கண்ணாலம் 4
குட்டை போல் தேங்கி நிற்காமல் ஓடும் நதிபோல் நாள்கள் ஓடியது. பூங்கொடி தனியாக வசிக்க ஆரம்பித்து நான்கு நாள்கள் முடிந்துவிட்டது. நான்கு நாள்களும் அவள் முடங்கித்தான் இருந்தாள். அவள் நினைவில் இரு குடும்பமும் அப்படியே இருந்தது. இதில் சிங்காரம் மட்டும் விதிவிலக்கு! தன் வீட்டிற்கும், காதலி வீட்டிற்கும் பாதயாத்திரை நடந்து கொண்டிருக்கிறான். பால்காவடி தூக்கி வந்தாலும் மனம் இரங்காது என வந்த வழியே அனுப்பி வைக்கிறாள்.
ஐந்தாவது நாள் விடியற்காலை தொடங்கியதும் அத்தை மகளைக் காண ஓடோடி வந்தான். என்றும் அவன் வரும் நேரத்திற்கு மூடி இருக்கும் கதவு இன்று திறந்திருந்தது. தனக்கான ஒரு படிக்கட்டு உருவாகி விட்டது என உள்ளம் மகிழ்ந்தவன் எட்டிப் பார்த்தான். ரங்கம்மாள் பாட்டி சமைத்துக் கொண்டிருந்தார். இவர் கூடச் சிங்காரத்திடம் பேசுவதில்லை.
‘எங்க, நம்ம ஆளக் காணோம்?’
‘வந்துட்டான் பாரு, வேலை இல்லாதவன்!’
‘இந்தக் கெழட்டுக் கெழவி எதுக்கு நம்மளை இப்படிப் பாக்குது?’
‘பாக்குறான் பாரு, திருட்டுப் பார்வை!’
இருவரும் மனத்திற்குள் கத்தி இல்லாமலே சண்டை நடத்திக் கொண்டிருக்க, “நான் கெளம்புறேன் பாட்டி.” என்றவாறு வந்து நின்றாள் பூங்கொடி.
என்றும் தாவணி, பாவாடையில் சதிராட்டம் ஆடிக் கொண்டிருப்பவள் சுடிதாரில் வந்து நிற்க, முகம் அஷ்ட கோணலானது சிங்காரவேலனுக்கு. அவன் வந்ததை அறியாது, “நான் இல்லாத நேரம் யாரையும் கூப்பிட்டு வச்சுப் பேசிகிட்டு இருக்காத. முக்கியமா அவன்கிட்டப் பேசாத.” என்றாள்.
‘அவனா!’ எனத் திகைத்தவன் உள்ளத்தில் பல இடி மின்னல்கள்.
“எனக்கென்ன, பொழப்பில்லையா?” என்ற அவரின் பார்வையைப் பின்தொடர்ந்தவள், அதிர்ந்த முகத்தோடு நின்று கொண்டிருக்கும் மாமன் மகனைக் கண்டுவிட்டு, “எனக்கு நேரமாகுது, நான் வேலைக்குப் போறேன்.” என வாசலுக்கு வந்தாள்.
நேற்று வரை, கொஞ்சிக் கொண்டிருந்த அத்தை மகளின் மரியாதையில்லாத அழைப்பில் திகைத்து நின்றிருந்தவன், அவள் வேலைக்குச் செல்கிறாள் என்றதில் அதிர்ச்சியில் உறைந்தான். வழி விடாது நின்று கொண்டிருக்கும் அவனைத் தாண்டிச் செல்ல முடியாது, பின்பக்க வழியாக வந்தவளை வழி மறித்தவன்,
“இப்ப எதுக்கு நீ வேலைக்குப் போற? நீ வேலைக்குப் போகணும்னு என்னா அவசியம் இருக்கு. நம்ம வீட்ல இல்லாத சொத்து சொகமா? நீ வேலைக்குப் போனா பாக்குறவன் நம்மளை என்னா நெனைப்பான்?” குதிக்க ஆரம்பித்தான்.
அனைத்தையும் வழக்கம் போல் உதாசீனம் செய்தவள், “வழியை விடு!” என்றாள்.
“இங்க பாரு லாலா… நீ வேலைக்குப் போறதை வேடிக்கை பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியாது. உனக்குக் கோபம் என் மேல தான. அதை என்கிட்டக் காட்டு. அத விட்டுட்டு இந்த மாதிரிப் பழி வாங்கிட்டு இருக்காத.”
“நீ எனக்கு யாரு? எதுக்கு உன்ன நான் பழி வாங்கணும். என் பொழப்புக்கு நான் வேலைக்குப் போறேன். அதை ஏன், எதுக்குன்னு கேக்கற உரிமை உனக்கு இல்லை.”
“என்னாடி பேசுற… உன்ன நான் பார்த்துக்க மாட்டனா?” மனம் நோகக் கேட்டவனை வேண்டா வெறுப்பாகப் பார்த்தவள்,
“யாரு நீயா?” ஏளனத்தோடு சிரித்தாள்.
அந்தச் சிரிப்பு நேரடியாக அவன் இதயத்தில் ஈட்டியாக வந்திறங்கியது. வலி தாங்கி, ரத்தம் சொட்ட நின்றவனுக்குப் பேச்சு வரவில்லை. உள்ளுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நாக்கை அடித்துப் பிடித்து,
“கண்ணாலத்த நிறுத்துனது தப்புதான்! அதுக்காக உன்னை அப்புடியே விட்டுடுவேன்னு நெனைக்கறியா?” வெளிவர வைத்துக் கேட்டான்.
“அப்படியே தான விட்டுட்டுப் போன… ஒரே ஒரு செகண்ட் என்னைப் பத்தி யோசிச்சியா? இவதானன்னு இளக்காரம்!”
“ஐயோ! நீ நினைக்கிற மாதிரி இல்ல லாலா…” எனக் கை பிடித்தான்.
அவன் பிடித்த கை மீது பார்வையைத் திருப்பிவள், கோபம் என்னும் தீயை மூட்டி எரித்தாள். சுட்டுப் பொசுங்கிக் கருகிப்போன அவள் மனம் போல் ஆனது இவன் மனமும். தன்னால் பிடித்திருந்த கையை விடுவித்தவன் மருகி நிற்க, “ஆமா, நான் நெனைச்ச மாதிரி நீ இல்ல.” என்று விட்டு அவன் வாழ்வை விட்டுக் கடந்தது போல் அவனையும் கடந்து சென்றாள்.
காதலியின் காலடியில் கண்ணீரைப் புதைத்தவன் மெல்லத் திரும்ப, அவனைப் பார்த்தபடி வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டிருந்தார் ரங்கம்மாள். அவரைக் கண்ட பின், அழுகையெனும் திரையை விலக்கிக் கோபம் எனும் திரையைப் போட்டுக் கொண்டவன், “அவ வேலைக்குப் போறா, பார்த்துட்டுச் சும்மா இருக்க. உனக்குச் சொத்து, பத்தெல்லாம் இருக்குல்ல. பேத்திய ஒக்கார வச்சுச் சோறு போட வேண்டியதுதான…” சிடுசிடுத்தான்.
“பெத்தவனுக்கும், கட்டிக்கக் கண்ணாலத்தை ஏற்பாடு பண்ணவனுக்கும் இல்லாத அக்கறை எனக்கு எதுக்கு?”
“அப்படியே இந்த வெத்தலை பாக்கோட உன்னையும் சேர்த்து இடிச்சிடுவேன்.”
“அது உன்னால முடியாதுடா படவா…”
“ஏய் கெழட்டுக் கெழவி, அவ வேலைக்குப் போகக்கூடாது.”
“முடிஞ்சா அவகிட்டச் சொல்லிப் பாரு!”
கோபத்தில் விரைத்த முகம் சோர்ந்து அழுகைக்கு மாறியது. ரங்கம்மாளை உரசிக்கொண்டு அமர்ந்தவன், “என் நிலைமையைப் பார்த்தியா?” என மூக்கைச் சிந்தி அவர் மீது தடவச் செல்ல,
“அடச்சீ, தள்ளிப் போடா…” என நகர்ந்து அமர்ந்தார்.
