அத்தியாயம் 18
தன் நெஞ்சில் சாய்ந்து அவள் அழுது கொண்டிருக்க, மௌனமாய் அமர்ந்திருந்தவன் மனம் மட்டும் சத்தமாய் கத்திவிடு என கெஞ்சிக் கொண்டிருந்தது.
திருமணமான இத்தனை நாட்களில் தன்னை அவளுக்கு பிடித்துவிட்டது ஒன்றும் அவள் தவறு இல்லையே! அது இயல்பாய் வந்ததில் அவனுக்கும் மகிழ்ச்சி தான்.
அவனுக்கும் அவளை பிடித்திருக்கிறது தான். ஏற்றுக் கொண்டும் விட்டான் தான். பின் என்ன தான் பிரச்சனை என்றால் இருவரின் பிரிவு மட்டும் தான்.
நிச்சயம் இப்படி இருக்கும் வரை தங்களுக்குள் எதுவும் சரியாகாது என புரிந்தது அவனுக்கு.
அழுகை குறையும் வரை அவனிடம் சாய்ந்திருந்தவள் தன் நிலை உணர்ந்த பின் சட்டென நிமிர, கார்த்திகைசெல்வனும் அவளை தடுக்கவில்லை.
“வேற எந்த இன்டன்ஷனும் எனக்கு இல்லை தேவா!” என தெளிவாய் அவன் சொல்ல, அந்த பதிலுமே அவளுக்கு காயம் தான் கொடுத்தது.
“ஓகே! நீ சொன்ன எதுவும் தப்பில்ல. என்கிட்ட சொல்றதும் தப்பில்ல. என்கிட்ட தானே சொல்ற? நாம தான் பேசிக்கணும். நாம தான் தீர்த்துக்கணும்!” என்றான் அவளருகில் அமர்ந்தே.
“எதிர்பார்த்து ஏமாந்துட்டேன்னு சொன்ன தானே? அதுக்கு காரணம் என்னோட வார்த்தைகள் இல்லையா? “ என கேட்க, பதில் சொல்லவில்லை அவள்.
“உனக்கு என்னனு சொல்லி நான் புரிய வைக்க போறேன்னு தெரியல தேவா! ஆனா ஒண்ணு! நீ என்கிட்ட எதிர்பார்க்கலாம். நிச்சயம் ஏமாறமாட்ட!” என்றவன் சொல்லில் அவள் நிமிரவில்லையே தவிர மனம் கொஞ்சம் சமாதானம் அடைந்திருந்தது தேவதர்ஷினிக்கு.
“கல்யாணம் ஆனதும் சடனா நான் கிளம்பி போனது தப்பா? ஓகே தப்பு தான். அதுக்கு சாரி! அம்மாகிட்ட தெரியுன்றதுக்காக கல்யாணம் பண்ணிக்கணுமானு கேட்டேன் தான். அதுவும் தப்பா? ஹ்ம் ஓகே சாரி! ஆனா இந்த ரெண்டும் நடந்தப்ப என்னோட நிலைமையே வேற! அதை உனக்கு எப்படி புரிய வைக்க போறேன், நீ புரிஞ்சுப்பியான்னு இப்பவே எனக்கு பதட்டமா இருக்கு” என தன்னிலை விளக்கம் கொடுக்க ஆரம்பித்தான் கணவன்.
