அத்தியாயம் 11
திடீரென்று தன் இடையைப் பற்றி அவனை நோக்கி அத்வைத் இழுப்பான் என்று எதிர்பார்க்காத இராவிற்கு அவர்களின் நெருக்கம் முதல் அதிர்ச்சி.
அடுத்த அதிர்ச்சி, அவனிடமிருந்து மீள முடியாதவாறு அவளைக் கட்டிப்போடும் அவனது பார்வையும், அதற்கு உடன்பட்டு அவனின் அணைப்பில் அவள் கட்டுண்டு இருந்ததும்.
இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் அடுத்து கூறியது செவிக்குள்ளேயே செல்லவில்லை என்னும்போது, மூளை அதை எப்படி உள்வாங்கி இருக்கும்.
அவள் திருதிருவென்று விழிக்க, அவளின் அதிர்ச்சியை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கள்வனாக குறும்பு புன்னகையுடன், அவளின் மோவாய் பற்றி, அவர்களைச் சுற்றி பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களைக் காண வைத்தான்.
‘இது எப்படி நடந்துச்சு?’ என்ற ஆச்சரியத்தில் அவள் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, “பார்த்தியா, உனக்குள்ள எவ்ளோ அழகான மேஜிக் இருக்குன்னு. இதை என்னைக்காவது ஃபீல் பண்ணியிருக்கியா?” என்று மென்குரலில் அவளின் செவியருகே சென்று பேசினான் அத்வைத்.
அதற்கு அவளின் சிரம் தன்னிச்சையாக ‘இல்லை’ என்பது போல அசைய, “ஹ்ம்ம், இதை விட்டுட்டு, எப்போ பார்த்தாலும், சாவைப் பத்தி மட்டுமே நினைச்சுட்டு, உன் நாலு வருஷ வாழ்க்கையை தொலைச்சுருக்க, இல்ல?” என்று அவன் கேட்டதில்தான், அந்த உண்மையை உணர்ந்து கொண்டாள் இரா.
ஆம், சதாசர்வ காலமும், இறப்பைப் பற்றியும் அதன் மூலமாக அந்த சூனியனை அழிப்பதைப் பற்றியும்தானே சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
இதற்கிடையே, அவளின் இந்த நிலைக்கு காரணமான அவளின் முன்னோர்களையும், விதியையும், அவ்வபோது கடவுளையும் கூட திட்டியிருந்தாளே.
அதே யோசனையுடன் அத்வைத்தை நோக்கி திரும்ப, அவனோ ஒற்றை காலில் மண்டியிட்டு, இதுவரை அவளிடம் வெளிப்படுத்தாத, அவள் இதுவரை உணர்ந்திடாத, மொத்த காதலையும் விழிகளில் தேக்கி வைத்து, “நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஸ்டார்லைட்.” என்றான்.
அது கேள்வி கூட அல்ல, அவளுக்குமான பதில்!
அதில் திகைப்புடன் எழுந்து நின்ற இராவோ, ஒரு முழு நிமிடம் எதுவும் பேசவில்லை.
அதன்பிறகே, அவள் அவனுடன் பேச வந்த நோக்கம் மனதிற்குள் வந்து போக, இலக்கம் தொலைத்து இறுக்க முகமூடியை அணிந்து கொண்டவள், “என்ன பண்றீங்க அத்வைத்?” என்று கோபமாக கேட்க முயன்றாள்.
முயன்றாள்… ஆனால், அது அத்தனை எளிதாக வரவில்லை.
“என்னோட காதலை வார்த்தைகளால எக்ஸ்பிரஸ் பண்றேன் ஸ்டார்லைட். இதுவரை கண்ணால எக்ஸ்பிரஸ் பண்ணேன். அதுக்கு உன் கண்ணு மட்டுமே பதில் சொல்லுச்சு. அதான், நான் வாயைத் திறந்து சொன்னாலாவது, நீயும் உன் மனசுல இருக்கிறதை மறைக்காம சொல்லுவியோன்னு நினைச்சேன்.” என்று சாதாரணமாகக் கூறினான் அத்வைத்.
