Loading

சண்முகிக்கு தன் கண்களை நம்பக்கூட முடியவில்லை. ஒரு பெண்ணை அமர வைத்து அவளுக்கு சாப்பாடு ஊட்டுகிறான். கண் கலங்கி பார்வையை மறைத்து, பிறகு சட்டென கன்னத்தில் உருண்டு ஓடி மீண்டும் காட்சியை தெளிவாக்கியது‌.

“சண்முகி..” என்று எழுந்து நின்றான் சுப்பிரமணி.

அவனை பார்த்து அதிர்ந்தாலும் பெரிதாக காட்டிக் கொள்ளாமல் இருந்தாள் அருகே இருந்தவள்.

“நீ.. நீ எப்படி இங்க?” என்று சுப்பிரமணி திணறினான்.

“யாரு இது?” என்று கை நீட்டி கேட்டாள்.

சுப்பிரமணிக்கு வார்த்தை தொண்டையில் அடைத்துக் கொள்ள உடனே தொண்டையை கணைத்துக் கொண்டு “ஃப்ரண்ட்” என்றான்.

“ஃப்ரண்ட்? சாப்பாடு ஊட்டி விடுற அளவுக்கு ஃப்ரண்ட்டா?” என்று கேட்ட போது குரல் உடைந்து விட்டது.

“ஹேய்.. இல்ல சண்முகி…” என்று அவன் அருகே வர கை நீட்டி நிறுத்தினாள்.

“இவளுக்கும் உனக்கும் என்ன பழக்கம்?”

“வெறும் ஃப்ரண்ட் தான்”

“ஃப்ரண்ட்டுக்கு சாப்பாடு ஊட்டுவ.. கட்டி பிடிச்சு முத்தம் கொடுப்ப.. அப்படி தான?”

“சண்முகி.. இங்க பாரு.. நீ வீட்டுக்கு போ.. நான் வந்து பேசுறேன்” என்று அவளை தொட பட்டென கையை தட்டி விட்டாள்.

கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டு அங்கே அசராமல் அமர்ந்திருந்தவளை முறைத்தாள்.

“நீ சொல்லு.. என்ன நடக்குது இங்க?”

அவள் சுப்பிரமணியை திரும்பிப் பார்த்தாள். அவன் கண்ணால் “சமாளி” என்க அவள் எழுந்து நின்றாள்.

“நீ சந்தேகப்படுறது சரி தான். நாங்க நாலு வருசமா ரிலேஷன்சிப்ல இருக்கோம்” என்று போட்டு உடைத்தாள்.

சண்முகிக்கு காலுக்கடியில் பூமி நழுவியது போல் இருந்தது. தள்ளாடி இரண்டடி பின்னால் சென்று விட்டாள்.

“ஏய்.. சும்மா இருடி..” என்று அவளை அதட்டி விட்டு, “சண்முகி அவள நம்பாத.. நீ வீட்டுக்கு போ.. நான் வந்து சொல்லுறேன்” என்று கெஞ்சினான் சுப்பிரமணி.

“ஏன் மணி எப்பவும் பயந்துட்டே இருக்க? உண்மைய ஒத்துக்கேயேன். அதான் அவளுக்கே தெரிஞ்சுடுச்சுல?”

“நீ பேசாம இருக்கியா?” என்று அவளை அதட்டி விட்டு சண்முகியின் பக்கம் திரும்பினான்.

“நீ.. வீட்டுக்கு போமா… நான்..”

கையை வெடுக்கென தட்டி விட்டாள் சண்முகி. அவளது அழுகை அதிகரிக்க, அந்த தளத்தில் இருந்த சிலர் அங்கே கூடி விட்டனர்.

“ஃபைனலி..” என்று ஒருத்தி முணுமுணுத்தாள்.

அவள் தான் விசயத்தை சண்முகிக்கு சொன்னவள்.

“என்னை ஏமாத்திட்டல?” என்று கேட்டு சுப்பிரமணியை பார்த்தாள்.

“இல்லமா.. அது..”

“நிறுத்துடா.. உன் பேச்ச கேட்க பிடிக்கல.. இவளுக்கும் உனக்கும் நிஜம்மாவே சம்பந்தமில்லனு இங்க இருக்க வேற யாராச்சும் சொன்னா.. நான் உன்னை நம்புறேன்.. சொல்ல சொல்லு” என்று கத்தினாள்.

சுப்பிரமணி அதிர்ந்து நின்றான். அப்படி யாரும் சொல்ல வாய்ப்பே இல்லை. ஏனென்றால் எல்லோருக்குமே இது தெரியும். இருந்தாலும் யாராவது தன் பாவத்திற்கு துணை வர மாட்டார்களா? என்று பார்த்தான்.

