அத்தியாயம் 19
காட்டுக் கோவிலுக்கு வெளியே வந்து நின்ற ரக்ஷனைக் கண்டதும் இரா அவனை நோக்கி, “ரக்ஷா…” என்று விளித்துக் கொண்டே ஓட எத்தனிக்க, அவளின் கரம் பற்றித் தடுத்த மாடசாமியோ, “அவன் ரக்ஷனா இங்க வரல இராம்மா.” என்றார்.
அதில் அதிர்ந்த இரா, அப்போதுதான் வந்தவனை உற்று நோக்கினாள்.
அவனின் உடல்மொழியிலும் கருவிழியிலும் இருந்த மாற்றத்தைக் கண்டு கொண்ட இரா, “ரக்ஷன் அவன் கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கானா? அப்படின்னா, அந்த பூஜை…” என்று சரியாகவே யூகித்தாள்.
இவர்களின் பேச்சை முழுதாக நம்பா விட்டாலும், ரக்ஷனின் மாற்றத்தை அத்வைத்தும் கண்டு கொண்டுதான் இருந்தான்.
அன்று, அவரசப்பட்டு ரக்ஷன் செய்த காரியத்தினால் ஏற்பட்ட விளைவு இது என்பதால், இப்போது தானும் எதையும் ஆராயாமல் முடிவுக்கு வர வேண்டாம் என்று பொறுமையாகவே இருந்தான் அத்வைத்.
“இப்போ என்ன பண்றது தாத்தா? ரக்ஷனை சூனியனோட கட்டுப்பாட்டுல இருந்து வெளிய கொண்டு வரணும். ஆனா, ரக்ஷனைப் பார்த்தா, அதுக்கு அவ்ளோ சுலபமா அனுமதிக்க மாட்டான்னு தோணுது.” என்று இரா கூற, “நமக்கு வேற வழி இல்ல. அவன் உன்னை நெருங்காம நாங்க பார்த்துக்கிறோம். நீ வசியத்துல இருந்து அவனை மீட்குற மந்திரத்தை சொல்ல ஆரம்பி.” என்ற மாடசாமி, அத்வைத்திற்கு கண்ஜாடையில் ஏதோ சொல்ல, அவனும் புரிந்ததாக தலையசைத்தான்.
இரா கோவில் பிரகாரத்தில் வாயிலை பார்த்தது போல அமர்ந்து, அம்மனை வேண்டிக் கொண்டு கண்களை மூடி, மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்தாள்.
அத்வைத்தோ வேகமாக உள்ளே சென்று அவன் கொண்டு வந்த பையில் எதையோ துழாவிக் கொண்டிருக்க, வெளியே மாடசாமி மட்டும் இருப்பதைக் கண்ட ரக்ஷனின் உடலை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூனியனோ எகத்தாளமாக சிரித்தான்.
“நீ என்னை தடுக்கப் போறீயா?” என்று நக்கலாக கேட்டு சிரித்த சூனியன், “இந்த சண்டை எனக்கும், என்னை அடைச்சு வச்சவளோட வம்சத்தின் வாரிசுக்கும்தான். என்னை அழிக்கப் போறாளா அவ? மந்திரக்கலையில் சகலமும் கற்ற வசுந்தராவாலேயே என்னை அழிக்க முடியல. நாலு வருஷத்துக்கு முன்னாடி மந்திரத்தைப் பத்தி தெரிஞ்ச இவ, என்னை அழிப்பாளா? வெளிய கூப்பிடு அவளை… நானா அவளான்னு மோதி பார்த்துடுவோம்.” என்று கொக்கரித்தான்.
“அவளைக் குறைச்சு எடை போடுறது உனக்குதான் ஆபத்து.” என்று மாடசாமி எச்சரிக்கும் வேளையிலேயே அங்கு வந்து சேர்ந்தான் அத்வைத்.
