Loading

அத்தியாயம் 20

 

காலையில் ரக்ஷனைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றனர் இராவும் அத்வைத்தும்.

 

அவன் இன்னும் மயக்கத்திலேயே இருக்க, அவனின் நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்தனர்.

 

“அவரோட கால்ல நிறைய இடத்துல தீக்காயம் பட்டிருக்கு. சோ, அதெல்லாம் ஆற எப்படியும் மாசக்கணக்குல ஆகும். மத்தபடி வைட்டல்ஸ் எல்லாம் ஸ்டேபில்லாதான் இருக்கு. இன்னைக்கு நைட்டுக்குள்ள எழுந்துட்டா பெட்டர்.” என்றார் அந்த மருத்துவர்.

 

மயக்கத்திலிருக்கும் ரக்ஷனைப் பார்த்த அத்வைத், “ரக்ஷனோட அம்மா அப்பா வரலையா?” என்று வினவ, “மாமா வந்துட்டே இருக்காங்களாம்.” என்ற இரா, ஒரு பெருமூச்சுடன், “அவங்க அம்மாக்கு, அவங்களோட சின்னப் பையனை பார்த்துக்கணுமாம்.” என்றாள் வெறுப்புடன்.

 

அதன்பிறகு, அங்கேயே அனுமதிக்கப்பட்டிருந்த தேவா மற்றும் வானதியையும் காணச் சென்றிருந்தனர்.

 

ரக்ஷனை விடவும் இருவருக்கும் பாதிப்பு குறைவு என்பதால் காலையில் அவர்களின் மயக்கம் தெளிந்திருந்தது.

 

அவர்கள் கண் விழித்ததிலிருந்தே, பார்ப்பவர்கள் அனைவரும், அவர்களை ஒரு மார்க்கமாக பார்த்து, ஒதுங்கி இருக்க, அதற்கான காரணத்தை அவர்களின் குடும்பத்தினர் பகிர்ந்திருந்தனர்.

 

அப்போதே, “இல்ல, எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல. நானா அவன் கிட்ட போகல.” என்று இருவருமே அதையே திரும்பத் திரும்ப சொல்லி சோர்வுற்றிருந்தனர்.

 

இப்போது இரா மற்றும் அத்வைத்தைக் கண்டவர்களுக்கு பய உணர்வே பிரதானமாக எழுந்தது.

 

இராவை அடித்து காயப்படுத்தி அல்லவா தப்பித்திருந்தனர்!

 

ஆனால், இராவிற்கோ சொந்தப் பிரச்சனையை தீர்க்கும் அளவிற்கு எல்லாம் நேரம் இருக்கவில்லை.

 

அவள் சூனியனைப் பற்றி வினவ, குடும்பத்தினரிடம் என்ன சொல்லியிருந்தனரோ, அதையே இராவிடமும் கூறினர்.

 

பொதுவாக வசியத்தில் இருப்பவர்களுக்கு, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது நினைவில் இருக்காது என்பதால் இரா அதைப் பெரிதாக எடுக்கவில்லை.

 

“கடைசியா உங்களுக்கு என்ன ஞாபகம் இருக்கு? எந்த இடத்துல இருந்தீங்க?” என்று இரா கேட்க, இருவருமே காட்டில் இருந்த நினைவைத்தான் கூறினர்.

 

அவர்களிடமிருந்து தகவலைப் பெற்ற பின்னர், கிளம்பும் சமயத்தில், “இரா என்னை மன்னிச்சுடு. உன்மேல இருந்த பொறாமைல என்னென்னவோ பண்ணிருக்கேன். அதோட, உன்னைப் பத்தி தப்பு தப்பா பேசியிருக்கேன். ஆனா, இப்போ எல்லாரும் சொல்லும் போதுதான் தெரியுது, நீ எவ்ளோ கஷ்டங்களை அனுபவிச்சுருக்கன்னு.” என்று மனதார மன்னிப்பு வேண்டினாள் வானதி.

 

அதற்கும் ஒரு விரக்தி சிரிப்பை பரிசளித்த இரா அங்கிருந்து வெளியேற, அதற்கான அர்த்தம் புரியாமல் மௌனமாகிப் போனாள் வானதி.

 

*****

 

மருத்துவமனைக்கு வெளியே வந்த இரா, ஏதோ மந்திரங்களை உச்சரித்து முடிக்க, “இங்க ஏன்?” என்றான் அத்வைத்.

 

“ஒருமுறை வசியத்துக்கு உட்பட்டவங்களை கட்டுப்படுத்துறது ரொம்ப ஈஸி. அந்த சூனியன் திரும்ப இவங்க மூணு பேரைக் கட்டுப்படுத்துறதை தடுக்கணுமே.” என்றாள் இரா.

 

“ஹ்ம்ம், அடுத்து எங்க?” என்று அத்வைத் வினவ, “காட்டுக்குத்தான்…” என்ற இராவைப் பின்தொடர்ந்தான் அத்வைத்.

 

இருவரும் காட்டின் பல இடங்களிலும் தேடி விட்டனர். அந்த சூனியனைப் பற்றி எந்த தகவலும் சிக்கவில்லை.

 

மரங்கள் அடர்ந்த காட்டில் உருவமுள்ள மனிதர்களை தேடுவதே சிரமம் என்னும்போது, உருவமில்லா அருவமானவனை அத்தனை எளிதில் கண்டுபிடித்திட முடியுமா?

 

இடையிடையே, அத்வைத் அந்தப் புத்தகத்தையும் ஆராய்ந்தான், சூனியனை அழிப்பதற்கான வழியைத் தேடி.

 

பல மணி நேர தேடுதல் தோல்வியில் முடிய, சோர்வுடன் வீட்டை நோக்கி நடைபோட்டனர் இருவரும். ஆதவனும் மேற்கே மறைய காத்திருந்தான்.

 

செல்லும் வழியில், “அந்த சூனியனை இவ்ளோ நேரம் தேடுனியே… என்ன பிளான் வச்சுருக்க ஸ்டார்லைட்?” என்று அதிமுக்கியமான கேள்வியை அவன் கேட்க, “இப்போதைக்கு எனக்கு இருக்க ஒரே வழி, அந்த புக்ல சொல்லப்பட்ட வழிதான் அத்து. ‘தியாகம்’!” என்றாள் இரா பெருமூச்சுடன்.

 

“இந்த தியாகத்துக்கு என்ன அர்த்தம்னு நினைக்கிற?” என்றான் அவன், அவளின் பேச்சில் உண்டான சிறு எரிச்சலுடன்.

 

“வசுந்தராம்மா மந்திர சக்திகளையும், அவங்க உயிரையும் தியாகம் செஞ்சுருக்காங்க. அது மூலமா, அந்த சூனியனை அவங்களோட மந்திரத்துக்குள்ள சிக்க வச்சுருக்காங்க. நானும் அதே போல மந்திர வலையை அவனுக்கு விரிச்சு, என் உயிரையும் தியாகம் செஞ்சு, அவனை அந்த வலைக்குள்ள சிக்க வைப்பேன்.” என்றவள், அவனை புன்னகையுடன் பார்த்து, “ஐ’ம் ஹண்ட்ரெட் பெர்சன்ட் கான்ஃபிடண்ட், அந்த மந்திரத்துல சொதப்பவே மாட்டேன். ஏன்னா, எனக்கு இந்த வேலை குடுக்கப்பட்டதுல இருந்து இப்போ வரை, அதை தினமும் பிராக்டிஸ் பண்றேன்.” என்றாள்.

 

அவள் சிரிப்புடன்தான் கூறினாள். ஆனால், அதற்குப் பின்னர் இருந்த மனவலியை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதுவே, அவன் சற்று முன்னர் எடுத்த முடிவை ஸ்திரப்படுத்தியது.

 

இராவும் அத்வைத்தும் வீட்டிற்குள் நுழைய, அங்கு ஐங்கரன், ரூபிணி, விநாயகம் மூவரும் இருந்தனர். அவர்களுக்கு நடுவே அவனியும், அவள் கேள்விபட்டதை கூறி விசாரித்துக் கொண்டிருந்தாள்.

 

இராவைக் கண்டதும், “இராக்கா, உங்களுக்கு எதுவும் இல்லையே.” என்று ஓடிவர, அவளை சமாதானப்படுத்துவதிலேயே நேரம் கடந்தது.

 

அவளிடம் முழுதாக சொல்லாமல், சூனியனை அழிக்க வேண்டும் என்று மட்டும் சொல்ல, அதற்கே அவனி பதறினாள்.

 

பின்பு, அவளை சமாதானப்படுத்தி படுக்க வைப்பதற்குள் இரா ஒரு வழியானாள்.

 

அவனியின் அறையை விட்டு வெளியே வந்த இராவிடம் வந்த விநாயகம், “என்னை மன்னிச்சுடு இரா. உன் அத்தை பண்ண தப்பை தட்டிக் கேட்காம, அவ போக்குல விட்டதுதான், இங்க கொண்டு வந்துருக்கு.” என்று கூற, அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை அவள்.

 

என்ன சொல்வது? ஆறுதல் சொல்வதற்கு அவளுக்கு மனமும் இல்லை, நேரமும் இல்லை.

 

தலையை மட்டும் அசைத்து விட்டு, அவளின் வீட்டிற்குச் சென்றாள். அவளைப் பெற்றவர்களால், மகளை தூரத்திலிருந்து பார்க்க மட்டுமே முடிந்தது.

 

அவளுடன் நுழைந்த அத்வைத், “நீ டையர்ட்டா இருக்க ஸ்டார்லைட். ரெஸ்ட் எடு. நாளைக்கு காலைல நான் வந்ததும், திரும்ப அந்த காட்டுக்குப் போய் பார்க்கலாம்.” என்றவன் கிளம்ப எத்தனிக்க, அவன் கரத்தைப் பிடித்து தடுத்தவள், “எங்க போறீங்க? இங்கேயே ஸ்டே பண்ணுங்க.” என்றாள் இரா.

 

அவள் எதற்காக கூறுகிறாள் என்பது தெரிந்தாலும், சூழலை மாற்ற வேண்டி, “ஸ்டார்லைட், என்ன இது? எனக்கு ஒரே ஷையா இருக்கு. இதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி நோ…” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறியவன் மீது தலையணை வந்து விழுந்தது.

