Loading

அத்தியாயம் 18

 

இராவும் அத்வைத்தும் அந்த புத்தகத்துடன் காட்டுக் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். மாடசாமியும் அங்குதான் இருந்தார்.

 

இரா அவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அலைபேசியில் சிக்னல் கிடைக்காததால், அத்வைத் கோவிலுக்கு வெளியில் நின்று அவனின் தந்தை ஆதிகேசவனுக்கு அழைக்க முயன்றான்.

 

சில அழைப்புகள் சென்றும் ஆதிகேசவன் ஏற்காமல் இருக்க, அடுத்த முயற்சியாக சாரதிக்கு அழைத்தான்.

 

இரண்டு அழைப்புகளிலேயே அவர் அழைப்பை ஏற்று விட்டார். ஆனால், அந்த நேரம் பார்த்து சிக்னல் சதி செய்து விட, வெறுத்துப் போனவன் அலைபேசியை அணைத்து விட்டு கோவிலுக்குள் நுழைந்தான்.

 

அங்கு கோவில் சன்னதியின் ஒரு ஓரத்தில் அமர்ந்த இரா கண்களை மூடி மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாள்.

 

சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அத்வைத், மேலும் அங்கிருப்பது அவளுக்கு தொந்தரவாக மாறலாம் என்பதால், அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அமர்ந்தான்.

 

அந்த பெரிய புத்தகத்தின் பக்கங்களை திருப்பியவன், அயர்ந்துதான் போனான் அதிலிருந்த விவரங்களைp பார்த்த போது.

 

இராவின் குடும்ப வரலாற்றின் சிறு விவரம் கூட விடுபடாமல் அதிலிருந்தது. அதன்மீது பார்வையை ஓட்டியவன், சில பக்கங்களில் உள்ள தகவல்கள் தேவையில்லை என வேகவேகமாக அவற்றைக் கடந்தான்.

 

அப்படி இருந்தும் பல பக்கங்கள் மிச்சமிருக்க, அதைக் கண்டவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.

 

அப்போது அவ்விடம் வந்த மாடசாமியோ, “இதுல எல்லாம் உனக்கு நம்பிக்கை இல்லன்னு நினைச்சேன்!” என்றபடி அவனருகே அமர்ந்தார்.

 

“இப்பவும் முழுசா நம்பலதான் தாத்தா. நானே என் கண்ணால பார்க்கிற வரை எதையும் நம்ப மாட்டேன். ஆனா, ஒருவேளை நீங்க சொல்றது உண்மையா இருந்துட்டா… இராவுக்கு துணையா நான் இருக்கணும். அவளுக்கு எதுவுமாகாம, இந்த பிரச்சனையை முடிக்கப் பார்க்கணும். அதுக்குத்தான் இந்த புக்ல ஏதாவது தகவல் கிடைக்குமான்னு தேடிட்டு இருக்கேன்.” என்றான் அத்வைத்.

 

அவனையே ஆழ்ந்து பார்த்த மாடசாமி, “நல்லது!” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட, “தாத்தா, உங்களுக்கு அந்த சூனியனைப் பத்தி எல்லாம் தெரியுமா? உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்களேன். அவன் எப்படி இந்த உலகத்துக்கு வந்தான்? அவனோட நோக்கம் என்ன? இதெல்லாம் தெரிஞ்சா, அவனை அழிக்கிறதுக்கான வழியும் தெரியலாம்.” என்றான் அத்வைத்.

 

