பரபரப்பு நிறைந்த சாலையை அமைதியாக பார்த்துக் கொண்டே காரில் சென்று கொண்டிருந்தாள் சுகந்தபிரியா. வெளியில் இருந்து எந்த சத்தமும் உள்ளே வரவில்லை.
கண்ணாடி முழுதாக ஏற்றப்பட்டு, ஏசி காருக்குள் குளிரை பரப்பிக் கொண்டிருந்தது.
“பிரியா…”
“ஹான்.. என்ன ப்பா?”
“என் மேல கோபமா?”
உடனே புன்னகைத்தாள்.
“அப்படி எதுவும் இல்லபா…”
வளவன் பெருமூச்சு விட்டார். மகளை நினைத்து தான் அவருக்கு கவலையாக இருந்தது. அவளே கோபமில்லை என்ற பிறகு வேறு எதுவும் பெரிதல்ல.
அலுவலக வாசலுக்கு வந்து காரை நிறுத்தியதும், வாட்ச் மேன் ஓடி வந்தான்.
இருவரும் கீழே இறங்கியதும் வளவன் சாவியை வாட்ச் மேனிடம் கொடுத்து விட்டு, மகளோடு உள்ளே சென்றார். அந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் இரண்டாவது தளம் முழுவதும் அவருக்குச் சொந்தம். இந்த கட்டிடம் கட்டும் போதே வாங்கிப்போட்டது.
லிஃப்டில் நுழைந்து இரண்டாவது தளத்தை அடைந்தனர். அவரை பார்த்ததும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் வணக்கம் வைத்தனர்.
சுகந்தபிரியா மௌனமாகவே அவரை தொடர்ந்தாள். தந்தையின் மீது கோபம் இல்லை தான். ஆனால் அவருக்கு மிகவும் பிடித்த இந்த தொழிலை விற்கிறாரே என்று வருத்தமாக இருந்தது.
மற்றொரு தொழிலும் உண்டு. ஆனால் இது அவருக்கு பிடித்தமானது. சமீபத்தில் லாபம் குறைந்து போனதால் விற்கும் நிலை. கையை கடிக்கும் முன்பே கை மாற்ற நினைக்க, அதற்கு ஏற்றார் போல் ஒரு நிறுவனத்தினர் விலை பேச வந்தனர்.
முழுதாக மூழ்காத தொழில் தான். கிரானைட் கற்கள் தொழில். பல போட்டி நிறுவனுங்களுக்கு நடுவே விளம்பரப்படுத்தாத இவர்கள் குறுகி காணாமல் போகும் நிலை.
ஆனாலும் கேட்டதும் உடனே விற்க வளவனுக்கு விருப்பம் இல்லை. மிகவும் தீவிரமாக யோசித்து கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்.
தொழிலை விற்றாலும் அதில் பங்குதாரராக மகள் இருக்க வேண்டும் என்று கேட்டார்.
மகளை தன் தொழிலோடு இணைத்து விட்டால், சற்று நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்தார். சில பல விவாதங்களுக்குப்பிறகு அந்த நிறுவனத்தினர் ஒப்புக் கொண்டனர்.
எல்லாம் முடிந்த பிறகே மனைவி மகளிடம் வளவன் விசயத்தை சொன்னார். இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை. இருக்கும் நிலைமையை எடுத்துச் சொன்ன பின்பு மனதை தேற்றிக் கொண்டனர்.
பணப்பிரச்சனை எதுவும் இல்லை தான். ஆனால் இன்னமும் அதை கட்டிக்காக்க முடியாது என்று தந்தையே நினைத்து விட்ட பிறகு, சுகந்தபிரியா சமாதானம் ஆகி விட்டாள். அது மட்டும் தான் காரணமா? அவளுக்கு தான் தெரியும்.
அவள் படித்து முடித்து ஒரு வருடமாகிறது. வேலைக்குச் செல்ல ஆசை எதுவும் இல்லை. அவ்வப்போது தந்தையின் அலுவலகம் சென்று உதவி வருவாள். அவ்வளவு தான்.
