Loading

அத்தியாயம் 6

 

வாசுவுடன் கேலியாகப் பேசிக் கொண்டே அத்வைத் நடந்தாலும், அவன் மனமும் மூளையும் மாடசாமி சொன்னதைதான் அசைபோட்டுக் கொண்டிருந்தது.

 

திடீரென்று, “வாசு, இந்த மாந்திரீகம் தாந்த்ரீகம் பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று அத்வைத் வினவ, “என்கிட்ட எதுக்கு கேட்குறீங்க சார்?” என்ற வாசு, “ஆமா, நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்றான்.

 

“நான் கண்ணால பார்க்கிற வரை எதையும் நம்ப மாட்டேன்.” என்றான் அத்வைத்.

 

“அதுசரி, உங்க வேலைக்கும் உங்க நிலைப்பாட்டுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லையே.” என்று வாசு கூற, “அதனாலதான், என்னால உண்மையை கண்டுபிடிக்க முடியுது வாசு.” என்ற அத்வைத், “பார்ப்போம், இந்த ஊர் என்னை நம்ப வைக்குதா, இல்ல என்னோட ஸ்டான்ட்லயே நிக்க வைக்குதான்னு.” என்றான்.

 

அப்போது யாரோ அவனை நோக்குவது போலிருக்க, சுற்றிலும் பார்வையை சுழற்றியவன், அவளைக் கண்டு கொண்டான்.

 

“அட, நம்ம ஸ்டார்லைட்! மறைஞ்சு நின்னு சைட்டடிக்கிற அளவுக்கு வந்துட்டாளா?” என்று அத்வைத் கொஞ்சமே கொஞ்சம் மகிழ, ‘க்கும், எங்க நீங்க பார்த்துட்டா, பேசிட்டே பின்னாடி வந்துடுவீங்களோன்னு பயந்து போய் பார்த்துட்டு இருக்கு அந்தப் பொண்ணு. அது உங்களுக்கு லவ் லுக் மாதிரி தெரியுதா?” என்று அவன் காதருகே கிசுகிசுத்தான் வாசு.

 

“உன் ஒன் சைட் லவ் புட்டுகிச்சுன்னு காண்டுல பேசாத மேன்.” என்ற அத்வைத், “சரி சரி, எனக்கு வேலை வந்துடுச்சு. நீ போ.” என்றான்.

 

“ஹ்ம்ம், எல்லாம் என் நேரம்!” என்று சலித்தபடி சென்று விட்டான் வாசு.

 

அத்வைத் தன்னைக் கண்டு கொண்டான் என்பதை அறிந்து கொண்ட இராவோ, அங்கிருந்து செல்ல முயன்றாள்.

 

அவளின் எண்ணமோ, அதுவரை இருந்த ஏமாற்ற உணர்வைத் தாண்டி வேறெதையோ பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

 

“ஹலோ மிஸ். ஸ்டார்லைட், என்ன இந்த ஓட்டம்? ரன்னிங் ரேஸ் எதுலயும் பார்டிசிப்பேட் பண்ணப் போறீயா என்ன?” என்றபடி அவளை எட்டிப் பிடித்து விட்டான் அத்வைத்.

 

அவளோ எதுவும் பதில் பேசாமல் நகர, “நான் பார்க்காம இருந்தாதான், என்னைப் பார்ப்பியா? அப்போ, நான் பேசாம இருந்தா என்னோட பேசுவியா?” என்று அவனிஷ்டத்திற்கு பேச, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவளோ, “ப்ச், இப்போ என்னதான் வேணும் உங்களுக்கு? ஏன் என்னையே சுத்தி சுத்தி வரீங்க? உங்களுக்கு டைம் பாஸ் ஆகணும்னா, எத்தனையோ வழி இருக்கு. ஆனா, நான் அதுக்கு ஒரு ஆப்ஷன் இல்ல.” என்று கடுமையுடன் மொழிந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 

“நில்லுங்க மேடம். என்கிட்ட ஒரு கேள்வியைக் கேட்டுட்டு, அதுக்கு நீங்களா ஒரு பதிலை சொல்லிட்டுப் போனா, அது எப்படி நியாயமாகும்?” என்றபடி அவளை வழி மறித்தான் அத்வைத்.