“அட, நீயும் வந்துட்டியா? என்னை அழிக்க பிறப்பெடுத்தவளோட நோக்கத்தை தகர்க்க, உன்னை அறியாமலேயே எனக்கு ரொம்ப உதவி செஞ்சுருக்க. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நீ என்னோட வந்து சேர்ந்துட்டா, நீ கேட்கிற எதையும் உனக்குத் தருவேன். இது இந்த சூனியனோட வாக்கு.” என்று ஆர்ப்பாட்டமாகச் சிரித்தான் சூனியன்.
அவன் கூறியது புரியாமல் அத்வைத் மாடசாமியை பார்க்க, “இப்படித்தான் எல்லாரையும் அவனோட மாயவலைல விழ வைக்கிறான். அவன் பேச்சைக் கேட்காத. நீ கொண்டு வந்த பொருள் தயாரா?” என்று வினவினார் மாடசாமி.
அதற்கு அத்வைத் ஆமோதிப்பாக கண்களை மூடித் திறந்து, அவன் கையிலிருந்த பொருளைக் கண்டான்.
அவை மயக்க மருந்து ஏற்றப்பட்ட இரண்டு ஊசிகள்.
எப்போது ரக்ஷன் ஹாலுசினேஷனால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று தெரிய வந்ததோ, அப்போதே மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மயக்க மருந்தை வாங்கி தன்னுடன் வைத்திருந்தான்.
சற்று முன்பு அந்த புத்தகத்தை பைக்குள் வைக்கும் போது, அந்த ஊசிகளை கவனித்த மாடசாமி அதைப் பற்றி வினவியிருந்தார்.
சூனியன் ரக்ஷனின் உடலை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், அந்த உடல் மயக்க நிலைக்கு சென்றால், சூனியனின் கட்டுப்பாடு பலவீனமாகும். அதே நேரத்தில், இரா அவளின் மந்திர சக்தியின் மூலம் ரக்ஷனின் உடலை சூனியனின் கட்டிப்பாட்டிலிருந்து முற்றிலுமாக மீட்டு விடலாம் என்பதே அவர்களின் இப்போதைய திட்டம்.
அவர்களின் திட்டத்தை உணர்ந்து கொண்ட சூனியன், ‘முடிந்தால் முடித்துக் காட்டுங்கள்’ என்பது போல இடத்திலிருந்து அசையாமல் நிற்க, அத்வைத் ரக்ஷனை நோக்கி ஓடினான்.
ஆனால், அத்வைத் ரக்ஷனை நெருங்கும் முன்னரே, யாரோ இருவரால் தூக்கியெறியப் பட்டான்.
அதில் அதிர்ந்த அத்வைத், தன்னைத் தாக்கியது யாரென்று பார்க்க, அங்கு ரக்ஷனுக்கு முன், அவனைப் பாதுகாப்பது போல தேவாவும் வானதியும் நின்றிருந்தனர்.
அவர்களைக் கண்ட மாடசாமிக்கும் அதிர்ச்சிதான்.
ஒரே சமயத்தில் மூவரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அளவிற்கு சூனியனின் சக்தி பெருகி விட்டதா என்ற திகைப்பில் இருந்தார் அவர்.
அத்வைத்தோ, எப்படியும் ரக்ஷனை நெருங்கி விட வேண்டும் என்ற முனைப்பில் முன்னேற, அவனை தடுத்துக் கொண்டிருந்தனர் தேவா மற்றும் வானதி.
சாதாரண நிலையில் அவர்கள் இருவரையும் அத்வைத் சமாளித்துக் கடந்திருப்பான். ஆனால், இப்போது இருவரும் அந்த சூனியனின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால், அவர்களிடம் அசாத்திய பலம் தென்பட, அத்வைத்தால் என்ன முயன்றும் அவர்கள் இருவரையும் கடந்து ரஷனிடம் செல்ல முடியவில்லை.
