பூ-05
“மல்லிகை மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே!
வளையல் மெட்டு
வயசை தொட்டு
வளைக்குதையா மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
ஹோ ஓ
தேனே அடையாளம் போடவா..” என்று ஆண் பெண்ணுக்கான வரிகளை அவரவர் குரலில் குரல் மாற்றம் செய்து பாடும் அக்னிகாவை எப்போதும் போல் இப்போதும் ஆச்சரியமாகவே பார்த்தாள் சுசித்ரா.
தன் தோழியின் பார்வையில் சிறிதே தோன்றிய நாணத்தில் அவள் சங்கடமான புன்னகையோடு தலை கவிழ, “அக்னி.. பாடுடி” என்று சுசி உற்சாகப்படுத்தினாள்.
“மல்லிக மொட்டு
மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு
வயச தொட்டு
வளைக்குதடி மீனே
(ஆண்)மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா
ஹோ ஓ
தேனே அடையாளம் போடவா
(பெண்)மல்லிக மொட்டு
மனச தொட்டு
இழுக்குதையா மானே
வளையல் மெட்டு
வயசை தொட்டு
வளைக்குதையா மீனே…” என்று பல்லவியைப் பாடியவள் சிறு இடைவெளியோடு தோழியைப் பார்த்துப் புன்னகை செய்து,
“மூடி வச்சு மூடி வச்சு
மறைச்சு வச்சதெல்லாம்
காத்தடிச்சு காத்தடிச்சு
கலைஞ்சு போனதென்ன..” என்று சரணத்தினைப் பாடினாள்.
அடுத்த வரிகளை அவள் பாட முன்வர, அவள் சற்றும் எதிர்பாராத விதமாய், “பாடி வச்சு பாடி வச்சு
பதுக்கி வச்சதெல்லாம்
காதலிக்க காதலிக்க
வெளஞ்சு வந்ததென்ன?” என்று பாடியபடி உள்ளே வந்தான் சிவப்ரியன்.
அதில் அதிர்ச்சியின் உச்சத்தில் எழுந்து நின்றவள் படபடப்புடன் விழிக்க, அண்ணனின் சேட்டையில் சிரித்துக் கொண்ட சுசி, “அக்னி கண்டினியூ..” என்க, அவளுக்கு எங்கே பாட வந்தது?!
“ப்ச்.. என்ன சிவாண்ணா.. பாரு இப்ப அவ பாட மாட்றா” என்று சுசி கோபித்துக் கொள்வதாய் கூற,
சிவாவின் முகம் போன போக்கைக் காணப் பிடிக்காமல், “உன்னாலதான் உன்னாலதான்
உதிர்ந்து போச்சு வெக்கம்” என்று சுருதி பிசிறாது அவள் பாடி அவனை நோக்கினாள்.
அவள் விட்ட இடைவெளியைத் தனக்கான வாய்ப்பாய் பயன்படுத்தியவன், “கண்ணாலதான் கையாலதான்
கலந்துகிட்டா சொர்கம்” என்க,
அவனுக்கு அத்தனை சுருதியோடு பாட வராது என்றாலும் அவ்வரிகளை அவன் ரசித்துப் பாடியதை அவன் குரலில் உணரப் பெற்றவள், “நானிருந்தேன் சாமி வாசலிலே
மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே” என்று பாடி ‘வம்பினிலே’ என்பதை அழுத்தமாய் கூறி இதழ் சுளித்தாள்.
அதில் சிரித்துக் கொண்டவன், “நானே.. மருதாணி பூசவா? ஹோ
நீயே அடையாளம் போடவா” என்க,
“மல்லிகை மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே!
வளையல் மெட்டு
வயசை தொட்டு
வளைக்குதையா மீனே..” என்று அக்னிகா பாடி முடித்தாள்.
“ஏ…” என்று உற்சாகத்துடன் கை தட்டிய சுசி, “சூப்பர் அக்னி” என்று அவளை அணைத்துக் கொள்ள,
“பாரேன்.. நானும்தான் பாடினேன். எனக்கெல்லாம் பாராட்டு இல்லையா? திஸ் இஸ் நாட் ஃபேர் சுசி” என்று சிவன் செல்லமாய் கோபித்துக் கொண்டான்.
அதில் அக்னிகாவின் அதரங்களும் மெல்லமாய் புன்னகையைச் சிந்த,
“காவல்காரா.. அதெல்லாம் இருக்கட்டும். என்ன வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்ட?” என்று ஒன்பது மணி ஆனதைக் காட்டிய கடிகாரத்தைப் பார்த்தவாறு சுசி கேட்டாள்.
“ஏது ஒன்பது மணி சீக்கிரமா? சரிதான்!” என்றவன், “ஆமா என்ன இங்க பாட்டு கச்சேரி?” என்று சிவன் கேட்க,
“ஆமா அண்ணா.. அவளுக்கு போர் அடிக்குது பாவம். டீவில கண்ட கண்ட நீயூசை பார்த்து திரும்ப ஸ்டிரஸ் ஆக வேணாம்னு பார்த்தா ஃபோன்லயும் எங்க திரும்பினாலும் அதுதான் ஓடுது. அதான் பக்கத்துல லைப்ரேரிலருந்து புக்ஸ் கொண்டு வந்து தந்தேன். என்ன வெறில படிக்குறாளோ எல்லாமே சீக்கிரம் முடிச்சுட்டா. அதான் பாட்டு பாடு கேட்போம்னு சொன்னேன்” என்று சுசித்ரா கூறினாள்.
சுசிக்கு புரியவே செய்தது அவளது மன அழுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தன்னை புத்தகத்தில் அவள் தொலைக்கத் துடித்திடும் அவா தான் இத்தனை வேகமாக அவள் புத்தகத்தில் மூழ்குவது. அதனாலேயே தேடித் தேடி எளிமையான காதல் கதைகளை மட்டுமே அவளுக்கு எடுத்து வந்து அவள் மனதை இதம் காண வைக்க முயற்சிக்கின்றாள்.
இதோ இரண்டு நாட்கள் கடந்திருந்தது! இன்னும ஒரு நாள் அவள் ஓய்வு எடுக்கும் வரையும் உடன் இருந்து பார்த்துக் கொள்ள சுசியுமே வேலைக்கு விடுப்பு எடுத்துக் கொள்ள, அது அக்னிகாவிற்கு பெரும் சங்கடமாக இருந்தது.
அவளுக்கு கூடுதல் சங்கடம் கொடுக்க வேண்டாமென, சுசி, இணையம் வழியே தனது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கின்றாள்.
எந்த விளக்கமும் இன்றியே இதைப் புரிந்துகொண்ட சிவப்ரியன், “ஓகே ஓகேடா” என்று அயர்ந்து அமர்ந்தான்.
அவன் முகத்தில் இந்த இரண்டு நாட்களாக யோசனை ரேகைகள் தான்.
இரண்டாம் கொலை நடந்து இரண்டு நாட்களாயிற்று. போதிய தகவல் ஏதும் கிடைக்கப் பெறாதபோதும், அடுத்த கொலை நடந்துவிடக் கூடாது என்பதே அவன் வேண்டுதலாக இருந்தது.
முதல் கொலை நடந்து ஒரு மாதமாக அது பல இணைய காணொளிகளால் பேசு பொருளாகவே இயங்கி வந்தது. இப்போது இந்த இரண்டாம் கொலை, மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அக்கம் பக்கத்திற்கு செல்வதற்குக் கூட மக்கள் அஞ்சுவதும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பயம் கொள்வதும் மேலும் பல சர்ச்சைகளுக்கு வழிவகை செய்வது, பெரும் சோதனையாக இருந்தது.
அவனது யோசனையான முகத்தை பார்த்தபடி அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அக்னிகா, ‘ரொம்ப டயர்டா இருக்கார். இந்த நாயி சாப்டுறியானு கூட கேட்காம போயிடுச்சு’ என்று யோசித்தவளாய், “சாப்பிடுறீங்களா?” என்று மெல்லமாய் கேட்டாள்.
சட்டென தன் சிந்தையிலிருந்து மீண்டவன் அவள் என்ன பேசினால் என புரியாது விழிக்க, “சாப்பிடுறீங்களா?” என்று கேட்டாள்.
அப்போதுதான் மதியமிருந்தே சாப்பிடாமல் சுற்றுவது அவனுக்கு உரைத்தது!
லேசாய் வயிற்றைத் தேய்த்துக் கொண்டவன், “கொலை பசி ஸ்பார்கில்.. என்ன இருக்கு” என்று முகம் சுருக்கி கேட்க, இவளுக்குப் பாவமாய் போனது.
மெல்ல எழுந்து சமையலறை சென்றவள், இட்லியும் காரச்சட்டினியும் கொண்டு வந்துத் தர, சட்னியின் காரம் ஏதும் உண்ணாத வயிற்றில் சற்றே எரிச்சலை மூட்டி இருமலைத் தந்தது.
சட்டென நீர் எடுத்து வந்துத் தந்தவள், “மெல்ல சாப்பிடுங்க” என்று கூற,
“தலையைத் தட்டிவிட்டுட்டே சொல்லிருக்கலாம்” என்றான்.
அவனை முடிந்தமட்டும் முறைத்தவள் அவனுக்கு எதிரே அமர்ந்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு அதைப் பிரட்டத் துவங்கிவிட தானும் உண்டு முடித்தவன் தட்டை கழுவி வைத்துவிட்டு வந்தான்.
‘போதுமா?’ எனக் கேட்கத் துடித்த நாவையும் தேவையற்ற பேச்சுவார்த்தைகளை வளர்க்க வேண்டாமென அடக்கி, அமைதியானவள் அறைக்குள் செல்லப் போக,
வெளியே வந்த சுசித்ரா, “சாப்டியா அண்ணா?” என்று கேட்டாள்.
அவள் வேண்டுமென்றே தான் உள்ளே சென்றிருக்கின்றாள் என்று புரியவும், அக்னி அக்னியாய் அவளை முறைக்க, சிவன் பக்கென்று சிரித்து வைத்தான்.
அதில் அக்னியைப் பார்த்து அசடு வழிந்த சுசித்ரா, “சரிசரி போய்த் தூங்கு” என்று கூறி, “நீ எங்க அண்ணா தூங்கப் போற?” என்க,
“எங்க அண்ணான்னா?” என்று அக்னி அதிர்வாய் கேட்டாள்.
அதில் தான் உளறிவிட்டதை உணர்ந்த சுசி, “இ..இல்ல ஹால்ல தூங்கப் போறானா இல்ல..” என்று இழுக்க,
கரங்களைக் கட்டிக் கொண்டு அவளை முறைத்த அக்னி, “இல்லனா?.. கிட்சன்ல தூங்கப் போறாரானு கேட்க வந்தியோ?” என்றாள்.
சுசித்ரா திருதிருவென்று விழிப்பதில் கைகளைத் தட்டிக் கொண்டு சிரித்த சிவப்ரியன், “ச்சில் ஸ்பார்கில். எதுக்கு என் தங்கச்சிய மிரட்டுற நீ? இங்கயா இல்ல க்வாட்டர்ஸ்லயானு கேட்க வந்தா. பின்ன உன்கூட ரூம்லயா என்னால தூங்க முடியும்?” என்று கூற,
அவன் பேச்சில் அதிர்ந்து விழித்தவள் அமைதியாக உள்ளே சென்றுவிட்டாள்.
தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சோபாவில் பொத்தென்று அமர்ந்த சுசி, “உன்பாடு திண்டாட்டம் தான் அண்ணா” என்க,
“உன் அண்ணி கொஞ்சம் கோவக்காரிதான்.. பட் அண்ணா மேனேஜ் பண்ணிடுவேன் பேபி” என்றான்.
அந்த இரவை மிக மிக அழகாய் கடந்தவன் அடுத்த நாள் விரைவே எழுந்து புறப்பட்டிருந்தான்.
அனைவருமாய் சேர்ந்து திரட்டிய தகவல்கள்படி அந்தச் சுற்று வட்டாரப் பகுதியில் இணையத்தின் வழியே எந்தக் கடப்பாரை வியாபாரமும் நிகழவில்லை!
“சார்.. ஆன்லைன்ல எதும் வாங்கலை. சுற்றி இருக்கும் பட்டறைகள்ல நாம கேட்குறோம் சரி. ஆனா அவன் இங்கதான் வாங்கிருப்பான்னு என்ன நிச்சயம் இருக்கும்?” என்று சந்தோஷ் வினவ,
“கண்டிப்பா அதுக்கு நிச்சயம் இல்ல சந்தோஷ். இன்னும் சொல்லப்போனா யாரும் வாங்கிருந்தா கூட அவங்க கில்லர்னு சொல்ல முடியாது. கில்லர் வேற யார் மூலமாது கூட வெளியருந்து வாங்கிட்டு வர வச்சிருக்கலாம். இருந்தாலும் நாம இப்படி தான் யோசிப்போம்னு அவன் எளிமையான வழிகளைக் கூடப் பயன்படுத்திக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? அதனால தான் இங்கயும் விசாரிக்குறோம். நீங்களும் திலகாவும் சேர்ந்து பட்டறைகள்ல விசாரிச்சுட்டு வாங்க. நானும் ராமும் போய் சாத்விக் பற்றி அக்கம் பக்கம் அன்ட் அவரோட பேரென்ட்ஸ் கிட்ட விசாரிச்சுட்டு வரோம்” என்று சிவப்ரியன் கூறினான்.
இங்கு சாத்விக்கின் நட்பு வட்டத்தை விசாரணைக்காக அழைத்திருந்த சிவப்ரியன் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரிக்கத் துவங்கினான்.
ஒவ்வொருவரும் அவனுக்கு ஒவ்வொரு வகையில் நட்பானவர். சிலர் அக்கம் பக்கத்தார், சிலர் பள்ளி கால தோழர்கள், சிலர் கல்லூரி தோழர்கள், சிலர் வேலையிடத்தில் மற்றும் ஓரிருவர் இணையம் வழிக் கிடைத்தத் தோழர்கள்.
ஆக அவனது தோழமை வட்டம் மட்டுமே சற்று அதிகமாகத்தான் இருந்தது.
ஒவ்வொருவரையாய் சிவன் மற்றும் ராம் விசாரிக்கத் துவங்க, பொதுவாக அவன் நல்லவன் என்று சிலரும், அவன் கோபக்காரன் என்று சிலரும், அவன் பாவம் அப்பாவியானவன் என்று சிலரும், அவன் சுயநலவாதி என்று சிலரும் அவரவர் கருத்துக்களைக் கூறிக் கொண்டிருந்தனர்.
தனிப்பட்ட வகையில் பகைமை சம்பாதிக்குமளவு அவனுக்கு எந்த விரோதிகளும் இல்லை என்பதே அனைவரும் பதிவு செய்த ஒன்றாக இருந்தது.
அவனது இணையம் வழி தோழனான சுரேன் உள்ளே வர, அழுத்தமான பார்வையோடு அவனை அளவிட்ட சிவன் அமரும்படி சைகை செய்தான்.
“நீங்க சாத்விக்குக்கு எப்படி பழக்கம்?” என்று ராம் வினவ,
“சார்.. சாத்விக்கோட ஐடி சஜஷன்ல தான் வந்தது. அதுல சும்மா தான் கொடுத்து வச்சேன். அப்ப அவன் அடிக்கடி லவ் பெயிலியர் கவிதைகள் நிறையா வைப்பான். அப்ப அதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணும்போது நாங்க பேச ஆரமிச்சோம். அவனுக்கு ஏதோ காதல் தோல்வி, ஏற்க முடியலைனு கோவமும் வருத்தமுமா புலம்புவான். இப்பவர என்ன காரணம் ஏன் பிரிஞ்சாங்கனு எனக்குத் தெரியாது. ஆனா காதல் தோல்வினு அவன் வருத்தப்பட்டு கவிதைகளா போஸ்ட் போட்டாலும் கூட என்கிட்ட பேசும்போது அந்த பொண்ணுமேல கோபத்தோட பேசுவதைப் போலத்தான் பேசுவான். ஏதோ ஒரு பொண்ணு அவனை நல்லா யூஸ் பண்ணி ஏமாத்திவிட்டிருக்கானு நினைக்குறேன் சார். எனக்கு அவதான் இதை செய்திருப்பாளோனு கூட சந்தேகம் இருக்கு. எனக்கு தெரிஞ்சு அவனோட காலேஜ் டேஸ்ல தான் இது நடந்திருக்கனும். அவன் காலேஜ் பிரண்ட்ஸ் கிட்ட நீங்க விசாரிச்சுப் பாருங்க” என்று கூறினான்.
“யார் கொலையாளினு நீங்களே ஏன் முத்திரை குத்தனும்? அன்ட் சாத்விக்கோட பாயிண்ட் மட்டுமே வச்சு ஒரு பொண்ணை தப்பா பேச வேண்டாம். காதல் முறிவுக்கு சாத்விக் கூட காரணமா இருந்திருக்கலாம்” என்று சிவன் இடக்காகப் பேச,
“இருக்கலாம் சார்” என சுரேன் உடனே ஒப்புக் கொண்டான்.
அவனிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டு அனுப்பிய சிவன் ராமை ஏறிட, புரிஞ்சுது சார் என்றவனாய் அவனைப் பற்றிய தகவல்களை திரட்டும்படியாக சைபர் பாதுகாப்பு துறைக்கு தெரிவித்தான்.
மேலும் அவனுடைய காதல் விவகாரம் பற்றி அவனது கல்லூரி தோழர்களிடம் வினவ, ஆச்சரியப்படும் விதமாய், “அப்படிலாம் அவன் யாரையும் லவ் பண்ணலையே சார்” என்றனர்.
-தொடரும்…