Loading

கண்ணாலம் 9

 

“விடு கைய…”

 

“எதுக்கு இம்புட்டுக் கோபம்?”

 

“ஏன், எனக்கெல்லாம் கோவம் வரக்கூடாதா? உங்களுக்கு மட்டும் தான் வரணுமா.”

 

“நான் என்னா கேட்குறேன், நீ என்னா பேசுற…”

 

“எல்லாம் ஒன்னுதான். உன்னப் பொறுத்த வரைக்கும், நீ தான் கொஞ்சனும். நீ தான் லவ் பண்ணனும். நீ தான் கோபப்படணும். நீ தான் கண்ணாலத்தையும் நிறுத்தனும். நான் எதுவும் பண்ணிடக் கூடாது. நீ கொஞ்ச வந்தா ஒத்துழைக்கணும். லவ் பண்ணா சரின்னு நிக்கனும். கோபப்பட்டா பொறுத்துப் போகணும். கண்ணாலத்தை நிறுத்தினாலும் உன் பின்னாடி வரணும். இதையெல்லாம் நான் பண்ணலனா, நாலு பேரு மத்தியில இவதான் என்னை லவ் பண்ணா… இப்படித்தான் என்னை மயக்குனான்னு சொல்லிச் சிரிப்ப.”

 

“நீ தப்பா புரிஞ்சுகிட்ட லாலா. நான் உன்னப் பெருமையா தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்.”

 

“என்னா பெருமை? சொல்லு, என்னா பெருமை? உனக்கும் எனக்கும் நடந்த தனிப்பட்ட விஷயத்தை இப்புடி நாலு பேர் எதிர்ல சொல்றது பெருமையா? நேத்து நீ ஒரு அசிங்கம் பண்ணியே, அதை நாலு பேருக்கு முன்னாடி நானும் சொல்லவா…”

 

“ஏய்!”

 

“இப்ப எதுக்கு உனக்குக் கோபம் வருது. நாலு செவுத்துக்குள்ள நீ எது பண்ணாலும் அதை எனக்குள்ளேயே வச்சுக்கணும். நீ மட்டும் சொல்லலாம். உன்ன மாதிரி நான் என்னா அசிங்கமாகப் பண்ணேன்? மனசுக்குப் புடிச்சி இருந்தது, மறைக்காம சொன்னேன். ஆனா, அதுதான் என் வாழ்க்கையில நான் பண்ண பெரிய தப்புன்னு இப்ப வருத்தப்படுறேன்.”

 

“கோவத்துல வாய்க்கு வந்ததைப் பேசாத.”

 

“அப்புடித்தான் பேசுவேன். நீ கோவத்துல கண்ணாலத்த நிறுத்திட்டுப் போகலாம். நான்… நான் பேசிடக்கூடாது. உனக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா…”

 

“திரும்பத் திரும்ப முட்டாள் மாதிரி அதையே பேசிக்கிட்டு இருக்காத. முதல்ல வண்டியை விட்டு இறங்கு, எதுவா இருந்தாலும் நமக்குள்ள பேசிக்கலாம்.”

 

“ஓ! அதான், எல்லாத்தையும் எல்லாரும் கேக்குற மாதிரிச் சொல்லிட்டியே, அப்புறம் என்னா நமக்குள்ள… பேசாம இவங்களுக்கு நடுவுலயே பாயப் போட்டுப் படுத்துக்குறேன்.” என்றதற்கு மேல் பேச்சு வரவில்லை. 

 

அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான். 

 

அவனைவிட அதிகக் கோபத்தில் இருந்தவள், பலம் பொருந்திய அவன் கையை இழுத்துத் தள்ளி, “உனக்கும் எனக்கும் எதுவும் இல்லன்னு முடிவாகி ரொம்ப நாள் ஆகுது. வெக்கங்கெட்டு எதுக்கு என் பின்னாடி வர… இவங்க எல்லாம் இவன மாதிரி வருமான்னு சொல்லிட்டா நீ நல்லவனாகிடுவியா? நல்லவன் தான் தாலி கட்டப் போற கடைசி நிமிஷத்துல ஓடுவானா? கொஞ்சம் கூட மானம் ரோஷம் இல்லாம தினப்பொழுது என் பின்னாடி வரே… ஆம்பளையா லட்சணமா வேலை வெட்டிக்குப் போக மாட்டியா… மீசைய முறுக்கி விட்டுச் சண்டைக்குப் பாஞ்சா மட்டும் போதாது. ஆம்பளையா நடந்துக்கணும். எங்கப்பன் சொன்ன மாதிரி, வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பையன் தான நீ…” என்றவளின் பேச்சைக் கேட்கச் சகிக்காது அடிக்கக் கை உயர்த்தினான். 

