Loading

பிறை -58

 

மனதில் எழும் பயத்தை மறைக்காமல் இருக்க முடியவில்லை. முகம் வெளிறிப் போய் சீட்டில் அமர்ந்திருந்தாள் பார்கவி.

 

” ரொம்ப பயமா இருக்குண்ணா.. ” வேர்த்து போய் பயத்தில் பேசும் தங்கையை பார்க்க, அவனுக்குள்ளும் சற்று கலக்கம் பிறக்கவே செய்தது.

 

” உன்னால முடிஞ்சா போ டா பாரு.. இல்லைன்னா அவனை வேற மாதிரி ஹேண்டில் பண்ணுறேன்.. ” ஆதி கூறியதும் அவசரமாக  மறுப்புடன் தலை அசைத்தாள்.

 

” இல்ல அன்னிக்காக கண்டிப்பா நான் இதை பண்ணியே ஆகனும்.. எனக்காக அவங்க மும்பை வரைக்கும் வந்து அவங்க உயிரை பணயம் வச்சிருக்காங்க.. நான் அவங்களுக்கு இதை விட என்ன பெருசா செய்ய போறேன் ” என இடம் வந்ததும் ஆதி முதலில் இறங்கி இருந்தான்.

 

இருவரது உரையாடல்களையும் கேட்டுக்கொண்டு சரண் அமைதியாக பார்வையாளராக மட்டுமே இருந்தான். அன்று காதலை கூறியதற்கு பின் , அவளை பார்க்கவும் இல்லை.. அவளது பதிலை கேட்கவும் இல்லை. தற்போதும் கூட அந்த சிந்தனை இல்லை. உள்ளே சென்றால், அவள் பத்திரமாக வர வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

 

இடம் வந்ததும் ஆதிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர.. அதை எடுத்துக் கொண்டு சற்றே தள்ளி நின்று பேசினான்.

 

சரணும் அவளும் மட்டும் இருந்தாலும், அவள் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

 

” ரொம்ப பயப்பட வேணாம் பாரு.. நாங்க உன்ன கண்காணிச்சிட்டே தான் இருப்போம். உனக்கு ஏதாவது ஆபத்து வர மாதிரி இருந்தா கண்டிப்பா நாங்க வந்துடுவோம்.. ” என்றதும் தலையை நிமிர்த்தாமல் ஆட்டி வைத்தாள் பார்வதி.

 

” இதை எதுக்கும் வச்சுக்கோ.. உனக்கு தேவைப்படலாம் ” என கத்தியை கொடுக்க.. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் பார்வதி.

 

” பயப்படாத பாரு.. அவனை அட்டாக் பண்ணுற சூழ்நிலை வந்தா மட்டும் பண்ணு. அதுக்குள்ள நாங்க வந்துடுவோம்.. ஒருவேளை நீ தைரியம் இல்லாம இருந்தா உனக்கு இது உதவும்.. தைரியமா போ.. போலீஸ்காரன் தங்கச்சி.. அதை விட போலீஸ்காரன் பொண்டாட்டி ஆகப் போறவ இப்படி பயந்தா எப்படி… ” ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவனை முறைத்து பார்த்தவள்.. பின் தலை குனிந்து கொண்டாள்.

 

” மனசை ஃப்ரீயா வச்சுக்கோ ..  நான் சொல்லி கொடுத்த மாதிரி அவனை ஹேண்டில் பண்ணு. பொறுமை ரொம்ப அவசியம் பாரு.. நீ அவன் கிட்ட சண்டை மட்டும் போடாத.. ஈசியா அவன் கிட்ட பேசி விஷயத்தை வாங்கிடலாம் .. இதை தவிர அவன் கிட்ட விஷயத்த வாங்குறது கஷ்டம். அதுனால தான் வேற வழி இல்லாம உன்ன அனுப்ப வேண்டியதா போச்சு ” என அவளுக்கு தெளிவாக விளக்கினான்.

 

” ம்ம் நான் சரியா பண்ணுறேன்.. ” என தலையசைத்து காரில் இருந்து இறங்கிக் கொண்டாள்.

 

அதேசமயம் ஆதியும் வந்துவிட.. தங்கையை ஒரு முறை இறுக்க அணைத்து, விடுவித்தான்.. ” அண்ணன் இருக்கேன் பாரு.. டோண்ட் ஓரி.. போய் பேசு ” என உள்ளே அனுப்பி வைத்து விட்டு, வெளியே இரு ஆடவர்களும் இருதலை கொல்லி எறும்பாக அலைந்தனர்.

 

மெல்ல அடியெடுத்து வைத்து உள்ளே சென்றாள் பார்கவி. இருட்டான அறை..பெரிய பெரிய கேட்டுகளுக்கு உள்ளே  சுவர் ஓரத்தில் அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனை பார்த்ததும் காதல் கொண்ட நெஞ்சம் சற்றே தடுமாறியது.

 

கண்ணீர் மல்க.. ” அஜூ ” என பழக்க தோஷத்தில் அழைத்திருந்தாள் பார்கவி.

 

சட்டென தலையை உயர்த்தியவனை பார்த்ததும் அரண்டு போனவள்.. பயத்தில் கத்த போனவளின் வாயை அவளே இறுக்க மூடிக் கொண்டாள். ஆதி ஊற்றிய திரவம் அவனது உடம்பையும், முகத்தையும் சற்றே சிதைத்திருந்தது.

 

அஜூ என்றழைத்த காதலியை வெறிக்க வெறிக்க பார்த்து வைத்தான் அர்ஜுன்.

 

இதற்குமேல் இவனிடம் பேச முடியுமா… இப்படி ஒரு சூழ்நிலையிலா இவனை பார்க்க வேண்டும் ..மனம் ஊமையாக அழுதது.

 

காதல் செய்த பொழுது கண்ணியமாக நடந்து கொண்டவனா இவன். இப்படி ஒரு வேலையை மட்டும் அவன் செய்யாமல் இருந்திருந்தால் இந்நேரம் வீட்டில் பேசி இவனோடு திருமணம் செய்திருப்பேனே. ஆனால் அனைத்தையும் வெறும் பணத்திற்காக கெடுத்து விட்டானே பாவி.. மனம் அரட்டியது.

 

” வாங்க மேடம்.. என்ன உன் அண்ணன்காரன் அனுப்பி வச்சானா ” நக்கலாக கேட்டான் அர்ஜுன்.

 

” பைத்தியம் மாதிரி பேசாத அஜூ.. உனக்கு என்னாச்சி ஏன் இப்படி முகமெல்லாம் சிவந்து போயிருக்கு ” கண்ணீரோடு கேட்ட காதலியை பார்த்தும் மனம் இறங்கவில்லை.

 

அவனது பேச்சில் சட்டென தன்னை சுதாரித்து கொண்டவள்.. அவனிடம் பேச்சை வளர்த்தாள்.

 

” ஓ.. செய்யுறதையும் நீங்களே செஞ்சிட்டு.. கேள்வி வேற கேட்குறியா டி… ” கடுப்பில் கத்தினான்.

 

” எனக்கு சத்தியமா தெரியாது அர்ஜுன்.. நான் இங்க என் அண்ணனை தேடி தான் வந்தேன். ஆனால் உன்னைய எதிர்பார்க்கல ”

 

” யாருக்கு டி பூ சுத்த நினைக்கிற.. நீ சொல்லுறது எல்லாம் கேட்கிறதுக்கு நான் ஒன்னும் பழைய அர்ஜுன் இல்லை டி..  கொலை வெறியில இருக்கேன் உன் அண்ணன் மேல.. இன்னும் எதுக்காக என்னைய உயிரோட வச்சு சித்திரவதை பண்ணுறான். ஒரேடியா என்னைய கொன்னுட வேண்டிய தானே.. ” வெறி வந்தவன் போல கத்திய அர்ஜுனை பார்க்கும் பொழுது அவனது உடல் வேதனை தெளிவாக தெரிந்தது.

 

” ஏன் அர்ஜுன் இப்படியெல்லாம் பேசுற.. நான்தான் அப்போவே உன்னை தப்ப ஒத்துக்க சொன்னேன்ல .. அப்படி பண்ணிருந்தா இதெல்லாம் உனக்கு தேவையா சொல்லு ” ஆதங்கமாகவே

கேட்டாள் பார்கவி.

 

” என்ன டி ஒத்துக்க.. இல்ல என்னனு கேட்கிறேன். எப்போ உன் அண்ணனை விட்டு பிரிஞ்சு வந்தேனோ.. அப்போவே இந்த தொழிலை தான் டி கையில எடுத்தேன். சின்ன வயசுல இருந்து யாரும் இல்லாம வளர்ந்து பாரு டி.. அதோட வேதனையும் வலியும் உனக்கு புரியும். அந்த வலியை எல்லாம் இந்த பணம் தான் சரி பண்ணுச்சு.. பணம்  இந்த பணம் தான் என். வாழ்க்கையை மாத்திச்சு. இதே பணம் தான் இங்க எல்லாரோட வாழ்க்கையையும் பல திருப்பங்களை கொண்டு வருது.

 

அதே மாதிரி தான் என் வாழ்க்கையும் சட்டுன்னு மாறிச்சு. பணம் வந்ததும் எல்லாரும் என்னைய பார்க்கிற பார்வையே வேற மாதிரி இருந்துச்சு.. நான் அப்படியே அந்த உலகத்துல மயங்கிட்டேன். இப்போவும் அந்த வாழ்க்கை தான் வேணும்னு என் மனசு துடிக்குது. ஆனால் என்னைக்கு உன்ன பார்த்தேனோ அன்னைக்கு பிடிச்சது எனக்கு சனியன். எல்லாப் பொண்ணுங்களையும் வெறும் காசுக்காக தூக்கினேன் கவி.. ஆனால் உன்னைய உண்மையா தான் லவ் பண்ணேன். உன் அண்ணனை பழி வாங்குறதுக்காக தான் உன்னை லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணேன். ஆனால் எப்படி அது உண்மை காதலா ஆச்சுன்னு எனக்கு தெரியல..

 

ஆனால் என் பணமும் என்ன விட்டு போய், நான் காதலிச்ச பொண்ணும் என்ன விட்டு போய் இன்னைக்கு நான் மறுபடியும் ஜீரோவா நிக்கிறேன். இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா… உன் அண்ணன்… அவன் தான் என் வாழ்க்கையில பெரிய எதிரியே.. இப்போ இல்ல.. எப்பவுமே.. அவன் மட்டும் தான்.. ” என ஒரு மூச்சு பேசி முடித்தவனை கண் இமைக்காது பார்த்து வைத்தாள் பார்கவி.

 

” இப்போவும் என்னைய லவ் பண்ணுறியா அர்ஜுன் ” அமைதியான குரலில் கேட்டாள் பார்கவி.

 

அவளது குரலில் என்ன இருந்ததோ.. மனதில் உள்ளதை மறைக்காது ” சாகுற வரைக்கும் உன்ன மட்டும் தான் லவ் பண்ணுவேன் கவி  ” என்றவனை கண்ணீர் மல்க பார்த்து வைத்தாள் பார்கவி.

 

” அப்பறம் ஏன் டா உனக்கு இந்த வேலை. இந்நேரம் வீட்ல எல்லாரோட சம்மதமும் வாங்கி நம்ம கல்யாணம் பண்ணிருக்கலாம்.. எல்லாத்தையும் கெடுத்துட்டியே அர்ஜுன்.. நான் என்ன செய்வேன்.. உன்ன இப்படி ஒரு நிலைமையிலையா நான் பாக்கனும் ” என தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் பார்கவி.

 

” அழுகாத டி கவி. உன்ன நல்லா பார்த்துக்க எனக்கு அந்த வேலை தேவை. உன்ன ராணி மாதிரி பார்த்திருப்பேன் டி.. நீ கேட்கிறது, ஆசைப்பட்டது எல்லாம் வாங்கி கொடுத்து உன்னை சந்தோஷமா வச்சுக்க நினைச்சேன் கவி.. அதுக்கு தான் உன் அண்ணன் பொண்டாட்டியை தூக்கினேன் ”

 

” என்ன உண்மையா காதலிச்சேன்னு சொன்ன.. ஆனால் எனக்கு ஏன் அர்ஜூன் டெஸ்ட் எல்லாம் பண்ண ” கண்களில் உயிர் இல்லாமல் கேட்டால் பார்கவி.

 

” சத்தியமா உன் உடம்புல அவ்வளவு எல்லாம் எதுவும் இன்ஜெக்ட் பண்ணல டி.. உன்ன பயப்பட வைக்க தான் லேசா டோஸ் போட்டேன்.. உன் அண்ணிக்கு தான் பயங்கரமா போட்டிருக்கேன்.. அவ இப்ப வரைக்கும் கண் முழிச்சிருக்க மாட்டாளே.. ” என விகாரமாக சிரித்தான் அர்ஜுன்.

 

” ஏன் அர்ஜுன் அப்படி பண்ண.. அவங்க பாவம் ”

 

” பாவம் தான் ஆனால் உன் அண்ணன் துடிக்க வேண்டாம்.. அதுக்கு தான் இது.. ”

 

” தப்பு மேல தப்பு பண்ணுற அஜூ.. நீ என்னோட அர்ஜுன் இல்ல.. எனக்கு அப்படியே பைத்தியம் பிடிக்குது.. உன்ன காதலிச்ச பாவத்துக்கு நான் வலியை அனுபவிக்கிறேன் அர்ஜுன். எனக்கு ஏன் டா எனக்கு இந்த வலியை கொடுத்த… ”

 

” என பண்ண சொல்லுற கவி.. நான் எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாதுல.. உனக்கு மட்டும் தான் நான் நல்லவனா இருக்க ஆசைப்பட்டேன். ஆனால் உன்னையே வெறுக்க வைக்கிற மாதிரி நான் நடந்துகிட்டேன்..”

 

” நான் உன்ன வெறுக்கல அர்ஜுன்.. உன்ன வெறுத்தா எனக்கு வலிக்காது டா.. ஆனால் இங்க வலிக்குது அர்ஜுன்.. காதல் இவ்வளவு வலிக்குன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அதை பண்ணியிருக்க மாட்டேன் அஜூ ” என முகத்தை மூடி அழுத்தவளை விழிகள் கலங்க பார்த்து வைத்தான் அர்ஜுன்.

 

” இந்த வலியை கொடுத்தது நான் இல்ல கவி மா.. உன் அண்ணன் தான்.. இப்போ கூட என்னைய விட சொல்லு.. உன்னை கூட்டிட்டு போய் கண் காணாமல் போய் சந்தோஷமா வாழ எனக்கு அவ்வளவு ஆசை இருக்கு. ஆனால் உன் அண்ணன் என்னைய விட மாட்டான் … ” என கீழே சிதறவிருந்த கண்ணீரை அணைகட்டி அடக்கினான் அர்ஜுன்.

 

” தப்பு பண்ணிட்டேன் அர்ஜுன். இதுல அதிகமா தண்டனையை அனுபவிக்கிறது நான் தான். உன் பக்கமும் என்னால பேச முடியாது. என் அண்ணன் பக்கமும் என்னால பேச முடியாது. அண்ணி கண் முழிக்காம இருக்கும் போது, என் அர்ஜுன் எனக்கு வேனும் திருப்பி கொடுன்னு என்னால எப்படி கேட்க முடியும்.. ” என வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே பேசினாள் பார்கவி.

 

” உன் அண்ணன் மேல இருக்கிற கோபத்துல தான் உன் அண்ணிக்கு அந்த ஊசியை போட்டேன். கண்ணு முழுசுட்டா உங்க யாராலையும் அவளை கண்ட்ரோல் பண்ண முடியாது.. அந்த அளவுக்கு மருந்தோட வீரியம் இருக்கும் கவி ” அமைதியாக கூறிய அர்ஜுனை விழி இடுங்க பார்த்தவள்..

 

” எதுக்காக அந்த மாதிரி ஒரு மருந்தை அண்ணிக்கு போட்ட அஜூ ”

 

” உன் அண்ணன் தான்.. அவன் நிம்மதியா இருக்க கூடாது.. துடிக்கனும் ”

 

” உனக்கு ஒரு உண்மையை சொல்லவா அர்ஜுன்.. அண்ணி கண்ணு முழிச்சு அவங்க கண்ட்ரோல் இல்லாம நடந்துட்டு இருக்காங்க.. இதுக்கெல்லாம் நான் தான் காரணம். உண்மையிலேயே நீ பண்ணின வேலையில என் அண்ணன் துடிக்கிறானோ இல்லையோ.. நான் வலிக்க வலிக்க துடிக்கிறேன் டா.. எல்லாரும் அண்ணியோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்னு சொல்றாங்க அர்ஜுன். எனக்கு அப்படியே பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. யாருமே என் கூட பேசுறது இல்ல . அப்படியே அனாதை மாதிரி இருக்கேன் அர்ஜுன். உன்ன மனசார காதலிச்ச பாவத்துக்கு இன்னைக்கு நான் அனாதையா இருக்கேன்.

 

அண்ணன் என் முகம் பார்த்துக் கூட பேசல.. ஏன் நான் ஒருத்தி இருக்கேன்னு கூட அங்க யாரும் என்னைய நினைக்கல.. எல்லாரும் என்னைய கை கழுவி விட்டாங்க.. உனக்காக உன்னையே நம்பி மும்பை வந்தேன்.. இவங்க எல்லாத்தையும் ஏமாத்தி, உன்கூட வந்ததுக்கு தான் இப்போ அனுபவிக்கிறேன் ” என முகத்தை மூடி அழுதாள் பார்கவி.

 

அவளை பார்க்க பார்க்க அவனுள் ஏதோ ஒரு பிரளயம் உருவானது. அவள் அழுவதை அவன் மனம் ஏற்கவில்லை.  அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

 

” எனக்கு இப்போ யாருமே இல்ல அஜூ.. என் காதல், என் குடும்பம் , என் சந்தோஷம் எல்லாமே ஒரே நாள்ல போயிடுச்சு ” என கதறியவளை பார்க்க பார்க்க மனம் அடிவாங்கியது.

 

தன்னை உண்மையாக காதலித்ததை தவிர அவள் வேறு என்ன பாவம் செய்தாள், அவளுக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் வர வேண்டும். இப்போதும் அவளது அண்ணன் மீது தான் வெறி வந்தது.

 

அவளை பார்த்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன,  என்னை விடுதலை செய்து விட்டால் போதும், நான் அவளை ராணி போல் பார்த்துக் கொள்வேன். இப்படி அவளை குடும்பத்தோடு தவிக்க விட்டார்களே என மனம் பதறியது.

 

” எனக்கு இதுக்குமேல இதையெல்லாம் பார்த்துட்டு வாழுற சக்தி இல்ல அர்ஜுன். நான் எங்கயாவது போறேன். இல்ல செத்து கூட போறேன். இதை சொல்ல தான் என் அண்ணனை தேடி வந்தேன். ஆனால் உன்ன பார்ப்பேனு நான் எதிர்பார்க்கல.. உன்ன பார்த்ததும் நல்லதா போச்சு. நான் இந்த முடிவெடுக்க காரணமே நீதான். நான் என்ன ஆக போறேன்னு உனக்கு தெரியனும் இல்லையா.. காதல் வலியோடு சேர்த்து இதையும் உனக்கு கொடுத்துட்டு போறேன் அஜு..

 

உனக்கு தான் இந்த வலியெல்லாம் தாங்கிக்கிற சக்தி இருக்கு. எனக்கு அதெல்லாம் சுத்தமா இல்ல. அந்த அளவுக்கு என் மனசுல தெம்பும் இல்ல .. ஆனால் ஒன்னு மட்டும் சொல்லுறேன் … ” என்றவள் சற்றே நிறுத்தி அவனை ஆழமாய் ஊடுருவி வண்ணம்.. “நான் உன்னைய உண்மையா காதலிச்சேன் அஜூ… ” இறுதி வார்த்தையை நங்கூரம் போல போட்டு விட.. அதில் மொத்தமாக கரைந்து போனான் அர்ஜுன்.

 

” நான் இப்போ என்ன பண்ணா நீ சந்தோஷமா இருப்ப கவி ” வலி நிறைந்த கண்களோடு கேட்டவனை அதிர்ந்து பார்த்தாள் பார்கவி.

 

இதோ இந்த கேள்விக்காக தான் இந்தனை நேரம் அவள் பேசியது. அவன் வாயால் அந்த கேள்வியை வரவழைக்க இத்தனை போராட்டம். பார்கவியை தவிர இவனிடம் யாராலும் இந்த விஷயத்தை இத்தனை எளிதில் வாங்க முடியாது என்பதை சரியாக தான் கணித்திருந்தான் ஆதி.

 

இதோ அரை மணி நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறி இருந்தாள் பார்கவி. வெளியே வந்த தங்கையை ” வா ” என கைகளை விரித்து அழைக்க.. ஓடி சென்று அவனது மார்பில் சாய்ந்து கதறி தீர்த்து விட்டாள் பேதை.

 

உண்மை காதல்.. அவனது வாயில் இருந்து உண்மையை வரவைக்க பேசினாலும்.. அவளது பேச்சில் இருந்தது தொண்ணூறு சதவீதம் உண்மை மட்டுமே..

 

அர்ஜுனை இப்படி ஒரு நிலைமையில் பார்த்தவளுக்கு நெஞ்சம் கலங்கி விட்டது. அவன் கெட்டவன் தான்.. கேடு கெட்டவன் தான்.. ஆனாலும் அவளது மனதில் முதல் முதலாக காதலை விதைத்தவன்.. அது முளைத்து , விருட்சமாகும் சமயத்தில் அதை வேரோடு பிடிங்கி எறிந்தால் பெண்ணவளுக்கு எப்படி இருக்கு.

 

காதல் இந்த மனிதர்களை தான் எத்தனை பரிமாணங்களில் ஆட்டி படைக்கிறது.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Arjun periya paavathai seidhirukkiran, but avan soldra madri varumai dhan kaaranam…aanalum oruthroda sandhosham innorutharukku vali aagida koodadhu…adhai dhan arjun senjittan..ippo anubavikkuraan..aanalum thirunthala..