Loading

19. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 

இருவரும் கொலைவெறி ஆகும் அளவிற்கு அப்படி என்னதான் நடந்தது என்று கொசுவத்தி சுருள் போல‌… சில நொடிகள் முன்னே சென்று பார்த்தால்…

கதவை திறக்கும் ஓசையில், தன்னை கிட்டத்தட்ட அணைத்துப் பிடித்திருந்தவனை மதுரா விலக்கி தள்ளிவிட, இதை சற்றும் எதிர்பார்க்காதவன் தள்ளிவிட்டவளை இழுத்துக் கொண்டே அமர்ந்திருந்த படுக்கையில் இருந்து கீழே விழுந்திருந்தான்.

விழுந்த வேகத்தில் இசக்கு பிசக்காய் ஒருவர் மேல் ஒருவர் கிடக்க, நடந்த நிகழ்வில் மதுரா செய்வதறியாது திகைத்து போய் விழித்தால் என்றால் கார்முகில் வர்ணனோ தனக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நழுவ விடாதவனாய் அவள் இடையை இறுக்கி பிடித்து தன்னோடு அணைத்திருந்தான் சுகமாய்.

கொளுத்தும் வெயிலில் ட்ராபிக்கில் மாட்டி… சிக்கி சின்னாபின்னமாகி…இவர்களுக்கு என்னானதோ? ஏதானதோ? ஏதும் பிரச்சனையாகிவிட்டதோ? என்று அடித்து பிடித்துக் கொண்டு அங்கே வந்தவர்களுக்கு இவர்கள் ரொமான்ஸ் செய்யும் காட்சியை பார்த்தால் கொலை வெறி தானே ஆகும்? 

மூச்சு வாங்க அவர்களை பார்த்தவர்கள்,

‘என்னடா நடக்குது இங்க? நாங்க உள்ள வந்துட்டோம் டா’ என்ற பாணியில் ஒன்று போல் அவர்களை முறைக்க,

மதுரா அவர்களை கவனித்து விட்டு அவசரமாய் அவன் மேலிருந்து எழ முயல, 

அவன் விட்டால் தானே! இறுக்கி பிடித்துக் கொண்டான் அவளை..

 

“யோவ்வ் பிளாக் என்ன பண்ற? விடு என்ன..”என்று எழ முடியாத கோபத்தில் மதுரா கடுப்பாய் மொழிந்தது கூட, அவனுக்கு கொஞ்சலாய் கேட்க, 

 

அவளோடு கனவுலகத்தில் மிதந்தவன், மதுரா தன்னை விட்டு பிரிவதை உணர்ந்து “ஏய் எங்க போற?” என்று அவளைப் பிடித்து இழுக்க, 

 

“நான்தான் பாஸ் இழுத்தேன்” என்றபடி அவர்களைப் பிரித்து விடும் எமோஷனல் ஏகாம்பரமாய் தேஜு வர, மதுராவின் மீது இருந்த தன் பிடியை விடாமல், ” மதுரா இஸ் மை வைஃப்.. அவள என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது” என்று ‘இது தன் பொம்மையாக்கும்’ என்று உரிமை கொண்டாடும் முகபாவத்தோடு அவளை முறைக்க, தேஜஸ்வினியோ, ‘ஏங்க நீங்க பாஸா? இல்ல லூசா?’ என்று மனதிற்குள் நினைத்தவள் மாதேஷை பார்க்க,

“டேய் லேடிஸ் முன்னாடி மானத்த வாங்காதடா…அவங்க உன் வைஃப் தான்.. அதுக்குன்னு இப்டியா பண்ணி தான் ப்ரூவ் பண்ணுவியா? எந்திரிச்சு தொலயேன்டா எரும மாடு” என்று அவனின் அலுச்சாட்டியத்தில் கடுப்பாகிப் போன மாதேஷும் நண்பனை பிடித்து எழ வைத்திருந்தான்.

 

இருவரும் பிரிந்து எழுந்து நிற்க, அவனை சில நொடிகள் வெறித்துப் பார்த்த மதுரா அவனைக் கோபமாய் முறைத்துக் கொண்டே “வா தேஜு போகலாம்.. ” என்றாள்.

 

“வெயிட் மதுரா எங்க போற? நீ என்னோட வைஃப் என்கூட தான் இருக்கணும்..”என்றவனை மதுரா உட்பட அங்கிருந்த மூவருமே முறைக்க,

 

நீண்ட பெருமூச்சுடன், தீர்க்கமாய் அவனைப் பார்த்த மதுரா

“இங்க பாருங்க பிளாக் … இப்போதைக்கு நீங்க எனக்கு பாஸ் மட்டும் தான்… இந்த ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரிலேஷன் எல்லாம் ஒரே நாள்ல வந்துடாது.. உங்களுக்குன்னு வாழ்க்கை இருக்குல அத பாருங்க”

 

“அப்போ நான் உனக்கு கட்டின தாலிக்கு என்ன பதில் சொல்ல போற?”

 

“என்ன கார்னர் பண்ணாதீங்க பிளாக்… உங்களுக்கே தெரியும் அந்த தாலி எப்போ எந்த சூழ்நிலையில என் கழுத்துக்கு வந்துச்சுன்னு..”என்று மதுரா சொன்னதும், 

கார்முகில் வர்ணனின் முகமே மாறிவிட்டது. 

 

“அப்போ நா இவ்ளோ நேரம் சொன்னது எதையும் நீ நம்பல… உன்னோட ஹஸ்பண்டா என்ன ஏத்துக்கல அப்படித்தானே?”

 

” எப்பவுமே ஒரு உறவோடு அடிப்படை நம்பிக்கைல தான் இருக்கும் ..ஆனா அந்த நம்பிக்கையையே சரிய வச்சு நடந்த கல்யாணம்தான் நம்மளோடது… சில உறவுகள் தற்காலிகமானது தான்.. அதுபோல தான் உங்களோடது” என்றாள் அவன் பார்வையை தவிர்த்து எங்கோ பார்த்துக் கொண்டு…

 

“அப்போ உனக்கு என் மேல எந்த பீலிங்ஸ் இல்லன்னு சொல்றியா? இல்ல நமக்குள்ள நடந்தது கல்யாணமே இல்லன்னு சொல்றியா மதுரா?”என்றவன் குரலில் வலியோடு கேட்க,

 

” நீங்க கட்டின தாலி என் கழுத்துல முழுசா ஒரு அரை மணி நேரம் இருந்திருக்குமா? அத நா கல்யாணம்ன்னு ஏத்துக்கணுமா?”

என்றவளின் கண்கள் எந்தவித உணர்வையும் காட்டவில்லை.

 

“அப்போ நீ என்னை எதிர்பார்த்தேன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னது பொய்யா?”என்றவனின் குரலில் கோபத்தோடு ஆதங்கமும் போட்டி போட, 

அவன் கண்களையே தீர்க்கமாய் பார்த்தவள்,

“என் கழுத்துல நீங்க கட்டின தாலிக்கு விளக்கம் கேட்க தான் உங்களை எதிர்பார்த்தேன்… அது எனக்கு இன்னைக்கு கிடைச்சுட்டு.. சந்தர்ப்ப சூழ்நிலையால் என் கழுத்துல நீங்க கட்டின தாலி அது அன்னைக்கே உங்க கைக்கு வந்துட்டே.. நம்ம உறவும் அதோட முடிஞ்சது… இனி என்ன தொந்தரவு பண்ணாதீங்க”என்றாள் குரலில் உறுதியாய்.

 

அவளின் இத்தகைய பதிலில் கார்முகில் வர்ணனை உடல் இரும்பாய் இறுதி விட,

” ம்ம் வெல் … மிஸ் மதுரா முத்து மாணிக்கம்… தாராளமா நீங்க போகலாம்… இனி என்னால உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது… என்ன பிடிக்காத உங்களுக்கு” என்றான் அவளின் கண்களையே இமைக்காமல் பார்த்தபடி.

 

அது துணுக்குற்றவளின் கண்கள் கலங்கினாலும் அதை அவனுக்கு காட்டாதவாறு மறைத்தவள் விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேற, அவளின் பின்னேயே, குழப்பத்தோடு சென்றாள் தேஜஸ்வினி.

 

“என்னடா சிஸ்டர் இப்படி பண்ணிட்டாங்க… நீ அவங்க கிட்ட புரியிற மாதிரி பேசினியா இல்லையா? “என்று கேட்டப்படி மாதேஷ் நண்பனின் தோளைத் தொட, தன் தலைக்குள் ஏற்பட்ட சுழிர்ர்.. சுழிர்ர்.. என்ற வலியால் கண்களை இறுக்கமாய் மூடியவனோ..

