Loading

திமிர் 8

 

“என்ன இது அநியாயம்?” என்ற குரல் ஒலிபெருக்கியில் ஒலிக்க, அகம்பன் உட்பட அனைவரின் பார்வையும் அங்குத் திரும்பியது.

 

“என் பொண்ணைப் பக்கத்துல வச்சுக்கிட்டு, இப்படி இன்னொரு பொண்ணு கூட நிச்சயம் பண்றீங்க.”

 

“அப்பா!” என அதிர்ந்தாள் மதுணிகா.

 

நமட்டுச் சிரிப்போடு கிஷோர் முன்னே வர, பின்னால் வந்தார் முரளி. நீட்டிய விரலைப் பின் வாங்கியவன் அங்கிருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தான். அவன் முகத்தில் அதிர்வோ, கோபமோ இல்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை யூகித்து விட்டான் முரளியின் குரல் கேட்டதுமே. என்னவாயினும், தான் தளரக்கூடாது என்ற மனநிலையில் கர்வத்தோடு அமர்ந்திருந்தவன் முன் நின்றார்கள்.‌

 

மினிஸ்டர் வீட்டு விழாவில் இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ, பேரலைகள் அனைவரிடமும். வந்தவர்களை விரட்டப் பார்த்தான் ஆதிகேஷ் திவஜ். கற்பகம் தடுத்து யார் என்று விசாரித்தார்.

 

“வணக்கம் மேடம், என்னோட பேரு முரளி. ஜிஎன் ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடல் சிஇஓ மதுவோட அப்பா. நடந்ததைப் பத்தி உங்ககிட்டப் பேசி மன்னிப்புக் கேட்கலாம்னு இருந்தோம். அதுக்குள்ள உங்க பையன் என் பொண்ணுகிட்ட, நடக்கக் கூடாத முறையில நடந்து இங்க வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டாரு. சரின்னு சமாதானம் பேச வந்தா என் பொண்ணை வச்சுக்கிட்டு, இன்னொரு பொண்ணு கூட எங்கேஜ்மென்ட் பண்றாரு. இதெல்லாம் என்னங்க நியாயம்?”

 

“என்னடா அகம்பா இதெல்லாம். இவங்க என்ன சொல்றாங்க?”

 

“அவரை எதுக்காகக் கேக்குறீங்க, எல்லாத்தையும் எங்க அப்பா சொல்லுவாரு.”

 

“டேய், யாருடா நீங்க? எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க. உங்களை இவ்ளோ தூரம் யார் விட்டது. பவுன்சர்லாம் என்னடா பண்றீங்க?”

 

“யாரு என்னன்னு பேசத்தான் வந்திருக்கோம் மினிஸ்டர் சார்.”

 

“வேணும்னே பிரச்சினை பண்ண வந்திருக்காங்கப்பா. அடிச்சு வெளிய தள்ளிட்டு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம்.”

 

“அப்படியெல்லாம் எங்களை விரட்ட முடியாது ஆதி சார். எங்க வீட்டுப் பொண்ண உங்க பையன்தான் கூட்டிட்டு வந்திருக்கான்.”

 

“எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம். இப்ப எங்கேஜ்மென்ட் நடக்கட்டும்.” என்ற நவரத்தினத்தைக் கையெடுத்துக் கும்பிட்ட முரளி,

 

“முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க. உங்க பையனுக்கு நடந்தது பெரிய இழப்புதான். இருந்தாலும் அது ஒரு தவறுதலால நடந்தது.” என்றிட, நரம்புகள் புடைத்தது அகம்பன் திவஜ்க்கு.

 

“கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க பையனுக்கு கேன்சர்னு யாரோ ஒருத்தர் மூலமா உங்களுக்குத் தகவல் வந்துச்சு, ஞாபகம் இருக்கா?” என்றதும் அதுவரை ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த அவன் குடும்ப ஆள்கள் வாயை மூடினார்கள்.

 

சுற்றி இருந்தவர்களுக்கு இது புதிது என்பதால் வாயைப் பிளக்க, “அப்படி ஒரு ரிப்போர்ட்ட மாத்திக் கொடுத்தது எங்க ஹாஸ்பிடல் தான்.” என்றான் கிஷோர்.

 

“உங்களை யார் இங்க வரச் சொன்னா? எதுக்கு இப்ப இதெல்லாம், வாங்க கிளம்பலாம்.”

 

“இரு மது. நானும் அப்பாவும் உனக்காகத்தான் இங்க வந்திருக்கோம்.‌ ஒரு நாள் முழுக்க உன் கூட இருந்துட்டு, இப்ப வேற ஒரு பொண்ணு கூட எங்கேஜ்மென்ட் பண்ணா என்ன அர்த்தம்? மினிஸ்டர் பையன்னா என்ன வேணாலும் பண்ணலாமா…”

 

“இதுக்கு மேல ஒரு வார்த்தை என் தம்பியப் பத்திப் பேசினா, உயிரோடு போக மாட்ட. அவனைப் பத்தி இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும். பொண்ணுங்க விஷயத்துல அவன் கண்ணியமானவன்!”

 

“அப்புறம் எதுக்கு என் பொண்ண இங்க கூட்டிட்டு வந்திருக்கான், உன் தம்பி.”

 

“அது அவனோட பிஏ”

 

“அப்படின்னு உன் தம்பி உன்கிட்டப் பொய் சொல்லி இருக்கான். இத்தனை நாளா உன் தம்பி இங்க இல்லாததுக்கும், சென்னைக்கு வந்ததுக்கும் என் பொண்ணு தான் காரணம்.” எனச் சபைக்கு நடுவில் நின்ற முரளி, பார்வையால் சுட்டெரிக்கும் அகம்பனைத் துச்சமென உதறித்தள்ளி நடந்ததைக் கூறத் தொடங்கினார்.

 

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தொடர்ந்து மயக்கம் வருதுன்னு மினிஸ்டரோட ரெண்டாவது பையன் எங்க ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தான். அங்க நடந்த சில குளறுபடியால வேற ஒருத்தருக்கு வர வேண்டிய ரிப்போர்ட் இவனுக்கு வந்துடுச்சு. அதாவது கேன்சர் கடைசிக் கட்டத்துல இருக்கிறதா… அதைக் கேட்டதுக்கு அப்புறம் தான், மினிஸ்டரோட பையன் இங்க இருக்கப் பிடிக்காம ஊட்டி தாண்டி அவனுக்குன்னு வாங்கின இடத்துல இவ்ளோ நாள் இருந்தான். அந்த ரிப்போர்ட் பொய்னு தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும்னு பயந்து என் பொண்ணு அதை எடுக்கறதுக்காகப் பல முயற்சி எடுத்தாள். அதைக் கண்டுபிடிச்ச மினிஸ்டரோட பையன், ஜிஎன் ஹாஸ்பிடல் ஷேர் ஹோல்டர் அத்தனைப் பேரையும் மிரட்டி அந்தப் பங்கு மொத்தத்தையும் வாங்கிட்டான்.‌

 

எல்லாத்துக்கும் என் பொண்ணு தான் காரணம்னு ரொம்பச் சித்திரவதை பண்ணான். என் பொண்ண ஒரு ராத்திரி முழுக்கக் கூட வெச்சிருந்தான். அதை அவன் வாயாலயே எங்ககிட்டச் சொன்னான். எங்க சைடு நடந்தது தப்புதான். அதுக்காக என் பொண்ண இவ்ளோ டார்ச்சர் பண்றது நியாயமா? அவளோட ஒன்னா இருந்துட்டு, இப்படி வேற ஒரு பொண்ணு கூட மனசாட்சி இல்லாம நிற்கிறானே. இதை இங்க இருக்க யாரும் கேட்க மாட்டீங்களா?”

 

பேரலை அடித்து ஓய்ந்தது போல் அந்த இடம் அமைதியில் சூழ்ந்தது. முரளி சொல்லியதை நம்ப முடியாமல் திகைத்து நின்றனர். அதிலும், அவன் குடும்பத்து ஆள்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி அகம்பனைப் பார்த்தனர். அவனோ எரிமலைச் சீற்றமாக அமர்ந்திருந்தான்.

 

சரியாக, அகம்பன் சென்னைக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகத் தொலைபேசி வாயிலாக உங்கள் இரண்டாவது மகனுக்குப் புற்றுநோய் என்ற செய்தி கற்பகம் காதை எட்டியது. கதறித் துடித்து, ஆர்ப்பாட்டம் செய்து வீட்டைக் கலவரம் ஆக்கிவிட்டார். தன் மகனை இப்பொழுதே காண வேண்டுமென்று அழுதவர் உடம்பு, தாக்குப் பிடிக்க முடியாது மயங்கிச் சரிந்தது. நவரத்தினத்திற்கு ஒன்றும் புரியவில்லை. கமலை அழைத்து விபரத்தைக் கேட்க அவனும் புரியாத நிலையில்தான் இருந்தான்.

 

ஆருயிர் தம்பியின் நோய் பற்றி அறிந்ததும் மிரண்டு விட்டான் ஆதிகேஷ் திவஜ். எப்படி அவனைத் தொடர்பு கொள்வது என்று தெரியாமல் கற்பகத்தை மருத்துவமனையில் சேர்த்த கையோடு உண்மையைக் கண்டறிய அலைந்தான். அந்த நேரம், தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருந்தான் கமல். வெகு தாமதமாக அதைப் பார்த்துவிட்டு அழைத்த அகம்பனுக்குத் தலை சுற்றியது.

 

தன் அன்னையை நேரில் காண முடியாது மருகித் துவண்டு போனவனை அழகாகத் தேற்றினாள் அம்மு. அந்த நினைவெல்லாம் நினைத்தபடி அமர்ந்திருந்தவனிடம்,

 

“இவங்க என்னடா சொல்றாங்க? அன்னைக்கு அம்மாகிட்ட அப்படி எதுவும் இல்லமான்னு சொன்னது பொய்யா… உண்மையாவே உனக்கு கேன்சரா? ஏன்டா அமைதியா இருக்க. வாயத் தொறந்து ஏதாவது பேசு அகம்பா.” மகன் காலடியில் அமர்ந்து அழத் தொடங்கினார் கற்பகம்.

 

“மேடம், உங்க மகனுக்கு அப்படி எதுவும் இல்லை. எங்க சைடு மிஸ்டேக்கா அப்படி ரிப்போர்ட் வந்துடுச்சு. இப்பப் பிரச்சினை அது இல்ல. உங்க பையன் என் பொண்ண விரும்புறன்னு சொல்லி ராத்திரி முழுக்கக் கூட இருந்துட்டு, இப்ப வேற பொண்ண எதுக்காகக் கல்யாணம் பண்ண நினைக்கணும்.‌ என் பொண்ணுக்கு நியாயம் வேணும்.‌ உங்க பையன்கிட்ட இதெல்லாம் உண்மையா, பொய்யான்னு நீங்களே கேட்டுத் தெரிஞ்சுகிட்டு என் பொண்ணுக்கு ஒரு நியாயத்தை வாங்கிக் கொடுங்க.”

 

“பேசாம உட்கார்ந்துட்டு இருந்தா என்னடா அர்த்தம். இவனுங்க சொல்றது உண்மையா? இதை ஏன்டா என்கிட்டச் சொல்லல. இப்படி ரிப்போர்ட்ட மாத்தி வச்சு உன்னை ரெண்டு மாசமா கதி கலங்க வச்சவனுங்களைச் சும்மா விட்டு வச்சிருக்க… இவனையும், இவன் பொண்ணையும் வெட்டிப் போடுறதை விட்டுட்டுச் சும்மா உட்கார்ந்திருக்க.”

 

“வெட்டிப் போடுவீங்க. என் அக்காவ ஏமாத்துனதுக்கு உங்க பையனை நாங்க தான் வெட்டிப் போடணும்.”

 

“மினிஸ்டர் கிட்டப் பேசுறோம்னு ஞாபகம் வச்சுப் பேசு. என் பையன் மேல கைய வச்சுடுவியா? என் பையனை இந்த நிலைமைக்கு ஆளாக்கின உன் ஹாஸ்பிட்டல், எண்ணிப் பத்து நிமிஷத்துல தரைமட்டமாகும் பார்க்கறியா?”

 

“உங்க மிரட்டலுக்கு எல்லாம் நாங்க பயப்பட மாட்டோம். சட்டப்படி என்ன பண்ணனுமோ, அதை நாங்க பண்ணிட்டுத்தான் வந்திருக்கோம். எங்க சைடு தப்புக்கு என்ன டிமாண்ட் பண்றீங்களோ, அதை செஞ்சு தரோம். அதே மாதிரி எங்க வீட்டுப் பொண்ண சுத்தமா உங்களால அனுப்ப முடியுமா?”

 

“ஏய்! என் பையன் உன் பொண்ணுகிட்ட அப்படி நடந்து இருக்க மாட்டான். அப்படியே நடந்தாலும் அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை. என் பையனுக்கும், நான் பார்த்த பொண்ணுக்கும் தான் கல்யாணம் நடக்கும். உங்களால என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணிக்கோங்க.”

 

“அகம்பா!” என்றழைத்த கற்பகம், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மகன் மடியில் சாய, “அம்மாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போங்க.” என்ற கர்ஜனையில் அந்த மேடை சுக்கு நூறாக நொறுங்கியது.

 

அகம்பன் குரல் கேட்டு முரளியின் உடல் தூக்கிப் போட, பயந்து தந்தைக்குப் பின்னால் நின்று கொண்டான் கிஷோர். தன் முன்னால் தன் கையை மீறி நடந்த அனைத்தையும், ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவள் மீது பார்வையை மாற்றியவன்,

 

“கமுக்கமா இருந்து காரியத்தைச் சாதிச்சிட்ட. உன்ன மாதிரிப் பச்சைத் துரோகியை இனியும் விட்டு வைக்க மாட்டேன்.” என்று விட்டுத் தன் ஆள்களிடம்,

 

“இவனுங்க இங்க இருந்து நகரக் கூடாது.” என அன்னையைத் தேடி ஓடினான்.

 

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கற்பகம். கண்ணாடி வழியாக அன்னையைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஆறாத வடு. அன்று கமல் சொல்லி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேட்டுக் கதறித் துடித்தவனை ஆறுதல் செய்தவள், இன்று துடிக்க விட்டு வேடிக்கைப் பார்ப்பதை எண்ணிப் பல்லைக் கடித்தான்.

 

இத்தனைக்கும் காரணமான மதுணிகாவைக் கொலை செய்யும் வெறி உண்டாகியது. அன்னையின் நலனே முக்கியம் என்று அமர்ந்திருந்தவனிடம் விசாரிக்கச் சென்றார் நவரத்தினம். தந்தையின் கைப்பிடித்துத் தடுத்தான் ஆதிகேஷ்.

 

“இவ்ளோ நடந்திருக்கு, நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லல பாரு. இதுக்கு தான் பிராக்டிஸ் இருக்குன்னு ஒளிஞ்சிட்டு இருந்தானா? உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறமாவது சொல்லி இருக்கலாம்ல. அவங்க சொல்றதுக்கு முன்னாடியே இவன் மேல எனக்கு டவுட். எல்லாத்துக்கும் ஆர்ப்பாட்டம் பண்றவன் ரெண்டு மாசமா ஏன் அமைதியா இருக்கான்னு.‌ ஒரு பொண்ணு கூட வந்திருக்கான்னு மீட்டிங் நடக்கிற இடம் வரைக்கும் தகவல் வருது. எங்கேஜ்மென்ட் முடிச்சுட்டுப் பேசிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு.”

 

***

“இப்ப அவன்கிட்டப் பேசுறது சரியா வராதுப்பா.”

 

“என்ன பண்ணுவியோ தெரியாது ஆதி. என் பையனை, இந்த நிலைமைக்கு உட்கார வச்சவன் உசுரோட இருக்கக்கூடாது. அந்த ஹாஸ்பிடல்ல சீல் வை. என்ன நடந்தாலும் நான் பார்த்துக்குறேன். என் பதவியே போனாலும் சரி, அந்த ஹாஸ்பிடல் இருக்கக் கூடாது. ஹாஸ்பிடலோட சேர்த்து அந்தப் பொண்ணையும் தூக்கு.”

 

“பொறுமையா இருங்கப்பா. முதல்ல அம்மா சரியாகட்டும்.”

 

“இவன மாதிரிப் பொறுமையா இருக்க என்னால முடியாது. ரிப்போர்ட் மாறி வந்ததுல மனசு உடைஞ்சு, ஏதாச்சும் பண்ணி இருந்தா என்னடா பண்ணி இருப்போம். இப்படி ஒரு பிள்ளையைத் தொலைச்சிட்டு அம்போன்னு நின்னு இருப்பேன். நூறு யானைக்குச் சமம்டா. அப்படியாப்பட்டவன, இந்த அளவுக்கு ஆளாக்கிட்டாங்க. இனியும்‌ அவங்களை விட்டு வச்சிருந்தா நம்ம கௌரவத்துக்கு அசிங்கம். ஒண்ணுத்துக்கும் வக்கில்லாத ரெண்டு பேர், ஊரு பார்க்க நம்ம குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டானுங்க. அவனுங்க வாழ்க்கையை வெறுத்துக் கதறனும்.”

 

“நீங்க சொன்னாலும், சொல்லலனாலும் என் தம்பியை இப்படி உட்கார வச்ச அத்தனைப் பேரையும் தீர்த்துக்கட்டத் தான் போறேன். அதுக்கு முன்னாடி அம்மாவோட ஹெல்த் முக்கியம்.”

 

“ரொம்ப லேட் பண்ணாத ஆதி. அவன் மனசால ரொம்ப உடைஞ்சு போயிருக்கான். அதனாலதான், வாயைத் தொறக்காம இருந்திருக்கான். நம்ம பலமே அவன் தான்டா. அவன் உடைஞ்சு உட்காரும்போது, தாங்கிப் பிடிக்கலைன்னா நம்ம மண்ணோட மண்ணாய் போயிடுவோம்.”

 

“உங்களை விட எனக்குக் கோபம் ரொம்ப ஜாஸ்தி ப்பா. இவனுக்காகத் தான் சில விஷயங்கள் தெரிஞ்சும் அமைதியா இருந்தேன். அது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பப் புரியுது.”

 

“ஆதி!”

 

“இந்தப் பொண்ணப் பத்தி எனக்குத் தெரியும்பா.”

 

“என்னடா சொல்ற?”

 

“அதைப்பத்தி அப்புறம் சொல்றேன். உங்ககிட்ட நிறையப் பேசணும்.” என்ற ஆதிகேஷ் திவஜ் தன் ஆள்களைத் தொடர்பு கொண்டு,

 

“அவனுங்க ரெண்டு பேரும் எங்கடா?” விசாரித்தான்.

 

“கெஸ்ட் ஹவுஸில் இருக்காங்க சார்.”

 

“பத்தரமா பார்த்துக்கோங்கடா. எங்கயும் தப்பிக்கக் கூடாது.” என்று விட்டுத் தன் தம்பியைப் பார்த்தான்.

 

அன்னையின் நினைவில் மனம் நடுங்கி அமர்ந்திருந்தவன் விழிகளில் சோகம் இழைந்தோடியது. அகம்பன் பிறந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, இந்த நிலை சாட்டையடியாக இருந்தது. ஊருக்கு எப்படியோ, அவனுக்குச் செல்லப் பிள்ளை தம்பிதான். தனக்கும் சேர்த்து உழைத்துத் தன்னையும் உயர்த்தியவன், சோர்ந்து இருப்பதைக் கண்டு பல்லைக் கடித்தவன்,

 

“அந்தப் பெண்ணையும் தூக்குங்கடா.” உத்தரவிட்டான்.

 

அவன் பேச்சுக்குக் கட்டுப்பட்ட அவன் அடியாள்கள் மதுணிகாவைக் கட்டி வைத்தார்கள். அகம்பனை அசிங்கப்படுத்த வந்து வசமாக அகப்பட்டுக் கொண்டார்கள். அவன் வீட்டை விட்டுச் சென்றதும் ஆத்திரம் அடங்காத முரளி, கிடைக்கும் பொருள்களை எல்லாம் தூக்கிப் போட்டு அடிக்க, தந்திரமாக யோசித்தான் கிஷோர்.

 

“அவனையும் அசிங்கப்படுத்தனும், அதே நேரம் மதுவுக்கும் அவனுக்கும் இருக்க உறவையும் முழுசா வெட்டி விடனும். அவன் தன்மானத்தைச் சீண்டி விட்டா போதும், தன்னால மது பக்கம் கோபம் திரும்பிடும். நமக்கும் அவனை அசிங்கப்படுத்தின திருப்தி கிடைச்சிடும்.”

 

திட்டத்தோடு இங்கு வந்த பின் தான் தெரியும், அவனுக்கு நிச்சயதார்த்தம் என்று. அல்வாவை வாயில் வைத்துச் சாப்பிடச் சொன்னது போல் குதூகலம் போட்டு தான் இத்தனையும் செய்தார்கள். கலவரம் நடக்கும், அசிங்கம் தாங்காமல் மதுவை விரட்டி விடுவான் என்று எண்ணித்தான் அத்தனைப் பேச்சுக்கள். இப்படிக் கட்டி வைப்பார்கள் என்று கனவிலும் நினைக்காதவர்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் இருந்தவளுக்கு, அப்படியான எந்த எண்ணங்களும் இல்லை.

 

நினைவு முழுவதும் அவனே! தனக்குச் சம்பந்தப்படாத ஒருத்தனை மீண்டும் மீண்டும் நோகடிக்கும் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். தன்னால்தான் இத்தனையும் என்ற எண்ணமே சித்திரவதை செய்கிறது. அவன் மனம் எந்தளவுக்குத் துடிக்கும் என்றெண்ணி, இவள் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

 

***

 

நிச்சயதார்த்த உடையில், எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்த மகள் பக்கத்தில் வந்தமர்ந்தார் சங்கரன். அவர் வந்ததைக் கூட அறியாது, நிச்சயம் நடப்பதற்கு முன்னர் அகம்பன் அவளுடன் பேசியதை நினைத்துக் கொண்டிருந்தாள். மண்டபத்திற்கு வந்த கையோடு அவள் அறையை அறிந்து கொண்டு உள்ளே நுழைந்தவன்,

 

“இந்த எங்கேஜ்மென்ட்ல உனக்குச் சம்மதம் இல்லையா?” பட்டென்று கேட்டு விட, என்ன சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தாள்.

 

“பரவால்ல சொல்லு. நீ வேணாம்னு சொன்னதும், உங்க அப்பா உன்னைச் சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வந்ததும் தெரியும் எனக்கு.”

 

“அது..அது வந்து…”

 

“எனக்கு சுத்தி வளைச்சிப் பேசறது பிடிக்காது அனு.” எனக் குரல் உயர்த்திட, உடல் பதறியது அவளுக்கு.

 

“ஓகே, எங்கேஜ்மென்ட ஸ்டாப் பண்ணச் சொல்றேன்.”

 

“அப்பாக்குத் தெரிஞ்சா சத்தம் போடுவாரு.”

 

“அப்போ உனக்கு இதெல்லாம் விருப்பமில்லை?”

 

“ம்ம்!”

 

“ரீசன் தெரிஞ்சிக்கலாமா?”

 

“உனக்கு கேன்சர்னு…” எனத் தயங்கி அவன் முகம் பார்த்தாள்.

 

எவ்விதப் பாவனையும் இன்றி வெறுமையாக இருந்தது அவன் முகம். அதைக் கண்டு தைரியம் வந்தவளாக, “எனக்கு உன்னைச் சின்ன வயசுல இருந்து புடிக்கும். கல்யாணம் பண்ணிக்கணும்னு நானும் ஆசைப்பட்டேன். பட், ஒரு நோய் வந்தவனைக் கல்யாணம் பண்ணி வாழ்க்கை தர அளவுக்குப் பெரிய மனசு இல்ல.” என்றவள் மீதான பார்வையை அழுத்தமாக மாற்றி,

 

“அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டேனே.” என்றான்.

 

“இல்லன்னு சொன்னாலும் நம்ப முடியல. ரெண்டு மாசமா யாருக்கும் தெரியாம ட்ரீட்மென்ட் பண்றியோன்னு சந்தேகமா இருக்கு. இருக்க வரைக்கும் உன் கூட வாழச் சொல்லி அப்பா சொல்றாரு. இருந்தாலும், ஒரு நோய் பிடிச்சவனைப் புருஷன்னு சொல்லிக்க என்னால முடியாது. உன் கூட இருந்தா எனக்கும் கேன்சர் வந்துடும். நோய் புடிச்சவனைக் கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு ஒன்னும் தலையெழுத்து இல்ல. இந்த எங்கேஜ்மென்ட் நடந்தாலும் கல்யாணம் நடக்காது.”

 

“ஏன்?”

 

“கல்யாணத்தை ஆறு மாசம் தள்ளி வைக்கச் சொல்லப் போறேன். நீயே இன்னைக்கோ, நாளைக்கோன்னு இருக்க… அதுக்குள்ள உனக்கு ஏதாச்சும் ஆகிட்டா நான் தப்பிச்சிடுவேன்.”

 

அர்த்தமான புன்னகை அகம்பன் முகத்தில். அதைக் கண்டு குழம்பிப் போனவள் அருகே சென்று, “கவலைப்படாத. இந்த எங்கேஜ்மென்ட் நடக்காது.” என்றான்.

 

அனுசியா முகத்தில் அளவில்லாத மகிழ்ச்சி. அதைக் கண்டு இன்னும் அர்த்தமாகச் சிரித்துக் கை இரண்டையும் பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்து, “தேங்க்யூ சோ மச்! உன் மேலயும் எனக்குப் பெருசா இன்ட்ரெஸ்ட் இல்ல. என் அம்மாவுக்காகக் கல்யாணம்னு பண்ணா, உன்னை ஆப்ஷனா வைக்கலாம்னு நினைச்சிருந்தேன். நல்லவேளையா, உன்னோட தாட்ஸ் என்னன்னு தெரிஞ்சிருச்சு. உன்ன மாதிரி ஒருத்தியை என் லைஃப்க்குள்ள நுழைக்காமல் காப்பாத்துன கடவுளுக்கு நன்றி சொல்லணும்.” என்று விட்டுச் சென்ற அவனைத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

 

“நிச்சயதார்த்தம் நின்னுடுச்சுன்னு வருத்தப்படாத அனு. உனக்கும், அகம்பனுக்கும் தான் கல்யாணம் நடக்கும்.”

 

“அவள் எங்க வருத்தப்படப் போறா… இந்த நிச்சயதார்த்தம் வேண்டாம்னு தான சண்டை போட்டுக்கிட்டு இருந்தா.”

 

“எனக்கு அகம்பன் வேணும்!” எனப் பெற்றோர்களை அதிர வைத்தாள் அனுசியா.

 

“என்னடி சொல்ற?”

 

“அவனுக்கு கேன்சர் இருக்குன்னு அரசல் புரசலா செய்தி வந்ததால தான் வேணாம்னு சொன்னேன். அதை உறுதிப்படுத்துற மாதிரி அவன் வேற ரெண்டு மாசமா ஆள் அட்ரஸ் இல்ல. மத்தபடி அவனை மாதிரி ஒருத்தனை மிஸ் பண்ண எனக்கு விருப்பமில்லை. அவனைக் கல்யாணம் பண்ணா வசதி வாய்ப்பு மட்டும் இல்ல, அழகான புருஷனும் கிடைச்சிருக்கான்னு பெருமைப்படலாம்.

 

என்னதான் அங்கிள் மினிஸ்டரா இருந்தாலும் அவன்தான் எல்லாம். அவன் அங்கிளுக்கு அடுத்து மினிஸ்டரா ஆனாலும் ஆகலாம். ஃபியூச்சர் மினிஸ்டர் வைஃப்பா வாழுறதுக்கு நல்ல சான்ஸ் அவன். வந்தவனுங்க சொன்னது உண்மையோ, பொய்யோ அது எனக்குத் தேவையில்லை. அவனுக்கும், எனக்கும் கல்யாணம் நடக்கணும். அதுக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணுங்க.”

 

“அந்தப் பொண்ணு அவன் பிஏ மட்டும் தானா, இல்ல அவனுங்க சொன்ன மாதிரி அவங்களுக்குள்ள ஏதாச்சும் இருக்கான்னு விசாரிங்கடா.” தன் ஆள்களுக்குக் கட்டளையிட்டார் சங்கரன்.

