Loading

விடுமுறை நாள் என்பதால் கயல் மகளை எழுப்பாமல் விட்டு விட, பிரியா வெகுநேரம் உறங்கினாள். அவளாக தூக்கம் கலைந்து எழுந்த போது, காலையே கடந்து போயிருந்தது. முகத்தை கழுவி வந்தவளுக்கு கயல் உணவை கொடுக்க, அதை சாப்பிட்டுக் கொண்டே கைபேசியை பார்த்தாள்.

சிவாவிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. அது அவளுக்கு குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. எப்போதும் கோபமாக இருந்தால் மட்டுமே இப்படி எதுவும் அனுப்ப மாட்டான். இப்போது திடீரென என்ன கோபம் வந்தது?

யோசனையுடன் பாதி உணவில் எழுந்து விட்டாள். சிவா பேசாததால் பசியே போய் விட்டது. கேள்வி கேட்ட கயலிடம் சமாளித்து விட்டு அறைக்கு வந்தவள், சிவாவிற்கு செய்தி அனுப்பினாள்.

அவன் பார்க்கவில்லை என்றதும், உடனே அழைப்பு விடுத்தாள். தூங்கிக் கொண்டிருந்தவன் சத்தம் கேட்டு எழுந்து விட்டான்.

பிரியாவின் படம் கைபேசி திரையில் ஒளிர, நேற்று அவள் பேசாதது எல்லாம் உடனே நினைவுக்கு வந்து விட்டது. அதே கோபத்தோடு ஏற்று காதில் வைத்தான்.

“சிவா?”

“ம்ம் சொல்லு”

“சொல்லுனா? என்னாச்சு உனக்கு?”

“ஒன்னுமில்லயே. ஏன் கேட்குற?”

“இல்ல நேத்து எதுவுமே பேசலயே.. கோபமானு கேட்க கால் பண்ணேன்”

“நேத்து பேசலங்குறத இன்னைக்கு தான் கண்டு பிடிச்சுருக்க போல?”

“ஏன் இப்படி பேசுற? என்னாச்சுனு சொல்லு”

“எதுவும் ஆகலனு சொல்லுறேன்ல?”

“அப்புறம் ஏன் கோபமா பேசுற?”

“கோபமாலாம் பேசல”

“இத நம்பனுமா?”

“அது உன் இஷ்டம்..”

பிரியாவுக்கு இப்போது கோபம் வந்து விட்டது.

“ஓகே பை” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.

அவளாக பேசப்போனால் இப்படி அலட்சியமாக பேசுகிறானே. கோபம் கோபமாக வந்தது.

‘நீயே வா இனி’ என்று நினைத்து கைபேசியை தூக்கிப்போட்டாள்.

கோபத்தோடு வேறு வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, கைபேசியின் சத்தம் கேட்டது. மனம் சோர்ந்தது. சிவாவுக்கு வேறு பாடல் வைத்திருக்கிறாள். அது அல்ல இது.

திரையில் அமரின் பெயர் ஒளிர்ந்தது. ஏற்று காதில் வைத்தாள்.

“சொல்லுங்க அமர்..”

“பிரியா.. இப்ப ஃப்ரியா இருக்கியா?”

“ஆமா சொல்லுங்க..”

“ஒரு பிராஜெக்ட்ட பத்தி பேச கால் பண்ணேன்..” என்றவன் அதைப் பேச ஆரம்பிக்க அவளும் பேசினாள்.

மடிக்கணினியை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள், அமரிடம் பேசிக் கொண்டே இருந்தாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காக பேச, மகளை வந்து பார்த்த கயல் கூட அமைதியாக சென்று விட்டார்.

வேலையின் பேச்சு முடிந்த பின்பே பிரியா அழைப்பை துண்டித்தாள். கைபேசியை கீழே வைக்கும் போது தான் பார்த்தாள். இடையில் சிவா செய்திகளை அனுப்பியிருக்கிறான்.

“இப்ப எதுக்கு நீ கால்ல கட் பண்ண?” என்று கேட்டிருந்தான்.

