நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் -11
“ஓ எவ்வளவு தருவ?”
என்று கேட்டவனின் குரல் பேதத்தில், விழித்தவளுக்கு அடுத்த வார்த்தை பேச நா எழவில்லை.
அவனோ, “கேக்குறேன்ல்ல சொல்லு மதுரா எவ்வளவு தருவ?” என்று இன்னும் அழுத்தமாய் கேட்க,
அவனின் குரல் அன்றைய இரவு நிசப்தத்தில் பயங்கரமாய் ஒலிக்க,
“ஹான்..அ..அது அது… ஒரு த்ரீ ..டூ ஃபோர் லேக்ஸ்…”என்றவள் அவளின் பார்வையை உணர்ந்து, “என் கார்ட்ல அவ்வளவு தான் இருக்கு பிளாக்” என்றாள் மெதுவாய்.
அதைக் கேட்டவனோ, அவளின் கண்களை ஊடுருவி பார்த்துக் கொண்டே,
“சோ உன் உயிருக்கு அவ்ளோ தான் விலையா?” என்று கேட்டிருந்தான்.
திக்கென்ற மனதுடன் அவனைப் பார்த்த மதுராவிற்கோ குழம்பம்.
‘ஏற்கனவே தான் எடுத்த முடிவு சரியா? தவறா?’ என்ற ஊசலாடும் மனநிலை தான். ஆனாலும் விருப்பமில்லாத திருமணப் பந்தத்தில் இணைந்து காலம் முழுவதும் கைதிப் போல் அயல்நாட்டில் தஞ்சம் அடைய அவளுக்கு சுத்தமாய் விருப்பமில்லை.
அதனாலேயே நடப்பது நடக்கட்டும்… தன்னால் தானே இங்கிருப்பவர்களுக்கு இத்தனை பிரச்சனைகள்? தன்னை பாதுகாக்க தானே இத்தனை அவசரமாக திருமணம்?
தான் இங்கு இல்லையென்றால், கண்காணாத இடத்திற்கு சென்று விட்டால் அந்த அயோக்கியன் என்ன செய்து விட முடியும்? என்றே இந்த முடிவை எடுத்திருந்தாள்.
இப்பொழுது கருப்பசாமியின் கேள்வியில் எடுத்திருந்த முடிவும் குழப்பி அடிக்க,
“பிளாக்… இப்ப நான் என் உயிருக்கு விலை பேசல … அதுக்காக என் உயிர் மேல எனக்கு பயம் இல்லாமலும் இல்ல..
எனக்கு இந்த மேரேஜும் பிடிக்கல என்ன வச்சு என் குடும்பத்துக்கு ப்ராப்ளம் வர்றதும் பிடிக்கல… அதான் ஏதோ ஒரு தைரியத்துல யாருக்கும் பிரச்சன இல்லாம கண் காணாத இடத்துக்கு போய்டலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றவளிடம்,
“இத நீ முன்னாடியே யோசிச்சு இருக்கணும்? உங்க அப்பா மேரேஜ் பத்தி பேசும் போது அமைதியா தான இருந்த? வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே? அப்போ எங்க போச்சு இந்த தைரியம்?” என்று கேள்வி கேட்டவனிடம் பதில் சொல்ல முடியாமல் வருத்தத்துடன் அவனை ஏறிட்டாள் மதுரவாணி. அவள் மனதோ.. ‘அத சொல்ல தான் தைரியம் இல்லையே!’ என்று இடித்தது.
பதில் பேசாமல் மௌனம் சாதித்தவளை முறைத்தவன்,
” இது என்ன சினிமாவா? இல்ல நீ தான் ஹீரோயினா? நீ நெனச்ச உடனே தப்பிச்சு கல்யாணம் வேண்டாம்னு ஓடி போயிட முடியுமா உன்னால? அன்னைக்கு அவ்வளவு பாதுகாப்பு இருக்கும்போதே அவ்வளவு பெரிய அட்டாக் நடந்துச்சு… இப்ப வெளிய போனா உன்னோட நிலைமை என்ன ஆகறது?”என்று அடுக்கடுக்காய் கேள்வியை கேட்டிருந்தான். அவன் சொன்னதை கேட்ட மதுராவின் முகம் யோசனையை காட்டியது.
