Loading

சண்முகி அன்று காய்ச்சலில் ஓய்ந்து போய் அமர்ந்திருக்க, அவளது கைபேசியில் சில செய்திகள் வந்து விழுந்தது.

“உன் புருஷன் என்ன காரியம் பண்ணிட்டு இருக்கான் தெரியுமா? அத பத்தி தெரிஞ்சுக்கனும்னா உடனே கிளம்பி அவன் வேலை செய்யுற ஆஃபிஸ்க்கு போ” என்று செய்தி வந்திருந்தது.

தெரியாத எண். படித்து விட்டு யாரோ ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்று நினைத்து தூக்கி போட்டாள்.

சில நிமிடங்கள் வரை கோபமாக வந்தது. இப்படி தெரியாதவர்கள் வாழ்வில் விளையாட பார்க்கின்றனரே. ஆனால் அவளுடைய எண்ணுக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றால் நன்றாக தெரிந்தவர்களாக தான் இருக்க வேண்டும்.

அவள் நன்றாக வாழ்வது பிடிக்கவில்லையாமா? கோபத்தோடு அந்த எண்ணை எடுத்துப் பார்த்தாள். நன்றாக திட்டலாமா? என்று யோசித்து விட்டு பிறகு அதை கை விட்டாள்.

காய்ச்சலில் உடலெல்லாம் வலித்தது. நேற்றிலிருந்து காய்ச்சல் கொதிக்கிறது. மருந்து போட்டால் குறைவதும் பிறகு மீண்டும் வருவதுமாக இருந்தது.

“பேசாம ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்.. நீ தான் மாட்டேன்னு அடம்பிடிக்கிற” என்று திட்டினார் கல்யாணி.

“போமா.. என்னால எங்கயும் வர முடியாது.. நீ குருவ மட்டும் பார்த்துக்க” என்று கூறி படுத்துக் கிடந்தாள் சண்முகி.

இப்படி காய்ச்சலோடு போராடிக் கொண்டிருக்கும் போது புதிய எண்ணிலிருந்து இப்படி ஒரு செய்தி வந்தால்?

கோபம் தான் அதிகம் வந்தது. ஆனால் சில நிமிடங்களில் கோபம் மெல்ல குறைந்து சிந்திக்க ஆரம்பித்தாள்.

அவளது எண்ணுக்கே செய்தி வந்திருக்கிறது. அவளை வேறு எங்கும் வரச் சொல்லவில்லை. கணவன் வேலை செய்யும் நிறுவனத்திற்கு தான் வரச் சொல்கிறான்.

அனுப்பியது ஆணா? பெண்ணா? என்று தெரியவில்லை. மூளை குழம்பியது. தூக்கம் தொலைந்தது. செய்தியை படித்து ஆறு மணி நேரம் கடந்து விட்டது.

ஆனால் அதே விசயம் மூளைக்குள் சுற்றிக் கொண்டே இருந்தது.

பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு கணவனை அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றான்.

“சொல்லுமா..” என்று அவன் பேசவும் அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது. இவ்வளவு பாசமான கணவன் என்ன செய்து விடுவானாம்?

“எப்ப கிளம்பிறீங்கனு கேட்க கால் பண்ணேன்”

“காலையில கிளம்பி வந்துடுவேன். உனக்கு ஃபீவர் எப்படி இருக்கு?”

“இன்னும் குறையல..”

“அத்தை கூட ஹாஸ்பிடல் போக வேண்டியது தான?”

“நீங்க வாங்க.. அப்புறமா பார்த்துக்கலாம்”

“சரி நல்லா சாப்பிட்டு சீக்கிரமா தூங்கு.. காலையில வந்து பார்க்குறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.

இவன் என்ன செய்கிறான் என்று அப்படி ஒரு செய்தியை அனுப்பி அவளது மனதை கலைக்கிறார்கள்? கோபம் பொங்க அந்த எண்ணை ப்ளாக் செய்து விட்டு படுத்து விட்டாள்.

நள்ளிரவில் தூக்கம் கலைந்தவள் நேரத்தை பார்க்க கைபேசியை எடுக்க, அதில் செய்தி வந்திருந்தது.

“நாளைக்கு உன் புருஷன் வந்ததும் அவன் பையில தேடு.. உனக்கு ஒரு ஆதாரம் கிடைக்கும்” என்று புது எண்ணிலிருந்து வந்திருந்தது.

