15. நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன்
“என்ன மது யார் அது? யார நீ பிளாக்னு சொல்ற? அவங்க உனக்கு தெரிஞ்சவங்களா?”என்ற தோழர் படையின் கேள்விகளுக்கு,
“எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க மாதிரி இருந்துச்சு அதான் கூப்ட்டேன் ..ஆனா இவங்க அவங்க இல்ல போல..” என்று சமாளித்தவளின் குரலில் லேசாய் தடுமாற்றம்…!
அவனின் யாரோ என்று தன்னைக் கண்டு கொள்ளாத தன்மையை பார்த்து இதய ஓரத்தில் ஒருவித வலியும்.. கூடவே அளவுக்கதிகமாய் கோபமும்..
கோபப்பட வேண்டிய இடத்தில் இருக்கும் தானே எல்லாவற்றையும் மறந்து அவனை அழைத்திருக்க,
தவறு செய்தவன் தன்னிடம் முகத்தை திருப்பிக் கொள்வதா? என்று..
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல் இறங்கி போய் அவனிடமே கேட்டு விடுவோமா? என்று இவள் நினைத்த நேரம், சிக்னல் பச்சை விளக்கிற்கு மாறியிருக்க, வாகனங்கள் வேகமாய் நகர ஆரம்பித்தன.
சரியாக கருப்பசாமியின் வண்டியும் நகர, கடக்கும் பொழுது ஒரே ஒரு நொடி அவளை புருவச்சுழிப்புடன் குழப்பமாய் பார்த்தது போல் இருக்க, அவனின் ஒற்றை பார்வைக்கே மதுராவிற்குள் ஒரு வித படபடப்பு வந்து தொற்றிக்கொண்டது. அவனைப் பார்த்து பல மாதங்கள் ஆனதால் அப்படி இருக்கும் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளுக்கு
எங்கே மீண்டும் காணாமல் போய்விடுவானோ? என்ற பயமும் வர, அவசரமாய் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த தன் நண்பியிடம் திரும்பி “தேஜு வண்டிய ஸ்டார்ட் பண்ணேன்… அதான் சிக்னல் போட்டுட்டாங்களே.. சீக்கிரம் போ” என்று விரட்ட,
“ஹேய் மது வாட்ஸ் ராங் வித் யூ? இன்னும் நமக்கு முன்னாடி இருக்கிற வண்டி மூவ் ஆகல.. அதுக்குள்ள போக சொல்ற? ” என்று தோழியை தேஜஸ்வினி கடிய,
தோழியின் பேச்சு கூட அரைகுறையாக காதில் விழுந்தாலும், அதற்கு மேல் தாமதிக்க விரும்பாமல் அவசரமாய் மதுரா கார் கதவைத் திறந்து இறங்கியவள் பிளாக்கின் காரைத் தேடி நகர்ந்து கொண்டிருந்த வண்டிகளுக்கிடையே புகுந்து புகுந்து போக,
அந்தோ பரிதாபம்!
அவனின் கார் அவனைப் போலவே அவளுடன் கண்ணாமூச்சி ஆடிவிட்டு கண்களை விட்டு மறைந்து விட்டிருந்தது.
திருவிழாவில் தொலைந்து போன குழந்தையாய் நடுரோட்டில் நின்றவளின் கண்களில் கண்ணீர் நிறைக்க,
“பிளாக்… திரும்பவும் போயிட்டியா?”என்று முணுமுணுத்தவளின் தோள்பட்டையை ஒரு வலிய கரம் ஒன்று பட, ஒருவேளை அவனாக இருக்குமோ? என்று “பிளாக்..” என்று ஆவலோடு திரும்ப, அங்கு அவளை முறைப்புடன் பார்த்து நின்றதோ டிராபிக் போலீஸ்…!
