Loading

பூ-07

 

மறுநாள் காலைத் தன் காதறுகே விடாது ஒளித்த அலைபேசியின் உபயத்தால் கண்விழித்த அக்னிகா, பாரமான தலையைத் தாங்கியவண்ணம் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

 

“அக்னி.. ஆர் யூ ஓகே?” என்று பதட்டமாய் மஹதியின் குரல் கேட்க,

 

ஒரு நிமிடம் ஒன்றுமே அவளுக்கு விளங்கவில்லை!

 

“என்னாச்சு மஹி?” என்று அக்னிகா வினவ,

 

“அக்னி.. காலேஜ்லாம் லீவ் விட்டிருக்காங்கடி. மினிஸ்டர் மகன் டெத்” என்று மஹதி பதட்டத்துடன் கூறினாள்‌.

 

அப்போதே கடிகாரத்தைப் பார்த்தவள் மணி எட்டை கடந்துவிட்டதைக் கண்டாள்.

 

“சா..சாரி மஹி.. எனக்கு ஒன்னும் புரியல.. இப்பதான் தூங்கியே எழுறேன்” என்று அக்னிகா சோர்வாகக் கூற,

 

“தேங்க் காட்..” என்ற மஹதி, “நல்லவேளை.. வெளியே எங்கேயும் போகாத‌. நான் வரேன் உங்க வீட்டுக்கு” என்று கூறினாள்.

 

அவள் குரலின் பதட்டம் மெல்ல உரைக்க, “என்னாச்சு மஹி?” என்று அக்னிகா வினவினாள்.

 

“அக்னிமா.. உங்க வீட்டுக்குப் பக்கத்துல தான் அந்த சீரியல் கில்லர் பேட்டர்ன்ல அகைன் ஒரு கொலை நடந்திருக்கு. அதுவும் மினிஸ்டரோட மகன்” என்று மஹதி கூற,

 

“வாட்?” என்று அதிர்ச்சியோடு எழுந்து நின்றாள்.

 

அப்போதே முந்தைய நாள் நடந்தவை யாவும் அவளுக்கு மெல்ல மெல்ல நினைவு வந்தது.

 

“ஆமா அக்னி. கடை, காலேஜ், ஸ்கூல் எல்லாமே லீவு.. நீ எங்கேயும் போகாம பத்திரமா இரு. நான் வரேன் உங்க வீட்டுக்கு. பயப்படாத ஓகே?” என்று கூறிய மஹதி அழைப்பைத் துண்டிக்க, 

 

அப்படியே அதிர்ந்து நின்றவளுக்கு மூச்சுவிட வேண்டிய அத்தியாவசியமே மறந்து போயிருந்தது!

 

‘என்ன காரியம் பண்ணிட்டேன்.. நேத்தே அவருக்குக் கால் பண்ணி ஒரு வார்த்தை சொல்லிருந்தா இ..இந்தக் கொலையைத் தடுத்திருக்கலாம்ல?’ என்று மனதோடு யோசித்தவளுக்கு மனதில் பாரம் ஏறிய உணர்வு.

 

அந்த நேர பயத்தில் அவன் சென்றுவிட்டான் என்ற ஆசுவாசம் மட்டுமே அவளுக்கு எழுந்தது. அதில் முற்றுமாகச் சோர்ந்து போனவள் அப்படியே வந்து படுத்திருக்க, யாருக்கும் அழைக்க வேண்டும் என்றெல்லாம் அவளுக்குத் தோன்றவேயில்லை…

 

தற்போது நினைத்துப் பார்க்கவே அவளுக்குக் குற்ற உணர்வாக இருக்க, அவளது அலைபேசி அலறியது!

 

திரையில் மின்னும் சிவப்ரியனின் எண்களைக் கண்டவள் நடுநடுங்கும் கரத்துடன் அழைப்பை ஏற்க, “ம்மா.. ஸ்பார்கில்.. ஆர் யூ ஆல்ரைட்? வீட்ல தானே இருக்க?” என்று கேட்டான்.

 

அவனது அக்கறையான குரல் கொடுத்த ஒருவித தெம்பில் குரலைச் செறுமிக் கொண்டவள், “ஐ.. ஐம் ஆல்ரைட்..” என்று தடுமாற்றமாய் கூற,

 

“சுசிய அனுப்பி வைக்குறேன்டா..” என்றான்.

