
பிறை -47
காரில் சென்று கொண்டிருந்தவனுக்கு மனமெல்லாம் மனைவியின் மீது தான். நேற்றைய தினத்தில் இல்லற வாழ்க்கையை துவங்கி இருந்த நிலையில், இன்று அவளிடம் ஊருக்கு செல்வதை கூட கூறாமல் வந்து விட்ட மடத்தனத்தை எண்ணி நொந்து போனான்.
” என்ன ஒரு மாதிரி இருக்க ” காரை ஓட்டிக் கொண்டிருந்த சரண் கேட்டான்.
” வரும் போது அவகிட்ட சொல்லிட்டு வரல சரண்.. அதான் கொஞ்சம் … ” என வார்த்தைகளை கோர்க்க முடியாமல் நிறுத்தி விட்டான்.
” ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஜஸ்ட் இருபது கிலோமீட்டர் தான் வந்திருக்கோம்.. நீ ஓகேன்னு சொன்னா கண்டிப்பா யூ டர்ன் போடுறேன்.. போய் பார்த்திட்டு வா ” என்ற நண்பனை ஒரு பார்வை பார்த்தவன்..
” இல்ல சரி வராது… அங்க பாரு போன் எடுக்கல.. நம்ம சீக்கிரம் அங்க போகனும்”
” தங்கச்சி மேல அம்புட்டு பாசம் இருக்கிறவன் எதுக்கு டா தனியா விட்டுட்டு வந்த.. “
” ப்ச் என் பொண்டாட்டியை சமாதானம் பண்ண தான் வந்தேன்.. அவளும் தனியா இருக்கிறது வழக்கம் தான்.. அதான் நாங்க யாரும் பெருசா ஒன்னும் கண்டுக்கல ” குரலே சோர்ந்து வந்தது.
” ஃபீல் பண்ணாத மச்சான்… உன் தங்கச்சி அடிக்கிற வாய்க்கு யாரும் ஒரு நாளைக்கு மேலே வச்சிருக்க மாட்டாங்க.. ” நண்பனின் மனதை மாற்ற பேசினாலும்.. அவனுக்கும் உள்ளுக்குள் ஏதோ தவறாக நடப்பதை போல தான் இருந்தது.
” ஏன் ஆதி.. கேட்கிறேன்னு தப்பா நினைக்காத.. பார்கவி ஏதும் லவ்… அந்த மாதிரி எதுவும் இருக்கா ” கேட்கும் போதே அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது. ஆனால் அனைத்து கோணத்திலும் யோசிக்க வேண்டுமே..
சற்றே யோசித்தவன்.. ” தெரியல சரண்”
” என்ன டா.. இதென்ன பதில்.. நம்ம பார்க்கிற வேலைக்கு , நம்ம வீட்ல உள்ளவங்க எல்லாம் எப்படி என்ன பண்ணுறாங்கன்னு நம்ம சரியா கவனிக்கனும் “
” லவ் பண்ணாலும் வீட்ல எதிர்க்கிறவங்க கிடையாது.. அப்படியே லவ் இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லிருப்பா.. “
” ஒருவேளை உனக்கு பயந்துட்டு சொல்லாம இருந்திருந்தா ” என்றதும்.. பல விஷயங்கள் அவனது மூளையை அழுத்தியது.
நண்பனின் நிலையை உணர்ந்தவனோ.. ” ரிலாக்ஸ் ஆதி.. நான் எல்லாரும் கேட்கிற மாதிரி தான் கேட்கிறேன். ஒரு வேளை இதுல ஏதாவது க்ளூ இருக்க வாய்ப்புகள் இருக்கு இல்லையா.. அதான்.. “
” புரியுது சரண்.. ஆனால் பாரு அப்படி பண்ணுவான்னு எனக்கு தோணல..”
” சரி பார்க்கலாம்.. அவளோட பிரெண்ட் நம்பர் இருக்கா.. விசாரிக்கலாம் “
” பிரெண்ட் வீடு பக்கத்து தெருவில தான்.. அங்க போய் கேட்கலாம்.. நம்பர் இல்ல .. ” என ஆதி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது.
” அம்மா தான் கூப்பிடுறாங்க ” என அலைபேசியை எடுத்தவன்..
” சொல்லுங்க மா.. பாரு கால் எடுத்தாளா ” மகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல்.. ” உடனே திரும்பி வீட்டுக்கு வா ஆதி ” என மீனாட்சி கூறியதும்.. சரணை வண்டியை நிறுந்தும் படி சைகை காட்டினான்.
” என்னாச்சு மா “
போனை வாங்கிய திவாகர்.. “வீட்டுக்கு வா ஆதி.. பேசிக்கலாம் ” என போனை வைத்திருந்தார்.
அடுத்த நொடி கார் மீண்டும் திருநெல்வேலியை நோக்கி விரைந்தது. அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்திருந்தான் ஆதிதேவ்.
வீட்டிற்குள் அனைவரும் கலவராக இருந்தனர். ஆதியை பார்க்கவே மீனாட்சிக்கு பயம் வந்தது.
” என்னாச்சு பா.. எதுக்காக வர சொன்னீங்க ” என எடுத்ததும் திவாகரை கேள்வி கேட்க.. அவரோ அமைதியாக பிறையை பார்த்தார்.
” என்னாச்சு அவளை எதுக்கு பார்க்கிறீங்க… “
” கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத கேளு ஆதி.. ஊருல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி பிறை கூட நம்ம பாரு தனியா பேசிருக்கா.. அப்போ யாரோ ஒரு பையனை லவ் பண்ணுறதாகவும்.. ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கேன்னு சொல்லிருக்கா.. அது என்னனு கேட்கிறதுக்குள்ள மீனாட்சி கிளம்ப சொல்லவும்.. பாதியிலேயே பிறை கிளம்பி இங்க வந்துட்டா.. ” என நடந்ததை சுருக்கமாக கூறி இருந்தார் திவாகர்.
கதையை கேட்டவனுக்கு அப்படி ஒரு கோபம். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வீடு அல்லவே அவன் வீடு. அப்படி இருந்தும் பார்கவி எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தாள். வீட்டில் கூறி இருந்தால் அவர்களே பேசி திருமணம் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் போக வேண்டிய நிலையில் அப்படி என்ன அவசரம்.
தலை வலித்தது. அதை விட விஷயம் தெரிந்த தன் மனைவி அவனிடம் ஒரு வார்த்தை கூறவில்லை. மொத்த கோபமும் அவள் மீது திரும்பியது.
” மாடிக்கு வா ” என மனைவியை அழைத்து விட்டு அவன் மாடிக்கு சென்று விட.. பயத்தோடு அவன் பின்னே சென்றாள் பிறை.
” போ மா.. எதுவும் சொல்ல மாட்டான்.. ஏதாவது சொன்னா எங்க கிட்ட சொல்லு.. நாங்க இருக்கோம்.. ” என திவாகர் அவளை அனுப்பி வைத்தார்.
மாமனார் கொடுத்த தைரியத்தில் படியேறிச் சென்றிருந்தாள் பிறைநிலா.
அவள் உள்ளே வந்ததும் படாரென கதவை அடைத்து தாழிட்டவன்.. கனல் விழிகளுடன் அவளை பார்த்தான்… ” எதுக்கு டி சொல்லாம மறைச்ச .. ” எடுத்ததும் அவளிடம் எகிறினான்.
பயத்தில் தொண்டை அடைத்தது அவளுக்கு. அவள் ஒன்றும் வேண்டும் என்று மறைக்கவில்லையே.. எதுவும் முழுதாக தெரியாமல் எப்படி கூறுவது என மனதிற்குள் போட்டு மருகிக் கொண்டிருந்தாள்.
” அது.. எனக்கே முழுசா எதுவும் தெரியாதுங்க.. ” திணறினாள்.
” அதான் லவ் பண்ணியிருக்கேன்னு சொல்லிருக்கா தானே.. “
” ஆமா சொன்னா தான்.. ஆனால் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல.. வீட்ல யார்கிட்டேயும் இன்னும் சொல்லல.. அதான் ஒரு முடிவு பண்ணிருக்கேன்னு சொன்னா.. நான் கூட அவ வீட்ல உங்க எல்லார்கிட்டயும் சொல்ல போறான்னு நினைச்சேன்.. “
” நினைச்சியா.. “
” அது.. “
” வாயை மூடு.. எங்க அம்மா கிட்ட நல்லா தான் பேசுற.. அவங்க கிட்ட சொல்லுறதுக்கு என்ன … இப்போ அவளை எங்கன்னு போய் தேடுறது” என கத்தியவனை பார்க்கவே அத்தனை பயமாக இருந்தது.
” யாரு என்னனு சொன்னாளா “
” இல்லைங்க.. ” பயத்தில் அழுதிருந்தாள் பிறை.
” எதுவுமே சொல்லாம மொட்டையா லவ் பண்ணேன்னு மட்டும் சொன்னாளா… இல்ல யாருன்னு என்கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்னாளா ” அவனது விசாரணையை தொடங்க..
” ஐயோ தெரிஞ்சா கண்டிப்பா நான் சொல்லுவேன்.. பிளீஸ் என்னைய நம்புங்க.. எனக்கு அவன் யாருன்னு சத்தியமா தெரியாது. அவ எல்லாம் சொல்லுறதுக்கு முன்னாடியே அத்தை என்னைய கூப்பிட்டாங்க.. நான் ஊருக்கு கிளம்பிட்டேன். சரி ஊருக்கு போயிட்டு வந்து அவகிட்ட பேசலாம்னு நினைச்சேன். நிச்சயமா அவ என்கிட்ட சொல்லியிருந்தா கண்டிப்பா , வீட்ல அவளை சொல்ல சொல்லியிருப்பேன்.. இல்லன்னா நான் சொல்லியிருப்பேன். மறைக்கனும்னு மறைக்கல.. ” மன்றாடும் மனைவியை பார்த்தவனுக்கு மனம் தாங்கவில்லை தான். ஆனால் பார்கவியை நினைத்தால் மனம் பதறுகிறது.
” நல்லா யோசி வேற எதுவுமே சொல்லலையா “
” இல்ல … “
” இந்த விஷயத்தை உன்கிட்ட தான் சொல்லிருக்கா.. அதுனால எதுனாலும் உனக்குதான் போன் பண்ணுவா.. என்ன சொன்னாலும் எனக்கு உடனே தகவல் சொல்லனும்.. இதையும் மறைக்க டிரை பண்ண.. தொலைச்சிடுவேன் ” என விரல் நீட்டி எச்சரித்தவன்.. அவளது போனை வாங்கி எதையோ செட் செய்து விட்டு.. வேகமாக அறையில் இருந்து வெளியேறினான்.
மருமகன் கோவமாக வருவதை பார்த்த சிவானந்தம்.. ” தம்பி , மன்னிச்சிடுங்க.. பாப்பா மேல தான் தப்பு.. சின்ன பொண்ணு விவரம் பத்தல.. அதுனால … “
” பரவாயில்ல மாமா… நாங்க இப்போவே ஊருக்கு கிளம்பிறோம்.. மா .. நீங்களும் அப்பாவும் என் கூடவே வாங்க.. ” என்றதும் பிறைக்கு திக்கென்று இருந்தது.
அனைவரும் போகும் பொழுது அவளை மட்டும் விட்டு செல்கிறார்கள் அல்லவா.
” அது.. நம்ம மருமகளை.. கூட்டிட்டு போகலையா பா ” மீனாட்சி மெல்ல கேட்டாள்.
” எல்லாரையும் என்னால பாதுகாக்க முடியாது. அவ இங்க இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் அங்க வாங்க.. பாருவை தேடனும்… அவ லவ் பண்ணி போயிருக்கான்னு நம்ம நினைச்சிட்டு இருக்கோம். அவ ஏதாவது பிரச்சினைல இருந்தா என்ன பண்ணுறது ” என்றதும் பெற்றவர்களுக்கும் மனம் பதறியது.
உடனே உடமைகளை எல்லாம் எடுத்து வைத்து விட்டு கிளம்பி வந்தார்கள். ” மாமா எதுனாலும் நான் போன் பண்ணுறேன். அதுவரைக்கும் பிறை இங்க இருக்கட்டும்.. நான் வரேன் அத்தை ” என இருவரிடமும் சொல்லி விட்டு, மனைவியை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பி இருந்தான்.
” நீங்க கவலைப்படாதீங்க அத்தை.. கண்டிப்பா பார்கவி கிடைப்பாங்க ” என மாமியாருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தாள் பிறை.
” நீ கவனமா இருக்கனும் மா.. எதுனாலும் அவனுக்கு போன் பண்ணி சொல்லு.. கோபக்காரன் தான்.. ஆனால் அப்படியே விட்டுட மாட்டான் ” என திவாகர் மருமகளிடம் கூறி கிளம்பி இருந்தார்.
மனமே இல்லாமல் வழி அனுப்பி வைத்தனர். போகும் பொழுது சரண் வீட்டிற்குள் வந்து பிறையிடம்.. ” இது உங்களுக்காக தான் வாங்கினான்.. பிரச்சனைல கொடுக்க மறந்துட்டான் சிஸ்டர்.. ” என ஒரு பார்சலை கொடுத்து விட்டு சென்றான்.
தற்போது அவனிடம் கொடுக்க சொன்னால் கடித்து விடுவான் என தெரிந்ததால்.. அவனே நண்பனின் மனைவியிடம் கொடுத்திருந்தான்.
திருநெல்வேலியில் இருந்து அனைவரும் கிளம்பி இருந்தனர். பார்கவியை சிட்டி முழுவதும் தேடிக் கொண்டிருந்தனர். வீட்டிற்கு சென்றால் தான் ஒரு முடிவெடுக்க முடியும் என்பதால் அமைதியாக அமர்ந்து வந்தான் ஆதிதேவ்.
” வீட்டுக்கிட்ட எங்க எல்லாம் சிசிடிவி இருக்கு ” என்றதும்.. மீனாட்சியும் திவாகரும் அவர்களுக்கு தெரிந்த இடத்தை எல்லாம் கூறி இருந்தனர்.
” போனதும் அங்க செக் பண்ணலாம். அதுக்கு அப்பறம் தான் முடிவெடுக்க முடியும்.. “
” பார்கவி நம்பர் சுவிட்ச் ஆப்ல இருக்கு … ” திவாகர் கூறியதும்.. அவளது நம்பர் இறுதியாக எங்கே காட்டியது என கண்டுபிடிக்க கூறினான்.
” ஆதி கொஞ்சம் நிதானமா யோசி.. நம்மளை மீறி எதுவும் நடக்காது.. ” சரண் அவனை ஆறுதல் படுத்தினான்.
அவனோடு இத்தனை ஆண்டுகள் பழகி இருக்கிறான். அவனை பற்றி தெரியாதா.. எப்போதும் நிதானமாக செயல் படுபபவன் இன்று தங்கை என்றதும் சற்றே அமைதி இழந்து போனான்.
” சின்ன பொண்ணு டா… எங்க போனான்னு தெரியல.. “
” பாருக்கு எதுவும் ஆக விட மாட்டேன் டா.. அதான் நானும் கூட இருக்கேன்ல மச்சான்.. கண்டு பிடிச்சிடலாம் ” நண்பனை இந்த நிலைமையில் பார்க்கவே வேதனையாக இருந்தது.
” பிறையை ஏன் அங்கேயே விட்டுட்டு வந்த “
” அதுக்கும் காரணம் இருக்கு சரண்.. பிறை தனியா இருக்கிறது தெரிஞ்சா அங்க வருவான்.. அங்க வச்சு அவனை தூக்கலாம்.. அங்க ஆள் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு தான் வந்திருக்கேன்.. “
” அதெல்லாம் ஓகே தான்.. பட் கூட்டிட்டு வந்திருக்கலாம்னு தோணுது.. முகமே சரியில்ல டா “
” வேற வழி இல்ல .. இருக்கட்டும் ” என்றவன் அமைதியாகி போனான்.
நினைவுகள் எல்லாம் அவனது மனைவியை தேடியது. ஆனால் மனதையும் உடலையும் அடக்கிக் கொண்டான். பார்கவி கிடைக்கட்டும்.. என்று ஒரே நோக்கத்தில் பயணிக்கிறான். இதில் பிறையை தவறவிடுவானோ ?
சனா💖

