Loading

அத்தியாயம் 4

 

“தேவா க்கா! எவ்ளோ அழகா இருக்க தெரியுமா? ப்ச்! உன்னையும் கயலையும் விட நான் தான் அழகுன்னு இவ்வளவு நாளும் நான் நினைச்சுட்டு இருந்தேன். இப்ப கொஞ்சம் ஜெர்க் ஆகுது!” மண்டபத்தில் திருமணத்திற்கு தயாராகி மணப்பெண் கோலத்தில் இருந்த தேவதர்ஷினியிடம் அஷ்வினி சொல்ல,

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல அஷ்! பாரு! என் முகத்துல தொட்டாவே கையில வருது. நீ நேச்சுரல் பியுட்டி டா!” என தேவதர்ஷினியும் சொல்ல,

 

“ரெடியா தேவா? மாப்பிள்ளை வீட்டாளுங்க இப்ப வந்துடுவாங்க!” என்று மணமகள் அறைக்குள் வந்திருந்தார் சுந்தரி.

 

“ம்மா! அக்கா எப்படி இருக்காங்க?” அஷ்வினி தன் அன்னையிடம் கேட்க,

 

“அவளுக்கு என்ன டி! ராணி தான்!” என்ற சுந்தரி,

 

“கழுதை வயசாகுது புடவையை கட்டிக்க சொன்னா தாவணில வந்து நிக்குற நீ!” என அஷ்வினியை பார்த்து முறைக்க,

 

“ம்மா! தாவணி எல்லாம் அடிக்கடி கட்டவா முடியும்? கட்ட தான் விடுவிங்களா? போங்க நீங்க” என்று அஷ்வினி சொல்லி விட, வெளியில் கேட்ட பேச்சு குரலில்,

 

“சரி கயலும் நீயும் தேவா கூடவே இருங்க மாப்பிள்ளை வந்துட்டாங்க நினைக்குறேன். மாப்பிள்ளை தங்கச்சி பூ கொண்டு வருவாங்க. நான் போய் பாக்குறேன்!” என சொல்லி வெளியில் சென்றார் சுந்தரி.

 

லீலாவும் ஒருமுறை உள்ளே வந்து மகளை ஆசையாய் பார்த்து சென்றிருக்க, நீண்ட நேரமாய் பேச்சுக் குரல் சலசலவென கேட்டுக் கொண்டு இருக்கவே,

 

“கயல்! அக்கா கூட இரு. நான் வெளில என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு வர்றேன். ஆரத்தி எடுக்க இன்னும் கூப்பிடலையே!” என்று சொல்லி வெளியில் சென்ற அஷ்வினி கூட்டத்தைப் பார்த்து அங்கே செல்ல, அத்தனை கூட்டத்திற்கு நடுவே அன்னையிடம் வாதம் புரிந்து கொண்டிருந்த கார்த்திகைசெல்வன் தான் கண்ணில் தெளிவாய்பட்டான் அஷ்வினிக்கு.

 

“அத்தான் ஏன் கோவமா இருக்காங்க?” பார்த்ததும் இப்படி நினைத்து தான் அவர்களை நோக்கி முன்னேறி இருந்தாள் அஷ்வினி.

 

“கார்த்தி! அம்மா வாக்கு குடுத்துட்டேன். அதுக்கு இவ்வளவு பேரும் தான் சாட்சி. போய் உக்காரு!” என மெதுவாய் கண்ணகி சொல்ல,

 

“ம்மா! இது என் வாழ்க்கை பிரச்சனை ம்மா!” என்றவன் பார்வை அப்பொழுது தான் கண்ணகி அருகில் வந்து நின்ற அஷ்வினியிடம் தவிப்புடன் ஆதங்கமாய் வந்து நின்றது.

 

‘என்னாச்சு த்தான்?” என்பதாய் தலையசைத்து விழி சுருக்கி அஷ்வினி கேட்க,

 

“போய் கட்டினவளுக்காவது உண்மையா இருக்க சொல்லுங்க உங்க மகனை!” என மாப்பிள்ளை வீட்டினரை கூறிய சுந்தரி,

 

“லீலா! இன்னமும் என்ன அழுதுட்டு இருக்க? அதான் கண்ணகி அண்ணி சொல்றாங்க இல்ல. கார்த்திக்கு இங்க இருக்குற நிலைமை தெரியாம இருக்குமா? அவன் படிச்சு பதவில இருக்க பையன். போய் வேலையை பாரு! கார்த்தி தான் தேவாக்குன்னு கடவுள் எழுதி இருக்கான்!” என்று சொல்ல, அதை கேட்ட அஷ்வினிக்கு கால்களின் கீழ் உலகமே நழுவியதாய் இருந்தது.

 

“ம்மா! ம்மா! ப்ளீஸ் நான் கொஞ்சம் உங்ககிட்ட தனியா பேசணும்!” என அன்னையை கார்த்திகைசெல்வன் அஷ்வினியை பார்த்தபடி அவசரமாய் சொல்ல,

 

“இப்ப பேச எல்லாம் நேரம் இல்ல கார்த்தி. போய் மேடைல உக்காரு!” என்று கண்ணகி நகர,

 

“அஷ்வினி வா! இதுக்கு மேல சொல்லாம இருந்தா சரி இல்ல” என அஷ்வினியிடமே வந்திருந்தான் கார்த்திகைசெல்வன்.

 

“உன்னை தேவா கூட தான டி இருக்க சொன்னேன்!” என சுந்தரி அஷ்வினியிடன் வந்தவர்,

 

“நாசமா போற எடுப்பட்டவன் ஏற்கனவே காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கல்யாணமாகி சென்னைல ஒரு புள்ளைய கூட வச்சு வாழ்க்கையை நடத்திகிட்டு தான் இங்க நம்ம பிள்ளைக்கு தாலி கட்ட வந்திருக்கான். நல்லவேளை கையும் களவுமா நம்ம பரமு மாமா பிடிச்சிட்டார். வீட்டுக்கு பயந்து தான் வந்தானாம். ச்சை! என்ன மனுஷனோ!” என கூறிய சுந்தரி,

 

“என்ன இருந்தாலும் உன் கண்ணகி அத்தை மனசு யாருக்கும் வராது அஷ்வினி! அத்தனை பேர் மத்தில தேவா எங்க வீட்டு பொண்ணு. என் பையன் தாலி காட்டுவான்னு சொன்னாங்க பாரு. கண்ணு கலங்கிடுச்சு எனக்கு!” என்றார் கண்களை இப்பொழுதும் துடைத்துக் கொண்டு.

 

“என்ன சொல்லு! நம்ம கார்த்தியை விட யார் தேவாவை நல்லா பார்த்துக்க முடியும். நம்ம குடும்பத்துக்கு ஒண்ணுன்னா அவன் விட்டுடுவானா?” என்றும் சொல்ல,

 

கார்த்திகைசெல்வனும் அவர் சொல்லும் வரை அதைக் கேட்டபடி அஷ்வினி முகத்தை தான் பார்த்து நின்றான்.

 

தன் நிலைமை கொடியது என்றால் அவள் நிலைமை என்று மனம் அப்பொழுது இன்னும் அதிகமாய் அவளுக்காகவே துடித்தது.

 

“அஷ்வினி!” என சுந்தரி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அழுத்தமாய் கார்த்திகைசெல்வன் அழைத்து வைத்தான்.

 

“என்ன கார்த்தி?” என்ற சுந்தரி, ‘ஒருவேளை கார்த்தி தேவாகிட்ட தனியா பேச நினைக்கிறானோ?’ என்று தான் நினைத்தார்.

 

இரண்டு வருடம் ஆகிறது அஷ்வினி கார்த்திகைசெல்வன் காதல் மலர்ந்து.

 

அஷ்வினி தான் முதலில் கார்த்திகைசெல்வனிடம் காதலை கூறியது. அதற்கு முன்பே அவள் பேச்சுக்கள் பார்வைகள் என ஓரளவு கண்டு கொண்டிருந்த கார்த்திகைசெல்வனுக்கு அவளை மறுக்க தோன்றவும் இல்லை.

 

தினமும் அலைபேசியில் பேசி ஊருக்கு வரும் நேரங்களில் சந்தித்து என முழுதாய் வளர்ச்சியடைந்திருந்த நேரத்தில் இப்படி ஒன்றை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை இருவருமே!.

 

அஷ்வினியின் கல்லூரி படிப்பு முடிவதற்காகவே கார்த்திகைசெல்வனும் அமைதியாய் இருந்திருக்க, இனி அப்படி இருக்க முடியாது எனும் நிலையில் தான் இப்பொழுது நின்றான்.

 

“இல்ல த்தை! நான் கொஞ்சம் பேசனும். அஷ்வினி…. “ என அழைக்க,

 

“நீ இன்னும் இங்க என்ன டா பண்ற? வா! நான் சொல்றேன்ல வா!” என கண்ணகியும் அங்கே வந்துவிட்டார்.

 

“அத்தை! நான் தேவாக்காவை பாக்குறேன்!” என சொல்லி வேகமாய் அஷ்வினி திரும்பிவிட்டாள்.

 

“அஷ்வினி!” சத்தமாய் தான் அழைத்தான் கார்த்திகைசெல்வனும்.

 

நம்பவே முடியாமல் அதிர்ந்து அவள் செல்வதை பார்க்க, அதற்குமேல் கோபம் கொண்டவன் மீண்டும் மீண்டும் போனில் அஷ்வினிக்கு அழைத்தபடி தான் அன்னையுடன் சென்றான்.

 

கார்த்திகை செல்வனை அறைக்குள் செலுத்திவிட்டு வெளிவந்த மனைவியை பரமேஸ்வரன் பிடித்துக் கொண்டு,

 

“ஏன் கண்ணகி இப்படி அவசரப்பட்ட?” என்றதன் அர்த்தம் உணராமல்,

 

“என் தம்பி கலங்கி நிக்கிறதை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றிங்களா? பேசாம இருங்க!” என்றுவிட்டார் கண்ணகி.

 

எடுக்கப்படவே இல்லை கார்த்திகைசெல்வனின் எந்த அழைப்பும் அஷ்வினியிடம் என்றதில் சில நொடிகள் நின்றவன், உடனே அடுத்த நொடி கயல்விழிக்கு அழைத்துவிட்டான்.

 

“த்தான்!” என்று அழைப்பை ஏற்ற கயல்விழிக்கு அப்பொழுது தான் செய்தி வந்து சேர்ந்திருந்தது.

 

“கயல்! அஷ்வினிகிட்ட போனை குடு!” என்று அவசரமாய் அவன் சொல்லியதில் என்னவோ என்று வேகமாய் அஷ்வினி அருகே சென்று அவள் கையில் போனை கொடுக்க, அதை கையில் வாங்கும் வரை தன்நினைவில் தான் மரத்து நின்றிருந்தாள்.

 

“க்கா பேசு!” என அஷ்வினி தோளில் கயல்விழி இடித்ததும் வெறுமெனே காதில் வைத்து ஹெலோ என்றவள் அதுவரை அது கார்த்திகைசெல்வன் என நினைக்கவில்லை.

 

“திஸ் இஸ் தி லிமிட் அஷ்வினி! ஆர் யூ மேட்? பேசிட்டு இருக்கேன் நீ பாட்டு போற! மரியாதையா வெளில வா. வீட்டுல பேசுவோம்!” என்று கத்த ஆரம்பித்துவிட்டான் கார்த்திகைசெல்வன்.

 

அவன் சொல்லில் தொண்டைக்குழி ஏறி இறங்க விழித்தவள் மனம் அலைஅலையாய் தவித்துக் கொண்டிருந்தது.

 

சட்டென முடிவெடுத்து அவனுடன் சென்றுவிடும் விஷயமில்லையே! எங்கோ யாரையோ காதலித்து இருந்தால் என்ன செய்திருப்பாளோ! ஒன்றாய் ஒரு சுவற்றுக்குள் சுற்றி வந்துவிட்டு இப்பொழுது அவர்கள் முன் சென்று அப்படி நிற்க முடியும் என தோன்றவில்லை.

 

யோசிக்க நினைக்கும் முன்பே குடும்பத்தின் நலனில் தான் அவள் மனம் வந்து நின்றது.

 

கண்ணகி வாக்கு கொடுத்தது, கூடவே இப்பொழுது தன் அன்னையின் அத்தனை பெருமையான கார்த்தியைப் பற்றிய பேச்சு, இதோ தன்முன் விஷயம் கேள்விபட்டதில் இருந்து கலங்கிப் போய் இருக்கும் தேவதர்ஷினியின் முகம், இப்பொழுதைய மண்டபத்தின் சூழ்நிலையில் அக்காவின் திருமணத்தை நிறுத்தி தான் முன் நிற்பதா? என்பது வரை அஷ்வினியின் மனம் நினைத்துவிட்டது சில நிமிடங்களில்.