இப்போது அந்த அலுவலகத்தை வேறு ஒருவனுக்கு விற்று விட்டு, அவனிடம் சுகந்தபிரியா தொழில் கற்றுக் கொள்ள போகிறாள்.
வளவன் என்ன தான் நிறுவனத்தை விற்று விட்டாலும், அதன் மீதிருந்த பற்றை விட முடியாமல் அவளிடம் இதை கேட்ட போது, சந்தோசமாக ஒப்புக் கொண்டாள். அவளது சந்தோசத்திற்கு தந்தையின் ஆசை மட்டும் காரணமல்ல. வேறு உண்டு. அதை பற்றி அவள் சொல்வதாக இல்லை.
அவர்கள் வந்து அமர்ந்த சில நொடிகளில், வாங்கப்போகும் நபரும் வந்து விட்டதாக செய்தி வந்தது.
கதவைத்திறந்து உள்ளே வந்தவர்களை திரும்பிப் பார்த்தாள். கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
‘இவனா? நான் எதோ ஒரு வயசானவன் வருவான்னு இல்ல பார்த்தேன்!’ என்று ஆச்சரியத்தோடு எழுந்து நின்றாள்.
அவளை ஒரே ஒரு நொடி மட்டுமே பார்த்து விட்டு வளவனை பார்த்து சம்பிரதாயமாக புன்னகைத்தான் அமரன்பன்.
“ஹலோ சார்..” என்று விட்டு அவரை நோக்கி நடந்தான்.
“வாங்க அமர்” என்று கை குலுக்கினார் வளவன்.
“இது என் பொண்ணு.. சுகந்தபிரியா”
“ஹலோ” என்று அவள் சொன்னதும், அதையே எதிரொலித்தவன் வளவனிடம் திரும்பிக் கொண்டான்.
“சைன் பண்ணிடலாமா?” என்று கேட்டதும், உடனே சம்மதித்தார் வளவன்.
அமர் கண்ணை காட்டியதும் அவனது பிஏ மற்றும் மேனேஜர் இருவரும் முன்னால் வந்து இரண்டு கோப்புகளை வைத்தனர்.
“உட்காருங்க சார்.. சைன் பண்ணிடலாம்” என்று அமரன்பன் சொல்ல, “நோ நோ அமர்.. நீங்க தான் இங்க உட்காரனும்.. இனி இது உங்க சீட்” என்று விட்டுக் கொடுத்தார் வளவன்.
அவன் மறுப்பாக எதோ சொல்லப்போகும் முன்பு அவர் புன்னகையோடு கை காட்டினார். பிறகு அவனும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்தான்.
பிரியாவும் அமர்ந்து விட, வளவன் அவளருகே அமர்ந்து கோப்புகளை புரட்டினார்.
இருவரும் கடைசியாக ஒரு முறை மேலோட்டமாக படித்தனர். பல முறை படித்து திருத்தி கடைசியாக தயாரித்தது இது. எல்லாம் திருப்திகரமாக இருந்ததும் பிரியாவை பார்த்தார் வளவன்.
அவளும் படித்துக் கொண்டு தான் இருந்தாள். தந்தை சொன்னதற்கு மாறாக அதில் எதுவும் இல்லை.
அவரே முதலில் பேனாவை எடுத்து கையெழுத்திட, அமரும் கையெழுத்திட்டான். இருவரும் முடித்ததும் அடுத்த கோப்பு வந்தது.
அதில் தான் பிரியாவும் கையெழுத்திட வேண்டும். அதையும் மேனேஜர் கொடுக்க, வாங்கி வளவனிடம் கொடுத்தான் அமர்.
அவரும் பிரியாவும் படித்து முடித்து விட்டு கையெழுத்திட்டதும், அமர் வாங்கி தன்னுடைய கையெழுத்தை பதித்தான். அவனுடைய நிறுவனத்தின் சீல் வைக்கப்பட்டது.