தலையை பிடித்தபடி வலியை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றும் முடியாமல் அடுத்த நொடி மயங்கி சரிந்திருந்தான்.

 

******************

கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆயிற்று… மதுரவாணி அலுவலகத்திற்கு சென்று…

அன்று கார்முகில் வர்ணணின் வீட்டிலிருந்து கிளம்பியவள் தேஜஸ்வினியுடன் வீட்டிற்கு வந்தது மட்டும்தான் தெரியும்… அதன் பிறகு நடந்ததை எல்லாம் நினைவில் இருந்து மங்கிப் போகும் அளவிற்கு.. அடித்து போட்டது போல் உடல் வலியோடு காய்ச்சலில் கிடந்தவள், நன்றாக தேறி அமர்வதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகிப்போனது.

 

இந்த ஒரு வாரத்தில் சகோதரர்கள் இருவரும் மதுராவை கவனித்துக் கொண்டாலும், அவளின் திடீர் காய்ச்சலின் காரணத்தை மதுராவை பார்க்க வந்த அவளின் தோழி தேஜஸ்வினியிடம் கேட்க,

அவளோ, மதுராவிற்கு தெரியாமல் எதையும் பொல்லாப்பு சொல்லி வம்பை வளர்க்க விரும்பாமல் தெரியவில்லையே! என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்.

 

கிட்டத்தட்ட ஒரு வாரம் படுக்கையில் கிடந்தவள் அன்றைய தினம் தான் கண் விழித்திருக்க, 

ஒரு வாரத்தில் ஓய்ந்து விட்டவளை கவலையுடன் பார்த்திருந்தனர் அவளின் உடன்பிறவா சகோதரர்கள். கூடவே வினோதாவும் அவளது கணவனோடு நேற்றுதான் சகோதரர்களை பார்க்க வந்திருக்க, மதுராவின் ஹாஸ்பிடல் வாசத்தால் அவளும் அங்கிருக்க வேண்டிய நிலை!

 

“ஜக்கு.. ப்ரக்கு…” என்ற ஓயாமல் வம்பு இழுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டு திரிபவள், கண் விழித்து இருவரையும் பார்த்தாலும் பேசாமல் பார்த்தபடியே இருக்க, 

பொறுக்க முடியாமல், 

“என்னடா ஆச்சு உனக்கு?”என்று ஆதூரமாய் கேட்ட பிரகதீஷை பார்த்தவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. காய்ச்சலின் தாக்கத்தில் உதடுகள் வறண்டு வெடித்து போய் இருக்க, இதழ்களை மெல்லமாய் விரித்து

“தாகமா இருக்கு ப்ரக்கு”என்றவளுக்கு எழுந்துக்கொள்ள, உதவி செய்தவன், செவிலியரிடம் தண்ணீர் கொடுக்கலாமா? என்று கேட்டு உறுதி செய்த பின்னரே தண்ணீரை கொடுக்க, மதுராவும் காய்ந்து கிடந்த தொண்டையை தண்ணீரால் நனைத்து கொண்டாள். சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து அவளை சோதனை செய்துவிட்டு நாளை காலை டிஸ்டார்ஜ் செய்து விடலாம் என்று இன்று மட்டும் இலகுவாய் சாப்பிட கொடுத்துவிட்டு தான் எழுதி தரும் மருந்து மாத்திரைகளை கொடுக்க சொல்லிவிட்டு செல்ல, அதன்படியே அவள் அமர்வதற்கு ஏற்றபடியாக படுக்கையை வசதியாய் மாற்றியவர்கள் அவளுக்கு உணவையும் மருந்தையும் புகட்டி விட்டு அவளோடவே அமர்ந்து விட்டார்கள். 