யாரும் வாயைத்திறக்கவில்லை. வேறு பக்கம் திரும்பிக் கொண்டனர்.

“அவங்க.. அவங்க பேச்செல்லாம் எதுக்கு? நீ நான் சொல்லுறத நம்பு.. எங்களுக்குள்ள ஒன்னுமே இல்ல”

“அப்ப அவங்களையும் சொல்ல சொல்லு.. நீங்க ரெண்டு பேரும் வெறும் ஃப்ரண்ட்னு சொல்ல சொல்லு..”

“சண்முகி..”

“என் பேர சொல்லாத” என்று நெஞ்சிலிருந்து கத்தினாள்.

“உன்னை எவ்வளவு நம்புனேன்? இப்படி பண்ணிருக்க.. அசிங்கமா இல்லையா? பட்டப்பகல்ல உட்கார வச்சு அவளுக்கு சோறு ஊட்டுற. ஏன்? இந்த கிறுக்கச்சி இங்க வரவா போறானு தைரியம் தான? அந்த தைரியத்துல தான இதெல்லாம் பண்ண?”

சுப்பிரமணி பேசும் முன் அவள் வந்தாள்.

“லுக்.. மணி என்னை லவ் பண்ணுறான். நானும் அவன லவ் பண்ணுறேன். நீ ஹர்ட் ஆகக்கூடாதுனு அவன் சொன்னதால எங்க லவ்வ உன் கிட்ட இருந்து மறைக்க வேண்டியதா போச்சு. இப்ப உனக்கே தெரிஞ்சுடுச்சுல? பேசாம கிளம்பு. ஆஃபிஸ்ல வச்சு சீன் போடாத” என்று எரிச்சலாக சொன்னாள்.

சண்முகிக்கு வெறி வந்து விட்டது. வேகமாக திரும்பியவள் சுப்பிரமணியின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட்டாள்.

“ச்சீ.. கள்ள காதல் பண்ணிட்டு அத பெருமையா வேற பேசுறீங்க ரெண்டு பேரும்.. அசிங்கம் பிடிச்சதுங்க..” என்றவள் அங்கிருந்த மற்றவர்களை பார்த்தாள்.

“நீங்க எல்லாம் மனுசங்க தான? நாலு வருசமா இந்த கூத்து நடக்குறப்போ ஒரு வார்த்தை எனக்கு சொல்ல தோணுச்சா? எவளோ எக்கேடோ கெட்டுப்போறானு இருந்துட்டீங்களே.. உங்க குடும்பத்துக்கு அப்படி எதுவும் நடக்காதுங்குற நினைப்பு இல்ல?” என்று கேட்டவள் பிறகு அங்கே நிற்கவில்லை.

விறுவிறுவென சென்று விட்டாள்.

அவளை தொடர்ந்து ஓட முடியாமல் சுப்பிரமணி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான். மற்றவர்கள் அவனை கேலியாக பார்த்து வைத்தனர்.

“இங்க என்ன பார்வை? அதான் முடிஞ்சதுல? வேலைய போய் பாருங்க” என்று அவள் துரத்தி விட, எல்லோரும் சலிப்போடு கிளம்பி விட்டனர்.

சுப்பிரமணிக்கு தலை வலித்தது. மனைவிக்கு தெரியாமலே தனி வாழ்வை நிம்மதியாக வாழ்ந்து முடித்து விடலாம் என்று நினைத்தான். அது முடியவில்லை. விசயம் வெளி வந்து விட்டது.

யாரோ சொல்லியிருந்தால் கூட சண்முகி நம்பியிருக்க மாட்டாள். அவன் ஒன்றை சொன்னால் கண்ணை மூடிக் கொண்டு நம்புபவள். இன்று கண் முன்னே பார்த்து விட்டாள்.

“மணி… நடந்தது நல்லதுக்கு தான். இனிமேலும் இத என்னால மறைக்க முடியாது. அவளுக்கு தெரிஞ்சதும் ஒரு முடிவு கிடைச்சுடுச்சுனு சந்தோசப்படு. நான் வெயிட் பண்ணுறேன். யோசிச்சு சொல்லு” என்றவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

சுப்பிரமணிக்கு வேலை ஓடவில்லை. சண்முகி அழுதது மட்டும் தான் கண்ணில் நின்றது.

உடனே வீட்டுக்கு போய் அவளை சந்திக்க பயமாக இருந்தது. அவள் கொஞ்சம் சமாதான அடைந்த பிறகு தான் எதையாவது சொல்லி அவளை கட்டுப்படுத்த முடியும்.

