குகன், மித்ரா இருவரும் யோசனையுடன் ஸ்கூல் வாசலையே பார்த்துக் கொண்டு இருக்க.
வேகமாக இருவரும் இருக்கும் இடம் வந்து நின்றாள் வித்யா.
” ஹேய் !அம்மா” என்று குதித்தான் குகன்.
அவளும் ,இருவருக்கும் அருகில் நெருங்கி வர ,”அம்மா தேவ் வரலையா? நீ வந்திருக்க “என்றான் கேள்வியாக..
“தேவுக்கு ஏதோ அவசர வேலையாம் டா அதான் என்ன கூட்டிட்டு வர சொன்னான்..”
“ஓ ! நான் மித்ரா மிஸ் கிட்ட போன் வாங்கி போன் கூட பண்ணேன் அதான் எடுக்கலையா?” என்றான் பொடியன் கவலையாக..
“உங்க அம்மாவா ?குகன்” என்றாள் மித்ரா .
“எஸ் மிஸ்”என்றவன்..வித்யா புறம் திரும்பி, “மா இவங்க தான் எங்க கிளாஸ் மிஸ் மித்ரா மிஸ் “என்று கண்கள் மின்ன குதூகலத்துடன் சொன்னான் குகன்..
வித்யா மித்ராவை பார்த்து புன்னகையுடன்,”ஓ! நீங்க தான் அவன் கிளாஸ் டீச்சரா” என்று கேட்டுக் கொண்டே அவளிடம் கை நீட்டினாள் .. “ஹாய்! மேம் ஐ அம் வித்யா. குகன் அம்மா”என்று..
மனதிற்குள் ‘பார்க்க நல்லா அழகா தான் இருக்கா ,அதான் பையன் கவுந்துட்டான் போல ‘என்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையாலே வருடி ஸ்கேன் செய்தாள்.
“எஸ் மேம்! ஐ அம் மித்ரா. எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? என்று தானும் புன்னகைத்தாள் மித்ரா.
“ரெண்டு முறை தேவுக்கு “என்றவள்.. நாக்கை கடித்துக் கொண்டு ..”குகன் சித்தப்பாவுக்கு கால் பண்ணோம். அவரு எடுக்கல, அதான் அவன் கொஞ்சம் பயந்துட்டான்..”என்றாள் சங்கடமாக தான் “தேவ் “என்று சொல்லியதால் தவறாக எண்ணிவிடுவாரோ ?என்று எண்ணி..
அவளது தேவ் என்ற வார்த்தையையும் ,அதன் பிறகு ,அவள் திருத்தம் செய்ததையும் உணர்ந்த வித்யா உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டே ,’அவன் பயந்துட்டானா ? இல்ல இவ ஆள காணோம்னு தேடுறாலானு தெரியல? ..ஆனா நல்லா பேசுறா ‘என்று நினைத்துக் கொண்டே,
“அது ஒன்னும் இல்ல மிஸ் அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் போன் எடுத்து இருக்க மாட்டான் “என்றாள்.
“இப்போ தான் என்கிட்ட வேலையா இருக்கிறதா சொன்னீங்க ? இப்போ மிஸ் கிட்ட உடம்பு சரியில்லைன்னு சொல்றீங்க ?என்ன ஆச்சு ? தேவுக்கு “என்று அழுகை குரலில் கேட்டான் குகன்..
“ஒன்னு இருக்காது டா சும்மா சொல்றாங்க அம்மா” என்று அவனை சமாதானம் படுத்தினாள் மித்ரா.
“சொல்லுமா” என்று வித்யாவின் கால்களை கட்டிக்கொள்ள ,
“ஒண்ணும் இல்லடா”என்றாள்.. தன்னை சமன்படுத்திக் கொண்டு,
” நீ சொல்வியா? மாட்டியா?” என்றான் அழுதபடி,
“நீ வா.. நம்ம வீட்டுக்கு போகலாம்.. சாரி மிஸ் “என்று விட்டு ,தன் அம்மாவிடம்,” நீ கிளம்பு வீட்டுக்கு போகலாம்.. நான் முதல்ல தேவை பார்க்கணும்” என்று அடம் பிடித்தான்.
