Loading

பூ-10

 

காவல் நிலையத்தில் கண்களில் கண்ணீர் முட்ட அமர்ந்திருந்தாள் அக்னிகா. அவளைச் சுற்றி திலகா, ராம், சந்தோஷ் மற்றும் சிவப்ரியன் அமர்ந்திருந்தனர்.

 

அவன் கண்களில் தீயின் ஜூவாலையைப் போன்ற சிகப்பு! அது வேதனையின் வெளிப்பாடு என்பதை அவன் மட்டுமே அறிவான்.

 

“சொல்லுங்க அக்னிகா. இவனை உங்களுக்குத் தெரியுமா?” என்று மேஜையில் புகைப்படத்தை வைத்துத் திலகா சற்றே சத்தமாகக் கேட்டதில் அக்னிகா திடுக்கிட்டு நிமிர, அவள் கண்களிலிருந்து கண்ணீர் கோடாக வழிந்தது.

 

அவள் தொண்டைக்குழி ஏறி இறங்கியது! முள் ஒன்று சிக்கிக் கொண்டதைப் போல் அவளுக்குத் தொண்டைக்குள் அப்படியொரு வலி எடுத்து மேலும் கண்ணீர் சுரந்தது.

 

ஆற்றாமையும் வலியும் கலந்த விழிகளோடு சிவப்ரியனைப் பார்த்தவளுக்கு இதயத்தின் மையத்தில் கூர் கத்தி கொண்டு குத்துவதைப் போன்ற வலி!

 

அவள் பேச முடியாமல் திணறுவதைக் கண்டு ராம் தண்ணீரைக் கொடுக்க, வாங்கி மடமடவென்று குடித்தாள்.

 

அப்போது கண்ணீருடன் விசும்பும் மஹதியின் கரங்களை இறுக பற்றிக் கொண்டு சிவந்த கண்களுடன் உள்ளே நுழைந்தாள், சுசித்ரா.

 

“எக்ஸ்கியூஸ்மி சார்” என்று உறக்க ஒலித்த தங்கையின் குரலில் சிவன் நிமிர,

 

மற்ற மூவரும் சுசித்ராவைப் பார்த்துவிட்டு சிவனை நோக்கினர்.

 

சிவனும் சுசித்ராவும் அண்ணன் தங்கை என்பதுவரை தெரிந்தோருக்கு அக்னிகாவுக்கும் அவனுக்குமான தொடர்பு தெரிந்திருக்கவில்லை!

 

சிவன் தன் தங்கையைக் கூர்மையாய் நோக்க, “எதன் அடிப்படைல அக்னிகாவை அரெஸ்ட் பண்ணிருக்கீங்க? வாரென்ட் இருக்கா உங்ககிட்ட?” என்று சட்டமாய் சுசி வினவ,

 

“நாங்க இப்போதிக்கு அவங்களை அரெஸ்ட் பண்ணலை. நாங்க ஹான்டில் பண்ற கேஸ்ல இவங்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதால் விசாரணைக்குதான் கூட்டிட்டு வந்திருக்கோம். அரெஸ்ட் பண்றதா இல்லையாங்குறது அவங்க பதிலில் தான் இருக்கு” என்று சிவன் கூறினான்.

 

அவனை மேலும் அடிப்பட்ட பார்வை பார்த்த அக்னிகா, தன்னால் அவனுக்கும் அவன் தங்கைக்கும் இடையே சண்டை வேண்டாம் என்ற எண்ணத்துடன் பேச வந்த சுசியை தடுத்தாள்.

 

“நான் அவங்களோட டாக்டர். உங்க வழக்கு என் பேஷென்டோட மென்டல் ஹெல்த்த டிஸ்டர்ப் பண்றதை நான் விரும்பலை” என்று கூறுகையிலேயே சுசிக்குக் கண்கள் கலங்கி பொழிந்தது.

 

புரிந்துகொள்ளேன் என்று அதுவும் கெஞ்சியது போலும்.

