
சத்யா யுகாத்ரன் கேட்ட கேள்வியில் ஒரே ஒரு நொடி திகைத்துப் பின் மீண்ட இதயாம்ரிதா, “ஒரு ரெண்டு ஸ்டெப் பின்னாடி தள்ளி நில்லுங்க” எனப் பணித்தாள்.
அவள் மீதிருந்த பார்வையை மாற்றாதவனாக பின்னால் நகர்ந்தவனின் உச்சி முதல் பாதம் வரை தனது எக்ஸ்ரே பார்வையால் ஊடுருவியவள், “ஸ்மார்ட்னெஸ்க்கு குறைச்சல் இல்ல தான். பட் மாடலிங் பண்ணுவீங்களா?” எனக் கேட்டாள் அர்த்தமாய்.
“இதுவரை ட்ரை பண்ணது இல்ல” சத்யா தோள்களைக் குலுக்கிக் கொள்ள,
“ஓகே… கேமரா அண்ட் லைட்டிங் டெஸ்ட் பாக்கலாம். அதுல ஓகே ஆனதுக்கு அப்பறம் லெட்ஸ் ஸ்ஸீ!” என்றவள் பத்மபிரியாவை அழைத்து சத்யாவிற்கு மேக்கப் சோதனை செய்யச் சொல்லிக் கூற அவள் வியப்புடன் நின்றாள்.
பின், “நான் எல்லாம் ரெடி பண்றேன் மேம்…” என்று விட்டு தலையைச் சொறிந்தபடியே வெளியேறினாள்.
அன்று மாலை மாடலிங் கேண்டிடேட்ஸ் நேர்முகத்தேர்விற்காக வந்திருக்க, அனைவரும் வெகுநேரம் காக்கவைக்கப்பட்டனர்.
சிசிடிவி மூலமாக அனைத்தையும் கவனித்த இதயாம்ரிதாவிடம் அன்றைய ரிப்போர்ட்டை கொடுக்க உள்ளே வந்தான் அகில்.
அவனுக்கு வேண்டிய விளக்கங்கள் அளித்தவள், தனதறைக்கு வந்த பத்மபிரியாவிடம் என்னவென விசாரித்தாள்.
“மேம்… நமக்கு எப்பவும் ஆட் ஷூட் பண்ணித் தர்ற ஆளுங்க கான்டராக்ட்டை கேன்சல் பண்ணிட்டு போய்ட்டாங்க. மேக்கப் ஆர்ட்டிஸ்ட், கேமரா மேன்னு யாருமே அவைலபில் இல்ல. இப்ப அதுக்கும் புதுசா ஆளுங்களை எடுக்கணும்” என்றதும்,
“சுத்தம்” என நக்கலாய் மொழிந்தான் சத்யா யுகாத்ரன்.
அவனைத் திரும்பி முறைத்த இதயாம்ரிதா, “நீ லைட்டிங் ரூம் ரெடி பண்ணு. ஐ வில் கம்!” என்றதும், குழப்பத்துடனே வெளியில் சென்றாள்.
“கேமரா மேன், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், காஸ்டியூம் பிக்கர் இல்லாம எப்படி மேம்?” சத்யா கேள்வி எழுப்பியதும் அகில் தானாக ஆஜர் ஆனான்.
“மேம்…” என்றபடி காலரைத் தூக்கி விட்டுக்கொண்டவன், “பேசிக்கலி… எனக்கு ட்ரெஸிங் சென்ஸ் அதிகம்” என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்ள, அவனை மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தாள்.
“பார்த்தாலே தெரியுது! பார்மல் ஷர்ட்க்கு ஜீன்ஸ் போட்டு அதை இன் பண்ணிட்டு வந்த உன்னோட சென்ஸ்…” என்று நக்கலடிக்க,
“இது தான் ட்ரெண்ட் மேம். ஆளை பார்த்தாலே சொல்லிடுவேன். யார் யாருக்கு என்ன கலர் சூட் ஆகும்னு! நீங்க கூட அன்னைக்கு பீச் கலர்ல ட்ரெஸ் போட்டுருந்தீங்களே. அதுல அழகா இருந்தீங்க. பட் இந்த டார்க் கலர் உங்களுக்கு அவ்ளோவா செட் ஆகல” என்றவனை முறைத்ததில், திருதிருவென விழித்தவன் “ஒரு எக்ஸ்சாம்பிள்க்கு சொன்னேன் மேம். இப்ப நம்ம சத்யா சார எடுத்துக்கங்க. அவரோட கலருக்கும் ஹைட்டுக்கும் என்ன கலர் போட்டாலும் செட் ஆகும் தான். ஆனா, இந்த பார்மல் விட லைட் கலர்ல டீ – ஷர்ட்டும், பிளாக் ஜீன்ஸும் போட்டா இன்னும் அம்சமா இருப்பாப்புடி” என்றதில் இதயாம்ரிதாவின் விழிகள் சட்டென சத்யாவைத் தழுவியது.
♥️♥️♥️♥️♥️
“என்ன ப்ரொபி நீங்க. இன்னைக்கு காலேஜ் டே அதுவுமா செம்மயா ரெடியாகி வருவீங்கன்னு பார்த்தா. இன்னைக்கும் இதே பார்மல் ட்ரெஸ், டக் இன்னு என் கற்பனைய கலைச்சுட்டீங்க” என்றாள் சோகமாக.
“இங்க நான் ஸ்டாஃப். திஸ் இஸ் மை ட்ரெஸ் கோட்” என்று விட்டு அவளை அசட்டை செய்தபடி அவளைத் தாண்டி நடந்தவனை வழிமறித்தவள்,
“நான் என்ன உங்களை கோர்ட் சூட்டும் குர்தாவுமா போட சொல்றேன். இன்னைக்கு ஒரு நாள் இந்தக் கஞ்சி போட்ட சட்டைக்கு லீவ் குடுத்துட்டு, அழகா ஒரு டீ ஷர்ட்டும், ஜீன்ஸும் போட்டுட்டு வரலாம்ல” என்றவளின் பேச்சுக் காதில் விழவே இல்லை என்பது போல அவளைப் புறக்கணித்தான்.
அவள் விடவில்லை. “சரி இன்னும் பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகலைல. சோ இப்ப ரெடி ஆகிட்டு வாங்க” என்றவளை நின்று புரியாது பார்த்தவனிடம், பின்னால் மறைத்து வைத்திருந்த கவரை நீட்டினாள்.
“இதுல வைட் டீ – ஷர்ட்டும், பிளாக் ஜீனும் இருக்கு. உங்களுக்கு செம்மையா இருக்கும் ப்ரொஃபி” எனக் கொடுத்ததில் அதனை வாங்கி தூரத்தில் எறிந்தவன், “மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று எச்சரித்து விட்டு செல்ல, “என் பிசினஸே இது தான். ஹலோ ப்ரொஃபி” அழைக்க அழைக்க அவன் சென்று விட்டான்.
“மேம்! மேம்!” அகில் இரு முறை அழைத்தபிறகே சட்டென நிகழ்வு மீண்டவளை கூர்பார்வையுடன் எதிர்கொண்டான் சத்யா யுகாத்ரன்.
அவர்களின் பார்வை பரிமாற்றத்தைத் தடுக்கும் கரடியான அகில், “நீங்க கூட இமேஜின் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டீங்க தான?” என்று இளித்தபடி கேட்க, இதயாம்ரிதாவின் விழிகள் காட்டிய நெருப்பில் அசடு வழிந்தவன்,
“அது இல்ல மேம்… இன்டெர்வியூக்கு வந்தவங்க ரொம்ப நேரமா வெயிட்டிங். அதான் அவசரத்துக்கு ப்ரொபஷனல்ஸ தேடுறதுக்கு நாமளே நம்மளை அர்ப்பணிக்கலாம்னு கேட்டேன்…” என்றதில் அவளது தீப்பார்வை தொடர,
“இல்ல நான் என் அர்ப்பணிப்பை மார்க்கெட்டிங்லயே காட்டிக்கிறேன்” என்று தப்பித்து ஓட முயன்றான்.
“அகில்!” இதயாம்ரிதாவின் குரலில் நின்று விட்டான்.
“வந்தவங்களுக்கு காஸ்டியூம் பிக்ஸ் பண்ணு. சில காஸ்டியூம்ஸ் மேக்கப் ரூம்ல இருக்கும். அதை மட்டும் யூஸ் பண்ணிக்கலாம்” என்றதும், அகிலுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
சத்யாவோ, “சீரியஸ்லி?” என நெற்றி சுருக்க, அகில் தான் “சார் என் திறமையை மேடம் புருஞ்சுக்கிட்டாங்க. நீங்க ஏன் முட்டுக்கட்டைப் போடுறீங்க?” என்று வெகுவாய் சலித்தான்.
“எனக்கு வைட் டீ ஷர்ட் நல்லாருக்கும்னு எனக்கே தெரியும். அதுக்கு ஒரு காஸ்டியூம் சூஸர். இதுல பெருமை வேற!” எனப் பல்லைக்கடித்தான்.
“விடுங்க சத்யா. என்ன இருந்தாலும் என் ஜூனியரா போய்ட்டான். ஒரு சான்ஸ் குடுத்து பாக்கலாம்” என்றதில் அகிலுக்கு வெட்கம் தாளவில்லை.
“மேம் அப்பறம் அந்த மேக்கப், கேமரா மேன் எல்லாம்…” என ஆரம்பிக்க,
“அரேஞ்ச் பண்ணிக்கலாம்” என்று விட்டு அவள் மடிக்கணினியில் பார்வையை படர வைக்க, அகில் “அதில்ல… ஒரு சின்ன சஜஷன்” என்று ஆரம்பித்தான்.
சத்யா தான், “என்ன? நீ போட்டோவும் எடுப்பியா?” எனக் கேட்டான் நக்கலாக.
“ச்சே ச்சே… மார்னிங் சன்ரைஸ மரத்துக்குள்ள விட்டு எடுக்குறது, சூரியன் மறையிறப்ப கடலுக்கு அடியில எடுக்குறதுலாம் எனக்கு செட் ஆகாது. ஆனா விது நல்லா எடுப்பான். என்னையவே டிஃபரென்ட் ஆங்கில்ல நிறைய போட்டோ எடுப்பான் மேம் நீங்க வேணா பாருங்களேன்” என்று விதுரனுக்கு மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தான்.
நெற்றியைத் தேய்த்த இதயாம்ரிதாவிடம் சோர்ந்து போகாது தனது புகைப்படங்களைக் காட்டினான்.
“இதெல்லாம் விது எடுத்தது தான். அவனுக்கு எப்படி எடுத்தா அழகா இருக்கும்னு தெரியும். மிதுனா, பூமியையே அழகா போட்டோ எடுப்பான்னா பாத்துக்கங்களேன்…” என்றதில், “டேய்!” என்று அதட்டினாள் இதயாம்ரிதா.
“ஹி… ஹி சும்மா ஃபன்னுக்கு மேம்” என்ற அகிலிடம், “அதுசரி மிதுனா பூமிகாவுக்கு வேற என்ன திறமை இருக்கு” எனக் கேட்டாள் கையைக் கட்டிக்கொண்டு.
“அவங்க சூப்பரா மேக்கப் போடுவாங்க மேம். காலேஜ்ல நடந்த பேன்சி ட்ரெஸ் காம்பெடிஷன்ல பூமி மேக்கப் பண்ணி குடுத்து மிது பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்குனா.”
“அதுசரி… இன்னைக்கு பாப்போம் உங்க திறமையை எல்லாம்!” என்றதில்
“நான் போய் அவங்களை கூப்புடுறேன் மேம்” என்றவன் வகுப்பறையை கட் செய்ய, கல்ச்சுரல் விழாக்களில் பங்கெடுத்து பிராக்டிஸ் என்ற சூட்சமத்தை கையாள்வது போல வேலையில் இருந்து தப்பிக்க திடுதிடுவென நண்பர்களை நோக்கி ஓடினான் அகில்.
விதுரனின் புகைப்படத் திறமையைப் பற்றிக் கூறியதும் சத்யாவின் இதயத்தில் சுளீரென ஒரு வலி.
அதனை அழகாய் மறைத்துக் கொண்டவன், கையைக் கட்டிக்கொண்டு நடப்பதை வேடிக்கைப் பார்க்க, அகில் மற்ற மூவரையும் தரதரவென இழுத்து வந்தான்.
“எதுக்குடா வேல நேரத்துல அழிச்சாட்யம் பண்ணிட்டு இருக்க?” என பூமிகா கடிய, அவனோ பதில் பேசாது அவர்களை இதயாம்ரிதாவின் முன் நிறுத்தி, “இதோ போட்டோகிராஃபரும் மேக்கப் ஆர்டிஸ்ட்டும் கிடைச்சுட்டாங்க மேம்” என்றான் பணிவாக.
விதுரனுடன் சேர்ந்து இரு பெண்களும் அவனைத் திரும்பி பார்த்து திருதிருவென விழித்துப் பின் தீயாக முறைக்க, அவனோ அவர்கள் புறம் திரும்பவே இல்லை.
இதயாம்ரிதா அவர்களது முக பாவனைகளை கண்டு விட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டாள். இதே போலான குறும்புகள் பல செய்து நண்பர்களை மாட்டி விட்டு வேடிக்கைப் பார்த்த தருணங்கள் ஏராளம்.
நேர விரயம் என்று புரிகிறது தான். ஆனால் அவளுக்கே அவளை ரெப்ரெஷ் செய்து கொள்ளத் தோன்றியதில் அகிலின் சேட்டைகளை அமைதியாய் கண்காணித்தாள்.
“என்னடா விளையாடுறியா?” விதுரன் அடிக்குரலில் கடிந்து கொள்ள, “மேடம் என்ன பிளே கிரவுண்டா வச்சுருக்காங்க விளையாட. பீ சீரியஸ் விது” என்றான் தீவிரமாக.
“அட பரங்கி மண்டையா… எங்களை எதுக்குடா கோர்த்து விட்ட?” மிதுனா பல்லைக்கடிக்க,
“க்ளாஸ் கட் அடிக்கிறப்ப ஒண்ணா தான கட் அடிச்சோம். இப்ப வேலையை கட் அடிக்கிறதுக்கு மட்டும் தனியா பிளான் பண்றது ப்ரெண்ட்ஷிப்க்கு பண்ற துரோகம் மிது” என்றவனை கெட்ட வார்த்தையில் திட்டத் தோன்றியது மூவருக்கும்.
“நீங்க டிஸ்கஸ் பண்ணி முடிச்சுட்டா வேலையைப் பார்க்கலாமா?” இதயாம்ரிதா இடைமறிக்க, “சியூர் மேம். சொல்லுங்க இப்ப எந்த கேண்டிடேட்க்கு முதல்ல மேக்கப் டெஸ்ட் பண்ணனும்” என்று கேட்டான் அகில்.
“முதல்ல உங்களோட குறளி வித்தையை நம்ம சத்யா சார்கிட்ட இருந்தே ஸ்டார்ட் பண்ணுங்க!” என மேலுதட்டைக் கடித்து உதட்டுக்குள் சிரிப்பை ஒளித்தபடி கூறியதில் சத்யா அவளை முறைத்தான்.
“இவங்களை நம்பியா? நான் வரலை இந்த விளையாட்டுக்கு” என்று மறுத்திட விதுரன் குழப்பத்துடன் “அண்ணா” என ஆரம்பித்து பின் எச்சிலை விழுங்கி விட்டு, “இவருக்கு எதுக்கு மேக்கப் டெஸ்ட்?” எனக் கேட்டான்.
“சத்யா சார் மாடலிங் ட்ரை பண்ணப் போறாராம்!” என்றதும், மிதுனா விழி விரித்தாள்.
“அவ்வ்வ்! சார் உங்களுக்கு மாடலிங் சூப்பரா செட் ஆகும்” என்று வழிந்து தள்ள, விதுரன் அவளைக் கடுமையாய் முறைத்தான்.
மேக்கப் டெஸ்ட், கேமரா டெஸ்ட் எல்லாம் அழகாய் வெளிவந்தது.
ஆறடி ஆண்மகனின் அழகிய வதனத்தை மென்’ஸ் லோஷன், பவுண்டேஷன் என மேலும் அழகு சேர்த்தனர். விதுரன் வீட்டிலேயே விலையுயர்ந்த டிஜிட்டல் கேமரா வைத்திருந்தான். அதை பல முறை உபயோகித்திருந்ததால், அலுவலகத்தில் இருந்து கேமராவை உபயோகிக்க அவனுக்குத் தடுமாற்றம் நேரவில்லை.
தீபாவளி பொங்கலன்று தமையனை வித விதமாய் புகைப்படம் எடுத்து அழகு பார்ப்பதில் அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. எந்த கோணத்தில் அவன் அதிக அளவு கவர்ச்சியாய் தெரியுவானென்று அறிந்தவனாதலால் அதிகம் நேரத்தை வீணாக்காது சில புகைப்படங்கள் என்றாலும் கச்சிதமாய் எடுத்திருந்தான்.
சத்யாவின் முகம் தான் துளியும் புன்னகைக்காது இருந்தது. அவனுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், செய்தே ஆக வேண்டிய கட்டாயம்!
மிதுனா தான், “வாவ்! செமயா எடுத்திருக்க விது… சத்யா சார் நீங்க மட்டும் மாடல் ஆகிட்டா, நான் தான் உங்க பர்ஸ்ட்டு ஃபேன்…” என்று அனைத்துப் பற்களையும் காட்டும் நேரம் அங்கு இதயாம்ரிதா வந்து விட்டாள்.
உண்மையில் அவள் எதிர்பார்த்த தோற்றம். அதீத விளக்குகளும், கண்ணைக் கவரும் உடையும், அவனது அழுத்தம் நிறைந்த கருவிழிகளும் அதிக கவர்ச்சியாய் தோன்றிட, விதுரன் எடுத்த புகைப்படங்களும் நன்றாக இருந்ததில் அவனையும் பாராட்டினாள்.
“பட் விதுரன்… நான் சொல்ற ஆங்கிள் ட்ரை பண்ணி பாரு…” என அடுத்த போஸ்ஸிற்கு சத்யாவைத் தயாராக்க, “இன்னும் முடியலையா?” என்றான் தாடை இறுக.
“முடியிறதா? இப்ப தான் ஆரம்பிச்சு இருக்கு!” ஏளன நகையுடன் கூறியவள், மிதுனா மேக்கப் சரி பண்ணு என்று விட்டு, மேஜையின் மீதிருந்த வயர் ஒன்றை எடுத்து அகிலை அடித்தாள்.
“என்னடா ட்ரெஸ் செலக்ட் பண்ணிருக்க. வேற கலெக்ஷன் எடு” என்றதில்,
“ஸ்ஸ் ஆ… மேம் நான் வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன். ஆபிஸ்ல இருக்குற கலெக்ஷன்ல சாருக்கு ஏத்த மாதிரி எதுவும் இல்ல. எல்லோ ஷர்ட் தான், இப்போதைக்கு ஓகே வா இருக்கு” என்றதும், அவனை முறைத்து விட்டு தனது அறைக்குச் சென்றவள், மீண்டும் சில நொடிகளில் அங்கு வந்தாள்.
“இதை வியர் பண்ணுங்க சத்யா” என்று ஒரு கவரை கொடுக்க, அதனைப் புருவம் சுருக்கிப் பார்த்தவன் “என்ன இது?” எனக் கேட்டதில்,
“உங்களுக்காக ட்ரெஸ் கொண்டு வர சொல்லிருந்தேன். ம்ம்!” எனக் கொடுத்ததில், அவனும் அதிகம் யோசியாமல் அதனை அணிந்து கொண்டான்.
கல்லூரி நாள்களில் அவனுக்காக அவள் வாங்கிய வெள்ளை நிற ராயல் டி – ஷர்ட்டும், கருப்பு நிற ஜீன்ஸும் அவனுக்கென்றே அம்சமாய் நெய்தது போல பொருந்திப்போனது.
ஒரே ஒரு கணம் அவனைப் பார்வையால் விழுங்கியவள், விதுரனைப் படுத்தி எடுத்து தான் எதிர்பார்த்த மாதிரியான கோணங்களில் புகைப்படத்தை எடுத்த பிறகே அமைதியானாள்.
வேலையில் இருந்து தப்பிக்க, வேலியில் செல்லும் ஓணானிடம் மாட்டிக்கொண்ட கதையாகி விட்டது நால்வருக்கும்.
இந்த ஒற்றைப் புகைப்பட ஷூட்டிலேயே அனைவரும் புரிந்து கொண்டது ஒன்று தான்.
இதயாம்ரிதா ஒன்றும் நாற்காலியில் சொகுசாய் அமர்ந்து மேற்பார்வை மட்டும் பார்க்கவில்லையென.
உடை அலங்காரங்கள், சிகை திருத்தம், மேக்கப், புகைப்பட நுணுக்கங்களைக் கூட தேர்ந்து விட்டே இந்தத் துறைக்கு வந்திருக்கிறாள்.
முறையாய் போட்டோகிராஃபி வகுப்பிற்கு சென்றவன் விதுரன். அவனுக்கே தெரியாத விஷயங்களை கூட இந்த சில நிமிடங்களில் இதயாம்ரிதா எடுத்துக் கூறி, அவனைப் பிழிந்து வேலை வாங்கியதில், அவன் எடுத்ததை விட அழகாய் வெளிவந்தது சத்ய யுகாத்ரனின் புகைப்படங்கள்!
“இது சூப்பரா இருக்கு மேம்!” அவனே வாயைத் திறந்து பாராட்டி விட்டான்.
இதயாம்ரிதா சட்டென காலை உதறி தள்ளி நின்று, “டேய் அகில் உன் ப்ரெண்டு வாய்ல இருந்து ரெண்டு முத்து விழுந்துருக்கு. தேடி எடு!” என்று கலாய்த்ததில், அங்கு கொல்லென சிரிப்பு பரவ விதுரன் ஒரு கணம் விழித்து விட்டுப் பின் மெல்ல புன்னகைத்தான். அதுவும் நொடியில் மறைந்து போனது.
இதயாம்ரிதா பூமிகாவின் தோள் மீது முட்டியை வைத்து அழுத்தி, “இந்த சார்க்கு ரொம்ப ஹெட் வெய்ட்டோ?” எனக் கிண்டலாகக் கேட்க,
“அதெல்லாம் இல்ல மேம். அவனுக்கு பொதுவா ரிச் பீப்பிள்னாலே பிடிக்காது. அதுனால எங்களைத் தவிர வேற யார்ட்டயும் அவன் பேச மாட்டான்…” என விளக்கம் கொடுத்தாள்.
“குட் கொள்கை! கீப் இட் அப்!” என்று மீண்டும் அவனைக் கிண்டல் செய்து விட்டு அங்கிருந்து நகன்றவளைக் கண்டு மெல்ல எரிச்சல் மேலிட்டது அவனுக்கு.
மிதுனா மேக்கப் சாதனங்களை எடுத்து வைத்தபடி, விதுரனை ஒரு முறை பார்த்து விட்டுப் பின் மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள். இதயம் மட்டும் இயங்க மறுத்தது குற்ற உணர்வில்.
—-
முகத்தில் இருந்த மேக்கப்பை அழுத்தித் துடைத்த சத்யா யுகாத்ரன் முகத்தில் நீரை வாரி இறைத்தான்.
அதே நேரம் அவனது அலைபேசி அழைக்க, அதனை எடுத்துக் காதில் வைத்தவனின் இதழ்களில் குரூர புன்னகை.
எதிர்முனையில் ஒரு ஆண்குரல் ஒலித்தது. “போன வேலை எந்த அளவுல இருக்கு சத்யா?”
“ரொம்ப டைம் எடுக்காது மச்சி. நினைச்சதை விட சீக்கிரமே முடிஞ்சுடும்” என்றவனின் முகம் கண்ணாடி வழியே தீக்கங்காய் ஜொலித்தது.
புது காதல் மலரும்
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

ரிதா இதையும் கடந்து விடுவாள்