 

“அடி! இன்னும் அதை மட்டும் தான் நீ செய்யல.” 

 

உயர்த்திய கையைக் கீழ் இறக்கியவன் பார்வையைச் சுழற்றினான். பேருந்தில் இருந்த அனைவரும் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை உணர்ந்து கூனிக்குறுகி நின்றான். கொட்டக் கூடாத அனைத்தையும் கொட்டியவள் மனம் தாங்காது இறங்க நகர, தன்னவளை முந்திக்கொண்டு இறங்கினான். ஆத்திரத்தில் கண்கலங்க நின்றாள் பூங்கொடி.

 

***

 

வேலையில் இருந்தவளுக்கு ஒன்றும் ஓடவில்லை. தோழிகள் கூட அவளிடம் நெருங்கவில்லை. எண்ணமெல்லாம் அவனே! புத்தி பேதலித்தவள் போல், பேருந்தில் நடந்த சம்பவத்தையே நினைத்துக் கொண்டிருந்தாள். தடித்த வார்த்தைகளை விட்டவள் அதைக் கேட்டவன் நிலையை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கிறாள். மதியத்திற்கு மேல், தாக்குப் பிடிக்க முடியாது வீட்டிற்கு வந்தவள் விடாது அழுது கொண்டிருக்கிறாள். ரங்கம்மாள் கேட்டும் ஒன்றும் சொல்லவில்லை. 

 

பேருந்தை விட்டு இறங்கியவன் ஜடமாக இல்லம் வந்தான். குறும்புக்காரன் மனம் நொந்து திண்ணையில் அமர, அவனைப் பார்த்தபடி வண்டியைத் துடைத்துக் கொண்டிருந்தார் சேதுராமன். போன வேகத்தில் வந்த மகனைக் கண்டு, 

 

“என்னாடா, இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட.” விசாரித்தார் கோமளம். 

 

அவருக்கு எவ்விதப் பதிலையும் தராதவன், தன்னவள் பேசிய வார்த்தையோடு தன் சூழ்நிலையை நிறுத்தி விட்டான். சுற்றி அவளும், அவள் விட்ட வார்த்தைகளும் மட்டுமே ரீங்காரம் இட்டுக் கொண்டிருந்தது. பேச்சுக் கொடுக்காத மகன் அருகில் நின்றவர், அவன் முக வாட்டத்தை உணர்ந்து என்னவென்று கேட்க, உள்ளே சென்றவன் தான்… அன்றைய நாள் முழுவதும் அறையை விட்டு வெளி வரவில்லை. 

 

***

 

வந்த சூரியன், சிங்காரவேலனைப் பார்க்காமல் திரும்பிச் செல்கிறது. நிலவு தேவன் பூங்கொடியின் கண்ணீரைக் கண்டுவிட்டுத் திரும்புகிறான். இதுதான் இரண்டு நாள்களாக நடந்து கொண்டிருக்கிறது. வேலைக்குச் செல்லாது எந்நேரமும் அழுது வீங்கிய முகத்தோடு இருக்கும் பேத்தியிடம் எவ்வளவோ பேசிப் பார்த்து விட்டார் ரங்கம்மாள். வாய் திறந்து அவள் அழுகைக்கான காரணத்தைக் கூற மறுக்கிறாள். 

 

கழுகு போல், இவ்வீட்டையே வட்டமிட்டுக் கொண்டிருந்தவன் வராததை வைத்து இருவருக்குள்ளும் சண்டை என்று தீர்மானித்துக் கொண்டார். அவ்வளவு பெரிய கலவரம் நடந்ததற்குப் பின்னர் கூட, இவளைப் பார்க்காமல் இருந்திடாதவன் இப்போது இருக்கிறான் என்றால் பிரச்சினை பெரியது என்றும் அந்த முதியவருக்குப் புரிந்தது. 

 

சாப்பிடாமல் வீம்பு பிடிக்கும் பேத்தியை அதட்டி உருட்டிச் சாப்பிட வைத்தவர் பேரனுக்கு போன் செய்தார். நான்கைந்து முறை எடுக்காதவன், மனமிறங்கி அடுத்ததாக வந்த அழைப்பை எடுத்தான். 

 

“ரெண்டு நாளா வீட்டுப் பக்கம் வரதில்ல.”

 

“உடம்பு சரியில்ல.”

 

“நெசமாவா?”

 

“ம்ம்.”

 

“இப்போ உடம்புக்கு எப்புடி இருக்கு?”

 

“நல்லா இருக்கு.”

 

“உடம்பு நல்லா இருக்குன்னு நல்லாத் தெரியுது. சரி இல்லாதது உன் மனசு தான். என்னைக்கும், இந்த மாதிரி ஒத்த வார்த்தைல நீ என்கிட்டப் பேசுனது இல்ல.”

 

“இப்ப எதுக்கு போனப் போட்ட?”

 

“இங்க ஒருத்தி விடாம அழுதுட்டு இருக்கா… சாப்பிடாம, தூங்காம பைத்தியக்காரி மாதிரி இருக்கா…”

 

“அதுக்கு நான் என்னா பண்றது?”

 

“இதென்ன கேள்வி?”

 

“வேல இருக்கு, அப்புறம் கூப்பிடுறேன்.” 

 

ரங்கம்மாள் பேசப் பேச அழைப்பைத் துண்டித்தான். கைத் திரையில் அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் விழுந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வேண்டாத சிந்தனைகள். அதன் அழுத்தம் தாங்காது, அறையை விட்டு வெளிவந்தவனை மொத்தக் குடும்பமும் ஒரு மாதிரியாகப் பார்த்தது. அந்தப் பார்வைக்கான கேள்வி புரிந்தாலும், பதில் சொல்ல விரும்பாது பின்பக்கம் சென்றவன் கண்ணில் மாந்தோப்பு விழுந்தது. கூடிக் களித்துக் கொஞ்சிய இடம் ஊசியாய் குத்தியது. வந்த வழியே உள்ளே சென்றவன், தன்னை வட்டமடிக்கும் குடும்பத்தார்கள் பார்வைக்கு அஞ்சி திண்ணையில் வந்தமர்ந்தான்.

 

எங்கோ வெளிவேலைகளை முடித்துவிட்டு அப்போதுதான் வீட்டிற்கு வந்திருந்தார் சேதுராமன். மாமனும், மருமகனும் பார்த்துக் கொண்டார்கள். இருவரின் பார்வைகளும் சரியில்லை. இருவரும் ஒன்று போல் புருவத்தைச் சுருக்கினார்கள். உடல் இளைத்துக் காணப்படும் மாமனைச் சந்தேகக் கண்ணோடு பார்த்தான். முகம் சோர்ந்து இருக்கும் மருமகனைக் குழப்பமாகப் பார்த்தார் சேதுராமன். 

 

“உன் அண்ணன் மவனுக்கு என்னாவாம்? மூஞ்சிய ஒரு மாதிரி வச்சுக்கிட்டு ஒக்காந்து கெடக்கான்.”

 

“அதை எதுக்கு என்கிட்டக் கேக்குறீங்க?”

 

“அவன் உன் அண்ணன் மவன் தான…”

 

“அண்ணனே இல்லன்னு ஆயிடுச்சு. அண்ணன் மவன் மட்டும் எதுக்கு?”

 

“அம்புட்டுத் தூரம் போயிடுச்சோ?”

 

“என் பொண்ணு வேணாம்னு சொன்ன யாரும் எனக்கும் வேணாம்!”

 

“என்னையும் சேர்த்துச் சொல்றியா?”

 

சிறிதும் யோசிக்காது, “ஆமா. என் பொண்ணோட வாழ்க்கை கெட்டதுக்கு முதல் காரணம் நீங்கதான். என்னா நடந்துச்சுன்னு தெரியல. ரெண்டு நாளா விடாம அழுதுட்டு இருக்காளாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உங்க அம்மா போனைப் போட்டுச் சொன்னாங்க. நல்லா ஜோடிக் கிளியா சுத்திக்கிட்டு இருந்த புள்ளைங்க. உங்க கேடுகெட்ட செயலால, ஆளுக்கு ஒரு பக்கம் அழுதுட்டு இருக்குங்க. பண்ற எல்லாத்தையும் பண்ணிட்டு நல்லவன் மாதிரி வந்து கேக்குறீங்க? அவங்க எக்கேடோ கெட்டுப் போகட்டும். நீங்க நல்லாக் குடிச்சுட்டு ஆட்டம் போடுங்க.”