“‘சூனியன்’ங்கிற பெயரே அவனைப் பத்தி சொல்லிடும். எதுவும் இல்லாதவன். ஆனா, நீக்கமற நிறைஞ்சு இருப்பவன். காலம்காலமா நம்ம மனுஷங்களுக்கு உள்ள வாழ்ந்துட்டு வந்தவன்தான் அவன். மனுஷங்களோட பேராசை, பொறாமை மாதிரியான கெட்ட எண்ணங்கள்தான் அவனை அழியாம இருக்க வச்சது. ஆனா, அவனோட ஆசைகளும் எல்லையைக் கடக்க ஆரம்பிச்ச தருணம், மனுஷங்களுக்குள்ளேயே இருக்காம, வெளிய வந்து இந்த உலகத்தையே ஆக்கிரமிக்கணும்னு நினைச்சான். அதுக்கு அவனுக்கு நிறைய சக்திகள் தேவைப்பட்டது. அதனால, அவனோட பார்வை மந்திர சக்தி இருக்க மனுஷங்க பக்கம் திரும்புச்சு. அவங்க நினைவுகளை ஆக்கிரமிச்சு, கொஞ்சம் கொஞ்சமா அவனோட எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பிச்சான் அந்த உருவமில்லாதவன். மனுஷங்களுக்குள்ள தீய எண்ணங்களை பெருக்கி, அவங்களோட சக்திகளை அவனுக்குரியதா மாத்திக்கிட்டான். அதன்காரணமா, மனுஷங்களுள்ளேயே அடைப்பட்டு கிடந்தவன் வெளியவும் வந்தான், அதே மனுஷங்களுக்கு வில்லனாவும் மாறுனான்.” என்று சூனியனின் வரலாற்றை சுருக்கமாக கூறினார் மாடசாமி.

 

“இன்ட்ரெஸ்டிங்!” என்று முணுமுணுத்த அத்வைத், “வசுந்தராம்மா அந்த சூனியனை அழிக்க மந்திர சக்திகளையும், அவங்க உயிரையும் பணயமா வச்சாங்க. ஆனாலும், அவன் முழுசா அழியல. இப்போ, அந்த ஆருடத்தின்படி, சூனியனுக்கு பூஜை செஞ்சு அவனை அந்த மந்திரக்கட்டுல இருந்து திரும்ப கொண்டு வந்துட்டாங்க. அப்போ இந்த முறையும் அவனை அழிக்க முடியாதா? ஏன் இதுக்கு பெர்மனென்ட் சொல்யூஷன் கிடையாதா? அதே மாதிரி, மந்திர சக்திகளோட சேர்த்து ஏன் உயிரையும் பணயம் வைக்கணும்? இதுக்கு வேற ஆப்ஷன் இல்லையா?” என்று யோசனையுடன் கேள்விகளை அடுக்கினான்.

 

“சூனியன் மொத்தமா அழியுறது மனுஷங்களோட எண்ணங்கள்லதான் இருக்கு.” என்று மாடசாமி கூற, “ஹ்ம்ம், அப்போ அதுக்கு கேரண்டி குடுக்க முடியாது.” என்றான் அத்வைத்.

 

அதற்குப் புன்னகையை பதிலாக அளித்த மாடசாமியோ, “உன்னோட மத்த கேள்விகளுக்கான பதிலை நீதான் தேடணும்.” என்றவர், அந்த புத்தகத்திலிருந்த ஒரு பக்கத்தைச் சுட்டிக் காட்டினார்.

 

அதை உன்னிப்பாக வாசித்துப் பார்த்தவனோ புருவம் சுருக்கி, “இது என்ன, அவனை அழிக்கிறதுக்கான வழி ‘தியாகம்’னு போட்டுருக்கு. யாரு, எதை தியாகம் செய்யணும்?” என்று வினவ, “இதுக்கான பதிலாதான், வசுந்தராம்மா, அவங்க சக்திகளோட சேர்த்து உயிரையும் தியாகம் செஞ்சாங்க.” என்று பெருமூச்சுடன் கூறினார் மாடசாமி.

 

“இதுக்கு வேற ஏதாவது அர்த்தம் இருக்குமோ?” என்று அத்வைத் முணுமுணுக்க, அதே சமயம் உள்ளிருந்து இரா கத்தும் சத்தம் கேட்டது.

 

அதில், அவளிருக்கும் திசையை நோக்கி அத்வைத் திரும்ப, அங்கு அவன் கண்டது, ஏமாற்றத்துடனும் கோபத்துடனும் தரையை தட்டிக் கொண்டிருந்த இராவைத்தான்.

 

“என்னாச்சு அவளுக்கு?” என்று அவன் வினவ, “அவளால மந்திரத்துல கவனம் செலுத்த முடியல. அதனால உண்டான கோபத்துல இப்படி நடந்துக்குறா.” என்ற மாடசாமி, “முன்னாடி அவளோட கவனம் சிதறுனதில்ல. ஆனா, இப்போ… சாதாரணமான மந்திரத்துக்கு கூட ரொம்ப தடுமாறுறா. இப்படியே போனா, சக்தி குறைஞ்ச சூனியனைக் கூட அவளால எதிர்கொள்ள முடியாது. இதுல, சூனியன் அவனோட சக்திகளை வேற பெருக்கிட்டு இருக்கான்…” என்று சொல்ல வந்ததை முழுதாக சொல்லாமல் நிறுத்தினார்.

 

அவரைக் கண்ட அத்வைத்தோ, “இதுக்கு காரணம்…” என்று ஒரு இடைவெளி விட்டு, “நானா?” என்று வினவ, “ம்ம்ம், நீயாத்தான் இருக்கணும். முன்னாடி, அவ வாழணும்னு விரும்பல. அதனால, முடிவைப் பத்தி கவலைப்படாம இருந்தா. மந்திரத்துலயும் கவனம் சிதறாம பார்த்துக்கிட்டா. ஆனா, இப்போ உன்னோட வாழணும்னு அவ மனசு துடிக்குது. நடக்கப் போற சண்டைல அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயப்படுறா. அதனாலேயே அவளால கவனம் செலுத்த முடியல.” என்று உண்மையை உரைத்தார் மாடசாமி.

 

“அப்போ என் காதல் அவளை பலவீனமாக்குதா?” என்று தன்னையும் அறியாமல் இராவை பார்த்தபடி வினவினான் அத்வைத். 

 

மாந்திரீகத்தில் நம்பிக்கை இல்லை என்றவன் இப்போது இந்த கேள்வியை கேட்கிறான் என்றால், ஒன்று அதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும், இல்லை அவன் பெரும் அலைகழிப்பில் இருக்க வேண்டும்.

 

அத்வைத்தின் கேள்விக்கு பதிலாக, “காதல் எப்பவுமே யாரையும் பலவீனமாக்காது தம்பி. அதை பலமா, ஆயுதமா மாத்துறது நம்ம கைல இருக்கு.” என்று அவனின் தோளை தட்டிக் கொடுத்தவர், “வாழணும்னு அவளுக்கு நம்பிக்கை குடுத்தது நீதான். அதே மாதிரி, இந்த போராட்டத்தை வெற்றிகரமா முடிக்கவும் அவளுக்கு நம்பிக்கை குடு.” என்று அவர் கூற, அவருக்கு தலையசைப்பை பதிலாக தந்தவன், தன்னவளைக் காணச் சென்றான்.

 

*****

 

அழுகையின் விளிம்பில் இருந்தவளை நெருங்கிய அத்வைத், “ஸ்டார்லைட்…” என்று ஆழ்ந்த குரலில் அழைக்க, “அத்து…” என்று உதட்டைப் பிதுக்கியவள், “என்னால முடியல… ஏன்னு தெரியல… ரக்ஷனை காப்பாத்தணும். ஆனா, என்னால அவனைக் கண்டுபிடிக்க முடியல.” என்று பதற்றத்துடன் கூறினாள் இரா.

 

“ரிலாக்ஸ், ரக்ஷனை கண்டுபிடிச்சுடலாம். அதுக்கு முன்னாடி, உன்னை சரி பண்ணனும். வா என்னோட.” என்று அவளின் கரம் பற்றி எழுப்ப, “எங்க?” என்ற கேள்வியுடன் அவனுடன் சென்றாள் இரா.

 

செல்லும் வழியெங்கும், அவளின் தொடர் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நடந்தவன் நின்ற இடம், அவன் அவளிடம் காதலை உரைத்த அதே இடம்!

 

அந்த இடத்திற்கு வந்ததும், புரியாமல் அவள் அவனைப் பார்க்க, “என்ன பார்க்கிற? இந்த இடம் பூக்களால நிரம்பி இருந்தப்போதான் அழகா இருந்துச்சு. கம்மான், பூக்களை மலர வை.” என்றான் சம்பந்தமில்லாமல்.

 

அவனைப் புருவம் சுருக்கி பார்த்தவளோ, “அங்க எவ்ளோ முக்கியமான வேலை இருக்கு. நீங்க என்னன்னா இங்க கூட்டிட்டு வந்து பூ பூக்க வைக்க சொல்றீங்க. விளையாடாதீங்க அத்து.” என்றாள் லேசாக எட்டிப் பார்த்த எரிச்சலுடன்.

 

“நீதான, உன் சக்தி வேலை செய்யலன்னு புலம்பிட்டு இருந்த. இப்போ டெஸ்ட் பண்ணி பார்த்துடுவோம்.” என்று அவள் எதிர்பார்க்காத நேரம் அவளை அருகில் இழுத்து, தன் கண்களால் அவளின் கண்களை சிறை செய்தான்.

 

அதில் அவள் அதிர்ந்து நின்றதெல்லாம் ஒரு நொடிதான்.

 

மறுநொடியே, “ப்ச், என்ன பண்றீங்க?” என்ற கேள்வியுடன் அவள் விலகினாள். சுற்றுப்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை.

 

“என்ன, இன்னைக்கு பூ பூக்கல?” என்று அத்வைத் வினவ, “ப்ச், லூஸா நீங்க? அன்னைக்கு இருந்த மனநிலை வேற, இப்போ எனக்கு இருக்க மனநிலை வேற.” என்று எரிச்சலுடன் பேசினாள் அவள்.

 

இப்போது அவளை அர்த்தத்துடன் பார்த்தவனோ, “அதேதான் ஸ்டார்லைட், இதுக்கு முன்னாடி நீ அந்த மந்திரத்தை பிராக்டிஸ் பண்றப்போ, உன் மனசுல பயம் இல்ல, பதற்றம் இல்ல. ஆனா, இப்போ உன் மனசை எதுவோ அலைகழிச்சுட்டு இருக்கு. ஆம் ஐ ரைட்?” என்றான் அத்வைத்.

 

அவன் கூறியது புரிந்ததும், அவள் தலைகுனிய, அவளின் நாடியைப் பற்றி தன்னை நோக்கச் செய்தவன், “இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்சதும், நாம ஹனிமூன் போறதுக்கு ஒரு இடத்தை பார்த்து வச்சுருக்கேன். அங்க நீ மேஜிக் எதுவும் பண்ணமாலேயே, சுத்தி கலர்ஃபுல்லான பூக்கள் இருக்கும்.” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

 

அதில், அவளும் லேசாக புன்னகைக்க, “இந்த ஸ்மைல் எப்பவும் உன்னை விட்டுப் போகாம பார்த்துப்பேன். டிரஸ்ட் மீ.” என்று அவன் கூற, “ம்ம்ம், எனக்கும் ஆசையாதான் இருக்கு. ஆனா… இந்த சண்டைக்கு அப்புறம் நான் உயிரோட இருப்பேனான்னு…” என்றவளின் பேச்சை தடுத்து நிறுத்துவது போல, அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

 

“அவ்ளோ சீக்கிரம் உன்னை விட்டுட மாட்டேன் ஸ்டார்லைட்.” என்றவனுக்குள்ளும் ஏதோ இடறியது.

 

சில நொடிகளில் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டவன், அவளைப் பிரித்து, “நம்ம ஹனிமூன் பெண்டிங்ல இருக்கு. அதை ஞாபகம் வச்சுக்கிட்டு, ஒழுங்கா மந்திரத்தை பிராக்டிஸ் பண்ணு. அந்த சூனியனோட கதையை முடிச்ச கையோட, நாம ஹனிமூனுக்கு கிளம்புறோம்.” என்று அவன் கூற, அதில் பக்கென்று நகைத்தவளோ, “இன்னும் கல்யாணமே நடக்கலையாம். அதுக்குள்ள ஹனிமூனா?” என்று அவனை இடித்தாள்.

 

“உங்க மந்திரவாதி சமூகத்துல கூட கல்யாணம் முடிஞ்சதும்தான் ஹனிமூன் போவீங்களா?” என்று அவன் கேலியாக வினவ, “அதென்ன மந்திரவாதி சமூகம்?” என்று அவள் முறைக்க ஆரம்பித்தாள்.

 

“கூல் கூல்… சும்மா சொன்னேன். நாம ஏன் ஒரு டிஃப்ரென்ஸுக்கு, ஹனிமூன் எல்லாம் செல்பரேட் பண்ணிட்டு வந்து கல்யாணம் பண்ணக்கூடாது?” என்று அவன் வினவ, அவனை ஒரு மார்க்கமாக பார்த்தவளோ, “நீங்க சரியே இல்ல, எதுக்கும் பத்து அடி தள்ளியே இருங்க.” என்று அவள் தள்ளிப் போக, மீண்டும் அவளை நெருங்கியவனோ, “அட, ஸ்டார்லைட் அது சும்மா, உன்னை ரிலாக்ஸாக்கணும்னு சொன்னது.” என்றான்.

 

அவள் விலக, அவன் நெருங்க என்று சிறிது நேரம் ஓடிப் பிடித்து விளையாடியவர்கள், மூச்சு வாங்க சோர்வுடன் அதே இடத்தில் அமர்ந்து விட்டனர்.

 

கைகளை பின்னால் வைத்து, கால்களை நீட்டி அவன் அமர, அவனருகே அமர்ந்தவளோ அவன் தோளில் சாய்ந்து, “இப்படி விளையாடி எவ்ளோ நாளாச்சுன்னே எனக்கு மறந்துடுச்சு. தேங்க்ஸ் அத்து.” என்று நெகிழ்வுடன் கூறினாள்.

 

“இதுக்கு எதுக்கு ஃபீலிங்ஸ்? இனிமே, டெயிலி விளையாடிடலாம்.” என்றான் அவன் கண்ணடித்து.

 

அதற்கு அவனை அவள் போலியாக முறைக்க, “அட உன் மேஜிக் திரும்ப வந்துடுச்சு போல.” என்று பேச்சை மாற்றினான் அவன்.

 

ஆம், இப்போது அவர்களைச் சுற்றி பலவண்ண மலர்கள் மலர்ந்திருந்தன.

 

அவனது தோள் வளைவில் இருந்தபடியே, “இது என்ன மேஜிக்னு எனக்கு தெரியவே இல்ல. நானும் எல்லா புக்லயும் தேடிப் பார்த்துட்டேன். ஆனா, எதுலயுமே இப்படி ஒரு மேஜிக் பத்தி சொல்லவே இல்ல.” என்று அவள் உதட்டைப் பிதுக்கிக் கூற,

 

“ஏன்னா, இது நம்மளோட மேஜிக்…” என்று அவளின் நெற்றியில் முட்டி, மூக்கை உரசி, “இந்த அத்வைத் – இராவோட மேஜிக்… நமக்கு மட்டுமே உரித்தான மேஜிக்.” என்று முணுமுணுத்தான்.

 

அவர்களின் அடுத்த இலக்கான உதடுகள் ஒட்டியும் உரசியும் இருந்த சமயம், அவர்களைச் சுற்றி பூச்சிகளின் சத்தம் கேட்க, உடனே அவனை விட்டுப் பிரிந்தாள் இரா.

 

நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருவருக்கும் மூச்சு வாங்க, இருவேறு திசையை பார்த்தபடி தங்களை இயல்பாக்கும் முயற்சியில் இருந்தனர்.

 

அத்வைத்தோ நல்ல வாய்ப்பு பறிபோன சோகத்தில் இருக்க, இராவோ நடந்ததை எண்ணி எண்ணி மீண்டும் சிவந்த மேனியை மறைக்க முடியாத தவிப்பில் இருந்தாள்.

 

“பூவோட நிறுத்தி இருக்கலாம். இப்போ இந்த பூச்சி அவசியமா?” என்று அவன் முணுமுணுக்க, அதில் எழுந்த சிரிப்பை அடக்கியவளோ, “அதுக்கு காரணம் யாராம்?” என்று எழுந்து கொண்டாள்.

 

“நானா காரணம்?” என்றவனை நோக்கியவள், ‘அதில் சந்தேகம் வேறா?’ என்பது போல பார்த்து வைக்க, தலையைக் கோதிக் கொண்டவனோ, “அப்போ நான்தான் போல!” என்று சிரித்துக் கொண்டான்.

 

“என்னை சமாதானம் செய்யுறேன்னு வந்து ஒரு மணி நேரமாச்சு. போலாமா?” என்று அவள் வினவ, “ஹ்ம்ம், திரும்ப உன் பவர் ஒர்க்காகலைன்னா, இங்க வந்துடுவோம்.” என்று கண்ணடித்தான்.

 

அவனைப் போலியாக முறைத்தவளோ, “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.” என்று கூறினாள்.

 

“ரக்ஷன் மட்டும் இப்போ இங்க இருந்தா, என்னைக் கண்டுபிடிக்காம, நீங்க தனியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்களான்னு ஓட்டியிருப்பான்.” என்று ரக்ஷனின் நினைவில் அவன் கூற, அவர்கள் இருவருக்கும் இடையே இழையோடிய நட்பை எண்ணி புன்னகைத்தவளோ, “உங்க ரெண்டு பேருக்கும் இடையில எப்படி இவ்ளோ ஸ்டிராங்கான பாண்ட் உருவாச்சு?” என்று வினவினாள்.

 

“ஹலோ என்ன பொஸஸிவ்நெஸா?” என்று அவன் கேலியில் இறங்க, “எதே! நான் உங்க ரெண்டு பேரையும் பார்த்து பொஸஸிவ்வாகுறேனா? சான்ஸே இல்ல!” என்று உதட்டைச் சுழித்தாள் அவள்.

 

“ஹ்ம்ம், பார்க்கத்தானப் போறேன்… ரெண்டு பேரும் எனக்காக சண்டை போடாம இருந்தா சரி!” என்று அவன் நமுட்டுச் சிரிப்புடன் கூற, அவனை லேசாக தோளில் அடித்தவளும் வெடித்துச் சிரித்தாள்.

 

இருவரும் சிரித்தபடி கோவிலுக்குள் நுழைவதைக் கண்ட மாடசாமியும் புன்னகையுடன் அவரின் தினசரி தியானத்திற்குள் மூழ்கினார்.

 

அத்வைத்துடனான அந்த சிறு பொழுது, இராவின் மனதை பெரிதும் மாற்றியிருந்தது உண்மையே.

 

அவனுடன் இருக்கும்போது எதையும் சமாளிக்கலாம் என்ற தெளிவு கிடைக்க, அதே உத்வேகத்துடன் மந்திரத்தை மீண்டும் முயற்சித்துப் பார்த்தாள்.

 

இம்முறை, அதற்கு பலன் இருந்தது. இராவினால் ரக்ஷன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடிந்தது.

 

“ஸ்டார்லைட், என்னாச்சு? ரக்ஷன் இருக்குற இடம் தெரிஞ்சுதா?” என்று அத்வைத் வினவ, குழப்பத்தில் சுருங்கிய வதனத்துடன், “தெரிஞ்சுடுச்சு அத்து… ஆனா, அவன்… இங்கதான் வரான்.” என்றாள் அவள்.

 

அப்போது வெளியே சூறைக்காற்று வீசும் சத்தம் கேட்க, இராவும் அத்வைத்தும் ஒருவரையொருவர் பார்த்தபடி வெளியே வர, மாடசாமியும் அவரின் தியானத்திலிருந்து விழித்தார்.

 

அவருக்கு ஏதோ ஆபத்து என்பது தெளிவாக தெரிய, இராவின் அருகே நின்று கொண்டார்.

 

கோவிலுக்கு வெளியே யாரோ நிற்பது போலிருந்தது. காற்று பலமாக வீசுவதால், புழுதி கிளம்பி, எதிரில் யார் நிற்கிறார்கள் என்பது அங்கிருந்த மூவருக்கும் தெரியவில்லை.

 

சில நிமிடங்களில், காற்றின் வேகம் குறைய, மெல்ல அவர்களின் கண்களில் தென்பட்டான் ரக்ஷன்.

 

அவனைக் கண்டதும், “ரக்ஷா…” என்று ஓடிய இராவின் கரத்தைப் பற்றி தடுத்த மாடசாமியோ, “அவன் ரக்ஷனா இல்ல இராம்மா.” என்று கூற, அதைக் கேட்ட மற்ற இருவரும் திகைத்துதான் போயினர்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
16
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்