 

ஆனால் சிவன் தன் தங்கையை அழுத்தமாகப் பார்த்து வாசலை நோக்கிக் கரம் நீட்ட,

 

“திஸ் இஸ் டூ மச் அண்ணா..” என்று பல்லைக் கடித்தபடி கூறியவள் அழும் மஹதியை தேற்றியபடி வாசலுக்குச் சென்றாள்.

 

“சொல்லுங்க அக்னிகா..” என்று சிவன் அழுத்தமான மற்றும் அடர்த்தியான குரலில் கேட்க, சிரம் தாழ்த்தியபடி கண்களை இறுக முடியவள், “இ..இவங்க.. சாத்விக்.. என் சீனியர்” என்றாள்.

 

“அதுமட்டும் தானா?” என்று அவன் கேட்க,

 

அவனை நிமிர்ந்து பார்த்தவள், “சொல்லிக்கொண்ட வரை அதுதான்” என்றாள்.

 

“குதுர்க்கமாக பேச வேணாம் அக்னிகா. நேரா பதிலுக்கு வாங்க. நீங்களும் சாத்விக்கும்.. லவ்வர்ஸா?” என்று திலகா வினவ,

 

அக்னிகாவின் கைகள் நடுங்கப் பெற்றது!

 

மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்ய முயற்சி செய்தபடி, “நா.. நான் அவர விரும்பினேன்.. அவரும் என்னை விரும்பினார்.. ஆ..ஆனா ந..ந..நான் திருநங்கைனு தெரிஞ்சதால் என்னை வேண்டாம்னு விட்டுட்டார்” என்று திக்கித் திணறி கூறியவள் உடல் வெளிப்படையாக நடுங்கத் துவங்கியது.

 

சிவனைத் தவிர மற்ற மூவருக்குமே அவளது செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது!

 

“நீங்க ரெண்டு பேரும்..” என்று திலகா தன் கேள்வியை இழுக்க,

 

“சொல்லிக்கலை.. ஒருத்தர் ஒருத்தர் எங்க விருப்பத்தை சொல்லிக்கலை. அவரும் என்னை விரும்பிருப்பாருனு எனக்கு உறுதியா தெரியாததால் நான் எதுவும் பேசிக்கலை. ஒருநாள் அவரா வந்தார்.. ந.. நான் திருநங்கையானு கேட்டார். ஆமானு சொன்னதும் ரொம்ப கோவத்தோட தகாத முறையில் தி..திட்..திட்டிட்டு போயிட்டார்” என்று கூறி முடித்தாள்.

 

சொற்ப வார்த்தைகளைப் பேசுவதற்குள் மனதின் மொத்த வலுவையும் இழந்துவிட்டாள்‌…

 

“அதுக்கு பிறகு நீங்க அவரையோ, அவர் உங்களையோ சந்திக்கலையா? ஐ மீன் காலேஜ் முடிச்ச பிறகு?” என்று சந்தோஷ் வினவ,

 

சிவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள் ‘இல்லை’ என்றாள்.

 

அது பொய் என்பது அறிந்தபோதும் சிவன் வாய்திறக்கவில்லை!

 

“சாத்விக் இறந்துட்டார். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இந்த வழக்கு சம்மந்தமா விசாரணை இருக்கும். கொஞ்சம் கோ-ஆப்ரேட் பண்ணுங்க” என்று திலகா கூற,

 

வலி நிறைந்த வலிகளுடன் அவர்களைப் பார்த்து பெயருக்கு தலையசைத்தாள்.

 

அவள் உடல் மேலும் நடுக்கம் பெற, அதைக் கண்ட மற்றவர்களுக்கே சற்று பதட்டம் ஏற்பட்டது! அவள் மூச்சுக்குத் திணறுவதைக் கண்ட பின்பே, “அக்னிகா.. ஒன்னுமில்லை.. காம் டௌன்” என்று திலகா அவளை சமன் செய்ய முயற்சித்தாள்.