 

“நான் குடிச்சு ரொம்ப நாள் ஆகுது!”

 

“அதப்பத்தி எனக்கு என்னா கவலை?”

 

“வேணும்னு பிரச்சினை பண்ணிக் கண்ணாலத்த நிறுத்திட்டேன்னு நினைக்கிறியா?”

 

“வேணும்னு பண்ணிங்களோ, வேணாம்னு பண்ணிங்களோ… அதுல பாதிக்கப்பட்டது என் பொண்ணு…”

 

“உன் அண்ணனும், அவன் மவனுங்களும் பண்ணது சரியா?”

 

“சரின்னு நான் சொல்லல. அதுக்குன்னு நீங்க பண்ண எல்லாம் சரியாகிடாது. தப்புக்குத் தப்புச் சரியாப் பண்ணிட்டு, எதுவுமே பண்ணாத என் பொண்ணுக்கு எதுக்குத் தண்டனை குடுத்தீங்கன்னு கேட்குறேன்.”

 

சேதுராமன் அமைதியாகச் சென்று விட்டார். பக்கத்து வீட்டிற்குக் கேட்கும்படி கத்தி தான் பேசினார் அன்னம். அவர் வார்த்தைகள் யாவும் நீலகண்டனைச் சரியாக வந்து தாக்கியது. தங்கையின் கண்ணீரையும், தங்கை மகளின் கண்ணீரையும், துடைக்க முடியாத பாவியாக நின்றார். தூக்கி வளர்த்த பிள்ளையின் வாழ்க்கையைக் கெடுத்த குற்றம் நெஞ்சைக் குத்தியது. 

 

***

 

இரண்டு நாள்கள், நான்கு நாள்கள் ஆகிவிட்டது. அன்று அன்னம் பேசியதைக் கேட்ட சிங்காரவேலன், அதன் பின் இடிந்து அமர்வதை நிறுத்தி விட்டான். எதுவும் நடக்காதது போல், பழையபடி தன் வேலையைக் கவனிக்க ரைஸ்மில் சென்று விட்டான். ரங்கம்மாள் வழியாக, அவன் நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்டவள் விரக்தியாக வேலைக்குச் செல்லத் தொடங்கி விட்டாள். 

 

வீட்டிற்கு முன் இருந்த தண்ணீர் குழாய், கைப்படாமல் துருப்பிடித்துப் போனது. அவன் இல்லாத பந்தல் அழகிழந்து வரவேற்றது. சிமெண்ட் தரை கால் நோகச் செய்தது. ஆள் இல்லாத பேருந்து அவன் இல்லை என்றுரைத்தது. 

 

அவரவர் வேலைகளை அவரவர் கவனித்துக் கொண்டிருந்தனர். மனம் கேட்காத அன்னம் மகளைப் பார்க்க வந்தார். விலகி இருந்தவள், அன்னை மடியில் தலை சாய்த்துத் தன் பாரத்தை இறக்கினாள். கலங்கித் துடித்தவர் அந்தக் கோபத்தை எல்லாம் கணவரிடம் காட்டினார். குற்ற உணர்ச்சியில் தனக்குள் மருகிக் கொண்டிருக்கிறார் சேதுராமன். அனைத்தும் தெரிந்தும் ஒதுங்கி இருக்கிறார் நீலகண்டன். ஓயாது குத்திக் காட்டும் கோமளத்தின் வார்த்தையில், இன்னும் அந்த ஒதுக்கம் அதிகரித்தது.

 

மனம் கேட்காது, தங்கையின் மூத்த மகள் புவனாவிடம் மனதார மன்னிப்புக் கேட்டார். அதுவரை கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருந்த புவனா மனம் இறங்கி வந்துவிட, சிறு நிம்மதி அவர் மனத்தில். சாப்பிட வந்த மகனைப் பிடித்து வைத்துப் பூங்கொடி பற்றிப் பேசினார். 