யோசித்துப் பார்த்தால் கருப்பசாமி சொல்வதும் நியாயம் தானே? இவ்வளவு நாள் திருமணம் வேண்டாம் என்று சொல்வதற்கு தைரியம் இல்லாமல் வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு காலை திருமணத்தை வைத்துக்கொண்டு இப்பொழுது நான் ஓடிப் போகப் போகிறேன் எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் சுத்த சினிமா தனமாக இருக்க, நிஜத்தில் சாத்தியம் இல்லையே!
எதுவுமே செய்ய இயலாத கையறு நிலை புரிய,
பெருமூச்சுடன், “இட்ஸ் ஓகே பிளாக்.. என்ன நடக்கணுமோ நடக்கட்டும்.. இனி நான் இப்படி யோசிக்க மாட்டேன் ப்ராமிஸ்.. அண்ட் ஐ அம் சாரி உங்கள இந்த நேரத்துல டிஸ்டர்ப் பண்ணதுக்கு..” என்றாள் சீரியஸாக.
அத்தனை எளிதாக நடப்பது நடக்கட்டும் என்றவளின் முகத்தையே பார்த்தவன்,
“அப்போ அந்த பத்ரிய மேரேஜ் பண்ணிக்க உனக்கு ஓகே. அப்டிதான?”என்று ஒற்றைப்புருவத்தை தூக்கி அவன் கேட்ட தினுசில், கண்களை சுருக்கி
உதட்டைப் பிதுக்கியவள்,
“வேற வழி .. நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கணும்னு விதி இருந்தா அத யாரால மாத்த முடியும் பிளாக்?.. அது மாதிரி நெனச்சு புண்பட்ட மனச புன்சிரிப்பால தேத்திக்க வேண்டியது தான்…” என்று சிரித்தவள், கொஞ்சமாய் அவன் பக்கம் சரிந்து மெல்லமாய்
“இதுல ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா பிளாக்.. இதுல நான் தான் நாகூர் பிரியாணியாக்கும்..” என்று கண்ணை சிமிட்டி சிரிக்க,
முகத்தில் இருந்த கடுமை குறைய அவள் சிரிப்பில் லயித்தவன்,
“ம்ம் சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா?” என்று சீரியஸான குரலில் கேட்டு வைக்க,
“ஏத?” என்று விழித்தவளிடம்,
தான் கேட்டதற்கான பதிலை எதிர்பார்க்காதவனாய்
“அவ்வளவு தானே? பேச வேண்டியத எல்லாம் பேசி முடிச்சாச்சுல்ல?” என்று அடுத்த கேள்விக்கு தாவ,
“ம்ம்ம் முடிச்சாச்சு தான்..” என்று அவள் சொன்ன நொடி,
“அப்ப ஓகே” என்றவன் எவ்வழி வந்தானோ அவ்வழியே தாவி குதித்து மரத்தின் கிளைகளோடு சரிந்து மறைந்திருந்தான்.
அவனின் வேகத்தில்,
“ஷப்பாஆஆ… என்னா வேகம் இந்த ப்ளாக்குக்கு.. சும்மாவா பேரு வச்சேன் காத்து கருப்புன்னு” என்று கேலியாய் சொன்னவளின் இதழில் அழகாய் சிரிப்பு ஒன்று உதிர்ந்தது.
ஆனால் அதுவும் மறுநாள் நடக்கப் போகும் தன் திருமணத்தை நினைத்ததும் மறைந்து விட,
“ப்ச்ச் சரி விடு மது எது நடந்தாலும் பாத்துக்கலாம்… நம்ம பாக்காததா? சமாளிப்போம் மது” என்று தனது வலது கையால் இடப்பக்க தோள்பட்டையை தட்டிக்கொண்டு வீரமாய் சொன்னவள்…
மறுநாள் அதே மணமேடையில் தனக்கு திருமணமே வேண்டாம் என்று கத்தி கதற போவதை பாவம் அறியவில்லை அவள்!
இங்கோ பத்ரி நிலையில்லாமல் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தான் அவனுக்காக ஒதுக்கப்பட்ட அறையில்…
இன்று மாலை வரை மதுரா தான் தன் மனைவி என்று நினைத்துக் கும்மாளமாய் சுற்றிக் கொண்டிருந்தவனை மொத்தமாய் உலுக்கி விட்டது. அவனுக்கு வந்த மிரட்டல் அழைப்பு.
கண்டிப்பாக அது கொலை மிரட்டல் தான்… மிரட்டியவனின் குரலில் அத்தனை கடுமை!
கூடவே அதற்கு சாட்சியாய் அவனுடன் பணிபுரியும் முன்னால் காதலியை கடத்தி அவளை அடித்து துன்புறுத்தும் வீடியோவை அனுப்பி வைத்திருந்தான் மிரட்டியவன்.
அவளைப் பற்றிய கவலையை விட கை நழுவிச் செல்லப் போகும் மதுராவும் அவள் அழகும் ..அவள் மூலமாக வரப்போகும் பணமும் வெளிநாட்டு வாழ்க்கையும் தான்… அவனுக்கு பெரும்கவலையாய்..
திருமண ஏற்பாடு தொடங்கியதுமே தனக்கு லாட்டரி அடித்ததாக நண்பர்களிடம் கூட சொல்லி அத்தனை சந்தோஷப்பட்டானே! எல்லாம் கனவாய் போய்விடப் போகிறதே?
இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் மதுராவையாவது முன்கூட்டியே தனக்கு சொந்தமாக்கி இருப்பானே!
ம்ம்கூம் … வாய்ப்பில்லை வாய்ப்பில்லை ..அதற்கும் தடையாய் அவளுக்கு நிழலாய் தடி மாடு போல் வளர்ந்து கெட்டவன் ஒருவன் சுற்றிக் கொண்டிருக்கிறானே!
ப்ப்ச் கைக்கு எட்டியது வாய்க்கு கிட்டவில்லை என்று சலித்தவனுக்கு மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
பயத்தோடு பதற்றமும் வந்து தொற்றிக்கொள்ள
ஒரு நொடி தயக்கத்திற்கு பின் அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவனுக்கு, நாளை என்ன செய்ய வேண்டும்? என்று கட்டளை விதித்தது அக்குரல்.
பத்ரிநாத் எதிர்பக்கம் கேட்ட குரலுக்கே பயந்தே போனான்…
உயிரையே நடுங்க வைக்கும் குரலாக இருந்தது. தன் மாமனாரிடம் சொல்லலாம் என்றாலும் உயிரையே பறிக்க துடிக்கும் அக்குரலின் எச்சரிக்கையால் யாரிடமுமே சொல்லத் துணிவு வரவில்லை அவனுக்கு.
மொத்தமாய் கலங்கி போய் அக்குரல் சொன்ன அனைத்திற்கும் பொம்மையாய் தலையாட்டி வைத்தான்.
மறுநாளும் விடிந்தது…
சுப முகூர்த்தம் தொடங்குவதற்கு முன்பே, திருமணம் நடக்கப் போகும் அஷ்டலட்சுமி திருக்கோவில் மண்டபத்திற்கும் வந்து சேர்ந்து விட்டனர்.
அவசரமான திருமணம் தான் ஆனாலும் முறைப்படி எல்லாம் நடக்க வேண்டுமே! விடியலிலேயே திருமணத்தை முடித்துவிட்டு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு கிளம்பி விட வேண்டும் என்று அவசரத்தில் வந்திருந்தனர்.
முன்னால் அமைச்சர் என்பதால் உரிய அனுமதியும் பாதுகாப்பும் உடனே கிடைத்ததோடு திருமணத்திற்கான அத்தனை ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. தங்களுக்கு மிகவும் முக்கியமான உறவுகளையும் நெருக்கமான பிரமுகர்களையும் மட்டுமே அழைத்திருந்தனர்.
ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் தந்தையின் ஆணைக்கிணங்க ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து கொண்டிருக்க,
வினோதா மதுராவின் அருகில் அவளின் அலங்கார வேலைகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு பல ஆண்டுகளாக அவள் மீது மண்டிக் கிடந்த வெறுப்பு இன்னும் சற்று நேரத்தில் திருமணம் முடிந்து வேறொரு தேசத்திற்கு செல்ல போகும் அவளை நினைத்து சற்றுக் குறைந்ததோ என்னவோ சாதாரணமாகவே அவளிடம் பேசிக்கொண்டாள். அலங்காரத்தை பற்றி மட்டுமே!