 

வெளியே நின்றுகொண்டிருந்த சுசித்ரா பதறிக் கொண்டு உள்ளே வர, அதற்குள் அக்னிகா அருகே வந்த சிவப்ரியன், “ஒன்னுமில்ல ஸ்பார்கில்.. காம் டௌன்..” என்று அவள் முகம் பற்றினான்.

 

அவள் உடல் மேலும் நடுங்க, அந்த நிலையிலும் கூட அவன் கரத்தை தட்டிவிட முற்பட்டாள்.

 

மற்ற காவலர்கள் மூவருமே என்ன நடக்கின்றதென புரியாமல் நோக்க, உள்ளே வந்த சுசித்ரா, “ஏன்ணா இப்படி பண்ற? உனக்கு தெரியாததை புதுசா விசாரிக்கப் போறியா? அவளை இந்தளவு கொண்டுவரவே நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு கூட இருந்து பார்த்த தானே?” என்று கத்தினாள்.

 

“சுசி.. திஸ் இஸ் ஸ்டேஷன்” என்று அடிக்குரலில் சிவன் கூற,

 

“தென் ஓகே.. உன் இன்வஸ்டிகேஷன் முடிஞ்சது தானே? விடு அவளை” என்று அவனுக்கு இணையாய் கத்தியவள், அவளை அணைத்துக் கொண்டாள்.

 

அக்னிகாவிற்கு மயக்கம் வருவதைப் போல் ஆக, மஹதியும் உடன் வந்து அவளைத் தாங்கிக் கொண்டாள்.

 

மொத்த வலுவும் இழந்த நிலையில் தள்ளாடிய அக்னிகா மூர்ச்சையாகி பொத்தென விழுந்துவிட, “அய்யோ” என்று கண்ணீரோடு தலையில் தட்டிக் கொண்ட சுசித்ரா அண்ணனை முறைத்து வைத்தாள்.

 

ராம் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்க, “வோணாம் அண்ணா.. எழுந்தா அழுது மறுபடியும் மயங்கிடுவா” என்றவள், “வண்டில ஏற்ற மட்டும் ஹெல்ப் பண்ணுங்க” என்று ராமிடமே கேட்டாள்.

 

ராம் சிவனை நோக்கவும், சிவன் சிறு தலையசைப்பைக் கொடுக்க, அவளைக் கைகளில் ஏந்திய ராம், மஹதி மற்றும் சுசித்ரா வந்த ஆட்டோவில் அவளை கிடத்திவிட்டு வந்தான்.

 

ராம் உள்ளே வர, மேஜையில் கரம் ஊண்றி தன் சிரம் தாங்கி அமர்ந்திருந்த சிவப்ரியனின் விழிகள் அழுந்த மூடியிருந்த போதும் துளியளவு கண்ணீர் வெளிய தப்பிக் குதித்தது!

 

அவன் காதுகளில் அவனவளின் பெரும் அலறல் சப்தம் ஏதோ தன் அருகேயே கேட்பதைப் போன்ற உணர்வில்‌ அவன் நாசி துடித்தது!

 

“ச..சார்..” என்று சந்தோஷ் தயங்கித் தயங்கி அழைத்திட,

 

சட்டென விழி திறந்தவன் வழியும் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டு, “தன்விஷாவோட ஃபிரெண்ட்ஸ விசாரிக்கனும்” என்றான்.

 

அத்தனை நேரம் இருந்த தவிப்புகள் எல்லாம் எங்கே சென்றதோ? என்று வியக்கும் வண்ணம் அவன் முகத்தில் கடுமை பிறந்தது! ஆனால் அவன் உள்ளம் ரணப்பட்டுத் துடிப்பதை அவன் மட்டுமே அறிந்த ரகசியப் பக்கங்களாய் அவன் நேசம் கொண்ட நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது…

 

“ஓ..ஓகே சார்..” என்ற மற்றவரும் அவனுடன் புறப்பட, தன்விஷாவின் கல்லூரி தோழர்களை விசாரணை செய்ய கல்லூரிக்கே சென்றனர்.

