Loading

காட்சிப்பிழை 13

அந்த ரோபோக்கள் வந்த வழியே திரும்பிச் சென்றதை எண்ணி மகிழ்ந்தவர்களுக்கு அந்த நிம்மதி சிறிது நேரம் கூட நிலைக்காமல், அடுத்த அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது, அவர்கள் செல்லும் வாகனம் கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருக்கும் செய்தி.

அதிவிரைவாக காட்டுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் வாகனத்திற்குள் திகைத்து போய் அமர்ந்திருந்தவர்களுக்கு, அந்த வாகனம் திடீரென்று கட்டுப்பாடில்லாமல் செல்வதற்கான காரணத்தை யூகிக்க முடியவில்லை. அதை யூகிக்க அவர்கள் முயற்சி செய்யவும் இல்லை.

அந்த வாகனத்திலிருந்து தப்பிப்பது சாத்தியமில்லை என்பதை நன்குணர்ந்த ரிஷப், குறைந்தபட்சமாக உயிரையாவது காப்பாற்றிக் கொள்ளலாம் என்று எண்ணி, அனைவரையும் இருக்கைப்பட்டை அணிந்து எதற்கும் தயாராக இருக்கச் சொன்னான்.

அவனின் சொல்படியே, அனைவரும் தங்களின் கண்களை மூடிக்கொண்டு தயாராக இருக்க, சில நொடிகளிலேயே அவர்களின் வாகனம் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்படுவதை உணர்ந்தனர்.

அவர்களின் வாகனம் அந்த நீர்வீழ்ச்சியின் எல்லையை எட்டினால், கீழே விழுவது உறுதி என்று அறிந்தவர்கள், ஒருவித பதட்டத்துடனே அந்த நொடிகளைக் கடந்தனர். 

கிடைமட்டமாக சென்று கொண்டிருந்த வாகனம், கொஞ்சமாக முன்பக்கம் சாயும்போதே வயிறுக்குள் ஏதோ உருளும் உணர்வு ஏற்பட, நவி அருகிலிருந்த நந்துவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

கண்களை மூடிக்கொண்டதால், செவித்திறன் முன்னில்லாத வகையில் அதிகரித்த உணர்வே நவிக்கு. ஆர்ப்பரித்து செல்லும் நீர், கீழே தரையை தொடும் சத்தம் பூதாகரமாகக் கேட்டது. அவ்வழியே அடித்துக்கொண்டு செல்லும் நீரின் சில துளிகள் வாகனத்திற்குள் இருந்தவர்களின் மேல் விழுந்து, அவர்களை மேலும் பயம்கொள்ள வைத்தன.

ஜில்லென்று நீர் தன் மேலே பட்டதும், அனிச்சையாக கண்களைத் திறந்து பார்த்த நவி, அங்கு தெரிந்த காட்சியை அவள் வாழ்க்கை முழுவதும் (!!!) மறக்க மாட்டாள்.

அந்த நீர்வீழ்ச்சியின் எல்லையில், எப்போது வேண்டுமானாலும் கீழே விழுகலாம் என்ற நிலையில், முன்னிரு சக்கரங்கள் அந்தரத்தில் சூழல, பின்னிரு சக்கரங்கள் நீரினுள் இருக்கும் ஏதோ ஒன்றில் மாட்டிக்கொள்ள, அந்த வாகனம் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது.

அதுவும் ஒவ்வொரு முறையும் கீழே விழப்போவது போல அந்த வாகனம் முன்னேறும் போதும், அவள் இருக்கைப்பட்டை மட்டும் போடவில்லை என்றால், முன்பக்கமிருக்கும் கண்ணாடியில் மோதி, அவள் எடை தாங்க முடியாமல் அது உடைந்து, நீரோடு அவளும் கீழே விழுந்திருக்க வேண்டியது தான். இந்த காட்சியையும் அதே நொடியில் அவளின் மூளை அவளிற்கு ஓட்டிக் காட்ட, அதுவே அவளின் பயத்தை அதிகரித்தது.

கீழே எவ்வளவு அடிக்குப் பின்னர் நீர்மட்டம் இருக்கிறது என்று கூட தெரியாத வண்ணம் இருள் சூழ்ந்திருக்க, அந்த இருளில் கரைந்து காணாமல் போகும் நீரின் இரைச்சல் மட்டும் நன்றாக கேட்டது. 

இன்னும் சில நொடிகளில் அந்த நீரினைப் போலவே இவர்களும் காணாமல் போகப்போகின்றனரோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையிலே, திடீரென்று நீரின் வேகம் உயர்ந்து அந்த வாகனத்தை ஒரு சுழற்று சுழற்றியது.