 

ஓட்டைப் பானைக்குள், கூழாங்கற்கள் விழுந்தது போல் சலசலக்கும் அவன் வாய், அமாவாசை இருட்டுப் போல் அமைதியாக இருந்தது. இதுவே நீலகண்டனுக்கும், அவனது குடும்பத்தாருக்கும் பெரும் அதிர்வாக இருந்தது. மகளுக்காக ஒருமுறை அன்னம் கூடப் பேசிப் பார்த்து விட்டார். வாய்ப்பூட்டு போட்டு, அந்தச் சாவியை காதலியிடம் அன்றே கொடுத்து விட்டான் சிங்காரவேலன். 

 

***

“சிங்காரம்…” 

 

“சொல்லுங்கப்பா.”

 

“கணேஷ் அண்ணன் கடைக்கு அம்பது மூட்டை அரிசி ஏத்தணும்னு சொல்லி ரெண்டு நாள் ஆகுது. இன்னும் போகல.” 

 

“சாயங்காலம் ஏத்தி முடிச்சிடுறேன்.”

 

“என்னாதான்டா கேடு வந்துச்சு உனக்கு. யார்கிட்டயும் மொகம் குடுத்துப் பேச மாட்டேங்குற. சரியாச் சாப்பிடறது இல்லன்னு உங்க அம்மாக்காரி பொலம்பிக்கிட்டு கெடக்கா…. உனக்கும், பூங்கொடிக்கும் ஏதாச்சும் பிரச்சினையா?”

 

“இல்ல.”

 

“சொன்னா தானடா எங்களால என்னா பண்ண முடியும்னு யோசிக்க முடியும்.”

 

“நீங்க பண்ண வரைக்கும் போதும். உங்க மேல உள்ள பாசத்துல நான் பண்ணதும் போதும். அதோட விளைவைத் தான் இப்ப நான் அனுபவிச்சிட்டுக் கெடக்கேன்.” 

 

“நடந்தது நடந்து போச்சுடா… அன்னைக்கு அப்படி நடக்கும்னு நீயும் எதிர்பார்க்கல, நானும் எதிர்பார்க்கல. சேதுராமன் அப்புடிப் பேசப் போய் தான் எல்லாமே நடந்துச்சு. சும்மா என்னைய மட்டும் குத்தம் சொல்லிட்டு இருக்காத.”

 

“ஐயோ சாமிங்களா, ஆள விடுங்க. நான் என்னாமோ பண்ணிட்டுப் போறேன்.‌”

 

“இப்ப எதுக்குடா அப்பாகிட்டச் சத்தம் போடுற?”

 

“உங்கப்பாவ நான் ஒன்னும் சொல்லிடல.” 

 

“இப்ப அவன் என்னா சொல்லிட்டான்னு அவனை ஏசுற?”

 

கணக்கு எழுதிக் கொண்டிருந்த பேனாவைத் தூக்கி அடித்தவன், “இப்ப எதுக்கு மூணு பேரும் சுத்தி வளைச்சிக் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. எனக்கும் அவளுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை வரணும்னா, ஏதாச்சும் ஒரு உறவு இருக்கணும். அதைத்தான் அவ வேணாம்னு வெட்டி விட்டுட்டுப் போயிட்டால்ல. அது புரியாம, நான்தான் பைத்தியக்காரனாட்டம் சுத்திக்கிட்டு இருந்துருக்கேன். அவளைப் பத்தி யாரும் என்கிட்டப் பேசாதீங்க.” என்று எழுந்து சென்று விட்டான். 

 

“இவனை இப்படியே விடக்கூடாதுப்பா… இவன் இந்த மாதிரிப் பேசுற ஆள் கெடையாது.” என்ற கண்ணனின் பேச்சை ஆமோதிப்பதாகத் தலையசைத்த சரவணன், “பேசாம மாமா கிட்டப் பேசிடலாம். என்னா, நம்மளா போய் பேசுனா ரொம்ப எகிறிட்டு வருவாரு. சிங்காரத்துக்காகப் போய்தான் ஆகணும்.” என்றான். 

 

மகன்களின் பேச்சைச் சிந்தித்துக் கொண்டிருந்தார் நீலகண்டன். அவருக்கும் அந்த யோசனை இருக்கத்தான் செய்தது. சேதுராமன் மீது கோபம் இருந்தாலும், தங்கையின் பாராமுகமும், பூங்கொடியின் நிராகரிப்பும் அதை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்குச் சிரிப்புக்கும், குறும்புக்கும் சொந்தக்காரன், எதையோ பறி கொடுத்தது போல் உலாவிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியவில்லை. 