 

நொடிகள் நிமிடங்களாக கடக்க,

ஒரு கையில் சிலேன் ஏற்றுவதற்காக ஊசி குத்தப்பட்டு இருக்க, மற்றொரு கையை ஜெகதீஷ் பிடித்திருந்தான் என்றால் பிரகதீஷ் அன்பாய் அவளின் தலையை வருட, மதுராவோ கண்களை மூடியபடி அவள் அமர்வதற்கு வசதியாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படுக்கையில் சாய்ந்திருந்தாள். அவர்கள் மூவரும் அத்தனை கச்சிதமாய் ஒரு குடும்பமாய் பிணைக்கப்பட்டு இருப்பதைக் கண்ணாடி தடுப்பிற்கு வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்த வினோதாவிற்கு கண்கள் கலங்கிவிட, அவளின் நிலை உணர்ந்து ஆதரவாய் அவளின் அவளின் கையை பிடித்திருந்தான் அவளின் கணவன் ரூபன்.

 

சில நொடிகளில் மாத்திரையின் உதவியால் மதுரா உறக்கத்திற்கு சென்று விட சகோதரர்கள் இருவரும் வெளியே வந்து விட்டனர்.

 

மாலையில் மீண்டும் எழுந்த மதுரா அப்பொழுதுதான் சுற்றத்தையே உணர்ந்தாள். பிரகதீஷ் ஜெகதீஷிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினாள்…

அப்பொழுதுதான் அவர்களை விட்டு தள்ளி நின்ற வினோதாவையும் அவளின் கணவனையும் பார்த்தவள், அதுவும் வினோதாவின் மேடிட்ட வயிற்றைப் பார்த்தவளுக்கு விஷயம் புரிந்து கண்கள் கலங்கிவிட, அவர்களிடம் முகத்தில் எதையும் காமிக்காமல், “வாங்க அக்கா வாங்க அத்தான்.. எப்டி இருக்கீங்க?? இது எத்தனாவது மாசம்” என்று பொதுவாய் கேட்டு ரூபன் பதில் சொன்னதும் பேசிக்கொண்டாள். அதற்கு அதிகமாய் நீங்கள்அன்று  இப்படி செய்தீர்களே? இப்படி பேசினீர்களே என்று அவர்களின் மனம் நோகும்படி ஒரு வார்த்தையும் பேசவில்லை.. செயலில் காட்டவும் இல்லை.

அவள் இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதுமே யார் மனதையும் வருத்தப்படும்படியான வார்த்தைகளை பேசியதில்லை என்பதால், வினோதாவிற்கு தான் இதற்கு முன் தான் அள்ளி வீசிய வார்த்தைகளால் குற்ற உணர்ச்சி! 

 

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு, 

” மதுரா சீக்கிரம் குணமாகி வீட்டுக்கு வா…” என்றாள்.

 

எந்த மேல் பூச்சும் இல்லாமல், “சரிக்கா நீங்க உடம்ப பாத்துக்கோங்க… இந்த நேரத்துல கவனமா இருக்கணும்ல்ல” என்றவளின் முகத்தில் கல்மிஷம் இல்லை மாறாக அக்கறை மட்டுமே இருக்க, அவளின் இந்த கள்ளம் கபடம் இல்லாத குணத்தால் அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாதவளாய் ” சாரி மதுரா.. நா நா.. ரொம்ப அதிகமா பேசிட்டேன்” என்று கலங்கிய குரலில் மன்னிப்பு வேண்டிய வினோதாவிற்கு அதற்கு விளக்கம் சொல்ல கூட வாய் எழவில்லை. 

 

“அக்கா நான் எதுவும் மனசுல வச்சுக்கல… விடுங்க” என்று விட்டாள் இலகுவாய்.

 

அதைக் கேட்டு வினோதா கண்ணீர் வடிக்கவும், பொறுக்க முடியாமல் “அக்கா அழாத!” என்றபடி ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் ஆளுக்கு ஒரு புறம் அணைத்துக் கொள்ள, 

மதுரா அவர்களையே புன்னகையோடு பார்த்திருந்தாள்.

 

மறுநாள் காலை மதுரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்க,

வினோதா ஒரு மாதம் அங்கே தான் தங்குவதாக சொல்லிவிட ரூபேஷ் மட்டும் தொழிலை கவனிப்பதற்காக செல்ல வேண்டும் என்று மதுரா கண்விழித்த இரவே மனைவியை விட்டுவிட்டு அடுத்த பிளைட்டில் ஊருக்கு சென்று விட்டான்.

 

வினோதாவிற்கு கணவன் உடன் இல்லாதது வருத்தமாக இருந்தாலும் சகோதரர்கள் இருப்பதால் அவள் மகிழ்ச்சியோடவே இருந்தாள்.

