நிவேதன் அதிர்வுடன், “என்ன நிதா… இவர் பாக்க வெள்ளைக்காரன் மாறி இருக்காரு. என்ன நடக்குது இங்க?” எனப் புரியாது வினவ,
“லவ் மேரேஜ்!” மீண்டும் யாஷ் பிரஜிதனே கூறியதில், “லவ்வா” என விழித்தான்.
“ஏன் உன் தங்கச்சி லவ் பண்ண மாட்டாளா?” நெருப்பு பரவ கேட்டவனைக் கண்டு லேசாய் கிலி பிடிக்க,
“உண்மையாவா நிதா?” எனக் கேட்டான்.
நிதர்ஷனா யாஷை முறைத்து விட்டு, “ம்ம்” எனத் தலையாட்டியதில், அவள் மீது அழுத்தப் பார்வையை படிய வைத்தபடி வெளியேறினான்.
ஆஹில்யன் ரித்திகாவின் பின்னே சென்றிருக்க, கண்மணியும் அவர்களுக்கு இடையூறாக இருக்க விருப்பமின்றி மெல்ல நகன்றாள்.
“இந்தப் பொண்ணு யாரு?” கண்மணி செல்லும்முன்னே கேட்டிருந்தான் நிவேதன்.
“இவள் யாஷோட தங்கச்சி. உன்ன ஹாஸ்பிடல்ல சேர்த்ததும் இவள் தான். அதுக்குள்ள நீ இவள் கையை பஞ்சராக்கி ரணகளம் செஞ்சுருக்க…” நிதர்ஷனா கூறியதும், நிவேதன் வருத்தப்பட்டான்.
“ஐயோ மன்னிச்சுடுங்க” நிவேதனின் பேச்சில் “பரவாயில்லைங்க” என மெலிதாய் புன்னகைத்து விட்டு நகன்றாள்.
“ஒரே குழப்பமா இருக்கே. என்ன நடக்குது இங்க?” நிவேதன் கேட்டதும், அவளும் நடந்ததை எல்லாம் விரிவாய் கூறினாள்.
“சுதந்திர போராட்டம்னு எங்க உசுர வாங்கிட்டடா…” என அலுத்தவளைக் கண்டு அசடு வழிந்தவன், “எப்படினாலும் இப்ப நீ என் தங்கச்சி தான. அது போதும் எனக்கு…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்.
இளநகை புரிந்தவள், “அதுசரி… நீ எப்படி எல்லார் பேரும் சரியா சொன்ன? உனக்கு தான் இவங்க யாருன்னே தெரியலையே…” எனக் கேட்டாள்.
“எனக்கும் தெரியலையே… என்னை ஏதோ ஒரு இருட்டு ரூம்ல தான் அடைச்சு வச்சுருந்தாங்க. கொலை பண்ண போறானுங்கன்னு தான் நெனச்சு இருந்தேன். ஆனா, எதுக்கோ என்னை உயிரோட வச்சுருந்தானுங்க. ட்ரக்ஸ் வேற… என்னையவே மறக்க வைக்கவும் பயந்து தப்பிச்சேன். அப்பறம் எங்க போனேன் என்ன ஆச்சு ஒண்ணுமே புரியல நிதா…” என்றவன் அளவுக்கதிகமாக வேதனைப்பட்டிருப்பது புரிய, அவளுக்கு அதே வேதனைத் தொற்றிக்கொண்டது.
“ரொம்ப கஷ்டப்பட்டியா நிவே. நல்லாவே இருக்க மாட்டான் அந்த வரதராஜன்…” கண் கலங்க சாபமிட்டாள்.
“என்னை வரதராஜன் கடத்தலையே!” நிவேதன் புருவம் சுருக்கி கூற, அவளிடம் மெல்லிய அதிர்வு.
“பின்ன வேற யார் கடத்துனா?”
“அது தெரியல. ஆனா வேற ஏதோ மொழில தான் பேசிட்டே இருந்தானுங்க. வரதராஜன் குரல் தான் எனக்கு தெரியுமே. ஒரு தடவை கூட அவரு வரலையே…” என்றதில் “எந்த நாயா இருந்தாலும் நாசமா தான் போகும்…” என்றாள் எரிச்சலாய்.
—-
“ஹலோ கதிரவன்…? மருந்தகத்தில் நின்று கொண்டிருந்த கதிரவனை, அப்போது தான் வீட்டிற்கு சென்று விட்டு மருத்துவமனைக்குத் திரும்பிய சிந்தாமணி அழைத்தாள்.
அவளைக் கண்டதும் புன்னகைத்தவன், “என்ன காலேஜ் பேக் எல்லாம் எடுத்துட்டு வந்துருக்க?” என வினவியதில், “எனக்கும் கண்மணிக்கு மெடிக்கல் லீவ் சொல்லிட்டு வந்துருக்கேன்” என்றாள்.
“ஓ! எனக்குலாம் ஆபிஸ்ல வேலையே போய்டுச்சு.”
“ஏன்?” அவள் அதிர,
“இவ்ளோ நாள் லீவ் போட்டா, நீ வீட்லயே இருந்துக்கோன்னு சொல்லிட்டாங்க. நிவேதனுக்கு சரியாகிருந்தா ஊருக்கு எஸ்கேப் ஆகிருப்பேன். நிதாவுக்கும் இன்னும் முழுசா சரி ஆகாம இங்க இருந்து போக ஒரு மாதிரி இருக்கு. இத்தாலிக்குப் போயிட்டு வந்து தான் வேற வேல தேடணும். என் அம்மா வேற என்மேல செம்ம காண்டுல இருக்கு!” எனப் புலம்பினான்.
“அச்சோச்சோ! அதெல்லாம் வேலை கிடைச்சுடும். அதுவரை ஜாலியா சைனீஸ் சீரிஸ் பார்க்கலாம்” என சிரித்தவளைக் கண்டு தானும் சிரித்தான்.
“வேற வழி…” என்னும் போதே, சுண்டிய முகத்துடன் கண்மணி அங்கு வந்தாள்.
“கதிர் அண்ணா, உங்க ப்ரெண்டு கண்ணு முழிச்சுட்டாரு”
“அதை ஏன்மா சோகமா சொல்ற. என்ன இன்னைக்கு எல்லாரும் கதர் சட்டை போடணும்னு போராட்டம் பண்ண ஆரம்பிச்சுட்டானா?” எனக் கிண்டலாகக் கேட்க, “அதெல்லாம் இல்ல. அவருக்கு ஹாலுசினேஷன் சரி ஆகிடுச்சு. நிதா அண்னிட்ட பேசுனாரு…” என சொன்னதும் போதும் தடதடவென உள்ளே ஓடினான்.
சிந்தாமணி கண்மணியை ஒரு மாதிரியாகப் பார்த்து, “ஒரு வழியா அவரோட காதல் இம்சைல இருந்து தப்பிச்சுட்ட…” என்றதும், கண்மணி சிரித்தாள்.
ஆனால், அது கண்களை எட்டவில்லை.
சிந்தாமணி அதனைக் குறித்துக்கொண்டாலும் மேற்கொண்டு துருவாமல், “ஜஸ்ட் மிஸ். இன்னும் கொஞ்ச நாள் ஹாலுசினேஷன்ல இருந்திருந்தா, என் லவ் மேட்டர டீடெய்லா கேட்டிருப்பேன்” என்று அங்கலாய்த்தாள்.
“அடியேய்… அதுவே ஏதோ கற்பனை. அதைப் போய் பெருசு பண்ணிட்டு நீ மனசுல எதுவும் வச்சுக்காத. ஏற்கனவே இந்த லவ்வால நம்ம குடும்பத்துல எல்லாரும் ஒவ்வொரு வகைல கஷ்டப்பட்டுட்டாங்க…”
“ஆமா தான்… நான் மனசுல எதுவும் வச்சுக்கலையே” சிந்தாமணி உடனே கூறினாலும், “ஆனா கதிரவன் ஒன்னும் வரதராஜன் மாதிரி கிடையாது. நிவேதன் அண்ணாவும் உன் ஒரிஜினல் அப்பா மாதிரி இல்ல தான?” என்றாள்.
“அவங்க நல்லவங்களாவே இருந்துட்டுப் போகட்டும். நம்ம படிக்கிற வேலையை மட்டும் பாக்கலாம்” கண்மணி தீர்க்கமாக கூறியதும், “ஓஹோ… அப்பறம் எதுக்குமா, தினமும் நிவேதன் அண்ணா முழிக்கிற அப்ப எல்லாம் வேணும்னே வந்து தரிசனம் குடுத்தீங்க?” இடுப்பில் கையூன்றி சிந்தாமணி வினவ,
“தெரியல. தோணுச்சு. இப்ப தள்ளி இருக்க தோணுது. எந்த எண்ணமும் வர வேணாம்ல!” கண்மணியில் குரல் லேசாக பிசிறடித்தது.
—-
மருத்துவமனை ரிசப்ஷனில் வந்து அமர்ந்து கொண்ட ரித்திகாவின் பின்னேயே ஆஹில்யனும் வந்திருந்தான்.
“ரித்தி…”
“எதுக்கு என் பின்னாடி வர்ற. நான் தான் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்ல?” அவன் மீது பாய்ந்தாள்.
“ஹர்ட் பண்ணிட்ட தான். அதுக்காக பின்னாடி வரக்கூடாதா. நான் வருவேன். பிகாஸ் யூ ஆர் மை ஸ்வீட்ஹார்ட்.”
“மண்ணாங்கட்டி…”
“கல்யாணம் பண்ணிக்கலாமா ரித்தி?” சட்டென கேட்டிருந்தான் ஆஹில்யன்.
“என் அப்பா மேல பயம் போயிருச்சோ.”
“பயம் இருக்கு. ஆனா, ஒருவேளை அவரால நான் செத்தா, உன் ஹஸ்பண்ட்டா சாகுறேன். யாரோ ஒருத்தனா சாக விருப்பம் இல்ல எனக்கு” என்றான் அழுத்தமாக.
சட்டென கலங்கி விட்டவள், “நீ சாக கூடாதுன்னு தானடா, பிடிக்கலைன்னாலும் பிடிச்ச மாதிரி என் அப்பாட்ட நடிச்சு இந்தக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சேன். வாழுறதா இருந்தா கல்யாணம் பண்ணு. சாகணும்னா போய் தனியா சாவு! நீ வேணும்டா… நீ வேணும்னு தான் இவ்ளோவும்! அவள் சொல்ற மாதிரி நான் உன்னை ஏமாத்த நினைக்கல. யாஷையும் ஹர்ட் பண்ண நினைக்கல…” கேவலுடன் கூறியவளின், இதழ்களை ஒரு விரலால் மூடினான்.
“இதை நீ சொல்லணும்னு அவசியம் இல்லடி. எனக்குத் தெரியும். தெரிஞ்சதுனால தான் வலிச்சாலும் எனக்குள்ள வச்சுக்கிட்டேன்.”
“சாரிடா!” ரித்திகா அவன் நெஞ்சில் சாய்ந்திட, “போடி லூசு. உன் சாரி எதுக்கு. எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லு” என்றான் அவளை இறுக்கி அணைத்தபடி.
“எப்ப வேணாலும்!” மெல்லப் புன்னகைத்து கூறியதில், அவனிடமும் சின்னப் புன்னகை.
அந்நேரம் யாஷ் பிரஜிதன் அலைபேசியில் அழைத்ததில், “பாஸ் காலிங். போயிட்டு வந்திடுறேன்…” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு விலகியவன், மீண்டும் அவளருகில் அமர்ந்தான்.
—-
நிவேதனின் அறை நோக்கி வேகமாகச் சென்ற கதிரவன், நிவேதனைக் கண்டதும் உடைந்து போனான்.
“நிவே…” அழுகுரலில் தன் முன் நின்ற நண்பனைக் கண்டு அவனுக்கும் கலங்கியது.
“கதிரு!”
ஓடிச்சென்று நண்பனை அணைத்துக்கொண்ட கதிரவன், ஒரு மூச்சு அழுது தீர்த்தான்.
“மனுசன கதற விட்டுட்டடா. கிடைப்பியா மாட்டியான்னு ஒவ்வொரு நாளும் கலங்கடிச்சுட்ட. போடா… எருமை, பிசாசு…” என்று செல்லமாக திட்டியவன், இன்னும் அழுகையை நிறுத்தவில்லை.
“அதான் வந்துட்டேன்லடா. அப்பறம் என்ன? அழுவாத மச்சான்.”
“ஆமா மச்சான் நொச்சனெல்லாம் இப்ப சொல்லு. இவ்ளோ நாளும், என்னை தேசத்துரோகின்னு ஒளறிட்டு இருந்த?” போலியாய் கோபம் கொண்டான் கதிரவன்.
“இப்ப தான் நிதா எல்லாம் சொன்னா. எனக்கே தெரியல ஏன் அப்படி நடந்துட்டேன்னு. ரொம்ப படுத்திட்டேனோ” நிவேதன் அசடு வழிய கேட்க, “ரொம்ம்பபடா… இதுல கண்மணி புள்ள தான் பாவம். அந்தப் புள்ளைக்கு லவ் டார்ச்சர் குடுத்துட்ட நீ…” என்றதில் ஐயோ என்றிருந்தது நிவேதனுக்கு.
“சரி, ட்ரக் குடுத்தா இதுவரை பாக்காதவங்க பேர் கூடவா தெரியும்? அதெப்படி ரித்தியை தங்கச்சின்னு சொன்ன, கண்மணி சிந்தாமணி பேர் எல்லாம் சொன்ன? புரியலையே எனக்கு? இதுல நான் உன் குடும்பத்தை அழிக்க வந்தேனாமே…” என்று முறைத்தாள் நிதர்ஷனா.
“ஆத்தாடி… சத்தியமா எனக்கே தெரியல நிதா” என்னும்போது, மருத்துவருடன் உள்ளே நுழைந்தான் யாஷ் பிரஜிதன்.
நிவேதனை சோதித்து விட்டு, இரத்த மாதிரியையும் எடுக்க தாதியரிடம் பணித்தவர், “இன்னைக்கு மட்டும் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். மார்னிங் டிஸ்சார்ஜ் ஆகிக்கலாம்…” என்றதும், “டிராவல் பண்ணலாம் தான?” எனக் கேட்டு மருத்துவரின் அனுமதியும் பெற்றுக்கொண்டான்.
“இவன் என்ன புள்ளையா பெத்துருக்கான். டிராவல் பண்ணாம இருக்குறதுக்கு” நிதர்ஷனா சிலுப்பிக்கொள்ள, “நடுவானத்துல போராட்டம் பண்ண கிளம்பிட கூடாதுல, உன் பிலவ்ட் பிரதர்” எனக் கடுப்படித்தான் யாஷ்.
“நீ எப்படி நிதா லவ் பண்ணுன?” நிவேதன் கேட்டதும், “யாருக்கு தெரியும்” என முணுமுணுத்தாள்.
அவளைக் கடத்தி கட்டாயப்படுத்தி மனைவியாய் நடிக்க வைத்ததை எல்லாம் அவள் தெளிவாய் கூறவில்லை. மேலோட்டமாக உறவுமுறையைக் கூறி இருந்தாள்.
“என்னது?” நிவேதன் மீண்டும் கேட்டதில், “என் காதல் கதை ரொம்ப முக்கியமா உனக்கு. இவ்ளோ நாளும் உன் நிஜ தங்கச்சி மேல பாசத்தைப் பொழிஞ்சுட்டு இருந்த. இப்ப மறந்துட்டியா?” எனக் கேட்டாள்.
“நிஜ தங்கச்சியா? ரித்திகாவா?” நிவேதன் புருவம் சுருக்கிக் கேட்க, “அவளை மட்டும் எப்படி தெரியும்?” என்றாள்.
“வரதராஜன் தான் எனக்கு ரித்திகான்னு ஒரு தங்கச்சி இருக்கறதா சொன்னாரு என்னைப் பார்க்கும் போது.”
“ஓ! சரி எப்படியோ அவளும் உன் தங்கச்சி தான! கூப்பிட்டு பேசிடு.” என நிதர்ஷனா எழுந்து கொள்ள, “எனக்கு எப்பவும் நீ மட்டும் தான் தங்கச்சி…” என்றான் அழுத்தமாக.
“இந்த உருட்டு எல்லாம் வேணாம். இவ்ளோ நாள் உன்கூட தான் இருந்தா அவ. உன்னால அவ அப்பாவையும் பகைச்சுக்கிட்டா. ஹாலுசினேஷன்ற பேர்ல அவள் மேல பாசத்தை பொழிஞ்சுட்டு இப்ப மறந்துட்டன்னு சொல்றது நியாயமே இல்ல. அவளைக் கூப்பிட்டுப் பேசு” என்றவள் கதிரைப் பார்க்க, அவன் ரித்திகாவை அழைக்கச் சென்றான்.
“நிதா… உனக்கு கஸ்டமா இல்லையா?” நிவேதன் கவலையாகக் கேட்க,
“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. உனக்கு எத்தனை தங்கச்சி வந்தாலும் நான் தான் மொதல்ல” என உரிமையாய் கூறிவிட்டு வெளியில் சென்றவளின் மீது கண்ணகலாதவனாக அவளைப் பின்தொடர்ந்தான் யாஷ் பிரஜிதன்.
—-
மீண்டும் தன்னருகில் வந்தமர்ந்த ஆஹில்யனிடம், “என்னடா?” எனச் சிவந்த கண்ணமதை அவனுக்கு காட்டாது கேட்டாள்.
“நீ ஓகே தான?”
“எனக்கு என்ன. நான் ஓகே தான்…”
“நிவேதன் உங்கிட்ட பேசாதது உனக்கு கஷ்டமா இல்லை தான?” வருத்தமாய் கேட்டான்.
“ஆமா அவன் பெரிய அமெரிக்க அதிபரு. அவன் பேசலைன்னு எனக்கு அப்படியே குத்துது. அதெல்லாம் ஒன்னும் இல்லையே” என்று இயல்பாக கூறியவளை, “நிஜமா இல்லையா?” என அமைதியாக பார்த்தான்.
“இல்லடா…” இம்முறை சிரிக்க முயன்றவளின் கன்னம் பற்றியவன், “எனக்கு உன்னை தெரியும் ரித்தி!” என்றான் மென்மையாக.
அந்த மென்மை, அவளைப் பலவீனமாக்கியதோ என்னவோ, கண்ணில் குளம் கட்டியது.
“தெரியல ஆஹி. இவ்ளோ நாளும் ஏதோ ஒரு அன்ப குடுத்துட்டு, இப்ப சட்டுன்னு அந்த அன்பை மறந்து போய்ட்டான். அது ஒரு மாதிரி வலிக்குது.”
தன்னவளின் வேதனை அவனையும் தாக்க, அந்நேரம் கதிரவன் அங்கு வந்தான்.
“ரித்தி… உங்களை நிவே கூப்புடுறான்.”
“என்னையவா? எதுக்கு?” புருவம் சுருக்கி அவள் கேட்க,
“இது என்ன கேள்வி. உங்க அண்ணன் உங்களைப் பாக்க கூப்புடுறான்” என்றதும், யோசனையுடன் அறைக்கு சென்றாள்.
அங்கு நிதர்ஷனா இல்லாது, நிவேதன் மட்டும் அமர்ந்திருந்தான்.
நிவேதன் தயக்கமாய் ரித்திகாவை நிமிர்ந்து பார்த்து, சின்னதொரு புன்னகை பூத்தான்.
பதிலும் அவளும் புன்னகைத்து வைக்க, “எங்க உங்க தங்கச்சியைக் காணோம்?” புருவம் சுருக்கிக் கேட்டவளிடம்,
“நீ என் தங்கச்சி இல்லையா?” என்றான் மடக்கி.
“உனக்குத் தெரியுமா என்னை?” அவளிடம் சிறு வியப்பு.
“ஒரு தங்கச்சி இருக்கான்னு தெரியும். ஆனா, இடைல நடந்த குளறுபடியை எல்லாம் நிதா சொன்னா.”
“என்ன சொன்னா… உனக்கு தங்கச்சின்னு ஒருத்தி வந்துருக்கா. அவளை அடிச்சு துரத்தி விடுன்னா?” கோபம் மேலெழும்பக் கேட்டாள்.
“அவள் அப்படி சொல்ல மாட்டா. ஒருவேளை இதெல்லாம் நடக்குறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு குடும்பம் இருக்குன்னு தெரிஞ்சுருந்தா, கண்டிப்பா என்னை விட்டு விலகிருப்பா. அவள் என்னை விட்டுப் போக கூடாதுன்னு தான் வரதராஜன் என்ன அவர் கூட கூப்பிட்டதை அவள்கிட்ட இருந்து மறைச்சேன்!” அவனிடமும் சின்னதொரு ஆதங்கம்.
அவள் அமைதியாய் நின்றிட, “என்னால நீயும் காயப்படுறதுல எங்க ரெண்டு பேருக்கும் உடன்பாடில்லை ரித்திகா. அன்புக்காக எவ்ளோவோ ஏங்கிருக்கோம். அந்த அன்பை இன்னொருத்தர்ட்ட இருந்து பறிக்கிறத எங்களால செய்ய முடியாது. நீ எனக்காக இங்க இருக்கன்னு சொன்னா. அப்போ உனக்காக நானும் இருக்கேன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்.
பேருக்கு தான் நான் உன் அண்ணன். உன் அளவு வசதியும் கிடையாது. படிப்பும் கிடையாது. என்னை அண்ணனா நினைக்கிறதுல உனக்கு ஆட்சேபணை இல்லையா?” அவனது கூற்றில் அவளும் பேச்சற்று போனாள்.
“அன்பும் பாசமும் என் அப்பாவுக்கு வேணும்னா வசதி வச்சு வரலாம். எனக்கு அப்படி இல்ல. நீ குடும்பம்னு ஒன்னு கிடைக்காம இருந்த. எனக்கு குடும்பம்னு ஒரு அமைப்பு இருந்தும் இல்லாத மாதிரி தான். உனக்கும் எனக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்ல. என் அப்பாவை யாஷ் கண்டிப்பா சும்மா விட மாட்டான். நிதாவை கொலை செய்ய ட்ரை பண்ணவரை சும்மா விடுற அளவு அவன் நல்லவன் இல்ல. அவரோட முடிவு என்னன்னு எனக்கு நல்லாத் தெரியும். பட் ஐ ஸ்டேண்ட் பார் ஹிம்!
உன்னை அண்ணனா நினைச்சதுனால தான் இங்க இருந்தேன். பட், உனக்கும் அவளுக்கும் இடையில வந்து இருக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல. நான் கிளம்பலாம்னு இருக்கேன் கல்கத்தாவுக்கு…” என்றதும், நிவேதன் சங்கடமாய் பார்த்தான்.
அவளுக்கு சின்னதாய் ஒரு ஈகோ. அவர்களது முயற்சி புரிந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள மனம் முரண்டு பிடித்தது. அவளை ஒன்றும் அத்தனை எளிதாய் யாஷ் அனுப்பி விடமாட்டானே!
—
“என்ன உன் பிரதர, தத்து குடுத்துட்ட?” யாஷ் கேலியாய் வினவியதில் நடையை நிறுத்திய நிதர்ஷனா, “யாரோட உரிமையையும் பறிக்கிற ஆசை எனக்கு இல்ல. கொஞ்ச நாளா இருந்தாலும், அன்போட ஆழமும் அது குடுக்குற வலியும் அதிகம் யாஷ்.” என்றாள் தொண்டை அடைக்க.
“அது உனக்கும் உன் ப்ரதருக்கும் மட்டும் தான். நிவேதன் உன்னை மறந்தப்ப உனக்கு வலிச்ச மாதிரி எனக்கும் வலிக்கும்னு உனக்குப் புரியாதுடி கடன்காரி. மத்தவங்க உரிமையை பறிக்க விரும்பாதவ, எனக்கான உரிமையை மட்டும் ஈஸியா பறிச்சுப்ப! பிகாஸ், நான் இன்னும் உன் மெமரியா தான் இருக்கேன்!” ஆழ்ந்த குரலதில் ஆழமான வலியுணர்ந்தவள் வேகமாக அவன் புறம் திரும்பிட, அவன் சினம் மீறிட அவளுக்கு முகம் காட்டாது திரும்பி எதிர்புறம் நடந்தான்.
—
அத்தனை பேரையும் அள்ளிக்கொண்டு இத்தாலிக்கு கிளம்பினான் யாஷ் பிரஜிதன். விமானம் ஏறும் வரையிலும் நிதர்ஷனாவின் முகத்தைக் கூட அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.
அவளுக்குத் தேவையான தமையன் தான் கிடைத்து விட்டானே!
முழுதாய் பத்து மணி நேரத்திற்கு மேலான பயணம்.
“ஐயோ இன்னும் எவ்ளோ நேரம் போகணும் எனக்கு குடலைப் பிரட்டுது” கதிரவன் புலம்பினான்.
நிதர்ஷனா தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
நிவேதன் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்து, தனது தங்கையை இத்தனை நாள்கள் பார்த்துக்கொண்டதற்கு நன்றியும் கூறி இருந்தான்.
யாஷ் பிரஜிதனுக்கும் நன்றி கூற, அவன் இருவரையும் முறைத்தானே தவிர, ஒரு வார்த்தைப் பேசவில்லை.
“இவர் உண்மையாவே உன் ஹஸ்பண்ட் தானா? ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரியே தெரியல” நிவேதன் துருவ ஆரம்பித்ததும், உறக்கம் வருகிறதென்று கண்ணை மூடிப் படுத்துக் கொண்டவள் உறங்கியும் விட்டாள்.
அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த யாஷ் பிரஜிதன், அவள் உடலைக் குறுக்கி அமர்ந்து உறங்குவதைக் கண்டதும், சீட்டை பின்னால் சாய்த்து அவளது தலையை தனது தோள்மீது வைத்துக்கொண்டான். போர்வையையும் போர்த்தி விட்டவன், அவளைத் தோளோடு அணைத்து சாய்ந்து கொள்ள, அவளுக்கு மறுபக்கம் அமர்ந்திருந்த நிவேதன் இருவரையும் வெறித்துப் பார்த்தான்.
அவனது பார்வையை உணர்ந்த யாஷ், தனது பச்சை மஞ்சள் விழிகளால் கூர்மையுடன் என்னவென வினவ, வேகமாகத் தலையாட்டிய நிவேதன் முன்னால் அமர்ந்திருந்த கதிரவனை சுரண்டினான்.
பெரியவர்கள் உறங்கி இருக்க, அவனும் சிந்தாமணியும் சைனீஸ் டிராமாவில் மூழ்கி இருந்தனர். கிளம்பும் முன்னரே பயபக்தியாக சிந்தாமணி டிராமாவை டவுன்லோட் செய்திருந்தாள்.
கதிரவன் திரும்பிப் பாராமல், விமானத்தில் இருக்கும் சின்ன ஸ்க்ரீன் தொலைக்காட்சிப் பெட்டியை ஆர்வமாய் பார்த்திருக்க, “டேய்” என்று அவன் தலையில் அடித்தான்.
“ஆ… என்னடா?” கதிரவன் திரும்பி முறைக்க,
“இந்த ஆளு என்னடா பாக்கவே பயப்பட வைக்கிறான். இவனாண்ட எப்படி இவ விழுந்தா?” எனச் சந்தேகமாக கேட்டதில், “அதை உன் தங்கச்கை எந்திரிச்சதும் அவளாண்டவே கேட்டுக்க. இல்லன்னா உன் மச்சான்ட்ட டீடைலா கேளு” என்று விட்டு திரும்பிக்கொண்டான்.
“அப்டிங்குற?” என்றபடி மீண்டும் அவன் யாஷை நோக்கித் திரும்ப, இம்முறையும் அவன் நிமிர்ந்து பார்த்ததில் பயந்து அவனும் கண்ணை மூடி படுத்துக் கொண்டான்.
வெகு நேரமாய் யாஷின் தோள் மீதே படுத்திருந்தாள் நிதர்ஷனா. ஒரு கட்டத்தில் யாஷும் உறங்கி விட, ‘பாவம் அவனுக்கு வலிக்க போகுது’ எனப் பாவப்பட்ட நிவேதன், நிதர்ஷனாவின் தலையை மெல்ல எடுத்து விட்டான்.
நொடியில் கண்ணைத் திறந்து விட்ட யாஷ், “வாட் ஆர் யூ டூயிங்?” என உறுமிட, அவனுக்கு அடிவயிறு கலங்கி விட்டது.
இவனது சத்தத்தில் நிதர்ஷனா அடித்து பிடித்து எழுந்தாள்.
அன்பு இனிக்கும்
மேகா
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.
Happy diwali 🎇 may this festival bring lots of joy and happiness to your life 🧨🎆
Thank you soo much sis wish you the same 🤩