பூ-16
தனக்கு முன்னே ராம் மற்றும் திலகா, தனக்குப் பின்னே சிவப்ரியன் மற்றும் சந்தோஷ் நிற்பதைப் பார்த்தும் அசராமல் நின்றான் அக்கொலையாளி!
அவன் உடல் பாவத்தில் அப்படியொரு திமிர்!
கீழே வலியில் உருண்டுகொண்டிருந்த ஒருவனை தான் பாவம் எவருமே கருத்தில் கொள்ளவில்லை!
அசராமல் தனது கடப்பாரையை அவன் நெஞ்சில் வைத்த கொலையாளி லேசாய் அழுத்த, காயம்பட்ட இடத்தில் கொடுத்த அழுத்தத்தில் திலக் கத்தினான்.
“என்ன? இப்ப நாங்க உன்னை விடலைனா இவன கொன்னுடுவேன்னு சொல்லப் போறியா? இவன் பின்னாடி ஒருநாள் சுத்தினதுக்கே அடிச்சுபோடுமளவு எனக்குக் கோபம் வந்தது. இதுல இவன் ஒருத்தனுக்காகப் பார்த்து உன்னை விட்டுவைப்போம்னு நினைக்குறியா?” என்று ராம் கேட்க,
‘சாபாஷ்’ எனும் விதமாய் கையை உயர்த்திக் காட்டினான்.
சிவப்ரியன் ஏதும் பேசவில்லை. அவன் உடல்மொழி, அவனது நோக்கம், எண்ணவோட்டம் போன்றவற்றை அவதானித்தபடி அவன் பின்னே நின்றவன் மெல்ல நெருங்கினான்.
பூனை நடையிட்டபோதும் அவன் காலடி சப்தம் கேட்கும் விதமாய் கொலையாளி காதுகள் கூர்மையுற, சட்டெனக் கடப்பாரையை தரையில் ஊனி எம்பியவன் பின்னே வருபவனைத் தன் கால்களால் எட்டிமிதித்துக் கீழே தள்ளியிருந்தான்.
அவன் செயலில் மற்ற காவலர்கள் அனைவரும் ஒரு நொடி அரண்டுபோயினர் எனதான் கூற வேண்டும்.
ராம் தகவல் கொடுத்திருந்தமையால் காவலர்கள் படை ஒன்று இருபுறமிருந்து ஓடி வரத் துவங்க, அவற்றை ஒருவித அலட்சியத்துடன் பார்த்தவன், பக்கத்திலிருக்கும் சுவரொன்றில் எம்பி குதித்தான்.
துள்ளிக் கொண்டு எழுந்த சிவப்ரியன் அவன் தப்பிவிடாதபடியாக அவன் கால்களில் குறி வைத்துச் சுட, அது தாக்கியபோதும் அந்தக் கொலையாளியிடம் எந்த மாற்றமும் இல்லை!
காவலர்கள் அவனை நோக்கிக் குறி வைத்துச் சுட, ஏதோ தூசி பட்டதைப் போல் தட்டிவிட்டுக் கொண்டவன், மறுபுறம் குதிக்க முற்பட்டான்.
“யூ…” என்று கத்தியபடி வந்த சிவப்ரியன் அவன் குதிக்கும் தருவாயில் அவன் கரம் பற்ற முயல, அவனது கையுறை மட்டும் கையோடு வந்தது!
அடுத்த நிமிடம் எங்கே சென்றானெனத் தெரியாத விதமாய் காணாமல் போயிருந்தான்…
ஏமாற்றத்தின் பெரும் வலி அங்கிருந்த காவலர்களைத் தீயாய் சுட்டது.
அத்தனை நபர்கள் சுற்றியிருந்தும்கூட அவன் திமிராய் நின்றது, இத்தனை எளிதில் தப்பிவிடும் துணிவில் தான் என்பது புரிந்தது.
ஒரு குற்றவாளி, இத்தனைக் காவலர்களையும் மீறித் தப்பியதில் அக்காவலர்களுக்கு பெரும் அவமானமாக இருந்தது!
பின்னே வந்த காவல்படை யாவும், தாங்கள் தற்போதுதான் வந்ததாய் கூறி தங்களுக்குள் பேசிக் கொள்வது இவர்கள் நால்வருக்கும் கேட்டது.
சிறிது நேரத்தில் உயர் அதிகாரி மகாலிங்கம், தடயவியல் மற்றும் மருத்துவக் குழுவினர் அவ்விடத்தை ஆக்கரமித்தனர்.