“நான் திரும்பி வந்தேன்ல அப்ப நிஜமாவே நிறைய ரியலைஸ் பண்ணிட்டேன். என்னோட லைஃப்னா இது தான். அது தேவாவோட தான்னு நான் முழுசா புரிஞ்சிகிட்டு வேற எந்த குழப்பமும் இல்லாம தான் வந்தேன். உன்கிட்ட ஹஸ்பண்ட்டா பேச, பார்க்கன்னு தான் நானும் நினைச்சேன்!” என்றதும் அவள் கொஞ்சம் கொஞ்சமாய் நிமிர்ந்து அவனைப் பார்க்க,
“வெரி சீரியஸ் தேவா! நீ நம்பி தான் ஆகணும். நாலு நாள் போனதே தெரியல. உன்கிட்ட எப்படி என்னை கன்வே பண்ணனும் புரியல. சரி வீட்டைப் பார்த்துட்டு வந்து பேசலாம்னா அதுக்குள்ள போன்ல பேசி சண்டையாக்கிட்டோம்!” என்றதும் அவள் முறைக்க,
“நான் தான். நான் தான் சண்டையாக்கிட்டேன் போதுமா?” என்றதில் அவள் திரும்பிக் கொள்ள,
“அன்னைக்கு நான் அப்படி சொன்னது ரொம்ப பெரிய வார்த்தையா உனக்கு தோணுது. உன் இடத்துல இருந்து பார்த்தா அது தான் சரி. நிச்சயம் தப்பு தான். நான் அப்படி பேசியிருக்க கூடாது. அதுவும் உன்னோட தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணின அப்புறமும் நான் அப்படி பேசினது என்னோட மிகப்பெரிய முட்டாள்தனம் தான். ஐம் ரியல்லி சாரி!” என்றவன்,
“அதுக்காக நீ சொன்ன மாதிரி அடிக்கடி நான் அப்படி தான் சொல்லிட்டு இருப்பேன்னு அர்த்தம் இல்ல. இந்த ஒரு டைம் என்னை மன்னிச்சு பாரு! நான் சரி வரலைனா வேனா எனக்கு தண்டனை குடு!” என கேட்க, அவன் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாய் மனதின் ரணங்கள் குறைவதை உணர முடிந்தது தேவதர்ஷினிக்கு.
“இனி எப்பவும் என்னோட ஆசைல நீயும் இருப்ப தேவா. அதுல எந்த மாற்றமும் இல்லை. என்னை புடிச்ச பொண்ணை எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு” என்றவன்,
“வேறென்ன?” என கேட்க, இன்னுமே அவனின் நெருக்கம் அவளை கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது.
“எல்லாமே சொல்லிட்டேன் நினைக்கிறேன்! நிச்சயமா இதெல்லாம் ரீசன் சொல்லணும்னு எல்லாம் சொல்லல. மனசுல இருந்து தான் சொல்லிருக்கேன். இதே மாதிரி முழு மனசோட சேர்ந்து வாழ்வோம். புரியுதா?” என கேட்க, தலையை மட்டும் அசைத்தாள்.
“நாம ஊருக்கு போறதும் அப்படி தான். என் கூட தானே இனி நீ இருக்கனும்? அதுக்காக தான். அதுக்காக மட்டும் தான்” என்றவன்,
“ஆனாலும் நீ இவ்வளவு யோசிச்சிருக்க வேண்டாம்!” என்றான் சற்றே கிண்டல் இருந்ததோ அந்த குரலில்.
“அப்புறம் இன்னொன்னு சொல்லணும்!” என அஷ்வினியைப் பற்றி பேச வந்தவன் சில நொடிகள் சிந்தித்து நின்றான்.
இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் மொத்தமாய் பேசியதை போல இவ்வளவு பேசி இருக்க, அதையெல்லாம் இன்னும் அவள் ஆராய நேரம் எடுக்கும் என புரிந்தது அவனுக்குமே.
இந்த நேரத்தில் இதையும் சொல்லி வைத்து இன்னுமாய் அவள் குழம்பிக் கொண்டால்? என நினைத்த நொடி வேண்டாம் என முடிவெடுத்து அதை கைவிட்டான்.
“ப்ச் போதும்! அப்புறம் பேசிக்கலாம். ஓகே தூங்கலாமா?” என்றவன் படுக்கைக்கு செல்ல, இன்னுமே அமர்ந்திருந்தாள் அவள்.
“என்ன தேவா?” என்றவன் அதன்பின் தான் புரிந்து கொண்டான்.
“கொஞ்சம் கொஞ்சமா பழகிக்குவோம் தேவா!” என்றான் மென்மையாய்.
தயங்கியே தான் அவள் கால்களை நீட்டிப் படுக்க, மீண்டுமாய் அதே நிலை. தானே அவளருகில் வந்து அவள் இடையை வளைத்து என நெருங்கிப் படுத்துக் கொண்டான்.
