
பிறை -56
ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ்.
இதோடு அவள் மயக்க நிலையில் படுத்து பதினைத்து நாட்கள் ஆகிய நிலையில்.. இன்றாவது கண் விழிக்க மாட்டாளா என தவம் கிடந்தான் மணாளன்.
” ஆதி.. நீ போய் குளிச்சிட்டு டியூட்டி போ பா.. அதான் நாங்க இருக்கோம்ல.. என் மருமகளை பார்த்துக்க மாட்டோமா.. ” மீனாட்சி கேட்டதும் மனமே இல்லாமல் எழுந்தவன், ஆழ்ந்து உறங்கும் மனைவியின் நெற்றியில் ஒற்றை முத்தத்தை வைத்து விட்டு , வேகமாக அந்த அறையில் இருந்து வெளியேறி இருந்தான்.
அடுத்த அறையில் அன்றைக்கான ஊசியை போட்டுக் கொண்டு வெளியே வந்தாள் பார்கவி.
” இப்போ எப்படி இருக்கு பாரு ” அண்ணனது கனிவான வார்த்தையில் அதிர்ந்து போனவள்.. ” ம்ம் எனக்கு ஒன்னும் இல்லை .. நான் நல்லா தான் இருக்கேண்ணா ” இப்போதெல்லாம் ஆதி அவளிடம் சற்று நெருங்கியது போல தோன்றியது.
அதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குடும்பத்தில் நன்றாக பேசி இருந்தால், இந்நேரம் பார்கவி அவளது காதலை அண்ணனிடம் பகிர்ந்து இருப்பாளோ என்னவோ.. அப்படி கூறி இருந்தால் அவளை காப்பாற்றி இருக்கலாம்.
அல்லது காலம் அடுத்த நொடி என்ன வைத்திருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இருக்கும் வரையில் குடும்பத்தோடு ஒன்றி அழகான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கூட இருக்கலாம். வீட்டில் இருந்த இரு பெண்களும் தொலைந்ததில் இருந்து பித்து பிடித்ததை போல அல்லவா திரிந்து கொண்டிருந்தான். நடந்தது அனைத்தும் நல்லதோ கெட்டதோ, இந்த நிகழ்வே அவனை சற்று மாற்றி இருந்தது முற்றிலும் உண்மை. வாழ்க்கை அவனுக்கு சரியான பாடத்தையும் கற்றுக் கொடுத்தது.
” அது.. அண்ணி எப்படி இருக்காங்க.. ” தயங்கிய தங்கையின் தலையை வருடியவனை இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி.
” ம்ம்.. இன்னும் உன் அண்ணி எத்தனை நாளைக்கு கண்ணாமூச்சி விளையாட போறான்னு தெரியல .. பாப்போம்.. ”
” சரி ஆகிடுவாங்காண்ணா ”
” இன்னைக்கு காலேஜ் போறியா ”
” ரொம்ப நாள் லீவ் சொல்லிட்டேன்.. இன்னைக்கு போகலாம்னு இருக்கேன் ”
” சரி நான் வீட்டுக்கு தான் போறேன்… வா உன்னைய ட்ராப் பண்ணிட்டு போறேன் ”
” என் வண்டி இங்கதான் இருக்கு.. நானே போயிக்கிறேன் அண்ணா.. உங்களுக்கு எதுக்கு சிரமம் ”
” ஈவ்னிங் வந்து வண்டியை எடுத்துக்கலாம் ” என சொன்ன கையோடு கிளம்பிவனை மறுத்துப் பேச முடியாமல், அண்ணனோடு வண்டியில் ஒரு பயணம் என மகிழ்ச்சியில் அவன் பின்னோடு சென்றாள் பார்கவி.
**
” சிவகாமி நீ சரியா சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு.. நம்ம பொண்ணு கண்டிப்பா நம்ம கிட்ட வருவா மா.. கொஞ்சமா சாப்பிடு ” தட்டை வைத்துக் கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தார் சிவானந்தம்.
” ஊர்ல இல்லாத மகராசனை கொண்டு வந்த மாதிரி என்ன ஆட்டமெல்லாம் போட்டீங்க.. இப்போ பார்த்தியா உன் மவ உலகம் அறியாம போய் படுத்துக் கிடக்கா.. அதுக்குத்தான் என்ன இருந்தாலும் சொந்தத்தில கட்டிக் கொடுக்கனும்னு சொல்லுறது. இந்நேரம் என் பேரனை கட்டிருந்தா இந்த மாதிரி ஒரு நிலைமை ஆகியிருக்குமா ” எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதை போல பேசிக் கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி.
ஏற்கனவே சிவகாமி இந்த நிகழ்வுக்கு பின் ” ஏங்க தெரியாம பொண்ணை போலீஸ் அதிகாரிக்கி கட்டி கொடுத்து தப்பு பண்ணிட்டேன்னா.. என் பிள்ளை இப்படி பேச்சு மூச்சு இல்லாம இருக்காளே ” என மனம் நொந்து கொண்டிருந்தார்.
” என்ன பேச்சு பேசுற சிவகாமி. கட்டி கொடுத்தாச்சு, அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை. பிள்ளை மேல் உயிரையே வச்சிருக்காரு. அவரோட வேலை அந்த மாதிரி. அதுக்கு நம்ம என்ன பண்ண முடியும். அப்படி பார்த்தா போலீஸ்காரன் யாரும் கல்யாணமே பண்ணிக்க முடியாது. நாட்டை காப்பாத்துற மனுஷனுக்கு பொண்ணு கொடுத்தேனு பெருமை படு..
கொடுத்தாச்சு.. நடந்தது நடந்து போச்சு. இதுக்குமேல இப்படி பேசுறது எல்லாம் சரியா வராது. சம்மந்தி வீட்ல இருந்துட்டு இப்படி பேசிட்டு இருக்க.. அவங்க காதுல விழுந்தா என்ன ஆகுறது. இனிமே இந்த நினைப்பே உனக்கு வரக்கூடாது.. உன் பொண்ணு கண் முழிச்சா முதல்ல உன்னையும் என்னையும் தேடுவான்னு நீ நினைக்கிறியா என்ன.. முதல்ல நம்ம மாப்பிள்ளையை தான் தேடுவா. அந்த அளவுக்கு ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல புரிதல் இருக்கு. என் கிட்ட இல்லாத எல்லாம் அவ கிட்ட இருக்கு. இந்த வயசுலயே நல்லா புரிஞ்சுகிட்டு வாழுறான்னு நான் பெருமை பட்டுட்டு இருக்கேன். நீ கண்டதை போட்டு மனசை குழப்பிக்காம தெம்பா இரு. உன் பொண்ணு அதெல்லாம் சரியாகி வந்துடுவா ” என மனைவியை தேற்றி இருந்தார் சிவானந்தம்.
” அவ நல்லா இருந்தா சரிதான்.. நானே ஒத்த பிள்ளையை பெத்து வச்சிருக்கேன். அவ வாழ்க்கை நல்லா இருக்கனும் கருப்பா ” என தெய்வத்தை வணங்குவதை தவிர அவருக்கும் வழி தெரியவில்லை.
பத்து நாட்கள் கடந்த நிலையில் அறுவடைக்கு ஊர் திரும்பியவர்களை தான் வறுத்துக் கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி.
” அம்மாவை பத்தி உனக்கு தெரியாதா.. நீ சாப்பிட்டு போய் வேலையை பாரு மா ” என மனைவியை உண்ண வைத்து வயலுக்கு அனுப்பியவர்.. நேராக அவரது தாயை நோக்கி சென்றிருந்தார்.
” என்ன டா பொண்டாட்டியை அனுப்பி விட்டுட்டு என்கிட்ட பேச வந்திருக்க.. என்ன விஷயம் ”
” பிறை உங்களுக்கு யாரு மா ” அமைதியாக கேட்ட மகனை, அசராது பார்த்தவர்.. ” பேத்தி தான்.. அதுக்காக என் பேரனை காட்டாம, ஊர் பேர் தெரியாதவனை கட்டிட்டு வந்தா.. நான் இப்படித்தான் டா பேசுவேன் ” என கறாராக பேசிய தாயை முகச் சுழிப்புடன் பார்த்தவர்..
” எத்தனை வருஷம் ஆனாலும் நீங்க திருந்தப் போறது இல்லை. என்னமோ என்னைய பெத்த கடமைக்கு நான் உங்களுக்கு கஞ்சி ஊத்துறேன்.. ” என வெறுப்பாக பேசிய மகனை பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டார் அகிலாண்டேஸ்வரி.
அறுவடையை முடித்து விட்டு விரைவில் ஊருக்கு செல்வதற்கு இருவரும் தயாராகினார்கள்.
**
வழக்கமாக வரும் மருத்துவர் அன்றும் பிறையை பரிசோதிக்க வந்தார். இவர்களது குடும்பத்திற்கு தெரிந்தவர் என்பதால் , பிறைக்கு நல்ல கவனிப்பு இருந்தது.
” வாங்க டாக்டர் ”
” என்ன சொல்றாங்க உங்க மருமகள்”
” அவ எங்க என் கிட்ட பேசுறா.. இன்னும் கண்ணு முழிக்கவே இல்லை.. என் மகன் தினமும் வந்து இவளையே வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு போறான். மனசே கஷ்டமா இருக்கு .. வாழ வேண்டிய வயசுல இப்படி ரெண்டு பேருக்கும் நடந்திருக்க கூடாது ” கண்ணீர் வடித்த மீனாட்சியை அணைத்து ஆறுதல் கூறினார் திவாகர்.
” நான்தான் சொல்லுறேன்ல.. உங்க மருமகளை பழைய மாதிரி கொண்டு வந்து சேர்க்கிறது என்னோட பொறுப்பு. நான் பொய் சொல்ல மாட்டேன். முடியும்னா முடியும்னு சொல்லுவேன். இல்ல முடியாதுன்னா முகத்துக்கு நேரா சொல்லிடுவேன். உங்க மருமகள் எல்லா ரிஸ்கையும் தாண்டியாச்சு. கொஞ்சம் போதை மருந்து ஹெவியா போயிடுச்சு. அதுக்கான அறிகுறி தான் இதெல்லாம். மத்தபடி அவங்க நார்மல் தான் ”
” அப்போ ஏன் அவ கண்ணு முழிக்காம இருக்கா டாக்டர் ” திவாகர் கேட்டதும்..
” நார்மலா போதை எடுத்துக்கிற பழக்கம் இருக்கிறவங்க கூட , அளவை கொஞ்சம் கொஞ்சமா தான் கூட்டுவாங்க.. அப்போதான் பாடியும் அதை தாங்கிக்கும்.. கொஞ்சம் கொஞ்சமா போதை மருந்தை ஏத்துக்க அது தயாராகிடும்.. ஆனால் இவங்க உடம்புல எத்துன முதல் போதை மருந்து இதான். அதுவும் ரொம்ப ஹெவியா.. அப்போ அந்த பாடியால திடீர்னு அதை சமாளிக்க முடியாம இந்த ஸ்டேட்டுக்கு கொண்டு வந்திடுச்சு. நல்ல வேளை கோமாவுக்கு போகல.. அப்படி போயிருந்தா நான் உங்களை கூட்டிட்டு போக சொல்லியிருப்பேன். இன்னும் டூ டேஸ் பார்க்கலாம். அதுக்குள்ள கண் விழிக்க சான்ஸ் இருக்கு ” என மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு கிளம்பி இருந்தார்.
திவாகர் மீனாட்சி இருவருமே மருமகளை நன்றாக கவனித்து கொண்டார்கள்.
**
கல்லூரி முடிந்து வெளியே வந்த பார்கவி பார்த்தது.. வாசலில் கருப்பு நிற தார் கார் மீது சாய்ந்து, போனை பார்த்துக் கொண்டிருந்த சரணை தான்.
‘ இவரு இங்க என்ன பண்ணுறாரு.. ‘ என மனதிற்குள் நினைத்தவள்.. மெல்ல நடையிட்டு அவனருகில் வந்து விட்டாள்.
அருகில் ஆள் வருவது தெரிந்ததும் நிமிர்ந்து பார்த்தவன் முன்பு பார்கவி சின்ன சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள்.
” என்ன இந்த பக்கம்.. காலேஜ்ல எதுவும் வேலையா ”
” டிரைவர் வேலை பார்க்க வந்தேன்.. ” என்றதும் அவனை புரியாமல் பார்த்தாள் பார்கவி.
” உன்ன தான் கூப்பிட வந்தேன்.. ஆதிக்கு வேலை வந்திடுச்சு.. நீ பைக் எடுத்துட்டு போகலைன்னு சொன்னான். அதான் நான் வந்தேன்..”
” ஐயோ உங்களுக்கு ஏன் சிரமம்.. நானே பஸ்ல வந்திருப்பேன்.. ”
” ம்ம் .. சீக்கிரம் கிளம்பலாம்.. உங்க காலேஜ் பொண்ணுங்க சைட்டு தாங்க முடியல ” என காரை எடுத்தவனை .. நக்கல் சிரிப்போடு பார்த்து வைத்தாள் பார்கவி.
பின் இருவரும் கிளம்பியிருக்க.. ” சொல்லு ஆதி … ம்ம் என்கூட தான் இருக்கா.. அவளை விட்டுட்டு தான்.. நான் போய் சாப்பிடனும்” என நண்பனுக்கு தகவல் கொடுத்து விட்டு போனை வைத்தான் சரண்.
” இன்னும் நீங்க சாப்பிடலையா ”
” எங்க அதான் வரிசையா வேலை வந்திருதே.. உன்ன விட்டுட்டு தான் போகனும்.. ” ஏனோ சிறு வயதில் இருந்து பார்கவியை பார்த்து வளர்ந்தால் எளிமையாக ஒருமைக்கு தாவி இருந்தது அவனது அழைப்பு.
” அப்போ ஏதாவது ஹோட்டல் போங்க.. நான் வெயிட் பண்ணுறேன்.. சாப்பிட்டே போகலாம்”
” அதெல்லாம் வேணாம். வந்து சாப்பிடுறேன் ” என சாலையில் கவனமாக.. அவளும் அதற்கு மேல் கேட்கவில்லை.
ஆனால் மிகுதியான வாகன நெரிசலில் மாட்டிக் கொண்டவர்களுக்கு.. அரை மணி நேரம் கடந்தும் இரண்டு கிலோமீட்டரை கடக்க முடியவில்லை. அவனுக்கு பசியில் தலை வலியே வந்து விட்டது.
எரிச்சலில் காரை கூட்ட நெரிசலில் இருந்து ஓரம் கட்டியவன்.. வேகமாக இறங்க.. அவளும் அவனோடு இறங்கி இருந்தாள்.
” என்னாச்சு ” பதட்டமாக கேட்டவளுக்கு பதிலாக.. ” சாப்பிட்டு போகலாமா ” என்றதும் தலையாட்டி அவனுடன் அருகில் இருந்த ஹோட்டலுக்கு சென்றாள் பார்கவி.
இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். ” எனக்கு ஒரு ஆனியன் ஊத்தப்பம், சாம்பார் வடை ” என ஆர்டர் கொடுத்தவன்… அவளை பார்க்க..
” எனக்கு எதுவும் வேண்டாங்க… பசிக்கல ”
” அவங்களுக்கு சில்லி பரோட்டா ” என அவளுக்கும் சேர்த்தே ஆர்டர் செய்தவனை விழிகளை விரித்து பார்த்தாள் பார்கவி.
” உனக்கு அதானே பிடிக்கும்.. அப்பறம் வாங்கி சாப்பிடுறதுல என்ன இருக்கு ” என போனை பார்க்க ஆரம்பித்தவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டாள் பார்கவி.
‘ இவருக்கு எப்படி எனக்கு பிடிச்சது தெரியும் ‘ என மனதிற்கு நினைத்துக் கொண்டவள்.. உணவு வரவும் அதில் கணவனமாகிப் போனார்கள்.
இருவருமே நன்றாக உண்டு விட்டு எழ.. அவளருகே வெண்ணிலா ஐஸ்கிரீம் வைக்கப்பட்டது.
” இது நான் ஆர்டர் பண்ணல சார் ”
” உங்க கூட இருந்தவரு தான் மேடம் இத ஆர்டர் பண்ணி கொடுக்க சொன்னாங்க ” என்றதும்.. அதை வாங்கிக் கொண்டவள்.. ஆசையாக சுவைக்க ஆரம்பித்தாள்.
கழிவறைக்கு சென்று வந்தவன், பனிக்கூழை விரும்பி உண்ணும் பார்கவியை பார்த்து விட்டு, உணவிற்கான பணத்தையும் கட்டி விட்டு வந்தான்.
அதற்குள் அவள் உண்டு முடித்திருக்க.. இருவருமே ஹோட்டலை விட்டு வெளியேறி இருந்தார்கள்.
மீண்டும் அரை மணி நேரம் கூட்ட நெரிசலை கடந்து அவளை பத்திரமாக வீடு சேர்ந்திருந்தான் சரண்.
” அப்போ நான் வரேன். ரொம்ப தாங்க்ஸ் ” என புன்னகையோடு இறங்கப் போனவளை தடுத்தவன்..
” இன்னும் அந்த அர்ஜுனை நினைச்சுட்டு இருக்கியா என்ன ” திடுமென அவன் கேட்ட .. அதிர்ந்தவள், ” நினைக்கிற அவளுக்கு அவன் ஒர்த் இல்லைங்க.. இனிமே நினைக்க வேண்டிய அவசியமும் இல்ல ” அவளது பேச்சில் இருந்த தெளிவை உணர்ந்து கொண்டவனோ..
” அப்போ இன்னைக்கு இருந்து என்ன மட்டும் நினைக்கலாம்.. அதுக்காக ஃபுல் ரைட்ஸ் உனக்கு தான் இருக்கு ” என அடுத்த அதிர்ச்சியை கொடுத்தவனை அதிர்ந்து பார்த்தாள் பார்கவி.
அவனுக்கு எந்த பதிலும் கூறாமல் வீட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கிப் போனது.
” லவ் ? ” ஆதி அலைபேசியில் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்த சரணோ.. ” டிரை மை பெஸ்ட் மச்சான் ” என பதில் செய்தி அனுப்பி இருந்தான்.
எப்போது மும்பையில் இருந்து பார்கவியை அழைத்துக் கொண்டு சரண் வந்தானோ.. அப்போதே ஆதி முடிவு செய்து விட்டான். நண்பனை தவிர வேறு நல்ல துணை அவளுக்கு கிடைக்காது என அதற்கான முயற்சியில் இறங்கி இருந்தான். பெரியவர்களுக்கும் இந்த விஷயம் தெரியும்.
” நீ விருப்பம் இருந்தா அவளை கல்யாணம் பண்ணிக்கோ சரண்.. நான் உன்ன கட்டாய படுத்தல.. அவளை பத்தி எல்லா உண்மையும் தெரிஞ்ச நீ அவளுக்கு வாழ்க்கை துணையா கிடைக்கிறது பெட்டர்னு எனக்கு தோணுது. நீ யோசிச்சு சொல்லு ” என அவளிடம் பேசி இருந்தான்.
ஆனால் இன்று ஆதியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தவன்.. பார்கவி வண்டி இல்லாமல் காலேஜ் சென்றதையும், அவளை பிக் அப் செய்ய ஆதி செல்வதையும் அறிந்து கொண்டவன்.. அவனே சென்று அழைத்து வருவதாக கூறி நண்பனுக்கு மறைமுகமாக அவனது சம்மதத்தை கூறி இருந்தான்.
இனி தங்கையை அவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி ஒரு பக்கம் இருந்தாலும்… இன்னும்கண் விழிக்காமல் அவனது இதயத்தின் வலியை கூட்டிக் கொண்டிருந்தாள் பிறைநிலா.
மருத்துவர் சொன்னதை போல இரண்டு நாட்களில் கண் விழித்திருந்தாள் பிறை.
சனா💖