உயர் அதிகாரி முன் கம்பீரமே உருவாய் நின்று இவ்வழக்கை தன்வசம் பெற்று வந்த சிவப்ரியனுக்கு, அக்கணம் அவரை நேர்கொள்ள பெரும் தயக்கமாக இருந்தது.
“என்ன நடக்குது சிவப்ரியன்?” என்று கேட்ட அதிகாரியின் குரலில் இருந்தது, கோபமா? நக்கலா? ஆற்றாமையா? என்பதை அவனால் அனுமானிக்க இயலவில்லை.
“குற்றவாளியை பிடிக்கும்வரை வந்து, இத்தனை காவலர்கள் இருந்தும் தப்பிக்க விட்டிருக்கீங்க” என்று கேட்ட மகாலிங்கம் அவர்கள் அனைவரையுமே குற்றம் சாட்டும் பார்வை பார்க்க,
கண்களை இறுக மூடி, ஆழ்ந்த மூச்சை வெளியேற்றியவன் தன் கூர் விழிகளால் அவரை நோக்கி, துணிவான பார்வையோடு நிமிர்ந்து நின்றான்.
அவன் வேதனை பட்டதும், வெட்கப் பட்டதும் சில நிமிடங்களே என்பதுபோல் அவற்றை தூசாய் தட்டி உதவியவன், “கேஸ் கையில் கிடைத்த குறுகிய காலத்திலேயே கில்லரை நாங்க ரொம்ப பக்கமா நெருங்கிட்டோம் சார். ஆனா தி கில்லர் இஸ் வெரி ஸ்மார்ட்” என்று கூற,
“அவனுக்குப் பாராட்டு பத்திரிகை வாசித்தது போதும். இப்ப நடந்ததுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?” என்று சற்றே எரிச்சலாகக் கேட்டார்.
“சீக்கிரமே பிடிச்சுடுவோம் சார்” என்று நிமிர்ந்து அவரை நேர்கெண்ட பார்வை பார்த்தபடி அவன் கூற,
அத்தனை நேரம் அவனைத் திட்டிக் கொண்டிருந்தவரைக் கூட அவனது துணிவு ஒரு நொடி அசைத்துப் பார்த்தது என்றும் கூறலாம்…
எல்லாம் சரியான பாதையில் செல்லும்வரை ஒருவனிடம் இருக்கும் துணிவை விட, தவறாய் முடிந்தாலும் கூட துணிவும் நம்பிக்கையும் குறையாமல் இருப்பதே வெகு பயங்கரமானது… அதற்கு தற்போது தப்பிச் சென்ற கொலையாளியும் ஒரு சான்றே!
“இப்படித்தான் முன்னயும் சொன்னீங்க மிஸ்டர் சிவப்ரியன்” என்று அழுத்தமாக ஆனால் சற்றே அமைதியாக அவர் வினவ,
“ஒன்னுமே இல்லாதப்பவே இதைச் சொல்லி அவன் கையைப் பிடிக்கும் வரை வந்துட்டோம் சார். இப்ப இத்தனை பக்கம் வந்த பிறகு விட்டுடுவோமா?” என்று கூறியவன் தன் கூட்டாளிகளை ஏறிட்டான்.
கடும் ஏமாற்றம் மற்றும் வருத்தத்தின் சுவடு அவர்கள் முகத்தில் வெகு அப்பட்டமாய் தெரிந்தது.
அதைக் கண்டு அவர்களிடம் ஒரு அழுத்தமான பார்வையை வீசி தலையை இடவலமாய் ஆட்டியவன், மகாலிங்கம் புறம் திரும்பி, “பிடிச்சிடுவோம் சார்” என்று கூறினான்.
கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் களைய, தனது குழுவிடம் வந்தவன், “நாளைக்குக் காலையில சந்திப்போம். எல்லாம் வீட்டுக்குப் போங்க” என்று கூற,
சிறு தலையசைப்பைக் கொடுத்தனர்.
“இப்ப நடந்ததை கனவா மறந்துட்டு வந்துடுங்கனு சொல்ல மாட்டேன். இப்ப நடந்ததை திரும்ப அவனைப் பிடிக்கும் வரை மறக்கவே கூடாது” என்று உரக்கக் கூறியவன், அவர்களை ஆழ்ந்த பார்வை பார்த்துவிட்டுச் சென்றான்.