அப்பொழுது கோபம் மட்டுமே பெரிதாய் தெரிந்திருக்க, இப்பொழுது இன்னும் சில உணர்வுகள் தேவதர்ஷினியிடம்.
திருமணத்தோடு அவனின் நிலைமை என்று குறிப்பிட்டது என்னவாய் இருக்கும் என தோன்றினாலும் அதிகமாய் சிந்தித்து மனதை கெடுத்துக் கொள்ளவில்லை அவள்.
எதிர் கோபமோ, இப்படி தான் நான் என்றோ அவன் பேசியிருக்கலாம். காரணம் என்றும் எதுவும் மழுப்பிடவில்லை. அதுவரையில் மனது நிம்மதியானது தேவாவிற்கு.
கூடவே அவன் பேச்சின் பின் அவனின் தற்போதைய மனநிலை என்னவென்றும் புரிந்தபின் இன்னுமே திருப்தி தான்.
“குட் நைட்!” என்று சொல்லி கண்களை மூடிக் கொண்டான் கார்த்திகைசசெல்வன்.
அடுத்தநாள் காலை இருவருக்குமே இதமாய் தான் விடிந்திருந்தது. பேசி தீர்த்துக் கொள்வது கூட ஒரு வகையில் மகிழ்ச்சியை தான் கொடுக்கிறது என புரிந்து கொள்ளவும் முடிந்தது.
அன்று மாலையே பெங்களூர் கிளம்பி சென்றுவிட்டான் கார்த்திகைசெல்வன்.
இன்னும் இரண்டு வாரங்களில் தானே வந்து தேவதர்ஷினியை அழைத்து செல்வதாய் சொல்லி தான் சென்றான்.
“அன்னைக்கு என்னவோ நீங்களே கூட்டிட்டு வந்துடுங்கன்னு சொன்ன?” என கண்ணகி கேட்க,
“ம்மா! இப்பவும் நீங்களும் வர்றிங்க தான் அவ கூட. நான் வர்றது எக்ஸ்ட்ரா பிளான்!” என கூறி தேவாவிடம் கண் சிமிட்ட, ஆச்சர்யமாய் பார்த்தாள் அவள் இப்படி அவன் செய்கையில்.
“அத்தை மாமான்னு எல்லாரையும் கூட்டிட்டு போலாம் தான்!” என சிந்தனையாய் பார்த்து கூறியவன்,
“ஓகே! நான் அங்க போய் ஏற்பாடு பண்ணிட்டு என்னனு சொல்றேன்!” என்றுவிட்டான்.
இப்பொழுது அஷ்வினியின் வரவு எவ்விதத்திலும் பெரிதாய் தன்னை பாதிக்கும் என தோன்றவில்லை. தேவாவின் நேற்றைய பேச்சு தான் அதற்கு காரணம் என உணராமலும் இல்லை அவன்.
அதற்காக மட்டும் அழைத்திடவும் தோன்றவில்லை. அஷ்வினியிடமும் ஒரு மாற்றம் வந்திருக்க வேண்டுமே எனும் எண்ணம் தான். ஊருக்கு அழைத்து அவளை வருத்தி விட தேவையில்லை. அதற்காக அவளுக்கு அழைத்து பேசும் எண்ணமும் இல்லை. எனவே அந்த பேச்சை மட்டும் ஒதுக்கி வைத்து கிளம்பிவிட்டான்.
அந்த இரண்டு வாரங்களும் கொஞ்சம் இலகுவாய் தான் நாட்கள் கடந்தது.
தினமும் தானே அழைத்து பேசும் அளவுக்கு இருவருமே விட்டுக் கொடுத்து பேச பழகி இருந்தனர்.
மீண்டும் அதே பேச்சு ஆரம்பிக்கும் வரை அனைத்தும் சுமூகம் தான் என்பதை போல லீலா கண்ணகியின் வீடு தேடி வந்திருந்தார்.
தேவதர்ஷினி அன்று தான் பள்ளியில் இறுதி நாள் வேலையை முடித்து வந்திருந்தாள்.
இன்னும் ஒரு வாரத்தில் பெங்களூர் கிளம்ப வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் தேவையானதை எல்லாம் நியாபகப்படுத்தி பெரியவர்கள் தயார் செய்ய ஆரம்பித்திருந்தனர் ஊருக்கு எடுத்து செல்வதற்கு என.