“அறிவு கெட்டவனுங்க..” என்று திட்டி விட்டு அந்த எண்ணையும் ப்ளாக் செய்து விட்டு படுத்தாள்.

ஆனால் தூக்கம் பறி போனது. கணவனின் மீது சந்தேகம் வந்துவிடுமோ? என்று பயந்து போனாள்.

காய்ச்சலும் அதிகரித்து விட மெத்தையில் புரண்டாள். தேவையில்லாமல் கண்ணீர் வந்தது. கணவன் வந்து கட்டியணைக்க வேண்டும் போல் இருந்தது. அப்போதே அவனை அழைக்க ஆசை வந்தாலும் கட்டுப்படுத்தினாள். தூங்கிக் கொண்டிருப்பான். காலையில் கிளம்பி வேறு வர வேண்டும். தூக்கம் கலைந்தால் பயணம் தடைபடும்.

கணவன் உடனே வந்து விட்டால் போதும்.‌ வேறு எதுவும் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அவளருகே குரு நன்றாக தூங்கிக் கொண்டிருக்க அவனை எழுப்பி விடாமல் அமைதியாக அழுதாள்.

அழுகையுடனே மீண்டும் உறங்கி விட, காலையில் குரு தான் முதலில் எழுந்தான். கல்யாணி கதவை தட்டவும் அவனே சென்று திறந்தான்.

மகள் காய்ச்சலோடு போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தவர் உடனே மகனை அழைத்தார்.

“சீக்கிரம் வாடா.. உன் அக்கா அசைய முடியாம கிடக்குறா.. ஆஸ்பத்திரிக்கு போகலாம்னா கேட்குறாளா?” என்று கல்யாணி மகனிடம் புலம்ப, உடனே ஆட்டோ பிடித்து ஓடி வந்தான் சிவா.

சண்முகியை கை தாங்கலாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மிகவும் சோர்வாக இருப்பதை தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றார் மருத்துவர்.

சண்முகிக்கு கணவனை பார்க்க வேண்டும் என்பது மட்டுமே பெரிதாக இருந்தது. சுப்பிரமணி வீடு திரும்பும் போதே சிவா விசயத்தை தெரியப்படுத்தி விட்டான். சுப்பிரமணியும் அடித்து பிடித்து மருத்துவமனை வந்து சேர்ந்தான்.

சண்முகி அவனை பார்த்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டாள். பிறகு மெல்ல தெளிந்து விட்டாள்.

“அக்காவுக்கு உங்கள பார்த்ததும் தான் மூச்சே வருது மாமா.. இப்படி அடிக்கடி ஊருக்கு போகாதீங்க. பாவம் அக்காவும் குருவும்” என்று சிவா குறை பட்டான்.

“என் வேலை அப்படிடா.. அவசரமா போக வேண்டியதா போச்சு. இனிமே போகல.. சரியா?” என்று கேட்டு மனைவியை சமாதானம் செய்தான்.

சண்முகி தனக்கு வந்த செய்தியை பற்றி கணவனிடம் சொல்லி விடுவோமா? என்று நினைத்தாள்.

ஆனால் அது ஒரு போலியான விசயம். யாரோ வேண்டுமென்று செய்ததை சொல்லி அவனையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று விட்டு விட்டாள்.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவளின் கண்ணில் சுப்பிரமணி கொண்டு வந்த பை தென்பட்டது. அந்த செய்தியும் நினைவு வந்தது.

ஆனால் அவள் பிடிவாதமாக அதை மறக்க முயற்சித்தாள். யாரோ எதுவோ சொன்னதற்காக அவளது கணவனை சந்தேகப்பட்டு அந்த பையை பார்ப்பதா? முடியாது.

சண்முகியை ஓய்வெடுக்க சொன்ன சுப்பிரமணி உடன் இருந்து கவனித்துக் கொண்டான். அவளுக்கு வேண்டியதை செய்தான்.

அவனது அன்பில் சண்முகி ஒரே நாளில் தேறி விட்டாள். மறுநாள் குருவை பள்ளிக்கு கிளம்பும் வேலையை கல்யாணி பார்க்க, சுப்பிரமணி மனைவியை மட்டும் தான் பார்த்தான்.

சண்முகி நன்றாக தேறிய பிறகு தான் வேலைக்கு சென்றான். சுப்பிரமணி சென்று மூன்று மணி நேரங்கழித்து மீண்டும் ஒரு செய்தி வந்தது.

“நீ அறிவாளினு நினைச்சேன். எல்லார மாதிரியும் முட்டாளா இருக்க.. இத பாரு..” என்று சில படங்கள் வந்திருந்தது.

பல்லைகடித்துக் கொண்டு கைபேசியை தூக்கி எறியும் வேகம் வந்தாலும் கை அந்த படத்தை தொட்டு விட்டது.

பார்த்தவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. சுப்பிரமணியும் ஒரு பெண்ணும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அடுத்த படத்தில் ஒன்றாக பார்க்கில் நடந்தனர். அடுத்த படத்தில் சுப்பிரமணி அந்த பெண்ணை நிறுத்தி படம் எடுத்துக் கொண்டிருந்தான். கடைசி படத்தில் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டு செல்ஃபி எடுத்தான்.

சண்முகிக்கு இதயம் நின்று துடித்தது. கண்கள் கலங்கியது. ஆத்திரமாக வந்தது.

“எல்லாம் பொய்.. நான் நம்ப மாட்டேன். எடிட் பண்ணி என் புருஷன என் கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறாங்க.. நம்ப மாட்டேன்” என்று புலம்பியவளின் கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை.

உடனே ஆத்திரம் வர கண்ணீரை துடைத்துக் கொண்டு அந்த எண்ணை அழைத்தாள்.

“யாருடா நீ? ஏன்டா என் வாழ்க்கையில விளையாடுற? உனக்கு அறிவில்லையா?” என்று கத்தினாள்.

“இந்தாமா.. நான் டா இல்ல.. டி.. நீ என்னை எவ்வளவு கேவலமான வேணா திட்டிக்க.. ஆனா நான் அனுப்புன எதுவுமே பொய் இல்ல… நீ நம்பலனா உன் புருஷன் வேலை செய்யுற கம்பெனிக்கு போய் பாரு..”

“நான் ஏன்டி போகனும்? நீ சொல்லுற பொய்ய நம்பி நான் என் புருஷன சந்தேகப்படனுமா?”

“நீ முதல்ல ஆஃபிஸ் போய் நீ தான் அந்தாளு பொண்டாட்டினு சொல்லிப்பாரு.. அப்புறம் தெரியும்.. அவன் எவ்வளவு பெரிய ஃபிராடுனு”

அவள் கேவலமான குரலில் சொல்ல, சண்முகிக்கு பயத்தில் உடல் நடுங்கியது.

“ஏய் நீ..நீ பொய் தான சொல்லுற?”

“இங்க பாரு.. நான் ஒரு பொம்பள.. நீயும் ஒரு பொம்பள. நீ கெட்டுப் போகக்கூடாதுனு தான் விசயத்த சொல்லுறேன். அந்தாளு அராஜகம் தாங்க முடியாம உன் நம்பர தேடிப்பிடிச்சு உனக்கு மெஸேஜ் பண்ணேன். என் கிட்ட இருந்ததுல இது கடைசி நம்பர்.. இதுல நீ சுதாரிச்சுப்பனு நம்புறேன். இல்லனா கெட்டு குட்டிச்சுவரா போ.. ஒரு நாள் அந்தாளு வண்டவாளம் வெளிய வரும் போது நீ தான் ரொம்ப வருத்தப்படுவ.. நீ மட்டும் அவன் பேக்க செக் பண்ணிருந்தா ஏற்கனவே விசயத்த கண்டு பிடிச்சுருப்ப. இன்னைக்கு அவன் ஜாலியா ஆஃபிஸ் வந்தப்போவே தெரியுது.. நீ அவன சந்தேகப்படலனு. சந்தேகப்பட்டுருந்தா அவன் இவ்வளவு நிம்மதியா வந்து நிக்க மாட்டான். இப்பவும் கூட கெட்டுப்போகல.. உன்னை நான் எங்கயும் வர சொல்லல.. நேரா அவன் ஆஃபிஸ் போ. அவன் வண்டவாளம் தெரிஞ்சுடும். அப்படி நல்லவன்னு தெரிஞ்சா என்னை நேர்ல வந்து அடி வாங்கிக்கிறேன்.”

சண்முகிக்கு பேச்சே வரவில்லை. அவளது மனம் குழம்பி விட்டது. இப்போது இவள் சொல்வதை நம்புவதா வேண்டாமா? என்று விளங்கவில்லை.

“நீ.. நீ ஏன் இத சொல்லுற?”

