Loading

அவள் பேசியதில் அதிர்ந்திருந்த நிஷாந்த், “நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்டே பேசிகிட்டு இருக்கீங்க?” என்று அங்கிருந்து நகர போக, அவள், “இந்த ஆஸ்ரமத்துல நிஷாந்த்ன்ற பேர்ல வேற யாராவது இருக்காங்களா?” என்றாள் கேள்வியாக.

அவன் மறுப்பாகத் தலையாட்ட, “அப்போ நான் சரியான ஆள்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்” என்று கண் சிமிட்டவும், அவன் கடுப்பாகி விட்டான். 

“ஒழுங்கா போய்டு இங்க இருந்து! லூசுத் தனமா உளறிக்கிட்டு இருக்க!” என்றவன் விருட்டெனச் சென்று விட, வைஷு, ‘சப்பா ரொம்ப தான் சூடா இருக்கான். அது சரி, எங்க அப்பாவோட ரத்தம் அவன் உடம்புலயும் இருக்குல்ல’ என நொந்தவள், அடுத்து அவனைப் பார்க்க, அவன் படிக்கும் கல்லூரிக்கே சென்றாள்.

அவளை அங்கு பார்த்ததும் திகைத்த நிஷாந்த், யாரும் பார்க்கும் முன் அவளைத் தனியாக அழைத்துச் சென்று, “ஹே உனக்கு புத்தி ஏதாவது கெட்டுப் போச்சா? எனக்கு சொந்தம்னு யாரும் இல்ல. 

நான் ரெண்டு வயசுல இருந்து ஆஸ்ரமத்துல தான் இருக்கேன். அது தெரியாம வந்து கடுப்பேத்திட்டு இருக்க.” என்றான் கோபமாக.

அவள், “எல்லாம் தெரிஞ்சு தான் வந்துருக்கேன் நிஷாந்த். நீ ஆஸ்ரமத்துக்கு வர்றதுக்கு முன்னாடி எங்க இருந்தன்னு தெரியுமா?” என்றதில், “நான் ரெண்டு வயசுல இங்க வந்தேன்னு சொல்லிட்டு இருக்கேன். எனக்கு எப்படி தெரியும், நான் எங்க இருந்தேன்னு?” என எரிச்சலானான்.

“நான்  சொல்றேன்… ! உன் அம்மா சாவித்ரி. அப்பா துரை. ரெண்டு பேரும் லவ் மேரேஜ். கோயம்பத்தூர் தாண்டி ஒரு சின்ன ஊர்ல சந்தோசமா தான் வாழ்ந்துட்டு இருந்தாங்க உன் ரெண்டு வயசு வரைக்கும்.” என்றவள், அவனிடம் அவன் சிறு வயது குடும்ப போட்டோவைக் கொடுக்க, அவனோ மனதில் தோன்றிய ஏதோ ஒரு பரவசத்தில் செய்வதறியாது அதனைக் கை நடுங்க வாங்கிப் பார்த்தான்.

 அவனுக்கு, அவர்கள் முகம் நினைவில் எல்லாம் இல்லை. வளர்ந்த பிறகு அந்த ஆஸ்ரம நிர்வாகி அவனை அருகிலிருந்த ஏதோ ஒரு மருத்துவமனையிலிருந்து கூட்டி வந்ததாகச் சொன்னார். அவ்வளவு தான் தெரியும் அவனுக்கு.

வெகுநேரம் கண் கலங்க அந்த புகைப்படத்தைப் பார்த்தவன் புரியாமல், “இது உண்மையா? இதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும்? அதுவும் பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம்?” என்று புரியாமல் கேட்க,அவள் தயங்கி கொண்டே நடந்ததை கூறியதில் அதிர்ந்து விட்டான்.

“அத்தை, மாமா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட தால, எங்க அப்பா அவங்களை ஏத்துக்கவே இல்ல. அவரு கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம். அட்லீஸ்ட், அந்த மழையில அவங்களை அனுப்பாமக் கூட இருந்துருக்கலாம்…” என்று வருந்திய குரலில் பேசியவள், நிஷாந்தை பார்க்க அவன் உணர்வற்று நின்றிருந்தான். 

முதன் முதலில் தன் தாய் தந்தையை பற்றி அறிந்த மகிழ்வு அவனுள். தப்பான வழியில் பிறந்ததால் தான், அவனை ஆஸ்ரமத்தில் விட்டு விட்டு பெற்றோர்  சென்று  விட்டனர் என்று, அவன் காது பட நிறைய பேர் பேசிக் கேட்டதில் இப்போது ‘நான் அப்படி பிறக்கவில்லையடா! என் அப்பா அம்மாவைப் பாருங்கடா!’ என்று,

 அனைவரிடமும், காட்ட  வேண்டும் என்ற துள்ளலும் இருந்தது. ஆனால், தனக்காகவாவது இருவரும் இருந்திருக்கலாமே என்ற ஏக்கமும் எழவே செய்தது. பின், தன்னை சமன் படுத்திக்கொண்டு, “எங்க விதி இப்படி இருக்கு. இதுக்கு, உன் அப்பாவைத் தப்பு சொல்லி என்ன ஆகப் போகுது?” என்றவன் பெருமூச்சு விட்டு, “இந்த போட்டோவை நான் எடுத்துக்கவா?” எனக் கேட்டான் பாவமாக. அதில் தன்னில் ஏதோ இழப்பதை உணர்ந்தவள், “இந்த போட்டோ மட்டும் தான் உங்களுக்கு வேணுமா?” என்று கேட்டு விட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.

நிஷாந்த் அவளை குழப்பமாகப் பார்க்க, வைஷு சட்டென்று, “இல்ல, உங்களுக்கு சொந்தம்னு அத்தை, மாமா, அத்தை பொண்ணு எல்லாரும் இருக்கோம். 

 உங்களை நான் வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன்னு, என் அம்மாகிட்ட ப்ராமிஸ் பண்ணிருக்கேன்” என்று பேசிக்கொண்டே போக,

 அவளைத் தடுத்தவன், “இங்க பாரு இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு தேடி, என்கிட்டே வந்து உண்மையை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். ஆனால், என் அம்மா அப்பாவை ஏத்துக்காத சொந்தம் எனக்குத் தேவை இல்லை.” என்றதும் அவள் முகம் சுருங்கி விட்டது.

“உனக்கு என் அப்பா மேல கோபம் கண்டிப்பா இருக்கும். நான் இல்லைன்னு சொல்லல, ஆனால் எங்” என்று பேசும் முன், 

“எனக்கு நிஜமா யாரு மேலயும் கோபம் இல்லை. உன் அம்மாகிட்ட சொல்லிடு. நான் உயிரோட நல்லா இருக்கேன். எனக்கு எந்தக் குறையும் இல்லன்னு. அவங்க சந்தோசப்படட்டும் ஆனால், எனக்கு இந்த சொந்தம் வேண்டாம்.” என்றவன் அவளை திரும்பிப் பாராமல் சென்று விட்டான்.

இரண்டு நாட்களாகச் சோர்ந்து போய் இருந்த வைஷு, பின், ‘உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தே ஆவேன்’ என்று உறுதி எடுத்துக் கொண்டு, அவன் செல்லும் இடமெல்லாம் வந்து நின்றாள். அவனோ அப்படி ஒருவள் வருவதையே கண்டு கொள்ள வில்லை. தன் நண்பர்களிடம் சொன்னால், நிச்சயம் சந்தோசப் பட்டு தன்னை குடும்பத்துடன் சேர்த்து வைக்கத் தான் நினைப்பர் என எண்ணி, அவர்களிடமும் மறைத்து விட்டான்.

அன்று அவன் பீச்சிற்கு சென்றிருக்க, அங்கும் அவள் வந்து விட்டதில் பொறுமை இழந்தவன்,  “உனக்குக் கிறுக்கு தான் பிடிச்சுருக்கு. ஏன், இப்படி உன் வேலையை விட்டு என் பின்னாடி சுத்திகிட்டு இருக்க? நான் தான் உங்கிட்ட சொல்லிட்டேன்ல, உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு” என்று பொது இடத்தில் கத்தி விட, அவளுக்குக் கண் கலங்கி விட்டது. தலையைக் குனிந்து கொண்டு, அவன் திட்டியதில் வருந்திச் சிறிது தூரம் நடந்து கடலைப் பார்த்து அமர்ந்தாள். அவள் கண்ணீரை கண்டு அவனுக்கு என்னவோ போல் ஆகி விட, அப்படியே செல்லத் தோன்றாமல் அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