“அதான் அண்ணி! பாத்திர பண்டம் எல்லாம் வாங்கணுமே! இவ சரியா சொல்லல. அதான் உங்ககிட்ட கேட்டுக்கலாம்னு வந்தேன்!” என்று லீலா கேட்க,
“அவ தான லீலா குடும்பம் பண்ண போறது? என்ன தேவா? என்னென்ன வேணும்னு தெரிலயா உனக்கு?” என சிரிக்க, அவர் மகன் வேண்டாம் என்றதை எப்படி சொல்லிவிட என நின்றாள்.
“நீங்க அவங்ககிட்ட கேளுங்க த்தை. அங்கேயே இருக்குன்ற மாதிரி சொன்னாங்க!” என்றாள் பொதுவாய்.
“அதுவும் நான் தான் கேட்கணுமா?” என்றாலும் கண்ணகி உடனே அவர்கள் முன்பே அழைத்துவிட்டார் மகனுக்கு.
“சொல்லுங்க ம்மா!” என்றவன் அப்பொழுதும் அலுவலகத்தில் தான் இருந்தான்.
“கார்த்தி! லீலா வந்திருக்கா. அடுத்த வாரம் கொண்டு போக பொருள் என்னவெல்லாம் வாங்கணும்னு கேட்டா!” என சொல்லவும் சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
“அதுக்கு?” என மட்டும் அவன் கேட்க,
“அதான் டா. அங்க என்ன இருக்கு என்னென்ன வேணும்?” என்றார் கண்ணகியும்.
“ஏன்? நான் மட்டுமா இங்க இருக்க போறேன்? உங்க மருமக அங்க தானே இருக்கா? அவகிட்ட கேளுங்க” என்றான் புத்துணர்ச்சியோடே..
“அது சரி! அவ உன்கிட்ட கேட்க சொல்றா. நீ அவகிட்ட கேட்க சொல்ற. என்ன டா எங்களை பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?” என கண்ணகி முறைக்க, நாக்கை கடித்துக் கொண்டாள் இங்கே தேவதர்ஷினி.
“வாங்கலாம் ம்மா! அதான் ஒரு வாரம் இருக்கே!” என்றவன்,
“நாளைக்கு சொல்லவா?” என்றான் அன்னையிடம்.
“நீயும் அவளும் முதல்ல கலந்து பேசுங்க. அப்புறம் என்ன வேணுமோ லீலாகிட்ட சொல்லுங்க. இனி இந்த விளையாட்டுக்கு நான் வர்ல!” என வைத்துவிட்டார் கண்ணகியும்.
அன்று இரவு தேவதர்ஷினிக்கு அழைத்தவன், “அம்மாவை தூது அனுப்பியிருக்க?” என எடுத்ததும் அவன் கேட்க,
“மறுபடியும் சண்டை போட எல்லாம் எனக்கு தெம்பில்ல த்தான்!” என்றாள் அவளும் விளையாட்டாய்.
“ஆஹான்! இங்க தானே வர்ற? பாத்துக்குறேன்!” என்றவன்,
“உனக்கு என்னென்ன வேணுமோ எல்லாமே வாங்கிட்டு வா. இல்லை இங்க வந்து கூட வாங்கிக்கலாம். அதுவும் அவங்க தான் வாங்கி தரணும் அது தான் முறைனா, நோ ப்ரோப்லேம் அவங்களே வாங்கி தரட்டும். இனி இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நீ என்கிட்ட கேட்கணும்னு இல்ல. நீயே உனக்கு என்ன தோணுதோ அதை பண்ணு. ஏன்னு கேட்டா என்னை எதை கொண்டு வேனா அடி!” என அவன் சொல்ல,
“த்தான்!” என்றாள் சிணுங்கலாய்.
“ஹ்ம்! அத்தான் தான்!” என்றவன் இன்னும் கிண்டலாய் சிரிக்க,
“போங்க நீங்க!” என்றவளுக்குமே வெட்கம் தான் அவன் சொல்லிய விதத்தில்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
21
+1
3
+1
1