“சாரி மிஸ் அது “என்று வித்யா தயங்க,
“எனக்கும் தெரியும். அவனுக்கு அவங்க சித்தப்பா நா ரொம்ப பிடிக்கும்னு ..நீங்க அவனை கூட்டிட்டு போங்க “என்றவளின் வார்த்தை லேசாக சுணங்கி இருந்தது.. முகம் லேசான கவலையை ,வருத்தத்தை தத்தெடுத்திருந்தது..
அதை உணர்ந்த வித்யா அவளைப் பார்க்க..
“நீங்க போயிட்டு அவங்க சித்தப்பாவை பாருங்க
அழுவுறான் பாருங்க ,அவனையும் பாருங்க ,சீக்கிரம் வீட்டுக்கு போங்க “என்றாள் மித்ரா.
அவளும் ஒரு தலையசைப்பை கொடுத்தவள்… அவனை அழைத்துக்கொண்டு செல்ல,
போகும் வழி எங்கும்,” என்ன ஆச்சு ? தேவுக்கு” என்று புலம்பிக்கொண்டே நச்சரித்துக் கொண்டே வந்தான் .
“ஒன்னும் இல்ல வாடா”அமைதியா என்றாள்..
வீட்டிற்கு சென்று இறங்க..
வேகமாக இறங்கி அவன் வீட்டிற்குள் ஓட..
வேலுவும் வீட்டில் இருக்க, “அப்பா .. தேவ் எங்க ?தேவுக்கு என்ன ஆச்சு?” என்றான் அழுகையுடன்…
“வேண்டுதல் டா..சொல்ற பேச்சு கேட்காமல் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்ட இல்ல ,அவன் ஏற்கனவே தலை வலிக்குதுன்னு சொல்லிட்டு இருந்தான்.இப்போ உன் கூட சேர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டு அதிக தலைவலி ,இப்போ ஃபீவர்” என்று சொல்ல ..
தன்னால் தான் என்றவுடன் குற்ற உணர்வு ஆகியது..
“இ..இல்லப்பா அ..அது”..
“டேய் போதும் நிறுத்து!… உன்கிட்ட சத்தம் போட்டேன்னு தெரிஞ்சா அதுக்கும் அவன் தான் கவலைப்பட போறான்.. நாங்க மதியமே வந்துட்டோம். அவனுக்கு ரொம்ப முடியாமல் இருக்குன்னு ஆபீஸ்ல இருந்து கால் பண்ணாங்க.நான் போகும் போதே பாதி மயக்கத்தில் தான் இருந்தான்.அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போய் ஊசி போட்டு கூட்டிட்டு வந்து இருக்கேன். உங்க அம்மாவும் மதியமே வந்துட்டா..இங்க அவன் கூட இருந்ததால.. டைம் ஆனது தெரியல அதனால தான் உன்ன கூப்பிட உங்க அம்மா வர லேட் ஆயிடுச்சு,இனி, இந்த மாதிரி அட்டகாசம் பண்றதெல்லாம் வச்சுக்காத, உன் கூட சேர்ந்து அவனும் தினமும் வீட்டில் திட்டு வாங்கிட்டு இருக்கான் அப்பா கிட்ட. நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து உனக்கு செல்லம் கொடுத்து உன்னையும் கெடுத்து வச்சு இருக்கான்..போ போய் பாரு .. இப்போதான் தூங்க செய்றான். சத்தம் போட்டு எழுப்பி விட்றாத! “என்று திட்டிவிட்டு வேலு நகர்ந்து கொள்ள ..
வேலு சென்றவுடன்,தன் அம்மாவை பாவமாக பார்த்தான் குகன்.
” சாரி மா”என்றான் கழுத்தில் கை வைத்து,
“ஒன்னும் இல்ல டா வா.. இருந்தாலும், நீ பண்ணது தப்பு தானே !”என்று பொறுமையாக அவனுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்து, தேவ் இருக்கும் ரூமுக்கு அழைத்து சென்றாள்.
அவன்,தொட்டு பார்க்க செல்ல..”வேணாம் குகன்”என்றாள்..
” ஏன்மா? “
“அவனுக்கு ஃபீவர் நிறையவே இருக்கு. பக்கத்துல போக வேணாம் .நீ தொட்டு பார்த்து எழுந்திட போறான். இப்பதான் தூங்குறான்” என்றவுடன்..