 

அவனின் குரலும் முகமும் வழமையான விளையாட்டுத்தனத்தைக் கைவிட்டு இறுக்கத்துடன் காணப்பட்டது.

 

அதைக் கண்ட இராவிற்கும் உள்ளுக்குள் தவிப்பாகிப் போனது.

 

அவளது மனமோ, ‘இதுல இருந்துதான தப்பிக்கணும்னு ஓடிட்டே இருந்த? இப்போ, அந்த தருணம் வந்துடுச்சு… என்ன பண்ணப் போற?’ என்று எகத்தாளமாகக் கேட்டது.

 

இருப்பினும், முகத்திலிருந்த கடுமையை சற்றும் தளர்த்தவில்லை இரா.

 

“ஹ்ம்ம், என்ன சொன்ன… டைம் பாஸுக்கா? டைம் பாஸுக்காக உன் பின்னாடி சுத்துறேனா? ஒருவேளை, நான் ஜாலியா பேசுறதால, என் செயலும் எண்ணமும் உனக்கு சீரியஸா படலையோ? சரி, நீயே சொல்லு… நான் என்ன செஞ்சா, நீ சீரியஸா எடுத்துப்ப?” என்று கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டான் அத்வைத்.

 

அவனின் குரலிலிருந்த தீவிரமும், முகத்திலிருந்த இறுக்கமும், இத்தனை நாள்களாக கண்டவனிலிருந்து வேறுபடுத்திக் காட்ட, உள்ளுக்குள் லேசாக அச்சம் பரவியது இராவிற்கு.

 

அது, அவனின் இந்த புதிய அவதாரத்தைக் கண்டதால் அல்ல. எங்கு, அவளின் உள்மனச்சலனம் பட்டவர்த்தனமாக தெரிந்துவிடப் போகிறதோ என்றதால் உண்டான பயம்!

 

அதில், லேசாகக் குரல் நடுங்க, “பிளீஸ், என்னை விட்டுடுங்க. ஏற்கனவே, ஊருக்குள்ள எனக்கு நல்லப்பெயர் இல்ல. அதுலயிருந்து மீண்டு வரலன்னாலும், இப்போதான் கொஞ்சமா கடந்து வந்துட்டு இருக்கேன். திரும்ப இன்னொரு பிரச்சனையில மாட்டிக்க எனக்கு விருப்பம் இல்ல.” என்றாள் இரா.

 

அவனுக்கும் அவளின் இந்த முகம் புதியது என்பதால், அவளையே பார்வையால் அளவிட்டான்.

 

பின்னர், ஒரு பெருமூச்சுடன், “உனக்கு என்ன பிரச்சனை? அட்லீஸ்ட், அதையாச்சும் என்கிட்ட சொல்லலாம்ல.” என்றவனின் குரல் சற்று தழைந்து ஒலிக்க, ஒரு விரக்தி சிரிப்பு அவளிடம்.

 

“ப்ச், இதோ இந்த சிரிப்புதான் என்னைப் பாடா படுத்துது. உன்னோட கஷ்டத்தை எல்லாம் போக்கணும்னு என் மனசு துடிக்குது இரா. இதெல்லாம் உனக்கு சினிமா டையலாக்கா தெரியலாம். ஆனா, இதை மனசார சொல்றேன்… ப்ச், உனக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு கூட எனக்கு தெரியல.” என்றவன், அவனின் தவிப்பை மறைக்க, வேறுபக்கம் பார்த்து நின்றான்.

