கண்ணாலம் 13
சேதுராமன் வீட்டிற்கு வந்து இரண்டு நாள்கள் ஆகிவிட்டது. இந்த இரண்டு நாளுமே அவர் வீடு கலகலவென்று இருக்கிறது. பூங்கொடி இல்லாதது மட்டுமே ஒரே குறை. நடந்த அனைத்து மனஸ்தாபங்களையும் மறந்த சொந்தங்கள், பிரிந்திருந்த நாள்களுக்கும் சேர்த்துச் சிரித்தது. வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பூங்கொடியிடம் பேசிப் பார்த்து விட்டனர்.
எதற்கும் மசியவில்லை அவள். கடைசியாக நீலகண்டனும், “மாமனை மன்னிச்சிடுமா. அவன் எனக்காகத்தான் உங்கப்பன் கூடச் சண்டை போட்டான். மத்தபடி அவனுக்கு நீன்னா உசுரு! எல்லாரும் ஒன்னா இருக்கும்போது நீ மட்டும் தனியா இருக்கிறதைப் பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. என் புள்ள எந்நேரமும் உன்னப் பத்தியே பேசிட்டுக் கெடக்கான். என்னாதான் சிரிச்சுப் பேசிக் கலகலன்னு இருந்தாலும், உன்னப் பிரிஞ்ச ஏக்கம் நிறைய இருக்கு அவனுக்கு. இத்தோட எல்லாத்தையும் மறந்துடலாம். பழைய மாதிரி நம்ம ரெண்டு குடும்பமும் சந்தோஷமா இருக்கலாம்.” பேசிப் பார்த்தார்.
“உங்க குடும்பத்துக்குள்ள சேர நான் யாரு? நான் உங்களுக்கு வேண்டாத ஒருத்தி! அன்னைக்குச் சண்டை போட்டீங்க, இன்னைக்குச் சேர்ந்துகிட்டீங்க. அன்னைக்கும், நீங்க என்னைப் பத்தி யோசிக்கல, இன்னைக்கும் என்னைப் பத்தி யோசிக்கல. உங்க புள்ள சந்தோசத்துக்காக மட்டும் தான் வந்து பேசுறீங்க. திரும்பவும் ஒன்னு கூடி, மனசு நோகத் தனியா நிக்க என் உடம்புல தெம்பு இல்ல. என்னை என் போக்குல விட்டுடுங்க.”
“என்னாமா பூவு, நீ நான் தூக்கி வளர்த்த புள்ள… உன்னப் பத்தி யோசிக்காம இருப்பனா?”
“அதான் பார்த்தனே, அன்னைக்குப் புள்ள போன கையோட நீங்களும் போனதை.”
“அதுதாம்மா நாங்க பண்ண தப்பு. அந்தத் தப்புக்கு உன்னையும், என் தங்கச்சியோட கண்ணீரையும் விலையாக் குடுத்துட்டு நிற்கிறேன். இதுக்கு மேலயும் உங்க ரெண்டு பேரையும் இழந்துட்டு என்னால வாழ முடியாது.”
“நான் ஒருத்தி இல்லாதது அவ்ளோ பெரிய பாதிப்பு இல்லை உங்களுக்கு. ரெண்டு குடும்பமும் சந்தோஷமா வாழுங்க. என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன்.”
“உனக்கு என் மேல தானம்மா கோபம். அதுக்கான தண்டனையை எனக்கு மட்டும் குடு. எதுக்குமா சிங்காரத்துக்கும் குடுக்கிற. அவன் உண்மையாவே ரொம்பப் பாவம் பூவு. உன்னை எவ்ளோ நேசிக்கிறான்னு நான் சொல்லித் தெரியணுமா? அவன் கெட்ட நேரமோ, இல்ல என் கெட்ட நேரமோ தெரியல. புடிச்சவளை விட்டுக் குடுத்துட்டுத் தவிச்சிட்டு இருக்கான். ஒரு அப்பனா அதை என்னால பார்க்க முடியல. உன்னால தான்னு என் மனசாட்சி, குத்தம் சொல்லி நோகடிக்குது. தயவு செஞ்சு வீட்டுக்கு வா பூவு…”
“நான் வரல மாமா, எனக்கு அங்க வரப் புடிக்கல. இனி இதைப் பத்திப் பேச இங்க வராதீங்க.”
அதுவரை வருந்திப் பேசிய நீலகண்டன் இதமாகச் சிரித்து, “பரவால்ல பூவு, எம்புட்டுக் கோவம் இருந்தாலும் மாமானு கூப்பிடுறியே. இது ஒன்னே போதும். நீ எங்களை மனசால விலக்கி வைக்கலன்னு சொல்ல. இப்பதான் புதுத்தெம்பு வந்த மாதிரி இருக்கு. கூடிய சீக்கிரம் என் வீட்டுக்கு மருமகளா வந்துடுவ. அந்த நாளுக்காக நான் மட்டும் இல்ல, நம்ம மொத்தக் குடும்பமும் காத்திருக்கு.” என்று விட்டுச் செல்ல, அன்றைய நாள் முழுதும் சிந்தனையோடு கழிந்தது பூங்கொடிக்கு.
***
பின்பக்கத் திண்ணையில் அமர்ந்திருந்தார்கள் பேத்தியும், பாட்டியும். மாதம் ஒரு முறை ஏற்படும் மின்சாரத் தடையால், மதியமே வீட்டிற்கு வந்து விட்டாள் பூங்கொடி. நேற்று இரவு மீந்து போன சாதத்தைக் கஞ்சியாக மாற்றிக் குடித்துக் கொண்டிருந்தார்கள் இருவரும். போனைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பேத்தியை, அடிக்கடி உற்றுக் கவனிக்க ஆரம்பித்தார். அதை முதலில் உதாசீனம் செய்தவள் அதுவே தொடர்வதால்,
“என்னா வேணும் இப்போ உனக்கு?” கேட்டாள்.
“என்னா தான்டி முடிவு பண்ணிருக்க.”
“எதுக்கு, எதப் பத்தி?”
“சும்மா நடிக்காத பூவு. ஒருத்தர் மாத்தி ஒருத்தர், தினம் பொழுது வந்து நின்னு கெஞ்சிட்டுப் போறாங்க. வர எல்லாருக்கும் ஒன்னு போலப் பதில் சொல்லி அனுப்புற. நெசமாவே உன் குடும்பத்தோட சேர உனக்கு விருப்பம் இல்லையா, இல்ல சிங்காரவேலனைக் கட்டிக்க விருப்பம் இல்லையா?”
“எனக்கு எதுவுமே விருப்பம் இல்ல பாட்டி!”
“இப்புடிச் சொன்னா எப்படி டி”
“வேற எப்படிச் சொல்லணும்?”
“சிங்காரத்தைக் கொஞ்சம் நெனைச்சுப் பாரு பூவு. நீயும்தான், அவனை மனசாரக் காதலிச்ச. ஏதோ தெரியாமல் தப்புப் பண்ணிட்டான். அதையே புடிச்சுகிட்டு இன்னும் எவ்ளோ நாளுக்குத் தொங்கப் போற?”
“நடந்ததை என் மனசு மறக்கற வரைக்கும்!”
“நீதான் அதுக்கான முயற்சிய எடுக்கணும்.”
“நான் எதுக்குப் பாட்டி எடுக்கணும்? இந்தக் காயத்தைக் குடுத்த அவன்தான் அந்த முயற்சிய எடுக்கணும்.”
“அவனும் கண்ணாலம் நின்ன நாள்ல இருந்து செய்யாத விஷயம் இல்லயேடி. நீதான் வம்படியா தொரத்தி விட்டுகிட்டுக் கெடக்க. பின்ன எப்புடிடி அவன் சரி பண்ணுவான்?”
“அது அவன் பிரச்சினை பாட்டி. இதுவரைக்கும், அவன் பண்ண எல்லா விஷயத்துலயும் என் மேல இருந்த காதல் தான் வெளிப்பட்டுச்சே தவிர காயம் மறையல. என்னால அதைக் கடந்து வர முடியல. என்னை வேணாம்னு சொல்லிட்டுப் போன அந்த வார்த்தை தான், அவனைப் பார்க்கும் போதுலாம் ஞாபகத்துக்கு வருது. நான் என்னா பண்ணட்டும் பாட்டி.”
“அதுக்கு எதுக்குடி கண்ணு கலங்குற? அதெல்லாம் அவன் சரி பண்ணிடுவான். முதல்ல சாப்பிடு.”
“ஆமா, எங்க உன் பேரன ரெண்டு நாளா இந்தப் பக்கம் காணோம்?”
“என்னைக் கேட்டா?”
“ம்ம்… உனக்குத் தெரியாம இருக்குமா? நீதான் ஆல் இந்தியா ரேடியோவாச்சே. இந்நேரம் அவன் எங்க இருக்கான், என்னா பண்றான்னு எல்லாத்தையும் விசாரிச்சு இருப்பியே.”
“எனக்கு வேற பொழப்பு இல்ல பாரு.”
“நம்பிட்டேன்!”
“அடப் போடி கிறுக்கி! சத்தியமா எனக்கு எந்த விஷயமும் தெரியாது. நேத்து ராத்திரி எங்கயோ கெளம்பிப் போயிட்டு, இன்னைக்கு மதியம் தான் வந்ததா அன்னம் வந்து சொல்லிட்டுப் போனா… மத்தபடி என்னா ஏதுன்னு எதுவும் தெரியாது.”
“ஓ…” என அவள் ஓசை கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே பேச்சுச் சத்தம் சலசலத்தது. கஞ்சியில் ஊறிப் போயிருந்த ஐ விரல்களை மீட்டெடுத்தவள், கழுவக் கூட செய்யாமல் வாசலில் வந்து நின்றாள்.
அவளுக்குப் பின்னால் ரங்கம்மாள் பாட்டியும் வந்து நிற்க, அவர்கள் இருக்கும் தெருவே அதிரிபுதிரியாக இருந்தது. சில கூட்டம், ஆங்காங்கே நின்று கொண்டு எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர். சில பேர் வெள்ளை நிறப் பத்திரிகையைக் கையில் வைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டிருந்தனர். அதையும் தாண்டி, அவர்கள் இருக்கும் வீட்டில் இருந்து நான்காவது வீட்டில் பெரும் கூட்டம். வெள்ளை நிறக் கதர் சட்டை தான் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“யாரோ கட்சிக்காரங்க வந்து இருக்காங்க போலயே.”
“ஆமா பாட்டி. வெள்ளை சட்டையாக் கெடக்கு. ஏதாச்சும் மீட்டிங்க்கு ஆள் புடிக்க வந்திருப்பாங்க.”
“இவனுங்களுக்கு இதே வேலை. தேவையிருந்தா மட்டும் வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டுக் கையெடுத்துக் கும்பிட வந்திடுவானுங்க.”
“அதுக்கு எதுக்கு, எதையோ கைல வச்சிக்கிட்டு சிரிக்கிறாங்க.”
“தெரியலையே பூவு.”
“எந்தக் கட்சிக்காரங்க…” என அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தக் கூட்டம் விலகியது.
பாட்டியும், பேத்தியும் வாய் பிளந்தனர். வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி மினுமினுக்க, நெற்றியில் பெரியதாகக் குங்குமம். கழுத்தில் நாய் சங்கிலி அளவிற்குத் தங்கச் சங்கிலி. பாலிஷ் போட்ட லெதர் செருப்பு. சட்டைப் பாக்கெட்டில் தெரியும்படி பேனா. பந்தாவாகத் தங்க நிறக் கைக்கடிகாரம். விரலுக்கு மேல் வீங்கி இருந்த பெரிய மோதிரம்.
அரசியல்வாதி இவன், என்பதற்குப் பக்கா பொருத்தமாக நின்றிருந்தான் சிங்காரவேலன். அவனைச் சுற்றிப் பத்துக்கும் மேற்பட்ட அல்லக்கைகள். வீட்டுத் தலைவரை அழைத்து, வெள்ளைப் பத்திரிகையைக் கையில் கொடுத்துவிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டவன், “மறக்காம வந்துடுங்க.” எனப் பெருந்தன்மையாகப் பற்களைப் பளிச்சிட்டுக் காட்டினான்.
“என்னாடி இவன்!”
“அதான் பாட்டி, எனக்கும் புரியல.”
“இது என்னா புது அவதாரமா இருக்கு.”
“மூளை கலங்கிப் போச்சா உன் பேரனுக்கு.”
“எல்லாம் உன்னால தான்டி.”
“எது?”
“நீ கெடைக்காத சோகத்துல பித்து பிடிச்சுப் போய் இப்புடி மாறி நிக்கிறானே”
“நீ வேற சும்மா இரு பாட்டி. உன் பேரன் அம்புட்டு முட்டாள் இல்ல. மிகப்பெரிய பிளானோட வரான். தடுக்கி விழுந்திடாம தைரியமா இருக்கணும்.”
