காலையில் விடிந்ததுமே கார் வந்து நின்றது. உள்ளே இருந்து அமர் இறங்க வாசலுக்கே வந்தனர் பிரியாவின் பெற்றோர்கள்.
“உள்ள வாங்க அமர்” என்று அழைக்க, “இருக்கட்டும் சார்.. ஃப்ளைட் மிஸ் ஆகிடும். இப்பவே கிளம்புனா தான் ட்ராஃபிக்ல மாட்டாம இருப்போம்” என்றான்.
பிரியா வந்து விட அவளுடைய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு, பின்னால் வளவனும் கயலும் ஏறிக் கொண்டனர்.
நடக்கப்போகும் கூட்டத்தை பற்றி பேசிக் கொண்டே பயணத்தை கடந்தனர். பிரியா தன் கைபேசியை பார்த்தாள். சிவா வேறு எந்த செய்தியும் அனுப்பவில்லை. மீண்டும் அமரோடு செல்வதால் கோபித்துக் கொண்டானா? ஆனால் இது வேலை சம்பந்தமானது. இதை விட்டு விட்டு அவள் வீட்டிலா இருக்க முடியும்?
சிவா தானாக சமாதானம் ஆகி விடுவான் என்று நினைத்து விட்டு விட்டாள்.
விமான நிலையம் அடைந்ததும் அமரையும் பிரியாவையும் வழியனுப்பி விட்டு, அதே காரில் வளவனும் கயலும் வீடு திரும்பினர்.
விமானத்தில் ஏறி அமரும் வரை அமர் நிறைய சொல்லிக் கொண்டே இருந்தான். அவர்களோடு வரப்போகும் சிலரும் வந்து விட எல்லோருக்கும் அவளை அறிமுகம் செய்து வைத்தான்.
பேச்சு சுவாரஸ்யமாக செல்ல நேரம் கரைந்தது. விமானம் ஏறிய போதும் எல்லோருமே அருகருகே அமர்ந்தனர். பயணம் இனிமையாக தான் சென்றது.
கூட்டத்தில் பெண்களும் இருந்ததால் பிரியாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சில மணி நேரத்தில் பயணம் முடிவுக்கு வந்து விட இறங்கி ஒன்றாகவே ஹோட்டலுக்குச் சென்றனர்.
பிரியா எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவதை பார்க்க அமருக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்களும் அவள் புதியவள் என்று ஒதுக்காமல் சொல்லிக் கொடுக்கவும் செய்தனர்.
எல்லோருமே அமரைப்போல தன்மையாக பழகுபவர்களாக இருக்க பிரியா அதை நேரடியாக சொன்னாள்.
“உங்க ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் உங்கள மாதிரியே இருக்காங்க”
“அவங்க பார்ட்னர்ஸ் பிரியா”
“ஃப்ரண்ட்ஸாவும் இருக்காங்களே..”
“அப்ப நீயும் என் ஃப்ரண்டா?”
ஒரு நொடி யோசிப்பது போல் பாவனை செய்தவள், “ஆமா” என்று கூறி சிரித்தாள்.
அமர் அவளை புருவம் சுருங்க பார்க்க சிரிப்பை நிறுத்தி கேள்வியாக பார்த்தாள்.
“என் ஃப்ரண்டா இருக்கனும்னா அதுக்கு சில கண்டீஷன் இருக்கு தெரியுமா?”
“என்ன?”
“என் கூட சரக்கடிக்கனும்..”
அதிர்ந்து போய் பார்த்தாள்.
“உனக்கு சரக்கடிக்க தெரியுமா?”
அதிர்ச்சியோடு அவன் முகத்தை பார்த்தவள் அவன் சிரிப்பை அடக்குவதை கண்டு கொண்டாள்.
“யூ…” என்று பிரியா கை ஓங்க, அமர் சிரித்துக் கொண்டே பின் நோக்கி நடந்தான்.
“நில்லுங்க.. ஒரு நிமிஷம் எப்படி பயந்துட்டேன் தெரியுமா?” என்று கேட்டு அவனை நோக்கி வேகமாக நடந்தாள்.
“விஸ்கி? இல்ல பீரா?”
“நாலு கப் மோரு குடிங்க சார்.. உடம்புக்கு நல்லது” என்று முறைத்தவள் அவனை அடிப்பது போல் மீண்டும் கை ஓங்க அந்த கையைப்பிடித்து அதில் அவளது ரூம் கார்டை வைத்தான்.
“எல்லாரும் ரூம்க்கு போயிருப்பாங்க. நீயும் போ.. ஒரு மணி நேரத்துல எல்லாருமே ஊர் சுத்தி பார்க்க கிளம்புவோம்.. ரெடியாகிடு” என்றவன் அவளது தோளை பற்றி லிஃப்டில் தள்ளி விட்டு நின்றான்.
“நீங்க?”
“நான் ஒருத்தர மீட் பண்ணிட்டு ஒரு மணி நேரத்து வந்து உங்களோட ஜாயின் பண்ணிக்கிறேன்”
அவன் சொல்லி முடித்ததும் கதவு பூட்டிக் கொண்டது.
அமர் அங்கே அவனுக்காக வந்திருந்த காரில் ஏறி ஒரு பங்குதாரரை பார்க்கச் சென்றான். காரில் அமர்ந்ததுமே கைபேசியை பார்த்தான்.
நேற்று சண்முகி அலுவலகம் சென்று சுப்பிரமணியோடு சண்டை போட்டு அவனை அடித்து விட்டுச் சென்ற விசயத்தை எல்லாம் கணேஷ் சொல்லியிருந்தான்.
அமரின் நிறுவனங்களுள் ஒன்றில் தான் சுப்பிரமணி வேலை செய்கிறான். அவனுடைய வேலையில் குறை ஒன்றும் இல்லை. ஆனால் மனைவிக்கு தெரியாமல் மற்றவளோடு குடும்பம் நடத்துவதை பற்றி கணேஷ் விசாரித்து சொன்னான்.
அமர் அப்போதே அந்த விசயத்தை உடைக்க திட்டமிட்டான். அக்காவின் வாழ்வு அந்தரத்தில் தொங்கும் போது தம்பிக்கு காதல் செய்ய நேரமிருக்காது அல்லவா?
அவனுக்கு உதவுவதற்கு பிரியா அருகிலும் இருக்கப்போவது இல்லை. அவளை இங்கு அழைத்து வந்து விடப்போவதாக முடிவு செய்து இப்போது நிறைவேற்றி விட்டான்.
சிவா குடும்பப் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் போது அவனுக்கும் பிரியாவுக்கும் இடையே தூரத்தை அதிகப்படுத்தும் வேலையை அமர் செய்து விடுவான்.
இருவரும் எப்படியாவது பிரிந்தாக வேண்டும். பிரிய வைத்தே தீர வேண்டும்.
முதலில் சுப்பிரமணியின் இரட்டை வாழ்வை பற்றி ஆதாரங்களை சேகரித்து அதை பற்றி சிவாவுக்கே அனுப்ப நினைத்தான். பிறகு அந்த முடிவு சரிவராது என்று கை விட்டான்.
சிவாவிற்கு அனுப்பினால் யார் அனுப்பியது? ஏன் அனுப்பினார்கள்? என்று சந்தேகம் கிளம்பும். அதை தூண்டித்துருவி அமரின் பெயர் வெளியே வந்தால் அவன் இந்த விளையாட்டை ஆரம்பித்த நோக்கமே பாதிக்கப்படும்.
அதனால் சிவாவிடம் காட்டுவதை விட அவனுடைய அக்காவிடம் காட்டலாம். அதுவும் அவர்கள் செய்யாமல் வேறு ஒரு பெண் செய்தால் பிரச்சனையே இராது.
கணேஷிடம் விசயத்தை சொல்ல அவன் உடனே காரியத்தில் இறங்கினான். சுப்பிரமணியை பிடிக்காத பெண்களில் ஒருத்தியை தூண்டி விட்டு ஆதாரத்தை சேகரிக்க ஏற்பாடு செய்தான். அவளிடமே சண்முகியின் எண்ணும் கொடுக்க, அவள் இது தான் சமயமென சண்முகிக்கு செய்தி அனுப்பி, பிறகு ஆதாரத்தை அனுப்பி மாட்டி விட்டாள்.
சண்முகி இப்போது கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் குடும்பமே கதவை பூட்டிக் கொண்டு சோகத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும் தெரிந்தது. சிவா இன்று காலையில் வேலைக்கு விடுப்பு சொல்லி விட்டான். சுப்பிரமணியும் விடுப்பு சொல்லி விட்டான்.
அக்காவின் வாழ்வு தான் சிவாவுக்கு அப்போது பெரிதாக இருந்தது. அது தானே அமருக்கும் வேண்டும். இந்த பிரச்சனை முடியும் முன்பே அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்க வேண்டும்.
சண்முகி சுப்பிரமணியை பிரிய முடிவு செய்தால் விவாகரத்து கேட்பாள். அப்படி கேட்கா விட்டாலும் அவளை தூண்ட வேண்டும்.
சிவா தன் அக்கா இப்படிப்பட்ட அயோக்கியனோடு இனி வாழ்வதை பொறுத்துக் கொள்ள மாட்டான். எந்த ஒரு குடும்பமும் இந்த தவறை அவ்வளவு சீக்கிரம் மன்னிக்காது.
இப்படி அவர்கள் விவாகரத்து கேட்கும் போது அடுத்த பிரச்சனையை கிளப்ப நினைத்தான். அதைப்பற்றி கணேஷிடம் சொல்லி விட்டு வந்த வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் பிரியாவிடம் சென்றான். அதாவது அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு.
எல்லோரும் தயாராகி இருக்க, பத்து நிமிடத்தில் உடை மாற்றிக் கொண்டு வந்து கூட்டத்தோடு கலந்து விட்டான். பிரியா சிவாவை அழைத்துப்பார்த்தாள். கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது.
அவனாக கூப்பிடுவான் என்று நினைத்து ஊர் சுற்ற கிளம்பி விட்டாள்.
அந்த கூட்டம் பணம் பகட்டு என்று பேசும் கூட்டமல்ல. யாரும் வித்தியாசமாக நடந்து கொள்ளவுமில்லை. இயல்பான மனிதர்களாக இருக்க சிரிப்பும் கேலியுமாக பொழுது ஓடியது.
அருகே இருந்த இடங்களை எல்லாம் பார்த்து விட்டு வெளியே சாப்பிட்டு விட்டு பத்து மணிக்கு ஹோட்டலுக்கு திரும்பினர்.
பிறகு அவரவர் அறையில் சென்று அடைந்து கொண்டனர். காலையில் சீக்கிரமே எழுந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அமர் சொல்லி விட்டுச் சென்றான்.
பிரியா அறைக்கு வந்ததும் கைபேசியை பார்த்தாள். இவ்வளவு நேரம் அவள் சிவாவை மறந்தே போயிருந்தாள். அவனும் எந்த செய்தியும் அனுப்பவில்லை.
‘திரும்ப அமர் கூட போறேன்னு கோச்சுக்கிட்டானா?’ என்று யோசித்தவளுக்கும் கோபம் வந்தது.
“ரொம்ப பண்ணுறான். போடா.. நான் அங்க வர்ர வரைக்கும் நீயா பேசாம நானும் பேச மாட்டேன்.. உனக்கு கோபம் வந்தா எனக்கும் வரும்” என்று கைபேசியை பார்த்து திட்டியவள் தூக்கி போட்டு விட்டு படுத்து விட்டாள்.
அடுத்த நாள் எழுந்து பார்த்த போதும் சிவா எதுவும் பேசாமல் இருக்க பிரியா இனி இவனை கண்டு கொள்ள கூடாது என்று முடிவு செய்தாள். ஆனாலும் மனம் சோர்வாக தான் இருந்தது. காதலன் பேசவில்லையே என்ற வருத்தம்.
ஹோட்டலில் இருந்து கிளம்பி எல்லோரும் ஒன்றாக கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
எல்லோரும் கலகலப்பாக பேசும் போது பிரியாவால் தன் கவலையை கவனிக்க முடியவில்லை. அவளும் கூட்டத்தோடு கலந்து கொண்டாள்.
கூட்டம் மதியம் வரை நடை பெற்றது. ஒரு மணிக்கு முடிந்ததும் சாப்பிட்டு விட்டு மீண்டும் எல்லோரும் ஒன்றாக ஊர் சுற்றினர்.
இதுவே அடுத்த ஒரு வாரமும் தொடர்ந்தது. வேலையும் நடந்தது. அதோடு ஊர் சுற்றி பார்ப்பதும் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு இடத்துக்கு சென்றனர். எல்லோருமே ஒன்றாக சென்றனர். நிறைய சாப்பிட்டனர். நிறைய படங்களை எடுத்தனர். கடைசியாக இரவு தூங்க மட்டும் தான் அறைக்கு வந்தனர்.
நாட்கள் எப்படி கழிந்தது என்று தெரியாமல் கரைந்து போனது. நாளை கடைசி நாள். நாளைய கூட்டம் முடிந்ததும் மாலையே கிளம்ப வேண்டும்.
இன்று எங்கே சுற்றிப்பார்க்கலாம் என்று கேள்வி வர ஆளுக்கொன்றை சொன்னார்கள்.
“வேணும்னா.. இன்னைக்கு மீ டைம் னு சொல்லிடலாம். எல்லாரும் கூட்டமாவே போறோம் வர்ரோம். இன்னைக்கு தனியா சுத்தி பார்ப்போம். பட் எல்லாரும் எங்க இருக்கோம்னு மட்டும் இன்ஃபார்ம் பண்ணிடுவோம்.” என்று பிரியா சொல்ல எல்லோரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டனர்.
ஒவ்வொருவரும் ஒரு இடத்திற்கு செல்ல பிரியா சாப்பிங் கிளம்பினாள்.
“நீங்க எங்க போறீங்க அமர்?”
“ரூம்ல தூங்க போறேன்”
பிரியா இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டாள்.
“தூங்க போறீங்களா?”
“எஸ்.. இங்க இருந்து போனதும் மறுபடியும் பிசி டே.. ஃபோன் கால்ஸ், மீட்டிங், அப்பாயிண்மெண்ட்ஸ் ப்ளா ப்ளா னு வேலை நிறைய இருக்கும். நைட் கூட தூங்க நேரம் கிடைக்காது. சோ இந்த ஃப்ரீ டேல தூங்கி சார்ஜ் ஏத்திக்க போறேன். அப்ப தான் போனதும் ஃப்ரஸ்ஸா வேலை செய்ய முடியும்”
பிரியா அவனை மெச்சுதலாக பார்த்தாள். வேலையை செய்வதை மட்டுமல்ல எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதையும் சரியாக கடை பிடிக்கிறான்.
“நான் சாப்பிங்க முடிச்சுட்டு நேரா இங்க தான் வருவேன்.. எதாவது வேணுமா?”
“வேணாம். பத்திரமா மட்டும் போயிட்டு வா போதும்” என்று அனுப்பி வைத்தான்.
தொடரும்.