Loading

ஹாய் ரீடர்ஸ் 🤩 MR. HERO காம்பெடிஷன்ல இனி சிங்காரவேலனும் சேர போறான். மாஸ் காட்ட மாட்டான். சண்ட போட மாட்டான். கெத்து ஹீரோ இல்ல. மொத்தத்துல ட்ரீம் ஹீரோ மெட்டீரியல் நம்ம ஆளு இல்ல. லாஜிக் மேஜிக் இல்லாத ஒரு ஜாலியான கதையா இது இருக்கும். கொஞ்சம் சிரிக்கலாம் 😀 பிடிக்கும்னு நம்புறேன்‌. ரெண்டு வாரத்துல கதையை முடிச்சிடுவேன். நம்ம ஹீரோக்கு சப்போர்ட் பண்ணுங்க.

கண்ணாலம் 1

ஓலைப் பந்தல்கள் அந்தத் தெரு முழுவதும் பனை ஓலைத் தோரணத்தோடு நிரம்பி இருந்தது. மஞ்சள், ஆரஞ்சு நிறச் சாமந்திகள் பூத்துக் குலுங்கித் தொங்கிக் கொண்டிருந்தது. தெருமுனையில் இருந்த மைக் செட்டும், வீட்டு வாசலில் நின்றிருந்த வாழை மரமும் சொல்லாமல் சொல்லியது திருமண வைபோகம் என்று. 

ஒரு வாரமாக, ஊர்மக்கள் அனைவரின் வாய்க்கும் அவல் பொரி இந்தத் திருமணம் தான். ஒவ்வொன்றையும் வாய் பிளந்து பார்த்து வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றனர். இருநாள்கள் எந்த வீட்டிலும் அடுப்பு எரியவில்லை. மூன்று வேளை உணவையும், இந்த இரு குடும்பத்தார்களும் திருமணத்தை முன்னிறுத்தி வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். 

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குச் செல்லப் போகும் பயம், திருமணத்திற்குத் தயாரான ஒவ்வொரு பெண்ணிற்கும் இருக்கும். அந்தப் பயம் சிறிதும் இல்லை இந்த மணப்பெண்ணிற்கு. முறைப்படிக் கணவனோடு தன் வலது பாதத்தை எடுத்து வைக்க வேண்டிய அவள், முதலில் நடை பழகியதே புகுந்த வீட்டில்தான். வருங்கால மனைவி எப்படி இருப்பாள் என்ற கேள்விக்கு, நினைவு தெரிந்த நாளிலிருந்து மணமகனுக்குப் பதில் தெரியும் என்பதால் இந்த நாளைக் குதூகலமாக வரவேற்றுக் கொண்டிருக்கிறான். 

முழங்கை வரை மல்லிகைப் பூவைச் சுற்றிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றவன் நுகர்ந்து பார்த்து, “என் அத்த மவ லாலா மாதிரி ஆளத் தூக்குதே.” போதையாகக் கண்மூடினான். 

“மாமோய்!” 

விழி திறந்து சுற்று முற்றும் தேடியவனை, “மாமோய்!” என்ற சத்தம் கிறங்கடித்தது.

“அட என் மாமோய்… நான் உடனே பேசணும், போன எடு.” 

சிணுங்கும் கைபேசியைத் தேடி எடுத்தவன், திரையில் மின்னிக் கொண்டிருக்கும் அவள் முகத்தைப் பார்த்து ஒரு கையால் திருஷ்டி கழித்தான். அவள் குரலில் ஒலித்துக் கொண்டிருந்த அழைப்பு நின்று மீண்டும் அடிக்க, “லாலாக்கு என்னா வேணும்?” குழைந்து கேட்டான்.

“மாமன் தான் வேணும்!”

“அதுக்குத்தான கண்ணாலம் ஏற்பாடு பண்ணி இருக்கு.”

“கண்ணாலம் ஆனாதான் தருவியா?”

“எந்த மடப்பய சொன்னது! என் லாலா ஆசைப்பட்டா இப்பக் கூடத் தருவேன்.”

“நான் ஆசைப்பட்டுக் கொள்ள வருசமாகுது!” 

“உசுப்பேத்திறாளே…”

“உன் அத்தகாரி கண்டு பிடிக்கிறதுக்குள்ள செத்த வந்துட்டுப் போறது.”

“உன் மாமியாக்காரி, வெளிய விடமாட்டன்னு கங்கணம் கட்டி அலையுது.”

“பொண்டாட்டியா? அம்மாவா?”

“அதுக்குள்ளவா!”

“உன்னப் பாக்கணும் போல இருக்கு.”

“இதை முன்னாடியே சொல்லிருந்தா பறந்தோடி வந்திருக்க மாட்டேன்!”

“பறந்து எல்லாம் வர வேண்டாம். கெத்தா பின்னங்கழுத்துக் காலரத் தூக்கி விட்டாப்படி நடந்து வா போதும்.”

“வந்தா என்னா கிடைக்கும்?”

“நேத்துப் பாதியில விட்டுப் போனது கிடைக்கும்!”

“என் லாலா லவ் மூட்ல இருக்கா போல…”

“எல்லாம் உன்னால தான்!”

“மாமன் என்னா பண்ணிட்டேன்?”

“நலங்கு வைக்கும் போது உன் குண்டுக் கண்ண வச்சுக் குறுகுறுன்னு பாக்குற. உடம்பெல்லாம் ஒதருது. கண்ணாலத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு, கொஞ்சம் விட்டு வை…”

“அதுக்கு முன்ன நீ என்னாடி பண்ண?”

“என்னா பண்ணேன்?”

“நடிக்காதடி! நான் குளிக்கப் போகும்போது கண்ணால தின்னு தீர்க்குற மாதிரிப் பார்த்தக்ல.”

“எனக்குச் சொந்தமானதை நான் பார்க்கிறேன்.”

“அதேதான் எனக்கும்!”

“இருந்தாலும் நீ ரொம்ப ஓவரா பார்க்குற.”

“தள்ளி நின்னு பார்த்ததுக்கே இம்புட்டுச் சிலுத்துக்கிறவ எதுக்குடி பக்கத்துல பார்க்கக் கூப்பிடுற.”

என்ன பதில் வரும் என்று தெரிந்தே கேட்டவன், தன் முகத்தில் தோன்றும் வெட்கத்தைக் கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருக்க, “தூரமா நின்னு பார்த்தா தான் உடம்பு ஒதுருது மாமா… பக்கம் வந்தா ஒன்னும் செய்யாது.” என்ற ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் வெட்கம் ஒட்டியிருந்தது. 

“முழுசா சொல்லுடி!”

“ச்சீ போ…”

“ஆள அசத்துறடி அத்த மவளே… ரொம்ப நேரம் பூவ வாங்கி வச்சுக்கிட்டு இங்கைக்கும், அங்கைக்கும் நடந்துகிட்டு இருக்கேன். பந்தக்கால் நட்டாச்சு, வீட்டுக்கு வரப் போற பொண்ணைப் பார்க்க கூடாதுன்னு உன் அத்தை உளறிட்டுக் கெடக்கு.”

“அதெல்லாம் தெரியாது. வீட்டுக்குப் பின்னாடி காத்துட்டுக் கெடக்கேன், விரசா வந்து சேரு.” என்றவள் அழைப்பைத் துண்டிக்கப் போகும் நேரம், 

“ஒன்னே ஒன்னு குடுத்துட்டு வை.” ஆசையாகக் கேட்டான். 

சம்பந்தப்பட்டவளின் முகம் சிவந்தது. பலமுறை ரகசியமாக நேரிலும், கைபேசியிலும் கொடுத்துக் கொண்ட முத்தம் தான் என்றாலும், இந்த முறையும் வெட்கத்தைக் கொடுக்கத் தவறவில்லை. அத்தை மகளின் முகச் சிவப்பைப் பார்க்காமலே கண்டு கொண்ட கள்வன், 

“உன் வீட்டை விட்டு என் வீட்டுக்கு வரும்போது அந்த வெட்கத்தை விட்டுட்டு வந்துடு. முத்தத்துக்குக் கெஞ்சிகிட்டு இருக்க மாதிரி, எல்லாத்துக்கும் கெஞ்சிட்டு இருக்க முடியாது.” குறும்புப் பேச்சால் அவளைத் தலை குனிய வைத்தான்.

“அது வரதே உன் பேச்சால தான் மாமா… முதல்ல நீ இப்புடிக் கொஞ்சுறதை நிறுத்து. முகம் மட்டும் இல்ல, மனசும் செவக்குது.”

“எனக்காகப் பொறந்தவளைக் கொஞ்சுறதைத் தவிர, வேற வேலை என்னா இருக்கு. ஊருக்குத்தான் கண்ணாலம்! எப்போ கட்டிக்கிறியா மாமான்னு கேட்டியோ, அப்பவே என் பொண்டாட்டி ஆயிட்ட. என் பொண்டாட்டிய நான் கொஞ்சுவேன். கொஞ்சிக்கிட்டே இருப்பேன்.”

“நேர்ல கொஞ்ச வந்தா நல்லா இருக்கும்!”

“இதுக்கு மேல என்னாலயும் தாக்குப் பிடிக்க முடியாது. நீ போன வையி, பத்து நிமிஷத்துல வரேன்.” என்றவன், “தாவணி பாவாடை தான…” கேட்க, 

“வேற துணி போட விட்டுடுவியா?” சிலுத்துக் கொண்டு அழைப்பைத் துண்டிக்க, சத்தமிட்டுச் சிரித்தான் சிங்காரவேலன்.

இருவரின் வீடும், பக்கத்துப் பக்கத்தில் இருந்தும் காதலியைப் பார்க்க முடியவில்லை. இவன் வீட்டுப் பின்பக்கம் சமைத்துக் கொண்டிருப்பதால், அவள் வீட்டுப் பின்பக்கத்திற்குச் செல்ல முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் கையில் சுற்றி வைத்திருந்த பூவைத் துணிப் பையில் சுற்றி வைத்து, வேட்டிக்குள் சுருட்டி வைத்தவன் வெளியே வந்தான்.

“சாப்பாட்டு வேலை ஆச்சான்னு பாருங்க அண்ணி.” 

“இப்பதான் பார்த்துட்டு வரேன் அன்னம்.”

“அண்ணே எப்பவோ வீட்டுக்கு வரன்னு போன் பண்ணுச்சு, இன்னும் ஆளைக் காணோம்.”

“உங்க அண்ணே வேற எங்க இருப்பாரு அன்னம்…” என முகத்தைச் சுருக்கி இடுப்பில் கை வைத்த கோமளம், “உன் புருஷன் வந்தாச்சா?” கேட்டார். 

“அண்ணே வந்தா தான அண்ணி அவர் வருவாரு.”

“புள்ளைங்க ரெண்டு பேத்துக்கும் கண்ணாலம் பண்ற வரைக்கு வந்தும், இன்னும் இவங்க திருந்துற மாதிரித் தெரியல.”

“அவங்க ரெண்டு பேரும் என்னைக்கும் திருந்த மாட்டாங்க அண்ணி. இதுக்கு மேல விட்டு வச்சா, வேலைக்கு ஆகாதுன்னு தான இந்தக் கண்ணாலத்தை நம்மளே ஏற்பாடு பண்ணிட்டோம்.”

“அது என்னமோ உண்மைதான்! ரெண்டு பேரும் மாமன், மச்சானா நல்லாக் குழைஞ்சிக்கிறாங்க. குடிச்சிட்டாத்தான் எப்படிப் பேசுறது, என்னா ஏதுன்னு தெரியாமல் நாறிப் போறாங்க.”

“இத்தோட ரெண்டு பேரையும் ஒன்னு சேர விடாம பார்த்துக்கணும் அண்ணி.”

“நடக்குற காரியமா?” என இருவரும் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது வந்த சீதாலட்சுமி, “என் புள்ளையக் கெடுக்கறதே உன் புருஷன் தான்டி!” சிடுசிடுத்தார் மகள் அன்னத்திடம்.

அவர் பதில் சொல்வதற்கு முன்னர், வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வெற்றிலை பாக்கு இடித்துக் கொண்டிருந்த ரங்கம்மாள், “என் புள்ள வாழ்க்கையை உன் பொண்ணக் கட்டிக் குடுத்துக் கெடுத்த. போதாக் குறைக்கு என் பெரிய பேத்திய ரெண்டாவது பேரனுக்குக் கட்டிக் குடுத்துக் கெடுத்த. இப்ப என் செல்லப் பேத்திய உன் கடைசிப் பேரனுக்குக் கட்டி வச்சி என் குடும்பத்தையே கெடுக்கப் பார்க்குற. இந்த லட்சணத்துல என் மவன் தான் உன் மவனைக் கெடுக்குறானாக்கும். உன் புள்ள நீலகண்டன் என்னா குழந்தையா? அப்படியே என் மவன்தான் வாயில ஊத்திக் குடிக்கக் கத்துக் குடுத்தானாக்கும்! குடிக்காத புள்ளையக் கூட்டிட்டுப் போய் குடிக்க வச்சதே உன் மவன் தான்…” என்று சம்பந்தி சீதாலட்சுமியைப் போட்டு இடிக்க ஆரம்பித்தார். 

சேலையை இடுப்பில் சொருகிக் கட்டிச் சண்டைக்குப் பாயும் அன்னையைத் தடுத்த அன்னம், “அதைப்பத்தி தான் உனக்குத் தெரியும்ல. நான் வாழ்க்கை குடுக்கலன்னா இது பெத்த மவனுக்குக் கண்ணாலமே ஆயிருக்காது. கண்ணு தெரியாத கிழவி, என்னமோ பேசிட்டுப் போகுது.” தடுத்தார். 

நால்வரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நீலகண்டனும், சேதுராமனும் தள்ளாடிக் கொண்டு வந்தனர். போதுமென்ற அளவிற்கு மரியாதையும், வசதியும் இருந்தும் அதைக் காப்பாற்றிக் கொள்ளாது குடி எனும் அரக்கனின் பிடியில் சிக்கிக் கொண்டார்கள். போதையில் இல்லாதவரை தான் பெரிய மனிதர்கள். குடித்து விட்டால் ஒருவர் மாற்றி ஒருவர் தரம் தாழ்ந்து பேசிக் கொள்வார்கள். அவை அங்கிருக்கும் அனைவருக்கும் பழகிய ஒன்று என்பதால் தலையில் அடித்துக் கொண்டு விலகி விட்டனர்.

இதுதான் சமயம், என்று ஒரே ஓட்டமாக ஓடினான். மின்னல் வேகத்தில் மறைந்த தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற அவன் எண்ணத்தைத் தவிடு பொடியாக்கினார் சிசிடிவி கேமரா ரங்கம்மாள். லேசாகத் தெரியும் கண்ணை வைத்து இந்த அளவிற்கு உஷாராக இருப்பவர், 

“போறான் பாரு களவாணிப் பையன். இப்படிப் போய் போய்தான் என் பேத்திய மயக்கி வச்சிட்டான். இவளையாவது வெளியூர் பையனுக்குக் கட்டிக் குடுக்கலாம்னு நெனைச்சேன். இந்தச் சாக்கடையிலயே விழுந்து கெடக்கனும்னு அவ விதி!” எனப் புலம்பிக் கொண்டிருந்தார். 

அவள் சொன்னது போல், பின்னங்கழுத்தில் கை நுழைத்துக் காலரைத் தூக்கிவிட்டு நடந்து வந்தவன் சொன்ன இடத்தில் அவள் இல்லாது தேடினான். மாமரத்திற்குப் பின்னால் ஒளிந்திருந்தவள் லேசாக எட்டிப் பார்க்க, கள்ளத்தனமாகப் புன்னகைத்தான். கள்ளனுக்கு ஏற்ற கள்ளி அதைக் கண்டு கொண்டு, பதுங்கி வெட்கத்தில் கண் மூடினாள். 

செருப்பிற்கும், சருகிற்கும் வலிக்காமல் நடை போட்டவன் சத்தத்தை, அவள் மட்டும் அறிந்து அங்கிருந்து ஓடப் பார்த்தாள். அதற்குள் அவள் கையைப் பற்றி இழுத்தவன் கண்ணில், “பூங்கொடிக்குக் கண்ணாலம்.” எனச் சிவந்திருந்த மருதாணி விழுந்தது‌. 

அத்தை மகளின் திருமணத்திற்கு மருதாணி இடப் போவதாகக் கையைப் பிடித்தவன், பார்த்ததைத் தான் தீட்டி வைத்திருந்தான். மற்றவர்களுக்கு அவை வார்த்தையாக இருக்க, வாழ ஆசை கொண்டவள் கல்லூரிக் காலத்தில் காதலை வெளிப்படுத்திய வார்த்தை, என்பதை அவன் மனம் மட்டுமே அறியும். 

“ஓய்!”

முகம் காட்டிப் புருவம் உயர்த்தியவளைத் தன்பக்கம் இழுத்துத் தாவணி பாவாடையின் இடையில் கைகோர்த்தவன், “வரச் சொல்லிட்டு ஓடப் பார்க்குறவளை என்னா பண்ணறது?” அவள் இதழ் பார்த்துக் கேட்டான். 

“கோவமா இருக்கேன்!”

“என்னாத்துக்கு? உங்கொப்பன் தீச்சட்டி வாயனை நேத்து திட்டுனதுக்கா…” என்றதும் தான் தாமதம் வெட்டும் அருவாளாய் எட்டித் தள்ளி நின்றவள் மேல்மூச்சுக் கீழ் மூச்சு வாங்க முறைக்க, 

“ஆத்தாடி! எங்கூரு மாரியாத்தா!” துள்ளிக் குதித்து மாமரத்தில் ஏறி அமர்ந்தான் சிங்காரவேலன். 

நிலத்தை எட்டி உதைத்துப் பல ஆண்டு காலமாகக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த மாமரங்களைக் கதி கலங்க வைத்தவள், மாமன் மகனை முறைத்து விட்டு நடக்க, “இந்தாடி! என்னாத்துக்கு இப்ப வெட்டிக்கிட்டுப் போற…” கேட்டான். 

“எத்தனைத் தடவை சொல்றேன், எங்கப்பன் பேச்சுக்குப் போவாதீங்கன்னு. ரெண்டு நாள்ல கண்ணாலத்தை வச்சுக்கிட்டு இன்னும் எங்கப்பனப் பேசிக்கிட்டு இருக்கிறது சரியா? அவர் காதுல விழுந்தா பிரச்சினை ஆகாது?”

“என்னாடி பண்ணிடுவான் உங்கப்பன் மைசூர் சாண்டல் மண்டையன்?” 

போன வேகத்தில் திரும்பியவள் விரல் நீட்டி, “திரும்பத் திரும்பப் பேசாதீங்க.” எனக் கோப மூச்சுகளை இழுத்து விட்டாள். 

தொப்பென்று தாவிக் குதித்து அவள் தோள் மேல் வலது கையை நீட்டி வைத்துக் கொண்டு, “அது என்னமோ தெரியலடி! உங்கொப்பன் அந்த வடச்சட்டி வாயனைப் பார்த்தாலே வம்பு இழுக்கத் தோணுது.” என இரு கண்களையும் சிமிட்டி இன்னும் அவளை வெறுப்பேற்றினான். 

“விளையாடாதீங்க மாமா. நானே சொந்தம் எல்லாம் கூடப் போகுது. என்ன வம்பு நடக்கப் போகுதோன்னு பயந்துகிட்டுக் கெடக்கேன். அவருதான் பொறுப்பில்லாம இருக்காருன்னா, நீங்களும் அப்படியே இருக்கீங்க.”

“இப்ப என்னாத்துக்கு இப்படிப் பேசுற?” எனத் தன் புறம் இழுக்கப் பார்த்தான். என்ன கோபம் இருப்பினும் அவன் பக்கம் நெருங்கி சென்றவள், “அப்பாக்கும், உங்களுக்கும் ஆகவே மாட்டேங்குது.” முகத்தைச் சுருக்கிக் கூறினாள். 

பூங்கொடியின் முகத்தோடு முகம் வைத்து நெற்றி முட்டிய சிங்காரவேலன், “அதுக்கு எதுக்கு என் அத்த மவ மூஞ்சி இப்படித் தொங்குது? உங்கப்பன் இல்ல, எந்தக் கொம்பாதிக் கொம்பன் வந்தாலும் இந்தக் கண்ணாலத்தை நிறுத்த முடியாது. எத்தனைப் பேர் வந்தாலும், தூக்கிட்டுப் போய் தாலி கட்டுற தில்லு எனக்கு இருக்கு. பதட்டப்படாம கண்ணாலப் பொண்ணா சிரிச்சுக்கிட்டு இரு.” என்றவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை, அந்தக் கொம்பாதிக் கொம்பனே இவன்தான் என்று. 

“நேத்து ராத்திரி கூடக் குடிச்சிட்டு வந்து அம்புட்டுப் பேச்சு. என் ரெண்டு பொண்ணுங்களையும் உன் அண்ணன் வீட்டுக்குத் தள்ளிச் சொத்து மொத்தத்தையும் உன் அண்ணனுக்கே குடுக்கப் பாக்குறன்னு அம்மா கூட அம்புட்டு நேரம் மல்லுக் கட்டிக்கிட்டு இருந்தாரு.”

“இதுக்குத் தான்டி அந்தக் கொப்பரத் தலை மண்டையனப் பார்க்குறப்ப எல்லாம் முறைச்சிகிட்டுப் போறது. என்னாத்தச் சொத்தை எழுதி வாங்கிட்டாங்களாம்? எங்க அத்தையக் கண்ணாலம் பண்ற வரைக்கும் சும்மா இருந்துட்டு, இது வேணும் அது வேணும்னு நேரம் பார்த்து அவரை மாதிரியா நானும், எங்கண்ணனும் கேக்குறோம். இந்தாளு குடுக்கப் போற சொத்தை வச்சுத்தான் நாங்க ஓஹோன்னு வாழப் போறமாக்கும்.”

“இப்ப எதுக்கு மாமா கோபப்படுற?”

“கோவப்படாம! என் எதிர்ல பேசட்டும், பல்லப் பறக்க விடுறேன்.” 

சிங்காரவேலனின் பேச்சைக் கேட்டவள் அமைதியாகத் தலை குனிந்து கொண்டாள். தன் முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் செயலை ஏற்க இயலாது, தாடையில் கை வைத்துத் தன் முகம் பார்க்க வைத்தவன், “என்னா?” எனப் புருவம் உயர்த்தினான். 

“நான் ஆசைப்பட்டதுக்காகத் தான கட்டிக்கிற…” 

காற்றுக்குக் கூட நோகாது, இதழ் அசைத்து மன எண்ணத்தை வார்த்தைகளாய் வெளியிட்டவள், அவன் கூறப் போகும் பதிலைக் கேட்கத் துணிவில்லாது மீண்டும் தலைகுனிந்து கொள்ள, அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “ரெண்டு நாள்ல கண்ணாலத்தை வச்சுக்கிட்டு என்னாடி சந்தேகம் இது!” தாழ்வான குரலில் கேட்டான். 

“ஆமா, நானா கட்டிக்கிறியான்னு கேட்டதுக்கு அப்புறம் தான உன் பார்வை என் மேல விழுந்துச்சு. எங்கப்பன உனக்குச் சுத்தமாப் பிடிக்காது. அவர் பொண்ணு என்னை மட்டும் பிடிக்குமா? ஏதோ எங்கம்மா முகத்துக்காகவும், என் விருப்பத்துக்காகவும் போனா போகுதுன்னு கண்ணாலம் பண்ணிக்கிற.” 

“அப்புடியே உனக்கு உங்கப்பன் புத்திடி!” என்றதும் தலை உயர்த்திப் பார்வையால் சுட்டெரித்தாள் பூங்கொடி. 

கோபத்தையும், சோகத்தையும் மாற்றி மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கும் அத்தை மகளைக் கண்டு சத்தமிட்டுச் சிரித்தவன், “கால் வலிக்குது, செத்த ஒக்காந்து பேசலாமா?” சாவகாசமாக மாமரத்தின் அடியில் அமர்ந்து, பக்கத்தில் அமருமாறு கண்ணைக் காட்டினான். 

பூங்கொடியோ, அவன் விருப்பத்திற்குச் செவி சாய்க்காமல் அதே இடத்தில் நின்றிருக்க, “அட வாடி, கொஞ்ச வாடான்னு சொல்லிப்புட்டு அந்தத் தவளை வாயனப் பத்திப் பேசிகிட்டுக் கெடக்குறா.” கைப் பிடித்து இழுத்துப் பக்கத்தில் அமர்த்துவதற்குப் பதில் தன் மீது அமர்த்திக் கொண்டான். 

இடது கையை அவள் கழுத்தோடு சுற்றிக்கொண்டு தன் மீது சாய்த்தான். முகம் சுருக்கி வேண்டா வெறுப்பாக அமர்ந்தவள் கன்னத்தோடு, கன்னம் உரசித் தன் தாடி முடிகளைக் கலைத்து விட்டவன், “வந்த வேலையைப் பார்க்கலாமா?” கேட்டுக் கொண்டு இதழைக் காது மடலுக்குப் பின்புறம் வைத்து உரசினான். 

பூங்கொடியின் சுருங்கிய முகம் அதில் மலர்ந்து சிவக்கத் தொடங்கியது. அத்தை மகளின் சிணுங்கலில் உற்சாகம் கொண்டவன், இதழ்களை நாவால் ஈரமாக்கி மீண்டும் கன்னத்தில் கச்சேரி நடத்தத் துவங்கினான். பட்டும் படாமலும் அவன் கொடுக்கும் முத்தத்தின் தாக்கம், கையில் குடியிருந்த மருதாணியை விடச் சில்லென்ற உணர்வைக் கொடுத்தது. தாவணியை விலக்கி மேல் வயிற்றில் கை வைத்தவன், தடுக்கப் பார்க்கும் அவள் கைகளைப் பின்னுக்குத் தள்ளி வேலையைத் தொடர்ந்தான். 

“யாராவது வரப் போறாங்க!”

“அதுக்கு நான் என்னா பண்ணட்டும்?”

“மானம் போகாதா…”

“அவங்க மானம் தான!”

“எது?”

“சின்னஞ்சிறுசுங்க அப்புடி இப்புடித்தான் இருக்கும். பார்த்த கையோடப் போவாம, என்னா ஏதுன்னு விசாரிச்சா, நீங்க இதெல்லாம் பண்ணலையான்னு கேப்பேன். அவங்க மானம்தான் போவும்.” 

“நீ ஏன் மாமா இப்படி இருக்க… கொஞ்சம் கூட சீரியஸா இருக்க மாட்டியா?”

“சீரியஸா இருந்தா மட்டும், கேட்டதும் முத்தம் குடுத்துடுவியா?”

“ப்ச்!” என அவன் கைகளைத் தள்ளி விட்டவள் தாவணியைச் சரி செய்து, 

“நான் என்னா பேசுற, நீ என்னா பேசுற…” கோபம் கொப்பளிக்கக் கேட்டாள்.

“அட, யாருடி இவ! சிவனேன்னு இருந்தவனுக்கு போனப் போட்டுக் கூப்பிட்டுட்டு புசுக்கு புசுக்குன்னு மூச்சை இழுத்து விட்டுக்கிட்டு இருக்கா.” 

“சரியான லூசு!”

“தெஞ்சிடுச்சா?” என விலகியவளைத் தன்மீது சாய்த்துக் கொண்டு, “உம்மா வேணும்.” உதட்டைக் குவித்துக் கேட்டான். 

சிரிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை பூங்கொடியால். 

அவனுக்குப் பின் இரண்டு வருடம் கழித்துப் பிறந்தவள். பெண் கொடுத்துப் பெண்ணெடுக்கும் பழக்கம் கொண்ட குடும்பத்தில், எளிதாக இவர்கள் எண்ணம் நிறைவேறிவிட்டது. ஆனால், அதற்கு முதல் விதை பூங்கொடி. சேதுராமனுக்கும், சிங்காரவேலனுக்கும் எப்பொழுதும் ஆகாது. முறைத்துக் கொண்டே இருப்பான் மாமனாரை. நேரில் திட்ட முடியாததால் குடித்துவிட்டு மறைமுகமாகத் திட்டுவார் பூங்கொடியின் தந்தை. 

விட்டுக் கொடுத்துச் செல்லும் பெண்கள் இருப்பதால், இந்த இரு குடும்பத்தில் இதுவரை பெரிதாகச் சண்டை சச்சரவுகள் வந்ததில்லை. சுமூகமாகச் சென்று கொண்டிருந்த உறவில், மூத்த பெண்ணைக் கட்டிக் கொடுத்த சேதுராமனுக்கு சிங்கார வேலனுக்குப் பெண் கொடுக்க மட்டும் மனம் வரவில்லை. பிடிக்காது என்பதைத் தாண்டி மாமன், மருமகனுக்குள் அப்படி ஒரு ஏட்டிக்குப் போட்டி. 

அவர் மீது உள்ள கடுப்பில், இவள் பக்கம் திரும்பாமல் இருந்தான். அவை அனைத்தும் முறை மாமனாகப் பூங்கொடிக்குக் குச்சி கட்டும் முன்பு வரை மட்டுமே. அதுவரை, சேதுராமன் மகளாகத் தெரிந்தவள் உரிமையானவளாகத் தெரிந்தாள். மறைமுகமாகக் காதலிக்கத் துவங்கினான். அவன் காதலுக்கு வரமாய் அவளே விருப்பம் தெரிவிக்க, அடக்கி வைத்த உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டித் திருமணம் வரை வந்து விட்டான் சிங்காரவேலன். 

வேண்டும், வேண்டாம்… என்ற இரு வேறு மனநிலையில் உலா வரும் சேதுராமனை எப்படியோ சமாதானம் செய்து சம்மதம் வாங்கி விட்டார் நீலகண்டன். தலையாட்டிப் பொம்மையாய் சொந்த பந்தங்களுக்கு முன் நின்றவர், குடித்துவிட்டு ஒளித்து வைத்த வெறுப்பை எல்லாம் வீட்டில் கொட்டிக் கொண்டிருக்கிறார். 

காதலியின் வெட்கத்திற்கு நடுவில், பெரிய அதரங்களுக்கு இடையில் அவள் அதரங்களை நுழைத்துக் கவி பாடினான். வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டவனுக்கு அதை முடித்து வைக்க விருப்பமில்லை. தனக்கு வாகாகச் சாய்ந்து கொண்டிருக்கும் தன்னவளைத் தன்புறம் சாய்த்துத் தாவணியை விலக்கிக் கொழுத்த சதைகளைக் களவாண்டான். தோள் மேல் கைபோட்டுக் காதல் செய்த பூங்கொடியின் செவியில், 

“இந்தாடி சிறுக்கி மவளே…” என்ற ரங்கம்மாவின் குரல் விழ, அடித்துப் பிடித்து எழப் பார்த்தாள். 

அதற்கு இடம் தராத சிங்காரவேலன், அத்தை மகளின் தோள் மீது கை போட்டுத் தன் பக்கம் வைத்துக் கொண்டான்.

“விடுங்க மாமா…”

“இரு, அதுவே வரும்.” என்றான். 

அவன் சொன்னது போல் தள்ளாடி நடந்து வந்த ரங்கம்மாள், “என்னாடி இது களவாணித்தனம்? ரெண்டு நாள் வரைக்கும் கூடக் காத்திருக்க முடியாதா? அவன்தான் திருட்டுப் பூனையாட்டம் ஓடி வரான்னா, நீயும் ஒக்காந்து கொஞ்சிகிட்டுக் கெடக்க… எவனாது பார்த்தா, என் மவன் மருவாதி என்னாத்துக்கு ஆகுறது?” என வாய் கிழியக் கத்திக் கொண்டிருந்தார். 

அவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், “உன் மவனுக்கு மருவாதிலாம் இருக்கா… சொல்லவே இல்ல கெழட்டுக் கெழவி.” என்றவனை அடக்கிக் கொண்டிருந்தாள் பூங்கொடி. 

அதையெல்லாம் கருத்தில் கொள்ளாது, “நான் ஓடி வரும்போது பார்த்தல்ல. அங்கயே புடிச்சு வச்சு ஏன்டா என் பேத்தியப் பார்க்க போறன்னு கேட்க வேண்டியதுதான… நல்லாக் கொஞ்சிகிட்டு வரட்டும்னு காவல் காத்துப்புட்டு, இப்ப வந்து குதிக்கிற.” வக்கனை காட்டினான்.

“சும்மா இரு மாமா!”

“என் பொண்டாட்டிய, எம்முன்னாடி இன்னொரு தடவை இப்படி மிரட்டிகிட்டுக் கெடக்காத…”

“ஆத்தாடி ஆத்தா, பொண்டாட்டியாமே பொண்டாட்டி!” என அவர் கைநீட்டி இடுப்பை ஆட்டி வம்புக்கு இழுக்க, காதலியின் உடல் நோகாது விலக்கி வைத்து எழுந்து நின்றவன் அவரைப் போல் கையையும் இடுப்பையும் ஆட்டி, “ஆமா கிழவி, பொண்டாட்டியே தான்!” என்றிட, அவருக்கே சிரிப்பு வந்தது.

“போடா அங்கிட்டு…”

“பின்ன உன் மடியில ஒக்காந்தா கொஞ்சப் போறேன்.”

“ஆத்தா மாதிரியே வாய் ரொம்ப நீளம்டா உனக்கு.” 

“சொல்லிட்டாங்க, வாய் கொறச்சல் உள்ள மகாராணி. பத்து வெத்தலைய ஒரே நேரத்துல மென்னு கொதப்பித் துப்புற அளவுக்கு வாய வச்சிக்கிட்டு…” 

“என் மவன்கிட்டச் சொன்னா கால ஒடச்சுப்புடுவான்.”

“இந்த வயசுக்கு மேல உன் கால ஒடச்சி உன் மவன் என்னா பண்ணப் போறாரு. என் புள்ளைக்குத் தண்ணி ஊத்தவாது நீ வேணும். அதுவரைக்கும், காலை பத்திரமாப் பார்த்துக்க கெழவி.” 

கீழே இருந்த குச்சியை எடுத்து விரட்டி, “ரெண்டு நாளுக்கு அவ பக்கம் தலைய வைக்கக்கூடாது.” அடித்தார். 

மாமனைப் பெற்ற தாயிடமிருந்து அனைத்து அடிகளையும் வாங்கிக் கொண்டவன், “ரொம்ப ஆடாத, தண்டட்டி விழுந்திடப் போகுது.” என அதை ஆட்டிவிட்டு ஓடினான். 

மாமன் செய்யும் குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்தவள் மீது குச்சியைத் தூக்கி அடித்த ரங்கம்மாள், “என்னாடி அவசரம்? உங்கப்பன் பார்த்தா இதுக்கு ஒரு பஞ்சாயத்தைக் கூட்டுவான். கண்ணாலம் நடக்கற வரைக்கும் கொஞ்சம் கட்டுப்பாடா இரு.” என விரட்டிக் கொண்டிருக்கும் பொழுதே அவள் கன்னத்தில், “உம்மா…” எனச் சத்த முத்தம் பதித்தான் சிங்காரவேலன். 

அந்த வயதானவர் வாய் பிளந்து உறைந்து நிற்க, என்ன நடந்தது என்று புரிந்து கொள்ளச் சில நொடிகள் தேவைப்பட்டது பூங்கொடிக்கு. கொடுத்தவனோ சாவகாசமாக, “மீதிய நாளைக்கு வந்து தரேன்.” என்று விட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
24
+1
2
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment