கண்ணாலம் 7
காலை உணவைக்கூட மறுத்து விட்டாள் பூங்கொடி. காதலன் மீது கோபம் வருவதற்குப் பதில் தன்மீதே பொத்துக் கொண்டு வந்தது கோபம். அறையை விட்டு வெளி வராமல் இருந்தவளை, நொடிக்கு ஒரு முறை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் சிங்காரவேலன்.
“என்னா பண்ண அவள?”
“சிவனேன்னு ஒக்காந்து கெடக்குறவனக் கேக்குற.”
“அதான்டா என் சந்தேகமே. நீ இப்புடிப் பதமா ஒக்காந்து கிடக்கிற ஆளு இல்லையே.” என்றதும் அவனின் அக்மார்க் திருட்டு முழியைக் காட்டினான் ரங்கம்மாளுக்கு.
“என்னாத்தயோ பண்ணிப்புட்டு நல்லவன் கணக்கா ஒக்காந்து கெடக்க.”
“சத்தியமா இல்ல கெழவி, உன் பேத்தி தான் பண்ணா…” என்றதும் அறைக்குள் இருந்தவள் எட்டிப் பார்த்து முறைக்க, “ஈஈஈ…” பல் இளித்துக் குழைந்தான்.
அவளின் பார்வை தீவிரமடைவதை உணர்ந்து, “உன் பேத்திய அப்புடிப் பார்க்க வேணாம்னு சொல்லு கெழவி.” என அவர் தோளைச் சுரண்டினான்.
“தேச்சு தேச்சு ஜாக்கெட்டைக் கிழிச்சுடாத.”
“ரொம்பத்தான் ஆசை!”
“வீட்டுப் பக்கம் போறதா எண்ணம் இல்லையா?”
“இதுவும் என் வீடு தான!”
“இல்லன்னு சொன்னா சும்மா விடுவியா?”
“சும்மா பேசி வம்பு இழுக்காம, எதையாவது ஆக்கிப் போடு. பசி வயித்தக் கிள்ளுது.”
“பாட்டி! இது யாரோட வீடும் இல்ல, யாரும் இங்க ஒக்காந்து தின்னவும் கூடாது. கிளம்பிப் போகச் சொல்லுங்க.”
“உன் பேத்தி ரொம்பப் பேசுது.”
“இன்னும் கொஞ்ச நேரம் இங்க ஒக்காந்து இருந்தா, இதைவிட மோசமாப் பேசுவேன்.”
“இந்தாடி… என்னாத்துக்கு இப்போ எரிஞ்சு விழுற…”
“நீ பண்ண வேலைக்கு வேற எப்புடிப் பேசுவாங்க?”
“என்னாமோ வலுக்கட்டாயமா புடிச்சுப் பண்ண மாதிரிப் பேசுற. நீயும் தான பண்ண…” என்றதும் அவசரமாகப் பார்த்தாள் ரங்கம்மாளை.
பேச்சை வைத்து எடக்கு மடக்காக ஆகியிருக்கிறது என்பது புரிந்து நாசூக்காக எழுந்து சென்றுவிட்டார் முதியவர். அருகில் இருந்த தலையணையைத் தூக்கி அவன் மீது அடித்தவள், “புத்தி இருக்கா உனக்கு, அவங்க முன்னாடி பேசுற.” சிடுசிடுத்தாள்.
“ஏண்டி கூறுகெட்டவளே! நானாடி பேசுனேன்…”
“ப்ச்! முதல்ல கெளம்பு.”
“நான் ஒக்காந்து கெடந்தா உனக்கு என்னா பிரச்சினை?”
“நீ எதுக்கு இங்க இருக்க?”
“ஏன், இருக்கக் கூடாதா?”
“கூடாது!”
“ரொம்பப் பண்ணாத லாலா. நான் ஒன்னும் முத்தம் குடுக்கணும்னு குறி வச்சுத் தூக்கல. பேசணும்னு தான் வந்தேன். அங்க என்னையும் மீறி அப்புடி நடந்துருச்சு. அதுக்கு என்னாமோ ஓவராப் பேசுற. நீயும் தான குடுத்த. நான் என்னா உன்ன மாதிரி மூஞ்சத் திருப்பிக்கிட்டா கெடக்கேன்.”