அதில் இப்போது அந்த வாகனம் பின்புறமாக கீழே விழ தயாராக இருக்க, அங்கிருந்தவர்களுக்கு இறப்பிற்கு வெகு அருகில் இருப்பது  போலான பிம்பம் உருவானது.

இப்படியே அந்தரத்தில் ஊசலாடி பயமுறுத்துவதற்கு பதிலாக, கீழே விழுந்து விட்டால் கூட போதும் என்று எண்ணும் அளவிற்கு, அந்த வாகனம் அவர்களைப் படுத்திக் கொண்டிருந்தது.

அங்கிருந்தவர்களின் மனக்குரல் கேட்டது போல, அடுத்த நொடியே உயர் வேகத்தில் அந்த வாகனம் கீழே விழ ஆரம்பித்தது.

உள்ளிருந்தவர்கள் பயத்தில் கத்தக்கூட முடியாதவாறு, பாதி தொலைவிலேயே கொட்டும் நீர் அந்த வாகனத்திற்குள் இருப்பவர்களை நனைக்க ஆரம்பித்தது.

நவி, கண்களை மூடியிருந்தாலும், அந்த வாகனம் அவள் முன்பு பார்த்தபோது அவளின் கண்களுக்கு புலப்படாத இருளான பகுதிக்குள் சென்று விட்டதை அவளால் உணர முடிந்தது.

அவளின் மூளையோ தொடர்ந்து ஏதோ உணர்த்த முயன்று கொண்டிருக்க, அதன் சமிக்ஞைகளை குறிவிலக்கக் (டிகோட்) கூடிய மற்ற ஐம்புலன்களோ ஸ்தம்பித்து போயல்லவா இருந்தன.

மூளைக்கும் மற்ற பாகங்களுக்கும் உள்நாட்டுப்போர் நிகழக்கூடிய வேளையில், அவளின் தேகம் குளிர்ந்த நீரை உணர்ந்து விரைத்துப் போனது. இத்தனை நேரம் வேலையை செய்யாமலிருந்த கண்கள் திறக்க, அவள் கண்டது, அவர்களின் வாகனம் மெல்ல மெல்ல நீருக்குள் மூழ்குவதை தான்.

கண்களைத் தொடர்ந்து மற்ற பாகங்களும் வேலையை செய்ய துவங்க, வேகமாக தன் மீதிருந்த இருக்கைப்பட்டையை அகற்ற முயன்றாள். ஆனால், இத்தனை போராட்டங்களுக்கு நடுவே, அந்த பட்டை  வேறெதிலோ மாட்டிக்கொள்ள, நவி முயன்று பார்த்து சோர்ந்து போனாள்.

அப்போது அவளின் கண்களில் அவளருகே அமர்ந்திருந்த நந்து தெரிய, அவனையாவது காப்பாற்றலாம் என்று நினைத்து, அவனை உலுக்கினாள். ஆனால், அது அவ்வளவு சுலபமாக இல்லை. 

பலமுறை முயன்றும் முடியாமல் போக, அவன் இருக்கைப்பட்டையை அகற்ற முயன்றாள். தன் கைகளை நீட்டி, அவனின் பட்டையை அகற்றுவது கடினமானதாகவே இருந்தாலும் அதை வெற்றிகரமாக செய்து முடித்து அவனை தன்னால் முடிந்த அளவு அந்த வாகனத்திலிருந்து வெளியே தள்ள முயற்சித்தாள்.

ஆனால், அத்தனை நேரம் அவள் செயல்களின் விளைவாக அவள் மிகவும் களைப்பாக உணர்ந்தாள். ஒரு பெருமூச்சுடன், இறுதி முயற்சியாக தன் முழு பலத்தையும் உபயோகித்து, அவனை வெளியே தள்ளினாள். மேலும், அந்த பக்கமிருந்து யாரோ நந்துவை வெளியே இழுப்பதும் கலங்கலாக தெரிந்தது.

நந்து அந்த வாகனத்திலிருந்து வெளியேறுவதற்கும், நவியின் சோர்வான கண்கள் மூடுவதற்கும் சரியாக இருந்தது.

*****

சூரியனின் கதிர்கள் முகத்தில் படர்ந்து அவளை எழுப்ப முயல, அந்த முயற்சி வெற்றி பெற்றதை உணர்த்தும் விதமாக முகத்தை சுருக்கி, கைகள் கொண்டு கண்களை லேசாக மறைத்தவாறே எழுந்தாள் நவி.

முதலில் எழுந்து அமர்ந்தவளிற்கு, அப்போது தான் நடந்த நிகழ்வுகள் நினைவிற்கு வர, தன்னைச் சுற்றிப் பார்த்தாள்.

கண் முன்னே நதி போல நீர் ஓடிக்கொண்டிருந்தது. அங்கு அவளைத் தவிர வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.