அதைக் கண்ட ரக்ஷன் உடம்பில் இருந்த சூனியன் சிரிக்க, அது அந்த காடு முழுவதுமே எதிரொலித்தது.
“என்னோட கொஞ்ச சக்தியையே உங்களால சமாளிக்க முடியலையே!” என்று சொல்லி சொல்லி சிரித்தான்.
“இந்த உலகம் எனக்காக, நான் வந்து ஆளணும்னு காத்துட்டு இருக்கு. இந்த முறை, அதை யாராலயும் தடுக்க முடியாது. உன்னால, அவளால, ஏன் இந்த கோவில்ல சிலையா இருக்க அம்மனால கூட முடியாது!” என்று கத்தினான் சூனியன்.
அதற்கு மாடசாமியோ, “உன்னால இந்த கோவிலுக்குள்ளயே நுழைய முடியாது. இதுல இந்த உலகத்தையே ஆளப் போறீயா?” என்றார் நக்கலாக.
அது சூனியனின் கோபத்தை விசிறியிருக்க வேண்டும்.
அதே கோபத்துடன், “முட்டாள்! யாரைப் பார்த்து முடியாதுன்னு சொல்ற? இந்த சூனியனால முடியாததுன்னு எதுவுமே இல்ல.” என்று அகங்காரத்துடன் பேசிய சூனியன், அந்த கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்க முயன்றான்.
என்னதான் முதலில் அவனால் முடியாமல் போனாலும், நொடிகள் கடக்க கடக்க அவனின் சக்திகளை ரக்ஷனின் உடலில் முழுவதுமாக செலுத்தி, கோவிலுக்குள் புக முற்பட்டான்.
இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ரக்ஷனின் உடல்தான்!
தேவா மற்றும் வானதியின் பிடியில் மாட்டிக் கொண்ட போதும், அதைக் கண்டு கொண்ட அத்வைத், மாடசாமியிடமும் அதைப் பற்றிக் கூற, அவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.
சூனியனின் இந்த காய்நகர்த்தலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும்!
மறுபக்கம், வெளியே கேட்கும் சத்தங்கள் அனைத்தும் இராவின் மந்திர உச்சாடனங்களை முழுமையடைய செய்யவில்லை.
என்னதான், கவனத்தை மந்திர உச்சரிப்பில் மட்டும் செலுத்த வேண்டும் என்று அவள் எண்ணினாலும், வெளியே இருப்பவர்களின் பாதுகாப்பை எண்ணி பெரிதும் சஞ்சலமாக இருந்தது அவளின் மனம்.
அதுதானே சூனியனுக்கும் வேண்டும்!
பல யுகங்களாக மனிதர்களுடன் இருந்து வருபவனுக்குத் தெரியாதா, அவர்களை மனரீதியாக எப்படி பலவீனப்படுத்த வேண்டும் என்பது!
இங்கும் அவனின் அந்த திட்டம் சரியாக வேலை செய்தது என்றே சொல்ல வேண்டும்.
இரா மெதுவாக அவளின் கவனத்தை இழக்கத் தொடங்கினாள். அது முற்றிலும் பிசகிப் போனது, அத்வைத் ரக்ஷனின் நிலை பற்றி மாடசாமியிடம் கத்தியபோது.
‘என்னவாகிற்றோ!’ என்று பயந்தபடி இரா வெளியே வர, அதைக் கண்ட மாடசாமி, “இரா, நீ ஏன் வெளிய வந்த? இப்போ உன்னோட கவனம் முழுசும் மந்திரத்துலதான் இருக்கணும். இங்க என்ன நடந்தாலும், அதைப் பத்தி கவலைப்படாத.” என்று மாடசாமி கத்த, அது அவளின் செவியில் விழவே இல்லை.
அவளின் பார்வை முழுவதும் கோவிலுக்குள் வர முயற்சிக்கும் சூனியனிலும், கோவிலுக்குள் இருக்கும் மந்திர சக்தியினால் சூனியன் இருக்கும் ரக்ஷனின் உடல் நெருப்பில் எரிவதிலுமே இருந்தது.
“நோ…” என்று இரா கத்த, அவளைக் கண்டதும் கோணல் சிரிப்புடன், “இரா… வா வா, உனக்காகத்தான் காத்துட்டு இருந்தேன். இப்போ உன் கண்ணு முன்னாடியே உன் குடும்பத்தை சேர்ந்தவங்க இறக்கப் போறாங்க. முதல்ல, இவன்!” என்று பேசிய சூனியன், மீண்டும் கோவிலுக்குள் நுழைய முற்பட, ரக்ஷனின் உடல் மெல்ல மெல்ல தீப்பற்றத் தொடங்கியது.
சிறிது யோசித்த இரா, ‘வேறு வழியே இல்லை’ என்பது போல, தன் சக்தியைக் கொண்டு கோவிலை சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் மந்திரக்கட்டை நீக்கியிருந்தாள்.
அடுத்த நொடி, அந்த மந்திரக்கட்டுடன் ரக்ஷனின் உடலை தழுவியிருந்த நெருப்பும் நீங்கியது.
அவளிடமிருந்து இதை எதிர்பார்க்காத மாடசாமியோ, அவளை உலுக்கி, “ஏன் இப்படி செஞ்ச இரா? தப்பு பண்ணிட்ட… பெரிய தப்பு பண்ணிட்ட…” என்று தலையில் அடித்துக் கொள்ள, “அதுக்காக ரக்ஷன் சாகட்டும்னு விட்டுட சொல்றீங்களா தாத்தா?” என்று அழுது கொண்டே வினவினாள்.
இப்போது அந்த கோவிலுக்குள் சிரமமேயின்றி நுழைந்த சூனியனோ, “நான்தான் சொன்னேன்ல, என்னால செய்ய முடியாத காரியம் எதுவும் இல்ல. இந்த மனுஷங்களுக்குள்ள இருக்க, பொறாமை, பேராசை மாதிரியான தீய குணங்கள் மட்டுமில்ல, அன்பு, பாசம், காதல் மாதிரியான உணர்வுகளும் கூட எனக்கு உதவியாதான் இருக்கும். உண்மையை ஒத்துக்கோங்க, உங்களால என்னை எதுவுமே செய்ய முடியாது. ஏன்னா, நீங்க பலவீனமானவங்க!” என்று குதூகலித்துச் சிரித்தான்.
அடுத்து என்ன என்று மாடசாமியும் இராவும் யோசிக்க, அதற்கான காலவகாசம் இல்லை என்பது போல, “இப்போ என் கையால சாகத் தயாரா இரா?” என்று கோணல் சிரிப்பு சிரித்த சூனியன், அவனின் சக்திகளை திரட்டினான்.
அங்கு நடப்பதை தடுக்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்தில் அந்த இருவரின் கைகளில் சிக்கியிருந்த அத்வைத்தை, இருவரும் கீழே மண்டி போட்டு அமர வைக்க, இந்த நொடி விட்டால், அனைத்தும் கைமீறி போய்விடும் என்பதை உணர்ந்த அத்வைத், அந்த கோவில் மண்ணையே ஆயுதமாக்கி, தன்னைப் பிடித்திருந்த இருவரின் கண்களிலும் அதைத் தூவினான்.
அவர்களின் பிடி சற்று தளர்ந்தாலும், அவர்களிடமிருந்து முழுதாக வெளிவர, அவனுக்கு சில நொடிகளும் பெரும் போராட்டமும் தேவையாயிருந்தன.
இங்கோ, எதிர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற இராவை நோக்கி சூனியன் அவன் சக்திகளை ஒன்று திரட்டி ஆயுதமாக மாற்றி, அதைச் செலுத்தினான்.
அதே நொடியில் ரக்ஷனை நோக்கி பாய்ந்த அத்வைத், அவனின் உடலில் இரு ஊசிகளிலிருந்த மருந்தையும் செலுத்த, ரக்ஷனின் உடல் தோய்ந்து விழுந்தது.
ஆனால், அதற்கு முன்னரே சூனியன் அவன் ஆயுதத்தை செலுத்தி இருந்தானே!
அது இராவை தாக்கும் இறுதி நொடியில் இடையில் புகுந்து அந்த ஆயுதத்தை தனக்குள் வாங்கி, அவளைக் காப்பாற்றி இருந்தார் மாடசாமி.
நடந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு நொடிக்குள் நிகழ்ந்திருக்க, அதன் விளைவுகளை எதிர்பார்க்காத அத்வைத்தும் இராவும் ஸ்தம்பித்து போயினர்.
என்னதான் ரக்ஷனை மயக்கமுறச் செய்தாலும், தேவாவும் வானதியும் இன்னமும் அந்த சூனியனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொண்ட அத்வைத், சிறிதும் தாமதிக்காமல், உடைந்து கீழே விழுந்திருந்த மரத்தின் கிளையை எடுத்து, இருவரின் தலையிலும் அடித்து அவர்களையும் மயக்கமுறச் செய்திருந்தான்.
அவர்களை மயக்கமுறச் செய்தும், அத்வைத்தினால் அவனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
நடந்து போன அனர்த்தத்திற்கு தானும் ஒரு காரணம் என்று அவனின் மனம் அவனைக் குற்றவுணர்வில் தள்ளியது. ஒரே ஒரு நொடி முன்னே சென்றிருந்தால், இப்படி மாடசாமி இறக்கும் தருவாயில் இருந்திருக்க மாட்டாரே என்று கூக்குரலிட்டது அவனின் உள்ளம்.
அத்தனை நேரம், இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன், இப்போது அவை அனைத்தும் உண்மை என உணர்ந்தான். அத்துடன், இதில் இருக்கும் ஆபத்தையும் அறிந்தான்.
அதிர்ச்சியில் உறைந்து நின்ற இராவை மாடசாமி அருகே அழைக்க, அப்போதுதான் நடந்தது உண்மை என உணர்ந்து கொண்ட இரா, தலையிலடித்துக் கொண்டு, “நான் தப்பு பண்ணிட்டேன்… தாத்தா…” என்று கதறியபடி அவரின் கரத்தைப் பற்றினாள்.
மாடசாமியோ உயிர் போகும் தருணத்திலும் கூட இராவின் மனதிலிருக்கும் குற்றவுணர்வை நீக்கும் பொருட்டு, “நீ எந்த தப்பும் பண்ணல இராம்மா. நடக்கணும்னு இருந்தா, அது நடந்தே தீரும்.” என்றவர், அதை அருகே வந்த அத்வைத்தைப் பார்த்தபடி கூறினார்.
மேலும், “இதுக்காக நீங்க ரெண்டு பேரும் உங்களை நீங்களே வருத்திக்க வேண்டாம்.” என்று மூச்சு விட முடியாமல் கூற, “இல்ல தாத்தா… நான்தான் காரணம். நான் தொடர்ந்து மந்திரம் சொல்லியிருந்தா, இதெல்லாம் நடந்திருக்காது.” என்று விசும்பினாள் இரா.
“உன் கண்ணு முன்னாடி ஒருத்தன் சாகுறதை நீ தடுக்கத்தான் நினைச்ச இரா. இது தப்பு இல்ல. ஆனா, அதுக்காக யோசிக்காம மந்திரக்கட்டை நீக்குனதுதான் தப்பு. போனது போகட்டும், நேரத்தை வீணடிக்காம மந்திரத்தை சொல்லி, அவங்க மூணு பேரையும் சூனியனோட வசியத்துல இருந்து வெளிய கொண்டு வாங்க. இதனால, அந்த சூனியன் பலவீனமா இருப்பான். அதுதான் அவனை அழிக்க சரியான தருணம்.” என்றவர் சிரிப்புடன், “நீங்க அவனை அழிச்சுடுவீங்கன்னு எனக்குத் தெரியும். ஆனாலும், ஜாக்கிரதையா இருங்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னு அந்த அம்மனை பிரார்த்திக்கிறேன்.” என்றவருக்கு மூச்சு வாங்க, அப்போதும் இராவிடம், “சீக்கிரம் செஞ்சு முடி.” என்றபடியே இறுதி மூச்சை வெளியிட்டார்.
தனக்காக உயிர் நீத்த அந்த நல்ல உள்ளத்திற்கு இறுதி மரியாதை கூட செலுத்த அவகாசம் இல்லாமல், பார்வையை மறைக்கும் கண்ணீரை துடைத்தபடி எழுந்த இரா, மற்ற மூவரின் மயங்கிய உடல்களை நோக்கி நடந்தாள்.
மாடசாமியின் கண்களை மூடிய அத்வைத்திற்கோ, அவர் சொன்ன, ‘நடக்கணும்னு இருந்தா, அது நடந்தே தீரும்’ என்ற வரியே மீண்டும் மீண்டும் மூளைக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அவனின் பார்வை இராவின் மீது பட, அவளோ எங்கும் கவனம் சிதறாதபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தாள்.
மூவருக்குமான மந்திர உச்சாடனங்கள் முடியும் தருவாயில், அருவமாக எழுந்த சூனியனோ, “இன்னைக்கு தப்பிச்சுட்டன்னு சந்தோஷப்படாத. என்னைக்கா இருந்தாலும், உன் சாவு என் கையிலதான்.” என்று கரும்புகையாக மாறி இராவை நோக்கி வர, அவளோ அதற்கு பயப்படாதவளாக எதிர்த்து நின்றாள்.
அத்வைத்தும் அவளருகே சென்று அவளின் கரத்தைப் பற்றி நிற்க, அந்த புகை அவர்களை ஊடுருவிச் சென்று மறைந்தது.
*****
காட்டுக்குள் நடந்த போராட்டத்தைப் பற்றிய தகவல் பகிர்ந்த சில நொடிகளில், அங்கு ஊர் பெரியவர்கள் கூடி விட்டனர்.
மகளின் நலன் அறிய வேண்டி பதைபதைப்புடன் வந்த ஐங்கரன் – ரூபிணி தம்பதியருக்கு பேரிடியாக இருந்தது, மாடசாமியின் மரணம்.
மிகப்பெரும் வில்லனை எதிர்க்க, மகளுக்குத் துணையாக இருப்பார் என்று நம்பப்பட்டவர் இப்போது அந்த வில்லனின் கைகளாலேயே மரணித்திருப்பது அவர்களை பயம்கொள்ளச் செய்தது.
அத்வைத்தின் வரவினால், இரண்டு நாள்களாக வேர் விட்ட நம்பிக்கை குறைவது போலிருந்தது.
இரா, மாடசாமியின் இறந்த உடலருகே அமர்ந்து விட்டாள் அமைதியாக. சுற்றிலும் மக்கள் பேசுவதெல்லாம் அவள் செவிக்குள் புகவில்லை.
நிலைமையை கையிலெடுத்த அத்வைத்தான், அங்கு நடந்ததை பெரியவர்களுக்கு விளக்கினான். அத்துடன், மயக்கத்திலிருந்த ரக்ஷன், தேவா மற்றும் வானதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பணித்தவன், அவர்களுடன் யாராவது காவலுக்கு இருக்குமாறும் கூறினான்.