மணி இரவு மூன்றை கடந்திருந்தது!
கம்பீரமாக பேசிவிட்டு வந்துவிட்டான் தான்… ஆனால் அடுத்து என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை!
சோர்வாய் வீட்டை அடைந்தவன் கதவினைத் தட்டிவிட்டு காத்திருக்க, கதவு திறக்கப்படவில்லை. தனது தங்கைக்கு அழைத்து கதவைத் திறக்கக் கூறலாமென அலைபேசியை அவன் எடுக்கும் நேரம், கதவு திறந்துகொண்டது.
அந்த சோர்வான இரு விழிகள், அத்தனை நேரம் இல்லாது அவன் மனதை சாந்தப்படுத்தும் விதமாய்..
“தூங்கலயாடி நீ?” என்று கேட்டபடியே உள்ளே வந்தவன், சோர்வாய் நீள்விருக்கையில் அமர,
“ஷூவை கழட்டி வைச்சுட்டு வந்து உட்காரலாம் தானே?” என்று குறைபட்டுக் கொண்டாள், அக்னிகா.
சொல்லிய பின்பு அவளின் ஒரு மனமோ, ‘இது அவர் வீடு.. அவர் எப்படியும் பண்றார்.. உனக்கென்ன?’ என்று கூற, ‘எனக்கென்னவா? அதுசரி.. அவர்தான பிடிச்சிருக்குனு பின்னாடியே வராரு..’ என்று மறுமனம் இழுத்தது…
‘அதுக்கு? நீயும் பிடிச்சிருக்குனு சொன்னியா என்ன?’ என்று அந்த மனம் கேட்க, அதற்குப் பதிலாற்ற இயலாது தன்னை திசை திருப்பும் விதமாய் அறை செல்ல முற்பட்டாள்.
சோர்வாய் காலணிகளைக் கழட்டியவன் அப்படியே சாய, அவனிடம் அயர்வான ஒரு பெருமூச்சு… காலையிலிருந்து அலைந்ததில் உடல் அசதியும் பலமாய் தாக்கியது.
அவன் முகபாவம் கண்டு செல்ல மனமில்லாதவளாய், “சாப்டீங்களா?” என்று அவள் கேட்க,
மணியைப் பார்த்தான்.
தானும் கடிகாரத்தைப் பார்த்தவள் அவன் முகம் காண, “இல்லைதான்.. ஆனா இப்ப சாப்பிடும் அளவு தெம்பு இல்லை.. தூங்கினா போதும்” என்றான்.
அவனை ஏற இறங்க பார்த்தவள் சென்று பாலும் ஒரு வாழைப்பழமும் கொண்டு வந்து தர,
அவளை அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்தவன், “பாலும் பழமுமா?” என்றான்.
அவன் எந்த அர்த்தத்தில் கேட்கின்றானெனப் புரிந்தும் கூட, அதைக் கண்டுகொண்டதைப் போல காட்டாது அலட்சியமாய் கடந்தவள் மேஜையில் அவற்றை வைத்தாள்.
சிறு சிரிப்போடு அதை உண்டு பாலையும் பருகியவனுக்கு அப்போதே கொஞ்சம் தெம்பாகவும் திருப்தியாகவும் இருந்தது. உணவு உள்சென்ற பிறகுதான் பசியே உரைக்கப்பெற்றது…
அவன் உண்டு வைத்ததை எடுத்துச் சென்றவள் தண்ணீர் போத்தலை கொண்டு வந்து மேஜையில் வைத்துவிட்டு, “உங்க ரூம் காலியாதான் இருக்கு. அங்கயே போய்ப் படுங்க” என்று கூற,
“ஏன் உன் ரூம் காலியாருந்தா இடம் தரமாட்டியா?” என்று நக்கலடித்தான்.
அவனைப் பார்த்து, “அதான் அனுமதியே இல்லாம வந்து படுக்குறீங்களே” என்று அவள் கூற,
“பாருடா? தெரிஞ்சு போச்சா? நியாயமா நீ கோவமாதானே கேட்டிருக்கனும்? லவ் மேஜிக் எதும் வேலை செய்துடுச்சோ?” என்று அவளை ஆழம் பார்த்தான்.
அவன் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் திடுக்கிட்டவள், வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல முற்பட,
“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறினு எடுத்துக்கலாமா ஸ்பார்கில்?” என்றான்.
