Loading

பூ-09

 

“வாட்?” என்று சந்தோஷ் அதிர்வாய் கேட்க,

 

“ஆமாய்யா.. அவ திருநங்கை. இந்தூருதான். இப்படியாகிட்டானு வீட்லருந்து தொறத்திவிட்டாவ. போக்கிடமில்லாம அங்கயே கோவில் பக்கமா அலைஞ்சுட்டு இருந்திருக்கா. ஏதோ வேலைனு அங்க போனவனுங்க அவளைப் பொண்ணுனு நினைச்சு தூக்கிட்டு வந்துட்டானுங்க. பிறகு விஷயம் தெரிஞ்ச பிறகும் இங்க எடுபிடி வேலைக்கு வச்சுக்கிட்டாங்க. 

 

அன்னிக்கு அந்த மினிஸ்டர் மவேன் பயங்கர போதைல வந்திருந்தான். சாந்தி ரூம கூட்டிகிட்டு இருந்தது. அவகிட்ட வந்து தன் அராஜகத்தைக் காட்ட, அவ எடுத்துப் புரியவைக்க முயற்சி பண்றதுக்குள்ள..” என்றவர் முகம் சுருக்கி கண்ணீர் வடித்தார்.

 

அதில் சிவனுக்கும் சந்தோஷுக்குமே என்னவோ போலானது! தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட வசந்தி, “தன்னோட தேவைய நிறைவேத்திக்க முடியலைங்குற ஆத்திரத்துல பாவி அவள அடிச்சே கொன்னுட்டான்” என்று கூற,

 

காவலர்கள் இருவருக்கும் அத்தனைக் கோபமாக வந்தது!

 

“கண்ணால பாத்த எனக்கு மனசே ஆறலை. சாந்தி பெருசா இங்க யார்டையும் பேசாது. எங்கிட்ட மட்டும் தான் பேசும். அவளுக்கு இப்படியொரு கொடுமையானு தைரியத்தோட ஸ்டேஷன் போயி கம்ப்ளைன்ட் எழுதிக் குடுத்துட்டேன்.. ஆ..ஆனா திரும்ப வர்றச்ச” என்று அவள் உடல் குலுங்க அழ,

 

அவளால் சொல்ல முடியாத பக்கத்தில் என்ன நிரம்பியிருக்கும் என்பதை காவலர்கள் இருவரும் புரிந்துக் கொண்டனர்.

 

“வேற வழியில்லாம போய்க் கம்ப்ளைன்ட வாபஸ் வாங்கிட்டேன். அம்பூட்டு பெரிய ஆளை நானும் ஒத்தையில என்னத்த செஞ்சுபுட முடியும்?” என்று கூறி தன் கண்ணீரை அவள் துடைத்துக் கொள்ள,

 

காவலர்கள் இருவரும் கனத்த மனதுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“ஒன்னும் பயப்படாதீங்க. உங்களுக்கு யாராலயும் எதுவும் ஆகாது” என்று சிவன் கூற,

 

“அய்யா.. தப்பா எடுத்துகிடலனா ஒன்னே ஒன்னு கேட்கட்டுங்களா?” என்று கேட்டாள்.

 

‘என்ன?’ எனும்விதமாய் அவர்கள் பார்க்க, “ஒரு ஒருமணி நேரம் இங்கனயே இருக்கீங்களா? நான் கொ.. கொஞ்ச நேரம் மட்டும் தூங்கிகிடுதேன்.. ராவெல்லாம் இவனுங்க கூத்தடிக்க பாடா படுத்தியெடுத்துட்டானுங்கய்யா” என்று கெஞ்சல் குரலில் அவள் கூற,

 

“இனிமேல் உங்க தூக்கத்துக்கு எந்த பங்கமும் வராது” என்று கூறிய சிவன் சந்தோஷுக்குக் கண் காட்ட, 

 

சிறு தலையசைப்போடு தனது அலைபேசியில் யாருக்கோ அழைத்தவன், “ஸ்க்வாட். கம் இன்” என்று கூறினான்.

 

மொது மொதுவென உள்ளே நுழைந்த ஆண் மற்றும் பெண் காவலர்கள் அவ்விடுதியின் உரிமையாலரைக் கைது செய்ததோடு அலுங்காமல் அங்குள்ள பெண்களையும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

 

மேலும் இறந்துபோன சாந்திக்கு செய்யும் நன்றிகடனாய், அவ்விடுதி உரிமையாலரையே வாக்குமூலம் கொடுக்க வைத்து, இறந்து போன மந்திரியின் மகன் செய்த கொலையையும் அம்பலப்படுத்தியிருந்தனர்.

 

“சார்.. வசந்தி சொன்னதை வச்சுப் பார்த்தா, சாந்தியுடைய கொலைக்கு பழி தீர்க்கனு அவங்களுக்கு யாருமே இல்லையே சார்” என்று சந்தோஷ் கேட்க,

 

“எதுவோ இடிக்குது சந்தோஷ். எனக்கென்னமோ இந்த சாந்தியோட டெத்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கும்னு தான் தோனுது. முதல் வழக்கான தன்விஷாவோட டெத்ல அவ பேரென்ட்ஸ் அன்ட் பிரெண்ட்ஸ் சொன்னபடி தன்விஷாவும் ஒரு சாதாரண பெண் தான். சாத்விக்கும் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பையன். தினேஷுக்கு பின்னாடி பெரிய பின்புலம் இருந்தாலும், முழுக்க முழுக்க அவனோட தவறால் நடந்தது இந்த கொலை… சோ இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கும்னு தான் தோனுது” என்று சிவன் கூறினான்.

 

“சார்.. தன்விஷாவோட பிரண்ட்ஸ் கிட்ட நாம ஒருமுறை எதுவும் விசாரிச்சுப் பார்ப்போமா சார்?” என்று ராம் கேட்க,

 

மணியைப் பார்த்தவன் இரவு பதினொன்றை அது நெருங்கிவிட்டதைக் கண்டான். “நாளைக்கு மார்னிங் முதல் வேலை நமக்கு இதுதான்” என்று கூற,

 

அனைவரும் அவரவர் இல்லம் புறப்பட்டனர்.

 

சுசி மாலையே அக்னிகா வீட்டிற்கு செல்வதாகவும், இரவு தன்னை அழைத்துக் கொண்டு வீடு திரும்பும்மாறும் தகவல் அனுப்பியிருக்க, நேரே அக்னிகாவின் இல்லம் வந்தான்.

 

மகிழுந்தை அவள் வீட்டு வாசலில் நிறுத்தியவன் இறங்கும் முன், சட்டென நினைவு வந்தவனாய் மகிழுந்தில் தேடி ஒரு காகிதத்தை எடுத்தான்.

 

வேக வேகமாய் அதில் ஒரு ரேஜா பூவை செய்தவன், சென்று அழைப்பு மணியை அழுத்தினான்.

 

கதவைத் திறந்த அக்னிகா, அவனைக் கண்டு “வாங்க..” என்று மெல்ல அழைத்துவிட்டு நகர,

 

உள்ளே வந்தவன் கதவை சாற்றி அதில் சாய்ந்து நின்றான்.

 

அவனை சிறு படபடப்புடன் பார்த்தவள், “சு..சுசி தூங்கிட்டா..” என்க,

 

“ஓ.. மஹதி?” என்று கேட்டான்.

 

“அவளும் உள்ள..” என்றவள் அவனை நோக்க,

 

குறும்பு சிரிப்புடன் அவளை நெருங்கினான்‌.

 

அதில் அதிர்ந்து பதறியவள், பின்னே எட்டுக்கள் வைக்க, அவள் மருண்ட விழிகள் காட்டும் வர்ண ஜாலக்களை ரசித்தபடியே அவளை நெருங்கி வந்தான்.

 

“ப..ப்ரியன்..” என்று அவள் தடுமாற, 

 

“எஸ் மை டியர் ஸ்பார்கில்” என்றான்.