“யாரு கண்டா! சும்மா தான கெடக்குறான்னு வந்தாலும் வந்திருப்ப…”
அவள் அடித்த தலையணையை எடுத்து வேகமாக வீசியவன், “பல்ல ஒடச்சிடுவேன். என் பொறுமைக்கும் எல்லை இருக்கு. நான்தான் சொல்றேன்ல, வேணும்னு பண்ணலன்னு.” என்றவன் குரலில் கோபம் துளிர்த்தது.
அதை அறிந்தவள் பேச்சைக் குறைத்துக் கொண்டு பழையபடி அமர்ந்து கொள்ள, கடுப்போடு அமர்ந்திருந்தான் சிங்காரவேலன். இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் இட்லியை எடுத்து வந்து வைக்க,
“ரெண்டு பேரும் சாப்பிட வாங்க.” என்றழைத்தார்.
கதவில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் வெடுக்கென்று எழுந்தான். சாப்பிடத்தான் வருகிறான் என முதியவர் தட்டை எடுத்து வைக்க, வேட்டியைத் தளர்த்தி இறுக்கமாகக் கட்டிய சிங்காரம்,
“அதை உன் பேத்திக்கே கொட்டு. ரொம்பப் பேசிக்கிட்டு கெடக்கா… வீட்டு வாசல்லயே வந்து கெடக்கவும், இளக்காரமா போயிட்டேன் போல. ஒக்காராத, தின்னாதன்னு சட்டம் பேசுறா.” என்றுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
செருப்பை அணிந்து கொண்டு இரண்டு அடி எடுத்து வைத்தவன் செவியில், “சாப்பிட்டுப் போ…” என்ற இரு வார்த்தை தேனாக ஒலித்தது. திரும்பாமல் அப்படியே நின்றவன் இதழ்கள் மெல்ல அசைந்தது.
தன்னவளிடமிருந்து இன்னும் வார்த்தைகளை வர வைக்க ஆசை கொண்டவன் காதில் வாங்காதது போல் நடந்தான். அவன் திருட்டுத்தனத்தை அறிந்து பல்லைக் கடித்தவள், “சாப்பிடாமல் போனா, இனி இந்த வீட்டுப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிடுங்க பாட்டி.” என்றாள்.
முறுக்கிக் கொண்டு நின்ற புது மாப்பிள்ளையைக் கெஞ்சிக் கூத்தாடி விருந்திற்கு அழைப்பது போல் பந்தாவாக வந்தமர்ந்தவன், “அவ சொன்னான்னு தான் வந்து ஒக்காந்தேன். அதுக்காக இந்தச் சிங்காரவேலன மானங்கெட்டவன்னு எண்ணிடாதீங்க.” என அத்தை மகளை ஓர விழியால் நோட்டமிட்டான்.
அவளோ அவன் பேச்சுக்கு வக்கணையாகக் கழுத்தைச் சுளுக்க, ‘என்னா பண்ணாலும் அழகா இருக்காப்பா…’ அந்த அழகை ரசித்தான்.
இட்லியை எடுத்து வைக்க வந்த ரங்கம்மாள் பாட்டியின் கையைப் பிடித்தவன், “ஹே… நீ போட்டுத் தின்னவா வேலை மெனக்கெட்டு வந்திருக்கேன். என் ஆளு வந்து போடுவா, நீ போ…” அவருக்கு மட்டும் கேட்கும்படி ரகசியமாகச் சொல்ல,
“ம்க்கும்!” கொனட்டி விட்டுச் சென்றார் முதியவர்.
இவர்கள் கூத்தை அறியாது, சாப்பிடுகிறானா என எட்டிப் பார்த்தாள். ஆளில்லாத இடத்தில், உணவோடு அப்பாவியாக அமர்ந்து இருந்தான் சிங்காரவேலன். அவள் பார்க்கும் நேரம் வயிற்றைத் தடவிப் பெருமூச்சோடு கண் மூடினான். பாட்டியை அழைத்தாள். அவர் அங்கு இருந்தால் தானே குரல் கொடுப்பார்.
“பசிக்குது!”
“எடுத்து வச்சுச் சாப்பிடு!”
“வேணாம். ஏற்கெனவே நீ ரொம்ப இளக்காரமாப் பேசுற. இதுல எடுத்து வச்சுச் சாப்பிட்டா இன்னும் பேசுவ… சாப்பிட வான்னு ஒக்கார வச்சு அசிங்கப்படுத்துறீங்க. ராத்திரி வேற சரியா சாப்பிடல.”
