அத்தியாயம் 15
வேலைக்கு எப்பொழுதும் போல சென்று வந்து கொண்டு தான் இருந்தாள் தேவதர்ஷினி. இந்த மாதம் மட்டும் வருவதாய் ஏற்கனவே சொல்லி இருந்தது தான் பள்ளியிலும்.
பெங்களூர் சென்ற நான்காம் நாள் எல்லாம் அன்னைக்கு அழைத்து வீட்டை பார்த்துவிட்டதாய் கூறிய கார்த்திகைசெல்வன் தேவதர்ஷினிக்கும் அழைத்து கூறினான்.
“அன்னைக்கு பார்த்தோமே! அந்த வீடு தானா?” என அலைபேசியில் தேவதர்ஷினி கணவனிடம் கேட்க,
“ஆமா தேவா! வேற வீடும் பார்த்தேன். ஆனா எதுவும் செட் ஆகல. இந்த வீடும் நேர்ல பார்த்ததும் பிடிச்சிருச்சு!” என்றான் கார்த்திகைசெல்வன்.
“ஹ்ம் சரி த்தான் அப்புறம் இங்க இருந்து என்னலாம் கொண்டு போகணும் சொன்னா அதை மட்டும் எடுத்து வச்சுக்கலாம்!” என தேவதர்ஷினி கேட்க,
“இப்ப எதுவும் வேண்டாம். நான் யூஸ் பண்ணினதெல்லாம் அப்படியே தான் இருக்கு” என கார்த்திகைசெல்வன் பேசி முடிக்கும் முன்,
“என்ன நீங்க எல்லாத்துக்கும் இப்படியே சொல்லிட்டு இருக்கீங்க. எதுவும் வேண்டாம்னு எங்க வீட்டுல நான் எப்படி சொல்ல முடியும்?” என அவன் பேசியதை கேட்டதும் கொஞ்சம் கோபம் வந்துவிட்டவளாய் பேசினாள் தேவதர்ஷினி.
“ஹே! இங்க எல்லாமே இருக்கே! ஏன் வேஸ்ட் பண்ணனும்னு தான் சொன்னேன்!” என்றான் அவளின் சட்டென்ற இந்த கோபக் குரல் புரிந்து.
“எங்க வீட்டுல எனக்காக பண்றது எப்படி வேஸ்ட் ஆகும்? இதெல்லாம் அவங்களுக்கு உரிமை இல்லையா த்தான்? ஆல்ரெடி கல்யாணம் நடந்த விதத்துல இருந்து இப்ப வரை அவங்களுக்கு ஏகப்பட்ட மனக்கஷ்டம். இப்ப நீங்க வந்தப்பவும் யாரும் பெங்களூர் வர வேண்டாம்னு முகத்துக்கு நேரா சொல்லிட்டு போயிட்டீங்க!” என அவள் சொல்லவும்,
“தேவா! அதுக்கு நான் ரீசன் சொன்னேனே!” என்றான் புருவங்கள் சுருங்க.
“ஆமா ரீசன் தான் சொன்னிங்க. இப்பவும் ரீசன் தான் சொல்றிங்க!” என்றவள்,
“அன்னைக்கு சொல்லாமலே ஊருக்கு போனதுக்கு இது பரவால்லனு நாங்க நினைச்சுக்கணும்!” என முணுமுணுவென்றாலும் அவள் சொல்லியே விட, அத்தனை அமைதி கார்த்திகைசெல்வன் பக்கம்.
“கல்யாணத்துல இருந்து இப்ப வரை அவங்களுக்குன்னு ஆசை இருக்கும் த்தான் தன்னோட பொண்ணுக்கு செய்யனும்னு. ஆனா இதுவரை எதுவுமே சரியா நடக்கல. இப்ப தான் எனக்கு பயமா இருக்கு!” என்று தேவா சொல்ல,
“ஏன் என் கல்யாணத்துல எனக்கு ஆசை இருந்திருக்காதா?” என சட்டென்று தானும் கோபமாய் கேட்டுவிட்ட கார்த்திகைசெல்வன் அதன்பின் சில நொடி அமைதிகளில் ஒளிந்து தானே அலைபேசியை நிறுத்திவிட்டான்.
தேவதர்ஷினி அதிர்ச்சியில் அமைதியாகி இருந்த நேரம் அது. அவன் அலைபேசியை வைத்த அடுத்த நொடி எல்லாம் கண்கள் கலங்கி கண்ணீர் வந்துவிட, தானும் அதிகமாய் பேசி அவனையும் கோபப்பட வைத்துவிட்டோம் என்று தோன்ற, ஆனாலும் அந்த வார்த்தைகள் அவளை அலைப்புற செய்தது.
இன்னும் இடையில் மூன்று நாட்களே இருந்தது இவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு.
வரவேற்பு நடைபெறும் அன்று தான் காலையில் வருவதாய் கூறி இருந்தான் கார்த்திகைசெல்வன்.
அவரவர் வசதிக்கு ஏற்ப இவர்களின் திருமணத்தை தங்களுக்குள் நியாயப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த வேலைக்கு அவர்கள் சென்றிருக்க, கார்த்திகைசெல்வனின் இந்த ஒற்றை வார்த்தையில் மொத்த வலியையும் கொடுத்துவிட்டான் தேவதர்ஷினிக்கு.
அவளுக்கே தெரிந்திருந்தது தான் அவனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று. ஆனாலும் அவனுக்கான இடம் நேரம் என அவனே எடுத்துக் கொண்டானே!
அவனாய் விலகி சென்றதும், அவனாய் நெருங்கி வந்ததும், இப்போழுது அவனின் வார்த்தைகளும் என அவனை ஒரு கணிப்பிற்குள் கொண்டு வரவே முடியவில்லை தேவதர்ஷினிக்கு.
அத்தை மகன் என்ற அளவில் இருந்த பொழுதுகளில் இவ்வளவு எல்லாம் யோசனை இல்லை.
இப்பொழுது என்னவோ போலானது ஒவ்வொன்றாய் நினைக்க நினைக்க.
மீண்டும் அன்று முழுதும் அவன் அழைக்கவும் இல்லை இவள் பேசவும் இல்லை. கண்ணகியிடமும் இதைப் பற்றி கூறவில்லை.
அன்றே இவளுக்கு ஆதரவாய் தான் பேசி இருந்தார் கண்ணகி. அனைவரையும் பெங்களூருக்கு மகன் வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது தான் அவர் எண்ணமும் கூட. லீலா நிச்சயம் வருத்துவார் என்று தெரியுமே அவருக்கு.
சரி என்னவோ அவன் மனதின் விருப்பப்படி இனியாவது இருக்கட்டுமே என அவரும் அவன்வழி விட்டிருந்தார். அதனால் அதற்கு மேல் கணவனிடம் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை தேவாவும்.
இப்பொழுது வீட்டிற்கு தேவையானது என அவள் வீட்டில் வாங்க அத்தனை பேசினார்கள் அவளிடமே!
“இங்க அத்தைகிட்ட எல்லாமே இருக்கும் தான். ஆனாலும் பாதி பாத்திர பண்டங்களை எப்பவும் இங்க கொஞ்சம் வச்சுட்டு தான் பெங்களூர் போகும் போது எடுத்துட்டு போகணும் தேவா. மொத்தமா எடுத்துட்டு போனா அண்ணி எதுவும் நினைச்சுக்க கூடாது பாரு. அது நல்லாவும் இருக்காது!” என லீலா அறிவுரை கூறி இருந்தார்.
“ரெண்டு பேருக்கு கொஞ்சமா சமைக்குற மாதிரி பாத்திரம் எல்லாம் இங்கேயே வாங்கி குடுத்து விடுவோம். அப்புறம் ஒரு நாள் நாம போகும் போது என்னென்ன வேணுமோ பார்த்து வாங்கிட்டு போவோம்!” என்றிருந்தார் பசுபதி.
இப்படி திட்டங்கள் அவள்முன் செயலாற்ற காத்திருக்க, அதை வேண்டாம் என்பவன் மேல் நிஜமாய் முதல் முறையாய் கோபம் வந்தது.
வீட்டிற்கு வராதே என்பதை போன்று அன்று சொல்லியதையே இன்னும் அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதில் இதுவுமா என்ற எண்ணத்தில் தான் உடனே பேசிவிடலாம் என கூறி இருந்தாள்.
அதற்கு அவனின் பதிலான இந்த வார்த்தையை தான் அவள் எதிர்பார்க்கவே இல்லை.
அப்படி என்றால்? இந்த திருமணத்தை இன்னும் அவன் ஏற்று கொள்ளவில்லையா? என ஒரு எண்ணம் மனதில் கலக்கத்தை விதைக்க,
‘பின் ஏன் என்னை அழைத்து செல்ல வேண்டும் அந்த ஊருக்கு?’ என நினைக்கும் பொழுதே என்னென்னவோ பயம்.
அடுத்த நாள் காலை வழக்கம் போல பள்ளி சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும் நேரம் கார்த்திகைசெல்வனிடம் இருந்து அவளது அலைபேசிக்கு அழைப்பு வர, வெறித்த பார்வையாய் அதைக் கண்டாள் தேவதர்ஷினி.
இப்பொழுது என்னவோ மனதில் எந்த உணர்வும் ஏற்படவில்லை. அவனின் அழைப்பில் அகம் மலர்ந்து வரும் புன்னகை சுத்தமாய் துடைக்கப்பட்டிருந்தது.
‘எனக்கு என் கல்யாணத்துல ஆசை இருந்திருக்காதா?’ என்ற கேள்வி காதுக்குள் ஓடி அதற்கான அர்த்தத்தை மீண்டும் மீண்டும் தேடி மனதை பலவீனப்படுத்தியது.
அலைபேசி சத்தம் நிற்க இருக்கும் நேரம் அழைப்பை ஏற்று தேவதர்ஷினி காதில் வைக்க, அவனிடமும் முதலில் வார்த்தைகள் இல்லை.
“சொல்லுங்க த்தான்!” என்றாள் அவளே முதலில்.
“சாரி!” என்றவன் குரலும் அவளுக்கேற்ப அத்தனை அமைதியாய் தான் வந்தது.
மன்னிப்பை ஏற்க கூடிய விஷயமில்லை தானே? அதற்காக நிராகரிக்கவும் தெரியவில்லை அவளுக்கு.
அப்படி மனம் காயம்படும்படி பேச தெரிந்தவளோ உணர்வுகள் அடிபட காயம் கொடுக்க தெரிந்தவளோ இல்லை தேவதர்ஷினி.
“தேவா!” என அவன் அழைக்க,
“இருக்கேன் த்தான்!” என்றாள்.
கார்த்திகைசெல்வன் நிலை அவன் மட்டும் உணர்ந்த ஒன்று.
வெகு சாதாரணமாய் ‘இப்பொழுது எதற்கு வீண் செலவு?’ என்ற எண்ணத்தில் மட்டுமே அவன் எதுவும் வேண்டாம் என்றது.
பெண் வீட்டினரின் உரிமையும் கடமையும் என்றெல்லாம் இதற்கு அவன் அர்த்தம் காணவில்லை. அதெல்லாம் அவனுக்கு தெரியவும் வாய்ப்பில்லை.
‘உரிமை, மனக்கஷ்டம், காரணம் என தான் கூறியது கூடவே தான் சொல்லாமல் சென்றதை அவள் சொல்லிக் காட்டியது எல்லாம் அவனுள் ஒரு புருவ சுளிப்பை கொண்டு வந்து நிறுத்தி இருக்க, திருமணத்தில் அவர்களின் ஆசை என அவள் சொல்லவும் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த எண்ணங்கள் கொடுத்த தாக்கத்தில் தான் அவனும் அந்த வார்த்தையை சொல்லி இருந்தான்.
அதன் அபத்தம் வெகு சில நிமிடங்களில் உணர்ந்தவனுக்கு தலையில்கைவைத்துக் கொள்ள தான் முடிந்தது தன் முட்டாள்தனத்தை எண்ணி.
‘நிச்சயம் இதன் அர்த்தத்தை தேவா யோசிப்பாள் தானே?’ என்று மனம் நொந்துவிட்டான்.
‘இன்னும் என்ன டா வேணும் உனக்கு? எதுக்காக அப்படி சொன்ன?’ என தனக்கு தானே கேட்டுக் கொண்டிருந்தான் பலமணி நேரமாய்.
‘தன் மனம் இன்னும் மாறவில்லையா? தேவாவை நான் ஏற்று கொள்ளவில்லையா?’ என அவனுக்கே சந்தேகம் வந்த தருணம் அது.
அப்படி நினைக்கையில் தான் தனக்கே இப்படி தோன்றினால் அதைக் கேட்ட பெண் என்னாவாள் என நெற்றியில் மீண்டும் மீண்டும் தட்டிக் கொண்டான்.
மீண்டும் உடனே அழைத்து சமாதானம் செய்ய இது சாதாரண விஷயமில்லை என புரிந்தவனுக்கு படபடவென வந்திருக்க, இரவு தூக்கமின்றி தேவதர்ஷினியின் வாட்சப் எண்ணை கணக்கில்லாத அளவுகளில் திறந்து மூடி இருந்தான்.
அவளும் அழைக்கவில்லையே என்று அதையும் குறித்துக் கொண்டு அன்று முழுதும் நந்தனுடன் தான் இருந்தான் அவன் அறையில்.
“என்ன டா என்னவோ மாதிரி இருக்க. நேத்து நல்லா தானே இருந்த?” என்று நந்தனுமே கேட்டிருந்தான்.
பதில் சொல்லவில்லை. பதில் சொல்லவும் முடியவில்லை. தவறு தன்மேல் என தனக்கே தெரிய என்னவென்று சொல்லிவிடுவான்.
மாலை வரை பொறுத்தவன் நான்கு மணி ஆகும் முன் அழைத்துவிட்டான் அந்த எண்ணங்களில் போராட முடியாமல்.
“என்னவோ சொல்ல வந்து என்னவோ சொல்லி வச்சுட்டேன் தேவா!” என மீண்டும் கெஞ்சல் குரல் தான். அந்த குரலில் அதன் வருத்தமும் தாக்கமும் முழுதாய் வெளிப்பட அவன் சொல்ல,
“இருக்கட்டும் த்தான்!” என்றாள் எதையும் காட்டிக் கொள்ளா பாவத்தோடு.
அதற்குமேல் என்ன பேச என அவனுக்கு தெரியவில்லை. இப்பொழுது தான் நான்கு நாட்களாய் ஊரில் இருந்து வந்த பின் தான் தினமும் அழைத்து பேசும் பழக்கத்திற்கே அவன் வந்திருக்க, அதற்குள் இப்படி ஒரு ஊடல்.
“நான் ஸ்கூல்ல இருக்கேன் த்தான்” என்று தேவதர்ஷினி சொல்ல,
“வீட்டுக்கு போய்ட்டு பண்றியா தேவா?” என கேட்டான் உடனேயே.
சாதாரணமாய் பேசும் அவள் பேச்சு தெரியுமா தெரியாதா என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. நிச்சயம் அவள் மனம் பலவிதமாய் எண்ணி இப்பொழுது குழப்பத்தில் தவிக்கும் என உணர முடிந்தது.
மன்னிப்பை வார்த்தையால் கேட்டுவிட்டாலும் அவளின் பதிலில் அவள் காயத்தை உணர முடிந்ததே அவனுக்கும்.
“ஹ்ம் சரி!” என அப்போதைக்கு பேச்சிற்கு சொல்லி அவள் வைத்தும் விட, தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் கார்த்திகைசெல்வன்.
வீட்டிற்கு வந்ததும் கண்ணகி கொடுத்த டீயைக் குடித்துவிட்டு அவரோடு அமர்ந்து கதை பேசி என நேரம் செல்ல, இரவு உணவை முடித்துவிட்டு,
‘நாளைக்கு கொஞ்சம் பிரிப்பேர் பண்ணனும் த்தை!” என்று சொல்லி எட்டு மணிக்கு அவர்கள் அறைக்கு தேவதர்ஷினி சென்ற நேரம் சரியாய் அழைத்துவிட்ட கணவன் அழைப்பில்,
‘சமாதானப்படுத்த இத்தனை போனா?’ என தோன்றிய நொடி, அந்த அழைப்பு இனிக்கவில்லை அவளுக்கு.
“சொல்லுங்க த்தான்” என கூறவும்,
“வீட்டுக்கு வந்ததும் கால் பண்ண சொன்னேனே தேவா!” என கார்த்திகைசெல்வன் கூறவும் ஒரே நேரமாய் அமைந்தது.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
4
+1
2