 

கல்லூரி முதல்வரிடம் முறையான அனுமதி பெற்று அவர்களை அழைத்த காவலர்கள் ஒவ்வொருவரையாய் விசாரித்தனர்.

 

தன்விஷாவின் உற்ற தோழியான சுருதியிடம் விசாரணை தொடங்க, “தன்விஷாவுக்கு ரீசென்டா எதும் ப்ரபோஸல் வந்ததா?” என்று திலகா கேட்டாள்.

 

“ப்ரபோஸல் எதுவும் வரலையே மேம்” என்று சுருதி கூற,

 

“ஓகே தென்.. உங்க சர்கில்ல டிரான்ஸ் ஜென்டர் ஃபிரண்ட்ஸ் யாரும் இருக்காங்களா?” என்று ராம் கேட்டான்.

 

சற்றே யோசித்தவள் சிறு தயக்கத்துடன், “அப்படி யாரும் இல்ல சார். ஆனா வேற டிபார்ட்ல ஒருத்தன்.. பையன் தான்.. ஆனா கொஞ்சம் கேர்ளிஷா பிகேவ் பண்ணுவான். நா.. நாங்க எங்களுக்குள்ள கிண்டல் பண்ணிருக்கோம். நேரா பேசினதில்லை” என்று கூற,

 

“ஒருத்தரோட நேச்சரையும் கேரெக்டரையும் இப்படித்தான் கேலிபொருள் ஆக்குவீங்களா?” என்று திலகா கண்டிப்புடன் கேட்டாள்.

 

அதில் மருண்டு விழித்த பெண், “சாரி மேம்” என்க,

 

அந்த மாணவனின் பெயர் மற்றும் விவரங்களைப் பெற்றுக் கொண்டு அவனையும் விசாரணைக்கு அழைத்தனர்.

 

சாதுவான ஆண் ஒருவன் உள்ளே வர, அவனது நடை மற்றும் பாவனை சற்றே பெண்களுக்குறிய நலினத்தை ஒத்திருந்தது.

 

சங்கோஜத்துடன் வந்து அமர்ந்தவன், பயத்துடன் “சார்..” என்க,

 

“விக்ரம் ரைட்?” என்று சந்தோஷ் கேட்டான்.

 

“எஸ் சார்..” என்று அவன் கூற,

 

தன்விஷாவின் புகைப்படத்தை வைத்தனர்.

 

அவன் முகம் மெல்ல சுருங்கியது!

 

“தன்விஷா கூடப் பேசிருக்கீங்களா?” என்று ராம் வினவ,

 

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டவன், “பேச முயற்சி பண்ணிருக்கேன் சார். அ..அவங்க ஃபேஸ் என் சிஸ்டரோட ஃபேஸ் கட் போல இருக்கும். என் சிஸ்டர் அஞ்சு வருஷம் முன்ன ஒரு ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க. என் சிஸ்டர்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அதனால அவங்ககூட பேசி ஃப்ரண்டாக ஆசை பட்டேன். என் சிஸ்டர் கூடப் பேசுற ஃபீல் திரும்பக் கிடைக்கும்னு நினைச்சு ஒருநாள் ரோட்ல வச்சு பேசப் போனேன்” என்றவனுக்கு கண்கள் கலங்கியது.

 

காவலர்கள் நால்வருக்கும் ஓரளவு விடயம் புரிந்துபோனது.

 

“நா.. நான் ப்ரபோஸ் பண்ண வர்றதா நினைச்சுகிட்டாங்க” என்று அவன் கூற, அன்றைய நிகழ்வு அவன் கண்முன் விரிந்தது.

 

மிகுந்த ஆசையோட அவளிடம் நட்பாய் பழகவேண்டி சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவளை அழைத்தவன், “ஹாய் தன்விஷா” என்றான்.

