
ஆராதனா பேசியதில் சட்டென சிரித்த தேவா, விஷ்வாவிடம் சாப்பாடு செய்யச் சொல்லிக் கண்ணைக் காட்டி விட்டு வெளியில் சென்றான். விஷ்வா, ‘இதுங்களுக்கு சாப்பாடு செய்யணும்னா நான் இந்தக் காட்டைத் தான் விக்கணும்’ என முணுமுணுத்துக் கொண்டே மற்ற இருவரையும், “டேய் வாங்கடா” என அடுக்கலைக்குள் இழுத்துச் சென்றான். ஆஸ்ரமத்திலிருந்து வெளியில் வந்ததிலிருந்து அவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்வதால், அவர்களே சமையல் செய்திட, அம்முவும் தமியும் தான் இவர்களை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
வைஷு, எந்த பாவமும் காட்டாமல் பழைய நினைவில் மூழ்க, ஆராதனா, ‘ஐயோ இவனுங்க சமைக்க போறானுங்களா? போற உசுரு பசியிலேயே போகட்டும்…’ என நொந்து விட்டு, மற்ற மூவரையும் இழுத்துக்கொண்டு அவளைக் கட்டி வைத்திருந்த அறைக்குச் சென்றாள். அப்பொழுதே, அங்கு மாலை நேரம் தாண்டிய மையிருட்டு பரவத் தொடங்கியது.
விஷ்வா ரசம் சாதம் செய்து முடிக்க, அருண் அடிபட்ட கையையே பார்த்து, தன்னை குத்தியதும் மிரண்ட தமியின் விழிகளை இதழில் பூத்த சிறு நகையுடன் நினைத்திருக்க, நிஷாந்த் வேகமாக புடலங்காய் கூட்டு, சிறிது கேசரி எனச் செய்திருந்தான்.
விஷ்வா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து, “டேய் இங்க என்ன விருந்தா நடக்குது?” என முறைக்க,
தன்னையறியாமல் “நவிக்கு பிடிக்கும்” என்று உளறியவன் நாக்கை கடித்துக்கொண்டு, “அது அது சும்மா தான், நம்ம தான் திங்ஸ் வாங்கி வச்சும் எதுவும் செய்யலைல, அதான்…” எனச் சமாளித்தான்.
விஷ்வா தான் புரியாமல், “அவன் என்னன்னா அவளுங் களுக்கு சாப்பாடு செய்யச் சொல்றான்… இவன் என்னன்னா விருந்து ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கான். இவனுங்களை எல்லாம் பார்த்தா கடத்தல்காரன் மாதிரியே இல்லயே!” புலம்பியவன், சாப்பாடை எடுத்து வைத்து விட்டு, பெண்களை அழைக்க, தமி வேகமாக வெளியில் செல்லப் போனாள்.
ஆரு, “வேணா தமி, நம்ம இங்க இருக்குற ஸ்னாக்ஸயே சாப்பிடலாம். கழனி தண்ணியவே சாம்பாருன்னு சொல்லிக்குடுத்தானுங்க…
இப்போ என்னத்தை தரப் போறானுங்களோ?” என அவள் காதினுள் எச்சரித்தாள்.