” சரி “என்று அமைதியாக உட்கார்ந்து கொண்டான் தேவ் அருகில்.
குகனுக்கு தேவையானதை பார்த்துவிட்டு, அவனுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, தேவை தொட வேண்டாம், என்றதால், அவன் அருகில் தான் இருப்பேன் என்று சொன்னவுடன் “சரிடா “அமைதியா இரு. அம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன். நான் படிக்க வைக்கிறேன்” என்று சொல்லி விட்டு கீழே இறங்கி வந்தாள் வித்யா.
வந்தவள் நேராக தன்னுடைய ரூமுக்கு செல்ல, “ஏங்க அவனே சின்ன பையன். அவன் கிட்ட எதுக்கு கத்திட்டு இருக்கீங்க?”
” ஆமாண்டி இப்படியே இரண்டு பேருக்கும் வக்காலத்து வாங்கிட்டு வா… இதெல்லாம் எங்க போய் நிக்க போதோ தெரியல” என்று தலையில் தட்டிக் கொண்டு நகர்ந்து விட்டான்.
தன் தம்பியை அப்படி பார்த்தவுடன் அவனுக்கு உள்ளம் கொதித்து விட்டது ..இப்போதாவது கொஞ்சம் பரவாயில்லை தான்.. அவனை ஆபிஸில் பார்க்க செல்லும் பொழுது அவன் இருந்த நிலையை பார்த்தவனுக்கு உண்மையாகவே ஒரு மாதிரியாகி விட்டது..
தேவ் வளர்ந்த பிறகு, அவனை இப்படி ஒரு சூழலில் படுத்து பார்த்ததே இல்லை. அப்படி உடலுக்கு முடியவில்லை என்றாலும், அப்போதே தன்னை கவனித்து கொள்வான். இன்று காலையில் கூட கொஞ்சம் வாட்டமாக தான் இருந்தான். கேட்டதற்கு ‘தலைவலி ‘என்று கூறியிருந்தான்..
சரி என்று அமைதியாகி விட்டார்கள்..
தலைவலி உடன்,நேற்று ஐஸ்கிரீம் சாப்பிட்டது இன்னும் அவனை ஏதோ செய்திருக்கிறது.. ஃபீவர் அதிகமாக இருக்கிறது.. அனைத்திற்கும் காரணம் தன் மகன் தானே என்றவுடன் அனைத்து கோபத்தையும் இப்போது, தன் மகன் மீது காட்டி விட்டான்.
அவனுக்கும் தன் மகனை திட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது .இருந்தாலும், அவன் செய்த செயல் தவறு என்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும் அல்லவா? ஒரு தகப்பனாக.. பொறுமையாக கூட எடுத்து கூறி இருக்கலாம்..தான்..ஆனால், தன் தம்பியை மதியம் அப்படி பார்த்தவுடன், மொத்த கோபமும் தன் மகனிடம் திரும்ப,அதை அப்படியே அவனிடம் காண்பித்து விட்டான்.
குகனை திட்டியதை எண்ணி வருந்தி , வேலு குகனை தேடி பத்து நிமிடங்களுக்கு பிறகு சென்றான்.
அவனை அள்ளி எடுத்து கொஞ்சி “சாரி டா.. அப்பா உன்ன அப்படி திட்டி இருக்க கூடாது “என்று கொஞ்சினான்…
“ஏங்க ,அப்போ திட்டிட்டு இப்ப வந்து கொஞ்சி பேசுங்க!” என்றாள் லேசான வருத்தத்துடன்..
” சாரிடி .ஏதோ ஒரு வேகத்துல”
” அதுக்குன்னு “
“சரி சரி அவனை வச்சு கிட்டு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதீங்க! இப்போ நேரம் ஆகுது பாருங்க சாப்பிடுங்க!” என்று சாப்பிட வைத்தார் தனம்..
குகனுக்கு எழில் தான் ஊட்டி விட்டார் .”தாத்தா என் மேல கோவமா? சாரி தாத்தா”என்று காதில் கைவைத்து கண்களை சுருக்கி கேட்டான்..
“டேய் படவா !உங்கள திட்றதுக்காக உங்க ரெண்டு பேரையும் எனக்கு பிடிக்காமல் போயிடுமா ?”என்றார்.