 

சிறிய அப்பார்ட்மெண்ட் தான் என்பதால் ஹால்லை தவிர்த்து இரண்டு அறைகள் மட்டுமே இருக்க, மதுரா தங்கியிருந்த அறைக்குள் அவளுடன் அறையை பகிர்ந்து தங்கிக் கொள்வதாக தமக்கை சொன்னதும் சகோதரர்கள் இருவருக்கும் அவ்வளவு சந்தோஷம்…

 

வினோதா மனம் திருந்தியதால் இனி  இதேப் போலவே தங்கள் குடும்பம் என்றும் பிரியாமல் ஒற்றுமையாக இருக்கும் என்று நினைத்து மகிழ்ந்தவர்கள் ஐந்தாம் மாதம் மசக்கையில் இருப்பவளுக்கு பிடித்ததெல்லாம் வாங்கி போட்டு அவளை மகாராணியை போல் பார்த்துக் கொள்ள, மூவரணியாக இருந்த அவர்களின் வீடு நால்வரணியாக மாற மகிழ்ச்சியாக தான் நகர்ந்தது அடுத்தடுத்த நாட்கள்.

அதோடு மதுராவிற்கு வந்திருந்த சில வரன்களை அலசி ஆராய்ந்து அவளுக்கு ஏற்றவர்கள் என்று சிலரை தேர்ந்தெடுத்து வைத்திருக்க, இதை எதையும் அறியாத மதுரா அலுவலகத்தில் இருந்து வந்திருந்த வார்னிங் மெயிலை பார்த்து விழித்தபடி இருந்தாள்.

 

அதில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக எவ்வித முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்து கொண்டிருக்கும் மதுராவிற்கு இரண்டு நாட்கள் கெடு கொடுக்கப்பட்டிருக்க, அவள் அதற்குள் சென்று வேலையில் சேரவில்லை என்றால் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. அக்ரீமெண்ட் குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு முன்பாக பணியில் இருந்து விலகினால்  கிட்டத்தட்ட பத்து லட்சம் அபராதம் வேறு விதிக்கப்படும் என்ற பின்குறிப்பும் இருக்க,  சகோதரர்களுக்கு தெரியாமல் அதை மறைத்தவள் வேலையில் திரும்ப சேரப் போவதாக சொல்ல, ராஜினாமா செய்ய சொல்லி சொன்னவர்கள் இன்னும் சில மாதங்கள் மட்டும் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சமாதானம் சொன்னதும் வேறு வழி என்று சம்மதித்தார்கள். 

 

சுத்தமாக விருப்பமில்லை என்றாலும், கம்பெனி அக்ரிமெண்டில் போட்டிருக்கும் தேதி வரை வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்பதால்

மறுநாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றவள், தான் பணிபுரியும் தளத்திற்கு செல்வதற்காக மின் தூக்கில் ஏற, 

 

அதே நேரம்,

“மிஸ் கேட் பார்த்து எவ்வளவு நாள் ஆகுது? ஹவ் ஆர் யூ” என்று அவளின் பின்னால் கேட்ட குதூகலமான குரலில் திரும்ப, அங்கு கார்முகில் வர்ணன் அவளைப் பார்த்து உள்ளத்தோடு இதழ்களும் புன்னகைக்க கம்பீரமாய் நின்றிருக்க,

அவன் அருகிலேயே அன்றைய திருமண விசேஷத்தில் சந்தித்த அவனின் ‘ஃபியான்சி’ என்று அழைக்கப்பட்ட ஷாலினி அவனின் கைகளோடு கைகள் கோர்த்தப்படி நெருக்கமாய் நின்றிருந்தாள்.

 

தொடரும்…

 

சாரி ரொம்ப நாள் வெயிட் பண்ண வச்சிட்டேன்… இனி ரெகுலரா யூ டி வரும் சகோஸ்..☺️🙂

இப்பதிவைப் பற்றிய தங்களது கருத்துக்களை பதிவிடவும்…நன்றி❤️❤️

(பிழைகள் இருந்தால் சொல்லிட்டு போங்க கொஞ்சம் திருத்திக்கிறேன்)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
27
+1
1
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. சூப்பர் எபி ♥️
      ரெகுலரா குடுங்க சிஸ் எபி