அருண், “ப்ச்! உங்களைத் தான் கூப்பிடறோம்… காதுல விழலையா?” எனக் கடுப்படிக்க, அம்மு, “எங்களுக்கு சாப்பாடுலாம் வேணாம்…” என்க, வைஷு, “அவங்க கஷ்டப்பட்டு செஞ்சுருக்காங்கல்ல” என்று நிஷாந்தை பார்க்க, அவன் அவளைப் பாராமல் திரும்பிக் கொண்டான். அப்போது தான் வெளியில் சென்று திரும்பிய தேவாவிடம் இதனைக் கூற, அவன் புயல் வேகத்தில் அவர்கள் அறைக்கு வந்து,
ஆருவிடம் “ஏய், நீ தான பசிக்குதுன்னு சொன்ன, உங்களுக்காக சாப்பாடு செஞ்சா, திமிரா உங்களுக்கு? ஒழுங்கா வந்து செஞ்சதை சாப்பிட்டுப் போங்க… இல்ல உங்க ஆராய்ச்சியை இந்த ஜென்மத்துல பண்ண முடியாது. நீங்க இங்க தான் இருக்கீங்கன்னு, அந்த மினிஸ்டர் ராஜாங்கன்கிட்ட சொல்லிட்டு போய்கிட்டே இருப்பேன்.” என்றதும்,
ஆரு, “என்னடா மிரட்டுறியா…? நீ சொன்னா நானும் சொல்லுவேன்… சரியான திருட்டு பசங்க, கடத்தல் காரனுங்கன்னு” எனக் கோபமாகக் கூறியதில், தேவா, “சொல்லுடி யார்ட்ட வேணாலும் சொல்லு, இதுனால எனக்கு எந்த லாஸ்ஸும் இல்ல…” என்னும் போதே, “ஹே வெய்ட் வெய்ட்! நான் இதுவரை மினிஸ்டர் பேரை சொன்னதே இல்ல. உனக்கு எப்படி அந்த மினிஸ்டர் ராஜாங்கன்னு தெரியும்.” எனக் கூர்மையாகக் கேட்டாள்.
அவன் இளக்காரக் குறு நகையுடன், அவள் முன்னே கால் மேல் கால் போட்டு அமர்ந்து, “ஏன் தெரியாது? எனக்கு எல்லாமே தெரியும்.” என்றவன்,
அம்முவை கைக்காட்டி, “அமுதா. அப்பா பிரபலமான பேங்க்ல மேனேஜர். அம்மா, ஒரு பெரிய கம்பெனில எச் ஆர். ஒரு தங்கச்சி ஸ்கூல் படிக்கிறா. உனக்கு என்ன தேவையோ அதை நீ கேட்குறதுக்கு முன்னாடியே செஞ்சு முடிக்கிற பேரெண்ட்ஸ். அது அத்தியாவசிய தேவையா இருந்தாலும் சரி, தேவையே இல்லாத பொருளா இருந்தாலும் சரி.” என்றிட, அவள் அவனை ‘பே’வெனப் பார்த்தாள்.
பின், அவனே தமயந்தி புறம் கை நீட்டி, “உன் பேர் தமயந்தி. அப்பா பெரிய தொழிலதிபர். அம்மா ஹௌஸ் வைஃப். ஒரு அக்கா மேரேஜ் ஆகி ஸ்டேட்ஸ்ல இருக்காங்க. ஒரு தம்பி காலேஜ் படிக்கிறான். ரொம்ப செல்லம் வீட்டில. உன் ஒரு மாச சம்பளம், உன்னோடு ஒரு வார ‘பாக்கெட் மணி’ மாதிரி தான்” என்க, அவள் பெக்க பெக்க வென விழித்தாள்.
பிறகு, அவன் வைஷ்ணவியின் புறம் கை நீட்ட, நிஷாந்திற்்கு இதயம் தாறு மாறாகத் துடித்தது. எதையும் கண்டு கொண்டானோ என நினைத்து. தேவா, “நீ வைஷ்ணவி. அப்பா ரிட்டையர்டு மிலிட்டரி மேன். அம்மா ஹௌஸ் வைஃப். ரொம்ப கட்டுக்கோப்பான குடும்பம். உன் அப்பா முத்துவேல் இப்படி தான் வாழணும்னு ஒரு முறையோடு வாழுற நேர்மையான ஆள்.
தெரியாமல் கூட சிறு தப்பு பண்ணாலும், அதைச் செய்றது அவரோட மனைவி மகளா இருந்தாலும், பொறுக்க முடியாதவர். ஆம் ஐ ரைட்?” என விழி உயர்த்தி கேட்க, அவள் எச்சிலை விழுங்கிக் கொண்டு, “ம்ம்” எனத் தலையாட்டிட,
நிஷாந்த், ‘ஹப்பா வேற எதுவும் கண்டுபிடிக்கல’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
இப்போது, அவன் பார்வை ஆருவை துளைக்க, அவள் அசட்டையாகத் திரும்பிக் கொண்டாள். “மேடம் பேர் இசை ஆராதனா. தாத்தாவோட காலத்திலேயே இரும்பு வியாபாரம் செய்ய ஆரம்பிச்சு, அது படிப்படியா இரும்பு பொருட்கள், மரச்சாமான்கள் செய்யுற தொழிலா வளர்ந்து, இன்னைக்கு உன் அப்பா அதை வெற்றிகரமா நடத்தி, மதுரையிலேயே பெயர் போன பெரிய ஷோ ரூமா ஆக்கி இருக்காரு. கூடப் பிறந்தவங்க யாரும் இல்லை. வீட்டின் முடிசூடா ராணி.” என்றதும்,
அவள், “ரொம்ப ஸ்மார்ட்ன்னு நினைப்பு. நான் ஆர்கியா லஜிஸ்ட்ன்னு சொன்னதும், நெட்ல சர்ச் பண்ணிருப்ப எங்களைப் பத்தி” என்று இளப்பமாகக் கூறிட, “ஹ்ம்ம்… நெட்ல நீ உங்க அம்மாகிட்ட விளக்கமாத்தால அடி வாங்குறது, இங்க தான் வந்துருக்கன்னு சொல்லாம வந்தது கூடவா போடுறாங்க.” என்று யோசனையுடன் நக்கலாகக் கேட்க, அவள் அதிர்ந்து விட்டாள்.
“ஏய்! என்னைப் பத்தி உனக்கு எப்படிடா தெரியும்? இதெல்லாம் யாரு உனக்கு சொன்னது?” எனக் கூர்மையாகக் கேட்க, தேவா, “வெய்ட் நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கல இசை ஆராதனா” என அவள் பெயரை நிறுத்தி நிதானமாகக் கூற, இந்நேரம் இதைக் கண்டுபிடித்திருப்பானென அறிந்த அவனின் நண்பர்கள் தான், ‘ரொம்ப ஓவரா ஆடுனாளுங்கள்ள இப்போ தேவைதான்’ எனத் தனக்குள் சிரித்துக் கொள்ள,
விஷ்வா, “கல்யாணத்துக்கு போனா தருவாங்க கற்கண்டு! என் நண்பன்கிட்ட மோதுன நீங்கலாம் சில்வண்டு!” எனக் கலாய்த்ததில், நான்கு பெண்களும் அவனை வெறியாய் முறைத்தனர்.
தேவா, “சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா” என்க, அவள், “ப்ச் முதல்ல இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்னு சொல்லு…!” என்று கேட்டாள் கோபமாக.
அவனோ “முதல்ல செஞ்ச சாப்பாடு வேஸ்ட் ஆகுறதுக்குள்ள சாப்பிடலாம்.” என்ற வெளியில் செல்ல, “இவனை” எனத் தரையில் காலை உதைத்து கோபத்தை வெளிப்படுத்தி வெளியில் சென்று சாப்பிட ஆரம்பித்தாள்.
அம்மு, “ஹைய்யோ இந்த ரசம் சாதம் வச்சது எவண்டா?” என்றதும், விஷ்வா, “யா இட்ஸ் மீ. ஹொவ் இஸ் இட்?” எனக் கேட்க, “நாசமா போறவனே! மனுஷன் சாப்புடுவானா டா இதை? வெண்ணித்தண்ணியை சோத்துல போட்டுக் குடுத்துருக்க இதுக்கு நீ கஞ்சியை தந்துருந்தா கூட அதுவே நல்லாருந்துருக்கும்.” என்று கடுப்படித்ததில், அவன் சிறு புன்னகையை மட்டுமே தந்தான்.
‘எவ்ளோ திட்டறோம் சொரணை இருக்கா இந்த நாய்க்கு ஜொள்ளு’ என முணுமுணுக்க, தமி, “இவனை உனக்கு ஏற்கனவே தெரியுமாடி?” என்று கேட்டாள். “தெரியும்டி… ஒரு வருஷத்துக்கு முன்னாடி, சித்திரை திருவிழாக்கு மதுரைக்கு போயிருந்தோம்ல… அப்போ தான் இவனைப் பார்த்தேன்.” என்றவள், அந்த நாளை நினைத்துப்பார்த்தாள்.
கண்ணுக்கெட்டும் தூரம்வரை வைகை ஆற்றில் மக்கள் வெள்ளம் திரண்டிருக்க, மணமணக்கும் மல்லிகை சூடி, பாவாடை தாவணியில் அங்குத் தற்காலிகமாகப் போட்டிருக்கும் நீர்மோர் பந்தலில் பெண்கள் மூவரும் மோர் குடித்துக் கொண்டிருக்க, அம்மு வளையல் கடையில் நின்று வளையல் வாங்கிக் கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு செட் கண்ணாடி வளையலாகப் போட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தவள், அங்கிருந்த கண்ணாடி வழியே பின்னால் ஒருவன் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்டாள். ‘சும்மா பார்த்திருப்பான்’ என்றெண்ணி அமைதி காத்தவள், அவன் சற்றும் அசையாமல், நகராமல், அவளையே பார்த்திருந்ததைக் கண்டு, கடுப்பாகி அவனை முறைத்தாள்.
அப்போதும், அவன் கண்ணைத் திருப்பவே இல்லை. கடுப்பாகி, அவள் அங்கிருந்து எதுவும் வாங்காமல் நகர்ந்திட, விஷ்வா அவள் பின்னால் ஓடி வந்து, “ஹலோ! நீங்க வளையலை வாங்காமயே வந்துட்டீங்க” என அவளின் பச்சை நிற தாவணிக்கு ஏற்றார் போலப் பச்சை நிற வளையலை அவளிடம் கொடுக்க, அவள் அவனைத் தீயாக முறைத்தாள்.
அவன் அப்போதும் அதனைப் புரிந்து கொள்ளாமல், “உங்க சடை சூப்பரா இருக்கு…!” என்று வளர்ந்து செழித்து நீண்டிருந்த கூந்தலில் பின்னலிட்டிருந்த அவளின் சடையை பார்த்துக் கூறியவனை கண்டு மேலும் கோபமானவள், அந்தச் சடையை பிடித்து இழுத்தாள்.
அது கையோடு வந்து விட்டதில், திருதிருவென விழித்த விஷ்வாவிடம், “இந்த சவுரி முடி தான உனக்கு நல்லாருக்கு? இந்தா நீயே இதை வச்சுக்க…” என்று அவன் முகத்திலேயே எறிந்து விட்டுப் போனவள், கண்மணி அத்தையை தான் மனதில் திட்டிக்கொண்டாள்.
“இப்படி முடி வளருரதுக்கு முன்னாடியே அதனை நறுக்கிடுதுங்கமா இப்போ இருக்குற பிள்ளைங்க. விசேஷத்துக்குக் கூட தலையை விரிச்சு போட்டுத் தான் திரியுதுங்க…” என்று அவர் தான் அவளை பிடித்து சவரி முடி வைத்துப் பின்னி, திருவிழாவிற்கு அனுப்பி வைத்தார்.
அந்த நினைவில், அவனை முறைத்தவளைக் காணாது, அவனோ சாப்பாட்டில் கவனமானான். கேசரியை கண்ட வைஷு, கண்ணில் நிறைந்த நீருடன் நிஷாந்தை பார்க்க, அவனும் அவளைத் தான் கலங்கிய விழிகளுடன் பார்த்திருந்தான்.
அதற்கு மேல் அந்த கொடுமையை சாப்பிட முடியாமல் பாதி சாப்பாட்டில் எழுந்த ஆருவின் கையைப் பிடித்த தேவா, “இதை யாரு சாப்புடவா? ஒழுங்கா தட்டைக் காலி பண்ணிட்டுப் போ” என்று எச்சரிக்க, அவள் “டேய் நீ ரொம்பப் பண்ற… என்னால சாப்பிடலாம் முடியாது.” எனக் கடுப்படித்தாள்.
“ஓகே, உனக்குத் தேவையானது, அந்த மினிஸ்டர் கிட்ட இருந்து நான் தான எடுத்துக் கொடுக்கணும்? என்னால எடுத்துத் தர முடியாது.” எனத் தோளைக் குலுக்க,
அவள், “இதெப்படி உனக்கு…? நான் எதுவுமே சொல்லலையே?” எனப் புரியாமல் ஆரம்பித்து, பின், “நீ எனக்கு எதுவுமே பண்ண தேவை இல்ல… நானே பார்த்துப்பேன். ஒரு கவர்மெண்ட் ஸ்டாஃப் நினைச்சா என்ன வேணாலும் பண்ண முடியும்னு அந்த மினிஸ்டர்க்கும் உனக்கும் காட்டுவேன்.” என்று சீறினாள்.
தேவா, “கம் ஆன் மை டியர் கேர்ள்…! சஸ்பெண்ட் ஆன கவர்மெண்ட் ஸ்டாஃப்னால, அதுவும் பிளாக் மார்க்கோட சஸ்பெண்ட்டான கவர்ன்மென்டன் ஸ்டாஃப்னால ஒண்ணுமே பண்ண முடியாது.” என்றிட, அவள் திகைத்து விட்டாள். ஆண்கள் மூவரும் அதிர்ந்திட, மற்ற பெண்களோ சிலையாகி இருந்தனர்.
ஆராதனா, “இஇது எப்படி உனக்குத் தெதெரியும்…?” என மிரண்டவளிடம், “சாப்பிடு இசை… நீ சாப்பிட்டு முடிச்சதும் சொல்றேன்.” என்று அசட்டையாகக் கூற, அவள் கோபத்தின் உச்சிக்கே சென்றாள். இருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல், அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது? என்றும் புரியாமல் ஏதேதோ சிந்தனையில் சாப்பிட்டு முடித்தவள், “இப்போ சொல்லு! என்னைப் பத்தி உனக்கு எப்படி தெரியும்?” எனக் கேட்டாள்.
“ஒரு திருடனுக்கு, கடத்தல்காரனுக்கு இந்த அளவு கூட அறிவில்லாம போய்டுமா இசை…?” எனப் புருவத்தை உயர்த்தி கேலியாகக் கேட்டவனை, “செய்றது திருட்டுத்தனம் இதுல என்னடா, உனக்கு அறிவு வேற வேண்டியது இருக்கு…ஃபிராடு” என்று கடிந்தாள்.
தேவா, “ஹான் ஹான்…! நான் ஃபிராடுனா? அப்போ நீங்க யாரு?. இங்க இருக்குற கனிம வளத்தை ஆராய்ச்சி பண்ணி, அதை கார்ப்பரேட்கிட்ட சொல்லி சட்டத்துக்குப் புறம்பான வேலை பார்த்த சமூக விரோதிகள் தான…” என்றதும், நிஷாந்த், “தேவா” என்றான் அதட்டலாக.
அவன் என்னவென்று ஒரு பார்வை பார்த்ததும், “இல்ல. இவங்களா அப்படி பண்ணிருக்க போறாங்க…?” என்று மெல்லிய குரலில் கூற, விஷ்வாவும் அருணும் ‘ஏண்டா இப்படி பேசுற?’ என்ற ரீதியில் அவனைப் பார்த்தனர்.
ஆரு அமைதியாக நிற்கவும், தேவா “சொல்லுங்க மிஸ் இசை ஆராதனா, இந்த இடத்துல ரிசர்ச் பண்ணக்கூடாதுனு ஒரு மாசத்துக்கு முன்னாடியே பேன்(ban) பண்ணிட்டாங்க… நீங்க நாலு பேரும் சஸ்பெண்ட் ஆகி ஒரு மாசம் ஆகுது.
ஆனால், அது எந்த மீடியாவுக்கும் தெரியாது. ஏன்? உங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு கூடத் தெரியாது…”
அம்மு, “போதும், நிறுத்துறீங்களா? என்ன தெரியும் உங்களுக்கு எங்களைப் பத்தி? எங்ககிட்ட இல்லாத பணமே கிடையாது. அப்டி இருக்கும்போது, காசுக்காக கார்ப்பரேட் காரன்கிட்ட எங்க நேர்மையை விக்கணும்னு எங்களுக்கு எந்த அவசியமும் இல்ல!” என்று சீறினாள்.
தமியும், “ஆமா, அந்த மினிஸ்டர் தான், எங்களைப் பத்தி இப்படி தப்பா சொல்லி, சஸ்பெண்ட் பண்ண வச்சுட்டான். நாங்க, அவனுக்கு எதிரா உருவாக்கின எவிடென்ஸ எல்லாம் அவன் எடுத்துட்டான். இந்தக் கன்னி வனக்காட்டுல பண்ணுன ரிசர்ச் பேப்பர்ஸ் கூட எங்ககிட்ட இல்லை. மறுபடியும் ரிசர்ச் பண்ணி, அவனைப் பத்தின எல்லா இல்லீகல் ஆக்டிவிடீஸையும் ஆதாரமா ரெடி பண்ணி சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல சப்மிட் பண்ணனும். அது மட்டும் இல்ல, இது பான்(ban) பண்ணுன இடம்னு எங்களுக்கும் தெரியும். ஆனால், எங்களுக்கு ஆதரவா இருக்குற, நேர்மையான பெரிய அதிகாரிங்க, எங்களை சீக்ரெட்டா இங்க ரிசர்ச் பண்ணச் சொல்லி, எங்க மேல விழுந்த பழியை சரி பண்ணச் சொன்னாங்க. அதான் நாங்க இங்க இருக்கோம்.” என்றாள், இப்படி கடத்தல்காரங்க கிட்ட எல்லாம் கெஞ்ச வச்சுட்டானே அந்த மினிஸ்டர் என்று மனதில் வறுத்துக்கொண்டு.
அருண், தமியை பாவமாகப் பார்த்து, “தேவா, அந்த மினிஸ்டர சும்மா…” என ஆரம்பிக்க, தேவா அதனைத் தடுத்து, ஆருவிடம் “மேடம் ரொம்ப அமைதியா இருக்காங்க. வாயில, என்ன நீ கொண்டு வந்த ஸ்னாக்ஸ வச்சுருக்கியா? இந்தக் கூட்டத்தோட தலைவி நீ தான? நீ பேசு” என்றான்.
அவள் அவனை சட்டை செய்யாமல் வேறு புறம் திரும்பவும், வைஷ்ணவியிடம், “உங்க அப்பா ரொம்ப கோபக்காரருல? சட்டத்துக்குப் புறம்பா, நீங்க செஞ்ச வேலை உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா? உன்னோட சேர்த்து உன் பிரெண்ட்ஸ்ஸையும் போட்டுத் தள்ளிடுவாருல” என நெற்றியை தேய்த்துக் கேட்க, அவள் நடுங்கி விட்டாள்.
அருண், “மச்சான் உனக்கு ஏதாவது புரியுதாடா?” என விஷ்வாவிடம் கேட்க, அவன், “நீ வேற நம்ம காட்டுல இருக்கோமா இல்ல மெண்டல் ஹாஸ்பிடல்ல இருக்கோமாண்ணே தெரியல… எல்லாம் புரியாமையே பேசுதுங்க. இதுங்க பேசுறதுல ஆகுது காண்டு! இதுக்கு இல்லையாடா ஒரு எண்டு!” என நொந்து போனான்.
வைஷு, “நாங்க தான் எந்தத் தப்பும் பண்ணலைன்னு சொல்றோமே” என்றிட, அவன், “அது உங்களுக்கு மட்டும் தான தெரியும். எவிடென்ஸ் இல்லாம உன் அப்பாவே நம்ப மாட்டாரு. ஒன்னு உன் அப்பா கையாள சாகனும்! இல்ல அந்த மினிஸ்டர் கையாள சாகனும். யூ கேர்ள்ஸ் ஹேவ் ஒன்லி ஒன் ஆப்ஷன். நான் சொல்றதை கேட்குறது தான்.
அதுவும் உன் ப்ரெண்ட், நான் என்ன சொன்னாலும் கேட்கணும்” என்றதும், மூன்று பெண்களும் குழப்பத்துடன் ஆருவை பார்த்தனர்.
உடனே ஆராதனா, “டேய், ஆமாடா… நாங்க தப்பு தான் பண்ணோம். ஊழல் தான் பண்ணோம். அதான் எங்களைச் சஸ்பெண்ட் பண்ணுனாங்க. இப்போ என்னடா உனக்கு ஹான்…? இவரு பெரிய சிஐடி சங்கர் வந்துட்டாரு பேச…! லுக்! உனக்குத் தேவை பணம். எங்களுக்குத் தேவை, மினிஸ்டர்க்கு எதிரான ஆதாரமும், அவன் கிட்ட இருக்குற ரிசர்ச் பேப்பர்ஸ்ஸும். முதல்ல, இங்க இருந்து ரிசர்ச் பண்ணலாம்னு தான் நினைச்சோம். ஆனால், இப்போ தான் கூடவே திருட்டு பசங்க இருக்கீங்களே.
அதான், உங்களை வச்சு அந்தப் பேப்பர்ஸ திருட ‘பிளான்’ பண்ணோம். அது எங்க கையில வந்தா, எங்க வேலையும் ஈஸியா போய்டும். மறுபடியும் ரிசர்ச் பண்ணவேண்டிய அவசியமும் இல்ல. உனக்கு எவ்ளோ பணம் வேணும்னு மட்டும் சொல்லு…!” எனத் தீப்பார்வையுடன் வெறுப்பை உமிழ்ந்தாள்.
தேவா அமைதியாக அவளை நெருங்கி, “உன் பணம் எனக்குத் தேவையில்லை. அதை எப்படி சம்பாரிக்கணும்னு எனக்குத் தெரியும். நீ சொன்னதை நான் செய்றேன். ஆனால் நீ எனக்கு ஒன்னு பண்ணனும்.” என்றதில்,
அவனை நேராகப் பார்த்து, “என்ன பண்ணனும்?” என்க, “ம்ம் திருடனும்! கடத்தணும்!” என்றிட, ஆராதனா அதிர்ந்து விட்டாள்.
நள்ளிரவில், நால்வரும் 30 சென்ட் ஏரியாவில் பரவி இருந்த அந்தப் பிரம்மாண்ட பங்களாவை முற்றுகையிட, நிஷாந்த், “இதான் அந்த ராஜாங்கனோட பங்களா மச்சான். இங்க தான் அவன் முக்கியமான பேப்பர்ஸ், டாகுமெண்ட்ஸ் எல்லாம் வச்சுருப்பான். ஆராதனா சொன்ன, பேப்பர்ஸ் கூட இங்க தான் இருக்கனும்.” என்றதும், தேவா தலையை ஆட்டி விஷ்வாவை பார்க்க, அவன் போஸ்ட் கம்பத்தில் ஏறினான்.
அருண், அங்கிருந்த வாட்ச்மேனிடம், ஏதோ பேசிக் கொண்டே அவன் முகத்தில் ஸ்ப்ரே அடிக்க, அவர் மயங்கி விட்டார்.
நிஷாந்த் கேட்டைத் திறந்து உள்ளே சென்றதும், அங்கிருந்த நாய் அவனைக் கண்டு குரைக்க, உள்ளே இருந்த வேலையாட்கள் உறக்கம் கலைந்து வெளியில் வந்து விட்டனர்.
அன்று, மினிஸ்டர் அங்கு இல்லாததும் அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. நிஷாந்தை யாரென்று கேட்க, அவன், “நான் இப்போவே மினிஸ்டர பார்க்கணும்…” என்று பிரச்சனை செய்ய, அவர் இங்கு இல்லை என்று சொல்லியும், அவன் பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தான்.
அப்போது, விஷ்வாவின் முயற்சியில் சரியாக விளக்குகள் அணைய, அந்த நேரம் யாரும் அறியாமல் உள்ளே சென்ற தேவா, அவசரமாக அந்தக் காகிதங்களைத் தேடினான்.
வெகுநேரத் தேடலுக்குப் பிறகு, இசை ஆராதனாவின் பெயர் போட்டு இருந்த அந்தக் காகிதங்களை எடுத்தவன், இதழில் வெற்றிப்புன்னகை.
உடனே வெளியில் வந்து, சுவர் ஏறி, சாலைப்புறம் அவன் குதித்ததும் மின்சாரம் வந்து விட, நிஷாந்திற்கு சிக்னல் கொடுத்தான்.
அவனும், “சரி நான் நாளைக்கு மினிஸ்டர பார்த்துக்கறேன்.” என்று வெளியில் வந்து விட, அங்கு அருண் காரில் தயாராக இருந்ததில், மூவரும் காரில் ஏறிப் பறந்து விட்டனர்.
இங்கு காட்டில் ஆராதனா, “எப்படிடி எப்படி…? அவனுக்கு நம்மளை பத்தி தெரிஞ்சுது. நம்ம சஸ்பெண்ட் ஆனதை ரொம்ப கான்ஃபிடென்ஷியலா தான வச்சுருந்தோம்…” என்று குழம்ப, மற்றவர்களுக்கும் அது புரியவே இல்லை. பின், “சரி, இவனுங்க அந்தப் பேப்பர்ஸை எடுத்துட்டு வரட்டும். வந்ததும்… நம்ம ஆபிசர்ஸ்க்கு போன் பண்ணி, அவனுங்களை போட்டுக் குடுத்தடலாம். கொஞ்ச நாள் ஜெயில்ல கம்பி எண்ணட்டும்.” என்றாள் குதர்க்கமாக.
அதில் வைஷு பதறி, “அவனுங்க நமக்கு ஹெல்ப் தான பண்றாங்க.” என்றிட, அம்மு, “என்ன ஹெல்ப்பு? அவன் பேசுனதை பார்த்தீல. எப்படி இருந்தாலும் இவனுங்களால நமக்கு ஆபத்து தான்” என்றதும், தமி, “ப்ச் முதல்ல, அவனுங்க வரட்டும். அப்பறம் பேசலாம் இதை” என்று சமாளித்தவள் மனக்கண் முன், அருண் தான் வந்து போனான்.
அந்த பங்களாவிலிருந்து வெகுதூரம் சென்றதும், காரை நிறுத்தச் சொன்ன தேவா, அந்த காகிதங்களைத் திருப்பி திருப்பி பார்க்க, விஷ்வா, “என்ன மச்சான் … அவளுங்களுக்கு பதிலா நீ ரிசர்ச் பண்ணப் போறியா?” என்றிட, அவன் தலையை ஆட்டி, “ம்ம்ஹும், மறுபடியும் அவளுங்களை ரிசர்ச் பண்ண வைக்கப் போறேன்…” என்றவன் அதில் இருந்த முக்கியமான தாள்களைத் தூள் தூளாய் கிழித்தான். அதில் அதிர்ந்த மூவரும், “டேய் என்னடா பண்ற? பாவம்டா! அந்தப் பொண்ணுங்க.” என்று பதற, தேவா, “யாரு அவளுங்க பாவமா? அதிலயும் அந்த இசைக்குப் பாவமே பார்க்கக் கூடாது. இந்நேரம் நம்மளை எப்படி போட்டுக் குடுக்குறதுன்னு தான் யோசிச்சுட்டு இருப்பா…!” என்றான் சிறு நகையுடன்.
“அவளுக்குக் கிடைச்ச ட்ரம்ப் கார்ட் நம்மன்னு நினைச்சுட்டு இருக்கா. ஆனால் நமக்குக் கிடைச்ச ட்ரம்ப் கார்டு அந்தப் பொண்ணுங்க தான்.” என்றவன், மீதி இருந்த தாள்களைப் பார்த்து, “தி கிரேட் இன்டெலிஜெண்ட் ஆர்க்கியாலஜிஸ்ட் இஸ் நொவ் அண்டர் மை கஸ்டடி…!” என்றான் கேலிப் புன்னகையுடன்.
அவன் செயலில் மிரண்டிருந்த மற்றவர்கள் தான், ‘என்ன பஞ்சாயத்தை கூட்டப் போறானோ’ எனப் பயத்துடன் பார்க்க, விஷ்வா, “முக்கியமான பேப்பரை நீ கிழிச்சு! அதுனால அவ பண்ணப் போறா ரிசெர்ச்சு! என்று டி ஆர் பாணியில் கூற, ஏற்கனவே கடுப்பில் இருந்த அருணும் நிஷாந்தும் அவனை மொத்தி எடுத்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
1
+1
1
