Loading

 

அமருக்கு பிரியாவோடு கழித்த நிமிடங்கள் பொக்கிஷமாக மனதில் தங்கியது. அவளோடு பேசி, அவளை சிரிக்க வைத்து அதை ரசிக்கவே பிறந்திருப்பது போல் தோன்றியது.

இருவரும் சாப்பிட்டதும் அவளையே பணம் கட்ட விட்டான். அவளது பணத்தில் முதல் முதலாக அவனுக்கு செலவு செய்கிறாள். அந்த அற்புதமான வாய்ப்பை என்றுமே தவற விடக்கூடாது அல்லவா?

இருவரும் கிளம்பி குவாரிக்குச் சென்றனர். அங்கே கல் உடைப்பதும் வாகனங்களில் ஏற்றப்படுவதையும் பார்த்தனர். அமர் அதிக நேரம் பிரியா பத்திரமாக இருக்கிறாளா? என்பதை மட்டுமே கவனித்தான். அவனுக்கு வேறு எதுவும் பெரிதாக தெரியவில்லை.

அங்கே இருந்து மீண்டும் கிளம்பும் போது, இருவரும் மிகவும் சகஜமாக பேசும் நிலைக்கு வந்து விட்டனர்.

“உங்கள முதல் தடவ பார்த்தப்போ நம்பவே முடியல தெரியுமா?” என்று பிரியா சொன்ன போது அவனது இதயம் வேகத்தை கூட்டியது.

‘ஒருவேளை அவளுக்கு அவன் முகம் நினைவில் இருந்ததா? ஒரே முறை மட்டுமே பார்த்த முகத்தை அவனை போலவே அவளும் நினைவில் வைத்திருக்கிறாளா?’ என்றெல்லாம் எண்ணம் தறிகெட்டு ஓடினாலும், “ஏன் அப்படி?” என்று கேட்டு வைத்தான்.

“பிஸ்னஸ வாங்குனது ஒரு பெரியவரு.. என் தாத்தா வயசுல இருப்பாருனு கேள்விப்பட்டேன். பட் நீங்க வந்து நின்னதும் சுத்தமா புரியல” என்று பிரியா சொன்னதும் ஏமாற்றத்தை உணர்ந்தான்.

“ஆக்ட்சுவலி எனக்கு தாத்தா இருக்கார். அவர் பேருல தான் பிஸ்னஸ் இருக்கு”

“அப்பா சொன்னாரு.. ஆனா நீங்க தான் எல்லாமே பார்த்துக்குறீங்கனு சொன்னாரு”

“ஆமா.. தாத்தா உடம்பு ரொம்ப முடியாம போயிடுச்சு.. நானே பார்த்துட்டு இருக்கேன்”

இப்போதாவது தாயைப்பற்றிச் சொல்லலாமா? என்று நினைக்க, பிரியா வேலையை பற்றிப்பேச ஆரம்பித்தாள்.

இவ்வளவு நேரம் அதை விடுத்து குடும்பத்தை பற்றிப்பேசியது பெரியது தான் என்று நினைத்து அவனும் அந்த பேச்சுக்கே தாவினான்.

பிரியா இப்படி வேலையில் ஆர்வம் காட்டுவது அவனுக்கும் பிடித்திருந்தது. நிறைய விசயங்களை உடனே கற்றுக் கொள்கிறாள். எப்படியும் அவனுக்குத் துணையாக அவளும் வேலைகளை கவனிக்க வேண்டும். இதே வேகத்தில் போனால், அவர்களது திருமணம் முடியும் போது நிச்சயமாக உயர்ந்த இடத்தில் இருப்பாள்.

பயணம் நீண்டு கொண்டே போக அவளது முகத்தில் சோர்வு தெரிந்தது.

“கொஞ்சம் ரெஸ்ட் எடு. வீடு வந்ததும் சொல்லுறேன்” என்றதும் உடனே சம்மதித்து சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டாள்.

பாடலை நிறுத்தி விட்டு காரை மிதவேகத்தில் ஓட்டினான் அமர். அவளும் சில நிமிடங்களில் உறங்கி விட்டாள். அவனை நம்பி உறங்குபவளை மடியில் போட்டுக் கொள்ள வேண்டும் போல் இருந்தாலும் சாலையை கவனித்து ஓட்டினான்.

வீட்டை அடைந்ததும் அவளை எழுப்ப அமருக்கு மனமில்லை. அப்படியே தன் வீட்டுக்கு சென்று விடத்தான் ஆசை வந்தது. மனதை கல்லாக்கிக் கொண்டு, “சுகம்” என்று அழைத்தான்.

அந்த அழைப்பே அவனுக்கு சுகத்தை கொடுத்தது.

“சுகி..” என்றான்.

அவளிடம் அசைவே இல்லை. பிறகு முகம் நிறைய புன்னகையுடன், “பிரியா.. வீடு வந்துடுச்சு” என்றான்.

இம்முறை அவளது தூக்கம் கலைவதற்காகவே சத்தமாக அழைத்தான். அவளும் கண்ணை திறந்து சுற்றிலும் பார்த்து விட்டு அவனை திரும்பிப் பார்த்தாள்.

“வந்தாச்சா?” என்று கேட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

“ம்ம்.. வந்தாச்சு”

“தாங்க்யூ அமர்..” என்று விட்டு இறங்கினாள்.

அதற்குள் அவர்களை வளவன் பார்த்து விட்டார். உடனே காரை நெருங்கி வந்தார்.

“வாங்க அமர். உள்ள வாங்க..” என்று வளவன் உபசரிக்க, “இருக்கட்டும் சார்.. இன்னைக்கு குவாரி போயிருந்தோம்.. அதான் டிராப் பண்ண வந்தேன். இன்னொரு நாள் வர்ரேன்” என்றான்.

பிரியா தூக்கத்தோடு நிற்க, “பை பிரியா” என்று கையாட்டி விட்டு கிளம்பி விட்டான்.

பிரியா வீட்டுக்குள் சென்று அமர்ந்தாள். தூக்கம் முழுதாக கலையவில்லை.

“குவாரி போனீங்களா..? ஏன்?” என்று வளவன் கேட்க, “எனக்கு எல்லாம் தெரியனுமே.. பார்ட்னர்னா சும்மாவா!” என்று சிரிப்போடு கேட்டாள்.

“போய் டிரஸ்ஸ மாத்திட்டுவா.. சாப்பாடு வைக்கிறேன்” என்று கயல் சொல்ல, “வேணாம்மா.. பசிக்கல.. தூக்கம் தான் வருது.. நான் மாத்திட்டு அப்படியே தூங்குறேன்” என்று கூறி அறைக்குள் சென்று விட்டாள்.

உடை மாற்றி வந்து கைபேசியை பார்த்தாள். அணைந்து கிடந்தது. காலையிலேயே சார்ஜ் போட மறந்து விட்டாள். இப்போது மாட்டியவள் அப்படியே மெத்தையில் விழுந்து சில நிமிடங்களில் உறங்கி விட்டாள்.

அமர் பரமேஸ்வரியின் படத்தை பார்த்து சிரித்தான்.

“இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா? அவ கூட நாள் முழுக்க இருந்தேன்மா.. அவளோட முதல் மாச சம்பளத்துல முதல்ல எனக்கு சாப்பாடு போட்டுருக்கா.. எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?” என்று சிறுவன் போல ஒப்பித்தான்.

உடனே அவனது முகம் சோகமாக மாறியது.

“அவள இப்படி தூரமாவே இருந்து பார்க்க கஷ்டமா இருக்குமா. எப்ப பக்கத்துலயே வச்சுக்க போறேனோ தெரியல.. பேசாம என் லவ்வ சொல்லிடவா? ஆனா அவ ரிஜக்ட் பண்ணிட்டா தாங்க மாட்டேன். அவளுக்கு முதல்ல என்னை பிடிக்கனும். அப்புறம் தான் என் காதல சொல்லனும்.. கரெக்ட் தான? அதே தான்”

தாயே நேரில் வந்து பதில் சொன்னது போல் குதூகலத்துடன் வெளியே வந்தான். அவனுடைய தாத்தா பூபதி சக்கர நாற்காலியில் வந்தார்.

“என்ன முகம் பிரகாசமா இருக்கு? உன் அம்மா கிட்ட பேசுனியா?”

“ஆமா தாத்தா.. நீங்க ஏன் இன்னும் சாப்பிடல?”

“பசியில்லடா”

“இப்படியே சொல்லி தான் இப்படி மாறிட்டீங்க.. என் கல்யாணத்தப்போ எப்படி தான் ஓடியாடி வேலை செய்ய போறீங்களோ தெரியல” என்று சந்தோசமாக அலுத்துக் கொண்டு அவரை மேசைக்கு அழைத்து வந்தான்.

“அது வரை உயிரோட இருக்கனும்னு தான் எனக்கும் ஆசை அமர்.. உன் அப்பா எப்பவோ போயிட்டான். உன் அம்மாவாச்சும் உனக்கு கடைசி வரை நிலைச்சுருப்பானு நினைச்சேன். அவளும் போயிட்டா.. நானும் போனா நீ அனாதையாகிடுவ… அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு பொண்டாட்டி வந்துட்டா சந்தோசப்படுவேன்”

பூபதி தன் மனதில் இருப்பதை கொட்ட, அமர் அவரது கையைப்பிடித்துக் கொண்டான்.

“தாத்தா.. என்னை பத்தி கவலைப்படாதீங்க.. நீங்க தேறி வந்தா போதும். என் கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்தலாம்”

“இப்பவே பொண்ணு பார்க்க சொல்லவா?” என்று பூபதி ஆர்வமாக கேட்க, “நான் பார்த்த பொண்ண என்ன செய்யுறது?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

பூபதி பேரனை ஆச்சரியமாக பார்த்தார். பிறகு அவரது முகம் அன்பில் கனிந்தது.

“உனக்கு பிடிச்சுருந்தா போதும் அமர்.. அந்த பொண்ணு யாரா இருந்தாலும் இந்த வீட்டுக்கு மருமக அவ தான்.”

அமர் மலர்ந்த புன்னகையுடன் தலையசைத்தான்.

“அவள எப்ப கூட்டிட்டு வருவ?”

“இப்பவே முடியாது. எனக்கு தான் அவள பிடிச்சுருக்கு”

“அவளுக்கும் உன்னை பிடிக்கும்”

“அப்படி பிடிச்ச அடுத்த நிமிஷமே அவள கூட்டிட்டு வந்து உங்க முன்னாடி நிறுத்துறேன் போதுமா?”

“அது போதும்.. போதும் போதும்” என்ற பூபதிக்கு பல நாட்களுக்குப்பிறகு மனம் நிறைந்திருந்தது.

அவருக்கான உணவை சாப்பிட்டு விட்டு அறைக்குத்திரும்பியவர் அன்று தான் நிம்மதியாக உறங்கினார்.

சிவா வீட்டில் சலிப்போடு கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் வெளியே சென்ற பிரியா எதுவுமே அவனிடம் சொல்லவில்லை. அவள் தனியாக சென்றால் கூட பரவாயில்லை. அந்த அமரோடு அலைகிறாளே. அது தான் பிடிக்கவே இல்லை.

அவனை விட அமர் சிறந்தவனாக இருப்பது அவனுக்குள் ஒரு பொறாமையையும் தாழ்வு மனப்பான்மையையும் உண்டாக்கி விட்டது.

இது வரை அமர் பிரியாவுக்கு நடுவே எதுவும் இல்லை. ஆனால் எதாவது உருவாகி விடுமோ? என்ற பயம் வந்தது.

பிரியாவின் மனம் மாறுமா? இல்லை. அவள் சிவாவை உண்மையாக நேசிக்கிறாள். ஆனால் அமருக்கு அவள் மீது ஆர்வம் வந்து விட்டால்?

இதை எப்படி வளர விடாமல் தடுப்பது? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

“என்னடா ஃபோன பார்த்துட்டே உட்கார்ந்துருக்க? போய் படு..”

“ப்ச்ச்.. தூக்கம் வரலமா”

“இப்ப தூக்கம் வரலனு உட்கார்ந்துருப்ப.. நாளைக்கு லீவ்னு விடிஞ்சது கூட தெரியாம தூங்குவ..”

சிவராமனின் தாய் கல்யாணி சொல்ல சிவா பெருமூச்சு விட்டான்.

நாளை பிரியாவை பார்க்கவும் முடியாது. இன்று அவள் ஒரு செய்தியும் அனுப்பவில்லை. அதுவே அவனுக்கு சலிப்பாக இருந்தது.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும் வாசல்ல நின்னு” என்று உள்ளே இருந்து சிவாவின் தந்தை பாண்டியன் அதட்டினார்.

“உங்கப்பா கூப்பிடுறாரு வாடா” என்று அவசரமாக மகனின் தோளில் அடித்து விட்டு கல்யாணி உள்ளே சென்று விட சிவாவும் எழுந்து சென்றான்.

பாண்டியன் மனைவி மகனை முறைத்துப்பார்த்தார். அந்த முறைப்புக்கு அடங்கி கல்யாணி அறைக்குள் சென்று விட சிவாவும் தனது அறைக்குச் சென்றான்.

அவர்களது குடும்பம் பெரியதல்ல. அம்மா அப்பா அக்கா சிவா என்று நான்கு பேர் தான். பாண்டியனுக்கு எப்போதும் தான் என்ற கர்வம் உண்டு. மனைவி மக்களை அதட்டி மிரட்டுவது தான் அவரது முக்கியமான வேலை.

அம்மா கல்யாணி எப்போதும் அடங்கிப்போவார். கணவனின் பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது. அவருடைய குடும்பம் பணக்கார குடும்பம். ஆனாலும் கணவனின் பேச்சுக்காக அந்த குடும்பத்தினரிடம் ஒட்ட மாட்டார். எதோ ஒரு குடும்பப்பகை என்பது வரை மட்டுமே சொல்லி இருந்தனர்.

அடுத்து சண்முகி. பள்ளியில் படித்து முடித்ததுமே சுப்பிரமணிக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். சண்முகி மிகவும் அன்பானவள். கண்டிப்பானவளும் கூட. தந்தையை போலவே குணம் கொண்டாலும் பாசமும் நிறைந்திருக்கும்.

சிவா கடைசியாக பிறந்தவன். அவன் நன்றாக படித்ததால் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றான். படித்து முடித்ததுமே நேராக பிரியாவின் நிறுவனத்தில் வந்து வேலைக்கு சேர்ந்து விட்டான்.

பிரியாவை பிரிய வேண்டாம் என்ற எண்ணம் முதன்மையாக இருந்தாலும் நல்ல வேலை நல்ல சம்பளமும் ஒரு காரணம்.

சண்முகியின் திருமணத்திற்காக வாங்கிய கடன்களை கூட சுப்பிரமணி அடைக்கும் அளவு நல்ல சம்பளம். அவனிடம் திறமையும் இருந்தது.

கடந்த மூன்று வருடமாக வேலை செய்து வருகிறான். அவனுடைய காதலுக்கும் மூன்று வயது தான்.

பிரியா காதலை அவளுடைய பெற்றோர்களிடம் சொல்லி விட்டால், பிறகு அவனுக்கு தடையில்லை. தந்தை பிடிவாதம் பிடித்தாலும் மறுத்தாலும் அவளை நிச்சயம் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்வான்.

சண்முகியோ கல்யாணியோ அவனது விருப்பத்திற்கு தடை சொல்ல மாட்டார்கள். அவனுக்கு வேண்டியது எல்லாம் பிரியாவின் சம்மதம் மட்டுமே.

பிரியா இரண்டு பெற்றோர்களிடமும் சம்மதம் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள். மற்றவர்களை போல பெற்றோரின் சாபத்தை வாங்கிக் கொள்ள கூடாது என்று உறுதியாக இருந்தாள்.

அவளை அவ்வளவு அன்போடு அவளது பெற்றோர் வளர்த்திருந்தனர். அதனால் தான் அவனும் பொறுமை காக்க முடிவு செய்தான்.

ஆனால் இப்போது அந்த பொறுமை பறந்து விடும் போல் இருந்தது. அமரோடு அவள் மேலும் நெருங்கினால் நிச்சயமாக தங்களது காதல் விசயத்தை போட்டு உடைத்து விடுவான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்