“இதைத் தொடைக்கக் கூட எனக்கு ஒரு துணை இல்ல.” எனத் தன் வேட்டியில் துடைத்துக் கொண்டவன்,
“எவன் செய்வினை வச்சான்னு தெரியல கெழவி. நானே என் கண்ணாலத்த நிறுத்திட்டேன். யாருக்காகப் பாஞ்சுகிட்டுச் சண்டை போட்டனோ அவன்…” என்றதும் முறைத்தார் ரங்கம்மாள்.
“அவரு… இடி விழுந்த மாதிரி ஒக்காந்து கெடக்காரு. அவருக்குத்தான் என் மேல பாசம் இல்ல. என் மாமனாவது, சரி விடுடா மாப்பிள்ளைன்னு சமாதானப் படுத்தலாம்ல.” என்றதும்,
“ஆக்…த்தூ…” அடிவயிற்றில் இருந்து எச்சிலை எடுத்து அவன் முகத்தைப் பார்த்துத் துப்பினார் ரங்கம்மாள்.
“பல்லு விலக்கலையா?”
“விலக்கிட்டுத் துப்புனா ஏத்துப்பியோ?”
“கொஞ்சம்!” என அவர் துப்பியதைத் தன் வேட்டியில் துடைத்தவன்,
“இந்நேரம், அவளோட ஓடி விளையாண்டு கால் வலிக்க ஒக்கார வேண்டியவன்… இப்புடி அந்த வீட்டுக்கும், இந்த வீட்டுக்கும் ஓடிக்கிட்டுக் கெடக்கேன். மத்தவங்களுக்குத் தான் என் மேல அக்கறை இல்ல, கெழவி உனக்குமா?” என அவர் தோள் மீது சாய்ந்து குலுங்கினான்.
அவன் குலுங்கிய குலுங்கலில் ரங்கம்மாள் பாட்டி இடமும் வலமும் காற்றில் அசைந்தாடினார். அந்த முதியவரின் அவஸ்தை புரியாது தன் தோளோடு ஒட்ட வைத்துக் கொண்டு, “நீயாது எடுத்துச் சொல்றது…” என மூக்கை உறிஞ்சினான்.
“அதான பார்த்தேன். தார் ரோடு எதுக்கு, மண்ணு ரோட்டப் பார்த்து பல்லக் காட்டுதுன்னு.”
“நான் கருப்பா இருக்குறன்னு குத்திக் காட்டுறியா?”
“ஆமாடா, கருவா பையா…”
“இந்தாரு கெழவி… ஏதோ என் லாலாவ எங்கயும் போக விடாம இங்கயே வச்சிருக்குறதால சும்மா விடுறேன். இல்லன்னா, அந்தக் கருவாட்டுத் தலையனை நாக்கப் புடுங்குற மாதிரிக் கேக்குற மாதிரி உன்னையும் கேட்பேன்.”
“எடு தொடப்பக் கட்டைய!” எனத் தள்ளாடி முட்டியில் கால் வைத்து எழுந்து நிற்க முயற்சித்தவரை அலேக்காகத் தூக்கிக் கொண்டவன், “உன்னால தான் முடியலல…” எனக் குறும்பாகச் சிரித்தான்.
“அவ உன்னை அந்தக் கேள்வி கேட்டுட்டுப் போறா, ரோசம் மானம் இல்லாமே சிரிக்கிற.”
சிரித்தவன் மீண்டும் குலுங்க ஆரம்பித்து விட்டான். வாயிற்கும், மூக்கிற்கும் இடைவெளி இல்லாமல் முகத்தை இழுத்துச் சோகமெனும் கடலில் முத்தெடுக்க மூலையில் அமர்ந்து விட்டான். தன்னை அவன் பக்கம் திருப்புவதற்கு நடத்தும் நாடகத்தைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர்,
“என் முன்னாடியே முத்தம் குடுத்தல்ல.” என நக்கலாகச் சிரித்தார் ரங்கம்மாள்.
“ஒருத்தன் மனசு இடிஞ்சு ஒக்காந்து இருக்கும் போது இப்புடிச் சிரிக்காத. என்னா இருந்தாலும் நான் உனக்குப் பேரன்!”
“என் பேத்திய வேணாம்னு சொன்ன பேரன் எனக்கு வேணாம்டா.”