“என் மனசுல எதுவுமே இல்ல. நீங்க தேவையில்லாம, இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கீங்க.” என்று இரா படபடப்புடன் கூற, அவளின் கரத்தைப் பற்றியவனோ, “உன் மனசுல எதுவுமே இல்லன்னா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் உன்னை இழுத்தப்போ, என்னை அடிச்சுருக்கணுமே. குறைஞ்சபட்சம், திட்டியாவது இருக்கணும். இதோ, இப்போ கூட உன் கையை நான் பிடிச்சிட்டு இருக்கேன். ஆனா, அதை நீ தப்பா உணரல. நீ பொய் சொல்லலாம் ஸ்டார்லைட். ஆனா, உன் மனசும் மூளையும் பொய் சொல்லாது.” என்றான் அத்வைத்.
உடனே, அவன் கரத்திலிருந்து தன் கரத்தைப் பிரித்துக் கொண்டவள், “நோ, இது நடக்காது.” என்று மறுக்க, “ஏன் நடக்காது? உன்னோட இந்த பிராஃபெஸி கதை எல்லாம் நான் இன்னும் நம்பல. அப்படியே அது உண்மையா இருந்தாலும், அந்த சோ-கால்ட் வில்லனை அழிக்க வேற ஏதாவது வழிகள் இருக்கும். அதை நாம சேர்ந்து தேடுவோம்.” என்றான் அத்வைத்.
அவனின் வார்த்தை ஜாலங்கள் இராவின் மனதை மாற்ற முயன்றாலும், பிடிவாதத்துடன், அதை முழுதாக ஏற்க மறுத்தாள் அவள்.
“இங்க பாரு ஸ்டார்லைட், எப்போ உன் கண்ணுல எனக்கான காதலைப் பார்த்தேனோ, அப்போவே முடிவு பண்ணிட்டேன்… உன்னோட கடந்த காலத்துல என்னவேணும்னாலும் நடந்திருக்கட்டும். ஆனா, உன்னோட நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும், உனக்காக, உன்னோட நான் நிப்பேன். அதே மாதிரி, என்னோட எதிர்காலம் உன் கையில! எதுவா இருந்தாலும் சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்.” என்றான் நம்பிக்கையுடன்.
அப்போதும் அவள் முழுதாக சமாதானமடையாமல், “ஒருவேளை, அது உண்மையா இருந்தா?” என்று வினவ, அவளை அவனின் கண்களைப் பார்க்க வைத்தவன்,
“நான் ஜர்னலிஸ்ட். பல போராட்டங்களை ஃபேஸ் பண்ணியிருக்கேன். வேலைக்காகவே அப்படின்னா, வாழ்க்கைக்காக போராட மாட்டேனா. ஒருவேளை, நீ சொன்னது உண்மையா இருந்து… ஒருவேளை… நோட்… ஒருவேளை, நீ உன்னோட இறப்பை ஃபேஸ் பண்ற மாதிரி இருந்தா, அதுவரைக்குமான நம்ம காதல், அது குடுத்த அழகான தருணங்கள் போதும், நான் என் வாழ்க்கையை வாழ! அந்த தருணங்களை மிஸ் பண்ணனுமா ஸ்டார்லைட்?” என்ற இரும்பையும் உருக்கும் குரலில் அவன் கேட்க, இரா இத்தனை நாள்கள் போட்டிருந்த கடிவாளம் மெல்ல உருகியது.
கண்ணீர் அவளின் பார்வையை மறைக்க, கலங்கலாக தெரிந்த அத்வைத்தின் முகத்தைக் கண்டவளோ, மேலும் கீழும் தலையசைக்க, அதைக் கண்டவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க வேண்டி, “இந்த தலையசைக்கிற வேலையெல்லாம் வேண்டாம். வாயைத் திறந்து சொல்லுங்க மேடம்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறினான்.
அதில், அவனை போலியாக முறைத்தவள், “அப்படியெல்லாம் சொல்ல முடியாது.” என்று உதட்டைச் சுழித்து அங்கிருந்து நகர, அவளின் பின்னே சென்றவனோ, “இந்தப் பொண்ணுங்களுக்குப் பசங்களை பின்னாடி அலைய விடுறதுல அப்படி என்ன சந்தோஷமோ?” என்று செல்லமாக சலித்துக் கொண்டான்.
“உங்களை யாரு என் பின்னாடி வரச் சொன்னது?” என்று இதழோரம் முகிழ்த்த சிரிப்புடன் இரா வினவ, அவளின் கரத்தைப் பற்றி தன்னைப் பார்க்கச் செய்தவன், “டிவைன்!” என்றான் ரசனையுடன்.
அவள் என்னவென்று பார்வையாலேயே வினவ, “உன்னோட ஸ்மைல். அதுவும் உதட்டுல இந்த சைட் மட்டும் சிரிப்பை ஒளிச்சு வைக்கிறியே, அது செமையா இருக்கு.” என்று அவன் ரசித்துக் கூற, வஞ்சியவளுக்குத்தான் அவனின் பேச்சில் வெட்கம் வந்து தொலைத்தது.
“கொஞ்ச நேரம் கூட பேசாம இருக்கவே முடியாதுல?” என்று அவள் பேச்சை மாற்ற, “நோ, என் வேலைக்கு இந்த பேச்சு ரொம்ப முக்கியமே!” என்றவன், “ஆமா, என்னைப் பத்தி நிறைய ரிசர்ச் பண்ணி வச்சுருக்க போல.” என்றான் கேலியாக.
“ஆமா, இதுவரை எத்தனை பேய்யை பேட்டி எடுத்துருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்.” என்று அவளும் கேலியில் இறங்க, “இதுவரைக்கும் எந்த பேய்யையும் பேட்டி எடுக்கல. இனிமேதான், ஒரு மந்திரவாதியை பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கு கோ-ஆப்பரேட் பண்ணுவீங்களா மிஸ். ஸ்டார்லைட்?” என்றான் அவன்.
அதற்கு அவள் முறைக்க, “நோ நோ, இன்டென்சிட்டியை கூட்டிடாத. மந்திரவாதி நல்லா இல்லல. ‘தேவதை’ன்னு வச்சுக்கலாமா? தேவதைக்கும் சக்திகள் இருக்கும்ல. நீயும் தேவதை மாதிரி இருக்க.” என்றவனை இடைவெட்டியவள், “ஃபிளர்ட் பண்ணது போதும். நான் என் வீட்டுக்குப் போறேன்.” என்றாள்.
“ஏன் நானெல்லாம் வரக்கூடாதா?” என்று வேண்டுமென்றே கேட்டவன், “நான் வேற என் வருங்கால மாமனார்னு தெரிஞ்சும் சில சேட்டைகளை செஞ்சுருக்கேன்.” என்று கூற, அதை அவள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.
அதிலேயே, அவள் பெற்றோர் மீதிருந்த அவளின் கோபத்தைப் புரிந்து கொண்டவன், அதற்கு மேலும் அதைப் பற்றி பேசவில்லை.
இருவரும் இராவின் வீட்டிற்கு வர, உள்ளே நுழைவதற்குள், “நான் எந்த காலை எடுத்து வச்சு வரட்டும்?” என்று கேட்டு, ஆர்ப்பாட்டத்துடன்தான் வந்தான் அத்வைத்.
தோட்டத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த ஐங்கரன் மற்றும் ரூபிணிக்கு அவனின் குரல் கேட்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
முதலில் நுழைந்த இரா, அவளின் பெற்றவர்களைக் கடந்துச் செல்ல, அவளைப் பின்தொடர்ந்த அத்வைத்தோ, “ஹலோ அங்கிள், ஹலோ ஆண்ட்டி.” என்றுவிட்டு செல்ல முற்பட, அவனைத் தடுத்த ஐங்கரனோ, “நான்தான் நேத்தே சொன்னேன்ல தம்பி…” என்றார்.
“ஆமா சொன்னீங்க. ஆனா, அதுக்கு நான் ஓகே சொல்லலேயே. அதோட, உங்ககிட்ட பெர்மிஷன் வாங்குறதெல்லாம், உங்கப் பொண்ணு ஓகே சொல்றதுக்கு முன்னாடி வரைதான். இப்போதான், நாங்க லவர்ஸ் ஆகிட்டோமே!” என்று அத்வைத் கூற, “இது இப்போ அவசியமா?” என்று அவனின் கரத்தைப் பற்றியபடி, அடிக்குரலில் கூறினாள் இரா.
“அட, அவசியம்தான் ஸ்டார்லைட்! அப்புறம், மத்தவங்க வேலை வெட்டியில்லாம பேசுற காசிப்பை உண்மைன்னு நம்பி, நம்ம ரிலேஷன்ஷிப்பை தப்பா நினைச்சுடுவாங்களே!” என்று பேச்சிலேயே அவளின் பெற்றோருக்கு குட்டு வைத்தான்.
ரூபிணியோ பதற்றத்துடன், “அதெப்படி? இரா… இராக்கு…” என்று கூற வந்ததை முழுமையாகக் கூற முடியாமல் தயங்க, “இராக்கு என்ன? ஓஹ், அந்த மேஜிக்கை சொல்றீங்களா? அதைத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வெரிஃபை பண்ணியாச்சே. அப்படித்தான ஸ்டார்லைட்?” என்று அவள் மட்டும் அறியுமாறு கண்ணடிக்க, இராவின் முகத்தில் வெட்க ரேகைகள் தென்பட்டாலும், அதை நொடிக்குள் மறைத்தபடி, “என்னமோ செய்ங்க!” என்று கூறியபடி, அவளின் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள்.
அதன்பிறகு இருவரிடமும் திரும்பியவன், “உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கேள்வி… உங்க குடும்பத்தோட கடமை எல்லாம் ஓகே… ஆனா, அந்த முடிவுக்கு வரதுக்கு முன்னாடி, ஒரு நிமிஷம் கூட உங்க பொண்ணைப் பத்தி யோசிக்கலையா? உங்கப் பொண்ணுக்கு நீங்க செய்ய வேண்டிய கடமை உங்க ஞாபகத்துக்கே வரலையா? சரி, உங்கப் பொண்ணுக்கு மந்திர சக்தி கிடைச்சுருக்கு, அதனால அந்த வில்லன் திரும்ப வந்துடுவான்னு பயப்படுறீங்க. அதுக்கு, உங்கப் பொண்ணு உயிரைக் குடுத்துதான் அவனை அழிக்கணுமா? அதுக்கு மாற்று வழி என்னன்னு கூடவா யோசிக்கல நீங்க?” என்று வரிசையாகக் கேள்விகளை முன்வைக்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறித்தான் போயினர் இருவரும்.
ஒரு நிமிடம் பொறுத்த அத்வைத், “நீங்க செய்யாததை, நாங்க செஞ்சுக் காட்டுறோம். அவளுக்காக நீங்க நிக்கல. அதனால, இனி அவளோட நிக்கப் போற என்னைத் தடுக்கவும் உங்களுக்கு உரிமை இல்ல.” என்று உறுதியாகக் கூறியவன், அவர்களின் பதிலை எல்லாம் எதிர்பார்க்காமல், வீட்டிற்குள் நுழைந்தான்.
அவன் பேசியது அனைத்தையும் கேட்ட இராவோ தளம்பலான மனநிலையில் இருந்தாள்.
இந்த நான்கு வருடங்களில், அவளுக்காக என்று யாரும் பேசியதில்லையே.
இப்படி அவளுக்காக பேச ஒருவன் இருக்கிறான் என்பதே அவளுக்கு மனரீதியாக பெரும் பலத்தை அளித்தது.
உள்ளே நுழைந்தவனையே பார்வையால் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தாள் அவனின் ஸ்டார்லைட்.
வழக்கம் போல அவளின் இளநீலநிற விழிகள் கதைகள் பேசின.
‘நாம ரெண்டு பேரும் சந்திச்சே ஒரு வாரம்தான் இருக்கும். அதுக்குள்ள காதலா? அதுவும் இந்த ஊரே வெறுத்து ஒதுக்குற என்மேல? அப்படி நான் என்ன செஞ்சுட்டேன்?’ என்று எண்ணியபடியே இன்னமும் அவனைத்தான் கண்டு கொண்டிருந்தாள்.
“அட, ஸ்டார்லைட்டுக்கு என்மேல ஓவர் லவ்ஸ் போல? பொங்கி வழியுதே கண்ணுல! ஆனா, வாயைத் திறந்து மட்டும் சொல்லாத.” என்றவனைக் கண்டு மென்மையாகப் புன்னகைத்தவள், அவள் இத்தனை நேரம் மனதிற்குள் கேட்ட கேள்விகளை வாய்வழியாக வினவினாள்.
“நீ என் கண்ணு முன்னாடி வந்துட்டியே! அதுவே நீ செஞ்ச ரொம்ப பெரிய விஷயம்தான். ஒருவேளை, அன்னைக்கு உன்னைப் பார்க்கலைன்னா, இந்நேரம் நான் இங்க இருந்துருக்கவே மாட்டேன். என் மனசுக்குள்ள பட்டாம்பூச்சியும் பறந்துருக்காது. என் வாழ்க்கைல காதல்ங்கிற பக்கம் திறந்துருக்கவும் செய்யாது.” என்று அவன் வசனம் பேச, “ஐயா சாமி போதும்! ஏதாவது பிராக்டிகலா சொல்றீங்களா? வாயைத் திறந்தாலே சினிமா டயலாக் மாதிரி இஷ்டத்துக்கு அள்ளி விட வேண்டியது.” என்று சலித்துக் கொண்டாள் இரா.
அப்போது வாசலில், “இராக்கா…” என்ற குரல் கேட்க, இரா எழுந்து செல்வதற்கு முன், “அட என் குட்டி மச்சினிச்சி…” என்றவாறே கதவைத் திறந்தான் அத்வைத்.
தமக்கையை எதிர்பார்த்த அவனிக்கு அத்வைத்தைக் கண்டதும் விழிகள் விரிந்து கொள்ள, அதைக் கண்டவனோ சிரிப்புடன், “அக்காவும் தங்கச்சியும் கண்ணை மட்டும் நல்லா முட்டை சைஸுக்கு விரிக்கிறீங்க.” என்றான்.
அவனை உள்ளே இழுத்த இராவோ, “உள்ள வா அவனி.” என்று அழைக்க, அதன்பின்பே நிகழ்வுக்கு வந்த அவனியோ, அத்வைத்தை ஆச்சரியமாகப் பார்த்தபடி உள்ளே நுழைந்தாள்.
சின்னவளின் ஆராய்ச்சி பார்வை அத்வைத்திற்கு சிரிப்பை வரவழைத்தாலும், இப்போது சிரித்தால் இரு பெண்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம் என்பதால் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
இராவை தனியே அழைத்து வந்த அவனியோ, “இராக்கா, அவங்க எதுக்கு இங்க வந்துருக்காங்க?” என்று ரகசியமாக வினவ, அதற்கு இரா பதில் சொல்வதற்கு முன், “அட அவனி, என்னை மறந்துட்டியா? நான்தான் உன் அக்காவோட புது ஃபிரெண்ட். நேத்து கூட நாம மீட் பண்ணோமே? அதுக்குள்ள மறந்துட்டியா? அதுக்கு வாய்ப்பில்லையே…” என்று அவன் பேசிக் கொண்டே போக, “அங்கிள்…” என்ற ஒற்றை அழைப்பில் அவனின் பேச்சை நிறுத்தியிருந்தாள் அவனி, தற்காலிகமாகத்தான்!
அத்வைத்தின் முகம் அஷ்டகோணலாக மாறுவதையும், அதற்கு இரா கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பதையும் கண்ட அவனியோ, “ஏன், நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா?” என்று பாவமாக வினவினாள்.
அவளின் குழந்தைத்தனத்தை ரசித்த அத்வைத்தோ, “அப்படியெல்லாம் எதுவுமில்லடா. நீ அங்கிள்னே கூப்பிடு. தமிழ்ல கூப்பிட்டா என்ன, இங்லிஷ்ல கூப்பிட்டா என்ன? அர்த்தம் ஒண்ணுதான?” என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.
சிறிது யோசித்த அவனியோ, “நீங்க அங்கிள் ஏஜ்ல இல்ல. நான் வேணும்னா அண்ணான்னு கூப்பிடவா?” என்று கேட்க, “எது அண்ணாவா? முதலுக்கே மோசமாகிடும் போலயே!” என்று அத்வைத் புலம்ப, அவனைக் காண பாவமாக இருந்தது போலும், “அவனி, நீ அவரை மாமான்னு கூப்பிடு.” என்று கூறினாள்.
அதில் அவனிக்கு ஏதோ புரிவது போலிருக்க, “ஹை ஜாலி…” என்றவள், அத்வைத்திடம் திரும்பி, “நீங்க டெயிலி வீட்டுக்கு வருவீங்களா மாமா?” என்று உற்சாகத்துடன் வினவ, “அவனி ஓகே சொன்னா வந்துடுவோம்.” என்றான்.
“ம்ச், எங்க வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க. அட்லீஸ்ட் நீங்களாச்சும் வாங்க.” என்று அவனி சோகத்துடன் கூற, அவளின் சோகத்திற்கான காரணத்தை புரிந்து கொண்ட இருவரும் பேச்சை மாற்றி, அங்கிருந்த சூழலையும் மாற்றினர்.
வெகு நாள்களுக்குப் பிறகு, அவ்வீடு சிரிப்பு சத்தத்தால் நிறைந்தது.
ஐங்கரன் மற்றும் ரூபிணிக்கும் கூட அவர்களின் சிரிப்பு சத்தம் சற்று ஆறுதலைக் கொடுத்தது.
*****
மறைப்புரத்திற்கு பக்கத்து நகரில் இருக்கும் மூன்று நட்சத்திர விடுதியில் இருந்த உயர்ரக பார் அது.
அங்கு இசைக்கப்படும் மெல்லிய கானத்தை தாண்டி ஒருவனின் குரல் ஓங்கி உயர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
“இந்த முறையும் தோத்துட்டு, காசா கேட்குற? இதுவரை கைநீட்டி பணம் வாங்குனதுக்கு அப்படி என்ன பண்ணிக் கிழிச்ச?” என்று அவன் தன்னுடன் இருக்கும் மற்றவனை திட்ட, இரண்டாமவனோ,
“நான் என்ன பண்றது? முடியப் போற நேரத்துல எவனோ ஒருத்தன் வந்துட்டான். கூடவே, அந்த பொண்ணும் வந்துடுச்சு. ஏற்கனவே, ஊருக்குள்ள தாந்த்ரீகத்தை செய்யுறவங்களுக்கு கடுமையான தண்டனை இருக்கு. அந்த மாடசாமி பத்தி தெரியும்தான? நானே அந்த பயத்துல இருக்கேன். இதுல, அந்தப் பொண்ணுகிட்ட வேற மாட்டிக்கிட்டேன்னா அவ்ளோதான்!” என்றான்.
“உனக்கு மட்டும் சாக்கு சொல்ல ஆயிரம் காரணம் கிடைச்சுடுமே. ஒரு பொண்ணுக்கு போய் பயந்துருக்க. அதை சொல்ல வெட்கமா இல்ல உனக்கு?” என்று முதலாமாவன் கோபத்தில் கத்த,
“சார், அதான் சொன்னேனே அந்தப் பொண்ணுக்கு மந்திர சக்தி இருக்கு” என்றான் மற்றவன்.
“அப்போ அந்தப் பொண்ணுக்கு ஏன் தண்டனை குடுக்கல உங்க ஊர்ல?” என்று சரக்கை கோப்பையில் ஊற்றியபடி அவன் வினவ, “எங்க ஊர்ல அவங்க குடும்பத்துக்கு நிறைய செல்வாக்கு இருக்கு. அதோட, அந்தப் பொண்ணுக்கு சக்தி இருக்குறதுக்கான ஆதாரம் எதுவுமில்லன்னு சொல்லிட்டாங்க. இதுவும் ஒரு வகை பாலிட்டிக்ஸ்தான்.” என்றான்.
பின் அவனே, “முதல்ல, அந்தப் பொண்ணுக்கு ஏதாவது செய்யணும்.” என்று சலிப்பில் கூற, “செஞ்சு விடு. தொல்லை போய் தொலையட்டும்.” என்றான் முதலாமவன்.
“சார் சார்… நான் சும்மா ஆதங்கத்துல சொன்னேன். அதெல்லாம் வேண்டாம். நாளப்பின்ன தெரிய வந்தா, என்னை மட்டுமில்ல, என் குடும்பத்தையே தள்ளி வச்சுடுவாங்க.” என்று பயந்தான் அவன்.
“இந்த வேலையை மட்டும் நீ முடிச்சுட்டா, உன் குடும்பத்தோட ஃபாரின்ல செட்டிலாகலாம். அதுக்கு தடையா இருக்க அவளைப் போடு முதல்ல.” என்றவன், அங்கிருந்து எழுந்தபடி, “உனக்கு உண்மைலேயே தாந்திரீகம் தெரியுமா, இல்ல சும்மா காசைக் கறந்துட்டு இருக்கியான்னு இதை வச்சுதான் முடிவு பண்ணுவேன். இதை மட்டும் சொதப்பின, அப்புறம் குடும்பத்தோட கைலாசம் போக வேண்டியதுதான்.” என்று மிரட்டிவிட்டே சென்றான்.
இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த உருவமோ, இரண்டாமவனின் முன்வந்து நின்றது.
தொடரும்…
Yar antha uruvam..!!
Epi super sis…