அவள் முகத்தை உம்மென்று வைத்து, அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பிக்  கொள்ள, அவளின்  சிறு பிள்ளைத் தனத்தில் தன்னையறியாது புன்னகைத்தவன், “இப்போ என் மாமன் பொண்ணுக்கு என்ன வேணுமாம்?” எனக் கேட்க, அவள் விழி விரித்து, அவனைப் பார்த்தாள். அவனுக்கும் பெரும் ஆச்சர்யம் தான். ‘அவள் கண்ணீர் தனக்குள் இப்படியொரு மாற்றத்தை ஏற்படுத்துமா?’ என்றெண்ணி.

“நிஷாந்த், அப்போ நீ வீட்டுக்கு வர்றியா, என்கூட?” என்று ஆர்வமாகக் கேட்டவளை, யோசனையாகப் பார்த்தவன், “ஆமா! உங்க அப்பா தான், என் அப்பா அம்மாவை ஏத்துக்கலன்னு  சொன்ன? அப்போ இப்போ அவருக்குக் கோபம் போய்டுச்சா? என்னை மட்டும் இப்போ அவரு ஏத்துக்குவாரா?” என கேள்வியாகக் கேட்க, அவள் திருதிருவென விழித்தாள்.

இப்போது  வரை,  தங்கை   இறப்பை  பற்றி, அவருக்குத் தெரியாது தான். தெரிந்தாலும் அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று புரியவே இல்லை எனக் குழப்பத்துடன் யோசித்தவளையே பார்த்த நிஷாந்த், அவளைக் கண்ணுக்குள் நிரப்பினான்.

‘ஆமா, வெளிய நமக்காக நம்ம அத்தை பொண்ணு மாமா பொண்ணுலாம் நம்மளை கல்யாணம் பண்ணிக்க வெய்ட் பன்ணிட்டு இருக்கு’ என்று விஷ்வா சொன்னது நினைவு வர ‘கரு நாக்கு டா உனக்கு’ என்று மனத்தினுள்ளேயே விஷ்வாவை பாராட்டிக்கொண்டான்.

பின், தன் எண்ணம் செல்லும் போக்கை அறிந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “என்ன மேடம்? உங்க அப்பாவைப் பத்தி பேசுனதும் ஆஃப் ஆகிட்டீங்க. ஹ்ம்ம்? உனக்கே பதில் தெரியலைல.” என கேலியாகக் கேட்க, அவள் மூக்கை சுருக்கி, “என் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் தான். ஆனால், இதைச்  சொன்னா, எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு தெரியல!” என்றாள் பாவமாக.

“ம்ம் முதல்ல நீ உன் அப்பாகிட்ட இதெல்லாம் சொல்லு. அப்படி அவரு ஓகே சொன்னா, நான் உன் வீட்டுக்கு வரேன். டன்” என்றதும், ‘எப்படினாலும் நமக்கு சங்கு கன்பார்ம் தான்’ என்று நொந்து, “சரி நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து உன்னைப் பார்க்குறேன்.” எனச் சவாலாய் சொல்லிவிட்டு போனவள், மறுநாளே அவனிடம் வந்து நின்றாள், “அப்பா கிட்ட இந்த விஷயத்தை சொல்லணும்னு நினைச்சாலே கை கால்லாம் உதறுது.” என்று.

அவன் கேலிப் புன்னகையுடன், “அப்போ இந்த வெட்டி வேலையை விட்டுட்டு, போய் ஆகுற வேலையைப் பாரு.” என்று விட,, “ப்ச் நான் கூடிய சீக்கிரம் அப்பாகிட்ட உன்னைப் பத்தி சொல்லிடுவேன்…” என்றதும், அவன் தோளைக் குலுக்கி அங்கிருந்து நகன்றான். அவள் பேசியதை வைத்தே அவளுக்கு அவள் அப்பாவின் மேல் கடும் பயம் என உணர்ந்து கொண்டவன், அவளைச் சுத்தலில் விட்டான்.

ஆனால், அவள் தினமும் அவனைக் காண வந்து விடுவாள். அவனுக்கும், அவளுடனான சந்திப்பு உற்சாகத்தையே தரும். ஆனால், இதனை நண்பர்களிடமிருந்து மறைக்கத் தான் அரும்பாடு பட்டான். ஒவ்வொரு நாள் வரும் போதும், அப்பா கிட்ட நாளைக்கு பேசிடுவேன், நாளைக்கு பேசிடுவேன், என்று சொன்னவளை “எப்போ சொல்றன்னு பாப்போம்? பயந்தாங்குளி.” என்று கிண்டலடிப்பான்.

அவனை முறைப்பவள், “நாளைக்கு நான் கண்டிப்பா அப்பாகிட்ட சொல்லி, உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டு போகல நான் உனக்கு மாமான் பொண்ணு இல்ல, மாமா” என்பாள். அவளின் ‘மாமா’ என்ற அழைப்பு, அவனுக்கு உயிர் வரை  சென்று இனிமையை கொடுக்கும். உறவு முறை சொல்லி அழைக்க நாதியற்று இருந்தவனுக்கு, அவள் உரிமையோடு பேசுவது, புது உலகத்தையே காட்டியது. சில நாட்களில், அவள் அவனைத் தேடி வருவது மாறி, அவன் அவளைத் தேட ஆரம்பித்தான். ஒரு நாள் அவள் வரவில்லை என்றாலும், ஏங்கிப் போனான்.

அவளிடம் அவன் நண்பர்கள் பற்றி, அவர்களே தன் மொத்த சொந்தம் என்பது பற்றி எல்லாம் சொல்பவனை, கண்ணிமைக்காமல் பார்ப்பாள். ஒரு மாதமே என்றாலும் இருவருக்கும் பல வருடம் பழகிய உணர்வு. அன்று, அவளின் பிறந்த நாளாக இருக்க, இதுவரை பீச் தவிர அவளுடன் எங்கும் வராமல் இருந்தவனை கட்டாயப்படுத்தி ஹோட்டலுக்கு அழைத்தாள்.

“ஷான் ப்ளீஸ்! என் பர்த்டேன்றனால தான கூப்பிடுறேன்… எனக்காக வரமாட்டியா?” என்றாள் சிணுங்கிக் கொண்டு. ஆனால்,  அவனுக்கு, ஆஸ்ரமத்தில் எல்லாரும் நலிந்த சாப்பாடை சாப்பிடுவர். தான் மட்டும் எப்படி போய் நல்ல சாப்பாடு சாப்பிட முடியும் எனத் தவித்தவன்,  உறுதியாக மறுக்க,

“இன்னைக்கு உனக்கு மட்டும் இல்ல, எல்லாருக்குமே என் ட்ரீட் தான். இன்னைக்கு ஆஸ்ரமத்துல இருக்குற எல்லாருக்கும் என் அம்மா சாப்பாடு அரேஞ் பண்ணிருக்காங்க. உனக்கும் சேர்த்து தான் குடுத்துருக்காங்க. ஆனால், நீ என் கூட தான் இன்னைக்கு சாப்பிடணும் அதான் உன்னை ஹோட்டலுக்கு கூப்பிடுறேன். அது என் பிரெண்டோட அப்பாவோட ஹோட்டல் தான்… சோ, நம்ம அங்க போய் வீட்டு சாப்பாடு சாப்பிடலாம் டன்.” எனக் கேட்டவளை, ரசனையுடன் பார்த்தான்.

அவன் பார்வை பாவையவளை துளைக்க, விழி தாழ்த்திக் கொண்டவள், அவனை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றாள். 

அவள் புக் செய்த கார்னர் டேபிளில் சென்று அமர, அங்கு அவர்களைச் சுற்றி அந்த ஹாலில் யாருமே இல்லை. அவன் முன்பு, அவள் கொண்டு வந்த சாப்பாடு கேரியரை பரப்பியவள், இலை விரித்து, அவனுக்குப் பரிமாறினாள். முதல் முதலாக வீட்டு சாப்பாடு, அதுவும் தன் மாமன் பெண்ணின் கையால் பரிமாறிய சாப்பாடு என அதனை ரசித்து ருசித்துச் சாப்பிட்டவனுக்கு, சாப்பிடும் முன்பே வயிறும் மனமும் நிறைந்து போனது.

ஏக்கத்துடன் கூடிய நீர் வேறு கண்ணை மறைத்துக் கொண்டு நிற்க, அவனை உணர்ந்து கொண்டவள், அவனுக்கு அருகில் சென்று அமர்ந்து, இலையில் இருந்த சாதத்தை எடுத்து அவனுக்கு ஊட்டினாள். அந்த நிமிடத்தை மனதில் பொக்கிஷமாய் பூட்டியவன், அவளுக்கும் ஊட்டி விட்டான்.

பின், அதில் இருந்த ஜாமுனை எடுத்து ஊட்டப் போகையில் அவள், “ஐயோ எனக்கு இது பிடிக்காது” என்றிட, “வேற என்ன பிடிக்கும் நவி?” எனக் கேட்டான் குறும்பாக.

அவள் அதனைப் புரிந்து கொள்ளாமல், “எனக்கு கேசரி தான் பிடிக்கும்” என்றதும், “ஓகே வெய்ட் பண்ணு” என்று வேகமாக வெளியில் சென்று கடையில் வாங்கிய கேசரியுடன் வந்தான். “ஹே நான் சும்மா தான் சொன்னேன்… அதுக்காக உடனே போய் வாங்கிட்டு வந்துட்டியா?” என முறைத்தவளிடம், “நீ ஏதாவது பெருசா கேட்டுருந்தா, கண்டிப்பா வாங்கித் தந்துருக்க முடியாது… கேசரி’னால தப்பிச்சேன்.” என்று கேலியாகச் சொல்லி விட்டு, அதனை எடுத்து அவளுக்கு ஊட்டியவன், “ஹேப்பி பர்த்டே என் மாமன் பொண்ணே!” என்றான்.

“தேங்க்ஸ் மாமா. என் பிறந்த நாளுக்குக் கிடைச்ச பெஸ்ட் எவர் கிப்ட் இதான்…” என்று தலை சாய்த்து மனம் உணர்ந்து சொன்னாள். அவன் விழி உயர்த்தி, “எது? இந்தக் கேசரியா?” என்று நக்கலடித்தவனிடம், மறுப்பாகத் தலையாட்டி, “நீ தான்” என்றாள் கண்ணில் மின்னிய வெட்கத்துடன்.

இது  வரை மனதில், இருவருக்குமே ஒருவர் மேல், ஒருவர் காதல் இருந்தாலும், அதனைத் தனக்குள் ரசித்தவர்கள், இப்போது, அதனை  மறைக்கத் தோன்றாமல்,  பார்வையாலேயே ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டிருந்தனர். அதற்கு மேல் அவன் பார்வை வீச்சை தாங்க இயலாது, தலையைக் குனிந்த வைஷு, கேசரியை எடுத்து அவனுக்கு ஊட்டினாள்.

அவன் அதனை வாங்காமல், அப்படியே அவள் வாயில் வைத்துத் திணிக்க, “நான் குடுத்தா வாங்க மாட்டியா” என முறைத்தவளிடம், “எனக்குக் கையால சாப்புடுற கேசரி பிடிக்காது நவி…” என்றவன், “எனக்கு இதுல இருக்குற கேசரி தான் வேணும்.” என அவள் இதழை கைக்காட்டி அவள் உணரும் முன்பே அவள் இதழைச் சிறைப்பிடித்தான்.

அதில் திகைத்து விழி விரித்தவள், அவன் இதழ் யுத்தத்தில் கிறங்கி கண்ணை இறுக்கி மூட, அவன் வேகம் கூடிக் கொண்டே சென்றது. மங்கையவள் சுற்றுப்புறத்தை மறந்து, தன்னை மறந்து, தங்கை காதலையே ஏற்று கொள்ளாத தன் தந்தை தனது காதலை எப்படி ஏற்றுக்கொள்வார்? என்ற எண்ணத்தை மறந்து அவனுள் மூழ்கிப் போனாள்.

அவளிடமிருந்து மெல்ல விலகியவன் அவள் நெற்றியில் இருந்த முடிகளை ஒதுக்கி, தன் தோளில் சாய்த்து, அவள் தலையில் தன் தலையைச் சாய்த்து கொண்டவன், அவள் உள்ளங்களையில் அவனின் உள்ளங்கை சூட்டை பரிமாறிக் கொண்டிருந்தான்.

இருவரும் அந்த நிலையில் வெகுநேரம் எதை எதையோ பேசிவிட்டு, காதல் ஆழியில் அடித்துச்  செல்லப் பட, அப்போது வைஷு, “மாமா நான் உன்னால முடிஞ்சதை எது கேட்டாலும் செய்வேன்னு சொன்னியே, அப்போ நான் உன்னால முடிஞ்ச ஒன்னைக் கேட்டா செய்வியா… என் பிர்த்டே விஷ்?” எனக் கேட்க, “என்ன பண்ணனும்னு சொல்லுடா?” என்றான் கிறக்கமாக.

“என் கூட வீட்டுக்கு வரணும். ப்ளீஸ்! அம்மா உன்னைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படுறாங்க. அவங்களுக்கும் அப்பா கிட்ட பேச ரொம்ப பயம். எனக்கும் தான். ஆனால், நீ என் கூட இருந்தா, கண்டிப்பா பயம் இருக்காது. ப்ளீஸ் டா மாமா… என்கூட வாயேன்.” என்று அழைக்க, அந்த நேரம் அவனுக்குள் இருந்த காதல், அவன் மூளையை மழுங்கடித்து என்னவோ உண்மை தான்.

“என் நவி கேட்டு நான் வேணாம்னு சொல்லுவேனா, நான் வரேன்.” என்றதும், அவளுக்குப் பெரு மகிழ்ச்சி. உடனே அவனை இழுத்துக்கொண்டு, அவள் வீட்டிற்குச் சென்றாள்.

அங்கு முத்துவேலோ, கடும் ரௌத்திரத்தில் வீட்டில் இங்கும்  அங்கும் நடந்து கொண்டிருந்தார்.

 அவருக்கு என்ன ஆனது? எனப் புரியாமல், ஜானகி கையைப் பிசைந்து கொண்டு நிற்க, அப்போது தான், வைஷு நிஷாந்துடன் வீட்டுக்கு வந்தாள்.

வந்தவள், “அப்பா” எனப் பேச ஆரம்பிக்க, அவரின் கை இடியாக அவளின் கன்னத்தில் இறங்கியது. அதில் அதிர்ந்த நிஷாந்த் “மாமா” என அழைக்க, “யாருக்கு யாரு மாமா? கண்ட கண்ட அநாதை பயல எல்லாம் நான் மருமகன் ஆக்க, இங்க என்ன சத்திரமா நடத்திட்டு இருக்கேன்.” என்றவர் தீப்பார்வையுடன் வைஷுவை முறைத்து,

“உன்னைப் படிக்க அனுப்புனா, பொறுக்கி, அநாதை பயலோட ஊர் சுத்திட்டு வர்ற. உன் அத்தை புத்தி உனக்கும் அப்படியே இருக்கு.” என்று கோபத்தில் வார்த்தைகளைக் கொட்ட, நிஷாந்த்  இறுகி விட, வைஷு, “அப்பா” என்று குரலை உயர்த்தி அதட்டினாள்.

“என்ன அப்பா? இல்ல, என்ன அப்பா? போ உள்ள..!. அறைஞ்சு பல்லை எல்லாம் கழட்டிடுவேன்…” என்று அவளை அறைக்குள் தள்ளியவர், கதவைத் தாழிட்டார். அவள் ஒன்றும் புரியாமல்,”அப்பா கதவைத் திறங்கப்பா. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க…” என்று கதவைத் தட்டியதை கண்டு கொள்ளாமல், 

நிஷாந்திடம் “இப்போ நீயா வெளிய போறியா இல்ல நான் கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளட்டுமா?” என்று உரத்த குரலில் சொல்ல, அவன் தனக்குள் எழுந்த கோபத்தையும், 

இயலாமையையும், அவமானத்தையும் மறைத்துக் கொண்டு, ‘அநாதை’ என்ற வார்த்தையை நிறைய முறை கேட்டிருந்தாலும், இப்போது அந்த வார்த்தை வழங்கிய உயிரைக் கொல்லும் வலியைப் பொறுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

அன்று காலை எதேற்றையாக வைஷுவை நிஷாந்துடன் பார்த்த முத்துவேல், கோபத்துடன் அவனைப் பற்றி விசாரிக்க, அவன் அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவன் என்று தெரிந்ததும் பொங்கி விட்டார். அந்த நேரத்தில் தான் அவருக்குக் கவுரவம், சாதி, மதம், எல்லாம் கண் முன் தெரிய, மேலும், அவனை வீட்டிற்கே கூட்டி வருவதை கண்டதும், பொறுமையற்று அவனைக் காயப்படுத்தி விட்டார். ஆனால், அது, அவரின் தங்கை மகன் என்று அறியாமல் போனது யாருடைய பிழையோ?

வைஷு கண்ணில் வழிந்த நீரெல்லாம் வற்றிப்போய், உதட்டைக் கடித்துக்கொண்டு நிற்க, தமி வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவள் கையைப் பிடித்து, அவளைச் சமன்படுத்தினாள். ஆரு நடந்த அனைத்தையும் அப்போது தான் அறிந்து கொண்டு, தலையில் கை வைத்து அமர்ந்து, “உனக்கு அறிவிருக்கா வைஷு? உங்க அப்பா பத்தி தெரிஞ்சுருந்தும் எதுக்கு அவனைக் கூட்டிட்டு போன? அட்லீஸ்ட் எங்க கிட்டயாவது சொல்லிருக்கலாம்ல?” என்று எரிச்சலாக, வைஷு மீண்டும் கண்ணீர் உகுத்தாள்.

நிஷாந்த், “அவள் என்ன தெரிஞ்சா பண்ணுனா? நான் தான் கொஞ்சம் யோசிச்சுருக்கணும்.”  என்று அவளுக்கு சப்போர்டிக்கு வர, பெருமூச்சு விட்ட ஆராதனா, “சரி அப்பறம் என்ன ஆச்சு” எனக் கேட்க, நால்வரின் முகமும் இறுகி விட்டது.

தேவா தான் முதலில் தன்னிலை உணர்ந்து பேச்சை மாற்ற, “ப்ச், முதல்ல நீ ஏன் அவனை அடிச்சன்னு சொல்லு?” என்று சற்று கோபத்துடன் கேட்க, 

“அடிக்காம என்னடா பண்ணச் சொல்ற? கிட்ட தட்ட 5 வருஷம், இவனை நினைச்சு சிரிக்கிறதைக் கூட மறந்துட்டா. எங்க கிட்ட பேசியே, எத்தனை நாள் ஆச்சுன்னு தெரியுமா? அவ்வளவு ஏன், அன்னைக்கு மட்டும் நான் சரியான நேரத்துக்குப் போகாம இருந்திருந்தா, இவள் கையை அறுத்துகிட்டு செத்துப் போயிருப்பா” என்றதும், நிஷாந்த திகைத்து விட்டான். “என்ன ஆச்சு? என்ன ஆச்சு நவி” என்று பதறிட, வைஷு சொல்ல விடாமல் தடுத்தாள்.

ஆருவோ,  அவளைப்    பார்வையாலேயே  எரித்து, “அதெப்படிடி செத்து போலாம்னு முடிவெடுத்த? நீ செத்துட்டா எல்லாம் சரி ஆகிடுமா? நீ செத்துட்டா உங்க அப்பா புருஞ்சுக்குவாரா? இல்ல இவனுக்குத் தான் எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுமா?” என்றவளுக்கு அன்று அவள் கண்ட காட்சி இன்றும் மனதைப் பிசைந்தது.

நிஷாந்த் வெளியில் சென்றதும் அழுது கரைந்த வைஷு, தன்னால் தானே அவனுக்கு இந்த அவமானம் என நினைத்து, தன் மேலே கோபம் எழ,  அவன் பிரிவையும், அவன் முகத்தில் தெரிந்த வலியையும் தாங்க இயலாது, கையை அறுத்துக் கொண்டாள்.

அப்போது தான், ப்ராஜெக்ட் வேலையை முடித்து விட்டு, வைஷுவை பார்க்க வந்த ஆராதனா, வீடே அமைதி பூங்காவாக இருப்பதை கண்டு, ‘ஆமா, இது எப்பவுமே மயானம் மாதிரி தான் இருக்கும்.’ என நினைத்து, வைஷுவின் அறைக்குள் போக அவள் அறை வெளியில் தாழிடப்பட்டிருந்தது.

‘இந்த ரூமை யாரு வெளிய பூட்டுனது?’ எனப் புரியாமல் கதவைத் திறந்தவள், ரத்த    வெள்ளத்தில்  கிடந்த,  தன்   தோழியைக் கண்டு நடுங்கி விட்டாள். அவள் சத்தத்தைக் கேட்ட பிறகே, முத்துவேலும் ஜானகியும் வந்து அவளை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவள் உயிர் பிழைத்தது அதிசயமேயென மருத்துவர் சொன்னதோடு, அவள் கண் விழித்ததும், “எதுக்கு என்னைக் காப்பாத்துனீங்க? நான் சாகனும்.” என்று கத்த, அவளின் அருகில்  இருந்த  ஆரு, இதனை கேட்டுக் கோபத்தின் உச்சிக்கே சென்று,  பளாரென அறைந்து விட்டாள்.

“சாகுடி ,போய்  சாகு … அப்படியே செத்து தொலைஞ்சுரு” என்று கடுமையாகப் பேச, அம்முவும் தமியும் அவளைச் சமன்படுத்தி, வைஷுவிடம் நடந்தது என்ன? என்று விசாரித்தனர். அப்போது அது ஏதோ காதல் விவகாரம் என உணர்ந்து கொண்டவர்களிடம், வைஷு எதுவுமே சொல்லவில்லை.

ஆனால், ஆரு தான் முத்துவேலை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாள். 

அவருக்கும் வைஷு இப்படி செய்தது பெரிய அதிர்ச்சியாகத் தான் இருந்தது. 

தன்னிடம் பயப்படாமல் தன் கண்ணை பார்த்துப் பேசுவது ஆராதனா மட்டும் தான். அவளிடம் பேச்சுக் கொடுக்க அவரே சற்று தயங்குவார் தான். அவள் ஏதாவது சுள்ளெனக் கேட்டுவிடுவாள். அந்தச் சம்பவத்திற்கு பிறகு, அவள் வைஷுவிடம் பேசுவதையே நிறுத்தி இருந்தாள். அவளும் யாருடனும் பேசுவதில்லை.

நிஷாந்த், ‘ஏன் நவி இப்படி பண்ணுன’ என்று கண்ணாலேயே நடுக்கத்துடன் அவளைப் பார்க்க, ‘சாரி மாமா’ என்று பாவமாகப் பார்த்தாள். தேவா, “சரி பேசுனது போதும்… எல்லாரும் போய் வேலையைப் பாருங்க…” என்று அனைவரையும் அனுப்ப முயல, ஆராதனா, “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரல, அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு?” என்றாள் அழுத்தமாக. அவன் அதே அழுத்தத்துடன் “நான் எல்லாரையும் போகச் சொன்னேன்…” என்றான்.

அருண், “டேய் இதுங்க அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்குதுங்கடா” என மிரள, விஷ்வா, “இப்போ பாரு நான் எப்படி சங்கத்தைக் கலைக்கிறேன்னு” என்று விட்டு, “டோரா கொண்டு போகும் பேக் பேக்கு! உனக்கு இன்னும் பத்தலையா ஃபிளாஷ் பேக்கு!” என்று கடித்து விட்டு ‘எப்படி?’ என அருணை பெருமையாகப் பார்க்க, அவன் தலையில் அடித்துக் கொண்டான்.

விஷ்வாவை வெறியாய் முறைத்த ஆரு, சட்டென சுற்றும் முற்றும் பார்த்து, “அம்மு?, தமி, அம்மு எங்க?” எனக் கேட்டாள் பதட்டத்துடன். அப்போது தான், அவள் அவ்வளவு நேரமும் அங்கில்லை என்றே உணர்ந்தவள், “என் பின்னாடி விஷ்வா கூடத் தான் வந்தாள்” என்றிட, விஷ்வாவும் அப்போது தான் அவளையே தேடினான். ஆனால், அவள் அங்கு இல்லை என்றதும் அனைவருமே அதிர்ந்து விட்டனர்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
9
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்