மதுரவாணியும் தன்னிடம் பேசும் ஒருவரிடம் முகத்தை திருப்பிக் கொள்ளும் ரகமெல்லாம் இல்லை என்பதால் அவளும் வினோதாவிடம் பேச தான் செய்தாள்.
கவனித்துப் பார்த்தால் மதுராவின் முகத்தில் கல்யாணம் பெண்ணிற்கான வெட்கமோ நாணமோ எதிர்பார்ப்போ எதுவுமே இல்லை ஏதோ செய்கிறார்கள் செய்யுங்கள் என்பது போல் கிளம்பியிருக்க, சம்பிரதாயங்களை முடித்து முகூர்த்த புடவை வாங்க
மணமேடைக்கு அழைக்கப்பட்டாள்.
ஏற்கனவே பத்ரிநாத் மணமேடையில் அமர்ந்து மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முகம் முழுவதும் பதற்றம் தான்..
வேர்த்து விறுவிறுத்து போய் அமர்ந்திருந்தான்.
ஆனால் அந்த நிலையிலும் மதுராவின் அழகையே ஏக்கத்துடன் பார்க்க, எல்லாம் கை நழுவி போகுதே என்ற துக்கம் அவனுக்கு…
பெரியவர்களை வணங்கி சில சம்பிரதாயங்கள் நடக்க, அனைத்தையும் முடித்துவிட்டு முகூர்த்த புடவை கொடுக்கப்பட, அதை வாங்கியவள் விழிகளால் ‘வேர் இஸ் கருப்பு?’ என்று சுற்றும் முற்றும் அவனையே தேட, அவனைத் தான் காணவில்லை.
அவன் இன்று விடியலில் இருந்தே அவள் கண்களில் அகப்படவில்லை என்பதே உண்மை.
மணப்பெண்ணாய் இருந்து கொண்டு ‘அவன் எங்கே போய் விட்டான்?’ என்று யாரிடமும் கேட்கவும் தேடவும் முடியாத நிலை. கிடைத்த சிறு இடைவெளியில் அவன் கொடுத்த எண்ணிற்கும் அழைத்துப் பார்த்து விட்டாள். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக வந்ததே தவிர ஒரு தகவலும் இல்லை.
ஏனோ அவனைக் காணாமல் முகம் எல்லாம் வாடி போய்விட்டது பெண்ணவளுக்கு. பார்ப்பதற்கு கரடு முரடாய் இருந்தாலும் அவன் தன்னிடம் காட்டிய பரிவும் அன்பும் தன் நன்மைக்கான கண்டிப்பும் வரண்டு போன பாழ்நிலத்தில் துளித்துளியாய் விழுந்த மழை நீர் போல் அவள் மனதில் இதமாய் நனைத்திருக்க, அதனாலேயே உருவான நட்பு மனப்பான்மையால் தானோ என்னவோ தன் மனதை மறைக்காமல் அவளால் வெளிப்படையாக எல்லாவற்றையும் அவனுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது. உண்மையை சொல்ல போனால் அவனின் நேற்றைய பேச்சுக்கு மதிப்பு கொடுத்தே அவள் இப்பொழுது இங்கு தைரியமாய் மணமேடை ஏறி இருக்கிறாள் என்று கூட சொல்லலாம்.
ஆனால் அவனைக் காணாமல் அவளிடம் இருந்த தைரியம் படிப்படியாக குறைந்து இருக்க, அவளின் நெஞ்சம் அவன் உன்னுடன் காலம் முழுதும் வர போவதில்லை தேடாதே! நீ அவனின் கடமை மட்டுமே! என்ற உண்மையை உரக்க உரைக்க, அதன் கணத்தை தாங்க முடியாமல், ‘அப்போ பிளாக் என் கூட வர மாட்டானா இனி? பயமா இருக்கே’ என்ற நினைவே மதுராவின் கண்களை நனைக்க, மணமகள் அறைக்குள் அழைத்து வரப்பட்டாள் அவள்.
கீழேயோ கதையே மாறிப்போனது. மதுராவின் கலங்கிப்போன கண்களை பார்த்தவர்கள் அவளுக்கு அவளின் தந்தை கட்டாய திருமணம் செய்வதாக புரளி பேச ஆரம்பிக்க, கொஞ்ச நேரத்தில் அது மற்றவர்களிடமும் பரவி உறவினர்களும் முக்கிய விருந்தாளிகளும் அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
பின்னே அத்தனை வருடம் பதவியிலிருந்து மக்கள் பணத்தை சுருட்டி வசதியாய் இருப்பவர், மகளின் திருமணத்தை இவ்வளவு எளிமையாக நடத்தினால் சந்தேகம் தானே வரும்?
வேறொருவனை காதலிக்கும் மதுராவிற்கு கட்டாய கல்யாணம் பண்ணுவதாக ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லி விஷயம் மண்டபம் முழுவதும் பரவ
அது உறவினர்களுக்குள் சலசலப்பு.
இவ்விடயம் மாப்பிள்ளை வீட்டினரின் உறவினர்கள் பக்கம் கேட்டு விசாரித்து… இறுதியாய் பத்ரிநாத் அம்மாவிடம் போய் நின்றது.
பத்ரிநாத்தின் அம்மா சகுந்தலா முத்துமாணிக்கத்திற்கு ஒன்றுவிட்ட தங்கை முறை.. அதற்காக ரொம்பவும் வசதி எல்லாம் இல்லை… அப்பர் மிடில் கிளாஸ் தான் என்றாலும் வருமானம் தேவைக்கு அதிகமாகவே வந்தது.
அவரின் கணவர் முத்துராமன் ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற மூத்த பணியாளர்… பத்ரிநாத் நல்லபடியாக ஐ டி துறையில் டீம் லீடராக இருக்க மாதமானால் ஒரு லட்சத்திற்கும் மேலே சம்பளம் தாராளமாய் வந்தது.
அவர்களின் சொந்தக்காரர்களே அதற்கு வயிரெறிய மகன்மீது அவருக்கு கர்வம் அதிகமானது.. தங்களது உறவினர்களில் அவனது உயரத்திற்கும் அவனின் வேலைக்கும் ஏற்ற பெண் வேண்டுமென்று அவர் பெண் தேட முத்து மாணிக்கத்தின் சம்பந்தம் வீடு தேடி வந்ததும் அவருக்கு பெருமைதான்.. கூடவே வந்த வரதட்சணையும் அவருக்கு மித மிஞ்சிய மகிழ்ச்சியையே கொடுத்தது. ஆனால் இப்பொழுது பெண் காதலிப்பதாக என்று சொன்னதும் கட்டாயத்தால் தான் கல்யாணம் நடக்கப் போகிறது என்பது எல்லாம் அவர் காதில் விழ, ஒருவேளை அப்படி இருக்குமோ? நெருப்பில்லாமல் புகையாதே என்று தான் யோசிக்க தோன்றியது அவருக்கு.
பின்னே அத்தனை வசதி படைத்தவர்கள் தானாய் வந்து பெண்ணை கொடுத்தால் கண்டிப்பாக அங்கு ஏதோ சிக்கல் இருக்கிறது என்று தானே அர்த்தம்? அதுவும் இருவரையும் இன்று திருமணம் முடிந்த உடனே டெல்லிக்கு அனுப்புவதாக வேறு சொன்னார்களே? அதன் பிறகு வெளிநாட்டிற்கு அனுப்பவும் திட்டம் என்பதெல்லாம் நினைவில் வர, அவர் அரைகுறையாய் முடிவே பண்ணிவிட்டார் இதுதான் உண்மை என்று.
ஏன் இந்த திருமணத்தில் இத்தனை அவசரம்? என்று கேட்டதற்கு கூட ஜாதகம் அது இது என்று சாக்கு சொன்னார்களே!
அவரின் மூளை ஒன்னும் ஒன்னும் மூணு என்று கணக்கு போட… ஒரு முடிவோடு மணமேடையில் அமர்ந்திருந்த மகன் அருகில் வந்தவர்,
ஐயர் கூறிய மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தவனிடம்,
“பத்ரி இந்த கல்யாணமே வேண்டாம் எந்திரிச்சு வாடா”என்று அழைக்க, பத்ரியோ, “ஏன்மா? என்று பதற, மண்டபத்திற்குள் சலசலப்பு அதிகமானது.
விஷயம் கேள்விப்பட்டு முத்துமாணிக்கம் சகுந்தலாவிடம் ஏதோ பேச வர,
“அதிகாரத்திலையும் காசு பணத்துலையும் வேணா குறைஞ்சவங்களா இருக்கலாம்.. மான மரியாதைல நாங்க உங்கள விட ஒசத்தி தான்… உம்மவ என் புள்ளைக்கு வேண்டாம்.. நீ வேற இடம் பாத்துக்கோ” என்று விட,
ஜெகதீஷ் பிரகதீஷ் இருவரும் தந்தையின் அருகே வந்து விட்டனர்.
“அதென்ன மணமேடை வரைக்கும் வந்துட்டு எப்படி மனசுல ஈரமே இல்லாம இப்டி பேசுற? அப்படி என்ன இல்லாத மரியாதைய எங்க கிட்ட கண்டுட்ட”என்று பதிலுக்கு முத்து மாணிக்கம் எகிற,
“பின்ன உன் பொண்ணோட மானம் போகாம இருக்கிறதுக்கு நானும் என் பிள்ளையும் தான் கெடச்சோமா? எவனையோ லவ் பண்ணி ஏமாந்துட்டு வந்தவள போய் என் பிள்ளைக்கு கட்டி வைக்க பாக்குற?”
‘இது என்ன புது கதையா இருக்கு?’என்பது போல் பார்த்தவர், கோபம் தான் என்றாலும் காரியமாக வேண்டுமே என்று பொறுமையாய் “என் பொண்ணு மேல அநியாயமா பழி போடறியே சகுந்தலா? எதா இருந்தாலும் பொறுமையா விசாரிச்சு முடிவு பண்ணலாம்… எல்லாரும் முன்னாடியும் வச்சு இத பத்தி பேச வேணாம்.... தனியா பேசிக்கலாம் ...இப்ப நல்ல நேரம் போகுறதுக்குள்ள கல்யாணத்தை பண்ணி முடிச்சிடுவோமே?” என்று சமாதானமாய் பேச,
“என்ன உன் அரசியல் சாணக்கியதெல்லாம் இங்க கொண்டுவரியா? நீயே உன் பொண்டாட்டி செத்த வீட்டிலேயே இன்னொருத்திக்கு தாலி கட்டினவன் தானே… உன்னோட லட்சணம் உன் பொண்ணுகிட்டேயும் இருக்கும்..” என்று முகத்தில் அடித்தது போல் பேசிவிட, அத்தனை பேர் முன்னிலையில் அவமானமாய் போய்விட்டது முத்து மாணிக்கத்திற்கு. கூடவே ஆத்திரமும் கோபமும் இலவச இணைப்பாய் வந்துவிட,
” பத்ரி உன் அம்மாவ அமைதியா இருக்க சொல்லு.. என் பொறுமைக்கும் எல்லை உண்டு” என்று முத்துமாணிக்கமும் குரலை உயர்த்தி இருக்க, சகுந்தலாவும் அதற்கு,”அவன்கிட்ட என்ன பேச்சு என்கிட்ட பேசு?” என்று பதில் அளிக்க,
அதன் பிறகு என்ன?
இரண்டு வீட்டு பெரியவர்களுக்கும் இடையே சண்டைதான். சகுந்தலாவின் கணவரோ முத்துமாணிக்கத்தின் அரசியல் செல்வாக்கை நினைத்து பயந்தவராய் வரம்பில்லாமல் பேசும் மனைவியை தடுக்க முயற்சி செய்ய, சகுந்தலா மட்டும் அடங்கிய பாடில்லை.
ஜெகதீஷ் பிரகதீஷ் இருவருக்கும் சகுந்தலாவின் பேச்சு முகத்தை தான் சுழிக்க வைத்தது.
பத்ரியோ ஏற்கனவே ஒருவன் இவளை திருமணம் முடித்து என்னிடம் வந்து ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறான் இதில் இந்த சண்டை வேறா? என்று யோசித்தவனுக்கு தாயை எதிர்த்துப் பேச வாய் வரவில்லை.
அதற்குள் முகூர்த்த சேலையை மாற்றி விட்டு வந்துவிட்ட மதுராவிற்கும் அங்கு நடந்த சண்டையை பார்த்து வியப்புதான்.
‘பார்டா… நம்ம ஆக்ஷன் எடுக்காமலேயே கல்யாணம் நிக்க போகுதா? காட் யூ ஆர் கிரேட்’என்று கடவுளுக்கு மனதிற்குள்ளே ஃபிளையிங் கிஸ் ஒன்றை பரிசாய் கொடுத்தவள்,
‘சீக்கிரம் அடிச்சு காட்டுங்கடா யாரு பெருசுன்னு’ என்று மனதிற்குள் டயலாக் பேசியவாறு நடப்பதை உற்சாகமாக வேடிக்கை பார்க்கலானாள்.
“இந்த சீம சிறுக்கி ஒன்னும் என் வீட்டு மருமகளா வர வேண்டாம்... இந்த கல்யாணமும் நடக்க வேண்டாம்” என்று விடாமல் கத்திக் கொண்டிருந்தார் சகுந்தலா.
முத்து மாணிக்கம் மகளின் திருமணத்திற்காக கொஞ்சம் பணிந்து போனால் சகுந்தலா அவருக்கு மேல் ஏறிக்கொண்டு வர, ஒரு கட்டத்தில் முத்துமாணிக்கமே கடுப்பாகி பதிலுக்கு கத்த ஆரம்பித்திருந்தார்.
பத்ரிக்கு வேறு பயம் ..மதுராவை அவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் அவனுக்கு அல்லவா பிரச்சனை!
“ம்மா மதுரா பாவம் அதனால நா..” என்று பத்ரிநாத் ஆரம்பிக்க,
“நீ சும்மா இருடா.. உனக்கு உலகம் தெரியாது.. நானும் பூ வச்சுட்டு போன நாளிலிருந்து பார்த்துட்டு தான் இருக்கேன் அவன் மூஞ்சில சந்தோஷமே இல்லடா.. நானும் சரியாயிடுவான்னு பார்த்தேன் இப்பதானே தெரியுது அவ ஏன் சந்தோஷமா இல்லன்னு… எங்க போய் ஏமாந்துட்டு வந்தாளோ.. இந்த கருமத்த எதுக்கு நம்ம காலம் பூரா சுமக்கணும்? உனக்கு என்ன தலையெழுத்தா? “என்று மகனின் பேச்சுக்கு தடை போட்ட சகுந்தலாவின் பேச்சு தடித்து மதுராவிடம் வந்து நின்றது.
பத்ரியோ, ‘ஐயோ மேரேஜ் முடிஞ்சதும் ஈவினிங் இவள பத்திரமா கொண்டு வந்து ஒப்படைக்க சொல்லி இருக்காங்களே? இல்லன்னா என் உயிருக்கே ஆபத்தே.. இந்த அம்மா வேற புரிஞ்சுக்காம இப்படி பண்றாங்களே’என்று பயந்தவனாய்,
“ம்மா மதுராவ பாத்தா எனக்கு பரிதாபமா இருக்குமா.. மணமேடை வரைக்கும் வந்துட்டு ஒரு பொண்ண இப்படி விடக்கூடாதுல்ல.. அது பாவம்மா” என்று தன் காரியத்தை சாதிப்பதற்காக மதுராவிற்கு பரிதாபப்படுவது போல் நடித்து வைக்க அதுவே வினையாய் போனது அவனுக்கு.
“எங்க வீட்டுக்கு பொண்ணுக்கு பரிதாபப்பட்டு … அவ்ளோ கஷ்டப்பட்டு ஒன்னும் நீங்க கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் மிஸ்டர்” என்று எரிச்சலோடு கத்திவிட்டான் ஜெகதீஷ்.
அவனும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான். அவனின் தாய் மதுராவை அத்தனை பேச்சு பேசுகிறார்.. அதை தடுக்காமல் அவளுக்கு பரிதாபப்படுகிறானாமே!
இப்படிப்பட்டவர்களிடம் தங்கள் வீட்டுப் பெண் எப்படி வாழ முடியும்?
“என் புள்ள நல்ல எண்ணத்துல சொன்னா அதுக்கும் ஏத்தமா பேசுறீங்களா? ரொம்ப நல்லா மரியாதை கொடுக்குறீங்க எங்களுக்கு? இன்னும் ஏன்டா ஆடு திருடுறவன் மாதிரி முழிச்சிட்டு இருக்க வாடா போலாம்.. இந்த கல்யாணமே உனக்கு வேணாம்” என்ற சகுந்தலா மகனை இழுத்துப் பிடித்து மணமேடையில் இருந்து அவனை கீழ் இறங்க வைக்க, தன் அன்னை இழுத்த இழுப்பிற்குச் செல்ல வேண்டியதாய் போனது அவனுக்கு. கூடவே தன் சொந்த பந்தங்களையும் சகுந்தலா கிளம்ப சொல்ல,
முதல்முறையாக முத்துமாணிக்கம் பேச முடியாமல் நின்றார்.
அவருக்கு நெஞ்சே வெடிப்பது போல் இருந்தது.. இந்த திருமணம் நின்று விட்டால் மதுராவிற்கு ஆபத்து இன்னும் அதிகமாகுமே!
கண்டிப்பாக இன்று அவளுக்கு திருமணம் என்ற விடயம் அவனுக்கு இருக்கும் ஆள் பலத்திற்கு எப்படியும் தெரியாமல் இருக்காது… திருமணம் நின்றது தெரிந்துவிட்டால் என்ன செய்ய? அவன் அதற்கு மேல் பொறுமையாக இருக்க மாட்டானே? என்று குழம்பிப்போய் நின்றவரின் முன்னால் கருப்பசாமி வர, சற்றென்று உதயமானது அவருக்கு ஒரு யோசனை.
அதைக் கேட்கவும் செய்துவிட்டார்.
“கருப்பசாமி என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று…
இதை யாருமே எதிர்பார்க்கவில்லை..
ஏன் கருப்பசாமியே அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
திருமணம் நின்றதும் ‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’ என்று மனதிற்குள் குத்தாட்டத்துடன் கூடிய குதூகளிப்புடன் இருந்த மதுராவோ அடுத்து தந்தை கேட்டதில் கிட்டத்தட்ட மயக்கம் போடாத குறை தான்.. கிட்டத்தட்ட மயங்குவதுபோல் லேசாய் சரிந்தே விட்டாள் தான்.
அதற்குள் அருகில் இருந்த பெண்மணி தான் அவளை விழாமல் கெட்டியாய் பிடித்து நிற்க வைத்திருக்க,
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளாமல் முயன்று கொண்டிருந்தவளின் காதில் கருப்பசாமி சம்மதம் சொல்வது வேறு கணக்கச்சிதமாய் விழுந்து தொலைக்க,
“திரும்பவும் மொதல்ல இருந்தா?” என்றதோடு மயங்கியே விழுந்து விட்டாள்.. அவள்.
தொடரும்…
தங்களது பொன்னான கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க மக்களே..♥️🌟
போன பதிவிற்கு விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ☺️😍♥️
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
37
+1
4
+1
3
Hi sister, story was very nice and very interesting… Waiting for marriage episode sis
Aww thank you so much sis ma 🥰❤️
Seikrem vanthudum sis 😍❤️ keep supporting 🙆🏻♀️
Expected but Karuppasamy k edho flashback irukum
Hehe 😅 ama sis …athu seikrem varum💕🫡
Thanks for your comment😍🥰
கருப்பு பிளானா?பத்ரி ஓடி போவதற்கு.
ஹிஹி சொல்ல மாட்டேனே😁🙆🏻♀️ பிளாக் பிளான் பண்ணி இருந்தா ஷாக் ஆகி இருக்க மாட்டானே🤸🏻♀️🤫
சூப்பர் மது கருப்பு ♥️
நன்றி சிஸ் 🥰☺️
அடுத்த எப்போ போடுவீங்க curiosity adghigama iruku
Today poduven sis…mrng padinga🥰❤️ Thank you,✨