 

அத்தனை நேரம், அவனின் விழிகளை நோக்காமல், நிலம் நோக்கி இமை தாழ்ந்திருந்தவள், தடுமாறும் ஆடவனை இமைக்காமல் பார்த்திருந்தாள்.

 

அதில்தான், எத்தனை ஏக்கம்?

 

‘எல்லாரையும் மாதிரி, நீயும் ஏன் என்னைக் கடந்து போகல?’

 

‘என்னைப் பெத்தவங்களே, என்னோட கஷ்டத்தை பங்குப் போட்டுக்க தயாரா இல்லாதப்போ, நீ எதுக்கு என் கஷ்டம் என்னென்னே தெரியாதப்போ, அதைப் போக்கணும்னு துடிக்கிற?’

 

‘இது எல்லாத்துக்கும் மேல, எல்லாரும் என்னை இருட்டா பார்க்கிறப்போ, நீ மட்டும் ஏன் என்னை வெளிச்சமா பார்க்கிற?’

 

எங்கு இவற்றை எல்லாம் வெளியில் கேட்டால், அந்த ஒற்றை வார்த்தையை பதிலாக சொல்லி விடுவானோ என்ற பயத்தில், மனதிற்குள் மட்டுமே கேட்டு, வெளியே மௌனத்தை போர்வையாக்கி, அவளின் கேள்விகளை மறைத்துக் கொண்டாள்.

 

அவளால் அவனிடமிருந்து அக்கேள்விகளை மட்டுமே மறைக்க முடிந்தது. அவளின் விழி மொழிகளை, அதில் தென்பட்ட உணர்வுகளை கண்டு கொண்டான் மாயவன்.

 

“இதோ… இந்தக் கண்ணுல தெரியுதே… அது பொய்யா?” என்றவன், ஒரு விரக்தி சிரிப்புடன், “அதை நீ பொய்னுதான் சொல்லுவ.” என்றதும், இம்முறை வேறுபக்கம் திரும்பிக் கொள்வது அவளின் முறையாகிற்று.

 

“பிடிக்காதவங்களை பின்தொடர்ந்து ஃபோர்ஸ் பண்றது என்னோட பழக்கம் இல்ல.” என்று சற்று இடைவெளி விட்டவன், “அதுக்காக பிடிச்சவங்க கிட்டயிருந்து, சரியான காரணம் இல்லாம தள்ளி நிக்கிறதும் என்னோட பழக்கம் இல்ல.” என்றான்.

 

உடனே இரா அவனைப் புருவம் சுருக்கிப் பார்க்க, “உன் கண்ணு ரொம்ப பவர்ஃபுல். அதுக்கு பொய் சொல்லவும் தெரியாது.” என்றவனை முறைத்துவிட்டு இரா அவளின் பாதையில் பயணித்தாள்.

 

“இப்போ உன்னை விடுறேன். அதுக்காக, அப்படியே விட்டுடுவேன்னு இல்ல. இந்த ஊரை விட்டு நான் போறதுக்குள்ள, உன் பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு, அதை சால்வ் பண்ணிட்டுத்தான் போவேன்.” என்று கத்திய அத்வைத், “அப்படியே, இன்னைக்கு உன்னோட கண்கள் சொன்னதை, வாயாலயும் சொல்ல வைப்பேன்.” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

 

அவன் கத்தியது கேட்டாலும் நடையை நிறுத்தவில்லை இரா.

 

ஆனால், ‘கடவுளே, உன்கிட்ட கடைசியா இதைக் கேட்குறேன். தயவுசெஞ்சு, இந்தப் பைத்தியக்காரனை என்னை விட்டு தள்ளிப் போகச் செஞ்சுடு.’ என்று வேண்டிக் கொண்டாள்.

 

இதையும் கடவுள் கேட்கப் போவதில்லை என்பது அவளின் மனதிற்கே தெரிந்ததோ என்னவோ, அத்தனை வலுவானதாக அவளின் வேண்டுதல் இல்லை!

 

****

 

அவனது அறைக்கு வந்த அத்வைத், மாடசாமி கூறியவற்றையும், முதல் நாள் இரவு, காட்டுப்பகுதியில் அவன் எடுத்துப் புகைப்படங்களையும் தொகுத்து சாரதிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.

 

பின்னர், தானே சாரதிக்கு அழைத்தவன், “அங்கிள், நான் அனுப்பினதை பார்த்தீங்களா?” என்று நேரடியாக விஷயத்தைக் கேட்க, “அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன் அதி. இது ரொம்ப பெருசா இருக்கும் போலயே. நான், எதுக்கும் உனக்கு துணையா ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன்.” என்றார் சாரதி.

 

“இல்ல அங்கிள். முதல்ல, இங்க என்ன நடக்குதுன்னு முழுசா தெரிஞ்சுக்குறேன். புது ஆளுங்க நடமாட்டம் நிறைய இருந்தா, இதை செய்றவங்க உஷாராகக் கூட வாய்ப்பிருக்கு.” என்று யோசனையுடன் கூறினான் அத்வைத்.

 

“நீ இப்போ என்ன யோசிக்கிற அதி?” என்று அவனை நன்கறிந்தவராக சாரதி வினவ, “இந்த ஊரோட ஹிஸ்டரியை முதல்ல தெரிஞ்சுக்கணும் அங்கிள். அப்போதான், இது எப்போ இருந்து ஆரம்பிச்சதுன்னு தெரிஞ்சுக்க முடியும்.” என்றவன், 

 

“ஆனா, இதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. ஒரு பக்கம், நகரத்தோட வளர்ச்சி, மறுபக்கம் கிராமத்தோட மூடநம்பிக்கைகள்னு, ரெண்டையும் பேலன்ஸ் பண்ற ஒரு ஊரை நான் இதுவரை கேள்விப்பட்டதில்ல. ஹ்ம்ம், இந்த ஊரோட வரலாறு இன்னும் என்னவெல்லாம் ஆச்சரியத்தை எனக்கு தரப்போகுதோ?” என்றான்.

 

“என்னவா இருந்தாலும், எனக்கு இன்ஃபார்ம் பண்ணிடனும் அதி.” என்று சாரதி கூற, “அங்கிள் ரிலாக்ஸ். நீங்க ஏன் இவ்ளோ நெர்வஸா இருக்கீங்க? இதுக்கு முன்னாடியும் நான் எத்தனையோ ஃபீல்டு ஒர்க் பண்ணியிருக்கேன். அப்போ எல்லாம், நீங்க இப்படி இருந்ததில்லையே.” என்று வினவினான் அத்வைத்.

 

என்னவென்று சொல்வார்?

 

அவனுக்கு நேரம் சரியில்லை என்று அவனின் ஜாதகத்தை பார்த்தவர் கூறினார் என்றா கூற முடியும்? 

 

அப்படியே சொன்னாலும், அதை நம்புபவனா அத்வைத்?

 

அதையே சாக்காக வைத்து, சாரதியின் அழுத்தத்தை ஏற்றி விட்டு வேடிக்கை பார்ப்பவனாகிற்றே!

 

அதனாலேயே அதை மறைத்த சாரதி, “என்னமோ மனசுக்கு நெருடலா இருக்கு அதி. பீ கேர்ஃபுல்!” என்றதுடன் அழைப்பைத் துண்டித்து விட்டார்.

 

தன் மடிக்கணியைப் பார்த்துக் கொண்டிருந்த அத்வைத், “இந்த ஊரோட ஹிஸ்டரியை எப்படி தெரிஞ்சுக்குறது?” என்று வாய்விட்டே கூற, “அட என்ன சார், அதுக்குள்ள இங்க வந்துட்டீங்க? நீங்க வேலை இருக்குன்னு போன வேகத்துக்கு, இன்னைக்கு நைட்டுதான் இந்தப் பக்கம் வருவீங்கன்னு நினைச்சேன்.” என்று நமுட்டுச் சிரிப்புடன் வந்தான் வாசு.

 

“உனக்கு இந்த ரெஸ்ட்ராண்ட்ல வேலையே இருக்காதா? எப்போ பாரு, என் பாடிகார்ட் மாதிரி என் பின்னாடியே சுத்திட்டு இருக்க?” என்றான் அத்வைத்.

 

“ஹ்ம்ம், நீங்க சொல்லலன்னாலும்  அதுதான என் வேலையே!” என்ற வாசு, “உங்க முகத்தை வச்சு பார்க்கும் போதே ஏதோ உதவி தேவைப்படுற மாதிரி இருந்துச்சேன்னு, அஞ்சு நிமிஷம் பிரேக் எடுத்துட்டு வந்துருக்கேன். சரி, சொல்லுங்க இந்த முறை என்ன உதவி வேணும்?” என்றான்.

 

“எனக்கும் உன்னை விட்டா வேற வழியில்ல. எனக்கு இந்த ஊரோட ஹிஸ்டரியை தெரிஞ்சுக்கணும்.” என்று அத்வைத் கூற, “ஏன்? சந்திரமுகி படம் எதுவும் பார்த்தீங்களா என்ன?” என்று கேலியாக வினவினான் வாசு.

 

“ப்ச், சீரியஸா கேட்குறேன்.” என்று அத்வைத் கூற, அவன் குரலிலிருந்த தீவிரத்தைக் கண்டு கொண்ட, “இன்னைக்கு பார்த்தீங்களே, அவரு எதுவும் சொல்லலையா?” என்றான் வாசு.

 

“க்கும், நல்லாதான் சொல்லிட்டு இருந்தாரு. திடீர்னு என்ன நினைச்சாருன்னு தெரியல, பாதில நிறுத்திட்டு, என்னை ஊருக்கு கிளம்ப சொல்லிட்டாரு.” என்று ஆயாசத்துடன் கூறினான் அத்வைத்.

 

“எனக்குத் தெரிஞ்சு… அவரைத் தவிர, ஊர்ல யாரும் உங்க கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டாங்க. நீங்க ஏன் உங்க லவர் கிட்ட கேட்கக்கூடாது?” என்றான் வாசு.

 

“சும்மாவே என்கிட்ட பேச மாட்டா. இதுல, இன்னைக்கு கொஞ்சம் ஓவரா, சவால் விடுற மாதிரி வேற பேசிட்டு வந்துருக்கேன். இப்போ போய் ஊரைப் பத்திச் சொல்லுன்னு நின்னா, அடிச்சு துரத்தினாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல.” என்றான் அத்வைத்.

 

“அடியெல்லாம் பார்த்தா, வேலை நடக்குமா பாஸ்? இப்போதைக்கு, அவங்களை விட்டா, உங்களுக்கு வேற ஆளே இல்ல.” என்று வாசு கூற, “நீ ஏன் உன்னோட ஒன் சைட் லவர் கிட்ட கேட்கக்கூடாது?” என்றான் அத்வைத்.

 

“நானே என் ஒன் சைட் லவ், டபுள் சைடாகமலேயே, எக்ஸ் லவ்வா முடிஞ்சுடுச்சேன்னு ஃபீலிங்ல இருக்கேன். எரியுற நெருப்புல எண்ணெயை ஊத்துற மாதிரி இருக்கு உங்க பேச்சு.” என்றான் வாசு.

 

இருவரும் மாறி மாறி, ‘உன் லவர் கிட்ட கேளு’ என்று சண்டை போட்டுக் கொள்ள, அதை வித்தியாசமாகப் பார்த்தனர், அங்கிருந்த இருவர்.

 

அதில், இருவருமே அங்கிருந்து வெளியே வந்து விட்டனர்.

 

“இப்போ என்ன, அவ என்னை செருப்பால அடிச்சு துறத்துறதை நீ பார்க்கணும், அப்படித்தான?” என்று கேட்டபடி, வாசுவுடன் சென்றான் அத்வைத்.

 

வாசு அத்வைத்தை இழுத்துக் கொண்டு சென்றான் என்று கூறினால் சரியாக இருக்கும்!

 

“அட என்ன சார் நீங்க? உங்க பவர் உங்களுக்கே தெரிய மாட்டிங்குது. உங்க வாய் இருக்கே… அதுதான் உங்க பிளஸ்ஸே. அதை வச்சு சாதிக்க முடியாத விஷயம் ஏதாவது இருக்கா என்ன?” என்று வாசு கூற, “நீ சொல்றது கொஞ்சம் சரிதான். ஆனா, நான் என்ன பேசியும் மடங்காத ஒரே ஆளு, என் ஆளுதான்!” என்று உதட்டைப் பிதுக்கினான் அத்வைத்.

 

“சார், உங்க ஆளோட குடும்பம்தான், தலைமுறை தலைமுறையா இதே ஊர்ல வாழுற பெரிய குடும்பம். இந்த ஊரைப் பத்தி அவங்களுக்கு தெரியாம இருக்காது. இவ்ளோ பெரிய இன்ஃப்ளூயன்ஷியலான ஆளை தெரிஞ்சு வச்சுக்கிட்டு, ஊர்ல போறவன் வர்றவன் வாயெல்லாம் பார்த்துட்டு இருக்கீங்க. உங்களை என்ன செய்ய? உடனே போறீங்க… உங்க ஆளைப் பிடிச்சு இன்ஃபர்மேஷனை வாங்குறீங்க.” என்றான் வாசு.

 

“இதெல்லாம் சரி… ஆனா, இவ்ளோ விஷயத்தை நீ எப்படி சேகரிச்ச? இதுக்கு எதுக்கு நானு? நீயே எல்லாத்தையும் சேகரிக்கலாமே?” என்று அத்வைத் வினவ, “மனுஷங்க கிட்ட தகவலை சேகரிச்சுடுவேன். ஆனா, பேய், பூதம், ஆவி, பிசாசு கிட்ட எல்லாம் என்னால தகவல் சேகரிக்க முடியாதுப்பா.” என்று தோளைக் குலுக்கினான் வாசு.

 

“என்னைப் பார்த்தா என்ன பேயோட்டி மாதிரி தெரியுதா?” என்று வாசுவை அத்வைத் அடிக்கச் செல்ல, “அந்த வேலையைதான பார்த்துட்டு இருந்தீங்க, கொஞ்சம் டிஃப்ரண்ட்டா!” என்று அவனின் அடியிலிருந்து தப்பித்த வாசு, “அதோ பெரிய காம்பவுண்ட் கேட் தெரியுதே… அதுதான் உங்க ஆளோட வீடு.” என்றான்.

 

“எப்படிடா? அவ வீடு எனக்கே தெரியாது.” என்று அத்வைத் ஆச்சரியத்துடன் வினவ, “தொழில் ரகசியம் பாஸ்.” என்ற வாசு, “நான் மட்டும் இப்போ வேலைக்குப் போகலன்னா, என்னைத் தூக்கிடுவாங்க. நீங்க பொறுமையா, உங்க லவர் என்னென்ன குடுக்குறாங்களோ, எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க.” என்று சிரிப்புடன் கூறிவிட்டு சென்று விட்டான்.

 

“எனக்கு மேல வாயாடனா இருக்கான்.” என்று சலித்துக் கொண்ட அத்வைத், அவனவளின் வீட்டை நோக்கிச் சென்றான்.

 

அங்கு அவனுக்கு என்னென்ன புதிய அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ?

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
14
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. சுவாரஸ்யமாக போகுது