” இல்லை” என்பது போல் அவன் தலையாட்ட ..
“அப்புறம் என்னடா?” என்று அவன் நெற்றியோடு நெற்றி முட்டியவர்..
“உன் சித்தப்பாவை அப்படி பார்த்த உடனே உன் அப்பாவுக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சுடா , எங்களுக்குமே தாண்டா ..வளர்ந்த பிறகு அவன் இப்படி சோர்ந்து படுத்து நாங்க பார்த்ததே இல்லையா? இன்னைக்கு அப்படி பார்க்கவும் எல்லாருக்கும் ஒரு மாதிரி ஆயிடுச்சு, வேற ஒன்னும் இல்லடா “என்று அவனுக்கு உணவு ஊட்டி முடித்தவர். அவனையும் சமாதானப்படுத்தி இருந்தார்.தன்னால் தான் என்ற குற்ற உணர்ச்சி சிறுவனுக்கு வந்து விடக்கூடாது என்ற எண்ணம் எழிலுக்கு.. தனமும் அவனை வாஞ்சனையாக தடவி கொடுத்து அவரும் இரண்டு வாய் ஊட்டி விட்டார்.
தேவுக்கு இரண்டு இட்லி மட்டும் போட்டு எடுத்துக் கொண்டு போய் ஊட்டி விட்டான் வேலு.
“இல்ல வேணாம் டா எனக்கு.வாய் கசக்குது” என்றான்.
“கொஞ்சம் தான் சாப்பிடு டா. மாத்திரை சாப்பிடணும் இல்ல” என்று சாப்பிட வைத்து படுக்க வைத்தான் .
அங்கு தான் வித்யா ,வேலு, குகன் மூவரும் இருந்தனர்.
“அண்ணி குகனை உங்க கூட கூட்டிட்டு பொய் படுக்க வச்சுக்கோங்க” என்றான் தேவ்.
” இல்ல தேவ் நான் இங்கதான் படுப்பேன். நான் கொஞ்சம் நகர்ந்து படுத்துகிறேன் .உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ” என்று அடம் பிடித்தான்..
“டேய் உனக்கு ஃபீவர் வந்தா என்ன செய்ய வா ” என்றான் வேலு.
“இல்ல பா நான் தேவ் கூட இருக்கேன்”
அவன் இருந்தால் இவனுக்கு ஜுரம் கூட கொஞ்சம் சரியாகும். என்று யோசித்தவள்.. “ஏங்க அவன் இங்கேயே ஒரு பக்கமா இருக்கட்டும். ஒன்னும் பிரச்சனை இல்ல “என்று சொல்லிவிட்டு போர்வை எடுத்து அவனுக்கு போர்த்தி விட்டு தன் கணவனுடன் கீழே சென்றாள் வித்யா
சிறிது நேரத்திற்கு பிறகு அவன் தூங்கி விட்டானா? என்று பார்க்க வந்தாள். குகன் அமைதியாக அவன் அருகில் சிறிது இடைவெளி விட்டு படுத்து இருந்தான். அப்போது தேவ் போன் மின்னியது.. இதற்கு முன்பாகவே மதியம் போல அவன் போன் அடிக்க வேலு தான் சைலண்டில் போட்டு இருந்தான். ஆகையால் இரண்டு மூன்று முறை உடனே உடனே போன் அடித்துக் கொண்டிருக்க..
யார் ?என்று எட்டிப் பார்த்தவள் அதில் மிளிர்ந்த பெயரை பார்க்க..
ராட்சசி என்று இருந்தது..
‘ராட்சசியா யாரது?’ என்று யோசித்தாள் ..ஒரு சில நொடிக்கு பிறகு மின்னல் வெட்டியது போல மித்ரா முகம் வந்து செல்ல..
கண்கள் மின்ன..’ பார்ரா எங்க கிட்ட ராங்கி. போன்ல சேவ் பண்ணி வச்சி இருக்க பேர் ராட்சசி.., சார்..ராங்கி, ராட்சசின்னு சொல்லி தான் மனசுக்குள்ள காதல் காவியம் பாடிட்டு இருக்காரு போல ‘ என எண்ணி மனசுக்குள் சிரித்துக் கொண்டவள் ..
எப்படியோ ஒன்னு அவனுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆன சரி.. என்று எண்ணியவளுக்கு இன்று மாலை அவளது கண்கள் லேசாக கலங்கியதையும் உணர்ந்தாள்.
இவனுக்காக அவள் துடித்ததை பார்த்தவள்.. ‘எங்க தேவ் கொடுத்து வச்சவன் தான்’ என்று எண்ணிக் கொண்டாள். ‘போன் எடுக்கலாமா ?என்று யோசித்தாள். இல்லை வேண்டாம் அவனாக எழுந்து பேசி கொள்ளட்டும். தான் எடுத்தால் சரியாக வராது’ என்று எண்ணி எடுத்த போனை வைத்து விட்டு சென்று விட்டாள்.
அவனுக்கு கிட்டத்தட்ட எட்டு முறை போன் செய்து பார்த்தவள்..அவன் எடுக்காமல் இருக்க, பதற்றம் தொற்றி கொண்டது.. என்ன செய்வது என்று புரியவில்லை..
ஒரு சில நொடி கண் மூடி அமைதியாக உட்கார்ந்து இருக்க…
அவள் தோளில் தட்டிய ரியா .”என்னாச்சு ஏன் சாயங்காலத்தில் இருந்து ஒரு மாதிரி இருக்க?”
அவளும், தேவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை சொல்ல.
“ஏன் என்னாச்சு? இப்ப எப்படி இருக்காரு?”
” தெரியலடி அதுக்கு தான் போன் பண்ணேன். போன் எடுக்கவே மாட்டேங்குறாரு “
“ஏன் ஸ்கூலுக்கு வரலையா?”
“இல்லை டி.அதான் எனக்கு ஒரு மாறி இருக்கு..ரொம்ப முடியாம இருக்க போய் தான வரல” என்று மாலை நடந்ததை அவள் விவரமாக சொல்ல.
” சரி இன்னொரு முறை டிரை பண்ணு..”
“ஹம்”என்றவள் போன் செய்ய..அப்போதும் எடுக்கவில்லை..
“போன் பண்ணா எடுக்க மாட்ராரு. எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு ரியா”
“குகன் அம்மா, அப்பா நம்பர் உன் கிட்ட இருக்கு தானே,அவங்களுக்கு போட்டு பாரேன்”
அவளுக்கும்,” சரி “என்று தோன்றியது. ஆனால், கொஞ்சம் சங்கடமாக இருந்தது .
இதற்கு முன்பு ,குகனும், தேவும் வித்யா பற்றி பேசிய வார்த்தைகள் நல்ல விதமாகவும் இருக்க.. அதும் மாலை பேசிய பொழுதும் ஜாலி டைப்பாக தான் தெரிந்ததால், “அவங்க அம்மாக்கு கூப்பிட்டு பார்க்கிறேன்.அவங்க கொஞ்சம் ஃப்ரீயா பேசுவாங்க நினைக்கிறேன்”என்று வித்யாவுக்கு அழைத்தாள்.
அப்போதுதான் பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தாள் வித்யா.
“போன் அடிச்சுட்டே இருக்கு பாரு விது ” என்றான் வேலு.
“இதோ பார்க்கிறேன் ” என்று விட்டு போனை எடுக்க..
இரண்டாவது முறை மித்ரா வித்யாவுக்கு அழைத்து இருந்தாள்.
வித்யா யோசனையுடனே இருக்க…
” இந்த நேரத்துல யாருடி”
அவள் புருவ முடிச்சுடன் அந்த போனையே பார்த்து கொண்டு நிற்க..
“அ..அது” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,திரும்பவும் போன் செய்தாள் மித்ரா..
” சரி போன் கட் ஆகிட போது நீ எடுத்து பேசு”என்றான் .
“சரி” என்றவள் போன் எடுத்து “ஹலோ” என்று காதில் வைக்க.
ஒரு சில நொடி தயக்கத்திற்கு பிறகு ,மித்ரா..”குகன் அம்மா தானே !”என்றாள்.
இங்கு உதட்டுக்குள் புன்னகைத்த வித்யா..” குகன் அம்மா தான் சொல்லுங்க மேம் “.
“இ..இல்ல மே..மேம் .. அ..அது..”என்றவள் தயங்க..
அவளது தயக்கத்தை உணர்ந்த வித்யா..”சொல்லுங்க மித்ரா “என்க…
“இல்ல மேம் நீங்க என்ன மித்ரானே கூப்பிடலாம்.ஒன்னும் பிரச்சனை இல்லை”.
“சரி சொல்லுமா?..அப்போ நீயும் என்கிட்ட ஃப்ரீ யா பேசலாமே!”என்றாள் புன்னகையுடன்..
” அ..அது “என்று ஒரு சில நொடி தயங்கியவள். “இப்போ தேவ் எப்படி இருக்காரு? போன் பண்ணேன் எடுக்கல”
” பாருடா தேவுக்கு போன் பண்ணி அவன் எடுக்கலைன்னு எனக்கு கால் பண்ணி இருக்கீங்க? அப்படி தானே!”
அவளது வார்த்தையில் நாக்கு கடித்தவள்..” அப்படி இல்ல கா..அவருக்கு எதுவும் பிரச்சனையா ?”என்று லேசான பதற்றத்துடன் கேட்டாள்..
அவளது பதட்டத்தை உணர்ந்த வித்யா அவளைப் பயமுறுத்த வேண்டாம் என்பதால்.. ” இல்ல மித்ரா இப்போ ஓகே. ஃபீவர் குறைஞ்சிருக்கு, மதியம் தான் ஹய் ஃபீவர். ஆபீஸ்ல இருந்து மயக்கமா இருக்கான்னு சொல்லி போன் பண்ணி இருந்தாங்க..அவர்தான் கூட்டிட்டு வந்தாரு.. வர வழியில ஹாஸ்பிடல் போயிட்டு தான் வந்தாங்க, 105 டிகிரி ஃபீவர் .இப்போ ஓகே ப்ராப்ளம் இல்ல நார்மலா இருக்கான். தூங்குறான் இப்போ, ஃபீவர் இருந்ததால அசதி , ஹய் ஃபீவர்னு டிரிப்ஸ் போட்டாங்க சோ அதுவும் சேர்ந்து கொஞ்சம் மயக்கதுல இருக்கான். தூங்கி எழுந்தா கொஞ்சம் சரி ஆகிடுவான்”.
” என்னது 105 டிகிரி யா “என்றவுடன்.. அவள் அருகில் இருந்த ரியாவுமே, “அவ்வளவு ஃபீவரா?” என்றாள்..
“அமைதியா இரு ரியா.பேசிட்டு இருக்கேன் இல்ல”என்று அவளை அமைதி படுத்தியவள்..வித்யா விடம் பேச முயல..
” யாருடி ” என்றான் வேலு.. யாரிடம் தன் மனைவி இவ்வளவு விளக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அதுவும் தேவின் உடல் நிலையை குறித்து என்று எண்ணி கேட்க,
போனை மியூட்டில் போட்டவள் …”உங்க தம்பியோட ஆசை காதலி” என்றாள் புன் சிரிப்புடன்..
அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவன்..” இப்போ அவன் என் தம்பியா ?”
அவள் சிரிக்க.. அவனும் சிரிக்க..இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.. ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்து அர்த்தமாக,
” சொல்லு மித்ரா!” என்று கேட்டு கொண்டே போனை ஸ்பீக்கரில் போட..
“குகன் இருக்கானா ?அவன் கிட்ட தரீங்களா? அவன் தூங்கிட்டானா?”என்றாள் தயக்கத்துடன் தான்
“குகன்.தேவ் கூட இருக்கான் மித்ரா.இங்க இல்ல” என்க..
” அக்கா ஏற்கனவே தேவுக்கு 105 ° டிகிரி ஃபீவர் இருக்குன்னு சொல்றீங்க ?குகனை அவர் கூட விட்டு இருக்கீங்க அவனுக்கு ஃபீவர் வந்துச்சுன்னா என்ன பண்ணுவீங்க?” என்று பதற ..
இங்கே வேலுவிற்கு இதழ்களில் புன்னகை தாண்டவம் ஆடியது.. முதலில் மெலிதாக சிரித்தவன் அதன் பிறகு, சத்தமாகவே சிரித்திருந்தான் .
புதிதாக ஒரு குரல் ,அதுவும் ஆண் குரல் ,சிரிப்பொலி சத்தம் கேட்க.. பயந்து போனை கட் பண்ணி இருந்தாள் மித்ரா..
செம