அது வரை இங்கேயே இருக்க வேண்டியது தான்.

சண்முகி கணவன் வருவான் சமாதானம் செய்வான் என்றெல்லாம் காத்திருக்கவில்லை. உடனே பெட்டியை எடுத்தவள் அவளது அத்தனை ஆடைகளையும் அள்ளிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

அவள் நெஞ்சம் அழுது துடித்தது. மரண வலியில் ஓலமிட்டது. அவளால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத துரோகத்தை கணவன் செய்து விட்டானே.

அதுவும் நான்கு வருடங்களாக அவளை ஏமாற்றி வருகிறான். எதுவுமே தெரியாமல் அவள் வீட்டில் அடைந்து கிடக்கிறாள். எவ்வளவு பெரிய மோசடி?

அழுது கொண்டே தாயை தேடிச் சென்றாள்.

கணவனும் மகனும் வேலைக்குச் சென்று விட்டதால் கல்யாணி வீட்டு வேலைகளை முடித்து விட்டு உறங்கிக் கொண்டிருக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் கலைந்து எழுந்து சென்றவர் வாசலில் பெட்டியோடு நின்ற மகளை பார்த்து அதிர்ந்தார்.

அது மட்டுமல்லாமல் அவள் கண்ணீரோடு நிற்க பெற்ற வயிறு கலங்கியது.

“முகிம்மா.. என்னாச்சு?” என்று பதறி விட்டார்.

பெட்டியை உள்ளே தூக்கி வைத்தவள் கதவை அடைத்து விட்ட தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டாள்.

“அய்யோ தாயி.. என்னனு சொல்லுடி.. மனசு பதறுது.. மாப்பிள்ள கூட சண்டை போட்டியா? இப்படி சண்டை போட்டு வந்து நிக்க மாட்டியேடி.. என்னனு சொல்லு” என்று கேட்டவரும் காரணம் தெரியாமலே கண்ணீர் விட்டார்.

“என்னை அவன் ஏமாத்திட்டான்மா.. நாலு வருசமா ஒருத்திய வச்சுருந்துருக்கான். அது இன்னைக்கு தான் எனக்கு தெரியுது” என்று மகள் கதற இடிந்து போய் தரையில் அமர்ந்தார்.

“என்னடி சொல்லுற? எதையாவது கேட்டுட்டு உளறாத”

“உளறுறனா? என் கண்ணால பார்த்தேன்மா.. அவளுக்கு சோறு ஊட்டுறான். அந்தாளு வப்பாட்டிய பத்தி ஆபிஸ்க்கே தெரிஞ்சுருக்கு.. என்னால முடியலமா.. ஏமாந்துட்டேன்மா”

வார்த்தைக்கு வார்த்தை சண்முகியின் அழுகை கூட கல்யாணியின் கண்ணீரும் கொட்ட ஆரம்பித்தது.

சண்முகி புலம்பி புலம்பி மயக்கம் வரும் நிலைக்கு வந்து விட்டாள்.

“அய்யோ.. மயங்காதடி..” என்று கல்யாணி பதறியடித்து தண்ணீரை தெளித்து அவளை குடிக்க வைத்தார்.

“எனக்கு வாழவே பிடிக்கலமா..” என்று சண்முகி மீண்டும் கண்ணீர் விட “இப்படிலாம் பேசாதடி.. குருவ நினைச்சு பாருடி.. அவன் பச்ச மண்ணு.. என்ன செய்வான்?” என்று கேட்டு மகளை கட்டுப்படுத்தினார்.

பாண்டியனை அழைத்து உடனே வீட்டுக்கு வர சொல்ல அவர் தாம்தூமென குதித்தார்.

“உன் இஷ்டத்துக்கு எல்லாம் வர முடியாது” என்று கத்த, “அய்யோ.. வாங்களேன்.. நம்ப புள்ள வாழ்க்கை அந்தரத்துல தொங்குதே..” என்று கல்யாணி அழுது விட்டார்.

மனைவி இது வரை இப்படி அழைத்து கண்ணீர் விட்டதில்லை என்பதால் பாண்டியனுக்கும் பதட்டம் வந்தது.

“ஏய் ஏய் அழாத.. இரு வர்ரேன்” என்று கூறி விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

கல்யாணி மகளை மடியில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். இரண்டு பெண்களும் அழுது கரைந்து அமைதியடைய நினைக்க பாண்டியன் வந்து விட்டார்.

பகல் நேரத்தில் கதவு அடைத்திருப்பது அவருக்கு சந்தேகத்தையும் பதட்டத்தையும் கொடுத்தது. கதவை திறந்து சத்தமில்லாமல் உள்ளே வந்தார். கல்யாணி அவரை பார்த்ததும் கரகரவென கண்ணீரை கொட்டினார்.

