
பிறை -55
வீட்டில் எத்தனை பெரிய விஷயம் நடந்தாலும் அதை பெண் பிள்ளையின் காதிற்கு கொண்டு செல்வதை அவர்கள் விரும்பவில்லை. சரண் அவனது பள்ளிக்காலத்து நண்பன் என்பதால் அவன் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
குறுகிய காலம் என்றாலும் அவனுக்கு நிகரான இடத்தை பிடித்திருந்தான் அர்ஜுன். அந்த அளவிற்கு அவனது பேச்சும் நடையும் இருந்ததால் அவனை அனைவருமே நம்பி இருந்தார்கள்.
அதில் ஆதி மட்டும் விதி விலக்கா என்ன.. அவனை முழுமையாக நம்பியவனுக்கு எப்படி ஒரு துரோகத்தை செய்திருந்தான்.
மனம் வலித்தது. இரண்டு நாட்களாக அவன் அர்ஜுனை தொடர்பு கொள்ளவே இல்லை. அவனும் அழைக்கவில்லை. சரணும் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்து விட்டான்.
” அதான் தெரிஞ்சு போச்சே டா.. போய் நாலு சாத்து சாத்திட்டு வரலாம் மச்சான்.. ” சரண் அழைத்தும் வர மறுத்து விட்டான் ஆதி.
” அவன் எதுக்காக இவ்வளவு பெரிய விஷயம் பண்ணான்னு எனக்கு தெரிஞ்சாகனும் மச்சான். நல்லாத்தானே நம்ம கூட பழகிட்டு இருந்தான்..இப்படி பிரேக் வயரை அத்து, என்னைய கொலை பண்ணுற அளவுக்கு நான் என்ன டா பண்ணேன்.. ”
” இன்னுன்னுமா புரியல.. அவனுக்கு உன் மேல பொறாமை மச்சான்.. நீ நல்லா மார்க் எடுக்கும் போதே அவனுக்கு உன்ன முந்தி மார்க் எடுக்க முடியலைன்னு சொல்லிட்டு இருப்பான்.. தம்மாத்துண்டு மார்க்ல என்ன வந்திட போகுது.. அப்படியும் அவனை விட ரெண்டு மார்க் தானே டா கம்மின்னு சொல்லி அவனை திசை திருப்பினேன். ஆனால் அவன் இந்த அளவுக்கு போவான்னு நினைக்கல மச்சான்.. ”
” இதென்ன டா ரொம்ப கேவலமான ரீசனா இருக்கு.. சின்ன பிள்ளைங்க மாதிரி.. மார்க் எல்லாம் ஒரு விஷயமா டா ” அர்ஜுனின் எண்ணத்தை கேட்ட ஆதிக்கு சலிப்பாக இருந்தது.
” உனக்கும் எனக்கும் பெருசு இல்ல மச்சான்.. ஆனால் அது அவனுக்கு பெருசு ”
” இதுக்குமேல எனக்கு அமைதியா இருக்க தோணல.. நேர்ல போய் அவனை நல்லா கேட்டுட்டு வரலாம் ” என்றதும்.. இருவருமாக பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
அவனது விடுதிக்கு சென்று.. அவனை பார்க்க அவனது அறைக்குள் சென்றவர்களுக்கு.. அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
பொட்டலம் பொட்டலமாக கஞ்சா அவனது மெத்தையில் பரவிக் கிடக்க.. அதையெல்லாம் சரி பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
நண்பர்கள் இருவரும் அவனது செயலில் அதிர்ந்தவர்கள்.. ” டேய் அர்ஜுன் என்ன டா பண்ணிட்டு இருக்க ” சரண் கேட்டதும் .. அதிர்ந்து போனவன்.. பெட்சீட்டை கொண்டு அதை மூடியவன்.. பயந்த விழிகளுடன் இருவரையும் பார்த்து வைத்தான்.
” டேய் நீங்க என்ன டா இங்க.. சொல்லிருந்தா நானே வந்திருப்பேன்ல ” சகஜமாக பேச முயன்றவனுக்கு தான் அது வராமல் போனது.
” வந்துனால தானே இவ்வளவு விஷயம் தெரிய வந்துச்சு.. இல்லைன்னா நீ பண்ணுற இந்த கஞ்சா பிஸ்னஸ் எங்களுக்கு தெரியாம போயிருக்கும் ” நக்கலாக பேசினான் சரண்.
” கஞ்சாவா.. நீ தப்பா நினைக்கிற சரண்.. பார்சல் மாறி என் ரூமுக்கு வந்துருச்சு .. அதான் என்னனு பிரிச்சு பார்த்திட்டு இருக்கேன்.. ”
” என்ன பிரிச்சு பார்க்குற.. அதான் நாங்க கண்ணார பார்த்தோமே.. நீ அடிக்கிற கூத்தை ”
” டேய் சரண்.. தேவையில்லாம என் மேல பழி போடாத.. ஆதி .. நான் எதுவும் பண்ணல டா ” நியாயம் கேட்டவனை ஆழ்ந்து பார்த்தவன்..
” எதுக்காக என் வண்டி பிரேக் வயரை கட் பண்ண ” அமைதியாக அதே சமயம் அழுத்தமாகவும் கேட்டு வைத்தவனை பார்க்க குலை நடுங்கியது.
” ஆ.. ஆதி.. என்ன டா சொல்லுற.. நான் எப்படி.. நான் போய் பண்ணுவேனா மச்சான்.. சந்தேக படுறியா மச்சான்.. நான் சத்தியமா பண்ணல டா ” வார்த்தை வராமல் தந்தி அடித்தது.
சட்டென சரண் போனை காட்டி, அதில் இருந்த வீடியோவை ஓட விட.. அதில் இருந்த காட்சிகளை பார்த்தவனுக்கு கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டோம் என தெளிவாக புரிந்து போனது.
” இப்போ சொல்லு ஏன் கட் பண்ண ” ஆதியின் கேள்வியை நினைத்து ஆத்திரம் வந்தது.
சற்று நேரம் அமைதியாக இருந்தவன்.. ” ம்ம்.. நான்தான்.. நான்தான் கட் பண்ணேன். எங்க நீ பரிச்சை எழுதி பாசாகிட்டா என்ன பண்ணுறது… நீ பரீட்சையே எழுதக்கூடாதுன்னு தான் அப்படி பண்ணேன் ” என்றவன்.. சுவரையே வெறிக்க… சரண், ஆதியை பார்த்து கண் அசைத்தான்..
சரண் கூறிய செய்தியையே இவனும் கூறியிருக்க.. இதற்கெல்லாம் இப்படி செய்வார்களா.. என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. ஆனால் செய்து விட்டானே.. என்ன செய்வது..
” மார்க் கூட எடுக்கும்னுன்னா என்கிட்ட கேட்க வேண்டியது தானே டா.. அதுக்காக என்னைய கொலை பண்ணுற அளவுக்கு போவியா ” அத்தனை ஆதங்கம் அவனது குரலில்.
” ஐயோ உன்ன கொலை பண்ணுற அளவுக்கு எல்லாம் நான் யோசிக்கவே இல்ல ஆதி.. நீ கீழ விழுந்துடுவ.. அதுனால எக்ஸாம் எழுத வரமாட்டன்னு நினைச்சேன்.. ”
” எப்படி பிரேக் வயரை கட் பண்ணா கீழ மட்டும் தான் விழுவாங்களா.. சரி அதை விடு.. என் விஷயத்தை கூட மன்னிச்சிடுவேன்.. ஆனால் இப்போ நீ பண்ணிட்டு இருந்த காரியத்தை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் ”
ஆத்திரம் வந்தவன் போல.. ” இதுல நீ தலையிடாத ஆதி.. எனக்கு பணத்தேவை இருக்கு ”
” அதுக்கு இதுதான் உனக்கு கிடைச்சதா ”
” இதுல தான் அதிகம் பணம் பார்க்கலாம்.. ”
” நீ என்ன வேலைக்காக படிச்சுட்டு இருக்க.. ஆனால் நீ இப்போ என்ன வேலை பாத்துட்டு இருக்க.. ”
” உனக்கென்ன ஆதி நீ பரம்பரை பணக்காரன்.. உன் அப்பாவும் அம்மாவும் உனக்கு சொத்து சேத்து வச்சிருக்காங்க.. ஆனால் நான் அப்படியா.. எனக்கானதை நான் தான் தேடிக்கனும்.. அதான் தேடுறேன். நீ ஒதுங்கி போறது தான் உனக்கு நல்லது ”
” அப்போ சொன்னா கேட்க மாட்ட” என தாடையை தேய்த்துக் கொண்டவன்.. ” சரண் … சொல்லிட்டியா ” என்றதும்..
” வந்துட்டு இருக்காங்க மச்சான் ” என்றதும் அர்ஜுனுக்கு குலை நடுங்கியது.
” யாரு வரா… ஆதி தப்பு பண்ணுற.. என்கிட்ட வச்சுக்காத.. நீ இப்படிலாம் பண்ணுறது தெரிஞ்சாலே அவங்க உன்னை சும்மா விட மாட்டாங்க.. ”
” எவனா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் டா.. இன்னையோட உன் கதை முடியனும் ” என ஆதி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களது அறைக்குள் நான்கு ஐந்து போலீசார்கள் வந்து விட்டனர்.
” எங்க பொருள் ”
” அது பெட்ல ” என சரண் காட்டியதும்.. மெத்தையில் கிடந்த கஞ்சாவை எடுத்து விட்டு.. மேலும் அறையை சோதனை செய்தவர்கள்.. அவனது அலைபேசியை பறிமுதல் செய்து, கையோடு அவனை கைது செய்து கொண்டு வெளியேறினார்கள்.
கண்ணை மூடி கண் திறப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்தது. ” உங்க ரெண்டு பேரையும் நான் சும்மா விட மாட்டேன் டா ” என அவர்கள் மீது வஞ்சத்தை பெருக்கிக் கொண்டு காவலர்களோடு சென்று இருந்தான் அர்ஜுன்.
அதுதான் அவனை இறுதியாக சந்தித்த சந்திப்பு.. பிரிலிம்ஸ் தேர்வில் மூவருமே அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றிருந்தார்கள். அடுத்ததாக ஆதி, சரண் இருவரும் படித்து மெயின் எக்ஸாமை கிளியர் செய்து விட்டு காத்திருக்க .. வேலையும் கிடைத்தது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அர்ஜுன் என்பவனை மறந்து போனார்கள். நம்பிக்கை துரோகியை நினைவில் வைத்துக் கொண்டு என்ன செய்ய.. அதனால் ஆதி அவனை அறவே மறந்திருந்தான்.
இதோ இத்தனை ஆண்டுகளுக்கு பின்னர், அதே வஞ்சத்துடன் அவர்கள் முன்னால் வந்து நின்றான் ஆதி அர்ஜுனன்.
” பொண்டாட்டி இந்த நிலைமையில இருக்கும் போது கூட, இவ்வளவு கூலா உன்னால மட்டும் தான் இருக்க முடியும் ஆதி ” நக்கல் சிரிப்பு சிரித்தான் அர்ஜுன்.
மெதுவாக இதழை வலைத்தவன்.. ” கமிஷனர் பொண்டாட்டின்னா இந்த அளவு கூட தைரியம் இல்லைனா எப்படி.. பார்த்தில நான் விரிச்ச வலையில உன்ன அழகா சிக்க வச்சுட்டா ”
” சோ பிளான் பண்ணி என்னைய ஏமாத்துன உன் பொண்டாட்டியை என்ன பண்ணலாம்.. நீயே சொல்லு ” என அவனிடமே அதற்கான ஆப்ஷனை கொடுத்தான் அர்ஜுன்.
” உன்ன ஏமாத்துனவங்கள நீ என்ன பண்ணுவ ” அர்ஜுனை ஆழ்ந்த பார்வையுடன் கேட்டான் ஆதி.
” கொன்னு புதைச்சிடுவேன் ” அத்தனை வெறியாக வந்தது அவனது வார்த்தை.
” ஆனால் நான் என்ன பண்ணுவேன் தெரியுமா.. ” என கைகள் இரண்டையும் மேலே தூக்கி.. சோம்பல் முறித்து கொண்டு.. ” என் எதிராளி எந்த தப்புக்காக என்கிட்ட சிக்குறானோ.. அதே தப்ப அவனை பண்ண வச்சு அணு அணுவா அவனை சாவடிப்பேன்.. ” ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக, சின்ன சிரிப்புடன் அவன் கூறினாலும்.. அவனது வார்த்தைகளில் இருந்த உண்மையை உணர்ந்து கொண்டான் அர்ஜுன்.
” மிரட்டி பார்க்குறீயா ஆதி ”
” நிதர்சனத்தை சொன்னேன்..”
” உன் பொண்டாட்டியை உன் கண்ணு முன்னாடி நான் சாவடிப்பேன் ” சீறினான் அர்ஜுன்.
” எங்க என் கண்ணு முன்னாடி தைரியம் இருந்தா என் பொண்டாட்டியை தொட்டு பாரேன் ” என அவன் சாவகாசமாக அமர்ந்து கொள்ள.. அர்ஜுனுக்கு தான் பீதியில் மண்டையே வெடிப்பது போல இருந்தது.
அருகில் நின்ற வில்சன் எதையோ முடிவு செய்தவராக.. ” பிரச்சனை வேண்டாம் ஆதி.. இவன் ஏதோ பழி வெறியில பண்ணிட்டான்.. நீ பொண்டாட்டியை கூட்டிட்டு போ.. இவனை நான் பார்த்துக்கிறேன் ” என ஆதியின் பலத்தை நினைத்து பின் வாங்கி இருந்தார் வில்சன். இவனை நம்பினால் முதலுக்கே மோசம் வந்து விடும் என முடிவே செய்து விட்டவர், இருப்பதை காப்பாற்றிக் கொள்ள துடித்தார்.
” என்ன பேசிட்டு இருக்கீங்க.. இவன் கிட்ட நான் தோத்து போகனுமா” வெறி கொண்டு கத்தியவனை கொலை வெறியுடன் பார்த்தவர்..
” உனக்கு அவ்வளவு தான் லிமிட்.. பைத்தியக்காரன் மாதிரி பண்ணி எல்லாத்தையும் இழக்க பார்க்காத.. ” என குரலை உயர்த்தியவர்.. ஆதியை பார்க்க.. அவன் பேச்சை யாரும் மதிக்காத ஆத்திரத்தில்.. பேண்டில் இருந்த பெரிய ஊசியை எடுத்து நொடிப் பொழுதில் பிறையை நோக்கி கொண்டு செல்ல.. அவனது கையில் அடுத்த நிமிடம் புல்லட் பாய்ந்தது.
” ஆ…….. ” என அலறி துடித்தவன் .. பின்னால் திரும்பி சுட்டவனை பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அந்த ஒரு நொடியை பயன் படுத்திக் கொண்டு பிறையை தன் பக்கம் இழுத்திருந்தான் ஆதி.
அதில் மேலும் வெறியானவன்.. அதே ஊசியை எடுத்து பின்னால் கையில் துப்பாக்கியுடன் நின்ற வில்சனின் நெஞ்சின் மீது வேகமாக தாக்கி இருந்தான்.
அனைத்தையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதிதேவ். கையில் பிஸ்டல் இல்லை, கத்தி இல்லை.. ஆயுதங்கள் எதுவும் இல்லை. ஆனால் தனது பேச்சால் எதிராளிகளை வீழ்த்தும் வல்லமை கொண்டவன் ஆதிதேவ். பிஸ்டல் சத்தம் கேட்டு வேகமாக போலீஸ்சார்கள் உள்ளே வர.. பிறையை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு இரண்டு காவலர்களோடு அனுப்பி வைத்தவனின் பார்வை.. தற்போது கூர்மையாக அர்ஜுனை தீண்டியது.
இப்போது ஆதியை மிரட்டுவதற்கு பிறையும் இல்லை.. பார்கவியும் இல்லை. அவர்கள் இருந்த போதே அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இனிமேல் அவனை சமாளிக்க முடியுமா.. ?
சனா💖

