Loading

 

அத்தியாயம் 9

 

ஜுன்ஸ் பேண்டும் ஆண்கள் அணிவது போலான சட்டையும் உடுத்தி வந்த பெயர்த்தியைக் கண்டு திடுக்கிட்டார் ரெங்கநாயகி.

“என்ன பாப்பா இது?”

“என்ன ஆச்சி.?”

“அந்தப் பையனைப் பார்க்கப் போறப்ப, இப்படியா துணி உடுத்திட்டுப் போவாங்க?”

“ஏன், இந்த டிரஸ்ஸுக்கு என்ன?”

“பாப்பா, சேலைக் கட்டலாம்ல?”

“என்கிட்ட சேரி இல்லையே?” எனத் தோள்களைக் குலுக்கியவளைப் பாவமாய்ப் பார்த்தவர், “சுடிதாராவது போடலாம்ல.?”

‘நான் எப்பவும் டிரஸ் பண்ணுறது இப்படித்தான். மத்தவங்களுக்காக எல்லாம், வேற மாதிரி நடிக்க முடியாது என்னால. கிளம்புறேன் ஆச்சி!” என்றவள் மெலிதான புன்னகையுடன் வெளியேற, குடும்பத்தார் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்திருந்தனர்.

சேகரன் இயலாமையுடன், “ஏன்மா, இப்படிச் செய்யிறீங்க?” என வினவ, “இப்ப என்ன செஞ்சிட்டேன்?”

“இவ்வளவு தூரத்துக்கு ஆனதுக்குப் பின்னாடியும், லாவண்யாக்குப் பார்த்த மாப்பிள்ளைய போய் மௌனிக்கு கட்ட நினைக்கிறீங்களே?”

“ஏன், அதுல என்ன தப்பு? உன் மகளுக்கும் அந்தப் பிள்ளைக்கும் நிச்சயம் கூட நடக்கலயே? சும்மா பேசி வச்சது தான?”

“அதான் பேசி வச்சிருந்தோம் இல்ல?”

“இப்பதான் அந்த பேச்சு இல்லனு ஆகிடுச்சே? இங்க பாரு சங்கரா, நான் ஒன்னும் ஒரு பிள்ள கையில இருக்க மிட்டாயைப் பிடுங்கி, இன்னொரு பிள்ளைக் கையில கொடுக்குற அளவுக்கு இங்கிதம் இல்லாதவ இல்ல. வீணா பேசி நேரத்தை வீணடிக்காத. போயி வேற வேலை எதுவும் இருந்தா பாரு. அப்புறம் லாவண்யாக்கு ஏத்த மாதிரி சீக்கிரமா மாப்பிள்ளையைத் தேடு. கல்யாண பேச்சை ஆரம்பிச்சிட்டு அதைப் பாதியில விட்டுட்டா, திரும்ப அது கூடி வர்றது ரொம்ப சிரமம். நான், பாப்பாக்கு அப்படித்தான் விட்டேன். இரண்டரை வருசம் ஆகிப் போச்சு. இன்னுமே அமைய மாட்டாது பாரு?” எனப் பெருமூச்சு விட்டு அவர் உரைக்க, சேகரன் மனைவியை நோக்கினார்.

மாமியாரைப் பார்த்த அர்ச்சனாவின் விழிகளில், கட்டுப்படுத்தப்பட்ட சினம்.

என்ன முயன்றும் சரி, மூத்தவரை அவரால் மீறிச் செல்லவே இயலவில்லை. இப்பொழுது வரை ரெங்கநாயகியின் சொல்லே, அவ்வில்லத்தில் ஓங்கி ஒலித்தது. இறுதியாகவும் இருந்தது.

மாமியார் மருமகளிற்கு இடையே நடக்கும் இந்த அதிகாரப் போருக்கான முடிவுதான், பல ஆண்டுகளாய்த் தெரிவதாய் இல்லை.

ஆட்டோவில் பயணம் மேற்கொண்டிருந்த மௌனிகாவின சிந்தனை முழுவதும், சரணே நிறைந்து இருந்தான்.

இறுதி வரை வேண்டாம் என்று மறுத்தவன், பார்க்கும் வேலையைக் காரணம் சொல்லி அவள் மறுக்கிறாள் என அறிந்ததும், அப்படியே தனது எண்ணத்தை தலைகீழாய் மாற்றி விட்டான்.

முதல்நாள் இரவில் அன்னையின் அறைக்குச் சென்றிருந்தான். சிற்றன்னையும் அங்குதான் இருந்தார்.

மகனை அந்நேரத்தில் எதிர்பார்த்திடாத பாகீரதி, “என்ன சரண்.?” எனக் கேள்வியாய்ப் பார்த்திட, “ரெங்கநாயகி ஆச்சிக்கிட்ட அவ்வளவு தூரம் பேசிட்டு, ஏன்மா கடைசியில சரி வராதுனு சொன்னீங்க?” என்று நேரடியாகவே வினவினான்.

அவனின் சிற்றன்னை வசந்தி, “ஏண்டா அரை மணி நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்களைத் திட்டித் தீர்த்துக்கிட்டு இருந்த. இப்ப என்ன, விளக்கம் கேட்டுட்டு இருக்க?’

“இல்ல.. சம்பந்தப்பட்ட என்னையும் அந்த பொண்ணையும் தவிர நீங்க எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருந்தீங்க. நான் கூட, உங்களை இந்த பேச்சை நிறுத்த வைக்கிறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன். ஆனா சட்டுனு, சரிவராதுனு குளோஸ் பண்ணீட்டீங்களே? அதான் கேட்கிறேன்.”

காரணத்தை உரைத்தார் பாகீரதி. மெலிதான புன்னகை அவனின் அதரங்களில்.

“அம்மா, எனக்கு என்னமோ இந்தப் பொண்ணு செட் ஆகும்னு தோணுது.”

சகோதரிகள் இருவரும் விழிகள் தெறித்து விடும் அளவிற்கு அவனை வியப்பாய் பார்க்க, “டேய்.. மகனே.. காத்து கருப்பு எதுவும் அடிச்சிருச்சா உனக்கு? நல்லா தான இருக்க? நிமிஷத்துக்கு ஒரு பேச்சு பேசுற.?” என்றபடியே தமக்கை மகனின் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்தார் வசந்தி.

பாகீரதியும் திகைத்து, “என்ன சரண், இப்படிச் சொல்லுற.?”

“நான் அந்தப் பொண்ணுக்கிட்ட பேசணுமே?”

பெரியவர்கள் இருவரும், “ஹான்.?” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னோட நம்பரை ஆச்சி மூலமா கொடுத்துப் பேசச் சொல்லுங்க. அந்தப் பொண்ணு பேசுனா, அடுத்தது என்னனு பார்க்கலாம்.” என உரைத்து அறையில் இருந்து வெளியேற, “சரண் நில்லுடா!” என்று பின்னோடு வந்து கைப்பற்றி நிறுத்தினார் வசந்தி.

“என்ன சித்தி?”

“அதை நான்தான் கேட்கணும். என்ன திடீர் மாற்றம்?”

“நீங்க அந்த பொண்ணுக்கிட்ட ஃபோன்ல பேசுனதைக் கேட்டேன்.”

“சரி கேட்ட. அதுக்கும் உன் மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?’

“சிம்பிள்.. ஸீ இஸ் ஸ்ட்ரைட் பார்வேட் பர்சன், என்னை மாதிரி. எந்த குழப்பமும் இல்லாம, தனக்கு என்ன வேணும் வேணாம்கிறதுல தெளிவா இருக்கா. அண்ட் எதார்த்தமாவும். சோ, என்னோட லைஃபுக்கு செட் ஆவானு நினைக்கிறேன்.”

“அதுசரி! அவளோட வேலை.?”

“அதைப் பத்திதான் பேசணும். அதோட என்னைப் பத்தி என்ன நினைச்சிருக்கானு தெரிஞ்சிக்கணும். அதுக்குத்தான் ஃபோன் நம்பரைத் தரச் சொன்னேன். அவ லீட் எடுத்தா, இண்ட்ரெஸ்ட் இருக்கானு இல்லையானு தெரிஞ்சிடும். அப்புறம் மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்!”

“ஆனா சரண்?” என அவர் தயங்கி நிறுத்த, “சொல்லுங்க சித்தி!” என்று ஊக்கினான் அவன்.

“முதல்ல வேணாம்னு சொல்லிட்டு, இப்ப..”

“நியாயமா, நீங்க சந்தோஷம் இல்ல படணும்? இது நடக்கணும்னு தான என்கிட்ட அவ்வளவு பேசுனீங்க சித்தி.?”

“பேசுனேன் தான். ஆனா, அந்தப் பொண்ணு லேலையை விடாதுனு சொன்னாங்க ரெங்கநாயகி அம்மா. நீயும், வீட்டையும் உன்னோட தங்கச்சி தம்பியையும் விட்டுட்டுப் போற ஆளு இல்ல. ஆளுக்கு ஒரு இடத்துல எப்படி? இதுக்குப் பின்னாடி எதுவும் காரணம் இருக்கா.?”

“நீங்க தான சித்தி சொன்னீங்க, நல்லவனா இருந்தா தாலி கட்டிக் கூட்டிட்டு வந்து நம்ம குடும்பத்துக்கு தக்கபடி மாத்தி இருக்கணும்னு..”

“என்ன சரண் இப்படிச் சொல்லுற?” என வசந்தி திகைக்க.. அதுவரை இருவரது பேச்சையும் கவனித்து இருந்த பாகீரதி, “எனக்கு இது சரியா படல.” என்று மகனைக் கண்டிப்புடன் நோக்கினார்.

சின்னதாய்ச் சிரித்தவன், “நான், கெட்டவன் எல்லாம் இல்லமா..” என உரைத்து நகர, “விடுக்கா.. என்ன நடக்குதுனு பார்க்கலாம்!” என்று தமக்கைக்குச் சமாதானம் மொழிந்தார் வசந்தி.

விஷயம், ரெங்கநாயகியின் மூலமாய் மௌனிகாவிற்குப் பகிரப்பட்டது.

அவள் முன்னரே முதியவரின் மீதான அன்பிற்காகவும் மரியாதைக்காகவும் மனதைத் தயார் படுத்தி வைத்திருந்ததால், மறுநாள் காலையில் சரணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

நேரடியாய் அழைத்துப் பேசுவதற்கு, ஏதோ ஒருவித தயக்கம்.

பாவையானவள் முதல் அடியை எடுத்து வைத்ததால், அடுத்த அடி அவன் பக்கம் இருந்து கைப்பேசி அழைப்பாய் வந்தது.

திரையில் எண்களைக் கண்டதும், சரண் தான் என அறிந்து கொண்டாள்.

“ஹலோ..”

மறுபுறம் இருந்தவன், “ஹலோ.. நான் ஶ்ரீசரண்.”

“ம்ம்.. தெரியும் சொல்லுங்க.”

“ஒன் டைம் நேர்ல மீட் பண்ணி பேசலாமா? ஜெஸ்ட் ஃப்ரெண்ட்லி மீட்டிங்கா.”

“ஏன்?”

“ம்ம்..” என ஒரு நிதானம் மூச்சை விட்டுக் கொண்டவன், “என்னதான், ஃபோன்ல மணிக்கணக்கா பேசுனாலும், அந்த குரலுக்கு பின்னாடி இருக்கிற உண்மை என்னனு முழுசா தெரிஞ்சிக்க முடியாது. அதுவே ஃபேஷ் டூ ஃபேஷ் மீட் பண்ணா, கண்ணும் பாடிலாங்வேஜும் அதைக் காட்டிக் கொடுத்திடும். சோ..”

அவள் சிரித்து, “ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டா, கண்ணையும் உடம்பையும் கூட பொய் சொல்ல வைக்கலாம் தெரியுமா?”

“நீங்க அந்த மாதிரி எந்த ட்ரெய்னிங்கும் எடுத்து இருக்க மாட்டீங்கனு நம்புறேன்.”

“ஓகே, எங்க மீட் பண்ணலாம்?”

“எங்கனாலும் சரிதான். ஆனா, நீங்க இருக்கிற வீட்டுல வேண்டாம்.”

“எனக்குமே இங்க வச்சுப் பேசுறதுல விருப்பம் இல்ல. பட், இந்த ஊருல எனக்குத் தெரிஞ்ச இடம்னு சொல்லுற மாதிரி எதுவும்..” என நிறுத்த, அன்னையின் வாயிலாக மௌனிகா வளர்ந்த விதத்தைப் பற்றி அறிந்தது நினைவிற்கு வந்தது.