 

“நினைப்பு போகுது பாரு! உங்களை அங்க அனுப்பிட்டு, உங்களுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு நினைச்சே எனக்கு தூக்கம் வராது. அதுக்காக மட்டும்தான் தங்க சொன்னேன்.” என்று உதட்டைச் சுழித்தாள் இரா.

 

“க்கும், நான் கூட என் ஸ்டார்லைட்டுக்கு மெச்சூரிட்டி வந்துடுச்சுன்னு தப்பா கற்பனை பண்ணிட்டேன்.” என்றபடி படுக்கையின் ஒரு ஓரத்தில் படுக்க, அவனை வெறுப்பேற்றிய மகிழ்ச்சியில் சிறு சிரிப்புடன் மறுபக்கம் படுத்தாள் இரா.

 

சில நிமிடங்கள் அவன் புலம்பியபடியே இருக்க, அதற்கு மேல் அவனைப் புலம்ப விடாமல், அவன் கைக்குள் வாகாக சென்று படுத்துக் கொண்டாள் இரா.

 

“அட, என்ன இன்னைக்கு ஆச்சரியத்துக்கு மேல ஆச்சரியமா இருக்கு!” என்று தனக்குள் அடங்கியவளை இன்னும் இறுக்கிக் கொண்டு அவன் கூற, “ஹ்ம்ம், இது நமக்கு லாஸ்ட் நைட்டா கூட இருக்கலாம். அதான்…” என்று தோளைக் குலுக்கினாள் அவள்.

 

“ஓஹோ, அப்படியா?” என்று கடுப்பான குரலில் கேட்டவன், “சரி அதை செலிபிரேட் பண்ணிடுவோம்.” என்றவன், அவன் அலைபேசியில் தேடி தேடி அந்த பாட்டை வைத்தான்.

 

Nobody’s promised tomorrow

So I’ma love you every night

Like it’s the last night

Like it’s the last night

 

If the world was ending

I’d wanna be next to you

If the party was over

And our time on earth was through

I’d wanna hold you

Just for a while

And die with a smile

 

அதைக் கேட்டவளோ சிரிப்புடன், “என்ன சிசுவேஷன் சாங்கா?” என்று வினவ, “அப்படித்தான்…” என்றவன், மேலும் சில பாடல்களை ஓடவிட்டு, அவளுடன் ஆடிப்பாடி அந்த இரவைக் கொண்டாடினான்.

 

ஒரு மணி நேரம் கழிந்திருக்க, “ஷப்பா போதும்… முடியல.” என்று மீண்டும் கட்டிலில் அவள் விழ, அவளருகே படுத்தவனோ, “இப்போ எப்படி ஃபீல் பண்ற?” என்று வினவினான்.

 

“ஹ்ம்ம், இப்படியே செத்தா கூட கவலைப்பட மாட்டேன். அப்படி ஃபீல் பண்றேன்.” என்றாள் அவள்.

 

“எப்போ பார்த்தாலும் சாகுறதைப் பத்தியே பேசு!” என்று அவளைத் திட்டியவன், “என்னைப் பத்தி யோசிச்சியா?” என்று அவன் வினவ, அவனைப் பார்த்தபடி திரும்பிப் படுத்தவள், “ம்ம்ம், நான் போனதும் தாடி வளர்த்துக்கிட்டு தேவதாஸ் மாதிரி சுத்தாம, ஒழுங்கா வாழ்க்கையை வாழணும். எங்கப் போனாலும், ஐ வில் பி வாட்சிங் யூ.” என்று சிரிப்புடனே கூறினாள் அவள்.

 

“ஆஹான்… அது மட்டுமா, இல்ல காதல், கல்யாணம்னு பண்ணிக்கணுமா?” என்று அவன் உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு வினவ, சட்டென்று அவளால் பதில் சொல்லிவிட முடியவில்லை.

 

சில நொடிகளில் சமாளித்துக் கொண்டவள், “அதுவும்தான்…” என்று கூற, “க்கும், சொல்றதுக்கே திணறுற. இனிமே, சாவைப் பத்தி பேசு… பேசுற வாயைக் கடிச்சு வச்சுடுறேன்.” என்றான் அவன்.

 

இப்படி பேசியே மேலும் ஒரு மணி நேரத்தைக் கழித்தவர்கள், சோர்வில் உறங்கிப் போயினர்.

 

ஆனால், அவர்களின் உறக்கத்தை நீடிக்க விடவில்லை அந்த சூனியன்.

 

கதவுகள் வேகமாக தட்டப்பட்டதில், முதலில் விழிகளை விரித்தது அத்வைத்தே.

 

‘எதற்கு இந்நேரத்தில் இப்படி தட்டுகிறார்கள்?’ என்ற குழப்பமும் பதற்றமும் சூழ்ந்தபடி அவன் எழ, அந்த அரவத்தில் அவனருகே உறங்கிக் கொண்டிருந்த இராவும் எழுந்தாள்.

 

இருவரும் ஒன்றாக சென்று கதவைத் திறக்க, அங்கு ஐங்கரன், ரூபிணி மற்றும் விநாயகம் மூவருமே பதற்றத்துடன் நின்றிருந்தனர்.

 

“என்னாச்சு?” என்று அத்வைத் கரகரப்பான குரலுடன் வினவ, “தாரணி கிட்ட இருந்து கால் வந்துச்சு தம்பி. அவ அந்த சூனியன் கிட்ட மாட்டிக்கிட்டாளாம்.” என்று விநாயகம் படபடப்புடன் கூற, இப்போது மற்ற இருவரின் புலன்களும் நன்றாக விழித்துக் கொண்டன.

 

“அவங்க எங்க இருக்காங்கன்னு சொன்னாங்களா மாமா?” என்று இரா வினவ, “காட்டுலன்னு சொல்ல வந்தா, அதுக்குள்ள கால் கட்டாகிடுச்சு.” என்று பரிதாபமாகக் கூறினார் விநாயகம்.

 

“எனக்கு அவங்க யூஸ் பண்ண ஏதாவது ஒரு பொருளை எடுத்துத் தாங்க.” என்று கூறிய இரா, காட்டுக்குச் செல்ல ஆயத்தமானாள்.

 

அத்வைத்தும் அவளுக்குத் துணையாக கிளம்ப, அவளின் பெற்றவர்களும் உடன் வருவதாகக் கூறினர்.

 

அதற்கு இரா மறுப்பு தெரிவிக்க, “இத்தனை நாள் செஞ்ச தப்புக்கு பிராயசித்தம் பண்ண ஒரு வாய்ப்பு குடு இராம்மா.” என்று அவர்கள் கெஞ்ச, அதற்கு மேல் எதுவும் வாதாடவில்லை இரா.

 

அவனிக்கு காவலாக விநாயகத்தை விட்டுவிட்டு, நால்வரும் காட்டை நோக்கி நடந்தனர்.

 

காட்டுக் கோவிலுக்கு வந்த இரா, “நான் இங்க இருந்து என் மந்திரத்தால அவங்க இருக்க இடத்தை கண்டுபிடிக்க முடியுதான்னு பார்க்கிறேன்.” என்று அவளின் வேலையில் ஈடுபட, அத்வைத்தோ மனதிற்குள் உண்டான குறுகுறுப்புடன் சுற்றுப்புறத்தில் பார்வையை பதித்தான்.

 

முன்தினம் போல, இராவின் மந்திரத்தில் யாரும் தலையிடாமல் மிகவும் கவனமாகவே பார்த்துக் கொண்டான்.

 

சில நொடிகளில் கண்களை விரித்த இரா ஆச்சரியத்துடன் அந்தக் கோவிலுக்கு பின்புறம் நோக்கி நடக்க, என்னவென்று விசாரித்துக் கொண்டே மற்ற மூவரும் அவளைப் பின்தொடர்ந்தனர்.

 

அங்கு அந்த நால்வருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் புதிதாக ஒரு கட்டிடம் முளைத்திருந்தது.

 

ஒரே நாளில் சாத்தியம் என்றால் அது நிச்சயம் சூனியனின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும்.

 

“அவங்க இதுக்குள்ளதான் இருக்காங்க.” என்று இரா கூற, “இது அந்த சூனியனோட இடம் ஸ்டார்லைட். உள்ள டிராப் ஏதாவது இருக்கலாம். அதைத் தெரிஞ்சுக்காம போறது நமக்கு சேஃப் இல்ல.” என்று எச்சரித்தான் அத்வைத்.

 

அப்போது அந்த காடே நடுங்கும் வண்ணம் உள்ளிருந்து தாரணியின் குரல் கேட்க, “நமக்கு வேற வழியில்ல அத்து.” என்றாள் இரா.

 

ஒரு பெருமூச்சை வெளியிட்ட அத்வைத்தோ, அவளுக்கு ஆமோதிப்பான தலையசைப்பைக் கொடுத்து விட்டு, முதலில் அந்த கட்டிடத்தின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

 

அவனைப் பின்தொடர்ந்து இரா நுழைய, உடனே அந்தக் கதவு மூடிக் கொண்டது. ஐங்கரனும் ரூபிணியும் வெளியே நிற்க, மற்ற இருவர் மட்டும் உள்ளே நுழைந்திருந்தனர்.

 

‘இதுதான் அந்த டிராப்!’ என்பது போல இராவைக் கண்ட அத்வைத், ‘நல்லவேளை, நான் முதல்ல நுழைஞ்சேன்.’ என்று எண்ணிக் கொண்டான். 

 

இதற்கு மேல் பின்வாங்க எதுவுமில்லை என்பதால் அந்த கட்டிடம் காட்டிய பாதையில் நடக்க ஆரம்பித்தனர். 

 

எங்கும் இருளின் ஆட்சி வியாபித்திருக்க, அதுவே கூறியது அதன் உரிமையாளன் யார் என்பதை!

 

இருவரும் நடந்து சென்ற பாதை ஒரு பெரிய பரந்த வெளியில் முடிந்திருந்தது.

 

சுற்றிலும் இருளே!

 

மேற்கூரை என்ற ஒன்றே அங்கில்லாதது போலிருந்தது. அத்துடன் குளிரும் சேர்ந்து கொள்ள, இருவருக்கும் தாங்கள் இருப்பது கட்டிடத்திற்குள்ளா இல்லை ஏதாவது வெற்றிடமா என்று சந்தேகமே வந்து விட்டது.

 

அப்போது, “உங்க ரெண்டு பேரையும் என் சாம்ராஜ்யத்துக்கு வரவேற்கிறேன்.” என்று ஆர்ப்பாட்டமான குரல் கேட்க, அதை நோக்கிth திரும்பினர் இருவரும்.

 

அங்கு கரும்புகையாக காட்சியளித்தான் சூனியன்.

 

அவனருகே அழுகையுடன் நின்றிருந்தார் தாரணி.

 

“அதான் அவங்க வந்துட்டாங்களே… என்னை விட வேண்டியதுதான?” என்று தாரணி மென்குரலில் கேட்டாலும், அது அவ்விடம் எங்கும் எதிரொலித்தது.

 

அந்த சூனியனோ தாரணியைக் கண்டு கொள்ளாமல், “இந்த இடம் பிரம்மாண்டமா இருக்குல? நான் இந்த சண்டைல வெற்றி பெற்று உன்னோட சக்திகளை எடுத்ததுக்கு அப்புறம் இந்த உலகத்தையே இப்படித்தான் மாத்தp போறேன். அப்போ நீ உயிரோட இருக்க மாட்டேல… அதான் உனக்கு ஒரு குட்டி டிரைலர் மாதிரி இதை உருவாக்கினேன்.” என்று எகத்தளமாக கூறி சிரித்தான்.

 

“ஸ்டார்லைட், அவன் சொன்னதைக் கவனிச்சியா? உன் சக்திகளை எடுக்கப் போறானாம்… நீ உன்னை அவனுக்கு தியாகம் செஞ்சா, உன் சக்திகளை அவன் எடுத்துக்க சான்ஸ் அதிகமா இருக்கு.” என்று கிசுகிசுத்தான் அத்வைத்.

 

“ஹ்ம்ம், அதனாலதான் வசுந்தராம்மா சக்திகளை முதல்ல தியாகம் செஞ்சாங்க போல.” என்று இரா யோசனையுடன் கூற, “அப்போ சக்தி இல்லாம, நீ எப்படி அவனைக் கட்டுப்படுத்துவ?” என்று மறுகேள்வி கேட்டான் அத்வைத்.

 

“இதோ இந்த மோதிரம்… என்னோட சக்திகளை தியாகம் செஞ்சாலும், இந்த மோதிரத்துல இருக்கக் சக்தியை வச்சு அவனைக் கட்டுப்படுத்தலாம். சோ, இதுதான் நம்ம பிளான். நான் என்னோட சக்திகளை அந்த அம்மன் சாட்சியா தியாகம் செஞ்சு, அவனை கட்டி வைக்கிறதுக்கான மந்திரங்களை உச்சரிச்சுட்டே, அவனோட ஒண்ணா கலப்பேன். அந்த நேரத்துல, இந்த மோதிரத்துல இருக்க சக்தியை எங்க மேல நீங்க செலுத்தணும். இப்படித்தான், வசுந்தராம்மாவும் செஞ்சுருக்காங்க.” என்றாள் இரா.

 

“இது ஒர்க்கவுட்டாகும்னு எனக்கு தோணல ஸ்டார்லைட்.” என்று அத்வைத் யோசனையுடன் கூற, “நமக்கு வேற வழியில்ல அத்து.” என்று இரா கூறும் சமயம், “அவங்க வந்ததும் என்னை விட்டுடுறேன்னு சொன்னதான? அதுதான நம்ம டீல்!” என்று பெருங்குரலில் கத்தினார் தாரணி.

 

சூனியனை அவரின் கணவர் விநாயகம் போல எண்ணினார் போலும்!

 

“அவங்க வர வரைக்கும்தான் நீ எனக்கு தேவைப்பட்ட. அதே மாதிரி, நமக்குள்ள வெறும் பேச்சுவார்த்தை மட்டுமே இருந்துச்சு. நான் உன்னை விடுவேன்னு வாக்கு எதுவும் குடுக்கலையே? இந்த சூனியன் குடுத்த வாக்குக்கு மட்டுமே மரியாதை செய்வான்.” என்று நக்கலாகk கூறியவன், தாரணியைத் தூக்கி வீசினான்.

 

சில அடி தூரம் தள்ளி சென்று விழுந்தவரை மற்றவர்களால் காண முடியவில்லை. அந்தளவு, இருள் அதன் ஆக்கிரமிப்பை அங்கு நடத்தியிருந்தது.

 

“ரெண்டு பேரும் உங்க பிரியாவிடையை முடிச்சுக்கிட்டீங்கனா என் வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்.” என்று சூனியன் கூற, அவனைச் சுட்டெரிப்பது போல பார்த்தாள் இரா.

 

“உன்னை அழிக்கத்தான் நாலு வருஷமா தயாராகிட்டு இருக்கேன்.” என்று இரா கூற, “ஓஹோ, நீ தயாரான விதத்தை நேத்தே பார்த்தேனே… நேத்து இறந்து போனானே, அவனுக்கு இறுதி சடங்கெல்லாம் முடிச்சாச்சா? இல்லன்னா, உன்னோடதையும் சேர்த்து பண்ண சொல்லிடுறேன். நீ கவலைப்படாத.” என்று கேலி செய்தான் சூனியன்.

 

“நீ ரொம்ப பேசுற. உன்னை வசுந்தராம்மா அனுப்பின இடத்துக்கே அனுப்புறேன்.” என்று கண்களை மூடி, அவளின் மந்திர சக்தியை அம்மனுக்கு சமர்ப்பிக்க வேண்டிய மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்க, “முட்டாள் பொண்ணே! நீ என்ன நினைச்ச? உன் உயிரை தியாகம் பண்றதால, என்னை அழிக்கலாம்னா? உன் யோசனைல பெரிய ஓட்டை இருக்கே!” என்று கேலியாகக் கூறிய சூனியன் அருகில் நின்றிருந்த அத்வைத்தை அர்த்தமாகப் பார்த்தான்.

 

இரா அதைக் கவனிக்கவில்லை என்றாலும் அத்வைத் அதைக் கவனித்தான். அத்துடன், அந்த முடிவையும் எடுத்து விட்டான்.

 

“பரவால, நீ உன் ஆட்டத்தை ஆரம்பி… நீயா குடுத்தா என்ன, நானா உன்கிட்ட இருந்து எடுத்தா என்ன? எப்படியும் வெற்றி எனக்குத்தான்.” என்று கொக்கரித்தான் சூனியன்.

 

அவனை நம்பாத இரா, மந்திர உச்சாடனத்தை தொடர எத்தனிக்க, அவளைத் தடுத்த அத்வைத், “இல்ல ஸ்டார்லைட், அவன் சொல்றது உண்மைதான். உன்னோட திட்டம் வெற்றியடையாது. அவனை அழிக்கிறதுக்கான வழி ‘தியாகம்’னு சொல்லப்பட்டுருக்கு. அந்த தியாகம், ஆத்மார்த்தமா இருக்கணும். ஆனா, உன் உயிர் தியாகம் கட்டாயத்தினால நடக்குறது. அது பயன் தராது.” என்றான் யோசனையுடன்.

 

“அட, நீதான் இதை சரியா புரிஞ்சுகிட்ட தம்பி. உங்களுக்கு இருந்த ஒரே வழியும் போச்சு. இப்போ என்ன பண்ணப் போறீங்க?” என்று நக்கலாக சூனியன் வினவ, அவனை அழுத்தத்துடன் பார்த்த அத்வைத்,

 

“அவளாலதான் ஆத்மார்த்தமான தியாகத்தை செய்ய முடியாதுன்னு சொன்னேன். ஆனா, என்னோட தியாகம் ஆத்மார்த்தமா இருக்கப் போகுது. என் காதலுக்காக, என் காதலிக்காக மனசார என் உயிரை தியாகம் செய்யப் போறேன்.” என்று இராவைப் பார்த்தபடி புன்னகையுடன் கூறினான்.

 

அவன் கூறியதைக் கேட்ட இராவோ அதிர்ச்சியுடன், ‘வேண்டாம்’ என்று தலையசைக்க, “இதுதான் நமக்கு இருக்க ஒரே வழி ஸ்டார்லைட்!” என்றான் அத்வைத்.

 

அத்தனை நேரம் வெற்றி தனக்கே என்று அலட்சியத்துடன் இருந்த சூனியனே, அத்வைத்தின் இந்த முடிவில் அதிர்ந்து போனான்.

 

இத்தனை நாள்களாக, மனிதர்களுக்குள் இருக்கும் காதல் உணர்வை, தனக்கு சாதகமாக்கிக் கொண்டு காரியம் சாதித்தவனுக்கு, இப்போது அந்த காதலே எதிரியாக வந்திருந்தது.

 

அந்தக் கடுப்பில், “உன் உயிரை தியாகம் செய்ய விட மாட்டேன்.” என்று சூனியன் கத்த, அப்போதே மற்ற இருவருக்கும் புரிந்தது, அவர்கள் தேர்ந்தெடுத்த திட்டம் சரியானது என்பது.

 

இம்முறை சூனியனைக் கேலியாகப் பார்த்த அத்வைத்தோ, “நீ எனக்கு குடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா மிஸ்டர். சூனியன்? நான் உன்னோட வந்து சேர்ந்துட்டா, நான் கேட்குற எதையும் எனக்குத் தருவேன்னு சொல்லியிருக்க. இப்போ நான் உன்னோட சேரப் போறேன். ஒண்ணா கலக்கப் போறேன். அதுக்காக நான் கேட்குறதெல்லாம், பத்து நிமிஷத்துக்கு நீ எதையும் செய்யாம, அசையாம இதே இடத்துல இருக்கணும். அவ்ளோவேதான்! உன் வாக்கை நீ மதிச்சே ஆகணும் சூனியன். ஏன்னா, அதுதான உனக்கு கிடைச்ச சாபம்!” என்றான்.

 

ஆம், சூனியனின் பலவீனம் அவனின் சாபமே. அதை அந்த புத்தகத்தின் வழியே அறிந்து கொண்ட அத்வைத் சரியான சமயத்தில் பயன்படுத்தினான் என்றே கூற வேண்டும்.

 

அதற்கு இறைவனின் ஆசியும் இருந்ததோ என்னவோ! இல்லையென்றால், சூனியனிடமிருந்து எதற்கு இப்படி ஒரு வாக்கை அவன் பெற்றிருக்க வேண்டும்?

 

மறுநொடியே, சூனியன் அவன் வாக்கிற்கு கட்டுப்பட்டு அசையாது நின்றான்.

 

இப்போது இராவிடம் திரும்பிய அத்வைத், அவளின் கலங்கிய விழிகளின் ஓரத்தில் தேங்கியிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம பேசுனதெல்லாம் ஞாபகம் இருக்குல? ஒழுங்கா, உன்னோட வாழ்க்கையை வாழணும். எங்க இருந்தாலும், ‘ஐ வில் பி வாட்சிங் யூ’” என்று அவளைப் போலவே கூறிப் புன்னகைத்தான்.

 

அதில் அவளின் கண்ணீர் மேலும் பெருக, “அப்போ இந்த முடிவை முன்னாடியே எடுத்துட்டீங்களா?” என்று விசும்பியபடி அவள் வினவ, “நான்தான் சொன்னேனே… உன்னை அவ்ளோ சீக்கிரம் சாக விட மாட்டேன்னு. அதுக்கு ஒரு பேக்கப் பிளான்தான் இது. அதோட, மாடசாமி தாத்தா ‘காதலை ஆயுதமா மாத்தணும்’னு சொன்னது எனக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு. தியாகம் நிச்சயமா செய்யணும்… அதை நீ செய்யுறதுக்கு பதில் நான் செய்யப் போறேன் அவ்ளோதான்! நீ செஞ்சா என்ன, நான் செஞ்சா என்ன? எல்லாம் ஒண்ணுதான ஸ்டார்லைட்?” என்றான் அவன் உதட்டிலிருந்த சிரிப்பு வாடாதபடி.

 

“நோ… இதுக்குத்தான் நான் உங்களை காதலிக்க மாட்டேன்னு சொன்னேன். இப்போ என்னால… நீங்க… இது சரியில்ல. எல்லாத்துக்கும் நான்தான் காரணம்! நேத்து தாத்தா… இன்னைக்கு நீங்க! எல்லாம் என்னாலதான்! என்னோட துரதிர்ஷ்டம் எல்லாரையும் பாதிக்குது.” என்று தலையிலடித்துக் கொண்டு அழ, அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவன்,

 

“ஹ்ம்ம், இப்படி எல்லாத்துக்கும் நீயே கிரெடிட் எடுத்துக்கிட்டா விதி என்ன செய்யுமாம் பாவம்?” என்று கேலியாகக் கேட்டவன், “விதிச்சது நடக்கத்தான் செய்யும்னு சொல்லுவாங்க ஸ்டார்லைட். முன்னாடி எனக்கு அதுல நம்பிக்கை இல்லதான். ஆனா, இப்போ நம்பாம இருக்க முடியலையே. உன்னை இங்க பார்த்து காதலிச்சது எல்லாம் விதியாலதான! சோ, இதையே நினைச்சு குற்றவுணர்ச்சில தேங்கி நின்னுடக் கூடாது. என் ஸ்டார்லைட்டுக்கு அது அழகும் இல்ல. யாரு வேணா என்ன வேணும்னா சொல்லுங்க, நான் என் இஷ்டப்படிதான் நடப்பேன்னு இருக்குறவதான் ‘என் ஸ்டர்லைட்’. அப்படி இருப்பியா?” என்ற கேள்வியுடன் அவன் நிறுத்த, அழுகையுடனே தலையை மட்டும் அசைத்தாள்.

 

ஒரு பெருமூச்சுடன், “நமக்கு ரொம்ப நேரம் இல்ல ஸ்டார்லைட்.” என்றவன், அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

 

அத்தனை நேரம் அழுத்தமாக நின்றவன், இப்போது உடைந்து போனான்.

 

மனதிற்குள் அவனின் தந்தையும் வந்து போனார். அவரிடம் பேசவில்லையே என்று மனம் பிசைய, பேசினால் அவருக்கும் வருத்தம் என்று மூளை அறிவுறுத்தியது.

 

‘தந்தையை பார்த்துக்கொள்ள சொல்லி இராவிடம் சொல்லலாமா?’ என்று அவன் எண்ணும் போது, ‘அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையை அவ அமைச்சுக்க வேண்டாமா?’ என்று கட்டிப் போட்டது அவனின் மூளை.

 

எனவே, எதுவும் சொல்லாமல், “ஐ வில் மிஸ் யூ.” என்று மட்டும் சொல்ல, அவனை விட்டுப் பிரிந்தவள், “மீ டூ…” என்றாள் குறையாத அழுகையுடன்.

 

அவளை அப்படியே விட்டுச் செல்ல மனமின்றி, அவளின் இதழை முற்றுகையிட்டான், முதலும் இறுதியுமாக ஒரு முத்தம்!

 

அவள் கண்மூடி இருக்கும் வேளையிலேயே, அவளின் இதழ்களுக்கு விடுதலை தந்தவன், அவளின் செவியருகே, “இப்போ உடனே கண்ணை திறக்காத ஸ்டார்லைட். ஆனா, நீ கண்ணைத் திறக்கும்போது, என்னை உன் அத்துவா பார்க்கக் கூடாது. கொஞ்சம் கூட யோசிக்காம எனக்குள்ள இருக்க அந்த சூனியனை அழிக்கணும். எனக்கு உன்மேல இருக்க நம்பிக்கையை காப்பாத்துவியா ஸ்டார்லைட்?” என்றான் முணுமுணுப்பாக.

 

தயக்கத்துடன் வந்த அவளின் தலையசைப்பை ஏற்றுக் கொண்டவனாக, அவளை விட்டுப் பிரிந்தான் அத்வைத்.

 

கண்மூடி நிற்கும் தன்னவளை இறுதியாக ஒருமுறை கண்களில் நிரப்பிக் கொண்டு, அவனின் கடமையை ஆற்ற சென்றான்.

 

“இப்போ நீ கண்ணை திறக்கலாம் ஸ்டார்லைட்.” என்று அத்வைத்தின் குரல் கேட்டதும் விழிகளைப் பிரித்தவள் கண்டது, அத்வைத்தின் உடலுக்குள் இருந்த சூனியனைத்தான்.

 

அவனும் உடலை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருக்க, அப்போதே தெரிந்து கொண்டாள், அவளின் அத்து சென்று விட்டான் என்பதை!

 

மறுப்பு, கோபம், ஏமாற்றம், அழுத்தம் என்று காதல் பிரிவினால் உண்டான துக்கத்தின் அனைத்து நிலைகளையும் தனியொருத்தியாக, அப்போதே கடக்கும் சூழலுக்கு தல்லப்பட்டாள் இரா.

 

அப்போதுதானே அவளால் அந்த சூனியனை எதிர்கொள்ள முடியும்.

 

எத்தனை சக்திகளைப் பெற்ற மனிதனாக இருந்தாலும், இதை செய்வது சாத்தியமன்றே!

 

இதே நேரம் எதிரிலிருந்தவனோ, “அவனை புத்திசாலின்னு நினைச்சேன். ஆனா, அவனும் முட்டாள்னு நிரூபிச்சுட்டு போயிட்டான். உன்னால என்னை எப்படி தாக்க முடியும்? என்னைப் பார்த்தா, உனக்கு உன் காதலனோட ஞாபகம் வராது?” என்று சிரித்தான்.

 

அதுவரை அந்த முகத்தைக் கண்டு ஏங்கி ஏங்கி அழுதவளுக்கு, அந்த சீண்டல் தூண்டுதலாக அமைந்தது.

 

அவளின் ஒட்டுமொத்த ஏமாற்றத்தையும் கோபத்தையும் அவளின் குரலில் வெளிப்படுத்த, அவளின் சத்தத்தில் அந்த காடே அதிர்ந்தது.

 

அவளின் ஆவேசம் அவளின் சக்திக்கு உயிர் கொடுக்க, அவளைப் போலவே ஆர்ப்பரித்து எழுந்தது அந்த சக்தி.

 

இதுவரை அப்படியொரு சக்தி ஊடுருவலை அவள் அனுபவித்ததில்லை. அதெல்லாம் இப்போது அவளின் கவனத்தில் இல்லை.

 

அவள் உடல், பொருள், ஆவி அனைத்திலும் காதலனை பிரிந்த துக்கமும் ஏமாற்றமுமே நிறைந்து காணப்பட்டது.

 

அவளைக் கண்ட சூனியனே திகிலடைந்து ஒடுங்கிப் போனான் என்றே கூற வேண்டும்.

 

அவன் கண்களுக்கு அவள் காளியாக அல்லவா தெரிந்தாள்!

 

அத்தனை நேரம் கண்களை மூடி கத்திக் கொண்டிருந்தவள், மூச்சு வாங்க கண்களை திறக்க, அவளின் உடலில் ஒவ்வொரு அங்கத்திலும், அவளின் சக்தி தீப்பொறி போல சுடர்விட்டது.

 

இம்முறை அவளின் கண்களுக்கு அத்வைத் தெரியவில்லை. மாறாக, அவளின் காதலனை காவு கொண்ட சூனியனே தெரிந்தான்.

 

அவளின் கடமையை உணர்ந்தவள், ஒட்டு மொத்த சக்தியையும் திரட்டி, அதை ஆயுதமென எதிரிலிருப்பவனின் மீது எரிய, அவளின் தோற்றம் கண்ட அச்சத்தில் உறைந்து நின்ற சூனியனோ, அவனின் சக்தியை உபயோகிக்கும் வாய்ப்பை இழந்தான்.

 

அந்த இடத்திலிருந்த இருளைக் கிழிக்கும் பிரகாசமாக வந்த இராவின் ஆயுதம், சூனியனைத் தாக்க, இருளில் மறைந்து கொண்டு அத்தனை அட்டூழியங்கள் செய்தவன், வெளிச்சத்தின் சக்தியில் அழிந்து, மறைந்து போனான். 

 

உயிரற்ற அத்வைத்தின் உடல் கீழே விழுந்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்