
அத்தியாயம் 6
ஆச்சியை முறைத்தபடி அமர்ந்து இருந்தாள் மௌனிகா.
பெயர்த்தியை பாவமாய் பார்த்த ரெங்கநாயகி, “என்ன பாப்பா?”
“செய்யிறது எல்லாம் செஞ்சிட்டு, என்ன பாப்பானு என்னைக் கேட்கிறீங்க.?”
“நான் என்ன செஞ்சேன்?”
“உங்களை இப்ப எனக்குக் கல்யாணம் பேச சொன்னாங்களா?”
“நான் இரண்டரை வருஷமா சொல்லிக்கிட்டு தான இருக்கேன்?”
“ஆறேழு மாசமா சும்மாதான இருந்தீங்க?”
“வரன் எதுவும் வரல. அதான் பேசாம இருந்தேன்.”
“இப்பவும் வரல.”
அவர் அமைதி காக்க, “ஏன் ஆச்சி இப்படிச் செஞ்சீங்க? சும்மாவே சித்தப்பாவோட குடும்பம் என்னை ஏதோ சண்டைக்காரி மாதிரி பார்ப்பாங்க. இப்ப, நீங்க செஞ்ச காரியத்துக்கு…”
மெலிதாய்ப் புன்னகைத்த ரெங்கநாயகி, “நான் பேசுறப்ப எதுவும் சொல்லாம, இப்ப வந்து புகார் வாசிக்கிற?”
“எல்லார் முன்னாடியும் என்னோட ஆச்சியை எப்படி விட்டுக் கொடுக்க முடியும்?”
“இந்த மனசுக்காக தான பாப்பா, எப்பாடு பட்டாவது உனக்கு ஒரு நல்லதை செஞ்சிடணும்னு தவிக்கிறேன்.”
“அதெல்லாம் சரிதான். மாப்பிள்ள பாருங்க, நான் மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு எல்லாம் சொல்லல. ஆனா, லாவண்யாக்குப் பேசுன ஆளைப் போயி..”
“நீ, உன் தங்கச்சியோட வாழ்க்கையை ஒன்னும் பறிக்கல. ரெண்டு பக்கமும் வேணாம்னு முடிவு எடுத்த பின்னாடி தான், நான் பேசுனேன்.”
“புரியிது.. ஆனாலும்..”
“அவளுக்கு இந்த வாழ்க்கை வாய்க்கல பாப்பா. உனக்குக் கிடைச்சா, நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்.,
சின்னதாய்ச் சிரித்த மௌனி, “அந்த மாப்பிள்ள, அவ்வளவு பெரிய ஆளா என்ன? பார்த்தா, அப்படி ஒன்னும் தெரியலயே? அதுவும் லாவண்யா சொல்லுறதை வச்சு யோசிச்சா.. ப்ச்ச்.. எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல ஆச்சி.”
“பார்த்தா எப்படித் தெரியும்? காசு பணம் வச்சிருந்தா, பெரிய ஆளா பாப்பா? நீ அப்படியா நினைச்சிருக்க?”
“நான் அப்படி எல்லாம் மனுசங்களை எடை போட மாட்டேன் ஆச்சி. பட், இது வேண்டாம்னு தான் தோணுது.”
“திருமண தகவல் மையம் மூலமா வந்த வரன் தான், சரண். பொண்ணு பார்க்க, என்ன ஏதுனு விசாரிக்க, நிச்சயம் பேச, விசேஷத்துக்கு நகை துணி வாங்க, அப்புறம் இன்னைக்குக் காலையில வேணாம்னு சொல்லனு அஞ்சு தடவை இங்க வந்திருக்கான். கடைசி நாலு முறையும் என்கிட்ட பேசாம போனது இல்ல. ரூமுல இருந்தாலும், தேடி வந்து பார்ப்பான்.
லாவண்யாவோட வயசைக் காட்டிலும், ரெண்டு மடங்கு அனுபவம் இருக்கு எனக்கு. ஒருத்தரை பார்த்த அரை மணி நேரத்துலயே எப்படிப்பட்ட ஆளுனு கணிச்சிட முடியும். அந்த வகையில அவன்கிட்டயும் சின்ன சின்னதால குறை இருக்கு தான். ஆனா குணத்துலயும் குறைவு இல்லாதவன்.
அப்புறம் இன்னொரு விஷயம் இருக்கு பாப்பா. நாம என்ன தர்றோமோ, அதுதான் நமக்குத் திருப்பிக் கிடைக்கும். வீடு, காரு, சொத்து இருக்குனு கல்யாணத்துக்கு சரினு சொன்ன உன்னோட தங்கச்சி, அவன்கிட்ட என்ன பேசி எப்படி நடந்துக்கிட்டு இருப்பானு நினைக்கிற.?
நிச்சயத்துக்கு மோதிரம் செயின் எல்லாம் லாவண்யாக்குப் பிடிச்ச மாதிரி வாங்கணும்னு, கார் அனுப்பிக் கூட்டிட்டுப் போனாங்க. நேத்துனு மட்டும் இல்ல, ஒவ்வொரு தடவையும் அப்படித்தான்.
பொண்ணை வீட்டுக்கு வந்து பார்க்கிற மாதிரி, மாப்பிள்ளையைப் பார்க்கவும் அவங்க வீட்டுக்கு போற வழக்கம் இருக்கு. பையனைப் பார்க்கிறதுனு பொதுவா சொன்னாலும்.. அவனோட வீடு எப்படி, சொந்த பந்தம், சுத்தி இருக்கிறவங்க, வசதி வாய்ப்பு, பணம் காசு இதெல்லாம் என்ன மாதிரினு நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கிறதுக்கான உத்தி தான் இது.
உன்னோட சித்திக்காரி, என்னை வர்றியானு ஒரு வார்த்தை கூட கேட்கல. கூப்பிட்டாலும் நான் போகப் போறது இல்ல, அது வேற விஷயம். அவளுக்குமே என்னோட மனசும், உடல் நிலையும் தெரியும். இருந்தாலும் கூப்பிட வாய் வரல. அதுவும் நான் பெத்தவன் இருக்கானே, பொண்டாட்டி சொல்லுக்கு தலை ஆட்டுற பொம்மை மாதிரி மாறிட்டான். ஆனா சரண் வந்தான். ஏன் வரலனு விசாரிச்சு, என்னைக் கூட்டிட்டுப் போறதுக்காக பேசுனான்.
‘பெத்த பிள்ளையும் மருமகளுமே வேண்டாம்னு நினைக்கிறாங்க, அதை மீறி நாம போயி என்ன சாதிக்கப் போறோம்’னு வரலப்பானு சொல்லிட்டேன். இதுக்காக சொல்லல, நான் கணிச்ச வரைக்குமே கட்டிக்கப் போற பொண்ணை நல்லபடியா பார்த்துக்கணும்னு பொறுப்போட யோசிக்கிறவன் தான் அவன்.
என் நிலைமைக்கு, நான் எங்க போயி மாப்பிள்ளை பார்க்கிறது உனக்கு? அதான், கண் முன்னாடி இருந்த சரணோட அம்மாக்கிட்ட பட்டுனு கேட்டுட்டேன்.”
மூத்தவரின் எண்ணங்களை உணர்ந்து, மெலிதான பெருமூச்சை வெளியிட்டு தலை அசைத்தாள் மௌனிகா.
“என்ன பாப்பா, ஒன்னும் சொல்லாம தலையை ஆட்டுற?”
“நீங்க சொல்லுறது சரியாக் கூட இருக்கலாம் ஆச்சி. ஆனா இது செட் ஆகாது.”
“ஏன் பாப்பா? லாவண்யாவை நினைச்சு யோசிக்கிறியா?”
“ம்ம்..”
“தினம் தினம், பார்த்து ஒன்னும் பேசிக்க போறது இல்லையே நீங்க? இப்ப மட்டும், அக்கா தங்கச்சினு பாசத்தோட உறவாடிக்கிட்டா இருக்கீங்க? நல்ல நாளு, விசேஷத்துக்கு வந்து போவ. வருஷத்துல, ரெண்டோ இல்ல மூனு தடவை அந்த மாதிரி சந்தர்ப்பம் அமையுமா? அந்த நேரத்துல மட்டும் கொஞ்சம் அனுசரிச்சு விலகி இருந்துக்க வேண்டியது தான்!”
“நல்லா காரணம் சொல்லுறீங்க ஆச்சி?”
“வேணாம்னு நினைக்கிறியா? ஏன் பாப்பா?”
“உங்க மனசும், ஆசையும் புரியிது ஆச்சி. ஆனா கொஞ்சம் பிராட்டிக்கலா யோசிங்க.”
“என்ன சொல்லுற?”
“நான் சென்னையில வொர்க் பண்ணுறேன். அவரு ஊர்ல இருக்காரு. வேலை குடும்பம்னு எல்லாமே இங்கதான் அவருக்கு. இந்தக் கல்யாணம் முடிவாச்சுனா, நீங்க சொல்லுற மாப்பிள்ளை எல்லாத்தையும் விட்டுட்டு, என்கூட வந்து சென்னையில இருக்கிறதுக்கு வாய்ப்பு இல்ல. நான்தான் வேலையை விட வேண்டியதா இருக்கும். மந்த்லி, ஒன் அண்ட் ஹாஃப் லேக் சேலரி வாங்குறேன். எனக்குனு சென்னையில ஒரு வாழ்க்கை, வேலை, அடையாளம், வீடு, ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்னு பிடிச்ச மாதிரி அழகான சின்ன உலகம் இருக்கு. அதை எல்லாம் இழக்குறதுல, விருப்பம் இல்ல ஆச்சி.”
முகம் வாடி போனார் ரெங்கநாயகி. அவரிற்குப் பெயர்த்தியின் மனம் நன்றாகவே புரிந்தது.
பாகீரதியும் அவரின் விருப்பத்திற்கு எதிர்வினை எதுவும் செய்யாது சென்றதால், ‘இனி இது நடக்க வாய்ப்பு இல்லை.’ என தனக்குத் தானே சமாதானம் சொல்லி, அந்த எண்ணத்தை ஓரம் தள்ளினார்.
மூத்தவரின் முக மாற்றங்களை கண்டு மௌனிக்கு மனம் கனக்க, “ஸாரி ஆச்சி..”
“இதுக்கு எதுக்கு ஸாரி பாப்பா? போகட்டும் விடு, நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன். ஆனா, இனியும் தள்ளிப் போட முடியாது. பேச்சு வேற வந்துடுச்சு. அதுனால சீக்கிரம் கல்யாணத்தைச் செய்யணும் உனக்கு!”
“சரி சரி.. நான் இந்த மாப்பிள்ளையை தான் வேண்டாம்னு சொன்னேன். மத்த யாரா இருந்தாலும் ஓகே.”
“அது எப்படி சரியா இருக்கும்? உனக்கு, சென்னையில இருக்கிற மாதிரி இல்ல மாப்பிள்ளை பாக்கணும்?”
சின்னதாய்ச் சிரித்தவள், “ஆமா ஆமா.. ஷார்ப் ஆச்சி நீங்க. ஃபேமிலி எங்க இருந்தாலும் பிரச்சனை இல்ல. மாப்பிள்ளை சென்னையில ஒர்க் பண்ற மாதிரி மட்டும் பாருங்க, போதும்.”
“சரி பாப்பா..” என்றவர் பெயர்த்தியின் குழலை வருடிக் கொடுக்க, அன்பொழுக பார்த்திருந்தாள் மௌனிகா.
உறவுகளின் கைப்பேசி எண்களை, தனது தொடர்பு பட்டியலில் தேடி எடுத்துக் கொண்டிருந்தான் ஶ்ரீசரண்.
லாவண்யாவின் இல்லத்தில் பேசிவிட்டு வந்த பின்னர், அவனிற்குச் சற்று தனிமையும் ஓய்வும் தேவையாய் இருந்தது. அதனாலே இல்லத்திற்கு வந்ததும் அன்னையிடம் விவரங்களை உரைத்து விட்டு, அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.
அத்தருணத்தில் தான் பாகீரதி மகனிடம் பேசி, காரணத்தைத் தெரிந்து கொண்டு, ரெங்கநாயகி அழைத்ததின் பெயரில் கிளம்பிச் சென்றார்.
அவர் விமலுடன் வீட்டிற்குத் திரும்பும் பொழுது, மூத்தவனும் உணர்வுகளின் பிடிக்குள் இருந்து விடுபட்டு இயல்பிற்கு மாறி இருந்தான்.
பேசி வைத்த திருமணத்தை நிறுத்தியாகி விட்டது. நிச்சயதார்த்த நிகழ்வு நிகழப் போவது இல்லை. முன்பணம் கொடுத்து உறுதி செய்து வைத்த மண்டபம் முதல் அழைப்பு விடுத்திருந்த உறவுகள் வரை அனைவரிடமும் விஷயத்தைப் பகிர வேண்டும்.
ஒரு பெருமூச்சை எடுத்துக் கொண்டு செயலில் இறங்க தயாரானான்.
மகனைக் கவனித்த பாகீரதி, “சரண்..”
அன்னையின் அழைப்பில் திரும்பியவன், “சொல்லுங்க அம்மா.”
“லாவண்யா வீடு வரைக்கும் போயிருந்தேன்.”
அவன் ‘என்ன’ என்பது போல் கேள்வியாய் பார்க்க, “ரெங்கநாயகி அம்மா கூப்பிட்டு இருந்தாங்க.”
“ஆச்சியா.?”
“ம்ம்..”
வலிந்து புன்னகைத்தவன், “எனக்கு அவங்களைப் பார்த்து எப்படிச் சொல்லுறதுனு சங்கடமா இருந்துச்சு. அதான் பார்க்காமலேயே வந்துட்டேன். ரொம்ப ஒன்னும் பேசிப் பழகலனாலும், சின்னப் பையன் தானனு நினைக்காம மரியாதையோட நடத்துவாங்க. எதுவும் சொன்னாங்களா அம்மா?”
“என்ன காரணம்னு கேட்டாங்க!” என்று நடந்த நிகழ்வுகளை உரைத்தார்.
“ம்ம்..” என அவன் தலை அசைக்க, “இன்னொரு விஷயம் சொன்னாங்க சரண்.”
“என்னம்மா.?”
“இறந்து போன அவங்களோட மூத்த மகனுக்கு ஒரு பொண்ணு இருக்கு.”
“தெரியும் ம்மா. முன்னாடியே சொல்லி இருக்காங்க.” என்றவனிற்கு மௌனிகாவை அன்றைய தினத்தின் காலையில் நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்துக் கடந்தது நினைவிற்கு வந்தது.
‘அவள் தான், குடும்பத்தில் மூத்த பெண்ணாக இருக்க வேண்டும்!’ என அனுமானித்துக் கொண்டான்.
“என்ன விஷயம் ம்மா? இப்ப எதுக்கு அந்தப் பொண்ணைப் பத்திப் பேசுறீங்க?”
“வீட்டுக்குப் போனப்ப, அங்க இருந்தா. பார்த்தேன்.”
“சரி பார்த்தீங்க. அதுக்கு என்ன?”
“ரெங்கநாயகி அம்மா, என் பெரிய பேத்தியை உன் மகனுக்குக் கட்டிக்கிறியானு கேட்டாங்க.”
பெரிதும் அதிர்ந்தவன், “அம்மா.?”
“எனக்கும் அவங்க கேட்டப்ப, அதிர்ச்சியா தான் இருந்துச்சு. அதை விட, சங்கடம்! வேணாம்னு சொல்லீட்டு, அதே வீட்டுல எப்படிப் பொண்ணு எடுக்க முடியும்.? நான், அமைதியா வந்துட்டேன். விமல் உன்கிட்ட சொல்ல வேணாம்னு தான் சொன்னான். ஆனா, எனக்குத்தான் மனசு கேட்கல.
லாவண்யா விஷயத்துல, நான் முடிவெடுத்து உன்னைச் சம்மதிக்க வச்சேன். அது இப்ப பாதியிலயே நின்னு போச்சு. தப்பு செஞ்சிட்டோமோனு நெஞ்சு அடிச்சிக்குது. அதுனால, இனி கல்யாண விஷயத்துல நீ எடுக்கிறது தான் முடிவு. அதான், உன்கிட்ட இதைச் சொல்லிட்டேன்.
நடந்தது ஏதோ நடந்து போச்சு. லாவண்யா மாதிரி, அவளோட அக்காவும் இருக்கணும்னு அவசியம் இல்ல. நான், உன்னை வற்புறுத்தல சரண். யோசி! அப்புறம் உனக்கு விருப்பம் இல்லாம, எங்களுக்காகனு எதுவும் செய்ய வேண்டாம்!” என அவர் உரைக்க, முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு திரும்பினான்.
இருவரையும் பார்த்தபடி, அறை வாயிலில் நின்று இருந்தாள் சரணின் தங்கை ரோகிணி.

