பூ-01
அழகிய காலைப் பொழுது அது! தனது காலைநேர நடை பயிற்சியை அந்தப் பெங்களூரின் கடற்கரையில் முடித்துக் கொண்ட பாவையவள், மணலில் அமர்ந்தபடி வேர்வை சொட்டும் தன் புருவங்களை நீவிக் கொண்டாள்.
அவள் அக்னிகா! அவளது பார்வையை கவனிப்போருக்கு என்னவோ, மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கும் அந்தச் சூரியோதயத்தை ரசிப்பதைப் போல் தெரியலாம்… ஆனால் அது இலக்கின்றி அந்த இளஞ்சிவப்பு வானை வெறித்துக் கொண்டிருப்பது அவள் மட்டுமே அறிந்தது!
அழகாய் இடைவரை வளர்ந்து சுருள் சுருளாய் சுருண்டிருக்கும் கரும் கேசம், கீழே மட்டும் செம்பட்டை நிறம் பூசியிருந்தது. அது எவ்வித ரசாயனப் பூச்சுமின்றி இயற்கையாய் சிவந்துபோனவை!
நல்ல ஐந்தரையடி உயரமும், உயரத்திற்கு ஏற்ற உடல் வாகும், எடுப்பான பெண்மையும், மானிறம் கொண்ட தோளும், பெண்ணுக்கே உரித்தான மென்மை சற்றே குறைந்த, முரடான உடற்கட்டுமென்று பார்ப்பதற்கு வித்தியாசமான அழகியாகவே காட்சி தருவாள்.
மனதில் என்னென்னவோ ஓலங்கள் அவளை எப்போதும் போல் இம்சிக்க வந்தது. அதைப் பெருமூச்சோடு வெளியே தள்ளியவள் எழுந்து தனது சட்டையைச் சீர்செய்துகொண்டு தன் மிதிவண்டியில் வீடு வந்து சேர்ந்தாள்.
சிறிதாய், அழகாய் ஒருவர் தங்குவதற்கான வசிதகளைக் கொண்ட வீடு அது! ஆங்காங்கே அவள் வளர்க்கும் பூச்செடிகளுக்கு என்றும் போல் தவறாமல் நீர் சேர்த்தவள், வீட்டைச் சுத்தம் செய்து, தானும் குளித்து வந்தாள்.
அடுத்து அவளது நிமிடங்கள் பரபரப்பாய் நகர, விரைவே தனக்கான காலை மற்றும் மதிய உணவைத் தயார் செய்யத் துவங்கினாள்.
அவளது பரபரப்பை குழைக்கும் விதமாய், வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க, சற்றே எரிச்சல் பிறந்ததை புறக்கணித்தபடி கதவைத் திறந்தாள்.
அழகிய புன்னகையுடன் முப்பதுகளில் இருக்கும் ஓர் ஆண் மகன் நின்று கொண்டிருக்க, தன் முகத்திலிருந்த வியர்வையோடு சேர்த்து, எரிச்சலையும் முற்றுமாய் துடைத்து, மலர்ந்து புன்னகைத்தவள், “அண்ணா.. வாங்க வாங்க” என்றாள்.
“இல்லடாமா.. காலேஜ் கிளம்பிட்டு இருப்ப. டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. வீட்டு வாடகையை நான் கேட்கும் முன்னே தவராம அனுப்பிடுறியே.. எனக்கு வேலை வைக்க மாட்டியா?” என்றபடியே தன் பையைத் துழாவினான்.
“நம்ம கடமையை யாரும் நினைவூட்டிச் செய்யக் கூடாதுல அண்ணா?” என்று அவள் கூற,
“கண்டிப்பாடா கண்ணம்மா” என்றவன் அவளுக்காக வாங்கிய ஒரு ஆங்கில புத்தகம், பேனா, மற்றும் எழுத ஒரு குறிப்பேடு கொடுத்தான்.
அது மனநலத்தை பலப்படுத்தும் ஒரு ஆங்கிலப் புத்தகம். புன்னகையுடன் வாங்கியவள் மனமார நன்றி கூற,
“அண்ணாகிட்ட இப்படித்தான் நன்றி சொல்றதா?” என்று செல்லமாய் கடிந்தவன், “காலேஜ்கு லேட்டாகப் போகுது.. பார்த்துப்போ. நல்லா படிச்சு நல்ல இடத்துக்கு வரனும்டா கண்ணம்மா” என்று தானும் மனமார வாழ்த்தினான்.
புன்னகையுடன் அவனுக்கு விடை கொடுத்து உள்ளே நுழைந்தவள் மனமெங்கும் சந்தோஷமான அமைதி!
அவன் அதிரூபன். அவள் வசிக்கும் வீட்டின் உரிமையாளன். திருமணம் முடிந்து மனைவி, மற்றும் ஒரு ஆண் குழந்தை என சந்தோஷமாய் வசிப்பவன். தனக்கு வாடகைக்கு ஒரு வீடு கிடைக்காது அக்னிகா தவித்தபோது ஆபத் பாண்டவனாய் அவளுக்கு உதவி, தனியே வசிப்பவளுக்கு பாதுகாப்பையும், அவளுக்கு மனதளவில் ஒரு துணையாகவும் இருத்து வருகின்றான்.
புத்தகத்தை உள்ளே வைத்துவிட்டு உணவை தயார் செய்து முடித்தவள் அனைத்தையும் தனது அழகிய இளநீல நிற ‘பேக் பேகில்’ வைத்துக் கொண்டு புறப்பட்டாள்.
தனது மிதிவண்டியில் விரைவே சென்று மின்சார ரயிலைப் பிடித்துக் கொண்டவள், தான் பயிலும் கல்லூரி இருக்கும் இடத்திற்கான பயணச்சீட்டுடன் உள்ளே சென்று அமர்ந்தாள்.
பையை மடியில் வைத்துக் கொண்டு அலைபேசியை பார்வையிட்டவள் குறிப்பிட்ட அந்த நிறுத்தம் வரவும், படபடக்கும் இமைகளுடன் அவ்வப்போது திறந்திருக்கும் கதவின் வழி உள்ளே ஏறுபவர்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் எதிர்ப்பார்த்த!? நபர் வரவில்லை போலும்… மனதில் அவளே அறியாத வகையில் எழுந்த சிறு ஏமாற்றத்தை தனக்குள்ளேயே புதைப்பதை அறியாது புதைத்துக் கொண்டு மீண்டும் அலைபேசியில் பார்வையை ஓட்டினாள்.
“ஹலோ… ஆமாடா.. தேடின மாதிரி தான் இருக்கு” என்று அவளுக்கு வெகு சமீபமாக அந்த குரல் கேட்க,
தன் கட்டுப்பாட்டை மீறி சட்டென நிமிர்ந்தாள்.
அழகிய, வசீகர புன்னகையுடன் காக்கி உடையில் மிடுக்காய் நின்று, அலைபேசியில் யாருடனோ பேசுவதைப் போல் பாவனை செய்துக் கொண்டிருந்தான் அவன்…
அவனைக் கண்டதும் உள்ளுக்குள் பூத்த பூக்களை அடுத்த நொடியே புதைத்து மடியச் செய்தவள் தன் சிரம் தாழ்த்திக் கொண்டாள்.
அதில் தனக்குள்ளாகவே புன்னகைத்துக் கொண்டவன், “நல்ல நடிப்பு டா.. நல்லாதான் நடிக்க கத்துகிட்டிருக்க” என்று கூற,
அவன் பேச்சில் எழுந்த எரிச்சலை சிரமப்பட்டு கட்டுப் படுத்தினாள்.
முறைத்து வைத்தால், அதற்கும் உரிமையுள்ளவரை தானே முறைக்க இயலும் என்று பாடம் நடத்துவானே?
பல்லைக் கடித்துக் கொண்டு அலைபேசியில் கவனம் வைப்பதைப் போல் பாவனை செய்தவள் தன் நிறுத்தம் வரவும் விறுவிறுவென எழுந்து வெளியேறினாள்.
தானும் அவள் பின்னோடே வந்தவன், “அக்னி…” என்று அழைக்க,
அவன் அழைத்ததே கேட்காததைப் போல் நடந்தாள்.
நான்கே எட்டில் அவளுக்கு முன் வந்து நின்றவன், “அக்னி..” என்று தன் கையிலுள்ள காகிதப் பூவை அவளிடம் நீட்ட,
அதை பார்க்கும்போதெல்லாம் எழும் உட்ச பட்ச கோபத்தை அடக்கவே இயலாதவளாய் அதை கசக்கி தூக்கி எறிந்தவள், “என்னைக் கொலைகாறி ஆக்காதீங்க ப்ரியன்” என்றாள்.
அவள் கண்களில் கோபத்தை விடவும் மிதமிஞ்சிய வலி பிரதிபலித்தது! அவளுக்கு இந்தக் காகிதப் பூக்களைக் கண்டாலே கோபம் கண்ணை முட்டிக் கொண்டுதான் வரும். அதை அடக்கத்தான் பிரம்ம பிரயத்தனம் எடுத்துக் கொண்டு இருக்கின்றாள். ஆனால் அதை ஆடவன் அவன் தவிடுபொடியாக்கிக் கொண்டே இருக்கின்றான்.
ஒரே ஒருமுறை அவள் இந்தக் காகிதப் பூவைத் தான் வழங்குவதற்கான காரணம் கேட்டால் போதும் அவனுக்கு.. அதற்கு அவன் வைத்திருக்கும் அழகிய பதிலைக் கூறி, அப்பூமீதான அவளது வெறுப்பையே மாயமாக்கிவிடுவான்.. ஆனால் அவள் கேட்கத்தான் சித்தமாக இல்லையே!
“கொலைகாறி.. உன்ன பார்த்து உசுர் போச்சு..” என்று அவன் பாட,
அவனை முடிந்தமட்டும் முறைத்துவிட்டு விறுவிறுவெனச் சென்றாள்.
அங்கிருந்து நடக்கும் தொலைவிலிருக்கும் தனது கல்லூரிக்குப் போனவள் முதலில் கழிப்பறைக்கு சென்று தன் முகத்தில் குளிர்ந்த நீரை அள்ளித் தெளித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப் படுத்தினாள். தண்ணீரோடு கலந்த கண்ணீரை வெளியே துரத்திவிட்டு தனது கைக்குட்டையில் முகம் துடைத்தவள் தனது வகுப்பிற்கு சென்றாள்.
அங்கேதான் அவள் சமீபமாக ‘மியூசிக் டெக்னாலஜி’ எனப்படும் இசை தொழில்நுட்பத்தில் தனது டிப்ளமோ படிப்பைப் படித்துக் கொண்டிருக்கின்றாள்.
அவள் ஏற்கனவே ‘கிராபிகல் எடிட்டிங்’ என்ற படிப்பில் தனது பட்டப் படிப்பை முடித்து, அக்கல்லூரி அருகிலேயே உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருக்கும் ‘ஃபோட்டோ ஸ்டுடியோ’வில் வேலைப் பார்த்து வருகின்றாள்.
அவளது கனவில் சங்கீதம் பெரும் பங்கு வகிக்கின்றது தான். முறையாகக் கர்நாடக சங்கீதம் பயின்றதில் துவங்கி, புல்லாங்குழல், வயலின் மற்றும் பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டது வரை அவளது ஆர்வத்திற்கான தீணியாய் அனைத்தையும் பயின்றாள். ஆனால் அவளது நிலை, அவளுக்கு ஒரு பாட்டு வகுப்பு வைத்திடும் வாய்ப்புக் கூட அமைவேணா என்கின்றது.
நடந்த சம்பவத்திற்கு பின்பும், ஏதோ தனக்கு அடைக்கலமும், படிக்க இடமும், பார்க்க வேலையுமென ஒவ்வொன்றிலும் ஒரு நல்ல உள்ளத்தின் உதவி கிடைத்திருப்பது வரை திருப்தி என்றுதான் தன்னைத் தேற்றிக் கொள்கின்றாள்.
மதியம் வரை மட்டுமேயான தனது கல்லூரி நேரத்தை முடித்துக் கொண்ட அக்னிகா விரைவே தனது வேலையிடத்தை அடைந்தாள்.
அவளுக்கென்றே காத்திருந்த அக்கடையை நடத்தும் பெண், மற்றும் அவள் தோழியான மஹதி, “அக்னி.. உனக்குதான்டி வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா பேபி” என்க,
சன்னமான சிரிப்புடன், “என்ன உதவி?” என்றாள்.
“என் பிரண்ட் ப்ரஜன் இருக்கான்ல? அவனோட குரல்ல இந்த நிகிதா கிட்ட பேசி, அவளையும் நைட் படத்துக்கு வர வைக்கனும். ப்ளீஸ் ப்ளீஸ்டா.. ரெண்டு பேருக்கும் சண்டை. எப்படியாச்சும் அவங்களை மீட் பண்ணிக்க வச்சா எல்லாம் சால்வ் ஆயிடும்” என்று மஹதி கூற,
“சரி சரி” என்று சிரித்தவள், தன் தொண்டையை செறுமிக் கொண்டு “ம்ம்” என்றாள்.
மஹதியும் தன் தோழிக்கு அழைக்க, அவளது தோழன் பிரஜனின் குரலில் துளியும் பிசிரின்றி பேசி, அப்பெண்ணை வர சம்மதிக்க வைத்திருந்தாள்.
அழைப்பை துண்டித்தவுடன் அக்னியை அணைத்துக் கொண்ட மஹதி, “லவ் யூ டா தங்கம்.. உன் மிமிக்ரி திறமை ரெண்டு நல்ல உள்ளங்களை சேர்த்து வைக்க சூப்பரா யூஸ் ஆயிருக்கு” என்றாள்.
“ஓகே ஓகே.. நான் போய் என் வர்க் பார்க்குறேன்” என்று அக்னி கூற,
“எஸ்டா.. இன்னிக்கு நமக்கு வேலை அதிகம்” என்றவள் வேலை பட்டியலைக் கூறியபடி அவளுடன் சேர்ந்து தானும் வேலையில் இறங்கினாள்.
இருவருமாய் சேர்ந்து அன்றைய நாள் கொடுக்க வேண்டிய புகைப்பட தொகுப்புகளை எல்லாம் செய்து கொண்டும், பத்திரிக்கைகளுக்கான வடிவங்களை உருவாக்கிக் கொண்டும் என அன்றைய நாளை மிக அழகாகவே கடந்தனர்.
மாலை ஆறு மணியாகவும், “அக்னி.. மணியாச்சு நீ கிளம்புடா. ட்ரெயின் மிஸ் பண்ணிட போற” என்று மஹதி கூற,
“இதோ இதோட முடிஞ்சது மஹி.. அடுத்த ட்ரெயின்ல போயிக்கலாம் நோ ப்ராப்ளம்” என்று கூறினாள்.
“ம்ம்.. உன்னை தான் பத்திரமா கூட்டிட்டுப் போக போலீஸே கூட வராரே” என்று மஹதி கேலி செய்ய,
அவளை முறைத்தவள், “மஹி..” என்று பல்லைக் கடித்தாள்.
“ஓகே ஓகே கூல்..” என்ற மஹதி தன் வேலையைப் பார்க்க, தன்னுடைய வேலைகளை முடித்துக் கொடுத்தவள் ஏழு மணி போல் புறப்பட்டாள்.
கிளம்பி சென்றவள் கரம் பற்றி நிறுத்திய மஹதி, “அண்ணாவோட லவ் ட்ரூவா இருக்கு அக்னி.. கொஞ்சம் கன்ஸிடர் பண்ணலாம்ல?” என்று கேட்க,
அவளை இயலாமையோடு ஒரு பார்வை பார்த்தவள், “நான் ஏன் வேணாம்னு போறேன்னு உனக்கு புரியலையா மஹதி?” என்று கேட்டாள்.
“எல்லாரும் ஒரே மாதிரி இல்ல அக்னி… அவருக்கும் உன்னோட பாஸ்ட் தெரியும் தானே? தெரிஞ்சே தான் எல்லாம் ஏத்துக்குறாரே” என்று மஹதி கேட்க,
“எனக்கு மனசு வரனுமே மஹி” என்றாள்.
தன் கண்கள் லேசாய் கலங்கவும், “ப்ளீஸ் மஹி.. அழ வச்சுடாத” என்று அக்னி கூற,
“சரி விடு.. போய் சாப்டு தூங்கு” என்று அனுப்பி வைத்தாள்.
செல்பவளையே ஆழ்ந்த பார்வை பார்த்த மஹதி ஒரு பெருமூச்சுடன் தன் வேலையைத் தொடர,
சென்று தன் இடம் செல்வதற்கான பயணச் சீட்டுடன் ரயிலில் நுழைந்தாள்.
அவளுக்காகவே ஒரு இருக்கை காத்திருந்தது. அவனுக்கு அருகில்!!!
சென்று அமர மனம் வைத்த தடையை உடைப்பதற்கென்றே அவன் இருக்கையை விட்டு எழுந்து நின்றிட, அவனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டவள் சென்று அமர்ந்தாள்.
அவனது சோர்ந்த தோற்றம் காண சற்றே சங்கடமாக உணர்ந்தவள் இடைவெளி விட்டு அமர, தானும் அமர வேண்டுமென அவள் கூறுவது புரிந்தோனாய் அவளருகே சிறு இடைவெளியோடு அமர்ந்துகொண்டான்.
அவனுக்கான நிறுத்தம் வந்தும் அவன் இறங்கி செல்லாததில் குழப்பத்துடன் அக்னி அவனை ஏறிட,
“லேட்டாச்சு அக்னி.. உன்னை விட்டுட்டுப் போறேன்” என்றான்.
“ப்ச்.. பிரியன்.. நான் ஒன்னும் குழந்தை கிடையாது… வீட்ல சுசி வெயிட் பண்ணுவா உங்களுக்கு. போங்க” என்று அழுத்தமாய் அவள் கூற,
“சுசி வீட்ல இல்லைடா. நைட் டியூட்டி” என்றான்.
“ப்ச்..” என்று சளித்துக் கொண்டவள் திரும்பிவிட, தானும் அமைதியாய் அவளோடு வந்தான்.
அவளது நிறுத்தம் வரவும் இறங்கியவள் தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு செல்ல முற்பட, அதன் சங்கிலி அவிழ்ந்திருந்தது.
“ப்ச்.. ச்சை” என்று உச்சகட்ட கோவத்தை சிரமப்பட்டு அடக்கியவள் கண்களை வந்து முட்டிய கண்ணீரை வெகு பிரயத்தனப்பட்டு அடக்கினாள்.
குனிந்து தானே அதை சரிசெய்ய முயற்சித்தவளுக்கு இருள் தடையாய் அமைய, அலைபேசியை எடுத்து ஒளியை வரச்செய்தவள் அதை ஒரு கையில் பிடித்தபடி மாட்ட இயலாது தவித்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் அவள் பொறுமை பறந்தோட, “அய்யோ..” என்ற முனகலேடன் அலைபேசியை வண்டி கூடையில் எறிந்தவள் அதை தள்ளிக் கொண்டே செல்லத் துவங்கினாள்.
அப்போதே அவள் பின்னோடே சிவப்ரியன் வருவதைக் கண்டாள்.
“என்னாச்சு அக்னி?” என்று அவன் கேட்க,
பதிலின்றி தன் வேகத்தைக் கூட்டினாள்.
அவையெல்லாம் அவன் வேகத்தின் முன் செல்லுபடியாகுமா என்ன?
நொடியில் காரணத்தை புரிந்துகொண்டவன், “இதே என் இடத்தில் வேற யார் இருந்தாலும் உதவி கேட்டிருப்ப தானே?” என்று கேட்க,
“ஆமா.. கேட்டிருப்பேன்.. இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” என்று கத்தியிருந்தாள்.
அவன் முகமே சுருங்கிவிட, அதை கண்டு தன்னையே நிந்தித்தவள் விறுவிறுவென்று வீட்டிற்கு சென்று சேர்ந்தாள்.
வாசல் கதவினை திறந்தவள் அதை மூடும் தருவாயில் அவனை நோக்க, ஒரு காகித ரோஜாவை அவளை நோக்கி நீட்டியவன் “லவ் யூ அக்னி” என்றான்.
அந்த ரோஜாவை ஆத்திரத்தோடு பார்த்தவள் பூட்டவிருந்த கதவைத் திறந்துக் கொண்டு வந்து அதனைப் பிடுங்கி கிழித்தெறிந்துவிட்டுச் சென்றாள்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவளுக்கு அத்தனை நேரம் முட்டிய அழுத்தம் வெடித்துவிட்டது போல் அழுகை கொட்டித் தீர்த்தது.
அவள் காதுகளை வந்து மோதிய என்னற்ற குரல்களை சிரமப்பட்டு துறத்த முயற்சித்தவள் காதுகளைப் பொத்திக் கொண்டு வாய்விட்டுக் கதறத் துவங்கிட, ‘சுசி’ என்ற பெயரிலிருந்து அவளுக்கு விடாது அழைப்புகள் வ
ரத் துவங்கியது.
அதை கிரகித்துத் தன் கண்ணீரை அடக்கியவள் அழைப்பை ஏற்க, “அக்னி..” என்று சுசி அழைத்ததும் மீண்டும் வெடித்து அழுதவள், “சுசி.. என்னால முடியலை” என்று கதறிவிட்டாள்.
-தொடரும்…