மதுரா கருப்பசாமியின் காரைப் பின்தொடர்கிறேன் என்ற பேர்வழி தான் வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்களுக்கு குறுக்கே புகுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்து இருக்க, அதை கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தவர் அவளை கண்டிப்பதற்காகவே வந்திருந்தார். இன்றைய இளம் வயதினருக்கு பொறுப்பே இல்லை எல்லாவற்றிலும் விளையாட்டு தான் என்று பெங்காலி மொழியில் அவளை அவர் காரசாரமாய் வறுத்தெடுக்க,
அவர் திட்டுவது முழுவதுமாய் புரியவில்லை என்றாலும் எதற்காக திட்டுகிறார் என்பது மட்டும் புரிய,
‘ஐயா எப்ப திட்டி முடிப்பீங்க?’ என்று மனதிற்குள் நினைத்த மதுராவோ, வெளிப்பார்வைக்கு தவறு செய்து விட்ட குழந்தையாய் திருட்டு முழி முழிக்க, தோழியை தேடிப் பிடித்து காரை ஓரமாய் நிப்பாட்டி விட்டு வந்திருந்த தேஜஸ்வினி தான் ரத்த கொதிப்பில் கத்திக் கொண்டிருந்தவரை பேசி சரிக்கட்டி, தன் பங்கிற்கு அவரின் முன்பே, நாலு திட்டு திட்டி.. நாலு தட்டு தட்டி அழைத்து வந்திருந்தாள் திருமணம் நடக்கும் மஹாலுக்கு..
அங்கு அவர்களது ஆஃபீஸ் முதலாளி அவர்களை உள்ளன்போடு வரவேற்க, அவரிடம் மகளின் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லி புன்சிரிப்புடன் வரவேற்பை ஏற்றவர்கள் உள்ளே சென்று இருக்கைகளில் அமர்ந்து கலாட்டாவை ஆரம்பித்தனர். மதுரா மட்டும் ஆபீஸ் தோழமைகளின் கலாட்டாக்களில் கலந்து கொள்ளாமல் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருக்க, தேஜு தான்…
“ஹே கல்யாண மாப்பிள்ளை வந்துட்டாரு.. வா.. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இருந்து பாக்கலாம்.. மாப்பிள்ளையை வரவேற்கிற சடங்கு எல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கும்” என்று அவளை இழுத்து செல்ல, மதுராவும் வேறு வழி இன்றி அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் சுவாரசியமே இல்லாமல்…
பெங்காலி முறைப்படி நடக்கும் திருமணம் என்பதால் மாப்பிள்ளை வரவேற்பு அங்கு மிகவும் விசேஷம்… அதைப் பார்க்கவே ஆசையாய் கூடே நின்றனர் அனைவரும்.
மங்கள வாத்தியங்களின் வாசிப்பு மத்தளங்களின் பின்னணியில் ஊது குழல் ஓசை ஒருபுறம் அவர்களின் மகிழ்ச்சியான சத்தத்திற்கு இணையாக ஒலிக்க, மணமகனின் வீட்டார் புடைசூழ, ஒரு வெள்ளை நிற அலங்கார குதிரையில் மணமகன் வர,
மணமகன் விட்டாரின் இளைய தலைமுறையினர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் நடனமாட, அவ்விடத்திலேயே அத்தனை கலகலப்பு! தேஜஸ்வினியும் கீழே நடந்த கலகலப்பில் ஆனந்த கூச்சலோடு மற்ற நண்பர்களிடம் பேசி சிரித்துக் கொண்டிருக்க, மதுராவின் கண்களோ அத்தனை கூட்டத்தில் ஒருவனை மட்டும் பார்த்து அதிர்ந்து போய் நின்றது.
இதுதான் விதி என்பதா? இனி அவனை பார்க்க முடியுமா? என்று தவிப்பில் இருந்தவளுக்கு முன் அவனே வந்து நின்றால்?
அவளும் என்ன செய்வாள்?
அந்த கல்யாண கூட்டத்தில் மணமகனின் அருகே நின்று அவளின் கண்களை மொத்தமாய் நிறைத்தான் பிளாக்.
அவனைப் பார்த்ததும் மதுராவின் மனதிற்குள் சிறு மத்தாப்பு…!
கூடவே அவனை நேரில் பார்த்து பேசும்போது அவனிடம் என்ன பேச வேண்டும் என்று மனதிற்குள் சிறு ஒத்திகை வேறு…
மணமகளின் தாயார் மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்து, மணமகனின் வாயில் இனிப்பை கொடுக்க, மணமகளின் தங்கைமார்கள் தங்கள் கணக்குப்படி தங்களது வருங்கால ஜீஜுவை உள்ளே விட வேண்டும் என்றால் தட்சணைக் கொடுக்க வேண்டும் என்று வம்பு இழுக்க கீழே அத்தனையும் கலகலப்பு தான்…!
பிளாக் உதடுகளிலும் லேசான ஒட்டவைத்த சிரிப்பு… அதுவே அதுவே அவனுக்கு அத்தனை அழகாய் இருக்க,
மதுராவின் அருகே நின்றவர்கள் எல்லாம்,
“ஏய் மாப்ள பக்கத்துல நிக்கற அந்த பிளாக் கலர் ட்ரஸ பாருங்களேன்.. லுக்கிங் ஹேண்ட்சம்ல… கருப்பா இருந்தாலும் மேன்லியா இருக்கார்ல” என்று பிளாக்கை பார்த்து ஜொல்ல,
மதுராவும் அவனின் மொத்தத்தையும் அப்பொழுதுதான் கவனித்து பார்த்தால்… முன்பு போல தன் அடர்ந்த சிகையை தோள்பட்டை வரை வழிய விடாமல், அளவாய் கத்தரித்து ஜெல் வைத்து படிய வைத்திருந்தான், முன்பு மாதிரி தன் காட்டுவாசி தாடியை வளர விடாமல் அதையும் அழகாய் ட்ரிம் செய்து,
கருப்பு நிறத்தில் அவன் அணிந்திருந்த கோட் சூட் அவனின் கருப்பு நிறத்தை கொஞ்சம் கூட்டியே காட்ட, அதுவே அவனுக்கு ஒரு கம்பீரத்தை கொடுத்தது.
அவனின் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருந்த மதுரா இமைக்காமல் அவனையே பார்த்திருக்க,
மண்டபத்தின் வரவேற்பு வாயிலில் நின்றவனுக்கு யாரோ தன்னை உற்று கவனிப்பது போல் உள்ளுணர்வு உந்த, சட்டென்று மேலே பார்த்தான்.
மதுராவோ, அவன் இப்படி பார்ப்பான் என்று எதிர்பார்க்காதவள் அவன் மேலே பார்த்த அடுத்த நொடி அவசரமாய் அருகில் இருந்து தூணுக்குப் பின்னால் மறைந்து, “ஆத்தி… பார்த்துட்டானா?” என்று இதயம் படபடக்க தனது நெஞ்சில் ஒரு கையை வைத்துக் கொண்டாள். ஏதோ தவறு செய்து விட்ட உணர்வு அவளுக்குள்..
ஆனால் சற்று நேரத்தில் மனம் தெளிந்து விட, அவளுக்குள்ளேயே சில கேள்விகள் சில பதில்கள்..!
“அச்சோ நான் எதுக்கு இப்ப மறைஞ்சிக்கணும் ?நான் ஒன்னும் தப்பு பண்ணலையே? அழகு ரசிக்கிறது தப்பில்ல தானே?” என்று தன் செயலுக்கான விளக்கத்தை தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் தைரியம் வரப்பெற்றவளாய் மறைவில் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்க்க,
மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மாப்பிள்ளை வீட்டினர் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
கருப்பசாமியை காணவில்லை.
மனதிற்குள் சிறு ஏமாற்றம் பரவ, “சரி பிளாக் கீழ தான் இருப்பான் போய் பார்க்கலாம்” என்று இவள் படியின் வழியே வேகவேகமாய் கீழே இறங்கி வர, மணமகனுக்கு உரிய சில சடங்குகள் நடக்க, அவள் தேடி வந்தவனை தான் காணவில்லை.
அதற்குள் தேஜு, “யாரடி அப்பவே இருந்து தேடுற?”என்று கேட்டவாறு அவளிடம் வர,
இப்பொழுது சொன்னால் யார்? என்ன? என்று கேள்வி வருமே என்று அவளிடம் சொல்ல முடியாமல் “சும்மாதான்” என்று சமாளித்தாள்.
தேஜுவும், அவளை ரொம்ப நோண்டி எல்லாம் கேட்காமல், அங்கு நடக்கும் திருமணத்தைப் பற்றி சம்பிரதாயங்களை பற்றி அவளுக்கு சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டே சுற்றி இருப்பவர்களை பார்த்தவளின் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்க, அங்கு கைகளை கட்டியபடி ஓரமாய் நின்றவனின் கண்கள் அவளையே வட்டமிடுவது தெரிய, மதுராவிற்குள் சில்லென்று ஒரு குளிர்ச்சி..
அருகில் போய் பேசுவோமா? என்று ஒரு மனம் குரல் எழுப்பினாலும், ஏன் துரை வந்து என்கிட்ட பேச மாட்டாரோ? என்ற வீம்பு பிடித்த மனமும் தன் பங்கிற்கு குரல் எழுப்ப, இருவரது விழிகளும் புரியாத பாஷையோடு ஒரே நேர்கோட்டில் கலக்க, மதுராவும் இப்பொழுதே அவனிடம் அனைத்தையும் பேசி விடலாம் என்று ஒரு அடி முன்னே எடுத்து வைக்க… ஆனால் அதெல்லாம் ஒரு நொடியில் கருப்பசாமியை ஓடிவந்து கட்டி அணைத்த பெண்ணால் வீணாய் போனது.
திடீரென்று ஓடி வந்து தன்னை அணைத்தவளை அவனுமே எதிர்பார்க்கவில்லை தான்…
கருப்பசாமியை கட்டியணைத்த மாடல் அழகியோ “முகில் டார்லிங் நீ இங்கதான் இருக்கியா? உன்ன எங்கெல்லாம் தேட? நீ என்ன எப்ப பார்த்தாலும் என்ன விட்டுட்டு விட்டுட்டு போயிடுற? கூட்டத்துல நான் தொலைஞ்சிட்டா என்ன பண்ணுவ?” என்று சிணுங்கிக்கொண்டே பிள்ளை மொழியில் கொஞ்ச,
“அதானே ரெண்டு மாசத்துல கல்யாணத்த வச்சுட்டு உன் ஃபியான்சிய தனியா தவிக்க விடலாமா? கூட்டத்துல தொலைச்சு போயிட்டா என்ன பண்ணுவ? ரொம்ப பாவம்ல அவ” என்று அருகில் நின்ற அவனின் நண்பன் மாதேஷ் கேலி பேசி நமட்டு சிரிப்பு சிரித்து வைக்க,
நண்பன் அவளை ஃபியான்சி என்று கிண்டல் செய்ததும் முறைத்தவன்,
“மேரேஜ் பங்க்ஷன்ல மிஸ் ஆகுற அளவுக்கு நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல ஷாலு… அதான் அவ்ளோ சீட்ஸ் இருக்குல்ல அங்க போய் உட்காரு” என்று தன்னை அணைத்தவளை விலக்கி மணமகனின் தங்கை ஒருத்தியுடன் அவளை கோர்த்து விட்டவன், அவசரமாய் தன்னை சிறையிட்ட கண்களுக்கான சொந்தக்காரியைத் தேட, அவள் அங்கு இருந்தால் தானே அவன் தேடுவதற்கு?
நண்பனின் கண்கள் அலைப்பாய்வதை பார்த்து, மாதேஷ்
“முகில் யாரடா தேடுற?” என்று கேட்க,
“ம்ம் ஒரு திருட்டு பூனைய…” என்று சொன்னவனின் இதழ்கள் ரகசிய புன்னகையை சிதற விட,
அதற்கு காரணமானவளோ, அங்கு அழுகையில் குலுங்கிக் கொண்டே மேல் தளத்திற்கு செல்லும் படிகளில் ஓடி கொண்டிருந்தாள். அதை அவனும் பார்த்து விட்டான்.
மாதேஷோ நண்பனின் வெகுநாளைக்கு பிறகான சிரிப்பை பார்த்து மகிழ்ந்தவன்,
“ஓ.. ஓ ..அந்த திருட்டு பூனை உன்கிட்ட எத திருடிட்டு போச்சு டா?” என்று ஆர்வமாய் கேட்க,
“ம்ம் அது என் பர்சனல்..”என்றவன் அடுத்த நொடி மின்னல் வேகத்தில் அவளை பின் தொடர்ந்து சென்றிருந்தான்.
இங்கோ சொல்லாமல் கொல்லாமல் அடக்கப்பட்ட அழுகையுடன் மண்டபத்தின் மூன்றாம் தளம் வரை விறுவிறுவென்று படிக்கட்டு மூலமாக வந்துவிட்டவளுக்கு சுற்றி யாரும் இல்லை என்ற தைரியத்தில் அழுகை வெடித்தது.
என்ன எதிர்பார்க்கிறோம் அவனிடம்? அவனைப் பற்றி தனக்கு என்ன தெரியும்? ஒன்றுமே தெரியாமல் எதற்கு இந்த கற்பனை? அவன் தான் அன்றே சொன்னானே எல்லாமே அவனின் திட்டம்… அவர்களின் திருமணத்தை தவிர என்று… அப்படி சொன்னவனிடம் போய் நான் தான் உன் மனைவி! நான் உனக்காக தான் காத்திருக்கிறேன்? என்னை ஏற்றுக் கொள் என்று கெஞ்சவா முடியும்? அதோடு அவனுக்கு அந்த அழகான பெண்ணுடன் இருக்கும் உறவு என்ன? என்று அருகில் இருந்தவன் சொல்லவில்லையா? அதை கேட்ட பிறகும் வீண் கற்பனையை வளர்க்கக்கூடாது அல்லவா? அது தவறாயிற்றே.. என்று உள்ளம் ஒரு புறம் நிதர்சனத்தை எடுத்துரைத்து காயத்தை ஆழமாய் கீறி விட,
கூடவே அவளுக்குள் ஒரு எண்ணம்..
ஒருவேளை இதுவும் அவனின் மற்றொரு மிஷன் என்றால்? அங்கு நடந்ததும் நடிப்பு என்றால்… காயப்பட்ட உள்ளம் இதுவாக இருக்காது அதுவாக இருக்காது என்று தன் காயத்திற்கு மருந்தாக தனக்குள்ளையே மீண்டும் கற்பனை செய்ய ஆரம்பித்தது.
உள்ளத்தின் சிந்தனையில் சுற்றம் மறந்து நின்று கொண்டிருந்தவள்,
யாரோ குரலை செருமும் ஓசையில் திடுக்கிட்டு திரும்ப, அங்கு நின்றதோ அவளின் எண்ணத்தின் நாயகனே..!
இவன் எப்பொழுது இங்கே வந்தான்? என்று பதற்றம் கலந்த பயத்துடன் மதுராவும் தயக்கத்துடன் மெல்லமாய் அவனை ஏறிட்டுப் பார்க்க,
அவனோ உதடுகளில் மீதம் ஒட்டியிருந்த புன்னகையுடன் அவளை தன் கண்களால் சிறையெடுக்க, அதன் தாக்கத்தில் முகம் சிவந்த மதுராவிற்கு அத்தனை நேரம் அவனிடம் பேசுவதற்காக ஒத்திகை பார்த்து வைத்த அத்தனை சொற்களும் இதழ்களுக்குள்ளேயே அடங்கி விட, இதழ் கடித்து மௌனமாய் தலை குனிந்து நின்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
அதற்கு மேல் அவளை சோதிக்க விரும்பாமல் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“ஐ அம் கார்முகில் வர்ணன்… உன் நேம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா மிஸ் கேட் ?” என்று சின்ன சிரிப்போடு கேட்டவனை நெஞ்சம் அடைக்க அதிர்ந்து போய் பார்த்தாள் மதுரவாணி.
தொடரும்…
போன அத்தியாயத்திற்கு விருப்பமும் கருத்துகளும் சொன்ன அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊 ♥️
இந்த அத்தியாயத்தை பற்றிய தங்களது கருத்துக்களையும் பதிவிட வேண்டுகிறேன்…🙂♥️
Shadow hero TTN competition
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
44
+1
2
+1
2
Black name கார்முகில் super sis… Super epi sis…
தேங்க் யூ சிஸ்டர் உங்க சப்போர்ட்டுக்கு 💖💕
சூப்பர் எபி ♥️😊
தேங்க்ஸ் பார் யுவர் கமெண்ட் சிஸ் 🥰
கார் முகில் வண்ணன் நல்ல பெயர் தான் மறுந்து விட்டானா?.
நெக்ஸ்ட் எபிசோட்ல பாக்கலாம் சிஸ்டர் 🥰😍