“என்னாத்துக்கு நான் இருக்கணும். இந்த தகிடுதத்த வேலை உனக்காக. நீதான்டி இருக்கணும்.”
“ஹாய் லாலா…” தெருவே பார்க்கக் கையை உயர்த்தி அழைத்தான்.
அவள் பார்த்ததும், கருப்புக் கண்ணாடியை கண்ணில் அணிந்து கொண்டு, “மாமா கம்மிங்!” என்றான்.
ஒன்றும் விளங்காத குழந்தையாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்கொடி. காதலியின் பார்வையில் வெட்கம் தாண்டவம் ஆடியது அவன் முகத்தில். கருப்புக் கண்ணாடியைச் சற்று மேலே தூக்கிக் கண்ணடித்தான்.
“சும்மா எதுக்குடா நிக்கிறீங்க? அடிக்கிற அடியில ஒருத்தன் காதும் நல்லா இருக்கக் கூடாது. செவுடாகி, ஊமை பாஷையில பேசிக்கணும். அப்புடி அடிங்கடா…”
அவன் கட்டளைக்குப்பின் அதிர ஆரம்பித்தது மேள தாளங்கள். உடனிருந்த அல்லக்கைகளில் ஒருவன், பெரிய ரோஜா மாலையைக் கழுத்தில் போட, இரண்டாவதாக 500 ரூபாய் தாள்கள் அடங்கிய மாலையை ஒரு முதியவரிடம் கொடுத்துப் போட வைத்தனர். போதாக்குறைக்கு, இரு பக்கமும் இரு பெண்கள் நின்று கொண்டு திருஷ்டி கழிக்க, பெருமிதமாக நடந்து வந்தவனை வழி மறைத்து ஆரத்தி எடுத்தார் ஒருவர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குத் தலை சுற்றியது. எதற்கு இந்தப் புது அவதாரம் என்பது விளங்காமல், அவன் செய்யும் அலப்பறைகளை உள்ளுக்குள் ரசித்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
“நிப்பாட்டுங்க!” என்றதும் அனைத்து அலப்பறைகளும், ஓய்ந்து நின்ற மழை போல் அடங்கிவிட்டது.
கண்ணாடியைக் கழற்றித் தன் சட்டை பட்டனுக்கு நடுவில் மாட்டியவன், “வணக்கம் பொண்டாட்டி, எப்புடி இருக்க கெழட்டுக் கெழவி. நான் யாருன்னு தெரியுதா?” குறும்பு கொப்பளிக்கக் கேட்டான்.
“கட்சியில சேர்ந்து இருக்கியா?”
“ஆமா!”
“எந்தக் கட்சி?”
“காதல் கட்சி!”
“என்னாடா ஒளறிட்டுக் கெடக்க?”
“உன்ன மாதிரிப் பெருசுக்கெல்லாம் பதில் சொல்ல டைம் இல்ல. ஓரமா ஒதுங்கிப் போ…” ரங்கம்மாள் பாட்டியை ஒதுக்கி விட்டவன், ஒதுங்கி நிற்கும் காதலியின் கைப்பிடித்து முன்னே இழுத்தான்.
“செல்லக்குட்டி! பட்டுக்குட்டி! இந்த மாமனோட லாலாக்குட்டி!” பேசிக்கொண்டு கன்னத்தைக் கிள்ளி எடுத்தான்.
பூங்கொடி முகத்தைத் திருப்பிக் கொள்ள, “அப்படியெல்லாம் பண்ணக்கூடாது. மாமனுக்குக் கோபம் வந்துச்சுன்னா முகம் செவக்கிற அளவுக்குக் கடிச்சு வச்சுருவேன்.” எனக் கடிப்பது போல் முதலைப் பற்களைத் திறக்க, ஒரு அடி பின் சென்று நின்றாள் பூங்கொடி.
“அண்ணிய நகர விடாமல் புடிங்கடா…” என்றதும் இரண்டு நபர்கள் பூங்கொடிக்குப் பின்னால் சென்று நின்று கொண்டனர்.
அவர்களையும், தன் முன்னால் நிற்கும் கூட்டத்தையும் மிரண்டு பார்த்தாள். கண்ணாடியின் மறைவில் கருவிழிகளுக்குள் அதை ரசித்தவன், “இப்புடியே ஆள மயக்கிடு!” எனக் கன்னத்தை இடித்தான்.
பேச வாய் எடுக்கும் காதலிக்கு முன்னால், ஆட்காட்டி விரலை உதட்டின் மீது வைத்து, “உஷ்!” எனக் காற்றின் மூலம் ஓசை கொடுத்தவன்,
“மாமன் பேசுறத மட்டும் தான் கேட்கணும்!” செல்லக் கட்டளையிட்டான்.
பலத்த பெருமூச்சோடு நின்றவள் கையில் பத்திரிகையைத் திணித்தவன், “மாமன் உனக்காக ஒரு விழா எடுத்திருக்கேன். நம்ம ஊருசனம், சொந்த பந்தம்னு ஒரு படையே கூடப் போகுது. மறக்காம இந்தக் கண்ணுத் தெரியாத கெழவியக் கூட்டிகிட்டு வந்துடு.” என்றான்.
பத்திரிகையை வாங்காமல், அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் பூங்கொடி. அதில் காதல் உற்றவன், மீண்டும் இடித்த கன்னத்தில் இடித்து, “அப்புறம் சைட் அடிச்சுக்கலாம். முதல்ல உனக்காக ஏற்பாடு பண்ணி இருக்க விழாப் பத்திரிகையை வாங்கு.” எனக் கையில் திணித்தான்.
“நீதான் இந்த விழாவுக்கு முக்கியமான கெஸ்ட். லேட் பண்ணாம ஜம்முன்னு சீவிச் சிங்காரிச்சுகிட்டு, இந்த மாமனுக்குத் துணையா மேடையில வந்து நின்னுக்க…”
“என்னா பங்க்ஷன்?”
“இப்பவே சொல்லிட்டா கிக்குப் போயிடாது… உன் ஆசைக் காதலன் சிங்காரவேலன் போனதுக்கப்புறம் பிரிச்சுப் பார்த்து நீயே தெரிஞ்சுக்க.”
“நீயே சொன்னா என்னா கேடுடா?”
“படைத்தளபதி பாய்ஸ், இந்தக் கெழவி பல்ல உடைக்கிற வேலையப் பாருங்க.”
“இப்ப எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க?”
“சண்டை போட்ட தேங்கா மண்டையன் உங்கப்பனும், பப்பாளிப்பழ மண்டையன் எங்கப்பனுமே, வெட்கமே இல்லாமல் கை கோர்த்ததுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் இப்புடி இருக்கறது, காதலர் வரலாற்றுக்கு அசிங்கம் இல்லையா? நம்மளால தான் அசிங்கம்னு சொல்லிடக் கூடாது லாலா… இந்த விழாவோட நம்ம கைகள் இணைஞ்சுடனும். காதல் ஓங்கிடனும்! ஆண்டாண்டுக்கும், இந்த விழா பேசப்படனும். சிங்காரவேலன் மாதிரி காதலிக்க ஒரு பையனும் இல்லன்னு ஊரே பெருமையாப் பேசணும். அதுக்குத்தான் இம்புட்டும்.”
“அப்போ ஊர் பெருமைக்குத் தான் இதெல்லாம் பண்ற…”
“ச்சீ ச்சீ! என் அழகிய லாலாவுக்கு.”
“நான் வந்தாத்தான இந்த ஃபங்ஷன் நடக்கும். வரமாட்டேன்!”
“அப்புடியெல்லாம் சொல்லக் கூடாது.” என்று முகத்தைச் சுருக்கியவன், “நீ வரலைன்னா இந்தக் கெழவிய மேல அனுப்பிடுவேன்.” என்றான்.
“தாராளமா அனுப்பிக்க. இது போனா எனக்கென்ன வந்துச்சு?”
“அடிப்பாவி மகளே! என் புள்ளையோட பொண்ணுன்னு கரெக்டா காட்டிட்டியே…” என்ற ரங்கம்மாளின் புலம்பலைக் கேட்ட இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் நின்றிருந்தார்கள்.
“களவாணிங்களா, உங்களுக்கு மத்தியில வாழுறதுக்கு நான் மேல போய் சேரலாம்.”
“இந்தா கெழவி, அப்புடி ஓரமா போய் புலம்பு. காதலன், காதலி தனிமைல பேசிட்டு இருக்கும் போது குறுக்கா மறுக்கா வந்துட்டு இருக்க…”
“த்தூ… தூ…”
“ரைட்டு, கெழவி கத்திடுச்சு. அப்ப நம்ம விழா அமோகமா நடக்கப் போகுது.” என்றதும் அவனைச் சுற்றி இருந்த ஆள்கள் அனைவரும் கை தட்டினார்கள்.
துப்பியும் திருந்தாத பேரனை, என்ன செய்வதென்று தெரியாமல் ரங்கம்மாள் தலையைத் திருப்பிக் கொள்ள, “ஆல் படைத்தளபதி பாய்ஸ்… ஏன் எதுக்குன்னு கேட்காம வானத்தை அண்ணாந்து பாருங்க.” என்றவனின் பேச்சை மதித்த அல்லக்கைகள் அனைவரும் வானத்தைப் பார்த்தார்கள்.
அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவன், காதலி பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் முதியவரின் கண்களை மூடிவிட்டு, அவள் அசரும் நேரம், “உம்மா…” என்ற பெருத்த சத்தத்தோடு முத்தம் ஒன்றைப் பதித்தான்.
அதன் சத்தத்தில் தலையை நிமிர்த்திய அனைவரும், கூட்டி வந்த தலைவன் சிங்காரத்தை, “அடக் கிராதகா!” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருக்க, “தலை எழுத்து!” தலையில் அடித்துக் கொண்டார் ரங்கம்மாள்.
முத்தம் வாங்கியவளோ, இத்தனைப் பேருக்கு மத்தியில் தர்மசங்கடமான நிலையில் நின்று கொண்டிருக்க, “மீதிய விழா முடிஞ்சதும் தரேன் லாலா…” கன்னத்தைத் தட்டி விட்டுக் கையசைத்தான்.
மேளதாளங்கள் கூரையை அதிரவிட்டது. அவள் வீட்டு வாசல் முன்பாக வேர்க்க, விறுவிறுக்கக் குத்தாட்டம் போட்டவன், புலம்பிக் கொண்டிருக்கும் ரங்கம்மாளை இழுத்து வம்பு செய்ய ஆரம்பித்தான். அடாவடியான காளையிடம், வசமாகச் சிக்கிக் கொண்டார். அவர் கைகளைப் பிடித்துத் தோள் மீது வைத்தவன் இடுப்பில் கைகோர்த்து,
“அடி என்னாடி ரங்கம்மா நக்கலா பேசுற
பல்லக் கழற்றி கைல குடுக்கவா…
உன் சுருங்கிப் போன கூந்தலும், கருகிப் போன தண்டட்டியும் சிங்காரவேலனை மயக்குதுடி…”
பாட்டுப் பாடி ரகளை செய்ய, அந்த ஊரே கொக்கரித்துச் சிரித்தது.
கடுப்போடு நின்று கொண்டிருந்த பூங்கொடிக்குக் கூடப் புன்னகை அரும்பியது. அதைக் காட்டினால், தன்னையும் வம்பிழுப்பான் என்று ஒரே ஓட்டமாக உள்ளே ஓடியவளைக் கவனித்தவன், “போதும், படைத் தளபதிகளா…” நிறுத்தினான்.
அவிழ்ந்த சேலை முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகியவர், “கையக் கட்டையில வைக்க…” என்று விட்டு உள்ளே செல்ல, அவரை முந்திக்கொண்டு உள்ளே சென்று காதலியின் பின்னால் நின்றான்.
அவன் நிற்பதை அறியாதவள், வாய் பொத்திச் சிரித்துக் கொண்டிருந்தாள். முதுகு குலுங்குவதை வைத்து அவள் சிரிப்பைக் கண்டு கொண்டவன், சுழற்றி விட்ட பம்பரம் போல் அவளைச் சுழற்றி இதழில் அழுத்தமாக முத்தம் பதிக்க, உதயமான சிரிப்பு அஸ்தமனம் ஆனது. இதைச் சற்றும் எதிர்பார்க்காதவளுக்குப் புரிந்து கொள்ளவே நொடிகள் தேவைப்பட்டது.
அதற்குள், தன் இதழை அவள் இதழுக்குள் நுழைத்துச் சிரிப்புக்குள் ஒளிந்து போன எச்சிலை உறிஞ்சிக்கொண்டு, தன் இதழோடு ஒட்ட வைத்துக் கொண்டான். தடுக்கும் அவள் கைகளையும் மீறி, இடைக்குப்பின் கை வைத்து இல்லாத சதைகளை உள்ளங்கையில் அழுத்திப் பிடித்தவன் முத்தத்தில் வேகத்தைக் கூட்டினான். தட்டுத் தடுமாறி உள்ளே வந்தவர், தலையில் அடித்துக் கொண்டு ஒரே ஓட்டமாக வந்த வழியே ஓடிவிட்டார்.
அவசரம் இல்லாது நிறுத்தி நிதானமாக ரசித்து முத்தமிட்டவன், விலகிச் சில அடிகளையும் வாங்கிக் கொண்டு, “இன்னைக்குச் செம டேஸ்ட் டி!” என்று மீண்டும் நெருங்கத் தள்ளிவிட்டு வெளியே வந்து விட்டாள் பூங்கொடி.
கிடைத்த முத்தமே, ஒரு வாரத்திற்குத் தாங்கும் என்பதால் மயங்கி வெளியே வந்தவன், “ஏதாச்சும் பார்த்த…” அமைதியாக அமர்ந்திருக்கும் ரங்கம்மாள் பாட்டியிடம் கேட்டான்.
“கண்டபடி வந்துடும் என் வாயில…”
“உவ்வேக்! அந்தக் கருமம் எனக்கு எதுக்கு? என் லாலாகிட்ட இருந்து வாங்குனதே போதும்!”
“போடா இங்க இருந்து.”
“வெரசா உன் பேத்தியைக் கூட்டிகிட்டு வந்து சேரு. இல்லனா உன் எதுர்லயே கட்டிப்புடிச்சு முத்தம் குடுத்துத் தூக்கிட்டுப் போவேன்.” என்றதைக் கேட்ட பூங்கொடி கண்களைச் சுருக்கி முறைத்தாள்.
“ஐயோ, அழகா இருக்காளே…” என நெருங்கியவனை அல்லக்கைகள் அனைவரும் சேர்த்துப் பிடித்து,
“அண்ணி, பாவம் அண்ணா…” என்றனர்.
“என்னாடா சொல்றீங்க, உங்களுக்கு எப்புடித் தெரிஞ்சுது?”
“வெளிய குடுத்த சத்தத்தை விட, உள்ள குடுத்த சத்தம் ஊருக்கே கேட்டிருக்கும் ண்ணே…”
“ஈஈஈஈ… அம்புட்டுச் சத்தமாவா கேட்டுச்சு?”
“ஆமாண்ணா…”
“சரி விடுங்கடா, இதையும் வரலாற்றுல சேர்த்துக்கோங்க.”
“பேனர் அடிக்கவா, போஸ்டர் அடிக்கவாண்ணே…”
“குடுத்த காசுக்கு மேல கூவுறானுங்களே.”
நடந்து கொண்டிருக்கும் அலப்பறைகளுக்கு நடுவில், திண்ணை மீது ஓரமாக ஒதுங்கி உறங்கிக் கொண்டிருந்த பத்திரிகையை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள்.
காதலியிடம் மன்னிப்புக் கேட்கும் விழா!
கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர், தாலி கட்டித் தேன்நிலவிற்குச் செல்ல வேண்டியவன், வாய்க் கொழுப்பில் வாழ்க்கையை இழந்து நிற்கிறேன். அப்பனிடம் கோபித்துக் கொண்டு கோமணத்தோடு சுப்பன் மலைமேல் நின்றது போல், நின்று கொண்டிருக்கும் என் ஆசை அத்தை மகளைச் சமாதானம் செய்ய இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
விழாவைச் சிறப்பிக்கும் விதமாக, உப்பு இல்லாத பிரியாணி வழங்கப்படும். உண்டுவிட்டு மட்டும் செல்லும் எண்ணம் இருப்பவர்கள், இந்தப் பக்கம் தலை வைக்க வேண்டாம். காதலியின் மனத்தைக் கரைக்கும் விழா என்பதால், நேரடியாகப் பணமோ பொருளோ வாங்கப்படாது. வரவேற்பு இடத்திற்கு முன் ஸ்கேனர் இருக்கும். ஜிபே செய்து தங்கள் மொய்யைச் செலுத்துமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்விலும், என் அத்தை மகளின் மனம் கரையவில்லை என்றால் முடி காணிக்கை, தீ மிதித்தல், உண்ணாவிரதம் போன்ற கடுமையான விழாக்கள் மேற்கொள்ள இருக்கின்றேன். அவ்விழாக்களுக்கும், மொய்ப்பணத்தைத் தயார் செய்து வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விழா ஏற்பாடு:
சதி செய்த என் மாமன் திரு. சேதுராமன்.
விருந்து ஏற்பாடு:
என்னைப் பெற்றவர் திரு. நீலகண்டன்.
பூ அலங்காரம்:
உசுப்பேத்தி விடும் அண்ணன்கள்
சரவணன், கண்ணன்.
வரவேற்பு:
அன்பு அண்ணிகள்
மீரா, புவனா.
தலைமை தாங்குதல்:
சதிகார மாமனைப் பெற்ற தில்லாலங்கடி:
ரங்கம்மாள்.
துணைத் தலைமை:
எமன் எவ்வளவு போராடியும், போக்குக் காட்டிக் கொண்டிருக்கும் அப்பத்தா:
சீதாலட்சுமி.
உபசரிப்பு:
என் லாலா பூங்கொடியைப் பெற்ற மகராசி:
அன்னம்.
ஆசிர்வாதம்:
என்னைப் பெற்று ஆளாக்கி இப்படி அல்லோலப் பட வைக்கும் அன்புத்தாய்:
கோமளம்.
நம்பிக்கை நட்சத்திரங்கள்:
பிறக்கப் போகும் எங்கள் இரு மகன்களோடு விளையாடக் காத்திருக்கும்:
ஸ்ரீ, ஸ்ரேயா, க்ரிஷ், யாஷ்.
இப்படிக்கு
மாமன் மகளை மனத்தில் சுமந்திருக்கும் நவீன ஷாஜகான்
சிங்காரவேலன்.
பின்குறிப்பு:
(ஒரு வீட்டு மொய்ப் பணத்திற்கு, இருவர் மட்டுமே உப்பில்லாத பிரியாணியைச் சாப்பிட அனுமதி. மேற்கொண்டு வரும் நபர்கள் தனியாக ஜி பே செய்து சாப்பிடுமாறு பகிரங்கமாக மிரட்டுகிறேன்.)
முகத்திற்கு நேராக வைத்திருந்த பத்திரிகையைச் சற்றுக் கீழ் இறக்கி அமளிதுமளி செய்து கொண்டிருக்கும் மாமன் மகனைப் பார்த்தாள். இவள் பார்வையை அறியாது, ரங்கம்மாளை வம்பிழுத்துக் கொண்டிருந்தான் சிங்காரவேலன். இப்படி ஒரு விழாவிற்குப் பத்திரிகை வேறு அடித்துக் கொண்டு வந்திருக்கும் வினோத ஜந்துவாகப் பார்த்தவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“அண்ணே…”
“என்னாடா?”
“அண்ணி, உங்களையே நேத்து வச்ச அயிரை மீன் கணக்கா அள்ளித் தின்னுற அளவுக்குப் பாக்குறாங்க.”
“ஐத்தலக்கா!”
எகிறிக் குதித்து அவளுக்கு முன் வந்து நின்றவன், சுண்டு விரலை வாய்க்குள் நுழைத்து, “எல்லாரும் இருக்கும்போதா இப்புடிப் பாக்குறது? இந்த வெட்டிப் பயலுங்களுக்குக் காசு குடுத்துட்டு, மாந்தோப்புல காத்துட்டு இருக்கேன். தாவணி பாவாடை கட்டிக்கிட்டு வரியா? விழாவுக்கு முன்னாடி ஒரு ஒத்திகை பார்க்கலாம்.” எனக் குழைந்தவன் மீது அந்தப் பத்திரிகையைத் தூக்கி அடித்தாள்.
“அஞ்சு நிமிஷத்துல எல்லாரும் இடத்தைக் காலி பண்ணி இருக்கணும்.” என்று விட்டு உள்ளே செல்ல,
“அண்ணனுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டுப் பின்னாடி வரேன். எல்லாரும் முன்னப் போங்கடா…” என்றவனின் எண்ணம் புரிந்து சுற்றி இருந்த அனைவரும் ஒரு சேரக் காறித் துப்ப, துடைத்துவிட்டு இரண்டாம் சுற்றுக்கு உள்ளே சென்றான்.