“அத நீ உண்மைய தெரிஞ்சப்புறம் கேளு.. சொல்லுறேன். வைக்கிறேன்” என்று வைத்து விட்டாள்.

சண்முகி கைபேசியை வெறித்துப் பார்த்தாள். அந்த படங்கள் எல்லாம் போலி போலி என்று மனம் அடித்துக் கொண்டாலும் அதில் உண்மை இருந்து விட்டால்? என்று மனதின் எங்கோ ஒரு மூலையில் ஒரு குரல் கேட்டது.

வரவர அந்த குரல் பெரிதாகி வர கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“இது சரி வராது.. இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்டுறேன். என் புருஷன பத்தி எனக்கு தெரியும். அவர் நல்லவர். இப்படி பேசுறவ எவளா இருந்தாலும் கண்டு பிடிச்சு போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுக்குறேன்” என்று சபதமெடுத்தவள் உடனே கிளம்பினாள்.

மனதில் தன் கணவனை சந்தேகப்படுகிறோமோ? என்ற கலக்கம் இருந்தாலும் உண்மையை வெட்ட வெளிச்சமாக்குவதும் முக்கியம் என்று நினைத்தாள். அதே எண்ணத்தோடு மனதை தேற்றிக் கொண்டு சென்றாள்.

அலுவலகம் சென்று சேரும் முன்பு பல முறை மனம் மாறியது. திரும்பிப் போய் விடலாமா? என்று கூட யோசித்தாள். ஆனால் வந்து சேர்ந்து விட்டாள்.

கதவை திறந்து உள்ளே சென்றதும் வாசலில் இருந்த வாட்ச் மேன் அவளை கேள்வியாக பார்த்தார்.

“யாருமா வேணும்?”

“என் வீட்டுக்கார பார்க்க வந்தேன்” என்று சொல்லவும், “உள்ள போமா” என்று விட்டார்.

மேலும் உள்ளே சென்றாள். அந்த இடத்திற்கு இதற்கு முன்பு வந்தது இல்லை. மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்த பெண்ணை அணுகினாள்.

“மேடம்” என்றதும் அந்த பெண் நிமிர்ந்து பார்த்தாள்.

“என் வீட்டுக்கார பார்க்கனும்”

“இங்க வேலை செய்யுறாரா?”

“ஆமா.. மேனேஜரா இருக்காரு”

“பேரு?”

“சுப்பிரமணி”

உடனே அந்த பெண்ணின் முகத்தில் ஒரு பரிதாபம் வந்தது. அதை சண்முகி கவனித்ததும் பயம் அதிகரித்தது.

“லிஃப்ட்ல தேர்ட் ஃப்ளோர் போங்க. கதவுல அவர் பேரு எழுதியிருக்கும்”

உடனே தலையாட்டியவள் கனத்த இதயத்தோடு சென்றாள். வயிறு பிரட்டிக் கொண்டு வருவது போல் இருந்தது. பயத்தில் உள்ளங்கைகள் சில்லிட்டது.

எதோ தவறு செய்வதாக தோன்றினாலும் மேலே நடந்தாள். லிஃப்டில் நுழைந்ததும் உதட்டை கடித்து கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

‘எந்த தப்பும் இருக்காது.. என் புருஷன் நல்லவர்’ என்று பல முறை சொல்லிக் கொண்டாள்.

கதவு திறந்ததும் வெளியே வந்தாள். அங்காங்கே ஆட்கள் தென்பட்டனர். சிலர் அவளை கவனித்தனர். ஆனால் கண்டு கொள்ளவில்லை.

“ஹலோ.. நீங்க யாரு?” என்று ஒருவன் நிறுத்தினான்.

“மேனேஜர் சுப்பிரமணி?”

“இந்த ரூம் தான்” என்று கை காட்டினான்.

அவன் கதவை தட்டும் முன்பே அவள் வேகமாக திறந்து உள்ளே சென்று விட்டாள்.

அங்கு பார்த்த காட்சியில் அவளது உள்ளம் வெடித்து சிதறியது.

அவளுடைய கணவன் அந்த படத்தில் இருந்த பெண்ணுக்கு உணவு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தான். உள்ளே வந்தவளை எதிர் பார்க்காமல் இருவரும் திரும்பிப் பார்த்து அதிர்ந்தனர்.

சுப்பிரமணியின் கையிலிருந்த உணவு கீழே விழ அதோடு சண்முகியின் மனமும் விழுந்து உடைந்தது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்