“நான் எங்க வேணாம்னு சொன்னேன். என்னால என் லாலா இல்லாம வாழவே முடியாது. எவனோ என் மண்டையப் பிரிச்சுத் தம்மா துண்டு இருந்த மூளையக் கலக்கி விட்டுட்டு இருக்கான். அது குழம்பிப் போய் பண்ண வேலைதான் எல்லாம்.”
“ரொம்ப நடிக்காம எந்திரிச்சுப் போடா.”
“அப்ப எனக்கு உதவ மாட்ட?”
“மாட்டேன்!”
“இந்தப் பேரனை ஒண்டிக்கட்டையாய் பார்க்க உன் மனசு வலிக்கல?”
“வலிக்கல!”
“உன் பேத்தி என்னைத் தவிர வேற எவனையும் கட்டிக்க மாட்டா. உனக்கு வேற வழியே இல்ல, எனக்கு உதவி பண்ணித்தான் ஆகணும்.”
“உன்ன மாதிரி ஒருத்தனைக் கட்டிக்கறதுக்கு அவ சும்மா இருக்கலாம்.”
நாசியின் இரு துவாரத்தில் இருந்து, அனல் மூச்சைப் புசுபுசுவென்று இழுத்து விட்டவன் கண்டபடி வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான். அஷ்ட கோணலாக வளைந்திருக்கும் முகமும், வசைபாடிக் கொண்டிருக்கும் வாயும் உள்ளக் குமுறலைப் படம் போட்டுக் காட்டியது ரங்கம்மாளுக்கு. இருந்தும் கண்டுகொள்ளாது தன் வேலையைக் கவனித்துக் கொண்டிருக்க, “ரோசமாமா” நடக்க முயன்றவன் தோற்றுப் போய் நொண்டியாக நடக்க ஆரம்பித்தான்.
வாசல் தாண்டும் வரை அமைதியாக இருந்தவர், “எவன் செத்துப் போனான்னு தெனமும் அவகிட்ட வந்து அழுதுகிட்டுக் கெடக்க. அவ ஏற்கெனவே தனியா ஒக்காந்து அழுதுகிட்டுத் தான் கெடக்கா. இதுல நீயும் வந்து அழுதா, இருக்கற கோபம் இன்னும் தான் அதிகமாகும். குரங்கு வித்த காட்டுவியோ, குரளி வித்த காட்டுவியோ… எதையாவது பண்ணி முதல்ல அவ அழுகைய நிறுத்து. அது நின்னாலே அவ உன்னப் பார்க்க ஆரம்பிச்சிடுவா… அப்புறம் என்னாத்தையாவது பண்ணி உன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போ.” என்ற வார்த்தைகளுக்கு அவன் உடல் கட்டுப்பட்டு நின்றது.
“என்னாமோ மைனர் குஞ்சு கணக்கா திரிஞ்ச பையன், இப்ப புள்ளப் பூச்சிக்காரன் தூக்கிட்டுப் போற மாதிரி அழுதுட்டுக் கெடக்குறதப் பார்க்க எனக்கே சகிக்கல. அவ எங்க இருந்து பாக்குறது?”
கதறக் கதறக் கழுத்தில் கத்தி வைத்து அறுத்த கோழியைச் சுடுதண்ணியில் முக்கி எடுத்தது போல், மிரண்டு கொண்டிருந்தவனைத் தட்டி எழுப்பிக் கனவென்று சொன்னது போல் இருந்தது. ஐந்து நாள்களுக்குப் பிறகு அவன் உதட்டில் காந்தப் புன்னகை. இதழுக்கு மேலிருந்த மீசையை விட்டு வெளிவந்த சிரிப்பிற்கு நடுவில் பற்கள் ஜொலித்துக் கொண்டிருந்தது.
பேரனின் முகமாறுதல்களைக் கண்டு மன நிம்மதி கொண்டவர், வெற்றிலை பாக்கை இடித்துக் கொண்டிருக்க, ஓடி வந்து அவரைத் தூக்கிச் சுற்றினான் சிங்காரவேலன். வயதானவர், அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மயங்க, அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ளாது தன் மகிழ்வு அடங்கும் வரை சுற்றிவிட்டு, நிற்க வைத்தவன் மீது “தொப்பென்று” விழுந்தார் ரங்கம்மாள் பாட்டி.
