Loading

தேவா தனது நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று இறங்க,

” வாடா மச்சான்,உங்க வீட்டை நீ சமாளிச்சிட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா? வர்றதே ஆடிக்கு ஒரு நாள் அமாவாசைக்கு ஒரு நாள்,அதுக்கே இவ்ளோ லேட்,ஆனாலும் உன்ன மாறி ஒரு வயசு பையனை ஊர் உலகத்துல பார்க்க முடியாது மாப்ள” என்று கேலி செய்து சிரித்தார்கள்…

“டேய் என்ன கலாய்த்த வரைக்கும் போதும்.. அண்ணனும்,அண்ணியும் வந்ததுக்கு அப்புறம் தான் டா வர முடியும்”.

” கொஞ்ச நேரம் மட்டும் தான் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண வந்து இருக்கேனு சொல்லு டா.. (schedule) ஷெட்யூல் போட்டு வச்சிருக்க எங்கள பாக்க வர்றதுக்கு கூட, உன்ன பத்தி எங்களுக்கு தெரியாதா டி மாப்ள “என்றார்கள்..

” இல்லடா குகன் வீட்ல இருக்கான் இல்லையா? இன்னைக்கு லீவ் வேற, அம்மா, அப்பா கிட்ட இருந்தா ரொம்ப அட்டகாசம் பண்ணுவான், அதுவும் ஃபுல் டே வீட்ல வேற இருக்கான் இல்லையா ?இன்னைக்கு அவங்களுக்கும்  கஷ்டமாகிடும் அதனால தான்..”

“அண்ணன் மகனா இருந்தாலும் அவனுக்கு நீ இவ்ளோ இம்பார்ட்டன்ஸ் தர..பார்த்தியா? நீ வேற லெவல் டா மச்சான் ” 

“டேய்!அவன் அண்ணன் மகனா இருந்தாலும்,என் புள்ள தான் டா அவன்..”என்று முத்துப்பல் தெரிய சிரிக்க,

“அது சரி என்னமோ” என்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..

கொஞ்ச நேரம் கழித்து ஒருவன்,”மச்சான் சரக்கடிக்கலாமா ?”என்றான்..

” டேய் என்ன விளையாடுறியா? நான் என்னைக்கு டா சரக்கு அடிச்சிருக்கேன்” என்று தேவ் அதிர.

“ஏன்டா இப்படி பழமா இருக்க?” என்று கேலி செய்து சிரித்தார்கள்..

” இருந்துட்டு போறேன்,அதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”

” மச்சான் இன்னும் கல்யாணம் கூட பண்ணாம குடும்பம் குடும்பம்னு சுத்திட்டு இருக்க,இப்படி இருந்தா எப்படி டா பொண்ணு கிடைக்கும்..அதும் இவ்வளவு பழமா இருக்க, இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு எல்லாம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கு டி மாப்ள”

“யார் வேணாலும் எதை வேணாலும் எதிர்பாக்கட்டும்.…. எனக்கானவளை நான் பாக்காத வரை நான் கல்யாணம் பண்ண போறது இல்ல,”என்றான் தலையை சாய்த்து ரசனையாக..

“டேய் நீ உருகுற உருகுக்கு நாங்களே உன்ன விட்டா கட்டிப்போம் டா” என்று அவனின் தோள் மீது கை போட்டு புன்னகைக்க ,

“அடி வங்க..அவனுங்களா டா நீங்க” என்று தனது நண்பனின் வயிற்றில் குத்தினான்.

“சரி சரி அப்படியே பேச்சை மாத்தாத,இப்ப நீ சரக்கடிக்க வருவியா? மாட்டியா ?”