மடியில் துவண்டு போய் கிடந்த மகளை பார்த்து அவரது மனமும் பதறி விட்டது. விசயம் பெரியது தான். கல்யாணி அவ்வளவு சீக்கிரம் கண்ணீர் விடுபவர் அல்ல. சண்முகி சாதாரணமாக தாய் வீட்டுக்கு வருபவளும் அல்ல.

கதவை மீண்டும் மூடி விட்டு அருகே வந்தார். துவண்டு கிடந்த சண்முகியின் முகத்தை பார்த்தார்.

“சண்முகி.. என்னமா? என்ன ஆச்சு? ஏன் இப்படி ரெண்டு பேரும் அழுறீங்க?” என்று கேட்டார்.

அவரது பதட்டத்தை காட்டிக் கொள்ளவில்லை. விசாரித்து விட்டு பிறகு முடிவுக்கு வரலாம் என்று நினைத்தார்.

சண்முகி கண்ணை திறந்து தகப்பனை பார்த்தாள்.

“ப்பா.. என் வாழ்க்கை நாசமா போச்சுபா” என்று கதறினாள்.

“இப்படி அச்சாணியமா பேசாத.. என்ன நடந்துச்சுனு சொல்லு…”

சண்முகி கண்ணீர் விட கல்யாணியை பார்த்தார்.

“நீயாச்சும் சொல்லேன்” என்று அதட்டினார்.

“மாப்பிள்ளைக்கு வேற பொம்பள கூட தொடர்பு இருக்காம்” என்றவருக்கும் அழுகை வெடித்தது.

கேட்டதும் கோபம் வந்தது பாண்டியனுக்கு.

“என்ன உளறிட்டு இருக்க நீ? யாராவது எதாவது சொன்னா அத நம்பிட்டு வந்து இப்படி புலம்புவியா?” என்று எகிறினார்.

கல்யாணி இடவலமாக தலையசைத்து “இவளே கண்ணால பார்த்துருக்கா” என்றார்.

“எதையாவது பார்த்துட்டு….”

“இல்லங்க.. நமக்கு மட்டும் தான் விசயம் தெரியல.. அவன் வேலை செய்யுற ஆஃபிஸ்ல இருக்க எல்லாருக்கும் தெரியுமாம். இவ போய் போய் பொண்டாட்டினு சொன்னா அய்யோ பாவமேனு பார்த்துருக்காங்க.. அந்தாளும் ஆமானு ஒத்துக்கிட்டான்”

பாண்டியன் இடிந்து போய் அருகே இருந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்தார். அவரால் இதை நம்பக்கூட முடியவில்லை.

அருமையான மருமகனுக்கு மகளை கட்டி வைத்து அவள் சந்தோசமாக வாழ்வதாக எவ்வளவு பெருமை கொண்டிருந்தார்? அத்தனையும் இப்படி ஒரே நொடியில் அழித்து விட்டானே.

திடீரென கோபம் வர எழுந்து வேகமாக வாசலை நோக்கி நடந்தார்.

“நில்லுங்க.. எங்க போறீங்க?” என்று கல்யாணி நிறுத்தினார்.

“அவன என் கையால கொன்னா தான் ஆத்திரம் அடங்கும்.. எவ்வளவு திமிர் இருந்தா என் புள்ளை வாழ்க்கைய அழிச்சுருப்பான்”

“கொன்னுட்டு? எங்கள அனாதையாக்கிடனுமா?” என்று கல்யாணி ஆத்திரமாக கேட்க பாண்டியனின் கால்கள் நின்று விட்டது.

“அவன அவசரப்பட்டு கொன்னுட்டு நீங்களும் உள்ள போயிடுவீங்க. நாங்க என்ன செய்யுறது? இந்தா கிடக்குறாளே.. இவள என்ன செய்யுறது? போய் எங்கயாவது சாக சொல்லவா?”

கல்யாணி கத்த பாண்டியன் முதன் முறையாக மனைவியின் பேச்சுக்கு செவி சாய்த்தார். மகளை பார்த்தார். வாழ்வு முடிந்தது போல் ஒரு தோற்றத்துடன் படுத்துக்கிடந்தாள்.

எவ்வளவு நல்ல மகள். பெற்றவர்களின் பேச்சை மீறியது இல்லை. புகுந்த வீட்டில் சண்டை வந்த போதும் கணவனை மட்டுமே நம்பினாள். ஒரு பிள்ளையும் பெற்று நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பதாக நினைக்க அனைத்திலும் மண் விழுந்தது. அவரது தோள்கள் துவண்டது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்