அவ்வளவு தான். தந்தையின் பல நாள் உழைப்பு கைமாறி விட்டது. மனம் மிகவும் சோர்வாக இருந்த போதும் பிரியா அதை காட்டிக் கொள்ளவில்லை.
அவள் இந்த நிறுவனத்தில் இருக்கப்போகிறாளே. அது போதும்.
ஆண்கள் இருவரும் கை குலுக்கி பரஸ்பரம் பேசிக் கொள்ள, அவள் இடையில் புகுந்து எதுவும் பேசவில்லை.
அங்கிருந்த வேலையாட்களுக்கு ஏற்கனவே விசயம் கசிந்திருக்க இப்போது அதை நேரடியாக உறுதி செய்தனர். புது முதலாளியை முகம் சுளிக்காமல் வரவேற்றனர்.
பிரியாவும் அங்கே இருப்பாள் என்பது எல்லோருக்கும் பிடித்திருந்தது.
எல்லாம் முடிந்ததும், “அப்ப நான் கிளம்புறேன்..” என்ற வளவன் மகளை பார்த்தார்.
அவள் இப்போது இங்கேயே இருப்பதா? செல்வதா? என்ற குழப்பத்தில் இருந்தாள்.
“மிஸ் சுகந்த பிரியா? நீங்க போயிட்டு நாளைக்கு வந்தாலும் ஓகே தான்” என்று முதல் முறையாக அமர் அவளிடம் நேரடியாக பேசினான்.
உடனே மறுப்பாக தலையசைத்தாள்.
“இல்ல.. இந்த கம்பெனி எனக்கு புதுசில்ல.. நான் இருக்கேன். நீங்க போயிட்டு வாங்கபா”
வளவன் சம்மதமாக தலையசைத்து விட்டுக் கிளம்பி விட்டார்.
அவர் சென்றதும் அமரை பார்த்தாள் பிரியா.
“உள்ள போகலாமா?” என்று அறையை காட்டினான்.
“யா..” என்றவள் அவனோடு நடந்தாள்.
இருவரும் உள்ளே சென்று கதவை அடைத்ததும், “உங்கள போ வா னு கூப்பிடலாம் தான? என்னை விட சின்ன பொண்ணு” என்று கேட்டான் அமர்.
“கண்டிப்பா..”
“ஓகே சுகந்தி…” என்று ஆரம்பித்தவன் அவளது ஆச்சரியத்தை பார்த்து நிறுத்தினான்.
“என்ன?”
“எல்லாரும் பிரியானு தான் கூப்பிடுவாங்க”
“சுகந்த பிரியா தான? சுகந்தியும் உன் பேர் தான?”
“இல்ல அது.. வித்தியாசமா இருக்குமே..”
சற்று யோசித்தவன், “ஓகே வாட் எவர்.. பிரியா நீ இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பார்த்துருக்கியா?” என்று வேலைக்கு தாவினான்.
“இல்ல.. இதான் ஃபர்ஸ்ட் டைம்”
“ஓ..” என்றவனின் புருவம் முடிச்சுட்டது.
“என்ன விசயம்?”
“எந்த அனுபவமும் இல்லாத உன்னை நான் பார்ட்னரா எப்படி வச்சுக்கிறது?”
இப்படி நேரடியாக கேட்பான் என்று எதிர்பார்க்காத பிரியா அதிர்ந்து போனாள். இதற்கு என்ன பதில் சொல்வது? பதில் தெரியாமல் அமைதியாக இருப்பது பெரும் கொடுமை. அதனால் சுதாரித்துக் கொண்டு அவனை நேராக பார்த்தாள்.
“சோ என்ன பண்ணலாம்னு இருக்கீங்க சார்?”
யோசனையுடன் நாற்காலியில் சென்று அமர்ந்து, அவளுக்கும் ஒரு நாற்காலியை காட்டினான்.
உடனே அமர்ந்து கொண்டு அவனை கேள்வியாக பார்த்தாள்.