“அய்யய்யோ ரங்கு, உனக்கு ஊதிட்டனா சங்கு…”
“எடுபட்ட பயலே!”
ராட்டினத்திற்கு நடுவில் தலையை விட்டது போல் கிறங்கி எழுந்து நின்றவர் அவனைப் போட்டு அடிக்க, “ஆத்தாடி! நான் கூட ஜெயிலுக்குப் போய் அப்பப்ப பரோல்ல வந்துதான் புள்ள குட்டி பெத்துக்கணுமோன்னு பயந்துட்டேன்.” எனக் கண் மூடி நெஞ்சில் கை வைத்தான்.
“பழுக்காத குச்சிக்குப் பழுத்த பழம் கேக்குதாம்!”
“ஹான்…”
“பாய் போட்டுப் படுக்கவே ஆள் இல்லாமல் கெடக்குற மைனர் குஞ்சுக்கு, ஆளு உசரத் தொட்டில் கேக்குதாம்.” என்றதும் மூக்கு விடைக்க முறைத்தான்.
பார்த்தால் பார்த்துக் கொள் என்ற ரீதியில் சேதுராமனின் அன்னை வீட்டிற்குள் செல்ல, “ஆமா, என்னா திடீர்னு என் மேல கரிசனம்? இதுக்குப் பின்னாடி சதித்திட்டம் ஒன்னும் இல்லையே…” சந்தேகமாகக் கேட்க,
“அது இல்லாம இருக்குமா?” என்றார் சிரிப்புடன்.
“அதான பார்த்தேன், அந்தத் தேஞ்சி போன டயர் மூஞ்சனப் பெத்தவளாச்சே.”
“என் மவனை இப்படிப் பேசித்தான் ஒண்டிக்கட்டையா ஒக்காந்து கெடக்க.”
“ஆனாலும், கடப்பாரப் பல்லனைச் சும்மா விடமாட்டேன் கெழவி.” என்றவன் பின்னால் வந்து நின்றார் சேதுராமன்.
அதை அறியாத மருமகன், “அந்த ஆளைச் சரியான கிரகணத்துல பெத்துப் போட்டுட்ட கெழவி. மூஞ்ச எப்பப் பாரு, பாழடைஞ்ச கிணத்துல விழுந்த தேங்காய் மட்டை மாதிரியே வச்சிருக்காரு. சில நேரம் பார்க்கும்போது அப்புடியே பக்கு, பக்குனு மூக்குலயே குத்தனும் போல இருக்கும்.” எனக் கோர்வையாகப் பேசிக் கொண்டிருந்தவன் தொடையைத் தட்டிய வயதானவர்,
“பின்னாடி தான் இருக்கான், எவ்ளோ வேணுமோ குத்திக்க…” என்றார்.
விளையாட்டுக்கு என்று எண்ணித் திரும்பியவன், கருப்பண்ண சாமியாக விரைத்து நிற்கும் மாமனாரைக் கண்டு விழி பிதுங்க ஆரம்பித்தான். அவன் முகத் தோரணையைக் கண்ட ரங்கம்மாள் சத்தமிட்டுச் சிரிக்க, அவரையும் சேர்த்து முறைத்தார் சேதுராமன்.
திருதிரு முழியோடு சிங்காரம் எழுந்து நிற்க, கடுகடுத்த முகத்தோடு உள்ளே வந்தார். மாமனாரின் உருவம் தன்னை நெருங்கும் முன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தவன் வாசலைத் தாண்டியதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். தன்னைத் தாண்டிச் சென்றவனைத் திரும்பி அவர் முறைக்க,
‘பாக்குறான் பாரு, சொம்பு வாயன்!’ என ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.
“பூங்கொடி எங்க?”
“வேலைக்குப் போய் இருக்கா!”
“என்னா?”
“அவ வாழ்க்கைய அவ பாற்க்க வேணாமா?”
“என்னாமா நீ… அவதான் சின்னப் பொண்ணு, ஏதோ நடந்துக்கறான்னு பார்த்தா நீயும் கூடச் சேர்ந்து ஆடிக்கிட்டுக் கெடக்க. அவன் இல்லனா வேற ஆம்பளையே இல்லையா? நல்ல பையனாப் பார்த்து நான் கட்டி வைக்கிறேன். அவளை வீடு வந்து சேரச் சொல்லு.”
“நீ எத்தனை நல்ல ஆம்பளைய வேணா பார்க்கலாம். ஆனா, அவ மனசுக்குப் புடிச்ச ஆம்பள உன்னத் தாண்டிப் போனானே, அவன் தான். அவனைத் தவிர வேற யாரையும் உன் பொண்ணு கட்டிக்க மாட்டா… அப்படியே கட்டிக்கிட்டாலும், சந்தோசமா வாழ மாட்டா… புள்ள வாழ்க்கையப் பத்திக் கவலைப்படாம, சின்னப்புள்ளத் தனமா நடந்துட்டு வக்கனையாப் பேச வந்துட்ட.”
“அன்னைக்கு அவன் என்னை எப்படி அடிச்சான் பார்த்தியா?”
“அவன் அப்பன் வேட்டிய உருவுனா அடிக்கத்தான் செய்வான்.”
“அவன் அப்பன் மட்டும் என்னை அப்படிச் சொல்லலாமா?”
“அது உனக்கும், அவனுக்கும் இருக்கற பிரச்சினை. இதுல என் பேத்தி வாழ்க்கையை எதுக்கு நுழைச்ச?”
“அவனும் தான வேணாம்னு சொல்லிட்டுப் போனான்…”
“அதுக்கான தண்டனையைத் தான் அனுபவிச்சிட்டுக் கெடக்கான்.”
“அவனோட சேர்த்து வைக்க நான் விடமாட்டேன்.”
“அவன் உன் பொண்ண விட்டுப் போக மாட்டான்.”
“நீ என்னாம்மா அவனுக்கு சப்போர்ட் பண்ற…”
“இவ்ளோ நடந்தும் திருந்தாம இருக்கற உன்னை விட, தப்புப் பண்ணிட்டேன்னு என் பேத்திகிட்டக் கெஞ்சிட்டு நிக்கிற அவன் எவ்வளவோ மேல். எல்லாத்தையும் தாண்டி என் பேத்தி மனசுல அவன்தான் இருக்கான். என் பேத்தி வாழ்க்கை மட்டும்தான் எனக்கு முக்கியம்.” என்று விட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்று விட்டார்.
***
இதுவரை வீட்டுக் கிளியாக இருந்தவள், இன்றுதான் வெளி உலகக் கிளியாக மாறி இருக்கிறாள். வீரமாகக் கிளம்பி வந்தவளுக்கு எல்லாம் புது அனுபவம். அதிலும் வேலையும், அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களும் புதுவிதம். இப்படியும் ஒரு உலகம் இருப்பதை எண்ணி வியந்தவள் முதல் நாள் வேலையை முடித்தாள். புதிதாக வந்தவளைத் தனியாக விடாது நான்கு பேர் சுற்றி வளைத்து நண்பர்கள் குழுவை உருவாக்கி விட்டனர். அவர்களோடு சகஜமாகப் பேசிக்கொண்டு, அன்றைய நாளை நிறைவு செய்தவள் கம்பெனியை விட்டு வெளியில் வர,
“ஹாய் லாலா!” என்ற பெரும் சத்தம் காதை நிறைத்தது.
அவன்தான் எனத் தெரிந்தாலும், ‘இங்கு எப்படி?’ என்ற கேள்வியோடு கண்களைச் சுழல விட்டாள். கருப்பு நிற பல்சர் பைக்கில் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான். அவளை மயக்குவதற்காகக் கண்ணை மறைக்கும் கருப்புக் கண்ணாடி அணிந்து, கனக்கச்சிதமாக வந்தவன் குரங்கு வாலைச் சுருட்டி வைக்க மறந்துவிட்டான். அவனையும், அவன் கையில் இருப்பதையும் மாறி மாறிப் பார்த்துப் பல்லைக் கடித்தாள்.