“டேய் எனக்கெல்லாம் வேணாம். ஏற்கனவே தாம் தூம்னு தனம் குதிச்சுது, வெளியே போறேன்னு, இப்போ நான் குடிச்சிட்டு போனேன் அவ்வளவுதான், சத்தம் போட்டு ஊரையே கூட்டும்,அது மட்டுமில்லாமல், எனக்கே விருப்பம் இல்ல டா, எவன்டா அந்த சாக்கடையை குடிப்பான், தூரத்தில் இருக்கும் போதே பொண நாத்தம் வீசுது அதையும் மாசத்துல ரெண்டு நாள் குடிச்சிட்டு  சுத்துறீங்க? ஆனா, உங்க கூட குடும்பம் நடத்துற  என் தங்கச்சிங்க தான் பாவம்,  உங்க கூடலாம் எப்படி குப்பை கொட்டுறாங்களோ?”என்று  நொச்சு கொட்ட…

“பாவி பயல.. முதல்ல உன் வாய பினாயில் உத்தி கழுவனும் டா, அது நாருதோ இல்லையோ, நீ எங்களை நார அடிச்சிடுவ போல, நாங்களே அவங்க கிட்ட  மாசத்துல ஒரு நாள் கெஞ்சி கூத்தாடி பெர்மிஷன் வாங்கிட்டு வரதே பெருசா இருக்கு, இவன் அதுக்கும் ஆப்பு வைக்க பாக்குறான்டா இனி இவன் கூட சவகாசமே வைக்க கூடாது, முதல்ல இவனை துரத்தி விடுங்கடா, இவனும் சந்தோஷமா இருக்க மாட்டான் ,கூட இருக்கவனையும் சந்தோஷமா இருக்க விட மாட்டான் போல,”என்று புலம்பினார்கள்..

அவர்களது செயலில் அதரங்களில் மென் புன்னகையை வீசியவன்…” நீங்களே அந்த கருமத்தை குடிங்க, உங்களை ஒன்னும் சொல்லல “என்று அவர்களுக்கு சரக்கை கலந்து கொடுத்துவிட்டு ,தனக்கு போவோன்டோவை ஒரு கிளாசில் ஊற்றிக் கொண்டு அவர்களுடன் சியர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் பேசி சிரித்து கொண்டு,இருந்துவிட்டு 9 மணி போல் கிளம்பினான் ..

“டேய் என்னடா ?அதுக்குள்ள கிளம்புற?மணி அடிச்சா சோறு போடுற கணக்கா?”

“ஜெயிலில் தாண்டா மச்சான் மணி அடிச்சா சோறு வாங்க க்யூல நிப்பாங்க “என்று தேவா தனது நண்பனையே கலாய்க்க, 

“எங்களுக்கு நீ இருக்கிறதே ஜெயில் மாதிரி  தான் இருக்கு”..

“அடிவங்க”என்று அவனை அடிக்க துரத்தினான்.

“பின்ன என்ன டா?ஏதோ டைம் ஃபிக்ஸ் பண்ணி வர, போற “…

“உங்களுக்கு எல்லாம் ஜெயில் மாதிரி தான் டா  இருக்கும் … நேரத்துக்கு வீட்டுக்கு போகாம ,கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு போற உங்களுக்கு வேற எப்படி இருக்கும்..அது குடும்பம் டா..அதுலாம் ஒரு வரம், சுத்தி இருக்க உறவுகள் நல்லா விதமா கிடைக்கிறது எல்லாம் சான்சே இல்ல “என்று சிலாகித்து உடல் சிலிர்க்க கூற…

“எங்களுக்கு இருக்கிறது இருக்கட்டும், உனக்கு எப்படி இருக்காம்..எங்கள பாக்க வரதே வாரத்துல ரெண்டு நாள் ஏழு மணிக்கு வருவ 9:00 மணிக்கு கிளம்பிடுவ அவ்வளவுதான் நீ எங்களுக்காக ஒதுக்கி இருக்க நேரம் பின்ன நாங்க எப்படி நினைக்க?”..

“சரி டா மச்சான் ஓவரா பாசத்தை புழியாத.. சரக்கு உள்ள போன உடனே மப்புல பேசுற…எனக்கு நேரம் ஆகுது நான் மத்ததை போன்ல பேசுறேன் “என்று தன் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் கூப்பிடுவதை கூட காதில் வாங்காமல் கிளம்பி விட்டான்..

அவன் சென்றவுடன்..ஒருவன் “என்னடா மச்சான் இப்படி இருக்கான்?” என்க,

மற்றொருவனோ,”எவ்வளவு நாளைக்கு என்று பார்க்கலாம். இவனுக்கு வரவ எப்படி இருப்பான்னு யாருக்கும்  தெரியும்”..

“டேய் என்னங்க டா இப்படிலாம் பேசுறீங்க?” என்றான் இன்னொருவன்..

“டேய் நான் நார்மலா சொன்னேன்டா ..நீ வேற… ஏன் டா?..பசங்க மேக்ஸிமம் கல்யாணத்துக்கு அப்புறம் மாறிடுறாங்க என்ற மாதிரி சொன்னேன் மற்றபடி வேற ஒன்னும் இல்ல “என்று அவர்களின் நேரம் கேலியும் கிண்டலுமாக  சென்றது..

தேவ், வீட்டிற்கு செல்லும் போது ,அனைத்து சாப்பாடுகளும் வரவேற்பரையில் எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்க,

இவனுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவுடன்,” சாரி சாரி தனம் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு “என்று தொண்டையில் கை வைத்து மன்னிப்பு வேண்ட …

“டேய் ஓவர் பர்பாமென்ஸ் பண்ணாத பசிக்குது நேரம் ஆகுது போய் கை கழுவிட்டு வா ” என்றான் வேலு.

“என்ன பெத்த ஆத்தாளை கொஞ்சினா என் கூட பொறந்த மங்கிக்கு பொறுக்காதே “என்று அவன்  வாய்விட்டே முனக, 

“நீ முனகிறது என் காதுல கேக்குது”என்றான் முறைப்புடன் வேலு.

“கேட்கணும்னு தான் முனகவே செய்றோம்”என்று அவனின் தலையில் கொட்ட..

“டேய் தேவ், உங்க கச்சேரியை வந்து வச்சுக்கோடா  பசிக்குது .. ஓடு” என்றாள் வித்யா..

“என்ன அண்ணி உங்க மணாளனை அடிச்ச உடனே மனசு கேட்கலையோ ?அதான் என்னை துரத்த பாக்குறீங்களோ ?”என்று கண் சிமிட்டி சிரிக்க, 

“படவா! அவன் அவனும் பசியில காய்ந்து போய் கிடக்கான்.. இப்போ தான் மனசு கேட்கலையாம்? போடா அங்குட்டு” என்றாள் எரிச்சலாக, 

“சரி சரி இவ்ளோ கோபம் உடம்புக்கு வேண்டாம்.. ரத்த அழுத்தம் ஏறிட போகுது.. “என்று தனது அண்ணியின் தலையை கலைத்துவிட்டு முகம் ,கை,கால் கழுவ ரூமுக்குள் நுழைந்தான்..

அவன் சென்றவுடன் ,அவள்  புன்னகைத்துக் கொள்ள,

மற்ற மூவரும் வித்யாவை முறைத்து பார்த்தார்கள்..

மூவரையும் பார்த்தவள் அசடு வழிய சிரிக்க, 

” நீ கொடுக்கிற செல்லம் தாண்டி அவன் ஓவரா ஆட்டம் போடுறான்.. இப்போ அவனோட சேர்ந்துட்டு நம்ம குகனும் அட்டகாசம் பண்ணிட்டு திரியுறான் “என்றான் வேலு.. வார்த்தை என்னவோ சீரியஸ் ஆக இருந்தாலும் முகத்தில் புன்னகை தவழ்ந்தது..

“எது நான் அவனுக்கு செல்லம் கொடுக்கிறேனா ?அது சரி ,இப்போ குடும்பத்தோட லாஸ்ட்டா என் பக்கம் திருப்பி விடுவிங்களாச்சே “என்றவள் இப்பொழுது இடுப்பில் கை ஊன்றி மூவரையும் முறைக்க ,

“சரி சாப்பிடுற நேரத்துல இப்ப எதுக்கு இந்த பேச்சு “என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எழில்.

“மாமா,ஆனாலும்,அப்போ அப்போ அப்படியே .. பேச்சை மாற்றி கத்திரிச்சு விட்டுறீங்க பாத்தீங்களா? இதுல நீங்க பலே கில்லாடி தான் போங்க”என்று சிரிக்க,

மற்றவர்களும் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவனும் கை கழுவி கொண்டு வந்து உட்கார, தனம் தான் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருந்தார்.

“தனம்”என்று தன் தாயின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சியவன்..”நீ இப்படி மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு சோறு போட்டா,அந்த சோறு கூட தொண்டையில் இறங்காது”என்றான் பாவமாக, 

“ஏன்டா இப்படி பண்ற? உன்னால யாருமே சாப்பிடமா உட்கார்ந்து இருக்கோம் பாரு… எல்லாரும் ஒன்னா தானே எப்பவும் உட்க்கார்ந்து சாப்பிடுவோம், குகனுக்கு பசிக்குமா இல்லையா?”என்று முகத்தை திருப்பினார்.

“என்ன டா உனக்கு பசிக்கிதா?” என்று தேவ் குகனை பார்க்க , 

அவனோ ,32 பற்களையும் காட்டி புன்னகைத்தான். 

“இவனுக்கு பசிக்குதா?”என்று தேவ் தனத்தை வம்பு இழுக்க,

” அவனுக்கு எப்படி டா பசிக்கும் ..அதான் ஈவ்னிங் ஒரு பொட்டிக் கடை வைக்கிற அளவுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்துட்டு போய் இருக்கியே” என்றான் வேலு..

“எதே!”..என்றான் பதறியவனாக.

“நடிக்காதடா ஓவரா உங்க நடிப்ப எங்க கிட்டயே காட்டுறீங்க பாத்தீங்களா? சித்தப்பனும் ,மகனும்.. கூட்டுக் களவாணிகளா”

“டேய் உண்மையா அவ்வளவு எல்லாம் ஒன்னும் வாங்கி தரல , கொஞ்சோண்டு தான்”என்று கையை சுருக்கி, கண்ணையும் சுருக்கி சொல்ல..

“அப்ப அப்ப என்ன ஒரு நடிப்புடா சாமி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே மிஞ்சிருவான் என் உடன்பிறப்பு”.. என்று நவரசங்களையும் முகத்தில் காட்டி வேலு சொல்ல,

“ஏய்!”..

“என்னடா ஏய் ஓய்னு ? பின்ன அவன் ரெண்டு டவுசர் பாக்கெட்லயும் முழுசா  துருத்துட்டு  வரல ?”

இப்போது குகன் திருட்டு முழி முழிக்க, 

அவனை பார்த்த, எழிலும், தனமும் தேவ்வை முறைப்புடன் பார்த்தார்கள். 

  ‘போட்டு கொடுத்துட்டியேடா பரமா’ என்று குகனை பாவமாக பார்க்க,

அவனோ,” நான் இல்லை தேவ்”என்று உதட்டை பிதுக்கினான்..

இருவரின் முக பாவனைகளை பார்த்த எழிலுக்கு தான் புன்னகை தாங்கவில்லை…

இருந்தாலும் ,அதை மறைத்துக் கொண்டு “என்னடா நெனச்சிட்டு இருக்க ?அவனை வெளியே கூட்டிட்டு போனா என்ன வேணுமோ அதை மட்டும் வாங்கி கொடுத்தோமான்னு வீட்டுக்கு கூட்டிட்டு வராம இப்படித்தான் டவுசர் பை நிரப்பி கூட்டிட்டு வருவியா ?பாக்கெட் ஐட்டம் அதிகமா சாப்பிடக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்ல.. இது என்ன பழக்கமோ தெரியல ?ஆவுன்னா போய்

கடையில நின்னுக்கிற ,இதுல இவனையும் இப்ப இழுத்துட்டு அலையுற, இது எங்க போய் முடிய போகுதோ ?எனக்கு தெரியல?” என்று அவர் தலையில் தட்டிக் கொண்டார்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
19
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment