடுக்கத்துடன் மெல்ல ஜன்னல் பக்கமாகத் திரும்பினாள்.

 

‘அப்படியும் இருக்குமோ?’ என்ற கண்ணேட்டத்தில் பார்க்கும்போது, அசையும் கிளையின் நிழல் அவளுக்கு ஆமென்ற பதில் கூறுவதாய் அமைந்தது.

 

மெல்ல மெல்ல அவளுக்கு ஆசுவாசம் கிடைக்க, இருவரும் அதே நிலையிலேயே அமைதியாக அமர்ந்திருந்தனர்.

 

அவள் தலை கோதுவதை மட்டும் அவன் நிறுத்தினான் இல்லை…

 

அவள் கன்னத்தின் ஓரம் கரம் கொடுத்து, அவள் முகம் நிமித்தியவன், “எதையாவது இந்த குட்டி மண்டைக்குள்ள போட்டு உருட்டிக்கிட்டே இருப்பியாடி?” என்று கேட்க,

 

மலங்க மலங்க விழித்தாள்.

 

“பிறகென்ன? ஒழுங்கா தூங்குறதை விட்டுட்டு இல்லாத வேலையெல்லாம் பார்த்துட்டு இருக்க நீ? அதுவும் மூச்சு இறைக்க தனியா வேற உட்கார்ந்திருக்க. அந்த வளர்ந்த மாடுகள் ரெண்டு உள்ள தூங்குற தூக்கத்துக்கு நீ கூப்பிட்டாக்கூட கேட்காது” என்று அக்கறையாய் அவன் அதட்ட, அவன் அக்கறை அவள் காதல் மனதை பாகாய் உருகச் செய்தது.

 

“மாத்திரை போட்டுட்டு படுக்கலையா நீ?” என்று அவன் கேட்க,

 

இடவலமாய் தலையசைத்தாள்.

 

“ஏன் போடலை” என்று அவன் அதட்டலாய் கேட்க,

 

சிரம் தாழ்த்தியபடி, “நீங்கதானே ப்ரியன் போடாம படுக்கச் சொன்னீங்க?” என்று கேட்டாள்.

 

அவனுக்கு உண்மையில் அவள் என்ன கூற வருகின்றாள் என்று புரியவில்லை.

 

அவன் கேட்கவும் ஒரு வேகத்தில் கூறிவிட்டவளுக்கு, ‘அப்ப என் நினைவுகளோட தூங்கினியா?’ என்று அவன் கேட்டுவிடுவானோ? என்ற பயம் வேறு வந்து தொலைத்தது.

 

அவள் முக அபிநயங்களைக் கொண்டு, அன்று மாத்திரையின்றி தூங்க தன் நினைவுகள் உதவுமென்று அவன் கூறிவிட்டுச் சென்றதைத்தான் அவள் குறிப்பிடுகின்றாள், என்று புரிந்துகொண்டவனாய், கள்ளக் குறும்போடு அவளைப் பார்த்தான்.

 

அவள் கன்னங்கள் அவளையும் மீறி செம்மை பூசிக் கொள்ள,

 

“நான் சொன்னதை ஒழுங்கா ஃபாலோ பண்ணிருந்தா கெட்ட கனவெல்லாம் வந்திருக்காது.. வேற மாதிரி கனவுதான் வந்துருக்கும்” என்று ஒரு மார்க்கமாய் கூறினான்.

 

அடிவயிற்றில் அலைகள் பாய்ந்தோடும் உணர்வு நொடியில் வந்துபோக, அவனை திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள், வெகு நெருக்கமாய் அவன் விழிகள் இருப்பதில் மேலும் அதிர்ந்தாள். அது மட்டுமா? அவனின் இறுகிய அணைப்பிற்குள் அல்லவா அவள் கட்டுண்டு இருக்கின்றாள்?

 

அவள் இடையை ஒரு கையால் வளைத்துப் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவள் முகம் தாங்கியிருந்தவன், அவளது விழிகளில் வந்துபோகும் மாற்றங்களை மென்மையான பார்வையோடு உள்வாங்கினான்.

 

‘என் காதல் ஒன்று போதாதா உன் கசடுகள் கலைய?’ என்று அவன் மனம் கேட்டக் கேள்வி, அவள் அகம் அடைந்ததோ? அவள் விழிகள் மெல்ல மெல்ல தழும்பிக்கொள்ள, அச்சத்துடன் சிரம் தாழ்த்திக்கொண்டாள்.

 

“அக்னி..” என்று காற்றுக்கும் நோகுமோ? என்பதாய் அவன் குரல் ஒலிக்க,

 

அவனிடமிருந்து நகர முற்பட்டாள்.

 

விடாது பிடித்துக் கொண்டவன் பிடியில் உடல் சிலிர்க்க, அவளுள் மெல்லிய மின்சார பதட்டம்…

 

“உனக்கும் உன் உணர்வுகளுக்கும் ஆயிரம் முறை விளக்கம் கொடுக்கவும் நான் தயார் தான்… ஆனா ஒருமுறையாது அந்த விளக்கங்களைப் புரிந்துகொள்ள நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது?” என்று கேட்க,

 

 

“ப்ரியன்.. எ..என்னை விடுங்களேன்” என்றாள்.

 

“ஏன்? என் பிடி அவ்வளவு அருவருப்பா இருக்கா?” என்று அமைதியாய் அவன் கேட்கவும் பதறிப்போய் அவள் பார்க்க, விழிகளிலிருந்து மடமடவென்று நீர் பாய்ந்தோடியது.

 

‘என்ன கேட்டுவிட்டான்? இவனிடம் உணரும் பாதுகாப்பினை வேறு யாரிடமாவது இதுவரை உணர்ந்திருக்கின்றோமா? அப்படியான அரவணைப்பில் அருவருப்பை எப்படி உணர்ந்திட இயலும்?’ என்று அவள் மனம் குமைய,

 

“தப்பில்லை.. உன் உணர்வுகள்.. நீ சொன்னா நான் திருத்திப்பேன்” என்று அவன் கூற,

 

விம்மி வரும் கேவலை இதழ் கடித்து அடக்கினாள்.

 

கடிபடும் அவள் இதழை பார்த்தவன், கண்கள் மூடி இடவலமாய் தலையசைத்து, விரல் வைத்து அழுத்தி, பற்களிடமிருந்து அவள் இதழுக்கு விடுதலை கொடுத்து,

 

“திருநங்கைனா தவறானவங்கனோ, அவங்களுக்கென்று காதல் உணர்வுகள் பிறப்பது அபத்தம்னோ நீ நினைச்சிருந்தா கூட உனக்கான விளக்கங்களை நான் குடுத்திருப்பேன்.. ஆனா நீ அப்படி நினைக்கலை. அப்படியெல்லாம் நினைக்காம விட்டதாலதான் நம்ம வாழ்க்கைல கசப்பான அந்த சம்பவங்கள் நடந்துடுச்சோனு உன் மனசுல பதிஞ்சு போயிடுச்சு. அதுலருந்து தான் உன்னால வெளிய வர முடியலை” என்று கூறினான்‌‌.

 

சொற்கள் நினைவு செய்த கோர நினைவுகள், அவளை வெளிப்படையாக நடுங்க வைத்தது… அழ வைத்தது…

 

அவன் காக்கிச் சட்டையைக் கசக்கிப் பிடித்தவள், “ப்ளீஸ்..” என்று காற்றாய் கரைய,

 

“என்னைப் பாரு ஸ்பார்கில்..” என்றான்.

 

இடவலமாய் தலையசைத்து அழுதவள் முகம் பற்றியவன், “நான் இருக்கேன்டி.. அதை மீட்டு வெளிய வந்துடலாம்.. குழந்தைகள் பெத்துக்கிட்டுத்தான் தாய் தகப்பன் ஆகனும்னு இல்லை.. எத்தனையோ குழந்தைகள் பெத்தவங்க இல்லாம தவிக்குறாங்க. அப்படியான குழந்தைகளிடம் நம்மலை பெத்தவங்களா தத்தெடுக்கச் சொல்லிக் கேட்கலாம்.. நமக்கான அழகான ஒரு குடும்பத்தை உருவாக்கலாம் ஸ்பார்கில்” என்று கூற,

 

“ப்ரியன்.. வேணாம்.. என்னால முடியாது” என்றாள்.

 

“நானும் ஏமாத்திட்டுப் போயிடுவேனோனு பயப்படுறியாடி?” என்று வலி நிறைந்த பார்வையோடு அவன் கேட்க,

 

“அய்யோ..” என்று தலையில் கரம் வைத்தவள், “என்னால முடியலை ப்ரியன்.. முடியவும் முடியாது.. இ..இது.. வலிக்குது.. இந்த உணர்வுகள் எனக்குக் கொடுத்தது எல்லாம் வலியும் ரணமும் மட்டும்தான்.. ஆணும் இல்லாம பெண்ணும் இல்லாம ஆண்டவன் படைச்சப் படைப்புனு பேசப்படும் கொடுமை, அ..அந்த ஒரு காதல் தோல்விக்குப் பிறகுதான் வலிக்கவே செய்தது.. ஒ..ஒரு காதல் என்னை பலவீனமாக்கினதே போதும்.. அதுவே ஆயுசுக்கும் என்னைக் கொல்லுது‌‌. எ.. என்னால உங்களுக்கு இந்த வாழ்க்கைல எதுவுமே தரமுடியாது.. சா..சாத்விக்கைக் காதலிச்சபோது, உ‌..உடலளவு எந்த சுகமும் தரமுடியாதுனாலும், மனசார காதலைக் கொடுக்க முடியும்னு நம்பினேன்.. இப்ப அந்த நம்பிக்கைக்கூட என்கிட்ட மிச்சமில்லைப் ப்ரியன்.. எ..என்னால உ..உங்களை வருத்த முடியாது.. சத்தியமா முடியாது. எப்ப என் மனசு எதை நினைவு செய்து, அது உங்களை எதாவது பேச வச்சுடுமோனு பயந்து பயந்து ஒரு வாழ்க்கையை என்னால வாழ முடியாது. காதல் இரண்டு கைகளும் சேர்த்து தட்டி எழுப்பப்படவேண்டிய கைதட்டல் போல.. எ..என்னால உங்களுக்கு எதையுமே கொடுக்க முடியாதுனு தோன்றுது ப்ரியன்.. உடைஞ்சுபோன கையாதான் உணருறேன்.. அப்படியொரு நிலை உங்க வாழ்க்கைல என்னை ஒரு பாரமாதான் உணர வைக்கும். அது உங்களுக்கும் கஷ்டம், எனக்கும் கஷ்டம்.. இந்த ஜென்மத்துக்கு எனக்குக் காதலிக்கக் குடுப்பன இல்லைனேகூட நினைச்சு என் வாழ்க்கையை ஓட்டிக்குறேன் ப்ரியன்.. என்கிட்டவந்து காதலைக் கேட்காதீங்க.‌ என்னால அந்த வலியைத் தாங்கவே முடியலை.. அதுவும் உங்களுக்கு மறுக்கும் அந்த வலியைத் தாங்கவே முடியலை” என்று கதறினாள்.

 

துவண்டுபோய் அழுதாள்.. இன்னும் எத்தனை பாரங்கள்தான் அவளுக்குள் மண்டிக் கிடக்கின்றனவோ என்று அவளுக்காக அவன் அழுதான்…மௌனமாய்!

 

துவண்டு தொங்கிக் கொண்டிருந்த அவள் கரம் பற்றி, அதனில் தன் கரத்தை லேசாய் அடித்து ஓசை எழுப்பினான்.

 

அழுது கொண்டிருந்தவள், அவன் செயல் புரியாது கண்ணீர் படிந்த முகத்தோடு அவனை நோக்க, 

 

“உடைந்துபோன கரமா இருந்தாகூட அதனால ஓசை எழுப்ப முடியும். எதுவும் செய்யாம சும்மா, கூட இருந்தாமட்டும் போதும். இன்னொரு கைக்கு அசைவு இருக்கு. அந்த கை தானா வந்து இணைஞ்சு பிடிச்சுக்கும், தட்டி ஓசை எழுப்பிக்கும், தட்டிக்கொடுத்து அரவணைச்சுக்கும், துணையிருக்கும்.. அந்த உடைந்துபோனதா சொல்லப்படும் கையால எதுவுமே செய்ய முடியலைனாகூட, இன்னொரு துணையிருக்கும் போது, ஓசை வரத்தான் செய்யும்” என்று ஆத்மார்த்தமான குரலில் கூறினான்.

 

அவன் கொடுத்த விளக்கத்தை சற்றும் எதிர்பாராது அதிர்ந்து, சிற்பி இதழ் திறந்து அவள் விழிக்க,

 

அவளையே வேதனை பொங்கும் விழிகளோடு அமைதியாகப் பார்த்தான்.

 

“நீ இவ்ளோ பேசினதானே? நம்ம காதலுக்கு முன்ன இது எதுவுமே எனக்குப் பெருசா தெரியலை.. நிச்சயம் நம்ம காதல், இதையே நீயும் உணரும்படிச் செய்யும்… என் காதல் செய்ய வைக்கும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்று உறுதியாய் அவன் கூற,

 

சோர்வாய் அவனைப் பார்த்தாள்.

 

“ப்ளீஸ்.. எதுவும் பேசாத.. போதும்.. ரொம்ப வருத்தமாருந்தா கட்டிப்பிடிச்சு அழுதுக்கோ.. இல்லைனா படுக்கலாம்..” என்று அவன் கூற,

 

தன் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு பெருமூச்சோடு எழுந்தாள்.

 

அவனிடம் புலம்பிமுடித்து எழும்போதெல்லாம் அவள் மனதின் பாரம் குறைவதாக உணர்ந்தாள்..

 

திரும்பி அறைநோக்கி செல்லவிருந்தவள் கரம் பற்றித் திருப்பியவன், அவளை இறுக அணைத்துக் கொண்டு, “ரொம்ப கஷ்டமாருக்குடி நீ வருத்தப்படும்போது.. ஆனா அந்த கஷ்டமெல்லாம் உன்னை நான் சந்தோஷமா வச்சுக்கனும்னுதான் சொல்லுது.. அப்படி உன் மனசுலயும் ஒன்னு சொல்லும்.. அதை கேட்கனும்னா, உன் மனசு அடிச்சுக்குற வேண்டாத ஓசைகளை நீ அணைக்கனும்.. ஏன்னா இந்தக் காதல் மென்மையானது. அந்த மென்மையான ஓசையைக் கேட்க, தேவையில்லாத வன்மையான ஓசைகளை அணைக்கனும்.. அணைச்சுவை.. கேட்கும்.. அப்ப உனக்குப் புரியும்.. இந்த காரணங்களையும் விட, என் காதல்.. நம்ம காதல் பெருசுனு” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றான்.

 

அவன் சென்ற திசை பார்த்து மௌனமாய் நின்றவள், பிரித்தறியா உணர்வோடு அறைக்குள் செல்ல,

 

அங்கு கட்டிலில் சாய்ந்து அமர்த்து பெருமூச்சு விட்டவன், தன் கரத்தில் இருக்கும், நாயின் சிகப்புப் பட்டியைப் பார்த்தான்.. கூர்மையாய்!

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment