31 – காற்றிலாடும் காதல்கள்
“என்னம்மா சொல்ற?” என ராமசாமி அதிர்ந்துக் கேட்டார்.
“ஆமா சித்தப்பா. குகை திறந்திருந்தப்ப வடக்கு, தெற்கு ரெண்டு பக்கமும் இருக்க முனியப்பனுக்கு பூசை நடந்துட்டு இருந்திருக்கு. குகை மூடின இந்த 130 வருஷத்துல தெற்கு பக்கம் இருக்க முனியப்பன யாருமே கவனிக்கல. இப்ப பூசை பண்ணனும்ன்னு சொல்லி தான் அந்த கல்வெட்டுல இருந்தது. வர்ற அமாவாசை நடுநிசில பூசை நடக்கணும். ஆனா இங்க யாருக்கும் இன்னொரு முனியப்பன் கோவில் இருக்கறதே தெரியல.” எனக் கூறிவிட்டு அனைவரையும் பார்த்தாள்.
“இன்னொரு கோவில் இருக்கா?”
“இருக்கறதால தானே கோவில் கல்வெட்டுல எழுதியிருக்கு.“
“எப்டி கண்டுப்பிடிக்கறது?”
இப்படியாக ஊர்மக்கள் மாறி மாறி பேசிக்கொண்டிருக்க, மிருணாளினி விஸ்வநாதன் தாத்தாவைப் பார்த்துத் தலையசைக்க, அவர் குரலைச் சரி செய்துக்கொண்டு, “கசகசன்னு சத்தம் போடாம இருங்க எல்லாரும். அந்த புள்ளையவே கோவில் எங்க இருக்கு ஏதுன்னு கேப்போம். அம்மாடி மிருணா. அந்த இன்னொரு கோவில் எங்கயிருக்கு என்னன்னு எதுவும் அந்த பாட்டுல வரலியா?” எனக் கேட்டார்.
“வடக்கு முனியப்பன் கோவில்ல போய் பாத்தா ஏதாவது தெரியும். அங்க கல்வெட்டு இருக்கா?” எனக் கேட்டாள்.
“அங்க கல்வெட்டு எதுவும் இல்ல கண்ணு. ஆனா அந்த கோவிலோட பழைய செம்பு பட்டய தகடு ஒண்ணு பழைய பூசாரி காட்டியிருக்காரு. அத முனியப்பன் அருவா கூட வச்சிருப்பாங்க. வருஷா வருஷம் அருவா மாத்தறப்ப அந்த தகடயும் சுத்தம் பண்ணி அங்கயே வச்சிடுவோம். இதுவரைக்கும் அத யாரும் படிச்சது இல்ல.” என ஊர் முக்கியஸ்தர்களில் ஒருவர் கூறியதும் மிருணாளினி கண்கள் மின்ன அவரைப் பார்த்தாள்.
“அத நான் பாக்கலாமா?”
“அது சாமிக்கிட்ட வாக்கு கேட்டு தான் கண்ணு தொடணும். அருவா மாத்தறதே சாமி சொன்னா தான் பண்ணமுடியும். இப்ப பூசாரிக்கிட்ட கேட்டுப்பாக்கலாம்.”என விஸ்வநாதன் கூறினார்.
“கேளுங்க தாத்தா. அமாவாசைக்கு ஒரு வாரம் தான் இருக்கு. அதுக்குள்ள கோவில கண்டுபிடிச்சா தான் நமக்கும் என்ன ஏதுன்னு புரியும்.” கீதன் கூறினான்.
பின் அனைவரும் ஒருமுடிவாகப் பேசிமுடித்து வடக்கு முனியப்பன் கோவிலுக்கு வந்துச் சேர்ந்தனர். அங்கே வாசலில் கிருபாலினி சிரித்தபடி நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் மிருணா உணர்ச்சிவசப்பட்டு அவளிடம் போகும்போது கீதனும், இந்திரனும் அவளை ஆளுக்கு ஒருபக்கமாக நிறுத்தி அமைதியாக வரும்படிக் கூறினர். மிருவும் கண்களால் அவளிடம் பேசியபடி கோவிலின் உள்ளே சென்றாள். நேற்றிரவு வந்துச் சென்றது அவளுக்கு நினைவில் வந்து உடலும், மனமும் பெரிதாகச் சக்திக்குவியலில் திணறியது. உடல் முழுக்க வேர்த்து வடிய, அவள் இந்திரனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.
“என்னாச்சி புள்ள?” எனக் கேட்டவன் அவளின் கைசில்லிட்டு இருப்பதையுணர்ந்து அவளின் உள்ளங்கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.
“பூசாரி ஐயா.. நம்ம முனியப்பர் கைல இருக்க தகட எடுத்து பாக்கணும். தெக்கால இன்னொரு முனியைய்யா கோவில் இருக்காம். ரெண்டு முனியைய்யன் கோவிலுக்கும் திருவிழா எடுக்கணும்ன்னு நம்ம எல்லைகோவில் கல்வெட்டுல இன்னிக்கி வந்திருக்கு. நீங்க தான் உத்தரவு கேட்டு சொல்லணும்.” என ராமசாமி சொல்லவும் பூசாரி வாக்குக் கேட்கத் தேவையானப் பூஜைப் பொருட்களைத் திரட்ட ஆரம்பித்தார்.
முதலில் இன்னொரு முனி கோவில் இருக்கிறதா என்று வாக்கு கேட்கப்பட்டது. அதற்கு ஆமென்ற பதில் வந்த பின் தான் தகடை எடுக்க வாக்குக் கேட்கப்பட்டது .
எப்பொழுதும் அருவாள் மாற்ற வாக்கு கேட்டால், இன்ன நாள், இந்த திகதி, மற்றும் இந்த நேரத்தில் என்ற வழிமுறைகள் கொண்டு, புது அருவாள் செய்யக் கேட்டு, அருவாள் செய்தபின் மீண்டும் சாற்றும் நாள் கேட்பார்கள். அதன்படி பார்த்தால் முதல் நாள் கேட்டால் அன்றிலிருந்து ஒரு வாரத்தில் முனியப்பன் தலையில் இருக்கும் மாலை விழும் நாளின் இரவில் அருவாள் சாற்றுவது வழக்கம்.
அதற்கு பூசாரி கடும் விரதமிருந்து மீண்டும் பூப்போட்டு உத்தரவுக் கேட்டபின் தான் அந்த அருவாள் தொடவே முடியும். கேட்காமல் தொட்டால் கடும் பின்விளைவுகளை வாழும் காலம் வரையிலும் அனுபவிக்க நேரிடும் என்பதை அங்குள்ளவர்கள் கண்கொண்டுப் பார்த்துள்ளனர். அதனால் முனியப்பன் மேலே அனைவருக்கும் பயம் கலந்த பக்தியுண்டு. உடனுக்குடன் வரமும், தண்டனையும் கொடுப்பார் என்ற நம்பிக்கை.
தகடை எடுக்க அருவாளை எடுக்கவேண்டும், இன்றே எடுக்க வாக்கு கிடைக்குமா என்று ஊரில் உள்ளவர்கள் நினைத்தபடி நின்றிருக்க, உடனே எடுக்க உத்தரவு முனியப்பன் கையில் இருந்த மாலையும் எழுமிச்சையும் கீழே விழுந்துக் கொடுத்தது.
அதைக் கண்டவர்கள் மேற்கொண்டு எந்த பேச்சும் பேசாமல் தகடை எடுத்துப் பார்த்துக் கோவிலைக் கண்டுபிடித்து திருவிழா எடுக்கச் சிந்திக்கத் தொடங்கினர்.
எழுமிச்சை கீதன் காலடியிலும், மாலை இந்திரன் மேலும் விழுந்ததால் அவர்களே அதை எடுக்கட்டும் என்று பூசாரியும் பூப்போட்டுப் பார்த்துக் கூற, அவர்கள் மெல்ல அருவாளைத் தொட்டுக் கும்பிட்டு, “ஐயா.. முனியப்பா.. உன் உத்தரவுப்படி தான் உன் அருவாள எடுக்கறோம். எங்களுக்கு நல்ல வழியும், பாதுகாப்பும் நீ தான் குடுக்கணும்.” என இந்திரன் மனதார வேண்டிக் கொண்டு ஆறடி அருவாளைத் தூக்க, எளிதாக கையில் எடுக்க முடிந்தது.
அருவாளின் பிடியோடு அந்தப் பட்டையத் தகடும் வெளியே வர கீதன் அதை எடுத்துக் கொண்டு அருவாளைத் தொட்டுக் கும்பிட்டுக் கொண்டு இருவரும் சேர்ந்தே அருவாளை மீண்டும் முனியப்பனின் கையில் வைத்தனர்.
மிருணாளினி கையில் அதைக் கொடுக்கவும், சட்டென ஓரிரு நொடி மிளிர்ந்து எழுத்துக்கள் அவளுக்கு தெளிவாகத் தெரிந்தன. அதை அவள் சொல்ல சொல்ல கீதன் எழுதிக்கொண்டான்.
திருவிழா எடுக்கும் முறையும் அதில் குறிப்பிட்டிருந்தது மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. கோவில் உள்ள திசையும், அடையாளமும் கூறியிருக்க, அதைவைத்து மிருணாளினி முன்னே செல்ல மற்றவர்கள் பின்னே சென்றனர்.
தகடை எடுத்த ஒருமணி நேரத்தில் தெற்கு பக்கமிருக்கும் முனியப்பன் கோவிலும் கண்டுப் பிடிக்கப்பட்டது. அதற்குபின் கோவிலும், சுற்றியுள்ள இடங்களும் மளமளவென சுத்தம் செய்யத் தொடங்கிட, அன்றிரவே பூசாரி முதல் பூசை செய்தார்.
“வெள்ளைச்சாமி ஐயா.. உங்க பேத்தி வந்த நேரம் பல வருஷம் நமக்கு தெரியாத கோவில கண்டுப்பிடிச்சி குடுத்துட்டா. உங்க வம்சத்துக்கே இனி முனியப்பன் காவலா இருப்பான். கவலப்படாம இருங்க.” எனப் பூசாரி கூறிவிட்டுச் சென்றதைக் கேட்ட கனகவேலும், ஜெயந்தியும் தங்கள் மகளைக் கண்களால் தேடினர்.
அவள் கீதன், கயல்விழி, இந்திரன் சூழ நடுவே அமர்ந்து அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்.
“ஏன் புள்ள எப்பிடியோ கோவில கண்டுபிடிச்சி திருவிழாவும் நடக்க ஏற்பாடு பண்ணியாச்சி. குகைய அமாவாசைல எப்டி தொறக்கறது? அந்த வில்லன் வந்துடுவான்னு சொல்ற. என்ன பண்ணப் போறோம்?”
“இந்நேரம் அவன் வந்து சேர்ந்திருக்கணும் இந்திரண்ணா. அவன் என்ன பண்ணுவான்னு பாத்தா தான் தெரியும். ஆனா அமாவாசைல இங்க அருவா பூச நடக்கறப்ப நம்ம குகைல நிக்கணும். அத மட்டும் பாத்துக்க.“
“எல்லாருமா?” கீதன் கேட்டான்.
“எப்பிடியும் நாலு பேராவது வேணும்…“
“அன்னிக்கா தூண மீட்டனும்?” யுகேந்தர் கேட்டான்.
“அது பௌர்ணமில.. இப்ப உச்சில பாறை நகரும். குகை வாசல்ல அபயகரம் இப்ப இருக்க மாதிரி தெரியல. அன்னிக்கி தான் வெளிய வரும்.” எனக் கூறி மற்ற விஷயங்களையும் பேசி முடித்து இல்லம் சென்றனர்.
“அப்பாடி எவ்ளோ பெரிய விஷயத்த அந்த புள்ள இன்னிக்கி செஞ்சிடிச்சி. ஜெயந்தி பெரிய புண்ணியம் பண்ணியிருக்கா.” விசாலாட்சி மாலாவிடம் கூறினார்.
“ஆமாம்மா.. அந்த பொண்ணுக்கு இவ்ளோ தமிழ் ஞானம் இருக்கும்னு நான் கூட நெனைக்கல. எப்பிடியோ அந்த குகையும் சீக்கிரம் தொறந்துட்டா போதும்.” என மாலாவும் மனதிலிருந்து கூறினார்.
“அதுக்கும் முனியப்பன் ஒரு கணக்கு வச்சிருப்பான் கண்ணு. ஆனா உன் புருஷன கொன்னவனும் இங்க வந்திருவான்னு அந்த பொண்ணு சொல்லிச்சி. அவங்கிட்ட இருந்து இந்த புள்ளைய எப்டி காபந்து பண்றதுன்னு தான் யோசனையா இருக்கு. நம்ம சக்திக்கு மீறின கெட்டவன் அவன். அவன எப்டி சமாளிக்கறது?” விஸ்வநாதன் குரலில் தவிப்பு நன்றாகத் தெரிந்தது.
“நம்ம தான் ஏற்பாடு செய்யணும்ப்பா. காவல் ஆளுங்கள எல்லாம் காலைல வரச்சொல்லுங்க. ஊரச்சுத்தி காவல அதிகப்படுத்தணும். அந்த பொண்ண சுத்திலும் இருக்க மாறி பாத்துக்கணும். அவன் துப்பாக்கி கொண்டு வந்தா நம்ம அருவா எடுத்து தான் ஆகணும். அவனால இன்னொரு உசுரு போகக்கூடாது.” என தந்தையிடம் பேசி ஊர் தலைவரிடமும் பேசி ஊருக்கு காவலைப் பலப்படுத்தியிருந்தனர்.
அன்று நள்ளிரவு விஜயராகவன் அங்கே வந்தபோது, ஊரை சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் அதிகமிருப்பதைக் கண்டு இரண்டு ஊர் தள்ளி வாகனத்தை நிறுத்திவிட்டு, ஊருக்குள் ஆட்களை அனுப்பக்கூறினான்.
ஆதர்ஷ் அனுப்பிய ஒருவர் கூட தகவலும் தரவில்லை, திரும்பியும் வரவில்லை எனவும் அவனே கிளம்பினான்.
“நீ போகாத. நான் போறேன். அங்க மலைக்கு இன்னொரு பக்கமும் வெளிச்சம் வருது. நான் ராத்திரி திரும்ப வரலன்னா ஹெட்க்கு தகவல் அனுப்பிட்டு நம்ம செக்யூரிட்டி குரூப்போட மலைக்கோவில் வந்துரு” எனக் கூறிவிட்டு அமாவாசை நாள் காலை விஜயராகவன் விண்ணூர்காரப்பட்டினம் சென்றான்.
கோவிலில் பூசை ஆரம்பமானதும், மிருணாளினி, கீதன், யுகேந்தர், இந்திரன், கயல்விழி, அவினாஷ், அன்வர் ஆகிய எழுவரும் குகை நோக்கிப் புறப்பட்டனர்.
அன்று நள்ளிரவில் இரண்டு முனியப்பன் கோவிலிலும் அருவாளுக்கு பூசை செய்து அதைச் சூழற்றியதும் மலைக்குகையின் வாசலில், மூடியிருந்த பாறையில் மெல்ல அபயகரம் வெளிவந்தது. அதைக் கண்ட மிருணாளினி அதனருகே செல்லும் போது, கிருபாலினி அவளுடல் புகுந்துக் கொள்ள, சட்டென தோன்றிய மின்னலில் மற்றவர்கள் கணக்கூசி வேறுபக்கம் திரும்பும் சமயம் அவள் அபயகரம் பற்ற, குகையின் மேலிருந்த உச்சிப்பாறை விலகியதும் மழைக் கொட்டத்தொடங்கியது.
குகையின் முதல் வாயில் திறந்தது. விஜயராகவன் முதுகில் ஒரு பகுதி தீக்காயம் மாயமாக மறைந்தது.