‘எவ்விடத்தைத் தேர்ந்தெடுப்பது?’ என்று அவன் சிந்தனையில் இருக்க, “நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நான் வர்றேன்.”

அவளின் சொற்களில் வியந்தவன், “ஆர் யூ ஸுயர். இப்ப ஓகேவா உங்களுக்கு?”

“யா.. ஐம் ஸுயர். எங்க வரணும்?”

“என்னோட ரைஸ்மில்ல இருக்கேன். வர்றீங்களா?”

“ம்ம்.. லொகேஷன் சேர் பண்ணுங்க. டிரைவல் டைமிங் என்ன?”

“தர்ட்டி டூ பார்ட்டி ஃபார்ட்டி மினிட்ஸ், வண்டியோட வேகத்தைப் பொறுத்து.”

“ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்!” என்று பேச்சை முடித்தவள், அடுத்த கால் மணி நேரத்தில் தயாராகி, இல்லத்தில் இருந்து புறப்பட்டு விட்டாள்.

உண்மையில் அவர்களது முதல் உரையாடல் இத்தனை இலகுவாய் இருக்கும் என இருவருமே எதிர்பார்க்கவில்லை. சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக, இரு பக்கம் இருந்தும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு இருந்தது மற்றவர் அறியாமல்.

எந்த சொல்லும் பேச வேண்டும் என முன்பே ஒத்திகை எதுவும் பார்த்திருக்கவில்லை. தானாக நிகழ்ந்து போனது.

சொன்னது போலவே ஒரு மணி நேரத்திற்கு மூன்று நிமிடங்கள் முன்னதாகவே, சரணின் அரிசி ஆலைக்கு வந்து சேர்ந்து விட்டாள் மௌனிகா.

இயந்திரங்களின் மூலமாய் நெல்லில் இருந்து உமியைப் பிரித்து அரிசியாய் மாற்றும் பணி நடந்து கொண்டிருந்தது.

ஆட்டோவில் இருந்து இறங்கிட, இயந்திரங்களின் இயங்கொலி சத்தம் செவியை நிறைந்தது.

கைப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பினாள், “ஐ ஹேவ் அரைவ்ட்!” என்று.

“வெயிட்..” என மறுசெய்தி அனுப்பியவன், அடுத்த இரண்டாவது நிமிடம் அவளின் எதிரே வந்து நின்றான்.

“வாங்க.. மிஸ் மௌனிகா.”

தலை அசைத்தவள், “இங்க இவ்வளவு லௌடா இருக்கு. பேச முடியுமா.?”

“ஸுயர்..” என்றவன் பணி செய்பவரிற்குக் குரல் கொடுக்க, நான்கு நொடிகளில் அவ்விடம் நிசப்தமானது.

சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தவள், “மெஸினை ஆஃப் பண்ணணும் என்ன அவசியம்? நாம வெளிய போய் பேசி இருக்கலாமே?”

“நான் வர்றேன்னு கிளம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. அதுக்கு அப்புறம் வெளிய கூட்டிட்டுப் போனா, அது மரியாதையா இருக்காது.” என்று முன்னால் சென்று வழிகாட்ட, பின்தொடர்ந்தாள் மௌனி.

இருவரும் அலுவலகம் போல் இருந்த ஒரு அறைக்குள் சென்று அமர்ந்தனர். முன்னரே ஃப்ளாஸ்கில் வாங்கி வைத்திருந்த தேநீரை, ஒரு காகித கப்பில் ஊற்றி அவளின் முன்னால் வைத்தான்.

“டீ குடிப்பீங்க தான?”

“ம்ம்.. தேங்க்ஸ்..” என ஒரு மிடறு அருந்தியவள், “சொல்லுங்க என்ன பேசணும்?”

“ரெண்டு வீட்டு பெரியவங்களும் மேரேஜைப் பத்தி பேசுனாங்க இல்ல. சோ..”

அவள் புன்னகைக்க, “என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா மௌனிகா.?’

“ஆச்சி சொன்னாங்க.”

“என்ன சொன்னாங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா.?”

“ம்ம்..” என்று தலை அசைத்தாள் அவள்.

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அருமையான நகர்வு… வாழ்த்துகள் 💐