 

என்ன சொல்லி அவனை நிறுத்த என்று புரியாது நகர்ந்தவள் நீள்விருக்கையில் தட்டி, விழப்போக, “ஏ..” என்று அவளைப் பிடித்துக் கொண்டவன், “லூசு.. உன்னைய என்ன முழுங்கவா போறேன்” என்றான்.

 

அவன் கைச்சிறையிலிருந்து சட்டென நகர்ந்தவள், “நீங்க தான் வித்யாசமா பாத்துட்டே வந்தீங்க” என்று அவனைக் குற்றம் சாட்ட,

 

“நான் வித்யாசமாலாம் பார்க்கலையே. எப்பவும் போலதான் பார்த்தேன்” என்று கண் சிமிட்டினான்.

 

அதில் அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பியவள் தாடையைத் தட்டியவன், “ஐ லவ் யூ ஸ்பார்கில்” என்று அவள் முகத்தின் முன் அந்தக் காகித ரோஜாவை நீட்ட,

 

“உ.. உங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியவே புரியாதா.. ச்சை” என்று அடிக்குரலில் சீரியவள் அதனை வாங்கி கிழித்து எறிந்தாள்.

 

“ஸ்பார்கில்..” என்று அவன் பேச வர, கை நீட்டித் தடுத்தவள், “புரிஞ்சுக்கோங்க ப்ரியன்.. நானே நொந்து போயிருக்கேன். தினம் நைட்டு தூங்கும் முன்ன விழுங்குற மாத்திரை இல்லாம ஒருநாள் உறக்கம் கூட எனக்கு நிம்மதியா வர்றது இல்லை. என்னைக் கட்டிகிட்டு உங்களாலயும் சரி, என்னாலயும் சரி.. ச..சத்தோஷமா வ்வாழ முடியாது.. எல்லாம் தெரிஞ்ச நீங்களே ஏன் இப்படி பண்றீங்க?” என்று கோபத்தில் துவங்கி, வேதனையில் கடந்து, ஆற்றாமையோடு முடித்தாள்.

 

“எல்லாமே புரிஞ்சு தானே உன்னை மனசார நேசிக்குறேன்” என்று அவன் கூற,

 

“இது பட்சாதாபத்தில் வந்த உணர்வு” என்று முற்றுப்புள்ளி வைக்க முயன்றாள்.

 

“பட்சாதாபத்திலேயே வந்தாலும் தான் என்ன? ஊர் உலகத்தில் உன் நிலமை வேற யாருக்குமே வந்ததில்லையா? அப்படி நான் யாரையும் பார்த்தது தான் இல்லையா? அவங்க மேல வந்த பட்சாதப்பத்தையும் தாண்டி உன்மேல வந்த இந்தக் காதலைத் தான் நான் பார்க்குறேன்” என்று அவள் வைத்த முற்றுப்புள்ளியை அவன் தொடர்புள்ளியாய் மாற்ற,

 

அவனிடம் பேசி ஜெயிக்க இயலாதென்ற இயலாமை சுட்டதில் சோர்வுற்றவள், அயர்ந்து அமர்ந்து “ப்ளீஸ் ப்ரியன்.. என்னால முடியலை” என்றாள்.

 

அவள் காலடியில் அமர்ந்து அவள் முட்டியில் கரம் வைத்தவன், “புரிஞ்சுக்கோடி.. நீ நினைப்பதையெல்லாம் கடந்து ஒரு அழகான வாழ்க்கை நமக்கு இருக்கு” என்று கூறி ஒரு பெருமூச்சுடுன், அவளது கண்ணீர் முட்டி நிற்கும் விழிகளைப் பார்த்தபடி, எழுந்து அறைக்குள் சென்றான்.

 

சுசியும் மஹதியும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு படுத்திருக்க, சிறு சிரிப்போடு தனது தங்கையை ஏந்திக் கொண்டவன் வெளியே வந்தான்.

 

அவன் உதவி கேட்காமலே சென்று கதைவைத் திறந்தவள் வண்டியைத் திறக்க வேண்டி அவனை நோக்க, “சாவி பாக்கெட்ல இருக்கு” என்றான்.