அத்தை மகளின் முகத்தோரணையில் கையில் சுற்றி இருந்த மல்லிகைப் பூவை நுகர்ந்தவன், “உனக்குத்தான்!” என்றான்.
“யாரு அவன்?” என்ற தோழிகளின் கேள்விக்குப் பதில் சொல்லாது நடையைக் கட்டினாள்.
“பொசுக்குன்னு போறா…” எனப் புலம்பிக் கொண்டே பின்னால் ஓடியவன் அவர்களைத் தாண்டி முன் நின்று, “ஹாய்!” என்றான் அவள் உடன் இருப்பவர்களுக்கு.
அவர்கள் இவளையும் அவனையும் புரியாது பார்த்திருக்க, “பூ வெச்சிக்க லாலா.” கையில் சுற்றி இருந்ததைச் சுழற்றி பூங்கொடியிடம் கொடுத்தான்.
அதை வாங்காது தட்டி விட்டுச் சென்றவள் பின்னே அலட்டிக் கொள்ளாமல் வந்தவன், “பைக்ல போலாம்.” என்றிட, மீண்டும் இவன் யார் என்ற கேள்வி அவள் காதைச் சுற்றி வந்தது.
“நான் அவ ஆளு!”
நெற்றிப் பொட்டிற்கு உள்ளே இருந்த மூன்றாம் கண்ணைச் சாவி போட்டுத் திறந்தவள், அவனை அந்தக் கண்ணிற்குள் விழுங்கிக் கொள்ளும் அளவிற்கு முறைக்க, “ஈஈஈ… இல்ல, இவதான் என் ஆளு!” பகிரங்கமாகச் சரணடைந்தான்.
“இங்க எதுக்கு வந்த?” என்றதற்குப் பதில் சொல்லாமல்,
“இங்க உன்னத் தவிர ஒன்னு கூடப் பார்க்க நல்லா இல்ல.” உடன் வந்த அனைவரும் அவனைப் பொசுக்கிச் சாம்பலாக்க முயற்சிக்க, “சாரி தோழிஸ்!” பல்லைக் காட்டினான்.
அவர்களோ இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். அந்தப் பார்வைக்குக் கூச்சம் கொள்ளாமல், “என் ஆளுக்கும், எனக்கும் சண்டை! சமாதானப்படுத்த வேற வழி தெரியல. நீங்க எதையும் காதுல வாங்கிக்காம அப்புடி முன்ன நடங்க. நாங்க பேசிச் சமாதானமாகிக் கொஞ்சிக்கிட்டுப் பின்னாடி வரோம்.” பேசிக்கொண்டே அவள் தோள் மீது கை போட்டான்.
போட்ட வேகத்தில் எடுத்து விட்டவள் வேகமாக நடந்தாள். அவள் நடைக்கு ஈடு கொடுக்க முடியாத தோழிகள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது பேருந்து நிலையம் வரை விறுவிறுவென வந்தவள் மூச்சு வாங்க அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்தாள்.
“ஐயோ! என் அத்தை மகளுக்கு மூச்சு வாங்குதே…” என்றவனுக்குத்தான் அவளை விட அதிகமாக மூச்சு வாங்கியது.
“ஆ…ஆ… குடிக்க… ஆ… ஏதாச்சும் வேணுமா?”
“உங்களுக்கும் சேர்த்து வாங்கிக்கோங்க.”
“தேங்க்ஸ் தோழிஸ்!”
“உங்க பேர் என்னா அண்ணா?”
“சிங்காரவேலன்! அண்ணன்னு கூப்பிடனும்னு அவசியம் இல்ல. சிங்காரா அப்புடின்னு செல்லமாய் கூப்பிடலாம். இல்லையா, வேலா அப்புடின்னு பாசமாய் கூப்பிடலாம்.”
அவன் பக்கம் திரும்பாது அமர்ந்திருந்தவள், வெடுக்கென்று கழுத்தைத் திருப்பி முதலை போல் கவ்விக் கொல்லப் பார்த்தாள். அதை உணராத அவள் காதலன், “அதுவும் இல்லன்னா, உங்களுக்கு எப்புடி இஷ்டமோ அப்புடியே கூப்பிட்டீங்கன்னா எனக்கும் இஷ்டம்!” குழைந்து கொண்டிருந்தவன் பார்வை மிதப்பாகக் காதலியின் மீது நகர்ந்தது.
நெற்பயிர்களுக்கு நடுவில், பயம் காட்ட வைத்திருக்கும் திருஷ்டி பொம்மை போல் அகோரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அவள் பார்வையில், குழைந்த முகம் தெளிந்தது. பயத்தில் வேர்த்துக் கொட்டும் உணர்வை வெளிக் காட்டாது, “ஹா ஹா… ஈஈஈ… நான் ஒரு வயசுப் பையன், நீங்க வயசுப் பொண்ணுங்க. இப்புடி எல்லாம் கூப்பிட்டா நம்ம ஊரு உலகம் தப்பா நினைக்கும். நான் அதுக்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். இருந்தாலும் என் ஆளுக்குப் புடிக்காது. என் ஆளுக்குப் புடிக்காத எதுவும் எனக்கும் புடிக்காது. இன்னைல இருந்து இந்த நிமிஷத்துல இருந்து உங்க கூடப் பொறக்காத அண்ணன் நான்… என்னா லாலா… நான் சொல்றது சரிதான.” என மீண்டும் அவள் முகம் பார்த்தவனுக்கு உதறல் எடுக்கவே ஆரம்பித்து விட்டது.
அவனைக் கண்டு நான்கு பெண்களும் சத்தமிட்டுச் சிரிக்க, பதக்கம் கொடுத்தது போல் பல்லைக் காட்டி, “என் தங்கச்சிங்க அழகா சிரிக்கிறாங்கல்ல லாலா…” என்றான்.
அற்பமான பிறவியைப் பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூங்கொடி. நெஞ்சில் கை வைத்துத் தப்பித்த நிம்மதியில் பெருமூச்சு விட்டவன், “சுடிதார் உனக்கு நல்லாவே இல்ல.” என்றிட, பல் கடிக்கும் ஓசை தெள்ளத் தெளிவாகக் கேட்டது.
“இல்ல, நீ எது போட்டாலும் அழகா இருப்ப. தாவணி போட்டா இன்னும் அழகா இருப்பன்னு சொல்ல வந்தேன்.”
“என்னா அண்ணா, பிரச்சினை உங்களுக்குள்ள?”
“அதை ஏம்மா கேக்குறீங்க தங்கச்சிங்களா…”
பேசிக்கொண்டே ஒரு காலைத் தூக்கிக் கல் மீது வைத்தவன், அதில் கையை நீட்டி வைத்துக் கொண்டு, “வாழ்ந்து கெட்டவனைப் பார்த்திருப்பீங்க. வாயால கெட்டவனைப் பார்த்திருக்கீங்களா?” மூக்கைச் சிந்த ஆரம்பித்து விட்டான்.
அவன் போடும் நாடகம் அனைத்திற்கும் அமைதியாக இருந்தவள், தங்களுக்குள் நடந்ததைச் சொல்ல வருவதைக் கேட்டு, “வாய மூடிட்டுக் கெளம்பிடு!” கர்ஜித்தாள்.
“நீயும் கூட வந்தா நல்லா இருக்கும்.”
“அதுக்கு வேற ஆளப் பாரு.”
“அதை இந்த நாலு பேரையும் தங்கச்சின்னு சொல்றதுக்கு முன்னாடி சொல்லி இருக்கக் கூடாது?” என்றதும் மூடி வைத்த மூன்றாம் கண் மீண்டும் திறக்க,
“கோவத்துல கூட அழகா இருக்க…” அவள் கன்னத்தில் இடித்தான்.
வாய்க்கு வந்தபடி திட்ட வந்தவள் பேருந்து வருவதை அறிந்து எழுந்து நிற்க, பேருந்தில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்துப் பட்டாசு வெடித்தது சிங்காரவேலனுக்கு. பேருந்தில் ஏறச் சென்ற காதலியை வழி மறித்து, “இம்புட்டுக் கூட்டத்துல எப்புடிப் போவ?” கவலையாகக் கேட்க, “அது என்னோட பிரச்சினை, உன் வேலைய மட்டும் பாரு!” மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லிவிட்டு ஏறினாள் பூங்கொடி.