 

“அவங்களுக்குள்ள என்னமோ இருக்குப்பா. அந்தப் பொண்ணு என் ரூமுக்கு வந்து டிரஸ் கொடுக்கும் போது அவ முகமே சரியில்லை. அப்ப ஏதோ ஒரு டென்ஷன்ல கவனிக்காமல் விட்டுட்டேன். அகம்பனும், ஸ்டேஜ்ல இருக்கும்போது அந்தப் பொண்ண தான் பார்த்தான். கூட்டிக் கழிச்சுப் பார்த்தா வந்தவனுங்க சொன்னது உண்மைன்னு தோணுது.”

 

“என்ன பண்ணனும்னு சொல்லு அனு.”

 

“அவள் அகம்பனை நெருங்கக் கூடாது.”

 

“முடிச்சிடுறேன்!”

 

“எவ்ளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் டைரக்டா கல்யாணத்தை வச்சிடுங்கப்பா…”

 

“அவனைக் கல்யாணம் பண்ணனும்னா, அவன் வீட்டு ஆள்கள் சப்போர்ட் தேவை. முக்கியமா கற்பகம் தேவை. இங்கயே உட்கார்ந்து இருக்காம, அவரை நினைச்சு அவனுக்கு முன்னாடி அழுது புலம்பு.” என்றதற்கு உடன்பட்டு மருத்துவமனை சென்றவள்,

 

“ஆன்ட்டி!” எனக் கதறி ஓடி வந்து நவரத்தினத்தின் காலில் விழுந்து கதறினாள்.

 

சங்கரனோ, மனைவிக்குக் கண்ணைக் காட்டிவிட்டுப் புறப்பட்டார். ஏற்கெனவே கஸ்டடியில் இருக்கிறாள் என்பதை அறியாது, அவளைத் தேட ஆள்களை அனுப்பினார். சுற்றியும், தனக்குப் பின்னப்பட்ட வலை தெரியாது அகம்பன் நினைவில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள் மதுணிகா.

 

ஆதிகேஷ், முரளி, கிஷோர், நவரத்தினம், சங்கரன் என்ற ஐந்து ஆண் சிங்கங்களுக்கு இறையாகப் போகும் மதுணியைக் காப்பாற்றுவானோ! புதைக்குழியில் தள்ளுவானோ!

 

அவளுக்கு அகம்பனைப் பார்க்க வேண்டும். அவனுக்கு ஆறுதலாக உடன் இருக்க வேண்டும்.‌ தன் தவறால், பாதிக்கப்பட்டவன் கொடுக்கும் தண்டனையை மறுக்காமல் ஏற்க வேண்டும். இவள் மனநிலைக்கு எதிராக, மருத்துவமனையில் இருந்தவன் கொலை வெறியில் அமர்ந்திருந்தான். இத்தனைக்கும் காரணமான தன் கடந்த காலங்களை அசைபோட்டான்.

 

கடந்த முறை வெற்றி பெறாமல் விட்ட விரக்தியில், தொடர் பயிற்சியில் ஈடுபட்டான். முறையான உணவு எடுக்காமல் கட்சி வேலை, தன் பயிற்சி என்று சுழன்று கொண்டிருந்தவன் உடல், பலம் இழந்து மயக்கம் போட ஆரம்பித்தது. தன்னுடைய அலட்சியமே காரணம் என்பது புரியாது திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். சிகிச்சை முடியும் வரை அமைதியாக இருந்தவன், அதன்பின் மீண்டும் தன் வேலைகளை ஆரம்பித்தான். தொடர்ந்து காலை, மதியம், உணவுகளைத் தவிர்த்து வந்தவனுக்கு அசிடிட்டி பிரச்சினை உண்டானது.

 

எதை உண்டாலும் உடல் ஏற்க மறுத்தது. தனக்குள் தன் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்தவன், தேவைப்படாத சந்தேகத்தில் சென்னை வந்தான். யாருக்கும் தெரியாமல் மருத்துவரைச் சந்தித்து உடல் பரிசோதனை செய்தான். சிறு சிறு உபாதைகளைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை அவனுக்கு. ஆனால் அறிக்கையை மாற்றி அவன் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது ஜிஎன் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனை.

 

 

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்