அப்படியே நின்றவள், ஒரு முழு நிமிட அமைதிக்குப் பின் அவனை மெல்ல திரும்பிப் பார்க்க,
“ஏன்டி மறுக்குற? மறுத்து மருகாத ஸ்பார்கில். நம்ம நேசத்து மேல நம்பிக்கை இல்லையா? தைரியமா வாடி. இந்தப் பந்தம் நிச்சயம் நம்ம ரெண்டுபேர் வாழ்விலும் வசந்தம் பூக்க வைக்கும்” என்றான்.
அவளுக்குக் கண்கள் கலங்கியது!
“ப்ளீஸ் ப்ரியன்… வேணாம்” என்று அவள் மெல்லிய குரலில் கரைய,
மெல்ல எழுந்து அவள் முன் வந்து நின்றான்.
அவன் வந்து நின்றதும் சிரம் தாழ்த்திக் கொண்டவள், “ப்ளீஸ்..” என்று காற்றாகியக் குரலில் இறைஞ்ச,
அவள் நாடி பிடித்து முகம் நிமிர்த்தித் தன்னைப் பார்க்கச் செய்தவன், அவள் கலங்கி சிவந்த கண்கள் கண்டு, “என்னதான்டி உன்னைத் தடுக்குது? மனசுவிட்டு பேசிடேன்” என்றான்.
இதழ் கடித்துத் தன் கண்ணீரை அவள் அடக்க முற்பட, கட்டை விரல் கொண்டு அவள் நாடியில் அழுத்தியவன், அவள் பற்களிடமிருந்து இதழுக்கு விடுதலையளிக்க,
“ப்ரியன் ப்ளீஸ்..” என்றாள்.
“உன் மனசுல என்னயிருக்குனு சுசி மூலமா தெரிஞ்சுக்க நிமிஷம் போதாது அக்னி. ஆனா அது எனக்கு தேவையில்லை. இதோ..இந்த ரெண்டு கண்ணும் என் கண்ணைப் பார்த்து, இதுதான்டா என்னைத் தடுக்குது. அதைத் தகர்த்து என்னை விடுவிச்சு உன் காதலில் சிறைபிடிச்சுக்கோனு கேட்கனும். அதுதான் எனக்கு வேணும்” என்று அவன் கூற,
அவள் உடல் மெல்ல அழுகையில் குழுங்கியது..
“ப்ளீஸ் அக்னி…” என்று தற்போது அவன் இறைஞ்ச,
கால்கள் தளர பொத்தென அமர்ந்தாள்.
“ஹே..” என்று அவள் முன் மண்டியிட்டவன், “ஏன்டா மா?” என்று அத்தனை பரிவாய் கேட்க,
“நா.. நான் உங்களுக்கு வேணாம் ப்ரியன்.. ப்ளீஸ்” என்று கூறினாள்.
“ஏன்டா? என் அக்னி எவ்வளவு போல்ட்? திருநங்கைகள் காதலிக்கக் கூடாதுனு ஏதுமிருக்கா என்ன?” என்று கனிவினும் கனிவாய் அவன் அவள் தோள் பற்ற,
“அப்படி நினைச்சவ தான் ப்ரியன் நானும். இ.. இப்ப..” என்றவள் முகம் மூடி தன் கண்ணீரை அடக்க முற்பட்டாள்.
அவளையே ஆழ்ந்து பார்த்தவன் அவள் கரங்களை விளக்க, “வேணாம் ப்ரியன்.. இது சரிவராது. எ..எனக்கு இந்த காதல் மேலருந்த நம்பிக்கையே விட்டுபோச்சு.. வெறுப்பாருக்கு.. அது உங்களையும் உங்கக் காதலையும் பாதிச்சுடும். என் ரணமும் உங்களுக்கு வேண்டாம். என்னாலாகும் ரணமும் உங்களுக்கு வேண்டாம்” என்று கூறினாள்.
“காதல் வெறும் சுகம் மட்டுமே காண்பதில்லைடா ஸ்பார்கில். தன் இணையிடம் சுகம் மட்டுமே இல்லாம, அவ கோபம், உதாசீனம், வலி, வேதனை, ரணம், பாசம், நேசம்னு அத்தனையையும் ஏத்துக்குறது தான் உண்மையான நேசம். நான் உன்னில் அத்தனையையும் ஏற்க தயாரா இருக்கேன்” என்று அவன் கூற,
“நான் தயாரா இல்ல ப்ரியன். என் காயத்தை நீங்க தாங்கிடுவீங்க.. ஆனா என்னால தாங்க முடியாதே? என்னால நீங்க.. என் நேசம் உங்களை வருத்தும்.. நீங்க தாங்கிப்பீங்க.. உங்க நேசம் என்னை வருத்தாதா? நான் அதைத் தாங்க மாட்டேனே” என்று அழுதாள்.