 

“ஆண்டவா..” என்றபடி வந்தவள் பட்டும் படாமல், கையை நுழைத்துச் சாவியை எடுத்து மகிழுந்தைத் திறக்க, தங்கையைப் படுக்க வைத்தவன், அக்னிகாவை நோக்கினான்.

 

அவளைத் திரும்பிப் பார்த்தவன், “நீ பெருசா எதுவும் யோசிக்கவெல்லாம் வேணாம் ஸ்பார்கில். சந்தோஷமா வாழ முடியாது சொல்றல? ஒரே ஒருநாள் தூக்க மாத்திரை இல்லாம படு. ஆனா ஒன்னு.. என்னை நினைச்சுட்டு என் நினைவுகளோடவும் என் காதலின் நினைவுகளோடவும் படு. அன்னிக்கு நைட் நிம்மதியான தூக்கம் உனக்கு கிடைக்கலைனா நான் யோசிக்குறேன்” என்றுவிட்டுப் புறப்பட்டான்.

 

எத்தனை ஆழமான உணர்வு அவன் வார்த்தைகளில்??? அதிலும் அவளிடம் அவன் காட்டும் அதீத மென்மையில் பெண்மையே தோற்றுப்போய்விடும் போல உணர்ந்தாள்.

 

அவன் சென்றுவிட்ட வீதியையே பார்த்துக் கொண்டு நின்றவள் பறவைகளின் ஓசையில் சுயம் மீள, வீதியின் இருள் உணர்ந்து மெல்ல உடல் நடுங்கப் பெற்று உள்ளே சென்றாள்.

 

சமையலறை சென்று பருக நீர் எடுத்து வந்தவள், தனது மாத்திரைப் பையை எடுத்து வந்து வைத்து இரவுக்கான மாத்திரைகளை எடுத்தாள்.

 

அவற்றைக் கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கண்கள் கலங்கியது… ‘ஒரே ஒரு நாள் அதை போடாம என் நினைவில் படு’ என்று அவன் கூறியவை காதுகளில் ஒளித்துக் கொண்டே இருந்தது!

 

மாத்திரையை வைத்துவிட்டு இரு கரங்களிலும் மேடையை இறுக பற்றிக் கொண்டு நின்றவள் உடல் அழுகையில் மெல்ல குலுங்கியது!

 

மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்தவள் நீரை மட்டும் பருகிவிட்டு மாத்திரையை போடாமலே வந்து படுத்துக் கொண்டாள்.

 

வந்து படுத்தவளுக்கு தூக்கம் வருவேனா என சண்டித்தனம் செய்தது!

 

‘ஆனா என்னை நினைச்சுட்டே படு..’ என்று அவன் கூறிய வரிகள் மனதில் ஓட, ஒரு பெருமூச்சை இழுத்து விட்டாள்.

 

அலைபேசியை எடுத்தவள் சில மாதங்கள் முன்பு அவனது வீட்டில் சுசியின் பிறந்தநாள் விழாவில் அவர்கள் அடித்த கொட்டங்களின் புகைப்படங்களை எடுத்துப் பார்வையிட்டாள்.

 

அன்று சாதாரணமாக தெரிந்த அவனது பார்வை இன்று புகைப்படத்தில் காணும்போது அவனது நேசம் வழிவதைப் போல் தெரிந்தது.

 

தன் முகத்தில் சுசி பூசிவிட்ட அணிச்சலை சிரித்தபடி துடைத்து எடுப்பவனைக் கண்டு அவள் இதழ்கள் தன்னைப் போல சிரித்துக் கொண்டன.

 

அடுத்ததாக காணொளி ஒன்று வரவும், மஹதி உறங்குவதால் காதொலிப்பானை எடுத்துப் போட்டுக் கொண்டு அதை திறந்தவள் பார்வை அவனை மட்டுமே வட்டமடித்தது.. அவளையும் அறியாது!

 

சிரித்தபடியே காகித வெடியினை சுசியின் வேலைத் தோழன் வெடிக்க, அந்த திடீர் சத்தத்தில் திடுக்கிட்டு சிவப்ரியனின் கரத்தைப் பற்றிக் கொண்டவள் சிரித்தபடி விலக, அவன் பார்வை ஒரு நெடி அவள் பற்றிய தன் கரத்தையே ரசனையோடு பார்த்து மீண்டது.

 

பனிபுகை போன்ற ஸ்ப்ரேவை அவள் முகம் நோக்கி மஹதி அடிக்க வர, “ஏ நோ..” என்று அவளை தன்னுள் இழுத்துக் கொண்டவன், “முகத்துல அடிக்காது மஹிமா” என்று கூறினான்.

 

அத்தனை ஆத்மார்த்தமான சந்தோஷத்துடன் வலைய வந்தவளுக்கு அந்நொடியை மீண்டும் உணருவதைப் போன்ற உணர்வு!

 

அதைப் பார்த்தபடி கண்களை மூடியவள் கண்களுக்குள் கள்வன் வந்து கண்சிமிட்ட, இதழில் பூத்த அழகிய புன்னகையுடன் மெல்ல மெல்ல நிம்மதியான உறக்கத்தின் பிடிக்குள் சென்றாள்…

 

ஆனால் அங்கு உறக்கத்திலும் உறங்க இயலாத நிலையில் அமர்ந்திருந்தான் சிவப்ரியன்.

 

‘சாந்தி ஒரு திருநங்கை சார்..’

 

‘அண்ணா முகத்தில் ஒருவித அறுவறுப்பைப் பார்த்தேன்..’

 

‘எதிர்ப்பார்க்காத ஏமாற்றமா இருக்கும்டானு சொன்னாரு..’

 

‘தன் தேவையைத் தீர்க்க முடியாததால அடிச்சே கொன்னுட்டான் அந்த பாவி’

 

என்று வசந்தி மற்றும் சாத்விக்கின் தம்பி சதீஷ் பேசியவை மாறி மாறி அவன் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது!

 

இதற்கிடையில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாய் அவன் உள்மனம் கூறியது!

 

தூக்கத்தை தொலைத்துத் தவித்தவனுக்கு அந்த நேரம் தான் நினைப்பதை செய்திடவும் இயலாத இயலாமை வேறு கோவத்தைக் கிளப்பியது!

 

ஆமையின் வேகத்தில் கடந்த நேரத்தை கடினப்பட்டு நகர்த்தியவன் காலை எழுந்ததும் கிளம்பி புறப்பட்டு விட்டான்.

 

காவல் நிலையம் வந்தவன், சாத்விக்கின் வழக்கு சார்ந்த கோப்புகளை எடுத்துப் பார்வையிட்டான். அவனது இணைய வழி நண்பனான சுரேனுடன் பேசிய ஆண்டை குறித்துக் கொண்டவன் அந்த ஆண்டு அவன் எந்த கல்லூரியில் பயின்று கொண்டிருந்தான் என்பதைப் பார்வையிட்டான்.

 

அவன் பயிலும் பல்கலைக்கழகத்தின் பெயரைக் குறித்துக் கொண்டவன், திலகா, ராம் மற்றும் சந்தோஷுக்கு தகவல் கொடுத்துவிட்டு அப்பல்கலைக்கழத்தினை சென்று சேர்ந்தான்.

 

காலை வேளையதில் பல்கலைக்கழக காவலாளி மட்டுமே அங்கு இருக்க, காவல் உடையில் வந்தவனைப் பார்த்து சற்றே அச்சம் கொண்டார்.

 

அவரிடம் கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டு வரச்செய்தான்.

 

காலை நேரம் அதுவும் காவலன் அழைத்திருப்பதில் பதறிக் கொண்டு வந்தவரிடம் சென்றவன் தனக்கு வேண்டிய தகவல்களைக் கேட்டுப் பெற, கிடைத்த பதில் அவனை உறைய வைத்தது!

-தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
24
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்