அத்தியாயம் 1
மண்டபத்தில் இருந்து வீடு திரும்பி இருந்தனர் குடும்பத்துடன் பெண்ணும் மாப்பிள்ளையும்.
“லீலா! தேவாவை அந்த முதல் ரூம்ல போய் கொஞ்ச நேரம் இருக்க சொல்லு! தூங்கி எழுந்தாலும் சரி தான்” என்று ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்ததும் கண்ணகி சொல்வது காதில் கேட்க, வேகமாய் மேலிருக்கும் தன் அறைக்கு சென்றுவிட்டான் கார்த்திகைசெல்வன்.
“அவன் போகட்டும். இப்ப என்ன பேசினாலும் கத்துவான். நீ போய் அவளை பாரு!” என்று கண்ணகி சொல்லவும் லீலா மனதே இன்றி தான் அங்கிருந்து நகர்ந்தார்.
எப்படி சிறப்பாய் நடந்திருக்க வேண்டும் என எதிர்பார்த்து ஒவ்வொன்றும் செய்திருக்க, நடந்து முடிந்திருந்த செயல் அனைவரையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
கண்ணகியும் சுந்தரியும் மட்டும் தான் அனைவரையும் தேற்றி அடுத்தடுத்த கட்டத்திற்கு என அனைவரையும் நகர்த்திக் கொண்டும் இருந்தார்.
“அக்கா! பந்தல்காரன் கல்யாண வீட்டுல கரைச்சல்ன்னு யாரோ சொன்னதை கேட்டு இப்பவே காசை குடுன்னு வந்துட்டான். நானும் குடுத்துட்டேன். மாமாகிட்ட சொல்லிடு!” என்று லீலா கணவன் பசுபதி வந்து கண்ணகியிடம் சொல்ல,
“அவன் மூஞ்சில தூக்கி வீசி இருக்கனும். கையில குடுத்தியா நீ? அடுத்து கல்யாணம் காது குத்துன்னு அவனுக்கு நம்ம குடும்பத்துல ஒருத்தன் அவனை தேடி போக கூடாது. நாளைக்கே அவனை போய் நாலு கேள்வி கேட்கேனா இல்லையா பாரு!” என்று கண்ணகி பேச ஆரம்பித்துவிட்டார்.
“க்கா! பேசாம இருக்க மாட்டியா நீ! காசை குடுத்தாச்சு. அதை சொல்ல கூப்பிட்டேன். அவ்வளவு தான். சும்மா எதாவது சொல்லிட்டே இருக்காத. மாப்பிள்ளையை எங்க?” என்றார் கண்ணகி கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு.
“அவன் ரூமுக்கு போய்ட்டான். அங்கேயே இருக்கட்டும். சாயந்திரம் மறுவீடு போகணும்ல. அப்ப கூப்பிட்டா போதும்!” என சொல்ல, தலையசைத்து கேட்டுக் கொண்டார் பசுபதி.
கண்ணகியின் இரண்டாவது தம்பி பசுபதி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாய் பசுபதி தன் ஒரே மகள் தேவதர்ஷினிக்கு மாப்பிள்ளை தேடி அலைந்து தான் சென்னையில் வேலை பார்க்கும் வரனுக்கு பேசி முடித்து இன்று காலை மண்டபம் வரும் வரை எல்லாம் நல்லபடியாய் தான் சென்றது.
அடுத்து நடந்தது தான் யாரும் எதிர்பாராதது. பசுபதி மனைவி லீலா உயிரற்று போனது மண்டபத்தில் நிகழ்ந்த கலவரத்தில்.
கண்ணகி மட்டும் இல்லை என்றால்? நினைத்தே பார்க்க முடியவில்லை அவருக்கு.
தேவதர்ஷினி இருப்பத்து ஏழு வயது பெண். பட்டபடிப்பு படித்து சொந்த ஊரில் ஆசிரியையாய் பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகளாகி இருந்தது.
தேவதர்ஷினி என்றால் அத்தனை பிடித்தம் குடும்பத்தினருக்கு. அவள் பொறுமையும் குணமும் என சிறப்பான பெண். ஆனாலும் அவள் நேரமாய் மூன்று வருடங்களாய் எத்தனை வரன் பார்த்தும் அவளுக்கு தகையவே இல்லை.
எல்லாம் கூடி வந்து மூன்று மாதங்களுக்கு முன்பு தான் சென்னையில் ஐடியில் இருப்பவனை தேவதர்ஷினிக்கு பரிசம் முடித்து இன்று திருமணத்திற்கு என நாள் குறித்து வைத்திருக்க, நடந்ததோ கனவில் கூட நினைக்காதது தான்.
“அண்ணி!” என குரல் கொடுத்தபடி கண்ணகியின் வீட்டிற்குள் வந்தார் சுந்தரி.
கண்ணகியின் இரு சகோதரர்கள் கணேசன், பசுபதி என. கணேசனின் மனைவி தான் சுந்தரி.
லீலா, சுந்தரி, கண்ணகி என மூவருக்குள்ளும் நல்ல ஒரு புரிந்துணர்வும் நட்புணர்வும் எப்பொழுதுமே உண்டு.
கண்ணகி, சுந்தரி இருவரும் கொஞ்சம் தடாலடியாய் பேசுபவர்கள் தான். ஆனால் மனதில் எதுவும் இருக்காது. பேச்சுக்கள் அத்தனை சத்தமாய் வரும். லீலா இவர்களுக்கு அப்படியே எதிர். அவர் இருக்கும் இடம் அத்தனை அமைதியாய் இருக்கும். அன்பிற்கும் பஞ்சம் இருக்காது.
லீலாவைக் கொண்டே அவர் மகள் தேவதர்ஷினியும். “அமைதிக்கு பேர் போனவளே! இங்க வா டி!” என்று கண்ணகி அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு தேவதர்ஷினியை.
சுந்தரி வரவும் லீலாவும் வெளியே வர, “இன்னும் என்னவாம்? எதுக்கு முகமெல்லாம் சிவந்து போய் இருக்கு? இதுக்கு மேல நல்ல மாப்பிள்ளையா நீ தேடிருவியா?” என சுந்தரி லீலாவிடம் கேட்க,
“என்னக்கா நீங்களே இப்படி பேசுறங்க?” என்றார் லீலா.
இருவரும் அண்ணன் தம்பியை மணந்து ஒரே காம்பவுண்ட் சுவற்றுக்குள் தனித்தனி வீட்டில் இருந்தாலும் ஒரு குடும்பமாய் தான் இருக்கின்றனர்.
“வேற என்ன சொல்லுவா? பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு இப்படி அழுத மூஞ்சா இருந்தா வேற என்ன தோணும்?” என்று கண்ணகியும் கேட்டார்.
“உங்க வீட்டுக்கு மருமகளா வர அவளுக்கு தான் குடுத்து வச்சிருக்கணும் அண்ணி! ஆனா கார்த்தி?” என்று லீலா சொல்லும் பொழுதே அத்தனை பயம்.
வேண்டவே வேண்டாம் என திருமணத்திற்கு சம்மதம் சொல்லவே இல்லையே கார்த்திகைசெல்வன்.
கிட்டத்தட்ட மிரட்டி என்று கூட சொல்லலாம் திருமணம் நடந்த விதத்தை.
“என்ன கார்த்தி? அதான் தாலி கட்டிட்டான் தான? வேற என்ன வேணும்? போதா குறைக்கு நானும் என் வீட்டுக்காரரும் இருக்கோம் பாத்துக்க மாட்டோமா எங்க மருமகளை?” என்று கேட்க, பதில் சொல்ல முடியவில்லை லீலாவிற்கு.
ஆனாலும் பெண்ணை பெற்றவராய் மனம் இன்னும் தெளிவடையவில்லை லீலாவிற்கு.
“ம்மா ப்ளீஸ்! இது என் வாழ்க்கை பிரச்சனை!” கார்த்திகைசெல்வன் கண்ணகியிடம் கூறும் பொழுது லீலாவும் அதை கேட்டிருந்தாரே!.
அத்தனையும் மீறி திருமணமும் முடிந்து மற்றவர்களுக்கு எல்லாம் நடந்து முடிந்ததில் சந்தோசம் தான்.
ஆனாலும் இதை வாழ்க்கையாய் வாழ்ந்து காட்ட வேண்டிய பெண்ணும் ஆணும் என அவர்களுக்குள் ஏற்று கொள்ள வேண்டுமே இந்த பந்தத்தை.
அதை தான் அதிகமாய் யோசித்துக் கொண்டே இருந்தார் லீலா. இது எதையுமே மகளிடம் கூறிடவில்லை.
தேவதர்ஷினி நடப்பதை ஏற்று கொள்ள பழகி இருந்தவளுக்கு மண்டபத்தில் முதலில் அதிர்ச்சி தான் என்றாலும் பெரியவர்கள் பேச்சை அவள் தட்டவே இல்லை.
அதனாலேயே மகளிடம் எதையும் கூறி அவள் கலங்கிட பார்க்கவும் தோன்றவில்லை லீலாவிற்கு.
கண்ணகி பரமேஸ்வரனின் மூத்த மகன் கார்த்திகைசெல்வன். பெங்களூரில் இரண்டு வருடங்களாக வேலையில் இருக்கிறான். இரண்டாவது மகன் நிரஞ்சன். இதே ஊரில் கல்லூரி முதுகலை இரண்டாம் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கிறான்.
நேற்று காலை தான் தாய்மாமன் மகள் திருமணத்திற்காக சொந்த ஊரான காஞ்சிபுரம் வந்து சேர்ந்திருந்தான் கார்த்திகைசெல்வன்.
இன்று இப்படி ஒரு நாளாய் தனக்கு அமையும் என அவனுமே எதிர்பார்க்கவில்லை.
“என்ன லீலா! இவ்வளவு சொல்லுதோம் அசையாம நிக்குற? இன்னும் என்னவோ மனசை உறுத்துது உனக்கு. என்னனு தான் வெளிப்படையா சொல்லேன்!” சுந்தரி கேட்க, கண்ணகியும் கேள்வியாய் பார்த்தார் லீலாவை.
“அப்படிலாம் எதுவும் இல்லக்கா. என்னவோ மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு. கார்த்தி நாம பார்க்க வளந்த பையன். கண்ணகி அண்ணியை எனக்கும் நல்லா தெரியும். கல்யாணம் நடந்தது எனக்கு எவ்வளவு சந்தோசமோ அதே அளவுக்கு இந்த கல்யாணம் நடந்த விதம் பயமாவும் பிடிக்காததாவும் இருக்கு” என்றார் உண்மையை மறையாமல் லீலா.
“புரியுது! நாம யார் தான் இதை எதிர்பார்த்தோம். இல்ல எதிர்பார்க்குற மாதிரி தான் எதாவது நடக்குதா? இது தான் நடக்கணும்ன்னு விதி இருக்கும் போது யார் என்ன பண்ண முடியும்?” என்றார் கண்ணகியும்.
“சும்மா எதாவது யோசிச்சு உடம்பை கெடுத்துக்காத. நீயே இப்படி இருந்தா உன் பொண்ணு என்ன பண்ணுவா? அவளுக்கு தைரியமா நீ தான இருக்கணும்? கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகிடும்” என சுந்தரியும் சொல்ல, பசுபதி வெளியில் காபியை குடித்து முடித்து உள்ளே வந்தார்.
“தேவா எங்க?” என மனைவி லீலாவிடம் அவர் கேட்க,
“அந்த ரூம்ல இருக்கா” என்றார் லீலாவும்.
பசுபதியும் தன் அக்கா மகன் தனக்கு மாப்பிள்ளையாய் வருவான் என எதிர்பார்க்கவே இல்லை.
எப்போதுமே கார்த்திகைசெல்வனை மாப்பிள்ளை என அழைத்து தான் வழக்கம் சிறு வயது முதலே!
தேவதர்ஷினிக்கு மாப்பிள்ளை தேடும் போது கூட கார்த்திக்கு கேட்டு பார்ப்போமா என கண்ணகி தன் கணவனிடம் கேட்டிருந்தார்.
மகனை தெரிந்த பரமேஸ்வரன் தான் அப்பொழுது வேண்டாம் என கூறி மறுத்திருந்தது. “ஒண்ணா வளந்த பசங்க. அது சரி வராது கண்ணகி!” என்று கூறி பரமேஸ்வரன் உண்மையை சொல்லவில்லை.
‘சொல்லி இருந்திருக்கலாமோ!’ என இப்பொழுது வரை பரமேஸ்வரன் தான் நிலை கொள்ளாமல் மகனை எண்ணி தலையில் கைவைத்திருப்பதும்.
“சரிக்கா! சாயந்திரம் மறுவீடு வரனும்ல. நான் போய் அங்க தயார் பண்ணுரேன்!” என்ற பசுபதி மனைவியைப் பார்க்க,
“நான் தேவாகிட்ட சொல்லிட்டு வர்றேன்!” என எழுந்து உள்ளே சென்றார் அவர்.
“நீங்க வரலையா அண்ணி?” பசுபதி சுந்தரியிடம் கேட்க,
“உங்க அண்ணே மண்டபத்துல இருந்து இன்னும் வர்ல. வந்ததும் அவரோட வாரேன். நீங்க போய்ட்டு இருங்க!” என்று சுந்தரி கூற, அன்னையுடன் வெளியில் வந்தாள் தேவதர்ஷினி.
“பார்த்துக்கோ தேவா” என்று சொல்லி லீலா நகர,
“இப்படி வந்து உக்காரு தேவா! இல்ல தூங்க போறியா?” என்றார் சுந்தரி.
“இல்ல பெரிம்மா! சும்மா தான்!” என்ற தேவதர்ஷினி அவரருகே வந்து அமர,
“ஜடையை எடுத்துருவோமா தேவா? தலை வேற கொஞ்சம் ஈரமா இருக்கே!” என சுந்தரி அவளிடம் கேட்க,
“தளத்தி போட்டு மொத்தமா கட்டி விடு. இங்க நாம தானே இருக்கோம்?” என்றார் கண்ணகியும்.
மண்டபதிற்கு வந்திருந்தவர்கள் எல்லாம் திருமணம் முடிந்ததும் கிளம்பி சென்றிருக்க, சில நெருங்கிய உறவுகள் மட்டும் கார்த்திகைசெல்வன் திடீர் மாப்பிள்ளை ஆனதில் வீட்டிற்கு வந்து செல்ல நினைத்திருந்தனர்.
இப்போதைக்கு வேண்டாம் என கூறிவிட்டார் கண்ணகி. ஏற்கனவே மண்டபத்தில் வைத்தே அவ்வளவு பேச்சுக்கள். இப்பொழுது மகனிடமும் மருமகளிடமும் என எதாவது பேசி வைத்து தான் அதற்கு பதில் பேசி சண்டை வேண்டாம் என்று மறுத்த கண்ணகி,
“வீட்டுக்கு இப்ப வேற யாரும் வர வேண்டாம்ங்க. வரவேற்பு மாதிரி ஒரு நாள் வச்சு நம்ம சொந்தக்காரங்களை கூப்பிடலாம்!” பரமேஸ்வரனிடம் சொல்லிவிட்டு அவரை மண்டபத்தில் இருக்க வைத்து விட்டு தான் வீட்டிற்கு வந்திருந்தார்.
கண்ணகிக்கு தன் தம்பி மகள் மருமகளாய் வந்ததில் முழு மகிழ்ச்சி தான் ஒரு தாயாய். ஆனால் மகன் மனதை தான் தெரிந்து வைத்திருக்கவில்லை.
அப்படி அறிந்திருந்தால் நிச்சயம் இன்று காலை “வேதா எங்க வீட்டுப் பொண்ணு. என் பையன் இருக்கான் தாலி கட்ட!” என வார்த்தையை அத்தனை பேர் முன் விட்டிருக்க மாட்டார்.
வேதா சுந்தரியிடம் தலையை கொடுத்துவிட்டு சிந்தனையில் இருக்க, தன் அறையில் கார்த்திகைசெல்வன் தலையில் கைவைத்து மனம் நொந்து அமர்ந்திருந்தான் நிகழ்ந்ததை ஏற்க முடியா வண்ணம்.
தொடரும்..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
24
+1
+1