அவளுக்கு அதைப்படித்து கோபம் வர, “அப்படித்தான் கட் பண்ணுவேன்” என்று பதில் அனுப்பி வைத்தாள்.

உடனே அவனும் பதில் சொன்னான்.

“இப்ப நான் தான் கோபமா இருக்கனும்.”

“அப்படியா? அப்ப இருந்துக்கோ”

“திமிரா?”

“ஆமா.. நிறைய இருக்கு”

“இப்ப எதுக்கு இப்படி பேசுற?”

“உன்னை விடவா பேசுனேன்? கால் பண்ணா என்னமோ அப்படி பேசுற.. நீ ஒன்னும் பேசவே வேணாம். உன் கோபத்த பிடிச்சுட்டு அப்படியே இருந்துக்கோ”

சிவா தலையை பிடித்தான். அவள் அழைப்பை துண்டித்ததுமே தலை வலி வந்து விட்டது. இப்போது கோபமாக பேசுகிறாள். இவள் மீது அவன் தானே கோபமாக இருக்க வேண்டும்? அவள் தானே அவனிடம் சொல்லாமல் கிளம்பிச் சென்றாள்?

“சுகந்தி ஸ்டாப்.. நேத்து நீ என் கிட்ட பேசலனு கோபத்துல அப்படி பேசிட்டேன். உன்னை ஹர்ட் பண்ணிருந்தா சாரி.. போதுமா?”

“ஹர்ட் பண்ணிருந்தாவா? அப்ப ஹர்ட் பண்ணலனு வேற நினைப்பா? இதுல போதுமா வேற… என்ன நினைச்சுட்டு இருக்க நீ? நீ கூட தான் நேத்து முழுக்க என் கிட்ட பேசல.. நானும் தான் கோபப்படனும்”

“நான் ஒன்னும் சொல்லாம வெளிய கிளம்பிப் போகலயே..”

“நான் உன் கிட்ட சொல்லிட்டு தான் போகனுமா? என்ன சொல்ல வர்ர நீ?”

பிரியாவின் கோபம் எல்லையை கடப்பது புரிய, சிவா இறங்கி வந்தான். இப்படித்தான் அவன் எதற்காவது கோபப்பட்டால் முதலில் பேசிப்பார்ப்பாள். அவன் அப்பொழுதே சுதாரிக்கா விட்டால் பெரிய சண்டையில் முடியும். இப்போது அவனுக்கு சண்டை போடும் மனநிலை போய் விட்டது. அவளை அமரிடம் இழந்து விடக்கூடாது என்று தீர்மானமாக இருந்தான்.

“நான் எதுவும் சொல்ல வரல.. நீ கிளம்பி போயிட்ட.. ஒரு மெஸேஜ் கூட இல்ல.. நைட்டும் பேசல.. அதுல கொஞ்சம் அப்சட் அவ்வளவு தான்” என்று கூறி இறங்கி வந்தான்.

“நீயும் தான் எத்தனையோ நாள் வேலையில பிசியாகி என் கிட்ட பேசுனதே இல்ல. நான் கேட்டனா? ஆனா நீ.. ஒரு நாளுக்கு கோச்சுக்கிற..”

“ஓகே.. விடு கோபப்படல.. நேத்து எங்க போன?”

“அத ஏன் கேட்குற?”

“அம்மா தாயே தெரிஞ்சுக்க தான் கேட்டேன். இதுக்கும் கோச்சுக்காத”

“ரொம்ப நடிக்காத.. நேத்து குவாரி போனோம்..”

“குவாரியா? அங்க என்ன பண்ண?”

பிரியா நடந்ததை எல்லாம் விவரமாக சொன்னாள். அனைத்தையும் அறிந்து கொண்டாலும், சிவாவுக்கு அவள் அமரின் பெயரை அடிக்கடி பயன்படுத்துவது பிடிக்கவில்லை.

‘இவனுக்கு நாளைக்கு ஒரு வழி பண்ணுறேன்’ என்று முடிவு செய்தான்.

பிரியாவோடு அவனது பூசல் விரைவிலேயே சரியாகிவிட அன்றைய நாள் சுமூகமாக சென்றது.

அடுத்த நாள் வழக்கம் போல் பிரியா சந்தோசமாக சிவாவை பார்க்க சீக்கிரமே கிளம்பினாள். அவள் கிளம்பும் போது அமர் அழைத்தான்.

“இன்னைக்கு சீக்கிரமா வர்ரியா? கொஞ்சம் ஃபைல்ஸ் பார்க்கனும்” என்று கேட்க, பிரியா ஒரு நொடி சிவாவை பற்றி நினைத்தாள்.

‘ரெண்டு நிமிஷம் பேசிட்டு போறதுல லேட் ஆகாது’ என்று நினைத்தவள், “ஓகே வர்ரேன்” என்று விட்டாள்.

அதே எண்ணத்தோடு கிளம்பியும் சென்றாள். சிவாவும் இன்று சீக்கிரமே வந்திருந்தான். பிரியாவின் கார் கடந்து செல்வதை பார்த்து இறங்கி புன்னகையுடன் அருகே சென்றான்.

அவனை பார்த்ததும் பிரியாவும் பளிச்சென புன்னகைத்து விட்டு இறங்கினாள்.

“இந்தா..” என்று ஐஸ்கிரீமை நீட்டினான் சிவா.

“அட இதான் உண்மையாவே ஐஸ் வைக்கிறதா?” என்று சிரித்துக் கொண்டே வாங்கிக் கொண்டாள்.

“உன்னை கூல் பண்ணனும்ல?” என்று கேட்டவன் அவளோடு நடந்தான்.

இருவரும் அமரை கவனிக்கவில்லை. இருவருக்கும் முன்பே அமர் வந்து விட்டான். காரை சற்று தூரமாக நிறுத்தி விட்டு பிரியா வரட்டும் என்று ஆர்வமாக காத்திருந்தான்.

அவளது காரை பார்த்ததும் உள்ளம் துள்ள நடந்து வந்தவன், வேறு ஒருவன் அவளை நோக்கி வந்ததை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால் அவன் ஐஸ்க்ரீம் கொடுக்க அதை சந்தோசமாக பிரியா வாங்கியதும், சட்டென நின்று விட்டான்.

அதுவும் இருவரும் ஒருவரை ஒருவர் உரசிக் கொண்டு நடப்பது அவன் மனதில் தீயை பற்ற வைத்தது.

‘நோ.. ஸ்டாப்.. ஒரு வேளை ஃப்ரண்டா கூட இருக்கலாம்.. நமக்கு தெரியாம இருக்கும்..’ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு நடந்தான்.

அவர்களின் பின்னால் சென்றவனுக்கு பிரியா சிரித்து சிரித்து பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை. கைவிரல்கள் உள்ளங்கையில் அழுத்தமாக பதியும் அளவு மூடி தன்னை கட்டுப்படுத்தினான்.

இருவரும் லிஃப்டில் நுழைந்ததும் சிவா அமரை பார்த்து விட்டான். இருவரின் பார்வையும் ஒன்றோடொன்று மோதியது. ஆனால் அமர் வர காத்திராமல் பட்டனை அழுத்தி விட கதவு மூடிக் கொண்டது.

அமரின் மனம் மீண்டும் ஒரு முறை எரிய ஆரம்பித்தது. அமரை பார்த்து விட்டுத்தான் அவன் செய்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியானால்?

அவனுக்கு முழு விவரமும் வேண்டும். உடனே படிகளின் பக்கம் திரும்பியவன் நான்கு படிகளாக தாவி இரண்டாவது தளத்திற்கு சென்றான். அவனுக்கு முன்பே பிரியாவும் சிவாவும் அங்கே நின்றிருந்தனர்.

“ஓகே பை..” என்று பிரியா திரும்ப, சிவா அமரை பார்த்து விட்டான்.

சிவாவுக்கு தன் காதலை அமருக்கு படம் போட்டு காட்டி விட வேண்டும் என்ற எண்ணம். உடனே முடிவு செய்தவன், “சுகந்தி” என்று பிரியாவை நிறுத்தினான்.

“ம்ம்?” என்ற கேள்வியோடு பிரியா நின்று விட, அவள் கையிலிருந்த ஐஸ்க்ரீமை தன் வாய்க்கு கொண்டு வந்து கொஞ்சமாக சாப்பிட்டான்.

பிரியா அதிர்ந்து உள்ளே எட்டிப்பார்த்து விட்டு, அவனை முறைத்தாள்.

“ஆஃபிஸ்ல வச்சு… போ..” என்று அவனை தள்ளி விட்டு உள்ளே சென்றாள்.

சிவா இதை அமர் பார்த்திருப்பான் என்ற திருப்தியோடு சென்று விட்டான்.

அமருக்கும் எல்லாம் தெளிவாக புரிய, புயல் வேகத்தில் பிரியாவை அடைந்தான். அவள் அடுத்த முறை ஐஸ்க்ரீமை சாப்பிடும் முன்பே அருகே சென்று, “ஹேய் பிரியா” என்று தோளில் கை வைத்தான்.

திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் பிரியா. அமரை பார்த்ததும் புன்னகைத்தவள், “ஹாய் அமர்” என்றாள்.

“நான் சொன்ன பிராஜெக்ட்ட கவனிச்சியா?” என்று கேட்க உடனே கையிலிருந்த ஐஸ்கிரீமை மறந்து பேச ஆரம்பித்து விட்டாள் பிரியா.

அவளை அப்படியே தன் அறைக்கு இழுக்காத குறையாக அழைத்துச் சென்று விட்டான். அவளும் பேச்சு
சுவாரஸ்யத்தில் கையிலிருந்ததை மறந்தாள்.

திரும்ப நினைவு வந்து அவள் வாயில் வைக்கும் முன்பு, அமர் எடுத்த ஃபைலில் தட்டி அந்த ஐஸ்கிரீம் கீழே விழுந்தது.

“அச்சோ…” என்று பிரியா பதற, “ஹேய் சாரி.. கவனிக்கல” என்றான் அமர் உள்ளே குமிழியிட்ட சந்தோசத்தை மறைத்துக் கொண்டு.

“இட்ஸ் ஓகே.. அத கவனிக்காம விட்டு உருகிடுச்சு வேற.. பரவாயில்ல”

ஐஸ்க்ரீமை இழந்தது வருத்தம் தான். ஆனால் இனி என்ன செய்ய முடியும்?

“காலையிலயே ஐஸ்க்ரீம் சாப்பிடுற பழக்கமிருக்கா உனக்கு?” என்று சாதாரணமாக கேட்டவன் துடைப்பதற்கு ஆளை வரவைத்தான்.

“இல்ல.. ஜஸ்ட்..” என்று தோளை குலுக்கினாள்.

சிவாவை பற்றி பேசவில்லை. அமர் மூலமாக பெற்றோருக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்தாள்.

அமரின் கோபம் வெள்ளமென பொங்கியது. அவளுக்கும் அவனுக்கும் இடையில் நிச்சயமாக எதோ இருக்கிறது. அதற்கு பெயர் வைக்க கூட அமருக்கு விருப்பமில்லை.

அவன் யாரென்றும் தெரியவில்லை. பெயரும் நினைவில் இல்லை. அங்கே வேலை செய்யும் பலரின் ஒருவன் அவ்வளவு தான்.

அவனுக்கும் பிரியாவுக்கும் இடையே எப்படி பழக்கம் இருக்க முடியும்? யோசனை அதன் போக்கில் ஓடினாலும் வாயில் பிரியாவிடம் வேலையை பற்றிப் பேசினான்.

அவளும் ஐஸ்கிரீமை விட்டு வேலைக்கு தாவி விட்டாள்.

 

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்