அழுகையோடு வெளிவந்த அவளது நேசத்தில் அவன் இன்பச்சாரல் தாக்கப்பட்டு சில்லாய் உடைந்து உருகிக் கொண்டிருந்தான்.
‘பைத்தியக்காரி.. இவ்வளவு பிடிச்சும் ஏன்டி இப்படி மருகுற?’ என்று மனதோடு கேட்டுக் கொண்டவன், அவள் தலைகோதி, “தாங்குவ ஸ்பார்கில்.. ஏன் தெரியுமா?” என்று நிறுத்த,
கண்ணீர் மின்னக் கேள்வியாய் அவனை ஏறிட்டாள்.
அவள் முகமருகே குனிந்து, “பிகாஸ்.. யூ டூ லவ் மீ.. காதலுக்கு தாக்கவும் தெரியும், தாங்கவும் தெரியும்” என்று தன் மூச்சுக்காற்றின் உஷ்ணம் மோதக் கூற,
உடல் சிலிர்க்க உள்ளம் பூரித்து போனாள்.
“ப்..ப்ரியன்.. வேணாம் ப்ளீஸ்..” என்று கதறியபடியே அக்னிகா தன்னையும் மீறி அவனை எம்பி அணைத்துக் கொண்டு அழுதிட,
அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவன் மிக இறுக்கமான அணைப்பில் தலைகோதி ஆறுதல் படுத்த முயற்சித்தான். அவன் இறுக மூடிய விழிகளில் கண்ணீர் மின்ன, இதழில் ஒரு மந்தகாசப் புன்னகை.
“உன்னை வேணாம்னு நான் எப்படிடி சொல்லுவேன்.. உன் கவலை என்னை பாதிச்சு, அந்த பாதிப்பின் ஆழம் ஏற்படுத்திய காதல் காயம்டி நீ.. எஸ் யூ ஆர் மை லவபில் வூன்ட்.. அதுக்கு ஆகச்சிறந்த மருந்தும் நீதான்டி ஸ்பார்கில்” என்று ஆத்மார்த்தமாய் கூறியபடி அவள் முதுகை வருடிக் கொடுத்தான்.
“ப்பா.. செம்ம லவ்வுல?” என்று கதவிடுக்கில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த மஹதி கூற,
“ஆமால்ல? சோ சுவீட்” என்று அவளுக்குப் பின் நின்று எட்டிப் பார்த்தபடி சுசி கூறினாள்.
சில நிமிடங்கள் அவளுக்குத் தன் சிறு வருடலில் ஆறுதல் அளித்தவனின் ஸ்பரிசம் உணர்ந்து சுயம் மீண்டவள் அவனிடமிருந்து திடுக்கிட்டு நகர, அவள் முகத்தில் சொல்லொண்ணா நாணம் வந்து அப்பிக் கொண்டது!
பதட்டத்துடன் தன் சிகை ஒதுக்கி எழுந்தவள், “ச..சாரி.. நா..நான்..” என்று தடுமாறினாள்.
தானும் எழுந்து நின்றவன், அவளை புன்னகையுடன் நோக்க,
“தூங்குங்க..” என்றுவிட்டு, ‘இனி எங்க தூங்க?’ என்ற அவன் முனுமுனுப்பைக் கேட்டும் கேட்காததைப் போல் அறைக்குச் சென்றாள்.
அவள் வருவதற்குள் மீண்டும் சென்று கட்டிலை ஆக்கரமித்துக் கொண்ட தோழிகள் தூங்குவதைப் போன்று நடிக்க,
வந்து கட்டிலில் அமர்ந்தவள் மெல்ல மூச்சினை இழுத்து விட்டாள்.
படுத்திருந்த இருவரும் அவளை ஓரக்கண்ணால் பார்க்க, தன் சட்டையை தூக்கி சுவாசித்துப் பார்த்தவள் முகம் மெல்ல மலர்ந்து மந்தகாசப் புன்னகை சிந்தியது!
-தொடரும்…
வாவ்