 

***

 

வீட்டு ஆண்கள் மீதுள்ள கோபத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவன் வேகத்தில் ‘சிவனே’ என்று அவன் போட்ட சாலையில் உறங்கிக் கொண்டிருந்த புழுதிகள் அனைத்தும் பறந்தது. வீட்டிற்கு வெளியே அமர்ந்து கதை அளந்து கொண்டிருந்த கிழவிகளின் கண்ணைப் பதம் பார்த்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு வாய்க்கு வந்த அனைத்தையும் வசைபாடிக் கொண்டிருந்தது அந்தக் கறை படிந்த பற்கள். எதையும் காதில் வாங்காது, பந்தயம் கட்டிய குதிரை போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தவன் வண்டி “சர்ர்ர்ர்” என்ற சத்தத்தோடு ரோட்டை உரசிக்கொண்டு நின்றது. 

 

அவன் கட்டுப்பாட்டையும் மீறி நின்ற வண்டியால், நிலைகுலைந்து போனவன் கீழே விழுவது போல் சாய, எதிரில் வந்து கொண்டிருந்தவள் ஓடி வந்தாள். அவள் ஓட்டத்தில் நிதானித்தவன், தன்னை நிலைநிறுத்திக் காப்பாற்றிக் கொள்ள, ஒரு வாரத்திற்குப் பின் பார்க்கிறாள் அவனை. திடீரென்று நடந்த சந்திப்பில் உள்ளம் தித்தித்தது. அவன் நினைவோடு வேண்டா வெறுப்பாக வந்து கொண்டிருந்தவள் விழிகளில் இன்று தான் ஆனந்தம். சற்றும் எதிர்பார்க்காத பூங்கொடி முகத்தில் அளவில்லாத புன்னகை. 

 

முதலில் அவன்தான் என நம்புவதற்கே நொடிகள் தேவைப்பட்டது அவளுக்கு. கண்டபின் ஆசையாகப் புன்னகைக்க, அவனின் பாராமுகம் சோதித்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டு, ஓட்டத்தைக் குறைத்து நடையைத் தொடர்ந்தவள், கிட்டத்தட்ட அவனை நெருங்கி விட்டாள். தன் பேச்சைக் கேட்காது, அவளைக் கண்டதும் எழுந்த உணர்வுகளைக் கண்டபடி திட்டிக்கொண்டு வண்டியை இயக்க முயற்சித்தான். 

 

புத்தி தான் இயக்கச் சொல்கிறதே தவிரப் பிரிந்த மனம், உன்னவளை விட்டு விலகாதே என்றது. இரண்டிற்கும் நடுவில் சண்டை நடந்து கொண்டிருக்க, அவனை நெருங்கி விட்டாள். அதுவரை எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவன், அவள் வரவை அறிந்ததும் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, “டூர்ர்ர்” என முறுக்கிக் கொண்டு பறக்க, பூங்கொடியால் நம்ப முடியவில்லை அவன் செயலை. 

 

கண்ணீர் கரித்துக் கொண்டு வந்தது. ‘அப்படியே பூமி பிளந்து உள்ளுக்குள் சென்று விடமாட்டோமா’ எனத் துடியாய் துடித்தவள், ஒரே ஓட்டமாக ஓடினாள் வீட்டிற்கு. நேராகப் பின்பக்கம் சென்று துணி துவைக்கும் கல் மீது அமர்ந்தவளுக்கு, அக்னி குண்டத்தின் மீது அமர்ந்தது போல் இருந்தது. அன்று அவன் இந்த இடத்தில் செய்த கொஞ்சல்கள் மேனியைக் குத்தியது. பத்து விரல்களையும் முகத்தில் வைத்து அழுத்தமாக மூடிக்கொண்டு அழுதாள். 

 

“ம்க்கும்!” 

 

செருமல் சத்தத்தில் அழுகை நின்றது. விரல்களை விலக்காமல், கேட்ட சத்தத்தை அலசிப் பார்த்தவள் முன்னே நின்று கொண்டிருப்பது அவன்தான். அவளைப் பார்க்காதவரை கட்டுக்கோப்பாக இருந்த அந்த மானங்கெட்ட மனம், பார்த்த பின் பழையபடி ஓடி வந்துவிட்டது. அதுவும் அவள் கண்ணில் தெரிந்த ஏக்கமும், தனக்காகத் தேங்கி நின்ற கண்ணீரும் அவள் வசமே கொண்டு வந்து விட்டது. 

 

அவன்தான் எனக் கண்டு கொண்டபின், நிறுத்தி வைத்த அழுகை வெடித்துச் சிதறியது. மனம் பொறுக்க முடியாது, அழுது கொண்டிருந்தவளை நெருங்காது தள்ளி நின்று கொண்டிருந்தவன், “இந்தாடி! எதுக்கு இப்ப முக்கி முக்கி அழுதுகிட்டுக் கெடக்க… பாக்குறவன், நான்தான் ஏதோ பண்ணிப்புட்டேன்னு நெனைப்பானுங்க. சும்மாவே நான் உன்ன அது பண்ணிட்டேன், இது பண்ணிட்டேன்னு நொட்டம் சொல்லிக்கிட்டு இருக்க. இதுதான் சாக்குன்னு எனக்குப் பொறுக்கிப் பட்டத்தைக் கட்டிடாத.” எனப் பேசிக் கொண்டிருந்தவன் வாய், தன்னால் மூடியது அவள் பார்த்த பார்வையில். 

 

கண்களில் ரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.‌ அவன் வார்த்தைக்குப் பின்னான வலிகளை உணர்ந்தவளுக்குச் சொல்லில் அடங்காத குற்ற உணர்வு. அதன் அழுத்தம் தாங்காமல், பார்த்துக் கொண்டிருந்தவள் உதடுகள் விம்மி அழத் துடித்தது. அதுவரை தள்ளி நின்று கொண்டிருந்தவன், ஆவேசமாக நெருங்கி அணைக்கச் செல்வதற்குள் வயிற்றோடு முகம் புதைத்து இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். 

 

பெரிய ஐஸ் கட்டிக்கு மேல் நிற்க வைத்தது போல், உச்சி மண்டையில் ஜிவ்வென்ற உணர்வு சிங்காரவேலனுக்கு. பிரிந்திருந்த நாள்களில் உருவெடுத்த ஏக்கமும், துக்கமும் இருந்த தடம் தெரியாமல் காணாமல் போனது. 

 

“சாரி மாமா…”

 

காதலில் இருக்கும் வித்தையே இதுதான்! 

வலியைக் கொடுக்கும் அந்த மனம் தான் 

அதைத் தீர்த்தும் வைக்கும்!

நேசித்த அந்த மனம் தான் 

நோகடிக்கவும் செய்யும்! 

விலக வைத்த அதே மனம் தான் 

நெருக்கம் காட்டி மயக்கும்!

வேண்டாம் என்ற அனைத்தையும் 

வேண்டியதாக எண்ண வைக்கும் அந்த மனம்! 

வேண்டிய அனைத்து உறவையும் 

தூக்கி அடித்துத் தான் தான் என 

நம்ப வைக்கும் அசாத்தியத் திறமை 

அந்தக் காதலித்த மனதிற்கு உண்டு! 

 

அரும்பு மீசைக்குள் ஒளிந்திருந்த இதழ்கள் ரகசியமாக விரிந்தது. தன்னவளின் ஏக்கத்தைக் கண்ணாரக் கண்டவனுக்குப் புல்லரிப்பு. இதுபோன்ற அன்பான அணைப்பை அவன் உணர்ந்து எத்தனை நாள்கள் ஆயிற்று. அத்தனைக்கும் மகுடமாக மாறிய இந்த அணைப்பை ஏற்று முழுதாக மகிழ்வதற்குள், அடுத்த அதிர்வை அவனுக்குள் இறக்கினாள் பூங்கொடி.

 

அணைப்பிலிருந்து விலகாமல், அவன் சட்டைக் காலரை இழுத்துத் தனக்குச் சரி சமமாகக் குனிய வைத்தவள், முகம் முழுவதும் முத்தமிட்டாள். முத்தத்தின் வேகம் சற்று அதிகமாகத்தான் இருந்தது. இருந்தும் சுகமாக இருந்தது சிங்காரவேலனுக்கு. பற்கள் தெரிய நன்றாகப் பளிச்சிட்டுச் சிரித்தவன், கொடுத்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டிருக்கும் அவள் செயலில் குதூகலமானான். 