 

‘அய்ய இதுவா?’ என்று மனதோடு நினைத்தவள், அவனை பார்த்தபடியே மௌனமாய் நின்றாள்‌.

 

“உங்க கூட கொஞ்சம் பேசணும்” என்று அவன் கூற,

 

மேலும் முகம் சுருக்கியவள், “எனக்கு பேச இஷ்டமில்ல” என்றாள்.

 

“இல்லங்க.. அப்டி காஃபி ஷாப் வரீங்களா? ரோட்ல வச்சு பேச வேணாம்.. யாரும் தப்பா நினைச்சு..” என்று அவன் முடிக்கும் முன்,

 

“யூ இடியட்.. அறிவில்ல.. நீ கூப்டதும் வர என்னை என்னனு நினைச்ச? உன்னை மாதிரி ஆளுக்கு லவ் ஒன்னு தான் கேடு.. மரியாதையா சொல்றேன் இங்கருந்து போயிடு” என்று கத்தினாள்.

 

“அய்யோ இல்லங்க..” என்று அவன் ஓரடி முன்னே வர,

 

சட்டென பின்னே நகர்ந்தவள், “உன்ன பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை.. உன் பிஹேவியர் அதைவிட மோசமா இருக்கு. உன்கூட பழகினா காலேஜ்ல எல்லாரும் என்னையும் உன்னமாதிரி அது போலனு கேலி பேசுவாங்க..” என்று கத்திவிட்டுச் சென்றாள்.

 

தான் பேசுவதைக் கூட கேட்காமல் தன் மனதையும் நோகடித்துவிட்டுச் செல்பவளைப் பார்த்து கண்ணீர் மட்டுமே விட முடிந்தது, அந்த அப்பாவியால்!

 

நடந்தவற்றைக் கூறிய விக்ரம் நிமிர,

 

அவன் தோளைத் தட்டிக் கொடுத்த சிவன், “ஸ்டடீஸ்ல நல்ல கவனம் செலுத்துங்க.. உங்களுக்குனு ஒரு நல்ல லைஃப் இருக்கு” என்று கூறி அனுப்பி வைத்தான்.

 

 

விசாரணை நல்லபடியே முடிந்ததில் கல்லூரி நிர்வாகிகளுக்கும் நன்றி கூறிய காவலர்கள் காவல் நிலையம் வந்து சேர,

 

மற்ற மூவரும் சிவப்ரியனின் முகத்தையே கூர்ந்து நோக்கினர்.

 

“சார்.. தன்விஷா அதிகமான பெண்மை குணம் கொண்ட ஒரு ஆணை கேலி பேசிருக்காங்க. சாத்விக் ஒரு திருநங்கையை விரும்பி, திருநங்கைனு தெரிந்த பின் தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கான். தினேஷ் ஒரு திருநங்கையை கொலை செய்திருக்கான்..” என்று கூற,

 

“சோ..?” என்று சிவப்ரியன் புருவம் உயர்த்தி வினவினான்.

 

“அப்ப இந்த கொலைகள் எல்லாம் திருநங்கைகளைத் தவரா சித்தரிப்பவர்களுக்குதான் நடக்குதா சார்?” என்று திலகாவும்,

 

“சார்.. திருநங்கைகளை தவரா பேசினவங்க எல்லாருக்கும் வாயில் உலோகத்தை உருக்கி ஊற்றி தண்டனைக் கொடுக்குறான்.. அந்த சாரி.. அவனோட ப்ளட் மூலமாவே எழுதி அவன் செய்த தப்புக்கு மன்னிப்பு வேண்ட வைக்கும் விதமா பண்றான்” என்று சந்தோஷ் கூறினான்.

-தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
20
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. ஆதி எதுவும் பாதிக்கப்பட்டு இருப்பனா?.

    2. OMG… அக்னி திருநங்கையா!!😱😱 Ipati oru twist ethir pakala sis… Super epi sis…