அத்தியாயம் 8
பரிதியின் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டாள் நிரஞ்சனா.
அவன் தலையில் இருந்து ரத்தம் எதுவும் வருகிறதா என்று அவள் பார்க்க, நல்ல வேலையாக அது போல எதுவும் இல்லை.
ஆட்டோக்காரரும் ஆட்டோவை வேறு பக்கம் திருப்பி, அந்த பக்கம் எதுவும் மருத்துவமனை வருகிறதா என்று பார்த்துக் கொண்டே ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.
மழை இன்னும் நின்ற பாடில்லை..
ஏனோ நிரஞ்சனாவுக்கு கண்கள் எல்லாம் கலங்கி அழும் சூழ்நிலைக்கு வந்து விட்டாள்.
இது போன்ற நிகழ்வு, என்ன தான் செய்தி தாள்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தாலும், “அச்சச்சோ ..” என்று உச்சுக் கொட்டி அவர்களுக்காக அனுதாபம் மட்டுமே பட்டிருப்பாள்.
ஆனால் இப்பொழுது அப்படி அல்ல. தன் கண் முன்னே ஒரு ஜீவன் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் அவளுள் வேரூன்றி விட்டது..
ஆட்டோக்காராரோ, “அம்மாடி அவரு கன்னத்தை மாத்தி மாத்தி தட்டி விட்டு, அவரை கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வா மா..” என்று அந்த அவசரத்தில் அவர் கூற,
“சரிண்ணா..” என்றவள், அவனது கன்னத்தில் மாத்தி மாத்தி தட்டினாள்.
“சார்.. எந்திரிங்க.. இங்கப் பாருங்க சார்.. நீங்க உயிரோட தான் இருக்கீங்க.. எந்திரிங்க சார்.. கொஞ்சம் இங்க பாருங்க.. அன்கான்சியஸ் ஆகிடாதீங்க.. உங்களுக்கு வேண்டியவங்க உங்களுக்காக காத்துகிட்டு இருப்பாங்க சார்.. தயவு செஞ்சி கண்ணு முழிச்சிப் பாருங்க..” என்று அழுது கொண்டே, அவனை எழுப்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.
மீண்டும் மீண்டும் விடாமல் தொடர்ந்து அவன் கன்னத்தில் மாறி மாறித் தட்டிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் அவனது கருவிழிகள் லேசாக உருள ஆரம்பித்தன..
வலியில் முனகிக் கொண்டே மெதுவாக கண்களை திறந்துப் பார்க்க, கண் முன்னே ஒரு பெண் அழுதுக் கொண்டிருந்தாள்.
“யார் இவள்.. எதற்காக அழுகிறாள்…” என்று நினைத்தவனுக்கு அதிகம் யோசிக்க முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அவனுக்கு.
அவளது மடியில் தன்னைக் கிடத்தி இருக்கிறாள் என்று.
அவளிடம் ஏதோ கையை நீட்டிக் கூற வந்தவன், மீண்டும் கண்ணை மூடி மயக்கத்திற்கு சென்றுக் கொண்டிருந்தான்.
“அச்சோ .. அண்ணா இவரு திரும்பவும் மயக்கத்துக்கு போய்ட்டாங்க. சீக்கிரம் ஏதாவது ஹாஸ்பிடல் போங்க..” என்று துரிதப் படுத்தினாள்.
அவள் பேசியது எல்லாம் அவனுக்கு கேட்டது தான் . ஆனால் எந்த எதிர்வினையையும் அவனால் ஆற்ற முடியவில்லை.
ஆட்டோக்காரரும், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து விரைவாக செலுத்த, ஒரு இடத்தில் மருத்துவமனை இருப்பதற்கான பெயர் பலகை இருந்தது.
“அம்மாடி.. இதோ பக்கத்துல ஹாஸ்பிடல் இருக்கு போல.. போர்டு வச்சி இருக்காங்க. போயிரலாம்..” என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைக் கொடுத்தார்.
சொன்னபடியே சிறிது நிமிடங்களில் மருத்துவமனை வந்து சேர, உள்ளே வண்டியை செலுத்தி, நுழைவு வாயில் முன்பு நிறுத்தி, ” நீ இரு மா.. நான் போய் இன்போர்ம் பண்ணி ஆள கூட்டிட்டு வரேன்.. ” என்று ஆட்டோக்காரர் வேகமாக உள்ளே ஓடினார்.
எதையுமே பார்க்க முடியாத விக்ரமிற்கு, அவர்களின் பதற்றமும் அவசரமும் நன்றாகவே புரிந்தது. அவனுக்கும் அந்த பதட்டம் தொற்றிக் கொண்டது என்னவோ உண்மை.
அவனும் தன் அக்காவின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டான்.
அவனால் அந்த சூழ்நிலையில் எதையும் பேச முடியவில்லை.
உள்ளே சென்ற ஆட்டோக்காரர், நிலைமையின் அவசரத்தை அவர்களுக்கு எடுத்துக் கூற, இரண்டு ஆண் செவிலியர்களும் கூடவே அவர்கள் ஸ்ட்ரெச்சரையும் எடுத்து வந்தனர்.
“எம்மா.. கொஞ்சம் இறங்கு மா. அவரை இதுல படுக்க வைக்கணும்..” என்று ஆட்டோக்காரர் கூற,
அவளும் சரி என்றவள், இறங்க முற்படுகையில் எதுவோ அவளை இழுக்க, என்னவென்றுப் பார்க்க, அவள் கழுத்தில் போட்டு இருந்த சங்கிலியை இறுக்கமாக பிடித்த படி இருந்தான் பரிதி.
அவள் எடுக்க முயற்சி செய்ய, அது பலன் அளிக்கவில்லை அவளுக்கு.
நேரம் ஆவதை உணர்ந்து தன் கழுத்தில் இருந்து கழட்டி விட்டாள் அதை. பின்னர் அதை வாங்கிக் கொள்ளலாம் என்று.
பின், அவனை நன்றாக படுக்க வைத்து விட்டு அவள் இறங்கிக் கொண்டாள்.
இப்பொழுது அவனை செவிலியர்கள் இருவர் சேர்ந்து ஸ்ட்ரச்சரில் படுக்க வைத்து, அவசரப் பிரிவிற்கு அவனை தூக்கிச் சென்றனர்.
நிரஞ்சனா, விக்ரமை கீழே இறங்க உதவி செய்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
அவசரப் பிரிவில் உள்ள மருத்துவர், அவனை பரிசோதித்துப் பார்க்க, அவனுக்கு இதயத் துடிப்பு இருப்பதை உணர்ந்து, அவனுக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தனர்..
அவனது உடைகள் மற்றும் அணிந்து இருந்த கழுத்துச் சங்கிலி, கைக் கடிகாரம், மோதிரம், அவனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசி, அவனது பர்ஸ் மற்றும் நிரஞ்சனாவின் சங்கிலி என்று அனைத்துப் பொருட்களையும் ஒரு கவரில் போட்டு ஓரமாக வைத்து இருந்தனர்.
அவனுக்கு முதலில் ரத்தத்தை எல்லாம் துடைத்து எடுத்த பின்னர்,
தலையில் அடிபட்டு எதுவும் ரத்தம் வருகிறதா என்றுப் பார்க்க, அது இல்லை என்று உறுதி ஆனதும், மற்ற இடங்களில் காயத்தின் ஆழத்தை ஆராய்ந்தனர்.
கை, கால் மற்றும் இடுப்புப் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது.
முகத்திலும் அடிபட்டு காயம் ஆழமாக இருந்தது. அதனால் தான் ரத்தம் கொஞ்சம் அதிகமா வெளியேறி முகம் எங்கும் ரத்தமாக இருந்தது. அதனை எல்லாம் துடைத்து எடுத்து இருந்தனர்.
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் தற்காலிக கட்டுப் போட்டு, அவனை அழைத்துச் சென்று x-ray மற்றும் ஸ்கேன் எடுத்து வரும் படி செவிலியர்ககுக்கு பரிந்துரை செய்தார் மருத்துவர்.
அதே சமயம், அலுவலகத்தில் இருந்து கிளம்பிய இனியனும் வைஷுவும் வீடு வந்து சேர்ந்தனர்.
பெருமழை அடித்து ஊத்திக் கொண்டிருந்ததால், வீட்டுப் பெரியவர்கள் வெளியில் சென்ற இளையவர்களுக்காக காத்து இருந்தனர்.
இவர்கள் இருவரும் வருவதைப் பார்த்த நாயகி, ” டேய் இனியா உங்க அண்ணன் எங்க டா.. நீங்க மூணு பேரும் சேந்து வருவீங்கனு நெனச்சேன். ” என்றார் அவர் தன் மூத்த மகன் இன்னும் வந்து சேரவில்லையே என்று .
” அண்ணா.. இன்னைக்கு ஆபீஸ் வரவே இல்லம்மா. நேரா அவரு பேக்டரிக்கு தான் போனாரு. பேக்டரில இருப்பாரு ம்மா.. ” என்று தன் தாயிடம் கூறி விட்டு உடை மாற்றச் சென்று விட்டான்.
வைஷ்ணவியோ, ” கொஞ்ச நேரம் பாக்கலாம் அத்தை.. அதுக்கு அப்புறம் நம்ம போன் பண்ணி கேக்கலாம்.. ” என்று சொல்லிவிட்டு அவளும் தனது அறைக்கு சென்றுவிட்டாள் .
இருவரும் சில மணி நேரத்துளிகளுக்கு பிறகு கீழே வர, அப்பொழுதும் பரிதி வராமல் இருப்பதை பார்த்த இனியன், பேக்டரிக்கு அலைபேசியில் அழைத்துப் பார்த்தான்.
அழைப்பு மணி சத்தம் கேட்டு, அங்கு இருந்த மேனேஜர் அழைப்பை ஏற்று, ” ஹலோ.. சொல்லுங்க சார்.. ” என்று பணிவுடன் கேட்டான்.
“ஹான்.. குமார்.. அண்ணா அங்க இருக்காரா..” என்று கேட்க,
“அவரு எப்பவோ கிளம்பிட்டாரு சார்.. இன்னுமா வீடு வந்து சேரல..” என்றான் குமார்.
” ஆமா குமார். அண்ணா இன்னும் வீட்டுக்கு வரல.. ” என்றான் யோசனையுடன்.
“பரிதி சார் க்கு நீங்க போன் பண்ணி பாருங்க சார்.. போன்ல நெட்ஒர்க் கூட கிடைக்காம இருக்கும். இல்லனா வண்டி எதுவும் ப்ரோப்லேம் ஆகி இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணுங்க. நானும் ட்ரை பண்றேன் சார்..” என்று அவனிடம் கூற,
அவனும் சரி என்றவாரு, அழைப்பைத் துண்டித்து தன் தமயனை பற்றிய யோசனையில் ஆழ்ந்தான்.
இதனை எல்லாம் கவனித்த மங்களம், ” இனியா .. உங்க அண்ணனுக்கு போன் போட்டுப் பாரு..” இயல்பாகவே உண்டான பதட்டத்துடன் கூறினார்.
இனியனும் அவனுக்கு அழைத்துப் பார்க்க, அந்த பக்கம் முதலில் அழைப்பு போகவில்லை.
மீண்டும் மீண்டும் அழைத்துப் பார்க்க, அழைப்பு போகவே இல்லை.
இப்பொழுது அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
“இனியா.. நீ போய் பார்த்துட்டு வா.. ” என்று அவனது தாய் சொல்ல, அவனுக்குமே அது தான் சரி என்று பட்டது.
“இனியா.. நானும் வரேன். சேந்து போகலாம்..” என்று விநாயகமும் அவனுடன் கிளம்பினார்.
அவனும் சரி என்று இருவருமாக காரில் புறப்பட்டுச் சென்றனர்.
மழை இன்னும் விட்டப்பாடு இல்லை. “ச்ச.. இன்னைக்குனு பார்த்து இப்படி மழை பெய்யுது..” என்று கடுப்புடன் வண்டியை அவர்களது பேக்டரி இருக்கும் பக்கம் ஓட்டினான்.
காரை ஓட்டியபடி இனியன் ஒரு பக்கமும், விநாயகம் மறுபக்கமும் பார்த்தபடி வந்தனர்.
இங்கு, மருத்துவமனையில் x-ray மற்றும் ஸ்கேன் பார்க்கச் சென்று இருக்க, அதற்கான அறிக்கை எல்லாம் தயார் செய்து பரிதியை அழைத்து வந்து இருந்த செவிலியரிடம் கொடுத்து அனுப்பினார்.
செவிலியரும் மீண்டும் பரிதியை வார்ட் க்கு அழைத்து வந்த பிறகு, மருத்துவரை சந்தித்து அந்த அறிக்கையை எல்லாம் சமர்ப்பித்தார்.
அவரும் அனைத்தையும் பார்த்துவிட்டு, “பேசன்ட் கூட வந்தவங்களை வரச் சொல்லுங்க.. ” என்றார் மருத்துவர் செவிலியரிடம்.
செவிலிப் பெண்ணும் வெளியே வந்து, “நீங்க தான் இப்போ ஆக்சிடன்ட் ஆன பேசன்ட் கூட வந்தீங்களா..” என்று நிரஞ்சனா மற்றும் ஆட்டோக்காரரை பார்த்துக் கேட்டார்.
“ஆமா சிஸ்டர்.. அவருக்கு என்ன ஆச்சி..” என்று பயத்துடனும் பதட்டத்துடனும் கேட்டாள்.
“உங்கள டாக்டர் உள்ள கூப்பிடுறாங்க. வாங்க..” என்று இருவரையும் வரும்படி கூறிவிட்டுச் சென்றார்.
“விக்ரம். நீ இங்க இரு. நான் போய் டாக்டர் கிட்ட பேசிட்டு வரேன். ” என்று அவனை அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டு இருவருமாக உள்ளேச் சென்றனர்.
அவர்களைப் பார்த்த மருத்துவர், “பேசன்ட் க்கு கை, கால் அப்புறம் இடுப்பு பகுதியில எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கு. அது போக நிறைய இடத்துல காயம் பட்டு இருக்கு. அங்க எல்லாம் தையல் போடணும். முகத்திலையும் காயம் ஆழமா இருக்கு. அங்கேயும் ஸ்ட்ரிட்சஸ் போடணும். நல்ல வேலையா அவரு தலையில் ரொம்ப அடிபாடாதனால அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதே சமயத்தில நீங்க சரியான சமயத்துல கொண்டு வரலைனா கூட தலைல பிளட் கிளாட் ஆக வாய்ப்பு இருக்கு . அது அவரோட உயிருக்கே ஆபத்து. நீங்க நர்ஸ் சொல்ற புரோஸிசர் படி ஃபால்லொவ் பண்ணுங்க. ஆபரேஷன் அவருக்கு ஸ்டார்ட் பண்ணனும். ” என்று அனைத்தையும் கூறி விட்டு, செவிலியருடன் அவர்களை அனுப்பினார்.
சில ஃபார்ம்களில் கை எழுத்து போடச் சொல்ல, தயங்கியபடி இருந்தாள் நிரஞ்சனா.
“என்னம்மா.. பார்த்துட்டே இருக்க. கை எழுத்து போடு..” என்று பக்கத்தில் நின்று இருந்த ஆட்டோக்காரர் அவசரப் படுத்த,
அவள் அந்நேரத்தில் எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை.
அவள் அவர் நீட்டிய இடத்தில் எல்லாம் கை எழுத்தை போட்டாள்.
இறுதியாக ஆபரேஷனுக்கு உண்டான பணத்தைக் கட்டச் சொல்ல, அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அவள் தன் தம்பிக்காக சிறுக சிறுக சேர்த்து வைத்து இருந்த பணத்தை தவிர வேறு ஒன்றும் அவளிடம் இல்லை.
இப்பொழுது இதற்கே அதிகப்படியான பணம் தேவைப்படும். அந்த அளவுக்கு தன்னிடம் இருக்காது. என்ன செய்வதென்று அவளுக்கு தெரியவியில்லை.
அப்பொழுது தான் சட்டென்று அவளுக்கு ஒன்று தோன்றியது.
அவரின் வீட்டிற்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை என்று.
“அவரது பர்ஸில் எப்படியும் அவருக்கு சம்மந்தப்பட்ட நபரின் கார்டு இருக்கும். அவருக்கு தொடர்பு கொண்டு கூறினால் என்ன..” என்று நினைத்தவள், செவிலியரிடம் சென்று “அவரோட திங்ஸ் எல்லாம் எங்க சிஸ்டர் வச்சி இருக்கீங்க..” என்று கேட்டாள் நிரஞ்சனா.
“ஓ.. சாரி மேடம். உங்ககிட்ட கொடுக்கத்தான் எல்லாத்தையும் ஒரு கவர்ல போட்டு வச்சி இருந்தேன். டாக்டர் ஸ்கேன் எடுக்க சொன்னதும் அப்படியே ஓரமா வச்சிட்டேன். இருங்க எடுத்துட்டு வரேன்.” என்று செவிலியர் அவளிடம் மன்னிப்பை வேண்டி விட்டு, அந்தப் பையைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்.
நித்தமும் வருவாள்.