வீம்பை விட்டு எழுந்து வந்தாள். உள்ளுக்குள் குதித்துக் குத்தாட்டம் போட்டான். மறைத்து வைத்தாலும் கண்கள் காட்டிக் கொடுத்தது அவன் மகிழ்வை. அதைக் கவனித்தவள் கவனிக்காதது போல் சாப்பிட எடுத்து வைக்க, அவள் பக்கம் நகர்ந்து வந்தவன், அவள் முறைத்த முறைப்பில் பழைய இடத்திலேயே அமர்ந்து கொண்டான்.
“நீ சாப்பிடல?”
“வேணாம்.”
“தனியா சாப்பிட ஒரு மாதிரி இருக்கு. நீயும் சாப்பிடு.”
“பசிக்கல.”
“சரி, அப்போ எனக்கும் வேணாம்.” என எழுந்தவன் கைப்பிடித்தவள், “ஒக்காரு!” என்றிட, அதை உணரும் நிலையில் இல்லை சிங்காரவேலன்.
அத்தை மகள் கைப்பிடித்த அந்த நொடியே எகிறிக் குதித்த அவன் இதயம் கொளுத்திக் கொண்டிருக்கும் சூரியனுக்கு மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து விட்டது. இன்றைய நாள் அதிர்ஷ்டமான நாள் சிங்காரத்திற்கு. காலையிலிருந்து நடப்பதெல்லாம் அவன் வசம் இருக்க, அவளைத் தன்வசம் ஆக்கியதை எடுத்துரைத்தது அனைத்தும்.
அசையாது நிற்பவன் செயலில் தான், தன் செயலை உணர்ந்தாள் பூங்கொடி. கரண்ட் கம்பியில் கை வைத்தது போல் சட்டென்று எடுத்தவள், தனக்கான தட்டில் இட்லியை வைத்துச் சாப்பிடத் தொடங்கினாள். கை தொட்டதும் உறைந்தவன், அவை விலகியதும் உணர்வுகள் திரும்பிப் புன்னகைத்தான். தலை குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அந்தப் புன்னகை அவளை வந்தடைந்தது. உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தவளை உரசிக்கொண்டு அமர்ந்தான்.
எந்த நிராகரிப்பும் இல்லை அவளிடம். அதில் இன்னும் உற்சாகம் கூடி, “அழகு லாலா…” எனக் கன்னம் கிள்ளினான்.
அதற்கு மட்டும் முறைப்பைக் கொடுத்தாள் பூங்கொடி. அர்த்தமில்லாத முறைப்பு ஒன்றும் செய்யவில்லை அவனை. வெகு நாள்களுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். அதுவும் நல்ல மாற்றத்தோடு. அந்த இனிமையான தருணத்தை முழுதாக அனுபவித்தான்.
எளிமையான உணவும் அமிர்தமாகத் தெரிந்தது. அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இது வேண்டும், அது வேண்டுமென்று இம்சை செய்து நேரத்தைக் கடந்தான். நேரம் கழித்து வீட்டிற்கு வந்த ரங்கம்மாள், இதைப் பார்த்துவிட்டு வந்த வழியே திரும்பிச் செல்ல, அவன் வயிற்றையும் மனத்தையும் நிறைத்தாள் பூங்கொடி.
சும்மாவே தேன் எடுக்கும் வண்டாகச் சுற்றி வருபவன், இந்த நாளைச் சும்மா விடுவானா! பூங்கொடி செல்லும் இடத்திற்கெல்லாம் வால் போல் சென்று கொண்டிருந்தான். திட்டியும், அதட்டியும் சோர்ந்து போனவள் ஏன் தான் சாப்பிட அழைத்தோமோ என்று நொந்து போகவே ஆரம்பித்து விட்டாள். அதற்கெல்லாம் பெரிதாக அலட்டாத சிங்காரம், தண்ணீர் குடத்தை எடுத்துக் கொண்டு செல்பவள் பின்னால்,
“தண்ணி தூக்குற தங்கரதமே,
உன்னத் தூக்கிட வரலாமா.” பாடிக்கொண்டு சென்றான்.