 

போதும் என்றவரை, ராட்டினமாக அவன் முகத்தைச் சுற்றி வந்து எச்சிலால் ஈரம் செய்தவள் அடுத்துச் செய்ததுதான் பெரும் அதிசயம். விரிந்து புன்னகைத்துக் கொண்டிருந்த இரு இதழ்களையும், அவன் எதிர்பார்க்காத நேரம் தன் இதழுக்குள் இழுத்துக் கொண்டாள். கண்கள் விரிந்த நிலையில் அவன் இருக்க, தனக்கானதைப் போதும் என்ற வரை எடுத்துக் கொண்டவள் உதறித் தள்ளினாள்.

 

அவள் வசம் இருந்தவன், அந்தச் சிறு தள்ளலைத் தாங்க முடியாது காற்றில் ஆடும் காத்தாடி போல் வளைந்து நெளிந்து, இரு அடி தள்ளிச் சென்று நின்றான். இவன் முகத்தில் உண்டான எந்த அதிர்வும் அவள் முகத்தில் இல்லை. 

 

“இந்த முறை நான் எதுவும் பண்ணல.” 

 

“சந்தோஷம்!”

 

“நான் இல்லாம ரொம்பச் சந்தோஷமா இருந்த போல.”

 

“ரொம்ப…”

 

“மூஞ்சிலயே தெரியுது!”

 

“அங்க மட்டும் என்னா வாழுதாம்?”

 

“ஹலோ மேடம்! நாங்க ஒன்னும் உங்களை நெனைச்சுகிட்டுக் கெடக்கல. நடு ரோட்ல நின்னு கண்ணு கலங்கிட்டு இருந்தியேன்னு பாவம் பார்த்து வந்தேன். வந்த இடத்துல கதறக் கதறக் கடிச்சு இழுப்பன்னு கனவா கண்டேன்.” 

 

நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு, அவன் பிரிவின் துயரைத் தாங்காது தாவியணைத்தவள் முறைத்தாள். அதில் பயம் கொள்ளாது, “இன்னொரு தடவை இந்த மாதிரி எல்லாம் பண்ணாத. உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லன்னு ஆகிடுச்சு. நீ பாட்டுக்கு அது இது பண்றன்னு, என் வருங்காலப் பொண்டாட்டி கிட்டச் செருப்படி வாங்க வச்சிடாத.” என்றதும் முறுக்கிக் கொண்டது பூங்கொடியின் கோபம். ‌ 

 

பக்கத்தில் இருந்த மக்கைத் தூக்கி அடித்து, “உன்னப் போய் திட்டிட்டோம்னு ஃபீல் பண்ணேன் பாரு, என்னைச் சொல்லணும். போ… போய் எவளையாது கட்டிக்க. தொல்ல விட்டுச்சுன்னு நிம்மதியா இருப்பேன்.” 

 

“சரிதான் போடி!” எனத் தெனாவட்டாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவன் செல்ல, கோபத்தில் மூக்கு குடைமிளகாய் அளவிற்குப் புடைத்தது. திரும்பிப் பார்க்காமலே அவள் நிலையைக் கணித்தவன் அங்கிருந்த கண்ணாடியைப் பார்த்து, 

 

“எத்தனை நாள் வெறியில இருந்தான்னு தெரியலயே.” என்றிட, இரும்பு வாளி என்றும் பார்க்காது அவன் மீது வீசி அடித்தாள். 

 

சாதுரியமாக அதிலிருந்து தப்பித்தவன், “என் வீட்டுல இருந்து யாராது வந்து என் புள்ளையை என்னாடி பண்ணன்னு கேப்பாங்க. கடிச்சு இழுத்துக் கற்பழிக்கப் பார்த்தேன்னு உண்மைய ஒத்துக்கிட்டு, நமக்குள்ளயே முடிச்சிடு. இல்லன்னா, விவகாரம் வெளிய தெரிஞ்சு எவனும் எனக்குப் பொண்ணு தராமல் போயிடப் போறான்.” என்றவனை இந்த முறை எதைக் கொண்டும் அடிக்காமல் அவளே விரட்டிக் கொண்டு சென்றாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்