
அத்தியாயம் 8
குணசீலன் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, டேர்ம் இன்சூரன்ஸாக போட்டு வைத்த அமௌன்ட் அவர்கள் கையில் கிடைத்தது. அவர் நடத்தி வந்த கடையை அடுத்து எடுத்து நடத்த வழி மற்றும் ஆள் இல்லாத காரணத்தால் அதையும் கைமாற்றி, வந்த பணத்தை மகள் பெயரில் போட்டு வைத்தார் ஜெயந்தி.
ஆறெழில் கவுன்சிலிங்கில் தேர்ந்தெடுத்ததும் கவர்மெண்ட் பேஸ் காலேஜ் என்பதனால் டொனேஷன் ௭துவும் இல்லாமல் பீஸ் மட்டுமே கட்டி விட்டு வந்தனர். மொத்தத்தில் பண தேவை என அவர்களுக்கு பெரிதாக எதுவும் வந்துவிடவில்லை. இத்தனை நாள் யூனிபார்ம் என்பதால் பெரிதாக ட்ரெஸ்ஸில் கவனம் செலுத்தாதவள், காலேஜிற்கு தேவையான புது ட்ரஸ் தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டாள்.
காலேஜ் சேரும் தினத்தின் முந்தைய இரவு “காலேஜில சேர போறதுனால பெரியாளாகிட்டோம், இஷ்டம் போல இருக்கலாம், படிக்கத் தேவயில்லன்ற எண்ணத்தலா விட்டுரு சொல்லிட்டேன். உன்ன நீ தான் பாத்துக்கணும், துணைக்கு யாரும் கிடையாது. ஒழுங்கா படிக்கிற வேலய மட்டும் பாக்கணும், வேற எந்த டிஸ்டிராக்சனும் இருக்கக் கூடாது”௭ன ஜெயந்தி அவள் தலையை கோதியவாறு ஸ்ட்ரிக்டாவே சொல்ல.
“ம்மா, நா அல்ரெடி டிசைட் பண்ணிட்டேன், இனிமே டிஸ்டிராக்ட் ஆக மாட்டேன், (அப்போதும் உண்மையையே சொன்னாள், அவருக்கு தான் புரியவில்லை). பயப்படாம இரு. அப்பாவும் இதே தான் அன்னைக்கு சொன்னார், இன்னைக்கு அவரு இல்ல. நீயும் அதையே சொல்லாத ப்ளீஸ்” என திடமாக ஆரம்பித்து சோகமாக முடித்தாள் ஆறு.
“உனக்கு ஒரு நல்லது பண்ணாம நா எங்கயும் போயிடமாட்டேன், போதுமா? தூங்கு. நாளைக்கு முதல் நாள் காலேஜ், இத்தன நாள் லீவுனு லேட்டா எந்துச்ச மாதிரி நாளைக்கும் லேட்டா எந்திக்க முடியாது, 2பேரும் வேற கிளம்பணும். நீ சீக்கிரமா எந்துருச்சா தான் வாங்கி வச்ச பெயின்ட்டெல்லாம் அடிச்சு கெளம்ப சரியா இருக்கும்” என சிரித்தவாறு அவளை கட்டிக்கொள்ள.
“ஆமா ஆமா சீக்கிரம் தூங்கலாம்” என தானும் அம்மாமேல் கைப்போட்டுக்கொண்டாள்.
அவளால் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்லவே முடியவில்லை. மைண்டுக்குள் அது, இது என ஒவ்வொன்றாக வந்து போய்க்கொண்டிருந்தது. 5 மணிக்கே விழிப்பு வந்து விட, அதன் பின் என்னப் புரண்டும் உறக்கம் வரவில்லை. எழுந்து ஹீட்டரை போட்டுவிட்டு குளித்தும் வந்துவிட்டாள். ஒருவிதமான பயம், எக்ஸைட்னஸ் இரண்டும் கலந்த பீலிங்கில் சுற்றி வந்தாள்.
முழுதாக 2 வருடங்கள் கழித்து ப்ரகலத்தனை அருகில் பார்க்க போகிறாள், பேச போகிறாள், அவனிடம் ரியக்ஷன் ௭ப்படி இருக்குமோ? திட்டி விடுவானோ? ௭ன்றெல்லாம் யோசித்து கொண்டிருந்தாள்.
பின் ஏதோ தோன்ற அப்பாவின் ரூமைத் தேடிச் சென்றாள். அவரது திங்க்ஸ் எல்லாம் அகற்றப்பட்டு வெற்றறையாகவே இருந்தது. ஜெயந்தி தான் குணசீலன் இறந்த ஒரு மாதம் அந்த அறையிலேயே முடங்கிக் கிடந்தவர், என்ன நினைத்தாரோ திடீரென ஒரு நாள் அங்கு இருந்த அத்தனையயும் பழைய விலை கடைகளிலிருந்து ஆள் வரவைத்து கொடுத்தனுப்பி விட்டார். அவர் போட்டோ மட்டுமே சாமி அறையில் இருக்கிறது.
அந்த அறையை நிதானமாக சுற்றிப் பாத்த ஆறெழில், “இன்னைக்கு ஃபஸ்ட்டுடே காலேஜ்ப்பா. ப்ரெசிடெண்ட் இங்க தான் படிக்குறாருன்ற ஒரே காரணத்துக்காக இதே காலேஜ் நானும் செலக்ட் பண்ணி படிக்கப் போறேன். அவங்க இங்கேயும் என்ன ஒதுக்கிட்டு போயிடக் கூடாதேன்னு தோணுதுப்பா. நா எடுத்த முடிவுல எந்த வகையிலும் கீழ இறங்கிடக் கூடாதுன்னு என்ன பிளஸ் பண்ணுங்கப்பா” எனக் கேட்டுவிட்டு அமைதியாக 5நிமிடம் நின்று விட்டு வெளிவர, ஜெயந்தி அவர்கள் அறையிலிருந்து “எழில்” என்று அழைத்தவாறே வெளிவந்தார்.
“இந்நேரம் அப்பா ரூம்க்கு எதுக்குமா போன?, அதுக்குள்ள குளிச்சி வேற கிளம்பிட்ட, ஏன்மா என்னாச்சு?” என பதறிக் கொண்டு அருகில் வந்தார்.
“அதெல்லாம் ஒன்னுமில்லம்மா தூக்கமே வரல, அதான் கிளம்பவாது செய்வோம்ன்னு எழுந்துட்டேன். சும்மா தோணுச்சு அதான் அப்பாட்டையும் பிளஸ்ஸிங் வாங்கிட்டு வரலாம்னு அங்கப் போனேன். நீ ஏன் வர வர எதுக்கெடுத்தாலும் டென்சன் ஆகுற” என்க.
“உடனே பெரிய மனுஷி மாதிரி திரும்பி என்னைய கேள்வி கேட்காம வந்து சட்னிக்கு அற. டிஃபன் மட்டும் தான, லஞ்ச் உங்க காலேஜ்ல ப்ரொவைட் பண்ணுவாங்க தான?. நானும் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்றவாறு பிரிட்ஜ்ஜில் இருந்த மாவை எடுத்து வெளியில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றார்.
சென்னையில் வசிப்பதால் மற்றவர்கள் பார்வையை கவர வேண்டாம் என நினைத்து நார்மலாகவே சாரி, பொட்டுடன் இருந்து கொண்டார். கிராண்டாக காட்டாமல் பார்த்துக்கொள்வார்.
சற்று நேரத்தில் எல்லாம் முடித்து தாயும், மகளுமாய் காலேஜிற்கு கிளம்பினர். வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டனர். ஜெயந்தி செல்லை வாங்கி லட்சுவின் அப்பா நம்பருக்கு கால் செய்ய, “இப்ப தான்மா குளிச்சுட்டு வந்து நிக்கா. கிளம்பவும் கூட்டிட்டு வரேன்மா” என்றார் அவர் எடுத்ததும்.
“சரிங்கப்பா நாங்க ஆட்டோல ஏறிட்டோம். முன்னப் போறோம்” என்றுவிட.
“சரிமா” ௭ன்றவர், “ஏ கழுத சீக்கிரம் கிளம்பு, அந்த புள்ள எவ்வளவு அக்கறையா” என்ற சொல்லுடன் அவர் கட் செய்வது கேட்டு சிரித்த எழில், அதற்கு லட்சு “அவ எதுக்கு இவ்வளவு ஆர்வமா போறான்னு எனக்குத்தான் தெரியும்” என முனங்குவதாக சேர்த்தும் அவளே நினைத்து சிரித்துக்கொண்டாள்.
“என்னடி தனியா சிரிக்கிற? என்ன சொல்லுறா லட்சுமி?” ௭ன்ற ஜெயந்திக்கு.
“அவ இன்னும் கிளம்பவே இல்லையாம்மா, நா கிளம்பிட்டேன்னு சொன்னதும் அங்க அவளுக்கு திட்டு விழுது, அதக் கேட்டுதான் சிரிச்சேன்” என்றாள் பாதி உண்மையை மறைத்தும், பாதியை மட்டும் வெளிப்படையாயும்.
காலேஜ் ஸ்டாப்பில், வாசலில் சென்று இறங்கினர், இவளைப் போல் நிறைய பேர் பெற்றோர்களுடன் அந்த பெரிய கேட்டினுள் நுழைந்து கொண்டிருந்தனர். இவளும் காலேஜை சுற்றி வேடிக்கை பார்த்தவாறு உள் நுழைந்தாள். இப்படி பெற்றோருடன் வருபவர்களை சீனியர்ஸ் நின்று ஆடிட்டோரியத்திற்கு வழி நடத்திக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலிருக்கும் இன்சார்ஜ் பெர்சன்ஸே முன் நின்றனர்.
இவளும், ஜெயந்தியும் ஆடிட்டோரியம் உள் நுழைய, சில பல பேப்பர்களுடன் வேக வேகமாய் வெளியே வந்து கொண்டிருந்தான் ப்ரகலத்தன். இருவரில் முதலில் கண்டது ஆறெழில். அவள் வாய் ‘பிரசிடெண்ட்’ என முனுமுனுக்க, வாசலை நெருங்கவும் அவனும் அவளைக் கண்டான்.
புருவத்தை உயர்த்தி வெளிப்படையாகவே தனது ஆச்சரியத்தை /அதிர்ச்சியை காட்டினான். அவன் பார்க்கவும் இவள் கையசைக்க, நின்று விட்டான் அவன். மகள் யாரைப் பார்த்து கையசைக்கிறாள் என பார்த்த ஜெயந்தியும், திரும்பி அவனைப் பார்த்து புன்னகைத்தார். இருவரும் நேரே அவனிடமே சென்றனர். ஜெயந்தியும் வரவும் தானும் இரண்டடி முன்வைத்து அருகில் வந்தான்.
“ஹாய் ப்ரெசிடெண்ட் எப்படி இருக்கீங்க” என்றாள் முகம் முழுவதும் சந்தோஷத்துடன்.
“ஹாய் ஆறெழில், ஹாய் ஆண்ட்டி” என்றானவன்.
“தம்பி யாரு?” என்றார் ஜெயந்தி.
“௭ங்க ஸ்கூல் மா, ஆனா சீனியர், டூ இயர்ஸ்” என்றாள். பாக்க நல்ல டிசென்டான பையனாகவும், தன் பெண் படித்த ஸ்கூலில் படித்தவன் என்றதும் ஒரு பிடிப்பு வர, “நா நல்லா இருக்கேன்பா. நீ எப்டி இருக்க? என்ன மேஜர்?” ௭ன்றார். (மகள் முன்பு ஒருமுறை ஒரு பையனின் கண்ணை பிடித்ததாக கூறியதை மறந்து விட்டிருந்தார்.)
“ஃபைன் ஆண்ட்டி, தேங்க்ஸ். நா ஏரோநாட்டிக்கல். ஆறெழில் என்ன மேஜர்?” என்றான் அவரை பார்த்தே.
“இசிஇ பா நல்ல வேல்யூவாமே (அப்போ 2010-11) அதான், இவளும், இவ ப்ரண்டு லட்சு, ரெண்டு பேரும் சேர்ந்து அதயே எடுத்துட்டாங்க. நீ வேற குரூப்னாலும் ரெண்டு பேரையும் கொஞ்சம் பாத்துக்கப்பா. கவனம் இல்லாம இருக்குங்க ரெண்டும்” என்றார்.
“ம்மா நா என்ன சின்ன புள்ளையா கவனம் இல்லாம இருக்க” இவள் சண்டைக்கு கிளம்ப.
“கண்டிப்பா பாத்துக்குறேன் ஆண்ட்டி. ரெண்டு பேர்டயும் ஸ்கூல்ல வச்சு டூ, த்ரீ டைம்ஸ் பேசிருக்கேன். கொஞ்சம் சேட்டை தான்னு அப்பவே நினைச்சுப்பேன்” என்றான் சிரித்து.
“ஆமாப்பா அதுதான் எனக்கும் சில நேரம் பயமாயிருக்கும், இப்டி இருக்காளேன்னு” என்றார்.
லேசாக அவளைப் பார்த்து சிரித்தவன் “என் ஹெல்ப்லா அவங்களுக்கு தேவையே படாது ஆண்ட்டி. அதெல்லாம் ரெண்டு பேரும் நல்லா மேனேஜ் பண்ணிப்பாங்க, இந்த பேப்பர்ஸ்காக ஸ்டாப்ஸ் வெயிட் பண்ணிட்டுருப்பாங்க. வாங்க உட்கார்ந்து வெயிட் பண்ணுங்க. இன்னும் 30மினிட்ஸ்ல ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ணிடுவாங்க” என அழைத்துச் சென்று இருவரயும் சற்று தள்ளி பின் வரிசையில் உட்கார வைத்துவிட்டு சென்றான்.
அவன் வாசலைக் கடக்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள். வாசல் வரை சென்று, திரும்பி ஒருமுறை பார்த்தான் அவன். அவளுக்கு ஏக சந்தோஷம் அதில். வெளியில் சென்றவனுக்கும் முகமெல்லாம் சிரிப்பு, ‘ரெட்ட ஜடையிலேயே பாத்ததுக்கு இப்ப வேற மாதிரி இருக்காளே, கொஞ்சம் பாலிஷ் வேற கூடிருக்கு’ என நினைத்தவன், ‘எப்படி கரெக்டா இதே காலேஜ்ல சேர்ந்தா. மறுபடியும் மீட் பண்றோம், சினிமாளெல்லாம் சொல்ற மாதிரி மறுபடியும் மறுபடியும் மீட் பண்றதுக்கு ஏதாது ரீசன் இருக்குமா’ எனவும் நினைத்து சிரித்துக் கொண்டான்.
“அங்க பாரு நம்மாளு கனா லோகத்தில வாரத, ௭ன்னனு விசாரணைய போடுவோம் வா” மூர்த்தி அகத்தியனிடம் சொல்ல. “ம்” ௭ன்றவாறு முன்னேறினான்.
“என்னடா தனியா சிரிச்சிட்டே வர” ஸ்டாஃப் ரூம் வாசலில் நின்ற அகத்தியன் கேக்க,
“இல்லடா தெரிஞ்சவங்கள பாத்தேன் அதான் அவங்க பேசினது நினைச்சு அப்டியே சிரிச்சுட்டேன், தள்ளு” என்றுவிட்டு பேப்பரை ஸ்டாஃபிடம் கொடுத்துவிட்டு அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“டேய் இந்த வருஷம் வந்த பிள்ளைகளனாலும் ஆளுக்கு ஒரு ஆள செட் பண்ணிக்கிடனும்டா, இல்லன்னா அடுத்த ஒரு வருஷம் தான், அதுலயும் ஆறு மாசம் பிராஜக்ட்ல போயிடும் ஒன்னும் என்ஜாய் பண்ண முடியாது பாத்துக்க” என மூர்த்தி சீரியஸாய் ரகசியம் சொல்ல.
ப்ரகலத்தனை காட்டி, “ஆமாண்டா, அதுவும் இவன் கூட சுத்துனோம்னு வை நம்மளயும் சாமியாராக்கிடுவான், உஷாரா பொளச்சுக்கணும்” என ஒத்து ஊதினான் அகத்தியன்.
அங்கு ஆறெழில் லட்சுவைத் தேடிக் கொண்டிருக்க, அவள் அப்பாவுடன், அடுத்த 20 நிமிடத்தில் வந்து சேர்ந்தாள். ஆனால் அருகில் இருந்த இடமெல்லாம் நிரம்பி விட்டிருக்க, அடுத்து 10 ரோ தாண்டியே அவள் சென்று அமர வேண்டியிருந்தது. ‘ஹாய்’ சொல்லி ‘அப்புறம் முடியவும் மீட் பண்ணலாம்’ என சைகையிலேயே இருவரும் பேசிக் கொண்டனர்.