தண்ணீர் பிடிக்க அவர்கள் இருக்கும் தெருமுனைக்குச் செல்ல வேண்டும். பாடிக்கொண்டு செல்லும் இவனையும், அடிக்கடி முறைக்கும் அவளையும் அங்கிருந்த ஒரு சிலர் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவ்வழியாகச் சென்ற சேதுராமன் முறைத்துக் கொண்டு சென்றார்.
“போறான் பாரு ஓணான் மண்டையன்.”
சேதுராமன் காதில் விழுவதற்குப் பதில், அவரின் மகள் பூங்கொடி காதில் விழுந்து விட்டது. வெடுக்கென்று திரும்பியவள் புசுபுசுவென்று முறைத்தாள். சிரித்துக் கொண்டிருந்தவன் வாலைச் சுருட்டிக் கொண்டு பாவமாக நின்றான். சட்டு சட்டென்று முகம் மாற்றும் மாமன் மகனைக் கேவலமாகப் பார்த்தவள்,
“என்னைக்கும் திருந்த மாட்ட.” என்று விட்டுப் பழையபடியே நடந்தாள்.
“ம்ம்… அப்பனே வேணாம்னு சொல்லிப்புட்டு முறைக்கிறா பாரு.”
பதில் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். அவளை முந்திக்கொண்டு முன்னால் சென்றவன், “அப்பன் மேல அம்புட்டுப் பாசம் இருக்கும்போது எதுக்காக வெட்டிவிட்டு வரணும்? அவரும் ரொம்பப் பாவம். நீ போனதுல இருந்து மூஞ்சே சரியில்லாமல் சுத்திக்கிட்டு கெடக்காரு.” எனச் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கப் பற்றி எரிந்தது அவள் மனம்.
“நான் சொன்னேனா அவர் மேல பாசம்னு. என்னைப் பத்தி யோசிக்காதவங்க மேல எனக்கு என்னா பாசம்? அவரு எப்படி இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. அவரு மட்டும் இல்ல நீயும்! சும்மா அதை இதைப் பேசி என்னை வெறுப்பேத்திட்டு இருக்காத. ஏதோ பசிக்குதுன்னு சொன்னதுனால தான் உன் பக்கத்துல ஒக்காந்து சாப்பிட்டேன். இதையே சாக்கா வச்சுக்கிட்டு ரொம்ப உரிமை எடுத்துக்காத.”
“இந்தாடி…”
“ப்ச்! சும்மா தொல்லை பண்ணாமப் போ.”
“உங்கப்பன் ஓணான் மண்டையனப் பத்தி இனிப் பேச மாட்டேன். சும்மா சிடுசிடுன்னு கெடக்காத.”
“திடீர்னு உனக்கென்ன அவர்மேல பாசம்.”
“ஏன் இருக்கக் கூடாதா?”
“அவரப் பார்த்தாலே அடிக்கணும் போல இருக்குன்னு சொல்லுவ.” என்றவள் அல்பமாக முறைத்து, “அடிச்சவன் தான…” என்றாள்.
உள்குத்தோடு பேசும் காதலியின் பேச்சை உள்மனம் வரை கொண்டு செல்லாது, “ஆயிரம் இருந்தாலும், அவர் என்னோட மாமா… அவருக்கு ஒன்னுனா மருமவன் நான்தான வந்து நிக்கணும்.” என்றான்.
“த்தூ…”
காறித் துப்பியவளைச் சிங்காரம் முறைக்க, மீண்டும் இவர்களைக் கடந்து சென்றார் சேதுராமன். போகும்பொழுது இருந்ததை விட வரும்பொழுது முகம் சோர்ந்து இருப்பதாக உணர்ந்தவன் மாமன் மீதான யோசனையில் அப்படியே நின்றிருக்க, விட்டது தொல்லை என்று நிம்மதியாகத் தண்ணீர் பிடிக்கச் சென்றாள் பூங்கொடி.
***
“எங்கடா இருக்க?”
“தோட்டத்துல!”
“வீட்ல இப்ப யாரு இருக்கா?”
“அம்மாவும், புவனாவும் இருப்பாங்க.”
“சரி!”
“எதுக்குக் கேக்குற?”
“ஒன்னும் இல்ல. உன் மாமனார் முகமே சரியில்ல, அதான் என்னா ஏதுன்னு கேட்கச் சொல்லலாம்னு கேட்டேன்.”
“திடீர்னு உனக்கு என்னடா அவர் மேல அக்கறை?”