“என்னை தப்பா எடுத்துக்காத.. நீ இருக்க ஸ்டேட்க்கு உன்னை பார்ட்டனரா நம்பி நான் இந்த ஆஃபிஸ விட்டுட்டு போறது ரொம்ப…. முடியாதுனே சொல்லலாம்”
“புரியுது.. எனக்கு இதுல சில பேசிக் மட்டும் தான் தெரியும். அதுவும் அப்பாவால மட்டும் தான் தெரியும்”
“அது மட்டும் போதாது.. சோ நீ கொஞ்சம் ட்ரைன் எடுத்துக்க வேண்டியிருக்கும்..”
“எப்படி?”
“நான் ஆள அரேன்ஜ் பண்ணுறேன். இங்க நான் பார்க்க வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. ரெண்டு கம்பெனியையும் இணைக்கிறது சாதாரண வேலை இல்ல”
“ம்ம்”
“எனக்கு நிறைய வேலை இருக்கு. உனக்கு சொல்லிக் கொடுக்க ஆள் வருவாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து தான் வேலை செய்ய போறோம். நீ முழுசா கத்துக்கிட்டதும் தான் நான் உன்னை இங்க தனியா விட்டுட்டு என்னோட மத்த வேலைகளையும் பார்க்க முடியும்”
“ஓகே”
“சீக்கிரம் கத்துப்ப தான?”
“முயற்சி பண்ணுறேன்”
“இது போதும்.. இப்ப எனக்கு பழைய ஃபைல்ஸ் டீடைல்ஸ் வேணும். உனக்கு தெரிஞ்சத எல்லாம் வெளியில இருக்க மேனேஜர் கிட்ட சொல்லு. நாளைக்கு உனக்கு சொல்லிக் கொடுக்க ஆள் வருவாங்க”
“ஓகே..” என்று எழுந்து கொண்டாள். அவள் வெளியேறியதும், பிஏ உள்ளே சென்று விட்டான்.
பிரியா மேனேஜரிடம் அமர் சொன்னதை சொல்ல, அவரும் தேவையானதை எல்லாம் அவளிடம் கேட்க ஆரம்பித்தார்.
இருவரும் தூரமாக இருந்த மேசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அமர் கண்ணாடி வழியாக அவளை எட்டிப் பார்த்து விட்டு பிஏ விடம் வேலைகளை சொன்னான்.
நிறுவனத்தை வாங்கி விட்டாலும் அதில் இருக்கும் ஓட்டைகளை பிரச்சனைகளை எல்லாம் கலைந்து முடிய மூன்று மாதங்களாவது ஆகும்.
முதலில் தேவையற்ற பல தொழிலாளிகளின் பெயரை எல்லாம் எடுக்கச் சொல்லி விட்டு, கணக்கு வழக்குகளை ஆராய்ந்தான்.
பணக்கணக்குகளை முடித்த போது, மாலை வந்திருந்தது. வேலை நேரம் முடிந்து வேலையாட்கள் எல்லோரும் கிளம்பிச் சென்ற போதும், அமர் வேலை செய்து கொண்டிருந்தான்.
கதவை தட்டி விட்டு பிரியா வந்து நின்றாள்.
“டைமாகிடுச்சு.. நான் மேனேஜர் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்”
உடனே கடிகாரத்தை பார்த்தவன், “ஓகே நீ கிளம்பு.. நாளைக்கு காலையில ஒன்பதுக்கு இருந்தா போதும்” என்றதும் தலையசைத்து விட்டுச் சென்று விட்டாள்.
அவள் செல்லும் பாதையை பார்த்து புன்னகைத்தான்.
‘நைஸ் டூ மீட் யூ சுகம்.. இனி நீ என்னோட இருக்கப்போற நாட்கள ரொம்ப ஆர்வமா எதிர்பார்ப்பேன்’
பிறகு அதை புன்னகையுடன் திரும்பி வேலையை தொடர்ந்தான்.
தொடரும்