‘என்னாச்சு? நான் மட்டும் எப்படி இங்க வந்தேன்? மத்தவங்க எல்லாரும் எங்க?’ போன்ற கேள்விகள் அவள் மனதில் தோன்ற, அதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே தலை வலிக்கத் துவங்கியது.

நவியும் தன்னைத் தானே நிதானப்படுத்திக் கொள்ள எவ்வளவோ முயன்றாலும் அவளால் அதை செய்ய முடியவில்லை. நொடிக்கு நொடி தலைவலியும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. 

அவளால் தாங்கவே முடியவில்லை என்று அழுகையும் வர, அவளின் மூளையோ, ‘இப்படி வலியில துடிக்கிறதுக்கு இறந்துடலாம்!’ என்று கூறியது.

மூளை கூறியதைக் கேட்டு நவி திகைத்து நிற்க, அவளின் மனம், மூளை சொல்வதைக் கேட்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தது.

‘இப்போ உன்னைத் தவிர யாரும் இல்ல. நீயும் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல இறக்கத் தான் போற. அதுக்கு இப்பவே தண்ணியில மூழ்கி இறந்துடலாமே!’ என்றது.

இதையே மாற்றி மாற்றி கூற, நவிக்கே ஒரு கட்டத்தில் இறந்துவிடலாமா என்று தோன்ற, அக்கணமே மனம் முரண்டுவதை கண்டுகொள்ளாமல், மூளையின் முடிவை ஆமோதித்து, ஆர்ப்பரித்து செல்லும் நீரை நோக்கி நடந்தாள்.  

அவள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், ‘இன்னும் கொஞ்ச நேரம் தான். அப்பறம் இந்த இடத்துலயிருந்து உனக்கு விடுதலை!’ என்று மூளை கூறிக்கொண்டே இருக்க, மெல்ல மெல்ல அவளின் மனதின் குரல் மறைந்து கொண்டே இருந்தது. 

இன்னும் சில அடிகளே இருந்த வேளையில், “நவி” “நவி”என்று இருபுறமும் கேட்க குரல்கள் அவளை அங்கேயே தேங்கச் செய்தது.

அப்போதும் அவளின் மூளை தொடர்ந்து நடக்குமாறு கட்டளையிட, இம்முறை மனதில் குரலோடு இன்னும் பல குரல்களும் கேட்டு அவளை யோசிக்க வைத்தது. ஆம், யோசிக்க வைத்தது!

‘நம்மளோட மூளையைக் கூட அவங்க கட்டுப்படுத்துறாங்களோங்கிற சந்தேகம் எனக்கு இருக்கு.’ 

‘மேபி, ஜானோட. மூளையை ஹாக் பண்ணி இப்படி நடந்துக்க வச்சுருக்கலாம்.’ என்று ரிஷப் பேசியதெல்லாம் நினைவிற்கு வர, அப்போது தான் தனக்கு நடந்து கொண்டிருப்பதை உணர முயன்றாள்.

“இல்ல, இது எதுவும் உண்மை இல்ல. நான் யாரோட கட்டுப்பாட்டிற்குள்ளயும் போக மாட்டேன்.” என்று முணுமுணுத்தவளிற்கு மீண்டும் தலை வலிக்க, அப்படியே அமர்ந்துவிட்டாள்.

லேசான மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தவளிற்கு யாரோ அவளருகே அமர்ந்து அவளைத் தாங்கிக் கொள்வதைப் போன்று இருக்க, அதே நிலையில் மயக்கத்திற்கு சென்றுவிட்டாள்.

*****

நவி இம்முறை எழுந்து பார்க்கும்போது அவளின் ஒருபுறம் ரிஷபும் மறுபுறம் ரியானும் இருந்தனர்.

அவள் எழுந்து அமரும்போதே குழப்பமாக தான் இருந்தது. முன்னிருந்த அனுபவங்களைக் கொண்டு, அவளிற்கு நடந்ததெல்லாம் வெறும் கனவாக அவளால் நினைக்க முடியவில்லை. ஏனென்றால், இப்போதும் கூட அவளிற்கு லேசாக தலைவலிப்பது போலிருந்தது.

அவள் புருவம் சுருக்கி யோசிக்கும்போதே, “நவி, இப்போ எப்படி இருக்கு?” என்று வினவினான் ரிஷப்.

நவியோ அதற்கு பதிலளிக்காமல், “என்னாச்சு ரிஷப்? மத்தவங்க எல்லாரும் எங்க?” என்றாள்.

“ப்ச், நவி, கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்ற பழக்கமே இல்லயா?” என்று சலித்துக் கொண்டான். 

அவனின் சலிப்பைக் கண்டு இருபக்கமும் தலையாட்டி, “எனக்கு ஒன்னுமில்ல ரிஷப். ஜஸ்ட் லேசா தலை வலிக்குது.” என்றாள் நவி.

அவள் கூறியதைக் கேட்டு ரிஷபும் ரியானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, இருவரின் பாவனைகளையும் பார்த்தவள், “என்ன? எதுக்கு ரெண்டு பேரும் இப்படி ரியாக்ட் பண்றீங்க?” என்று எதுவும் புரியாமல் வினவினாள்.

ஒரு பெருமூச்சுடன் ரிஷபே ஆரம்பித்தான். “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது உனக்கு ஞாபகம் இருக்கா?” என்றான்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியா? அப்போ அது கனவில்லையா!” என்று நவி முணுமுணுக்க அது மற்ற இருவருக்குமே கேட்டது. 

“இல்ல நவி, அது நிஜம் தான். நாங்க பார்க்குறப்போ, நீ உன் கன்ட்ரோல்லயே இல்லாத மாதிரி அந்த ஆற்றை நோக்கி நடந்த. நாங்க எல்லாரும் உன் பேர் சொல்லி கத்துனப்போ, ஏதோ கனவுலயிருந்து வெளிய வந்த மாதிரி மயங்கிட்ட.” என்று நடந்ததைக் கூறி முடித்தான் ரிஷப்.

“அப்போ என் ப்ரெயினை கன்ட்ரோல் பண்ணியிருக்காங்க.” என்று அவள் கூற, மற்ற இருவரின் மௌனமே அதை ஆமோதிப்பது போல இருந்தது.

நவி நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்க, சில நொடிகளை அவள் மீள்வதற்காக வழங்கிய ரிஷப் மீண்டும் தன் கேள்விகளை வினவ ஆரம்பித்தான்.

“நவி, இது மாதிரி நடக்குறது ஃபர்ஸ்ட் டைம் இல்ல. நான் சொல்றது சரியா?” என்று ரிஷப் வினவ, நவியோ மௌனமாக தலையை மட்டும் அசைத்தாள்.

“ஹ்ம்ம், இப்போ நீ கனவில்லையான்னு கேட்டதை வச்சே, என்னால யூகிக்க முடிஞ்சுது. இதுக்கு முன்னாடியே உன்னை மைண்ட் கன்ட்ரோல் பண்ண முயற்சி செஞ்சுருக்காங்க. ஆனா, ஏதோ சில காரணங்களால அது முடியல.” என்று அவனாகவே பேசிக் கொள்வதைப் போல் கூறியவன், மற்ற இருவரிடமும் திரும்பி,  “நம்ம ஸ்டெரெந்த் குறைஞ்சுகிட்டே இருக்கு. இனிமே, எல்லாருமே கேர்ஃபுல்லா இருக்கணும்.” என்றான்.

அப்போது அங்கு மூவர் மட்டுமே இருப்பதைக் கண்டவள், முன்னர் கேட்ட அதே கேள்வியை மீண்டும் கேட்டாள். இம்முறை சற்று பதட்டத்துடன். 

“ரிஷப், மத்தவங்க எங்க?” என்றவளின் குரலிலிருந்த பதட்டத்தை உணர்ந்தவனாக, “நவி, ரிலாக்ஸ்.” என்று அவளை சமாதானப்படுத்தியவன், அந்த ஆற்றின் மறுகரையை நோக்கி கரங்களை நீட்டினான்.

அங்கு இவர்களைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தனர், நோலன், நந்து மற்றும் டோவினா.

அவர்களைக் கண்டதும் தான் நவியின் மனம் இயல்பு நிலைக்கு திரும்பியது. ரிஷபிடம் கேள்வியைக் கேட்டதிலிருந்து அதற்கான பதில் தெரியும் வரை, ‘அவர்களையும் இழந்து விட்டோமா?’ என்று இருந்த மனநிலை அவளிற்கு மட்டும் தானே தெரியும். 

நொடி நேர அமைதிக்கு பின்னர், மீண்டும் புதிய கேள்விகள் அவளுள் எழ, அவளின் முகபாவனைகளைக் கொண்டே அவள் கேட்க வரும் கேள்வியைப் புரிந்து கொண்ட ரிஷப், “நம்ம வந்த கார் அந்த தண்ணிக்குள்ள விழுந்ததும் உள்ள சிக்கியிருக்க எல்லாரையும் காப்பாத்த ட்ரை பண்ணோம். நானும், நோலனும் ஃபர்ஸ்ட்டே வெளிய வந்துட்டோம். நோலன் ஹெல்ப்போட டோவினாவையும் ரியானையும் வெளிய கொண்டு வந்தாச்சு. அதுக்குள்ள நந்துவையும் நீ காருக்கு வெளிய தள்ளிவிட்டுட்ட. ஆனா, உன்னை வெளிய இழுக்க தான் கஷ்டமா இருந்துச்சு. ஏற்கனவே நந்து மயக்கத்துல இருக்க, டோவினாவும் மயங்குற நிலையில இருந்தா. அதான் அவங்க ரெண்டு பேரையும் நோலன் கூட அனுப்பிட்டு, ரியானும் நானும் உன்னைக் வெளிய இழுக்க முயற்சி செஞ்சோம். ஒருவழியா அதுல வெற்றியும் கிடைச்சது. ஆனா, கரைக்கு வந்து பார்த்தப்போ தான் தெரிஞ்சுது ரெண்டு குரூப்பும் வேற வேற கரையில ஏறியிருக்கோம்னு. அப்போ ரொம்ப சோர்வா இருந்ததால, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு காலைல யோசிக்கலாம்னு அப்படியே படுத்தாச்சு.” என்று கூறி முடித்தான்.

“உஃப், இப்போ என்ன பண்ணலாம்?” என்று நவி வினவ, “முதல்ல, என்னென்ன இருக்குன்னு பார்க்கலாம்.” என்றான் ரிஷப்.

அப்படி ஆராய்ந்ததில், ஒரு கயிறு, ஒன்றிரண்டு கொக்கிகள், தண்ணீரில் நனைந்த துப்பாக்கிகள், சில கத்திகள் முதலியவை கிடைத்தன. இருபுறமும் சிறிதளவு உணவு பொருட்களும் இருந்ததால், அதை வைத்து அப்போதைக்கு சமாளித்துக் கொண்டனர்.

ரிஷப், தன்னிடம் இருந்த டேப்பை பார்த்தான். அது ‘வாட்டர் ப்ரூஃவ்’ என்பதால் ஓரளவிற்கு வேலை செய்தது. அதிலிருந்து தாங்கள் அடுத்து செல்ல வேண்டிய பாதையைக் கண்டவன், அதற்கு இவர்கள் மூவரும் மறு கரைக்கு செல்ல வேண்டும் என்பதை கண்டுகொண்டான். அதை மற்ற இருவரிடமும் கூறினான்.

அந்த ஆற்றின் அகலம் பெரிதாக இல்லையெனினும் அதன் ஆழம் அதிகமானதாகவே தெரிந்தது. சாதாராணமாக இருந்திருந்தால் நீந்தி கடந்திருக்கலாம். ஆனால், தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஆற்றை இந்த சமயத்தில் கடப்பது சற்று சிரமமானதாகவே தோன்றியது.

முதலில் ஆற்றை கடப்பதற்கு மரத்துண்டு ஏதாவது கிடைக்குமா என்று தான் ரிஷப் தேடினான். ஆனால், அங்கிருந்த மரங்கள் ஒன்று மிகவும் பெரிதாக இருந்தது. இல்லையென்றால் மிகவும் லேசாக இருந்தது. முதலில் கண்டதை அவ்வளவு சுலபத்தில் வெட்ட முடியாது, இரண்டாவதின் மேலே ஏறிச் செல்ல முடியாது.

அந்த திட்டம் பலனளிக்காது என்று தெரிந்ததால், அடுத்த திட்டத்தை செயல்படுத்த முயன்றனர். முன்னர் போலவே, கயிற்றின் முனையில் கொக்கியை இணைத்து மறுபுறம் தூக்கி வீச, ரிஷபின் திட்டத்தைப் புரிந்து கொண்டதைப் போல அவர்களும் அந்த கொக்கியை அருகிலிருந்த மரத்தில் இணைத்தனர். அதே போல, மறுமுனையை ரிஷப் தங்கள் புறமிருந்த மரத்தில் இணைத்தான்.

முதலில் ரியான் அதில் செல்வதாக கூறி, அந்த கயிற்றில் மெல்ல தொங்கிக் கொண்டே நகர்ந்து சென்றான். அவன் செல்ல செல்ல, அவன் எடை தாங்காமல், அந்த கயிறு கீழே இறங்கிக் கொண்டே வந்தது. ஒருபுறம் ரிஷபும், மறுபுறம் நோலனும் அந்த கயிற்றை பிடித்துக் கொண்டனர்.

மிகவும் பொறுமையாக ரியான் முக்கால்வாசி தூரத்தைக் கடந்துவிட்டான். அப்போது திடீரென்று அந்த கயிறு அறுந்து போக ஆரம்பித்தது. அதன்பிறகு பொறுமையாக செல்ல முடியாது என்று எண்ணிய ரியான், சற்று வேகத்தைக் கூட்ட, சில நொடிகளிலேயே அந்த கயிறு முழுவதுமாக அறுந்து விழ, அதனுடன் ரியானுடன் நீருக்குள் விழுந்தான்.

அவன் விழுந்ததும், கயிற்றை விட்டுவிட்டு அவனைக் காப்பதற்காக ஓடினான் நோலன். நந்துவும் டோவினாவும் அவனைத் தொடர்ந்தனர்.

ரியான், மறுகரையை ஓரளவு நெருங்கிவிட்டதால், எப்படியோ நீச்சல் அடித்து கொஞ்சம் கொஞ்சமாக கடக்க, நோலனும் அவனிற்கு உதவி அவனை கரைக்கு இழுத்துவிட்டனர்.

ரியான் மறுகரையை அடைந்ததும் ரிஷபும் நவியும் ஒருவரையொருவர் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டனர். 

ரியான் கரையை நெருங்கி வந்து  நீந்தும் போது, அங்கிருந்த பாறையில் தலையை இடித்துக் கொண்டதால் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. நோலன் தன்னுடனே எடுத்து வந்திருந்த முதலுதவிப் பெட்டியின் உதவியுடன்  ரியானிற்கு முதலுதவி செய்தான்.

ரிஷப் நவியிடம், “இந்த தண்ணி குறைஞ்சா தான் நாம மறுகரையை அடைய முடியும்.” என்று கூற, அவளும் ஒருமுறை தன் பார்வையை திருப்பி அந்த நீரினைக் கண்டாள்.

“இது எப்போ குறைஞ்சு, எப்போ நாம போக?” என்று சலித்துக் கொண்டாள் நவி.

ரிஷபோ அப்படியே தரையில் சாய்ந்து படுத்துவிட்டான். அவனின் மூளையில் தப்பிக்கும் மார்க்கம் எதுவும் தோன்றவில்லை. அவன் மூளையும் எத்தனை திட்டங்களைத் தான் வகுக்கும்!

சூரியன் மேலே எழுந்தாலும், நீருக்கு அருகில் இருப்பதால், அவ்வளவு வெப்பம் தெரியவில்லை. அந்த மணலும் ஈரமாக இருந்ததால், நவியும் அதில் சாய்ந்து விட்டாள்.

சில நிமிடங்கள் அப்படியே கடக்க, ரிஷப் தான் பேச ஆரம்பித்தான்.

“இனி எப்போ இப்படி ரிலாக்ஸா இருப்போம்னு நமக்கு தெரியாதுல.” என்று ரிஷப் கூற, “க்கும், இருப்போமான்னே தெரியாது!” என்று நவி அலுத்துக் கொண்டாள்.

ரிஷபோ மெல்லிய சிரிப்பையே பதிலாக கொடுத்தான். 

அவனின் சிரிப்பைக் கண்ட நவி, “ரிஷப், உங்களுக்கு பயமா இல்லயா?” என்று கேட்டாள்.

“ஹ்ம்ம் பயமா! இந்த இடத்துக்கு நான் வந்து எத்தனை நாள் ஆச்சுன்னு எனக்கே சரியா தெரியாது நவி. முதல் நாளா இருந்தா, நீ சொல்ற மாதிரி என்ன நடக்கும்னு பயம் இருந்துருக்கலாம். ஆனா, இப்போ என்ன நடந்தா என்னன்னு தான் யோசிக்க தோணுது. நம்ம வாழ்றதுக்கு ஏதாவது பிடிப்பு இருக்கணும் நவி. இங்க ஓடி ஒளிஞ்சு வாழ்றதை பார்க்கும்போது சில நேரம், இப்படி வாழ்றதுக்கு பேரு வாழ்க்கையா? இதுக்கு வாழாமலேயே இருக்கலாம்னு தோணுது!” என்று வானத்தை வெறித்துக் கொண்டே கூறினான்.

நவிக்கும் அதே எண்ணம் தோன்றினாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “ஏன் இப்படி நெகட்டிவ்வா பேசுறீங்க ரிஷப்?” என்று வினவினாள்.

அவளின் கேள்வியில், அத்தனை நேரம் மல்லாந்து படுத்து மேலே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளை நோக்கி ஒருக்களித்து படுத்தான்.

மீண்டும் முன்பு போல அதே சிரிப்புடன், “உனக்காக வேணா, பாசிட்டிவ்வா சொல்றேன். நாம சீக்கிரமே இங்கயிருந்து வெளிய போயிடுவோம். ஓகேயா?” என்று புருவம் உயர்த்தி வினவ, நவியோ அந்த நொடி தன்னையும் தன் மனவுறுதியும் மறந்து அவனைப் பார்த்திருந்தாள்.

அவளின் ஸ்தம்பித்த நிலையைக் கண்டு ரிஷப் தான் அவளை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தான்.

“என்னாச்சு நவி? பாசிட்டிவா சொன்னதுக்கே ஷாக்காகி பார்க்குற?” என்று அவன் வினவ, நவியோ தன்னைத் தானே மனதிற்குள் திட்டிக்கொண்டாள்.

இன்னும் அவளின் முகம் தெளிவாகாததைக் கண்டவன், “ரிலாக்ஸ் நவி.  இப்போவே எதுக்கு அதைப் பத்தி பேசணும். ஃப்ரீயா விடு.” என்று அவளை அமைதி படுத்தினான்.

மீண்டும் இருவருக்குள்ளும் மௌனமே மொழியாக மாறியது. அவ்வபோது எதிரில் உள்ளவர்களையும் பார்த்துக் கொண்டனர். அவர்களும் ஆளுக்கொரு மரத்தில் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

“அப்பறம் நவி, உன் ஃபேமிலியை பத்தி சொல்லு.” என்று திடீரென்று ரிஷப் கேட்கவும், கேட்டது அவன் தானா என்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள் நவி.

“ஹே என்னாச்சு? எதுக்கெடுத்தாலும் ஷாக் ரியாக்ஷன் கொடுக்குற?” என்று ரிஷப் புரியாமல் வினவ, “அது, எப்பவும் சுத்தி நடக்குறதை கவனிக்குறதையே வேலையா செஞ்சுட்டு, பேசுறதுக்கு எவ்ளோ கொடுப்பீங்கன்னு கேட்குற அளவுக்கு இருக்க ரிஷபா இப்படி பேசுறதுன்னு டவுட் வந்துடுச்சு!” என்று நவி அவனைக் கேலி செய்ய, அவனோ புன்னகைத்தான்.

“ஹப்பா, இன்னைக்கு எத்தனை தடவை சிரிச்சுருக்கீங்க தெரியுமா. இதுகூட அதிசயம் தான்!” என்று மேலும் கிண்டலில் இறங்க, “போதும் போதும், கிடைச்சது சான்ஸ்னு ரொம்ப தான் கிண்டல் பண்ணிட்டு இருக்க.” என்று அதையும் சிரித்தவாறே கூறினான்.

அவனே தொடர்ந்து பேசவும் செய்தான். “அந்த பில்டிங்ல, எப்படியாவது வெளிய போயிடுவோம்னு நம்பிக்கை இருந்துச்சு. அதான் ரொம்பவும் கவனமா இருந்தேன். ஆனா, என்ன தான் கவனமா இருந்தாலும், நம்ம கண்ணு முன்னாடி தான அஞ்சு பேரு இறந்து போனாங்க. இப்போலாம் நம்ம கைல எதுவும் இல்லைங்கிற மாதிரியான ஃபீல் வர ஆரம்பிச்சுருச்சு. சோ இருக்க வரைக்கும் சிரிச்சுட்டே இருப்போம்னு மாறியாச்சு.” என்றான்.

அவனின் வார்த்தைகள் மனதிலிருந்து வருவதை நன்கு உணர்ந்திருந்தாள் நவி. நடந்த சம்பவங்கள் அவனை எவ்வளவு பாதித்திருந்தால், எப்போதும் நேர்மறை எண்ணங்களையே கொண்டிருந்தவனின் வார்த்தைகள் எல்லாம் எதிர்மறையாக மாறியிருக்கும். அவன் இன்னும் அவர்களின் இறப்பிலிருந்து வெளிவரவில்லை என்பது நவிக்கு புரிந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்துக் கொண்டிருக்கிறான் என்றும், அவனை அறியாமலேயே இப்படி வெளிப்படுகிறது என்றும் புரிந்தது.

அவனை மீறி வெளிவந்ததை தான் பெரிதுபடுத்தி அவனை வருத்தமுற செய்ய வேண்டாம் என்று எண்ணியவள், பேச்சின் திசையை மாற்றினாள்.

“ஹான் என்ன கேட்டிங்க? என்னோட ஃபேமிலியா? நான் பிறந்ததுல இருந்து இப்போ வரைக்கும் என்னோட ஃபேமிலி நந்து மட்டும் தான்.” என்று நவி கூற, சட்டென்று அவளைப் பார்த்தான் ரிஷப்.

அவனின் பார்வையை உணர்ந்து லேசாக புன்னகைத்தவள், “நான் பிறந்தப்போவே என்னோட பிறப்புக்கு காரணமா இருந்தவங்க என்னைக் குப்பைத்தொட்டியில போட்டுட்டு போயிட்டாங்க.” என்று ஆரம்பித்தவள் நந்துவை சந்தித்தது, அவனின் பயம், அவள் வேலைக்கு முயற்சித்தது என்று அனைத்தையும் கூறினாள்.

“எனக்கு கடைசியா ஞாபகம் இருக்குறது, அன்னைக்கு வேலை கிடைச்சிடும்னு சந்தோஷமா நான் தூங்குனது தான். முழிச்சு பார்த்தா நானும் நந்துவும் இங்க இருக்கோம்.” என்றாள்.

ரிஷபோ, “மேபி இவங்களோட டார்கெட் அனாதைகளா இருக்கலாம்!” என்று யோசனையுடன் கூற, நவியோ தான் சொன்னதற்கு இதற்கும் என்ன சம்பந்தம் என்று விழித்தாள்.

அவளின் முகபாவத்தைக் கண்டே அவளின் குழப்பத்தை உணர்ந்தவன், “நானும் ஒரு காலத்துல அனாதையா இருந்தவன் தான்.” என்று கூறினான்.

அந்த ‘ஒரு காலத்துல’ என்ற வார்த்தகளை விட்டு நவியின் கவனம் ‘அனாதை’யில் நிலைத்தது.

“ஹ்ம்ம், சான்ஸ் இருக்கு. மத்தவங்களையும் கேட்கலாம்.” என்று மறுகரையை பார்க்க, அங்கு ரியான் ஒரு மரத்தின் அடியில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருக்க, அதற்கு சற்று தள்ளியிருந்த மரத்தின் அடியில் அமர்ந்திருந்த டோவினாவோ இவர்களை, முக்கியமாக நவியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முறைப்பு எதற்கு என்று தெரிந்த நவிக்கு, திடீரென்று அவளை மேலும் வெறுப்பேற்ற தோன்றியது. சற்று முன்னர் ரிஷபிடம் இலகுவாக பேசியதாலோ என்னவோ, அவளின் மனமும் லேசாக, அதன் காரணமாக டோவினாவுடன் விளையாடி பார்க்க முயன்றாள்.

ரிஷபின் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்து, வேண்டுமென்றே இருவருக்கும் இடையேயான இடைவெளியை அவனிற்கு தெரியாமல் குறைக்க முயன்றாள். ரிஷப் அதைப் பார்க்கவில்லை என்றாலும், மறுகரையில் அமர்ந்து இவர்களை கண்காணிப்பதே தலையாய கடமையென அதை செய்து கொண்டிருப்பவளின் கண்களுக்கு புலப்படாமல் போகுமா!

சாதாரணமாக நவியைக் காணும்போதே கோபம் கொள்பவள், இப்போது அந்த காட்சியைக் கண்டு, உஷ்ண மூச்சுக்களை வெளியே விட்டு தன் எரிச்சலை மட்டுப்படுத்த முயன்றாள்.

பெண்கள் இருவரும் கண்களாலேயே கத்திச் சண்டையிடுவது தெரியாத ரிஷப் டோவினாவிடம், மற்ற இருவரைப் பற்றி வினவினான்.

அவளோ, “ரெண்டு பேரும் சாப்பிடுறதுக்கு ஏதாவது இருக்கான்னு பார்க்க காட்டுக்குள்ள போயிருக்காங்க.” என்று சிடுசிடுத்தாள்.

ரிஷபோ, “இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி கோபப்படுறா?” என்று முணுமுணுக்க, அதைக் கேட்டு நவி சிரித்தாள்.

அவளின் சிரிப்பைக் கண்டவன், இருப்பக்கமும் தலையசைத்து, “இந்த பொண்ணுங்க எப்போ எதை செய்வாங்கன்னே யூகிக்க முடியாது.” என்று முணுமுணுத்துவிட்டு, டேப்பை எடுத்து பார்க்கத் துவங்கினான்.

சில நொடிகளில் கண்கள் மின்ன நவியைப் பார்த்தவன், “நாம அந்த பக்கம் போக வழி கிடைச்சுருச்சு.” என்றான்.

அவளோ தன் முன்னே ஓடும் நதியைக் கண்டு விழிக்க, அவளின் முன் அந்த டேப்பை நீட்டி,  ஒரு இடத்தை சுட்டிக் காண்பித்தான்.

“இங்க பாரு, நாம இப்போ இருக்க இடம் இது. இங்க இவ்ளோ அகலமா இருக்க ஆறு, இன்னும் கொஞ்ச தூரம் போனதும் சுருங்கி இருக்கு பாரு. சோ, அங்க போனா, நாம இந்த ஆற்றைக் கடந்துடலாம்னு நினைக்குறேன்.” என்றான்.

நவியும் அதை ஆமோதிக்க, எதிரில் இருந்தவர்களிடம் தங்களின் திட்டத்தைக் கூறியவர்கள், தங்களிடம் எஞ்சியிருந்தவற்றை தூக்கிக் கொண்டு அந்த இடத்தை நோக்கி பயணமாயினர், இனி தான் அவர்களுக்கு சோதனை காலம் என்பதை அறியாதவர்களாக! 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்