“என்னாடா, எல்லாரும் இதே கேக்குறீங்க. மாமனாருக்கும், மருமவனுக்கும் ஆயிரம் இருக்கும். நாங்க இன்னைக்கு அடிச்சுப்போம், நாளைக்குக் கூடிப்போம்.”
“பூங்கொடி உன்னை அலைய வைக்கிறதுல தப்பே இல்ல.”
“என்னாவாம்?”
“பின்ன… அன்னைக்கு எட்டி மாமனார் நெஞ்சுல உதைச்சிட்டு, இன்னைக்கு வக்கனையாப் பேசிட்டு இருக்க.”
“உனக்கு போன் பண்ணது தப்பாப் போச்சு. நான் புவனா அண்ணிகிட்டயே பேசிக்கிறேன்.”
“உன்கிட்டயாவது பேசுறாளான்னு பாரு.” என நொந்து கொண்டு கூறினான் கண்ணன்.
“என்கிட்டப் பேசுவாங்க. ஜென்மத்துக்கும் இனி உன்கிட்டத் தான் பேச மாட்டாங்க.”
“ஏன்டா?”
“மாமா முகமே சரி இல்ல, என்னா ஏதுன்னு கேளுடான்னு சொன்னதுக்கு, அவர் மேல உனக்கு எதுக்கு அக்கறைன்னு கேட்கிறான் அண்ணின்னு சொல்லுவேன்.”
“அடப் படுபாவிப்பயலே! உன்னால தான்டா எனக்கும் அவளுக்கும் வாய்க்கா தகராறு ஓடிக்கிட்டுக் கெடக்கு. அதை மொத்தமா முடிச்சு வைக்கப் பாக்குறியே, மனசாட்சி இருக்கா உனக்கு.” எனப் புலம்பிக் கொண்டிருக்கும் அண்ணனின் பேச்சைக் கேட்டுக் கொண்டே நடந்து வந்தவன் விழிகளில், வெட்ட வெயிலில் தண்ணீர் குழாயோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் பூங்கொடி விழுந்தாள்.
காட்டுக் கத்தலாகக் கத்திக் கொண்டிருக்கும் அண்ணனின் அழைப்பைத் துண்டித்தவன், “ஓய்! எதுக்கு அதுகூடச் சண்டை போட்டுக்கிட்டு இருக்க.” கேட்டான்.
தண்ணீர் வராத கடுப்பில் அதைப் போட்டு மாங்கு மாங்கென்று அடித்துக் கொண்டிருந்தவள், இவன் கேட்ட கேள்வியில் எரிச்சலாகி, “ஹான், வேண்டுதல்!” என்றாள்.
“யப்பா!”
“ஹான்?”
“ஒன்னும் இல்ல.”
பூமிக்குக் கீழிருந்து வரும் தண்ணீரும் சதி செய்ய, மேலே அமர்ந்திருந்த சூரியனும் சதி செய்தான். வெயிலின் தாக்கத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தண்ணீர் குழாயை அடித்தடித்துக் கை வலி ஆரம்பித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், தான் அடித்துத் தருவதாகக் குழாயின் பிடியில் கை வைக்க, “தேவையில்லை!” அதைத் தட்டிவிட்டு இன்னும் வேகமாக அடிக்க ஆரம்பித்தாள்.
வேர்வைத் துளிகள், மலை உச்சியில் இருந்து கொட்டும் அருவி போல் அவள் நெற்றியில் ஆரம்பித்துப் பாதத்தில் வந்து கொட்டியது. எரிச்சலில் முகத்தைச் சுருக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அள்ளிக் கொண்டை இட்ட கூந்தல், அவள் ஆட்டம் தாங்காது கழன்று தோளில் விழ, உச்சக்கட்ட எரிச்சலில் குழாய் பிடியைப் போட்டவள், ஈசனின் கொண்டை முடிபோல் நடுமண்டையில் தூக்கி நிறுத்தினாள்.
கைகள் மேல் உயர்ந்ததும் தாவணிக்குள் ஒளிந்து கொண்டிருந்த இடை தெரிந்தது. சின்ன இடமாக இருந்தாலும் அதன் மீதுதான் நம் நாயகனுக்குப் பெரும் கண். ஒவ்வொரு முறையும் அவன் மோகத்திற்கு வழிவிடும் முதல் இடம் இடை. அவளை நகர விடாது சேர்த்தணைக்கும் தன் கைகளுக்கு நல்ல துணை.