 

“இல்ல ப்ரியன். அவள அலைய வைக்காதீங்க. மஹதி வரேன்னு சொல்லிருக்கா” என்று தடுமாற்றத்துடன் அக்னிகா கூற,

 

“நிஜமா தானே? பொய் சொல்லையே?” என்று கேட்டான்.

 

“இதுல எதுக்கு பொய் சொல்லப் போறேன்?” என்று அவள் பதில் கேள்வி கேட்க,

 

“ஓகேடி ஸ்பார்கில். எது பத்தியும் யோசிக்காத. டீவி ஃபோன்லாம் பாக்காதனுலாம் சொல்ல மாட்டேன். பாரு.. பட் இதுதான் நியூஸ்னு புரிஞ்சு அதை கடந்து போக ட்ரை பண்ணு” என்று அக்கறையாய் கூறினான்.

 

செய்தியைப் பார்த்து வந்தது மட்டுமல்ல அவள் மயக்கம். செய்தியில் இறந்தவனின் நிலை கண்டு வந்தது என்று அவனுக்குத் தெரியவில்லை என்பது அவன் பேச்சின் வழியே புரிய, மெல்லமாய் “ம்ம்” என்றாள்.

 

“லவ் யூ டா.. டேக் கேர்” என்று கூறியவன் அழைப்பைத் துண்டிக்க, பெருமூச்சுடன் கரங்களில் சிரம் தாங்கி அமர்ந்துவிட்டாள்.

 

 ‘யாரு அது? எதுக்கு வீடு வரை வந்தும் ஒன்னும் பண்ணாம வெறுமனே ஜன்னல் கதவை மட்டும் பூட்டிட்டுப் போகனும்? இவங்க கிட்ட சொல்லலாமா?’ என்று யோசித்தவள், ‘வேணாம். அப்றம் உனக்கு சேஃப்டி இல்ல அது இல்ல இது இல்லனு என்னைக் குவாடர்ஸ்ல தங்க வச்சுகிடுவாங்க’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

அவனிடம் முதலிலேயே அனைத்தையும் பகிர்ந்திருந்தாள் பின்பு நடக்கவிருப்பவற்றைத் தவிர்த்திருக்கலாமோ? விதி யாரைத்தான் விட்டது?

 

அங்கு கொலை நிகழ்ந்த இடத்தினில் சிவப்ரியன், ராம், திலகா மற்றும் சந்தோஷ் நின்றிருந்தனர்.

 

பார்ப்பதற்கே அறுவறுக்கும் வகையில் இருந்தது அப்பகுதி மந்திரியின் மகனான தினேஷின் உடல்!

 

எப்போதும் போல் வயிற்றில் கடப்பாரையோடு சேர்த்து சாலையில் உடல் அறைந்திருக்க, வாயில் உலோகம் உருக்கி ஊற்றப்பட்டு, பொசுங்கிக் கிடந்தது! தலையில் அடித்து ஓடாமல் தடுத்திருப்பான் போலும்! உடலை தரையோடு தரையாய் இழுத்துக் கொண்டு வந்ததன் அடையாலமாய் கடப்பாரை உரசிய தடத்தின் அருகே ரத்தமும் கோடாய் தரையில் படிந்திருந்தது! அவன் உடலின் அருகே ‘sorry’ என்று ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது!

 

ஈக்கள் மொய்க்கத் துவங்க, உடற்கூறு ஆய்வாளர்கள் மற்றும் தடயவியலாளர்கள் வந்து உடலை அப்புறப்படுத்தினர்.

 

தடை செய்யப்பட்ட பகுதியாய் மாற்றப்பட்ட இடத்தைச் சுற்றிலும் நமது காவலர்கள் நால்வரும் தங்கள் கழுகுப் பார்வையில் சோதனையை நடத்தினர்.

 

ரத்த வாடையைத் தேடிக் கொண்டு நாய் ஒன்று அப்பகுதியை நெருங்கி வர, அதை தடயவியல் துறையினர் கையை ஓங்கி துரத்திக் கொண்டிருந்தனர்.

 

அனைத்தையும் தன் கூர் விழிகளில் அலசிக் கொண்டிருந்த சிவப்ரியன் தற்செயலாக நாயின் புறம் திரும்ப, அது தன் வாயில் எதையோ கவ்விக் கொண்டு வந்திருப்பது தெரிந்தது.

 

நெரித்தப் புருவங்களோடு அதன் அருகே வந்தவன் மெல்ல நாயின் தலையைத் தடவிக் கொடுக்க, அவன் காலடியில் தன் வாயில் கவ்வியிருந்தப் பொருளை போட்ட நாய், வேகமாக புதருக்குள் ஓடி மறைந்தது!

 

“சர்வேஷ் சார்..” என்று தடயவியலாளரை அழைத்த சிவப்ரியன், “இது லெதர் க்ளௌஸோட பீஸ் போலதான் இருக்கு. இதையும் எடுத்துக்கோங்க” என்று கூற,

 

“இது எங்க சார் வந்தது?” என்று கேட்டார்.

 

“ஒரு நாய் கொண்டு வந்தது” என்று புதரைப் பார்த்தவண்ணம் அவன் கூற,

 

“எங்கிருந்தாது கொண்டு வந்திருக்கும் சார்” என்று கூறினார்.

 

“எதுக்கும் இருக்கட்டும் சார்” என்று கூறி அதையும் எடுத்துக்கொள்ளச் செய்தவன், அவ்விடத்தை வட்டமடித்துவிட்டு வந்தான்.

 

எதையோ தவறுவிட்டுக் கொண்டிருப்பதாய் அவனுக்குள் உறுத்தியது!

 

“இறந்து போன மூனு பேரும் வேற வேற ஏரியா, வேற வேற ப்ரொஃபஷன சேர்ந்தவங்க. படிச்ச இடத்திலிருந்து வேலைப் பார்க்கும் இடம், வசிக்கும் இடம்வரை எல்லாமே வேற. அப்படியிருக்க இவங்க மூன்று பேர எதுக்கு சார் கில்லர் சூஸ் பண்ணி கொல்லனும்?” என்று ராம் கேட்க,

 

“காரணம் கண்டிப்பா இருக்கும் ராம். ஏதோ ஒரு தொடர்பு. அந்தத் தொடர்பு தான் கில்லர் கொலைகள் செய்யறதுக்கான காரணமாகவும் இருக்கும்” என்று சிவப்ரியன் கூறினான்.

 

அவ்விடத்தில் வேறு எந்தத் தடயமும் கிடைக்காது போக, திலகா மற்றும் சந்தோஷை மினிஸ்டரின் வீட்டிற்கு விசாரணைக்கு அனுப்பியவன் ராமுடன் உடற்கூற் ஆய்வகத்தை நோக்கிச் சென்றான்.

 

அங்குத் தன்னை நொந்தபடி அமர்ந்திருந்த அக்னிகாவை திடுக்கிட வைத்தது அழைப்பு மணியின் ஓசை.

 

ஒரு பெருமூச்சோடு தன்னை ஆசுவாசம் செய்துக் கொண்டவள் கதவைத் திறக்க, அங்கு அதிரூபன் மற்றும் அவனது மனைவி அதிதிகா நின்றிருந்தனர்.

 

“காலைல மார்னிங் ஸ்டடி அட்டென்ட் பண்ண ஸ்கூலுக்குக் கிளம்பிப் போயிட்டா டா. மினிஸ்டர் சன் டெத்ல எல்லாருக்கும் லீவ்னு சொன்னதால் போய்க் கூட்டிட்டு வந்தேன். உனக்கு உடம்பு முடியலை பார்க்கவே இல்லைனு வருத்தம் பட்டா. அதான் போற வழிதானேனு நிப்பாட்டினேன்” என்று அதிரூபன் விளக்கம் கொடுக்க, 

 

சிறு புன்னகையுடன், “வாங்க அண்ணி” என்றாள்.

 

அப்போதே மஹதியும் தனது இருசக்கர வாகனத்தில் வந்திறங்க, “வா ம..” என்றவள் அவள் கையிலிருக்கும் கருப்பு நிற கையுறையைக் கண்டு ஒருநொடி அதிர்ந்து நின்றாள்.

 

சட்டெனத் தன்னை சுதாரித்துக் கொணடவள், “உள்ள வாங்க” என்று சொல்ல,

 

அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

 

“உடம்பு பரவாயில்லயா அக்னி” என்று அதிதிகா அக்கறையுடன் வினவ,

 

“ம்ம்.. இப்பக் கொஞ்சம் பரவால அண்ணி” என்று கூறினாள்.

 

“சரிடாமா. எது வேணும்னாலும் கேளு சரியா. நிதானமா பாக்க வந்திருந்தா பழமாது வாங்கிட்டு வந்துருப்பேன்டா. சாரி தப்பா எடுத்துக்காத” என்று அதிதிகா கூற,

 

“அய்யோ அண்ணி.. இதெல்லன்ன இருக்கு?” என்று கூறினாள்.

 

“அண்ணி நீங்கப் பழமெல்லாம் வாங்கி தந்தா கூட, மொத்தமா சேலெட் செஞ்சு கொண்டு வந்து ஆபிஸ்ல, காலேஜ்லனு வினியோகம் தான் செய்வா இவ. நீங்க என்ன பண்ணுங்க, எதாவது நல்லா செஞ்சு இவளுக்கு வாய்ல திணிக்கத் திணிக்க ஊட்டி விட்டுட்டுப் போயிடுங்க” என்று கூறியபடி மஹதி தனது லெதர் கையுறைகளைக் களைய,

 

அவள் பேச்சில் சிரித்த அதிதிகா, “அதுக்கென்னடா? ஒருநாள் செஞ்சு ஊட்டிட்டுப் போயிடுவோம்” என்று கூறினாள்.

 

“மஹதி.. இந்த க்ளௌஸ் எங்க வாங்கின?” என்று அதிரூபன் வினவ,

 

“ஆரம்பிச்சாச்சா?” என்று செல்ல கோபத்துடன் கேட்ட அதிதிகா, “இவர் லெதர் க்ளௌஸ் பைத்தியம் மா. கலர் கலரா வாங்கி வச்சிருக்காரு. க்ளௌஸ் போட உங்களுக்கு என்னங்க வேலை வரப்போகுதுனு கேட்டா, லாங் ட்ரைவ் போகும்போது போட்டுக்கலாம்னு சொல்லிடுவாரு” என்று கூறினாள்.

 

“அட என்ன அண்ணி.. லெதர் க்ளௌஸ் போடனு ஒரு வேலை தேடனுமா? அது போட்டா சும்மா கெத்தா இருக்கும். நானெல்லாம் எப்ப வாண்டி ஓட்டினாலும் க்ளௌஸ் போட்டுப்பேன்” என்று மஹதி கூற,

 

“அப்படி சொல்லுடாமா” என்று கூறி மனைவியின் முறைப்பை சம்பாதித்துக் கொண்டான், அதிரூபன்.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சுசியிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்றவள், “மஹா வந்துட்டா” என்று தகவல் கூறினாள்.

 

“ம்ம்.. அதைக் கேட்கத் தான் கூப்பிட்டேன்” என்று சுசி கூற,

 

மஹதி அலைபேசியை வாங்கி, “சுசிமா.. டோன்ட் வொர்ரி.. உன் பிரண்ட நானும் பத்திரமா தான் பாத்துப்பேன்” என்று கூறினாள்.

 

அதில் சிரித்துக் கொண்ட சுசி, “ஓகே ஓகே.. என் பிரண்ட பத்திரமா பாத்துக்கோ” என்று அழுத்தமாகக் கூறி அழைப்பைத் துண்டிக்க, 

 

முகவாயைத் தோளில் இடித்துக் கொண்டு அலைபேசியை அக்னிகாவிடம் கொடுத்தாள்.

 

அக்னிகாவால் சுசியும் மஹதியும் அறிமுகமாகி நல்ல தோளர்களானாலும் கூட, இருவருக்கும் அக்னியிடம் எடுக்கும் உரிமையில் அடிக்கடி முட்டிக் கொள்வது வழக்கமே! சுசி முதிர்வும் பக்குவமுமாக பேசி சண்டையைத் தீர்த்தாளும் கூட, மஹதிக்கு அவ்வப்போது சுசி அக்னியைத் தன் முன் தாங்குவதில் பொறாமை தோன்றவே செய்யும்!

 

சிலநிமிட பேச்சு வார்த்தைக்குப் பின் அதிரூபனும் அதிதிகாவும் புறப்பட, உள்ளே வந்த மஹதி, “டார்லிங்.. வா.. நான் செம்ம பசில இருக்கேன். சாப்பிடுவோம்” என்றபடி தான் வாங்கிவந்த உணவு பொருட்களை எடுத்து வைத்தாள்.

 

“நா..நான்.. ப்ரஷ் ஆயிட்டு வரேன் மஹா” என்று உள்ளே சென்ற அக்னிகாவிற்கு எதோ ஒன்று நெருடலாகவே இருந்தது.

 

‘ப்ச்.. லெதர் க்ளௌஸ் யாருமே போடுறது இல்லயா என்ன? நான் ஏன் என்னென்னமோ யோசிக்குறேன்’ என்று தன் உள்ளுணர்வு கொடுத்த உந்துதல் புரியாமல் தன்னை சுத்தம் செய்துக் கொண்டு வந்து மஹதியுடன் ஐக்கியமானாள்.

 

அங்கு தடயவியல் துறையில் சர்வேஷுடன் சேர்ந்து ராமும் சிவனும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

 

“தினேஷ் தப்பிப்பதற்காக கொலையாளியோட கையை கீர ட்ரை பண்ணிருக்கான். கொலையாளி லெதர் ஜாக்கெட்ஸ் போட்டிருப்பான்னு நினைக்குறேன். அதுலருந்த லெதர் துண்டுகள் அவனோட நகத்துக்குள்ளருந்து கிடைச்சிருக்கு. நீங்க குடுத்த க்ளௌஸ் துண்டிலிருந்து ஸ்கின் செல் எதுவும் பெருசா கிடைக்கலை. ஆனா எங்க பாரகன்சிக் மைக்ரோபயாலஜிஸ்ட் அதிலிருந்து ஸ்கின் மைக்ரோபயோம் அனலைஸ் பண்றாங்க. அதை வச்சு நீங்க யாரையும் ஸஸ்பெக்ட் பண்ணா அவங்க ஸ்கின் மைக்ரோபயோமோட கம்பேர் பண்ணி கண்டுபிடிக்கலாம்” என்று சர்வேஷ் கூற,

 

“வேற எதுவும் கிடைச்சதா சார்” என்று சிவன் கேட்டான்.

 

“தினேஷ் இறக்கும் முன்ன நல்லா ட்ரிங்க் பண்ணிருக்காரு. ஆனா அவருக்கு ட்ரிங்க் பண்ணி பழக்கமிருந்ததால கொஞ்சம் ஸ்டடியா கில்லர்ட்ட தப்பிக்க ட்ரை பண்ணிருக்கார். அதனால தான் கில்லர் அவரோட தலையில் அடிச்சு அடக்கிருக்கான்னு நினைக்குறேன். மத்தபடி சேம் உலகோத்தை உருக்கி ஊத்தினது, கடப்பாரையால அரைஞ்சுது அன்ட் அந்த சாரி..” என்று அவ்வளவு தான் என்பது போல் சர்வேஷ் முடிக்க,

 

“தேங்க் யூ சார்..” என்றவாறு புறப்பட்டனர்.

 

“இப்ப என்ன சார் பண்றது? கிணத்துல போட்ட கல்லு மாதிரி நிக்குது கேஸ்” என்று ராம் வினவ,

 

“இல்ல ராம். இப்பதான் கேஸ் சூடு பிடிக்கவே ஸ்டார்ட் ஆகுது. நமக்கு கிடைச்சிருக்கும் க்ளௌஸ் நமக்கு பெரிய எவிடென்ஸ் தான். சீ.சீடீவி ஃபுட்டேஜ் நமக்கு கண்டிப்பா கைக் கொடுக்காது. அன்ட் மினிஸ்டரோட மகன் அப்படிங்குறதால அவங்களுக்கு சந்தேகத்தின் அடிப்படையில் நிறையா பேர் இருப்பாங்க. அதையெல்லாம் கிளறினால் கட்சித் தகராறுகள் தான் வரும். இதை வேற வழியில் தான் நாம டீல் பண்ணனும்” என்று கூறினான்.

 

அதேநேரம் அவனை சந்திப்பதற்காக யாரோ வந்திருப்பதாய் காவல் நிலையத்திலிருந்து தகவல் வர, யாராக இருக்கும் என்ற கேள்வியுடன் புறப்பட்டுச் சென்றான்.

-தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்