Loading

அமர் ஒருவாரம் முழுதாக யோசித்தான். சிவாவை பிரியாவை விட்டு பிரிக்க சில பல வழிகளை யோசித்து, கடைசியில் எதுவுமே சரியாக கிடைக்காமல் அவன் சலிப்போடு இருக்க, அவனது நண்பன் ஒருவன் அழைத்தான்.

அவனிடம் பேசும் போது ஒரு விசயம் தோன்றியது. வீட்டில் காதல் விசயம் தெரிந்து மறுத்து விட்டதால், இருவரும் பிரிந்து விட்டதாகவும், அந்த பெண் வேறு ஒருத்தனை திருமணம் செய்ததால் பையன் தற்கொலைக்கு சென்றதாகவும் சொன்னான்.

இதே போல காதலை பிரியாவின் காதலை வீட்டில் சொல்லி விட்டால்? ஆனால் அதிலும் சிக்கல் இருந்தது. வளவன் காதலுக்கு எதிரியா? இல்லையா? என்று தெரியாது.

அவர் சம்மதம் சொல்லி விட்டால்? பிறகு அனைத்தும் வீண். அவனே பிரியாவை தூக்கி சிவாவின் கையில் கொடுக்க வேண்டும்.

தீவிர யோசனைக்குப்பிறகு, சிவாவின் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஒரு நண்பனிடம் சென்றான். அவன் சட்டவிரோதமான செயல்களை சத்தமில்லாமல் செய்பவன். பணம் கொடுத்தால் மட்டும் போதும். காரியத்தை கச்சிதமாக முடித்து விடுவான்.

அவனுக்கு சிவாவின் விவரம் தேவைப்பட, “அவன பத்தி ஏன் கேட்குற?” என்று கேட்டான்.

“சொன்னா தான் செய்வியா?”

“காசு கொடுத்தாலே செய்வேன்”

“அப்ப செய்.. பேமண்ட் கரெக்ட்டா வந்துடும்” என்று கூறி விட்டான்.

அமரின் நண்பன் கணேஷ் சிவாவை பற்றிய அத்தனை விவரங்களையும் எடுத்துக் கொடுத்தான்.

“இவனுக்கு ஒரு லவ்வர் இருக்கா.. அது மட்டும் யாருனு தெரியல” என்ற போது அமர் அதை கண்டு கொள்ளவில்லை.

“இவனோட அக்காவுக்கு கல்யாணம் ஆகி பத்து வருசம் ஆகுது. ஒரு பையன் இருக்கான். புருஷன் பேரு சுப்பிரமணி.. அதுல தான் ஒரு இன்ட்ரஸ்டிங் மேட்டரே இருக்கு”

“என்ன மேட்டர்?” என்று அமர் ஆர்வமாக கேட்டான்.

கணேஷ் அதற்கு சொன்ன பதிலை அமர் எதிர்பார்க்கவில்லை. இதனால் நிறைய சாதிக்க முடியுமே. இதை வைத்து சிவாவை பிரியாவிடமிருந்து பிரித்தே தீர வேண்டும் என்று முடிவு செய்து விட்டான் அமர்.

அவனது மூளை பல மடங்கு தீவிரமாக வேலை செய்தது. விளைவை யாருமே எதிர்பார்க்கவில்லை.

அமரை பிரியாவிடமிருந்து பிரிக்க நினைத்து தன் காதலை வெளிப்படுத்திய சிவா, தனக்குத்தானே குழி தோண்டிக் கொண்டதை அறியவில்லை.

பிரியா அன்று வேலையை கட்டிக் கொண்டு அமர்ந்திருக்க, “வர வர உனக்கு உலகத்துல எதுவுமே நினைப்பு இருக்கது இல்ல.. எல்லா நேரமும் வேலை தான்” என்று கயல் நொடித்துக் கொண்டார்.

“ஆமா வேலை தான்”

“அப்படி வேலையில என்ன சாதிச்ச நீ? ஆமா சம்பளம் எதாவது வாங்குனியா?”

கயல் கேட்க அப்போது தான் பிரியாவுக்கும் அந்த நினைவு வந்தது.

‘ச்சே.. சிவாவுக்கு எதாவது வாங்கனும்னு நினைச்சோம்.. மறந்தே போயிட்டோம்’ என்று நினைத்தவள் கயலை பார்த்தாள்.

“சம்பளம் வந்துச்சு மா..”

“அடிப்பாவி! ஒரு வார்த்தை சொல்லல?”

“மறந்துட்டேன்மா.. உங்களுக்கு எதாவது வேணுமா சொல்லுங்க.. வாங்கலாம்”

“எனக்கெல்லாம் ஒன்னும் வேணாம்” என்று கயல் முகத்தை தூக்கிக் கொண்டார்.

“சாரிமா. . நிஜம்மாவே மறந்துட்டேன். நீங்க வேணா இப்ப சொல்லுங்க.. என்ன வேணும்? நான் உடனே வாங்கி தர்ரேன்”

“எனக்கு உன் அப்பாவே எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டாரு”

“பரவாயில்ல.. நானும் வாங்கித்தர்ரேன்.. ரொம்ப நாளா கொலுசு கேட்டீங்க இல்ல.. அப்பா வரட்டும் போய் இத மாத்தி புதுசு வாங்கிடலாம்” என்றவள் தாயின் மறுப்பை ஏற்கவில்லை.

வளவன் வந்ததும் விசயத்தை சொல்லி, இருவரையும் அழைத்துக் கொண்டு தாயை கொலுசு வாங்க அழைத்துச் சென்றாள்.

வெள்ளியில் கயலுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்து, வளவனுக்கு வெள்ளி மோதிரமும் வாங்கினாள். அங்கேயே சிவாவுக்கும் வாங்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பெற்றவர்களிடமிருந்து கேள்வி வரும். அதனால் மனதை அடக்கிக் கொண்டாள்.

முதல் மாத சம்பளத்தில் சிவாவுக்கு எதாவது வாங்கியே தீர வேண்டும் என்று ஆசை வர, ஆன்லைனில் தேடினாள். எதுவும் பிடிக்கவில்லை. கடைசியாக ஒரு சட்டையை ஆர்டர் கொடுத்து விட்டாள்.

அவனது வீட்டுக்கே நேரடியாக சென்று விடும். அது போதும். கையில் வாங்கிக் கொடுக்க முடியாவிட்டால் என்ன? அவன் அணிந்து வரும் போது பார்த்துக் கொள்ளலாம் அல்லவா?

ஒரு வாரம் கழித்தே அந்த சட்டை சிவாவின் கைக்கு சென்று சேர்ந்தது. இடையில் சில பல சிக்கல் வேறு வந்து, கடைசியாக அவன் சட்டையை பார்த்து விட்டான்.

“சூப்பரா இருக்கு சுகந்தி.. செம்ம செலக்ஷன்” என்று பாராட்டினான்.

“நாளைக்கு போட்டுட்டு வா”

“அது பிரச்சனை இல்ல.. ஆனா நீ வேலையில என்னை ஒழுங்கா கூட பார்க்க மாட்ட” என்று குறை பட்டான்.

“ஒரு நாள் ரெண்டு நிமிஷம் லேட்டானா தப்பில்ல.. கொஞ்சம் சீக்கிரமா வா” என்று பிரியா கேட்டதும் சம்மதித்ததான்.

மறுநாள் சிவா சீக்கிரமே கிளம்பிக் கொண்டிருக்க, சண்முகியிடமிருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுகா…”

“இன்னைக்கு குருவ ஸ்கூல்ல விட்டுறியா சிவா?” என்று கேட்க சிவா சில நொடிகள் யோசித்தான்.

பிறகு பிரியாவை சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டு, “சரிகா.. இப்பவே வர்ரேன்” என்று கிளம்பி விட்டான்.

நேராக சண்முகியின் வீட்டுக்குச் செல்ல, குரு அரைகுறையாக கிளம்பியிருந்தான்.

சண்முகி காய்ச்சலில் இருந்தாள்.

“என்னகா.. இப்படி இருக்க? மாமா எங்க?”

“அவரு நேத்து தான்டா ஊருக்கு போனாரு”

“மறுபடியுமா?”

“ஆமா.. எதோ அவசர வேலையாம். ரெண்டு நாள்ல வந்துடுறேன்னு போனாரு.. எனக்கு காய்ச்சல்ல இவன கிளப்பவே முடியல”

“மாப்ள வாடா..” என்ற சிவா அவனை கிளப்பி விட்டான்.

“லன்ச் செய்யவே நேரமில்லடா..”

“என் பாக்ஸ இவன் கொண்டு போகட்டும்.. நான் கேன்டின்ல சாப்பிட்டுக்கிறேன்” என்ற சிவா தன்னுடைய தாய் கொடுத்ததை குருவுக்கு கொடுத்து பள்ளியில் கொண்டு சென்று விட்டான்.

அப்படியே கல்யாணிக்கு அழைத்து விசயத்தை சொன்னான்.

“அக்காவுக்கு காய்ச்சல்ல முடியலமா.. மாத்திரை வாங்கிட்டு போய் பாருங்க” என்று விட்டு அலுவலகம் செல்லும் போது நேரம் பறந்திருந்தது.

அலுவல நேரத்துக்கு வந்து விட்டாலும், பிரியாவை பார்க்க முடியவில்லை. அவளும் புஷ்பாவும் எதோ வேலையை பற்றித்தீவிரமாக பேசிக் கொண்டிருக்க சிவா தன் வேலையை பார்க்கச் சென்று விட்டான்.

மதிய உணவு நேரம் தான் பிரியா அவனை தேடி வந்தாள். அவனது சட்டையை பார்த்து புன்னகைத்து விட்டு “கரெக்ட்டா இருக்கா?” என்று கேட்டாள்.

“ஆமா.. சைஸ் கரெக்ட்டா இருக்கு”

“சீக்கிரமே ஏன் வரல?”

“அக்காக்கு ஃபீவர்.. மாமா ஊர்ல இல்ல.. குருவ ஸ்கூல்ல விட்டுட்டு வர வேண்டியதா போச்சு”

“ஓகே…” எனும் போதே புஷ்பா வந்து விட அவனிடம் ஒன்றுமே சொல்லாமல் ஓடி விட்டாள்.

சிவா அவளது திருட்டுத்தனத்தை ரசித்து விட்டு தன் சட்டையை குனிந்து பார்த்து புன்னகைத்தான்.

அந்த சட்டையில் சில படங்களை எடுத்து பிரியாவுக்கு அனுப்பியும் வைத்தான். அதன் பிறகே சாப்பிடச் சென்றான்.

அமர் தூரமாக இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் பேசுவது கேட்கா விட்டாலும் சிவா அணிந்திருந்த சட்டையை பற்றிப்பேசுவது புரிந்தது.

ஒரு வேளை அது பிரியா வாங்கிக் கொடுத்ததாக இருக்குமோ? மனதில் மீண்டும் கோபத்தீ பற்றியது.

இத்தனை நாட்கள் விட்டு வைத்ததே தவறு. ஆனால் அவன் மிகவும் முக்கியமான நேரத்திற்காக காத்திருந்தான். நாளை ஒரு விழாவிற்கு அழைப்பிதழ் வரும். அந்த விழா இங்கே இல்லை. வெளி மாநிலத்தில் நடக்கிறது.

அதற்கு பிரியாவை அழைத்துச் சென்று விட்டு, இங்கே சிவாவின் வாழ்வை சிதைக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவன் கேட்தற்கும் மேலாக அவனுக்கு செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. கணேஷ் நிறைய நிறைய சொன்னான். அதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்று சிந்தித்தான் அமர்.

சிந்தித்து ஒரு முடிவுக்கும் வந்து விட்டான். சிவாவின் குடும்பத்தை அடிக்க அடிக்க அவனுக்கு வாழ்வே சலித்துப்போக வேண்டும். அதன் பிறகு காதல் எப்படி மிஞ்சுகிறது என்று பார்க்கலாம்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
5
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்