அங்கு கூடியிருந்தவர்களுல் சிலர் இதை நம்பாமல், இராவும் அத்வைத்தும் கதை கட்டுவதாகக் கூற, அதில் ஆவேசமான அத்வைத்தோ, “எது நாங்க கதை சொல்றோமா? அப்போ இங்க இறந்து கிடக்குறாரே, அவரு என்ன செஞ்சாரு? நாங்க கொலை பண்ணிட்டோம்னு சொல்லப் போறீங்களா? சொன்னாலும் சொல்லுவீங்க!” என்று விரக்தியின் உச்சத்தில் பேசினான்.
“இதோ, இறந்து கிடக்காறே… இவரை ஊர்ல இருந்து தள்ளி வச்சீங்க… ஆனா, இவரு அதை பெருசா எடுத்துக்காம, இன்னைக்கு நம்ம எல்லாருக்காகவும்தான் உயிரை விட்டுருக்காரு. இதோ, காலைல கல்லால அடிச்சீங்களே, அவ நம்ம எல்லாருக்காகவும்தான், அவளோட உயிரையே பணயம் வச்சுருக்கா. இது எதுவும் தெரியாம, சும்மா எதையாவது சொல்லிட்டு இருக்காதீங்க. நீங்க அமைதியா இருக்கிறதே அவங்க தியாகத்துக்கு நீங்க செய்யுற மிகப்பெரிய மரியாதையா இருக்கும். பிளீஸ்…” என்று கையெடுத்து கும்பிட்டான்.
அதுவரை மௌனமாக இருந்த கூட்டத்தினர், தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்ள, தன் வேலை முடிந்தது என்பது போல, அவனின் ‘ஸ்டார்லைட்’டுடன் சென்று அமர்ந்து கொண்டான் அத்வைத்.
ஐங்கரனும் தன் பங்கிற்கு, அவர்களின் குடும்ப வரலாற்றையும், அவர்கள் இவ்வூருக்கு செய்த நற்காரியங்களையும் எடுத்துச் சொல்ல, அக்கூட்டத்தில் இருந்தவர்களுள் சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் சமாதானமடைந்தனர்.
அவர்களுள் ஒருவர் அந்த ஊரின் தற்போதைய தலைவர்.
அவர் இரா மற்றும் அத்வைத்தின் அருகே வந்து, “உங்களோட நோக்கம் எங்களுக்கு புரியுது. உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க. கட்டாயம் செய்றோம்.” என்றார்.
அதில் அவரை ஏறிட்டுப் பார்த்த இராவோ நிதானமான குரலில், “இப்போலயிருந்து நாளைக்கு நைட் வரை ஊர் மக்கள் எல்லாரையும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பா இருக்க சொல்லுங்க. புதுசா யாரும் ஊருக்குள்ள வராதபடி எல்லையை மூடி வைங்க. யாரும் தனியா எங்கயும் போகக் கூடாதுன்னு சொல்லுங்க.” என்றாள்.
உடனே, தலைவர் அவரின் உதவியாளர்களிடம் கண்ணைக் காட்ட, அவர்களும் ஊர் மக்களுக்கு வரவிருக்கும் ஆபத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்றனர்.
மேலும், “அப்புறம், மாடசாமி தாத்தா நம்மளுக்காக அவரோட உயிரை தந்தாரு. அவரோட உடலை நல்ல முறையில தகனம் செய்ய அனுமதிக்கணும்.” என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்க, அனைவருக்குமே சங்கடமாக இருந்தது அந்த நொடி.
யாரால் ஆபத்து என்று ஒதுக்கி வைத்தனரோ, அவரே இன்று அனைவரையும் காத்திருக்கிறார் என்ற உண்மை அவர்களைச் சுட்டது.
அவரின் தியாகத்திற்கு மரியாதை செய்யும் விதத்தில், அவரின் உடலுக்கு நன்முறையில் இறுதி காரியங்கள் செய்யப்பட்டன.
*****
கிழக்கு வெளுக்காத சமயம், வானில் தோன்றிய விடிவெள்ளியில் பார்வையை பதித்து நின்றிருந்தாள் இரா.
அவளின் மனம் ஒருநிலையில் இல்லை என்பது அவளின் உடல்மொழியை வைத்தே அறிந்து கொண்டான் அத்வைத்.
திரும்பிப் பார்க்காமலேயே அவனின் வரவை உணர்ந்த இரா, “எனக்கு பயமா இருக்கு அத்து. அந்த சூனியனை அழிக்க நான் ஃபிட்தானான்னு சந்தேகமா இருக்கு. என்னாலதான, தாத்தா இறந்தாரு?” என்றவளின் கண்கள் கண்ணீரை சிந்த, அவளின் கண்ணீரைத் துடைத்தவன்,
“இதோ உன் கண்ணீரை பார்க்கும்போது, நான் கூட உனக்கு மேட்சான்னு சந்தேகமா இருக்கு.” என்றவனை புருவச் சுருக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள் அவள்.
அவளின் விழியே அதற்கான காரணத்தை வினவ, “நேத்துதான், உன் ஸ்மைல் எப்பவும் உன்னை விட்டு விலகாம பார்த்துப்பேன்னு பிராமிஸ் பண்ணேன். ஆனா, கொஞ்ச நேரத்துலேயே நிலைமை தலைகீழா மாறிடுச்சு. பாரு, இப்போ வரை நீ அழுதுட்டு இருக்க, என்னால எதுவும் பண்ண முடியாம இருக்கேன்! அதான், நான் உனக்கு டிசர்விங் இல்லன்னு தோணுது.” என்றான் அவன்.
“ப்ச், அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அத்து?” என்று இரா வினவ, “சில சமயம், நம்மளால முடியாம போகலாம் ஸ்டார்லைட். அதுக்காக நம்ம உடைஞ்சு நின்னுடக் கூடாது. எஸ், நம்ம இந்த இடத்துல சருக்கிட்டோம். அதன்காரணமா, இழக்கக் கூடாததை இழந்துட்டோம். அதுக்காக குற்றவுணர்வுலேயே மூழ்கி இருந்தா ஆச்சா? அந்த சூனியன் தானா அழிஞ்சுடுவானா? இல்லல? இந்த சூழல்லதான் நம்ம கண்ட்ரோலை இழக்காம இருக்கணும் ஸ்டார்லைட். நம்ம முழு கவனமும் நம்ம இலக்குல இருக்கணும்.” என்றவன், அவளின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு,
“மாடசாமி தாத்தாவோட இறப்பை நியாயப்படுத்தணும் ஸ்டார்லைட். அவரு உன்மேல நம்பிக்கை வச்சுருந்தாரு. எனக்கு எப்பவும் உன்மேல நம்பிக்கை இருக்கும். இதோ, இப்போ உன் ஊர் மக்களும் உன்னை நம்புறாங்க. அவங்க நம்பிக்கையை காப்பாத்த வேண்டாமா? உன் மனசுல இருக்க பயத்தையும் சந்தேகத்தையும் தூக்கிப் போடு. அந்த இடத்துல, நாங்க எல்லாரும் உன்மேல வச்சுருக்க நம்பிக்கையை நிரப்பு.” என்றான்.
அதைக் கேட்டவளுக்குள்ளும் நம்பிக்கை சிறிதாக எட்டிப் பார்க்க, “உண்மைலேயே எனக்கு கிடைச்ச ‘ஸ்டார்லைட்’ நீங்கதான் அத்து. அதுக்கு அந்த கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.” என்றாள் புன்னகையுடன்.
அவளின் நன்றியை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக, கோவிலிலிருந்து மணி சத்தம் கேட்டது.
அதே சமயம், அவர்களுக்கான காலம் கனிந்ததை குறிக்கும் வகையில் சூரியனின் கதிர்கள் நாற்புறமும் அதன் வெளிச்சத்தைப் படரவிட்டன.
இதே போல, இருளை வெற்றிக் கொண்டு வெளிச்சத்தைப் பரப்புவாளா இரா?
தொடரும்…