அந்த இடையோடு, மனத்தைச் சேர்த்து வைத்துச் சிலாகித்துக் கொண்டிருந்தவன் எண்ணம் ‘சப்’ என்றானது கைகள் இறங்கியதில். மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்ற ஏக்கத்தில், அவள் இடைமீது இரு கண்களையும் பதித்தான். மீனிற்குக் காத்திருந்த கொக்காக அவன் இருக்க, திரை போட்டு மறைக்கும் தின்பண்டமாக அவள் இருந்தாள்.
காதலியை அங்கமங்கமாக ரசித்துக் கொண்டிருந்தான். கால் நகங்களில் பாதி அழிந்திருந்த நகப்பூச்சியில் இருந்து, இடையில் சொருகி இருந்த பாவாடை வரை நோட்டமிட்டுக் கொண்டிருந்தவன் மண்டையில் பளிச்சென்று பல்பு எரிந்தது. பூங்கொடி கோபித்துக்கொண்டு சென்றதிலிருந்து இன்றைக்குத்தான் தாவணி, பாவாடை அணிந்திருக்கிறாள். இவ்வளவு நேரம் அந்தப் பெரிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடிக்காமல் மடத்தனமாகப் பின்னால் அலைந்து கொண்டிருந்தவன் மனசாட்சி காறித் துப்பியது.
குஷியாக இருந்த மனநிலை, இன்னும் குஷியாகிக் கொண்டாட்டம் செய்தது. மெல்ல மாறிவரும் காதலியின் மனத்தை ஆக்கிரமித்த கள்வன், இடையைத் தாண்டி ரசிக்கத் தொடங்கினான். பூங்கொடியின் முகத்தில் இருக்கும் வேர்வையில் முகம் சுருங்கியவன், ‘இங்கேயும் பந்தல் போட்டிருக்க வேண்டுமோ?’ எனத் தாமதமாக வருந்தினான்.
கொளுத்தும் வெயிலோடு உறவாடிக் கொண்டிருக்கும் வேர்வைத் துளிகளை, ஒரு கையால் துடைத்துவிட்டுப் பெருமூச்சு விட்டவள் மேல் நிழல். உடனே அண்ணாந்து பார்த்தவள் தன் பக்கத்தில் இருப்பவனைத் திரும்பிப் பார்த்தாள். மேல் சட்டையைக் கழற்றித் தன்னவளுக்குப் பந்தலாக உயர்த்திப் பிடித்திருந்தான்.
சூரியனைத் தோற்கடிக்கும் அளவிற்கு வெளிச்சமாகச் சிரித்தவன் கண்களைச் சிமிட்டிட, இவளது கண்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தது. கை நோவும், வெயிலின் எரிச்சலும் காணாமல் போனது. அதுவரை வம்படியாக வர மறுத்த தண்ணீர், வரமாகக் கொட்டியது போல் இருந்தது பூங்கொடிக்கு. குடம் நிரம்பியதும் தெரியவில்லை, மனம் அவன் வசம் சென்றதும் புரியவில்லை.
தன் மீதான பார்வையை மாற்றாமல், வேலை செய்து கொண்டிருக்கும் தன்னவளை அன்பொழுகப் பார்த்தவன், உதடு குவித்து முத்தம் ஒன்றைக் கொடுக்க, கண்களால் அதை வாங்கிக் கொண்டாள். ஊர் மறந்து, இருக்கும் இடம் மறந்து, ஒருவரை ஒருவர் கண்களால் கைது செய்து கொண்டிருந்தனர். அந்நேரம், மீண்டும் தன் இருசக்கர வாகனத்தில் வந்த சேதுராமன் பார்வையில் இவை விழுந்தது.
மகள் மீதான பார்வையை விட, மருமகன் மீதான பார்வை தான் அதிகமாக இருந்தது. ஒரு நொடி வேகத்தைக் குறைத்து நின்று அவனைப் பார்த்தவர், நின்ற தடம் தெரியாமல் கிளம்பி விட்டார்.
***
“அத்த…”
“என்னாப்பா?”
“மதியம் என்னா சாப்பாடு?”
“பூங்கொடி போனதுல இருந்து நல்ல சோறு செஞ்சு நாள் ஆகுது. இருக்கறத வச்சுத் தள்ளிக்கிட்டுக் கெடக்கேன்.”
“இப்புடி இருக்காதீங்கன்னு அன்னைக்குத் தான சொன்னேன். அவ அங்க நல்லா சாப்பிட்டுகிட்டுத் தெம்பா தான் இருக்கா… நீங்கதான் அவளை நெனைச்சுக்கிட்டு மெலிஞ்சு போய் இருக்கீங்க.”
“புள்ள சாப்பிடுறதைக் கண்ணு வைக்காதடா.”
“அதுசரி! எங்க உங்க வீட்டுக்காரரைக் காணோம்.”
“இப்ப எதுக்கு அவரைக் கேக்குற?”
“இந்த ரோட்டுக்கும், அந்த ரோட்டுக்கும் ஓட்டப்பந்தயம் ஓடிக்கிட்டு இருக்காரே, அதான் என்னா விவரம்னு கேட்க வந்தேன்.”
“அது தெரியல சிங்காரம். வீட்டை விட்டுக் கிளம்புனவரு கொஞ்ச நேரத்துல திரும்பி வந்தாரு. உள்ள கூட வராம திண்ணையில ஒக்காந்துட்டுத் தண்ணி கேட்டாரு. குடிச்சிட்டுக் கொஞ்ச நேரம் இருந்தவரு திரும்பக் கிளம்பிட்டாரு.”
“ஓஹோ!”
“எதுனா செஞ்சுட்டாரா?”
“அதெல்லாம் இல்ல அத்தை. அவர் முகம் ஒரு மாதிரி இருந்துச்சு.”
“நல்லா தான இருந்துச்சு.”
“அப்புடியா…”
“கட்டுனவ எனக்குத் தெரியாதா?”
“எனக்கென்னமோ வித்தியாசமாத் தெரிஞ்சுது அத்த.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லடா.”
“ம்ம்…” என யோசனையில் அமர்ந்திருந்தவனைக் கத்தி அழைத்தார் நீலகண்டன். அத்தை வீட்டை விட்டு நகராது அங்கிருந்து என்னவென்று கேட்க,
“கொழுப்பைப் பார்த்தியா உன் மவனுக்கு. எல்லாம் நீ குடுக்கிற செல்லம்.” முணுமுணுத்தார் கோமளத்திடம்.
“இப்ப எதுக்கு என்கிட்டப் பாயுறீங்க? உங்க தங்கச்சி வீட்ல போய் ஒக்காந்து கெடக்குறது அவன். பேசிகிட்டு இருக்குறது உங்க தங்கச்சி. நடுவுல சும்மா இருக்க என்னை எதுக்கு இழுக்கறீங்க.”
“அவனக் கூப்பிடு!”
“நீங்க கூப்பிட்டே வரல, நான் கூப்பிட்டு வந்துடுவானா?”
“கட்டுனதும் சரியில்ல, பெத்ததும் சரியில்லை.”
“இதே எண்ணம் தாங்க எனக்கும்…” என்றதும் மனைவியை முறைத்தவர் மீண்டும் மகனை அழைத்தார்.
இரண்டாவது முறையாகக் கேட்கும் அண்ணன் குரலில், “உங்கப்பனுக்கு நீ இங்க ஒக்காந்து இருக்குறது புடிக்கல. மொத்தமா உறவை வெட்டிவிடப் பார்க்குறாரு. அவரே வேணாம்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம், நான் என்னா கெஞ்சிகிட்டா கெடக்கப் போறேன். கெளம்பிப் போப்பா உன் வீட்டுக்கு.” என முறுக்கிக் கொண்டு உள்ளே சென்று விட, அமைதியாகத் தன் இல்லத்திற்குள் கால் வைத்தான் சிங்காரவேலன்.
“அவன் நம்மளை எவ்ளோ அசிங்கப்படுத்தி இருக்கான், அவன் வீட்ல போய் ஒக்காருற. என் மானத்தை வாங்கவே பண்ணிக்கிட்டு இருக்கியா? ஏதோ நீ ஆசைப்பட்டியேன்னு பூங்கொடி பின்னாடி போறதைப் பார்த்துட்டு சும்மா இருக்கேன். அதையே சாக்கா வச்சு அவன் உறவை ஒட்ட வைக்க நெனைக்காத.”
“ஆமா, இவரு பெரிய பாளையங்கோட்டை மன்னரு, அவரு செங்கோட்டை அதிபதி. இவங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வச்சு மன்னார்குடிய வாங்க நெனைக்கிறாங்க.”
“எப்புடி மதிக்காமப் பேசுறான் பாரு.”
“மதிக்கிற மாதிரியா நீங்க நடந்துக்கிட்டீங்க. அவர் மேல எவ்ளோ தப்பு இருக்கோ, அதே அளவுக்குத் தப்பு நம்மளும் பண்ணி இருக்கோம். முதல்ல அன்னைக்கு நடந்த பிரச்சினைக்குக் காரணமே நீங்கதான். எங்கயோ எவன் கிட்டயோ குடிச்சு உளறி, அது என் கண்ணாலத்துல வெனையா வந்து நின்னுடுச்சு. என்னாமோ, தங்கச்சியைக் கண்டா ஆகவே ஆகாதுன்ற மாதிரிப் பேசுறீங்க. நாளைக்கே அவங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுனா முதல் ஆளா நீங்க தான் ஓடிப்போய் நிப்பீங்க.”
“நான் எதுக்கு நிக்கப் போறேன். என் தங்கச்சி மேல நிறையப் பாசம் இருக்கு தான். அதுக்காக அவன் கால்லலாம் என்னால விழ முடியாது.”
“நீங்க கால்ல விழுவீங்களோ, கட்டிப் புடிச்சு உருளுவீங்களோ… அது உங்க ரெண்டு பேரோட பிரச்சினை. நான் என் அத்தை வீட்டுக்குப் போவேன், வருவேன்… அதை நீங்க மட்டும் இல்ல, அந்த வீட்ல இருக்க மண்சட்டி மாமனார் கூடக் கேட்க முடியாது. சும்மா வாய்க்கு வந்ததைப் பேசிகிட்டுக் கெடக்காம, பூங்கொடி வீட்டு வாசல்ல தண்ணிக்குழாய் போடணும். அதுக்குக் காசு குடுங்க.”
“எது?”
“என் பொண்டாட்டி ஒரு தெரு தாண்டிப் போயி வெட்ட வெயில்ல தண்ணி அடிச்சிட்டு நிக்கிறா. அதைப் பார்க்க என் மனசுக்கு எவ்ளோ வலிக்குது தெரியுமா? இந்நேரம் தாலி கட்டித் தங்கத் தட்டுல வச்சுத் தாங்க வேண்டியவன், சட்டையைத் தூக்கிப் பிடிச்சுட்டு நிக்கிறேன்.”
“அதுக்கு, என் பணத்தைத் தூக்கிக் குடுக்கணுமா?”
“தூக்கி எல்லாம் குடுக்க வேணாம். எங்க இருக்குன்னு சொல்லுங்க, நானே எடுத்துக்குறேன்.”
“பார்த்தியாடி! உன் பையன் பேசுறதை.”
“அம்மா பாற்த்துட்டு தான் இருக்காங்க.”
“நக்கல் ரொம்பக் கூடிப்போச்சுடா உனக்கு.”
“உங்க புள்ளையாச்சே!”
“நீ என்னா பண்ணாலும், இனிமே ஒத்த ரூபா தர மாட்டேன். ஏற்கெனவே நிறையக் காசை எடுத்துட்ட. இப்புடியே போனா, குடும்பத்தோட நடுத்தெருவுல ஒக்கார வேண்டியதுதான்.”
“அப்போ தரமாட்டீங்க?”
“மாட்டேன்!”
“பாட்டி!” என சீதாலட்சுமியை அழைத்தான்.
“எல்லாச் சொத்தும் தாத்தா பேர்லதான இருக்கு?”
“ஆமாய்யா!”
“தாத்தன் சொத்துப் பேரனுக்குத் தான வரணும். உரிமையே இல்லாத இவர் எதுக்கு இந்த வீட்ல இருக்காரு? நான் சாப்பிட்டுக் குட்டித் தூக்கம் போட்டுட்டு வரேன். அதுக்குள்ள இவரை விரட்டி விட்டுடுங்க.” என்றவன் ரத்தக் கொதிப்பில் கத்திக் கொண்டிருக்கும் நீலகண்டனைச் சிறிதும் கண்டு கொள்ளாது சாப்பிட்டு விட்டுத் தூங்கச் சென்று விட்டான்.