 

நிச்சயம் இவ்வளவு யோசிக்கும் திறன் வாய்ந்த பக்குவமான பெண் எல்லாம் இல்லவே இல்லை அஷ்வினி. ஆனாலும் இந்த சூழல் அவளுக்கு உணர்த்தியது. தன் பொறுப்பு என்னவென்றும் கூறி அவளை சுழலில் நிறுத்தி இருந்தது.

 

“ஹே நான் பேசிட்டே இருக்கேன் கேட்குதா இல்லையா அஷ்வினி!” என கத்தியே இருந்தான் கார்த்திகைசெல்வன்.

 

“தயாராகுங்க த்தான். நல்ல நேர்ல நெருங்கிடுச்சாம்!” என்றவள் சொல்லில்,

 

“அஷ்வினி! கடுப்பேத்தாத! இப்ப நீ வர்ல. நான் மட்டுமே எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன்” மிரட்டல் என்றே சொல்லலாம் அவன் குரலில்.

 

“அது நடந்தா அப்புறம் நீங்க என்னை உயிரோடவே பார்க்க முடியாது த்தான்!” என்றவள் அவன் அதிர்ந்து நிற்கும் பொழுதே அலைபேசியை அணைத்திருந்தாள்.

 

அதன்பின் அங்கு நடந்ததெல்லாம் அவசரகதி தான். கண்ணைமூடி திறக்கும் முன் அனைத்தும் நடந்து முடிந்திருக்க, இதோ தேவதர்ஷினியை கார்த்திகைசெல்வன் வீட்டில் கீழே இருக்கும் அறையில் அலங்கரித்துக் கொண்டிருந்தார் சுந்தரி.

 

தேவதர்ஷினிக்கு அத்தனை தயக்கம் இப்படி இவர்கள் செய்வதை நினைத்து.

 

நடந்து முடிந்திருக்கும் நிகழ்வில் கொஞ்சம் இளைப்பாற நினைக்கும் பொழுது அதற்கு கொஞ்சமும் நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்த சடங்கு சம்பிரதாயங்கள் என இரவு சடங்கிற்கு எல்லாம் தயாராக, மனம் அதிகமாய் அடித்துக் கொண்டது தன் அத்தை மகனை எண்ணி!.

 

“என்ன பண்ணலாம் சுந்தரி?” என கண்ணகியுமே முதலில் யோசித்தார் அவ்வளவுக்கு. மகன் மனநிலை தெரியாவிட்டாலும் அவன் முகத்தில் ஏகத்திற்கும் இந்த திருமணத்தை ஏற்கும் நிலையே இல்லை என தெரிந்தவர் கேட்க,

 

“அதுக்காக அப்படியே விடவா? காலகாலத்துல நடக்க வேண்டியது நடந்தா தான் அவங்களும் அடுத்து வாழ்க்கை என்னனு புரிஞ்சுக்கும்ங்க. பேசாம இருங்க நான் பாத்துக்குறேன்!” என்றுவிட்டு தான் தேவதர்ஷினியை அலங்காரிக்கவே ஆரம்பித்தார் சுந்தரி.

 

“மத்ததெல்லாம் மேல வச்சுட்டு வந்துடுங்க அண்ணி. அந்த நேரத்துக்கு இவளை மட்டும் அனுப்பினா போதும்” என சுந்தரி சொல்ல, 

 

“பெரியம்மா!” என எழுந்து கொண்டாள் கலங்கிய கண்களோடு தேவதர்ஷினி.

 

“ஒண்ணுமில்ல டா. இது எல்லா பக்கமும் நடக்குறது தானே! நீ வேற எதையும் நினைக்காத. சந்தோசமா இருக்கணும் புரியுதா? உன் அம்மா மாதிரி எல்லாத்துக்கும் பயந்துட்டு இருக்க கூடாது!” என அவரே அவளை தைரியப்படுத்த சொல்ல, அவள் பயம் என்ன என்று மட்டும் அவர்களுக்கு புரியவில்லை.

 

தொடரும்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
19
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்