Loading

நீ நிழலானால் நின்மதுரம் நானாவேன் 1

கோயம்புத்தூர்…

அன்று அதிகாலையில் இருந்தே அந்த பிஜி ஹாஸ்டல் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. காரணம் நேற்று தான் இறுதி செமஸ்டர் தேர்வு முடிந்திருக்க, மறுநாளில் இருந்து கல்லூரி விடுமுறை. மாணவியர்கள் அத்தனை பேரும் அவரவர்கள் ஊர் நோக்கி கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் தோழிகளை பிரிந்து செல்வது துயரம் தான் என்றாலும் எப்படியோ ஒரு வருட படிப்பை முடித்து விட்டோம் என்ற நிம்மதியில் சிலரும்.. ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போயிருந்தவர்கள் எப்போடா வீட்டுக்கு சென்று ஒரு பிடி பிடிப்போம் என்று இருந்தார்கள் என்றால்,
இறுதி வருடத்தில் இருந்தவர்கள் இனி தோழிகளை பார்க்க முடியாது என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் அனைவரையும் விட்டு மாறுபட்டவளாக இருந்த ஒருத்தி, அந்த ஹாஸ்டலின் ஒவ்வொரு மூலையையும் தொடுவதும் நகர்வதுமாக… அங்கிருந்த நினைவுகளைப் புரட்டியவாறு ஒவ்வொன்றையும் இப்பொழுது தான் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். விட்டால் படையப்பா படத்தில் வரும் சிவாஜி கணேசன் போல் அங்கிருந்த தூணை கட்டிப் பிடித்தவாறு அமர்ந்தே இருப்பாள்..அவள் தோழி கீதா வந்து தடுக்காவிட்டால்.

“ஏய் மது இன்னும் நீ பேக்கிங் முடிக்கவே இல்ல அதுக்குள்ள இங்க என்ன பண்ற? எப்ப வீட்டுக்கு போக போற?”என்று கேட்டதும்,
மதுரவாணிக்கு ‘அய்யோ! வீட்டுக்கு வேறு செல்ல வேண்டுமே? அதுவும் நிரந்தரமாய்?’ என்ற எண்ணம் எழுந்து அவளின் நெஞ்சில் பேராழியாய் பயத்தை விதைத்தது .

அதற்குள் கீதா மீண்டும், “என்னாச்சு மது?” என்று அவளை உலுக்க, சுதாரித்தவள்,
“ஹான் இன்னும் கொஞ்சம் தான் பேக்கிங் பேலன்ஸ் இருக்கு .. சின்ன சின்ன திங்ஸ் தான சட்டுன்னு முடிச்சிடுவேன் கீதா”என்று தோழிக்கு பதில் சொன்னாலும்,
‘இனி கீதாவை கூட பார்க்க முடியாதே’ என்ற ஏக்கம் நெஞ்சை பிசைய, லேசாக துளிர்விட்ட கண்ணீரை தோழிக்கு தெரியாதவாறு மறைத்தவள் லேசான புன்னகையுடன், “உனக்கு டைம் ஆச்சு தான? டாக்ஸிக்கு புக் பண்ணிட்டியா டி ?”என்று கீதாவிடம் கேட்டு வைக்க, “இல்ல மது இன்னைக்கு டாக்ஸி புக் பண்ணல. அப்பாவே என்னை கூப்ட்டு போறதா சொல்லிட்டாங்க… ஆமா கேக்க மறந்துட்டேன் உன்னை யாரு கூப்ட்ட வர்றா? எப்பவும் வர்ற அந்த டிரைவரா?”என்று கேள்வியும் கேட்டு அதற்கு பதிலும் தயார் செய்து கொடுக்க, அதற்கு பதிலாக ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைத்து வைத்தாள் மதுரவாணி.

அதற்குள் அடுத்தடுத்த தோழிகள் வர அவர்களின் பேச்சு திசை மாறியது.

சரியாக காலை 10:30 மணி போல் கீதா தனது தோழிகளுடன் பிரியாவிடை பெற்று தந்தையுடன் கிளம்பி விட, மற்றவர்களும் ஒவ்வொருவராக காரிலோ ட்ரெயினிலோ பஸிலோ புறப்பட தயாராக, மதுரவாணி தனது ட்ராலியையும் தோள் பையையும் தூக்கிக்கொண்டு தனது அறையில் இருந்து வெளியே வைத்தாள்.

அதற்குள் அசிஸ்டன்ட் வார்டன் அவளை அழைத்துச் செல்ல ஒருவர் வந்திருப்பதாக தகவல் சொல்லி விட்டு செல்ல,
எப்பொழுதும் அவளை அழைத்து செல்ல வரும் டிரைவர் பெருமாள் தான் என்ற அலட்சியமாக வந்தவளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் நெடியவன் ஒருவன் அவளுக்காக காத்திருந்தான்.

யார் இவன்? என்று ஆராய்ச்சியாக பார்த்தவளிடம்,
“மிஸ்டர் முத்துமாணிக்கம் உங்கள கூட்டிட்டு வர சொன்னார்”என்றான் மொட்டையாக.

எப்பொழுதும் தன் தந்தையை ஐயா துரை முதலாளி என்று அழைத்தே கேட்டிருந்தவளுக்கு அவனின் மிஸ்டர் என்று அழைப்பு வித்தியாசமாக தெரிந்தது.

அது மட்டுமல்ல அவனின் தோற்றமே வித்தியாசமாகத்தான் இருந்தது. முகத்தில் பாதி தாடி வைத்து மறைத்து.. உடையில் கூட அனைத்தும் கருமை தான்.. அவனின் அடர்ந்த மாநிறமும் அவனைப் பார்க்கவே முடியாத.. இருள் போல்.. அப்படியே பார்த்தாலும் கணிக்கவே முடியாத நிழல் போல காட்டியது.

அதனாலேயே மதுராவிற்கு அவன் மீது சந்தேகம் வர, “உண்மையிலேயே அப்பாதான் உங்கள அனுப்பினாங்களா? எப்பவும் என்ன கூட்டிட்டு போற பெருமாள் அண்ணா எங்க? அவர விட்டுட்டு உங்களை எதுக்கு அப்பா அனுப்பனும்?”
என்று அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினாள்.

“……..”அவன் பதிலே பேசவில்லை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தான். எனது மொபைலை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்து அவளிடம் நீட்டினான்.

அவன் பதில் பேசாது செய்த செயல் லேசாக எரிச்சலை மூட்ட, ‘நான் எதுக்கு உங்க போன்ல பேசணும்?’ என்று கேட்க வாயெடுத்தவள், அவனின் பார்வையில் என்ன உணர்ந்தாலோ தன்னை அறியாமலேயே போனை வாங்கி காதில் வைத்திருந்தாள்.

அந்த பக்கம் அழைப்பு ஏற்கப்பட, “ஹலோ கருப்பசாமி… கோயம்புத்தூர் ரீச் ஆகியாச்சா?”என்ற கட்டை குரல் அவளின் காதை நிறைந்தது.

அது யார்? என்று புரிந்தவளுக்கு, அடுத்த வார்த்தை பேச முடியாமல் தொண்டையில் முள் குத்தியது.

அவர் மீண்டும் ஹலோ என்று சொல்ல, “ப்பா..”என்று மட்டும் அவள் சொல்ல, எதிர்பக்கம் ஒரு நொடி மௌனத்திற்கு பின்,

“கருப்பசாமி என்னோட ஆள் தான்.. என்ன ஏதுன்னு கேட்காம பத்திரமா ஊர் வந்து சேரு..” என்ற சொல்லோடு இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மதுரவாணி குழம்பி தான் போனாள். எப்போதும் இரண்டு வார்த்தைக்கு மேல் தந்தை பேசியதில்லை தான்.. ஆனால் இன்று ஏதோ வித்தியாசமாகப்பட்டது அவளுக்கு.

அவர் குரலா? இல்லை சொல்லப்பட்ட செய்தியா? என்று தான் தெரியவில்லை.

அதற்குள் அவளின் முகம் மாற்றத்தை அவதானித்துக் கொண்டே அவளின் கைகளில் இருந்த தனது போனை அவன் உருவிக் கொள்ள,
அவன் திடீர் செயலில் திகைத்தாலும் பதில் ஒன்றும் பேசாதவளாக, மௌனமாய் நின்றாள் மதுரா.

“லெட்ஸ் கோ”என்ற ஒற்றை வார்த்தையுடன் அவன் மிக வேகமாய் முன்னே செல்ல, நீண்ட பெருமூச்சுடன் தனது ட்ராலியை உருட்டியவாறு அவன் பின்னால் போனாள் மதுரவாணி.
அவள் வெளியே சென்ற போது அவன் அதற்குள் காரை இயக்கி தயாராய் அமர்ந்திருந்தான். அவளும் லக்கேஜ் உடன் பின்பக்கம் ஏறி அமர்ந்து கொள்ள,
அவர்களின் பயணம் தொடங்கியது.

ஒரு பேருக்கு கூட லக்கேஜை நான் கொண்டு வரவா என்று அவன் கேட்காதது எரிச்சலாக இருந்தது அவளுக்கு. தந்தையிடம் வேலை செய்பவனுக்கு இவ்வளவு திமிர் ஆகாது என்று நினைத்தவள்,

“பெருமாள் அண்ணா தான் எப்பவும் என்னோட லக்கேஜ் எல்லாத்தையும் கார்ல ஏத்துவார்” என்று முறைப்புடன் சொல்லவும் அவனிடம் அதற்கு என்ன? என்பது போல் ஒரு பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது.

“நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணவே இல்ல..”என்றாள் அவனின் பார்வைக்கு பதிலாய்.

“அது என்னோட வேலை இல்ல” என்று ஒரு வரி பதில் அவன் வாயிலிருந்து உதிர்ந்தது.

“அப்ப வேற என்ன உங்க வேலை?”என்று மதுரா கேட்டதும்,

“உங்கள முழுசா உங்க அப்பா கிட்ட ஒப்படைக்கிறது.”என்று அழுங்காமல் மீண்டும் ஒரு வரி பதில் சொன்னான் அவன்.

ரிவ்யூ மிரரில் அரைகுறையாக தெரிந்த அவளது பிம்பத்தை பார்த்துக் கொண்டே… அவன் சொன்ன பதிலில் மதுரா திடுக்கிட்டவள் மௌனமானாள். அவன் சொன்னதற்கு மறு கேள்வி கேட்க வாய் வரவில்லை. உள்ளுக்குள் பயப்பந்து ஒன்று உருண்டது. வீட்டிற்கு செல்லாமல் செல்லும் வழியிலேயே காரிலிருந்து குதித்தால் என்ன? என்று கூட தோன்றி விட்டது.
அவளின் அறிவுக்கு எட்டிய வரை அவளின் வீட்டில் அவளுக்கு ஏதோ ஆப்பு காத்திருக்கிறது என்பது மட்டுமே அவளுக்கு புரிந்தது. ஆனால் அதையும் அவள் எதிர்பார்த்ததுதானே? படிப்பு முடிந்ததும் தனது அத்தை மகன் பத்ரிநாத் உடன் அவளுக்கு திருமணம் என்று தானே அவளின் தந்தை போன முறை வந்த போதே சொல்லி அனுப்பியது! இதற்கு எதற்கு தான் பயப்பட வேண்டும் என்று நினைத்தவள் நிமிர்ந்து அமர்ந்தாள். ‘இதுதான் வாழ்க்கை’ என்று வழுவாய் வலித்த மனதை தேற்றிக்கொண்டாள்.

மனதை திசை திருப்ப முயன்றாள். சிறிது நேரம் மொபைலை நோண்டியவளுக்கு அதற்கு மேல் முடியவில்லை. அந்தக் காரின் அமைதி அவளை மீண்டும் பயமுறுத்தியது.

பள்ளி படிப்பு முதல் இதோ கல்லூரி படிப்பு வரை ஹாஸ்டல் வாசம் தான் மதுரவாணிக்கு.. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ தான் அவள் வீட்டுக்கு செல்வது.. அப்பொழுதெல்லாம் அவளை கூட்டி செல்ல வருவது அவர்கள் வீட்டின் டிரைவர் பெருமாள் தான்..
இந்த வருடம் 55 வயதை தொடும் நபர் தான் என்றாலும் மதுரா கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வருவார். பயணம் தொடங்கி அரை மணி நேரத்திற்கு மேல் ஆன போது கூட அவன் அவளைப் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை அவன் கவனம் முழுவதும் சாலையிலும் சுற்றுப்புறத்தில் மட்டுமே இருந்ததை,
காதோரம் விழுந்த சுருள் முடியை ஒதுக்கிக்கொண்டே கவனித்த மதுரவாணிக்கு,
அப்பொழுதுதான் தந்தை அவளிடம் சொன்ன அவனின் பெயர் நினைவில் வந்தது

‘கருப்பசாமி..’என்று அவள் இதழ் முணுமுணுக்க,

அது காற்றில் மிதந்து.. கேட்க வேண்டியவன் காதிற்கு கேட்டுவிட்டது போல,
இம்முறை அவனது பார்வை, கடினமாய் இல்லாமல், ஆச்சரியமாய் அவளை நோக்க, அதை பார்த்து விட்டவளும்,

“அப்பா தான் உங்க நேம் சொன்னாங்க..கிராமத்து பேரு மாதிரி இருக்கு? உங்க பேர எப்டி ஷார்ட்டா கூப்பிடுவாங்க..ம்ம் கருப்புன்னு தான கூப்பிடுவாங்க?” என்று தன்னை மீறி கேட்டுவிட்டு கேட்டதின் அர்த்தம் புரிந்து நாக்கை கடித்தாள்‌ மதுரா.

அளவுக்கு மீறிய பேச்சு தான்.. ஆனால் இயல்பாய் வந்து விட்டது அவளுக்கு.

அதற்கு அவனிடம் பதில் எப்படி இருக்குமோ? என்று லேசான தயக்கத்துடன் அவனை பார்க்க,
மீசைக்கடியில் மறைந்திருந்த அவனின் இதழ்கள் தனது இறுக்கத்தை சற்று குறைந்தது போல் அவளுக்கு தோன்றியது. கூடவே பதிலும் கூட கிடைத்தது.

“ம்ம் சாமின்னு கூட கூப்பிடலாமே” என்றான். மீண்டும் ஒரு வரி பதில் தான்.. என்றாலும் அது மதுராவிற்கு பிடித்தது.

“ஏத சாமி யா.. அப்ப நீங்களும் ஒரு சாமி ரெண்டு சாமி மூணு சாமி நாலு சாமி அஞ்சு சாமி ஆறு சாமின்னு தொடையை தட்டி சுத்தி சுத்தி டயலாக் பேசுவீங்களா?” என்றாள் கிண்டலாய்.

அதற்கும், ” ஆனா என் பேரு ஆறு சாமி இல்ல கருப்பசாமி” என்றான் அவன் சீரியஸாக.

“அப்ப டயலாக்க உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்திடுங்க… மஞ்சசாமி சிவப்பு சாமி நெருப்பு சாமி.. நான் தான் டா கருப்பசாமி ன்னு”என்று சிரிப்புடன் மதுரா சொல்ல, இம்முறை அவனின் கண்கள் ரிவியு மிரர்ரில் தெரிந்த அவளின் கண்களை நேரடியாக சந்தித்தது நிச்சயமாக அதில் சினேக பாவம் இல்லை.

இம்முறையும் ஒரு வரி பதில் எதிர்பார்த்தவளுக்கு அது கிடைக்கவில்லை.

அவன் பதிலே சொல்லாமல் அவளிடம் இருந்து பார்வையை பிரித்துக் கொண்டான்.

‘ரொம்பத்தான்’ என்று மனதிற்குள் நினைத்தாலும், ஏனோ அவ்வளவு நேரம் காருக்குள் இருந்த இறுக்கம் சற்று குறைந்தது போல் உணர்ந்தாள் மதுரா.

மீண்டும் மௌனம் தொடர, அவனின் கண்கள் சுற்றுப்புறத்தை கழுகு போல் நோட்டமிட்டு கொண்டே தான் இருந்தது.

அதை கலைப்பது போல் மதுரவாணி,
“நான் உங்கள மிஸ்டர் ப்ளாக்ன்னு கூப்பிட போறேன்” என்றாள்.

அவன் அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகவே வர, அதில் கடுப்பானவள்
“ஏன் பேசினா வாயில இருக்குற முத்து உதிந்துடுமா? இல்ல சொத்து தான் போய்டுமா?”என்று கேட்டு விட,
இம்முறை அதற்கு பதில் வந்தது.

“உன்கிட்ட தேவையில்லாம பேசுறது எனக்கு பிடிக்கல” என்றான் காரமாக,
அவனின் ஒருமைப் பேச்சு அவளுக்கு பிடித்தமின்மையை ஏற்படுத்த,

“அப்போ தேவை இருக்கும் போது மட்டும் பேசுவியா மிஸ்டர் பிளாக்” என்று வம்பாய் அவளும் ஒருமைக்கு தாவி இருந்தாள்.

அதை கண்டுகொள்ளாமல் “ஆமாம்” என்றான் அவன்.

அதில் கடுப்பாகி,
“உன்கிட்ட இனி பேசினா என்னன்னு கேளு மிஸ்டர் பிளாக்கி” என்று முகத்தை தூக்கிக்கொண்டு ஜன்னல் பக்கமாக பார்வையை திருப்பிக் கொண்டாள் மதுரா‌.

“…..”அவளின் முகத்திருப்பலில் லேசாக புருவம் சுழித்தாலும் அவளை கண்டுகொள்ளாத பாவனை தான் அவன் முகத்தில்.

நொடிகள் நிமிடங்களாக அவர்களின் கார் ஃபாரஸ்ட் ஏரியாவை கடந்து ஹைவே ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

வேடிக்கை பார்க்க கூட ஒன்றுமில்லாமல் வறண்ட நிலமாய் அங்கொன்றும் இங்கொன்றும் ஓரிரு மரங்களே இருக்க கடுப்பான மதுரா போனில் ப்ளூடூத்தை ஆன் செய்துவிட்டு காரில் கனெக்ட் செய்ய, அதில் ஹரிஹரன் வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணை தாண்டி வருவாயா
என்று பாட, இசைமழையில் நனைய தயாரா? என்பது போல் கண்ணை மூடி அதை ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தவளை சோதிக்கவே அடுத்த நொடி கருப்பசாமியால் ப்ளூடூத் அணைக்கப்பட்டது.

அதில் விழி திறந்தவள், “ஏய் மிஸ்டர் பிளாக் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணவே இல்லையே? எதுக்கு ஆஃப் பண்ண?” என்று அவள் கத்தவும், அவன் காரில் சடன் பிரேக் போட காரோடு அவளின் பேச்சும் நிறுத்தப்பட்டது.

அதே நேரம் அவர்களின் காரை வழிமறித்து நின்றது ஒரு போலீஸ் வாகனம்.

அதில் இருந்து கையில் துப்பாக்கியுடன் இறங்கினார்கள் இருவர்.

மதுரா என்னவோ? ஏதோ? என்று சற்று பதற்றத்துடன் தனக்கு முன்னே இருந்தவனைப் பார்க்க, அவனோ தனது இருக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த   பிஸ்டலை படு ஸ்டைலாக வெளியே எடுத்தான்.

பயத்தில் மதுராவின் முட்டை கண்கள்   மேலும் பெரிதாய் விரிய, ‘டேய் பிளாக் யார்ரா நீ? என்னடா பண்ற?’ என்று விதிவிதிர்த்துப் போய் அதிர்ச்சியாய் அவனைப் பார்த்தாள்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
38
+1
5
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment