
அத்தியாயம் 42
சத்ய யுகாத்ரனின் முழு முயற்சியில், சென்னையில் முக்கிய இடங்களில் ஒளிரா ஷோரூம் திறக்கப்பட்டது.
அவன் சொன்ன ஒரே வாரத்தில் இதனைச் செய்தும் காட்டி இருந்தான். உள்வடிவமைப்புகளுக்கு அதிகச் சிரத்தை எடுத்திருந்தவன், விலை மலிவாகவும் முடித்திருந்தான்.
“செம்ம எஃபர்ட் ப்ரொஃபி!” தனக்கான ஷோரூம்களைக் கண்டதும் இதயாம்ரிதாவிடம் பரவசம் தொற்றிக் கொண்டது.
விதுரன் தான், “அண்ணா, காதலிக்காக தாஜ்மஹால் கட்டுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க ஷோரூம் எல்லாம் கட்டுறீங்க…” என்று கிண்டல் செய்ய,
ஸ்ரீராம், “உன் அண்ணன்காரன் நிலாவையே மார்க்கெட்டிங் செஞ்சு வித்திருவான் விதுரா…” என்று வாரினான்.
மிதுனாவோ, “திடீர்னு பேக்கேஜிங் மாத்தச் சொன்னதும் தலையைப் பிச்சுக்கிச்சு எங்க மொத்த டீமும். இப்படி எல்லாம் எங்களைப் பதற்றத்துலயே வச்சிருக்காதீங்க மாம்ஸ்.” எனப் பரிதாபமாக உரைக்க, “அது என் கைல இல்ல!” என மூக்கைச் சுருக்கினான் சத்ய யுகாத்ரன்.
அனைவரும் மாறி மாறி வாரிக் கொள்ள, அகில் மட்டும் அன்று அமைதியின் சிகரமாக இருந்தான்.
இதுநாள் வரை, கல்லூரி அலுவலகம் என எதற்கும் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை பூமிகா.
முந்தைய நாள் ஏதோ அவசர வேலையாக விடுமுறை எடுப்பதாகக் கூறியவள், பின் அவன் அழைத்தும் அழைப்பை ஏற்கவில்லை. அதுவே அவனது கவனத்தைச் சிதற வைத்தது.
“ஏய் மிது… பூமிக்கு போன் செஞ்சியா? ஏன் அவள் வரலையாம்?” எனக் கேட்க,
“தெரியலைடா… ஏதோ அலையன்ஸ் பார்க்குறதா சொன்னா…” என்று யோசனையாய் கூறியபடி அவனை ஓரக்கண்ணில் ஏறிட, அகிலின் முகத்தில் அதீத திகைப்பு.
விதுரனும், “ஆமா மச்சி… நம்மளைப் பொண்ணு பார்க்கக் கூடக் கூப்பிடல பாரேன். விடு, கல்யாணத்துல போய் சிறப்பா செஞ்சுடலாம்.” என்றிட,
“கல்யாணமா?” என மேலும் அதிர்ந்தான்.
அவனையே ஒரு மார்க்கமாகப் பார்த்தனர் அனைவரும்.
“பொண்ணு பார்க்க வந்தா கல்யாணம் பண்ணுவாங்க தானடா?” இதயாம்ரிதா நக்கல் செய்ய, அவனிடம் என்றும் உணராத சோர்வு.
“ஓ!”
அதற்கு மேல் எதுவும் பேசாமல், எந்த உரையாடலிலும் கலந்து கொள்ளாமல் தனித்தே இருந்து கொண்டான்.
அன்று முழுதும் மனத்தின் புழுக்கம் அவனை வாட்டி வதைத்தது.
மறுநாள், அலுவலகத்திற்கு வந்த பூமிகாவைக் கண்ட அகிலுக்கு எதையோ இழந்த நிலை.
அவள் இரு நாள்கள் வேலையை விட்டுச் சென்றதால், அவசரமாகத் தனது துறைக்குச் சென்று தரத்தின் அளவுகளைச் சரி செய்து கொண்டிருக்க, எப்போதும் போல வெளியில் கிளம்பிய அகிலின் கால்கள் தானாய் அவளது இருப்பிடம் சென்றது.
மூக்கை உறிஞ்சிக் கலங்கிய கண்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மாஸ்க் அணிந்தபடி அவள் வேலையைச் செய்திட அவளைக் கண்டு அதிர்ந்தவன், “என்னாச்சு பூமி?” எனக் கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், பதில் கூறாமல் மீண்டும் க்ரீம்களைத் தயாரிக்கும் மெசினுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்க,
“உன்னைத் தான் கேட்குறேன். என்ன ஆச்சு? உனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலையா? அதுக்கு எதுக்கு அழுதுருக்க?” என வினவினான்.
வெடுக்கென மாஸ்க்கைக் கழற்றியவள், “நான் ஏன்டா அழப் போறேன் பைத்தியமே… ரெண்டு நாளா கோல்டு! கண்ல இருந்து தண்ணியா வருது. இதுக்கு மேல லீவ் எடுக்க மனசு வராம ஆபிஸ்க்கு வந்தேன். வந்ததுல இருந்து கிறுக்கு மாறி உளறிட்டு இருக்க. நானே பேச முடியாம நின்னுட்டு இருக்கேன்.” என எரிந்து விழுந்தவள், கர்சீப்பால் மூக்கைத் துடைத்துக் கொண்டு, மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.
பிறகே அகிலின் முகத்தில் தௌசண்ட் வால்ட்ஸ் விளக்குப் பிரகாசமாக எரிந்தது.
“அப்போ, உன்னை யாரும் பொண்ணு பார்க்க வரலையா?” மீண்டும் வினவியவனை வேற்றுக் கிரகவாசி போலப் பார்த்து வைத்தவள், உடல் நிலை சரியில்லாத அழுத்தத்தில், “அப்படியே யாரும் பொண்ணு பார்க்க வந்தா உனக்கு எதுவும் லாஸ் இருக்கப் போகுதா? இல்லைல… மனசுக்குள்ள புழுங்கிச் சாகுறது நான் தான… போய் வேலையைப் பாரு.” என்று கத்தி விட்டாள்.
சில நொடிகள் அப்படியே நின்றவனுக்கு, அவளது நேசம் பளிச்செனப் புரிந்தது.
புரிந்தும் அதே நிலையில் நின்றவனைக் கண்டு, “என்னடா… இங்கலாம் யாரும் நிக்கக் கூடாது. மேம் பார்த்தா திட்டுவாங்க.” எனக் கண்டிக்க,
“போறேன் போறேன்… அதுக்கு முன்னாடி ஒண்ணே ஒன்னு சொல்லிட்டுப் போறேன்.” என்றவனை, “சொல்லித் தொலை!” என்று பார்த்தாள்.
“நேத்து உனக்குக் கல்யாணம் ஆகப் போகுதுன்னு எல்லாரும் என்னைக் கலாய்ச்சு விட்டுட்டாங்க பூமி… ஆனா, அது ஏன் என்னை அஃபெக்ட் பண்ணுச்சுன்னு புரியல. கொஞ்ச நேரம் முன்னாடி வரை மூச்சே விட முடியாத மாதிரி நெஞ்சை அடைச்சுச்சு. இப்ப என்னவோ ரிலாக்ஸ்சா மூச்சு விடுற மாதிரி இருக்கு…” என வெகு தீவிரமாய் பேசிக் கொண்டிருக்க,
“டேய்! மூக்கு எதுவும் அடைச்சுருக்கா? சளி பிடிச்சுருக்கப் போகுதுடா. ஹாஸ்பிடல் போயிடு. எனக்கும் இப்படித் தான் இருந்துச்சு. அசால்ட்டா விட்டு இப்பப் பாரு, ரொம்ப முடியாம போச்சு.” என்றவளைத் திருதிருவென விழித்துப் பார்த்தான்.
‘அட, நாசமா போனவளே!’ என நொந்து கொண்டவன், “இங்க பாரு… இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி, அஞ்சாறு வருஷத்துக்கு உன் பின்னாடி என்னால அலைய முடியாது. அதுனால நான் டைரக்டா விஷயத்தைச் சொல்லிடுறேன். அதுவுமில்லாம, உங்கிட்டச் சுத்தி வளைச்சுப் பேசி உனக்கு அது புரிஞ்சு, அதை நான் புரிஞ்சு… ஷப்பா முடியல…
நான் உன்னை லவ் பண்றேன் பூமி… நீயும் என்னை லவ் பண்ற தான. அதை ஒத்துக்கிட்டு ஓகே சொல்லிட்டா, நான் போய் என் வேலையைப் பார்ப்பேன்.” என்று செய்தி வாசிப்பவன் போல மடமடவெனப் பேசி முடித்தான்.
ஏதோ நினைவில் இருந்தவள், “ஹா ஆமாடா!” என்று உரைத்து விட்டுப் பின், திடுக்கிட்டாள்.
“ஹே! என்ன சொன்ன நீ?”
குறுஞ்சிரிப்பை மறைத்துக் கொண்டவன், “லவ் யூ பூமி!” என்றான் நேரடியாக.
இதனை முற்றிலும் எதிர்பாராதவளுக்குப் பேச்சே வரவில்லை.
“பதில் சொல்லு பூமி… எனக்கு டைம் ஆச்சு?” என்று மணியைப் பார்த்து அவசரப்படுத்தியவனிடம்,
“காதலைச் சொல்லிட்டுக் கடன் வாங்க வந்தவன் மாதிரி அவசரப்படுற?” தலையைச் சொறிந்தவளுக்கு மாத்திரையின் விளைவால், இது எல்லாம் அவளது கற்பனையோ என்ற பயம் வேறு எழுந்தது.
“நான் இப்ப நிதானமா இல்ல, என் கால் தரையில நிக்கல.” என உரைத்தவளைக் கண்டு மென்னகை புரிந்தவன், “காதல்ல விழுந்துட்ட, அதான?” என வெட்கப்பட்டான் அகில்.
“சனியனே… மாத்திரையைப் போட்டு வந்திருக்கேன். ஏற்கெனவே எனக்கு எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது. உடம்பு சரியானதும் மறுபடியும் வந்து சொல்லு. அப்புறம் பதில் சொல்றேன்…” என்று கண்ணைக் கசக்கியபடி வேலையைத் தொடர, இதென்ன நமக்கு வந்த சோதனை என்ற ரீதியில் பரிதாபமாய் கிளம்பினான் அகில்.
——-
அவ்வப்பொழுது, ஷோரூமிற்குச் சென்று பார்வையிடுவதை வழக்கமாக்கி இருந்தாள் மிதுனா. சரியாக அவள் கிளம்பும் நேரத்தில் வண்டியுடன் அவள் முன் வந்து விடுவான் விதுரன்.
“எனக்குப் போகத் தெரியாதாக்கும்?” மிதுனா சிலுப்பிக் கொண்டாலும் ரகசியப் புன்னகையுடன் அவன் வண்டியில் ஏறிக் கொள்வாள்.
கண்ணாடி வழியே அவன் அவளைப் பார்ப்பதும், அவள் அவனைப் பார்ப்பதுமாக அவர்களது விழி வழிக் காதல் மெருகேறிக் கொண்டே சென்றது.
அதிகமாய் நட்பு ரீதியாகப் பேசி இருக்கிறார்கள். ஆனால், காதலென்று பரிமாறிக் கொண்ட பின்னே, அவர்களது மௌனமே ஆதிக்கம் செலுத்தியது.
அன்று ஷோரூம் வாசலில் இறக்கி விட்டு அவளை நிறுத்தினான் விதுரன்.
“ஸ்ரீராம் அண்ணா மேரேஜ் பண்ணிக்கப் போறாங்களாம்!” என்று அவளை ஓரக்கண்ணில் ஏறிட, “ம்ம், அவர் அப்பா ஓகே சொல்லிட்டதா சொன்னாரே. அதுக்கு என்ன?” என வினவினாள்.
“நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் மிது?” குறும்பு கூத்தாட வினவியதில் அவளிடம் செம்மை படர்ந்தது.
“இப்பவேவா…”
“சேச்சே! இப்ப இல்ல மிது… ஒரு நாலஞ்சு மாசம் கழிச்சு.” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
அதே புன்னகை அவளிடமும் மிளிர, “டேய்!” என அதட்டினாள்.
“கரியரே இப்ப தான் பில்ட் பண்ணிட்டு இருக்கோம். அதுவும் இல்லாம, எனக்கு ரெண்டு மூணு வருஷமாவது லவ் பண்ணணும்பா” என்றாள் கண் சிமிட்டி.
“ரெண்டு, மூணு வருஷம்? ரொம்ப நல்ல ஆசை!” விதுரன் உதட்டைச் சுளிக்க,
“ஏன்டா லவ் பண்ண மாட்டியா?” இடுப்பில் கை வைத்து அவள் முறைத்ததில் இடையைப் பற்றித் தன்னருகில் இழுத்தவன், “உன்னை லவ் பண்றதை ஃபுல் டைம் ஜாபா பார்க்கலாம்னு தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றேன்.” என்றான் குறும்பாய்.
“விதுரா…” எனச் சிணுங்கி விலகியவள், “அட்லீஸ்ட் டூ இயர்ஸ்!” என்று இரண்டு விரல்களைக் காட்டியதில், அவன் முகத்தில் டஜன் கணக்கில் சோகத்தை வழிய விட்டான்.
“வயசாகிட்டே போகுது மிது…” எனப் போலிக் கண்ணீர் வடிக்க,
“அடப்பாவி… யூ ஆர் ஜஸ்ட் 24. ம்ம்ஹும், அதுக்கே இன்னும் நாலு மாசம் இருக்கு. போய் வேலையைப் பாருடா… ஐ மீன் லவ் பண்ற வேலையை…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறி விட்டு உள்ளே ஓட, ஆடவனின் முகத்திலும் கொள்ளைப் புன்னகை கரை புரண்டோடியது.
——-
அனைவரும், வேலையினூடே காதல் வாழ்விலும் கொடி கட்டிப் பறக்க, இங்கு சத்ய யுகாத்ரனைக் கண்ணில் காண்பதே அரிதாகிப் போனது இதயாம்ரிதாவிற்கு.
இத்தனை மாதங்களும், அவன் படிப்பதற்காக அவளே அவனை விட்டுத் தள்ளி நின்றாள்.
இப்போதோ, அவன் அவளது கண்ணிலேயே படாமல் சுற்றியது கோபத்தைக் கிளறியது.
இரவிலும் கூடத் தாமதமாகத் தான் வருகிறான்.
படுத்ததும் உறங்கிப் பழகியதாலோ என்னவோ, கண்ணை மூடியதும் சத்யாவின் முகம் மனக்கண்ணில் தோன்றிட, அவனது வசீகரப் புன்னகையின் நினைவிலேயே தானாய் உறக்கம் தழுவியது.
அவன் வருமுன்னே உறங்கிப் போகிறாள்.
எப்படி மாற்றம் வந்ததென அவளுக்கும் தெரியவில்லை. நேரடியாய் தலையிட்டு அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தாமல், அவளை அவளாகவே மாற்றி இருந்தான் சத்ய யுகாத்ரன்.
இருப்பினும், அவனில்லாத வெற்றிடம் உணர்ந்தவளுக்கு, அவன் மீது சிறு கோபமும் எழுந்தது. அப்படியே பேசினாலும் அவனது பேச்சுகள் அனைத்தும் வியாபாரத்தைப் பற்றியும், ‘சாப்பிட்டியா’ என்ற சிறு சிறு அக்கறைப் பேச்சோடும் முடிந்து விடும்.
இருக்கும் கோபத்தை அவனது வீட்டிற்குச் சென்று மாலதியிடம் கொட்டுவாள்.
மாலதி சிரிப்பை அடக்கிக் கொள்ள, “சிரிக்காதீங்க அத்த” என முறுக்கிக் கொள்வாள்.
அடுத்த இரு மாதங்களும் மின்னல் வேகத்தில் கடந்திருக்க, அவ்விரு மாதங்களும் உற்பத்தி பல மடங்காய் பெருகி இருந்தது.
அன்று காலையில், இதயாம்ரிதாவிற்கு முன்னே கண் விழித்தான் சத்ய யுகாத்ரன்.
குளித்து உடை மாற்றி வந்த இதயாம்ரிதா, சத்யாவைக் கண்டு ஒரு கணம் உறைந்து பின் கண்டுகொள்ளாதது போலக் கண்ணாடி முன் நின்று தலை வாரத் தொடங்கினாள்.
அவளைப் பின்னிருந்து அணைத்தவன் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்திருக்க, முறுக்கேறிய புஜங்களின் மீது பரவிய பார்வையை வலுக்கட்டாயமாகத் திருப்பிக் கொண்டவள், “என்ன அதிசயம்… உங்க ஹஸ்பண்ட் டியூட்டி ஞாபகம் வந்துடுச்சோ?” என்று குட்டினாள்.
அதில் சிரித்தவன், “கோபமா பொண்டாட்டி?” என்று கழுத்தில் வாசம் பிடிக்க, மெல்லக் கரைந்து கொண்டிருந்த கோபத்தை இறுக்கிப் பிடித்தவள், “ரொம்பவே…” என்று அவனைத் தள்ளிவிட்டாள்.
“ப்பா… அப்புறம் ஏனாம் இந்த ரெட்டிஷ்?” என அவள் கன்னம் தீண்டியதில், அவளுள் பெரும் அவஸ்தை.
“அது வெட்கம், வேற டிபார்ட்மென்ட்…” என்று சிலுப்பிக் கொண்டு அங்கிருந்து நகர முற்பட, மேலுதட்டை மடித்துச் சிரிப்பை அடக்கிய சத்யா, “நானாடி ஹஸ்பண்ட் டியூட்டி பார்க்கல. நீ தான் லவர் டியூட்டி பார்க்காம நான் வர்றதுக்குள்ள தூங்கிடுற. காலைல நான் எந்திரிக்கிறதுக்கு முன்னாடி ஆபிஸ்க்கு ஓடிடுற?” எனக் குறைபட்டான்.
“ஆமா, நீங்க தான் என்கூடப் பேசக் கூட மாட்டுறீங்க. அதான் பழிக்குப் பழி…” என உதட்டைக் குவித்ததில், அவ்விதழ்கள் அவனது இரு விரல்களுக்குள் சிக்கிக் கொண்டது.
“ஷோரூம் வேலையா தான போயிருந்தேன் பொண்டாட்டி. அதுக்கு இவ்ளோ கோபமா? ஹ்ம்ம்…” எனக் கேட்டபடி அவள் முன் குனிந்தவன், “ரொம்ம்ம்ம்ப ஏங்கிப் போயிருக்கேன்டி…” என்று சிவந்த இதழ்களுக்கு ஒரு முத்தம் வைத்தான்.
பெருவிரல்கள் நிலத்தில் புதைய முத்தம் தந்த சிலிர்ப்பில் சிதறிய இதயாம்ரிதா, அவன் மீதிருக்கும் கோபத்தைக் காட்டும் விதமாய் அவனது அதரங்களுக்குத் தண்டனை வழங்கத் தொடங்கினாள்.
லேசாய் காயப்படுத்தி வைத்ததில், “ஆஆ…” என்று உதட்டைப் பிடித்துக் கொண்டவன், “என்னடி, கடிச்சு வைக்கிற?” என முறைத்தான்.
“இனிமே வேலை முக்கியம்னு போனீங்க, அவ்ளோ தான் சொல்லிட்டேன். கடிச்சு வச்சு ரத்தத்தைக் குடிச்சுடுவேன். பேசிக்கலி நான் ஒரு ரத்தக் காட்டேரி!” என்று முகத்தைக் குரூரமாக வைக்க முயல, அதையும் ரசித்து வைத்தவன், “பட் நான் ஒரு ஹனி ட்ரிங்கர்!” என்றபடி அவளிதழ்களில் தேனருந்தத் தொடங்கி அவளைத் திணற வைத்தான்.
அவனிடம் இருந்து தப்பித்து, முத்தத்தின் ஈரம் தந்த குளுகுளுப்புக் கொஞ்சமும் குறையாது, அலுவலகம் வந்தவளின் இதழ்களில் புன்னகை நிரந்தரமாய் வீற்றிருந்தது.
அவளது அறைக்குள் இரு ஜோடிகள் நின்றது கூட அவளுக்கு உறைக்கவில்லை. கனவுலகத்தில் மிதந்தவள் போல நாற்காலியில் சுழன்று டேபிளில் தாளமிட்டு நிமிர, அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தனர் அவளது ஜூனியர்கள்.
“ஹேய்! நீங்க எப்ப வந்தீங்க?” இதயா வினவியதில்,
“நீங்க வர்றதுக்கு முன்னாடி இருந்தே நாங்க இங்க தான் இருக்கோம் அண்ணி…” என்ற விதுரனின் கூற்றில் அசடு வழிந்தாள்.
“என்னக்கா, முகத்துல பல்ப் பிரைட்டா எரியுது?” மிதுனா கிண்டலாக வினவியதில், “ம்ம்… கரண்ட் பில் கட்டிட்டு வந்தேன்.” என வாரியவள், “சரி என்ன விஷயம், கும்பலா வந்திருக்கீங்க.” என்றாள் மிடுக்காக.
“உங்களுக்கு விஷயமே தெரியாதா?” பூமிகா கேட்டதும், அகிலும் “நீங்க எங்களைக் கூப்பிட்டுப் பொன்னாடை அணிவிச்சுத் தங்க மாலை எதுவும் போடுவீங்கன்னு பார்த்தா… வெறும் கையை வீசிட்டு வர்றீங்க.” என்று வருத்தம் போலக் கண்ணைத் துடைத்துக் கொண்டான்.
‘இந்தப் பன்னாடைக்குப் பொன்னாடை ஒரு கேடு!’ என்பது போல நால்வரும் அவனைப் பார்த்து வைத்தனர்.
“என்னடா, உருட்டிட்டு இருக்கீங்க வேலை நேரத்துல.” இதயாம்ரிதா பொறுமையிழந்து கேட்க,
அந்நேரம் ஸ்ரீராமும், பத்மப்பிரியாவும் வந்தனர்.
உள்ளே நுழைந்ததும் ஸ்ரீராம், “ச்சே… என்ன நடந்தாலும் செலப்ரேஷன் பண்ண மாட்டீங்களாடா… எப்பப் பாரு, ஒர்க்கஹாலிக்காவே இருக்குறது.” எனக் கடுப்படைய, பத்மப்பிரியாவோ, “கங்கிராட்ஸ் அம்ரி…” என இதயாவின் கையைக் குலுக்கினாள் மகிழ்வாக.
“என்னன்னு சொல்லிட்டு அப்புறம் பேசு!” எனக் கடுகடுத்த தோழியிடம், “நம்ம ஒளிரா புராடக்டை பாரிஸ் எக்ஸ்போல சேல் பண்ண பெர்மிஷன் குடுத்து இருக்காங்கடி. நீ மெயில் செக் பண்ணவே இல்லையா?” என்றதில் இதயாம்ரிதாவின் முகத்தில் கடும் அதிர்வு.
“என்ன உளறிட்டு இருக்க?” என்றபடி மடிக்கணினியைத் திறந்து மின்னஞ்சலைச் சரி செய்தவளுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.
“இது எப்படி பாசிபிள்?” அவள் நிமிரும்போது அங்கு யாருமே இல்லை. கதவின் மீது சாய்ந்து கையைக் கட்டிக்கொண்டு அவளவன் மட்டுமே சின்னச் சிரிப்புடன் நின்றிருந்தான்.
கையை விமானத்தில் பறப்பது போலச் சைகை காட்டியவன், “பறப்போமா ஹார்ட்டி!” என்று குறும்பாய் கேட்டதில், “எப்படி இதெல்லாம்?” என்றாள் திகைப்பு நீங்காமல்.
“அப்படித் தான்!” எனச் சிரித்தவன் அவளருகில் நெருங்கினான்.
அவளோ, “இதெல்லாம் செஞ்சா தான் நான் உங்களோட இருப்பேன்னு சொன்னேனா சத்யா? இதுக்காகத் தான் ரெண்டு மாசமா என்கிட்டக் கூடப் பேசாம ஓடிட்டு இருந்தீங்களா? இந்த வருஷம் இல்லைன்னா, அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்… இல்ல கண்டிப்பா அங்க பிசினஸ் பண்ணியே ஆகணும்னு அவசியம் இருக்கா? நீங்க உங்க கேரியரைப் பார்க்காம, எதுக்கு இப்படி ஓடிட்டு…” தன்னை மீறிப் பொங்கிக் கொண்டிருந்தவளின் வார்த்தைகளை விழுங்கியது அவனது முத்தம்.
வீட்டில் அவள் செய்த காயத்தை அவன் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
“ம்ம்ம்ம்ம்…” அவள் விடுபட முயல, தேனிதழ்களில் தேய்ந்து போனவன் வண்டாய் அவளை மொய்த்தான்.
உதட்டில் காயம் செய்து, சிறு துளியாய் இரத்தச் சுவையை உணர்ந்த பிறகே அவளை விட்டான்.
“ஆஆ… ப்ரொஃபி எரியுது!” என்று அவனைப் போலவே முறைக்க,
“பனிஷ்மென்ட்! உன் கரியர், என் கரியர்னு பிரிச்சுப் பேசுனதுக்கு.” என்றான் கண்டனமாக.
அதில் சட்டென அமைதியானவள், “ரிஜெக்ட் பண்ணதை எப்படி அப்ரூவ் பண்ணுனாங்க ப்ரொஃபி. இப்ப சேல்ஸ் பல மடங்கு பெருகி இருக்கு தான். ஆனாலும்…” என இழுத்தாள்.
“நான் மறுபடியும் லண்டன் மேகஸின்க்கு நம்ம ரெண்டு பேரோட ஆட் அனுப்பி வச்சேன். கொஞ்சம் மாடிஃபை செஞ்சு.” என்றான்.
“நம்மளோட ஆட்?”
“ம்ம்… லாஸ்ட் டைம் எடுத்த ஆட்ல ஒரு பார்ட் எடிட்டிங் பண்ணாம இருந்துச்சு. அதை எடிட் செஞ்சு அனுப்புனேன். நம்ம கெமிஸ்ட்ரி அவங்களை இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு போலருக்கு…” என்றவன் அலைபேசியில் புகைப்படத்தைக் காட்டினான்.
லண்டனின் பிரபல மேகஸினின் முதல் பக்கத்தில், ஒளிராவின் விளம்பரத்துடன் இதயாவும் சத்யாவும் நெருங்கி நின்று ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சியும் ஒளிர்ந்தது.
“வாவ்! செம்ம அழகா இருக்கே இது?” அவள் கண்களில் ஹார்ட்டு விட,
“அதான் செலக்ட் ஆகிடுச்சு… நம்ம முகராசி அப்படி!” என்றான் ஓரப் புன்னகையுடன்.
“ஓஓஓஓஓ! ஆனா ஃபேஸ் வேல்யூ முக்கியம் இல்லைன்னு சொன்னது மாதிரி இருந்துச்சே!” அவள் உதடு சுளிக்க,
“அது மட்டுமே முக்கியம் இல்லைன்னு தான் சொன்னேன். நம்ம குவாலிட்டிலயும், அதை எப்படி மக்கள்கிட்டச் சேர்க்குறோம்ன்ற தெளிவும், நம்மளை நம்பி கான்ட்ராக்ட் எடுக்குறவங்களுக்குத் தேவை இதயாம்மா… அதை ஓரளவு செட் பண்ணியாச்சு, இப்ப இந்த ஃபேஸ் வேல்யூக்கு மதிப்பு இருக்கும்.” என்று இரு புருவத்தையும் உயர்த்தியவனை ‘ஆ’ வெனப் பார்த்தவள்,
“அச்சோவ்வ்… ச்சோ கியூட்ட்!” என்று அவன் கன்னம் கிள்ளிக் கொஞ்சியவள், “யூ டிட் இட் ப்ரொஃபி” என்று குதூகலத்துடன் அவனைக் கட்டிக் கொண்டாள்.
அவளைப் புன்னகையுடன் வாரி அணைத்தவன், “அதே ஹோட்டல், அதே ரூம் புக் பண்ணிடலாமா?” எனக் கிசுகிசுப்பாய் வினவிட, கன்னங்கள் சூடேறிப் போனது அவளுக்கு.
“அதே பழிவாங்கலா?” கேலியாய் அவள் வினவ,
“ஹ்ம்ம்… பெட்ல மட்டும்!” என்றவனின் குறும்பில் நாணிச் சிவந்து அவன் மார்பில் அடைக்கலமானாள் இதயாம்ரிதா.
—–
லண்டன் மாநகரத்தில் இருக்கும் பாரிஸிற்கு வந்திறங்கினர் நான்கு ஜோடிகளும்.
இந்தக் கண்காட்சி முடிந்த பிறகே திருமணம் என ஸ்ரீராமும் பத்மப்பிரியாவும் முடிவாய் இருக்க, “அப்போ ப்ரீ வெடிங் ஷுட் எடுக்கலாம் வாங்க.” என்று அவர்களையும் கொத்தாகத் தூக்கி இருந்தனர்.
போன முறை வந்த அதே பிரம்மாண்ட ஹோட்டலில் அதே அறையை உண்மையாகவே புக் செய்திருந்தான் சத்ய யுகாத்ரன்.
இதயாம்ரிதாவிற்கு மறுநாள் நிகழப்போகும் கண்காட்சி பற்றிய எண்ணம் சிறிதும் இல்லை. இத்தனை நாள்கள் ஏற்படாத தாபமும், கிளர்ச்சியும் ஏனோ பாரீஸிற்குச் செல்லப் போவதாக முடிவெடுத்த பின் அதீதமாய் தாக்கியது.
முதன்முறை நேர்ந்த கூடலின் நினைவு வேறு அவளை அவஸ்தையில் ஆழ்த்தியது.
அவனுக்கோ, தன்னால் தடைப்பட்ட தன்னவளது தொழில் உலக அளவில் மீண்டும் தொடர வேண்டுமென்ற தீர்மானம் அளவுக்கதிகமாக இருக்கவே, எழுந்த கிளர்ச்சிகளை உள்ளுக்குள் அடக்கிக்கொண்டு, அவ்வப்பொழுது அவள் பார்த்த தாபப் பார்வையில் இருந்து தப்பித்தான்.
மீண்டுமொரு கூடலில், நிச்சயமாய் இருவருக்குள்ளும் எவ்விதச் சிறு சுணக்கமும் இருக்கக் கூடாது என்பதே அவனது பேராசை.
கிட்டத்தட்ட அவளை முழுதாய் அவனிடம் சரணடைய வைத்தாகிற்று! இதோ இன்னும் சில நாள்கள். பாரிஸ் கண்காட்சி முடிந்த நொடியே அவளை அள்ளி அணைத்து, இனிச் சிறிதேனும் இரு தேகங்களின் பிரிவில்லாது நெஞ்சினுள்ளே வைத்து அடைகாத்துக் கொள்ள வேண்டுமென்ற பரபரப்பு அவனுள் ஊடுருவியது.
ஆனால், இப்போதோ மறுநாள் வரை கூடக் காத்திருக்க, இருவருக்கும் பிடித்தமில்லை என இருவரது விழித் தீண்டல்களும் உரைத்தது.
பாரிஸ் ஹோட்டலில் இதயா சத்யாவிற்குத் தவிர, ஆண்களுக்கு ஒரு அறையும், பெண்களுக்கு ஒரு அறையுமாகப் போடப்பட்டிருக்க, ஸ்ரீராம் கொந்தளித்தான்.
“என்ன சொல்லிடா கூட்டிட்டு வந்தீங்க? ப்ரீ வெடிங் ஷுட்னு தான? அப்புறம் ஏன்டா தனி ரூம் போட்டீங்க எங்களுக்கு.” எனக் கேட்டதில் பத்மப்பிரியாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“அண்ணா… நீங்க ப்ரீ வெடிங் ஷுட்க்குத் தான் வந்திருக்கீங்க. ப்ரீ ஹனிமூன்க்கு இல்லை…” என்று விதுரன் அவனைத் தரதரவென அறைக்கு இழுத்துச் சென்று, “வயசுப்பையன் நானே, என் ஆளை விட்டுத் தனி ரூம்ல தான் இருக்கேனாம்.” என்றதில், ஸ்ரீராம் அவன் தலையில் நறுக்கெனக் கொட்டினான்.
“நான் மட்டும் என்ன வயசான ஆளா? நானும் வயசுப்பையன் தான்டா. பிரியா…” எனப் பக்கத்து அறைக்குச் செல்லப் போனவளை ஏக்கமாய் பார்த்திட, அவளோ சிரிப்பை அடக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
அகில் தான் ஸ்ரீராமின் தோளில் கையைப் போட்டு, “புரிஞ்சுக்கோங்கண்ணா, ஆம்பள இரக்கப்பட்டா கடன்காரன்… பொம்பள இரக்கப்பட்டா புள்ளத்தாச்சி!” என்று எப்போதோ படித்த, ஆட்டோவிற்குப் பின்னால் இருந்த வாசகத்தை நினைவுபடுத்தி ஆறுதல் செய்ய, அதில் வெறியான ஸ்ரீராம் “நான் இரக்கப்படலைன்னா இப்ப நீ டெட் பாடிடா!” என்று அடிக்க வந்ததில் அவன் ஓடியே விட்டான்.
நேராக, மூடி இருந்த பால்கனியைத் திறந்தவனுக்குச் சில்லென்ற குளிர் ஊடுருவ, லேசாய் கழுத்தைத் திருப்பிப் பார்த்தவனின் விழிகளில் சின்னதொரு ரசனை.
அதே பக்கத்துப் பால்கனியில், கூந்தலின் அசைவுகளை அடக்கியபடி கையைக் குறுக்கி நின்று கொண்டிருந்தாள் பூமிகா.
அன்று அகில் காதலை உரைத்த பிறகு, இருவரும் அதைப் பற்றிப் பேசவே இல்லை.
மீண்டும் அவன் கூறுவான் என்று அவளும், அவளே ஆரம்பிக்கட்டும் என்று அவனுமாகக் கண்களில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு எப்போதும் போலவே இருந்தனர்.
பூமிகா எதேச்சையாகப் பக்கவாட்டில் திரும்பிட, அங்கு அகில் இருப்பதைக் கண்டு ஒரு கணம் திகைத்துப் பின் அசைய இயலாது உறைந்தாள்.
இருவரும் மற்றவரின் விழிகளில் கட்டுண்டு நகர இயலாது திணறினர்.
அவ்வொற்றைப் பார்வை, மனத்தினுள் அலையாய் எழும்பும் காதலையும் கூடப் பறை சாற்றியது.
“நம்மளும் ஹனிமூன்க்கு இங்க வரலாமா பூமி?” நேரடியாக அவன் தேனிலவுக்குத் திட்டமிடத் தொடங்க, “அதுக்கு மொதல்ல கல்யாணம் ஆகணும்!” என்றாள் மெதுவாக.
“அப்போ அதை ஃபர்ஸ்ட் பண்ணலாமா?” என ஆர்வமாய் வினவினான்.
“நீ உண்மையாவே என்னை லவ் பண்றியா அகி?” அவளிடம் சிறு சுருக்கம்.
அதில் முறைத்தவன், “ஏன் இந்த டவுட்டு?” என்றான்.
“இல்ல… திடீர்னு வந்து லவ் பண்றேன், நெஞ்சு அடைக்குதுன்னு ஹார்ட் பேஷண்ட் மாதிரிப் பேசுன… அதுக்கு முன்னாடி வரை நீ நார்மலா தான பழகுன?”
அந்த நிலையிலும் கேலி செய்தவளை அதிகமாய் முறைத்தவன், “ஆமா நீ கூடவே இருந்ததுனால எனக்கு ஒன்னும் பெருசா பாதிப்பு இல்லையோ என்னவோ… பட் நீ’ன்னா எனக்கு ஸ்பெஷல் தான். ஆனா நீ என்னை விட விதுரன் கூட தான் ஈஸியா பழகுவ. அதுவே உன்னை இன்னும் நெருங்கனும்னு நினைச்சு, பிடித்தத்தை அதிகம் ஆக்கிடுச்சோ என்னவோ… பட் எனக்குப் புரியல. அன்னைக்கு நான் பக்கத்துல வந்ததும், நீ நெர்வஸ் ஆனதும் தான் எனக்கு ஒரு மாதிரி சம் பீலிங்…” என்று கேசத்தைக் கோதிக் கொண்டான்.
அவனை ரசித்துப் பார்த்த பூமிகா, “நீ கூட தான் மிதுனா கூட க்ளோசா இருப்ப. ஆனா எனக்கு உன்னைக் காலேஜ்ல இருந்தே பிடிக்கும்.” என்றதில் அவனுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறந்தது.
அவனோ ஒன்றும் பேசாமல் மேலே பார்த்து ஃபீல் செய்ய, “நான் இங்க பேசிட்டு இருக்கேன். நீ என்னடா மேல பார்த்துட்டு இருக்க?” என வினவினாள்.
“இரு பூமி, இளையராஜா பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு, நடு வானத்துல உன்கூட டூயட் ஆடிட்டு இருக்கேன்…” என்று ஃபீல் செய்து சொன்னவனைக் கேவலமாகப் பார்த்து வைத்தவள், “அடப் பரதேசி! கூடவே இருக்கும்போது ஏன்டா கற்பனைல ஆடிட்டு இருக்க?” என்றாள் தலையில் அடித்து.
“இந்தப் பால்கனிக்கும், அந்தப் பால்கனிக்கும் இருக்குற கேப்பைப் பார்த்தியா? தாவி வர்றதுக்கு நான் கில்லி விஜயும் இல்ல, நீ த்ரிஷாவும் இல்ல. அதான்…” எனப் பெருமூச்சு விட்டு மீண்டும் மேலே பார்க்க, “போடா பைத்தியமே!” என்று சிரித்து விட்டு உள்ளே சென்றவளை, இரு பெண்களும் இடுப்பில் கையூன்றிக் கேலியாய் ஏறிட்டதில், பூமிகா நாணத்தில் குளித்தாள்.
———–
அறைக்குள் நுழைந்ததுமே சத்ய யுகாத்ரன் மற்றும் இதயாம்ரிதாவின் மௌனத்தின் கனம் அதிகரித்தது.
அவனது பார்வை, துளியும் அவளை விட்டு நகராதிருக்க, படபடத்த இதயத்துடன் அந்தப் பெரிய ஃபிரென்ச் ஜன்னலைத் திறந்து சற்றே மூச்சு வாங்கினாள்.
அவளும் ஆவலாய் எதிர்பார்த்த தனிமை தான். ஆனாலும், அவனது தாபப் பார்வையே மூச்சு முட்டும்போது, மற்றவற்றை நினைக்கவே உள்ளம் குளிர்ந்தது.
“ஸ்ஸ்ஸ்… குளிருதுடி! ஜன்னலை க்ளோஸ் பண்ணு.” என்று அவளைத் தாண்டி ஜன்னலை அடைத்தவன் நகரவில்லை.
ஜன்னலுடன் அவளை அணைகட்டிக் கொண்டான்.
“இதயா…” மென்மையாய் சத்யா அழைக்க, அவளுக்கு “ம்ம்ம்” கூடச் சொல்ல இயலவில்லை.
“ஹார்ட்டி…” இம்முறை கிண்டலாய் அழைத்ததில், “ம்ம்” என்றாள் கடினப்பட்டு.
“என்னாச்சுடி?” இரு விரலால் அவளது சிவந்த கன்னங்களில் கோடிழுத்தான்.
ஒற்றைத் தொடுகையில் உயிர்க் குடம் நிறைந்தது போலவே, அதில் கண் மூடி இலயித்துப் போனவள், எப்போது மெத்தைக்கு வந்தாளென்று கூடத் தெரியவில்லை.
வெறுப்பிலும், வஞ்சத்திலும், கைகூடா காதலின் விரக்தியிலும், நேர்ந்த முதல் கூடலை ஒட்டு மொத்தமாய் மறக்க வைப்பது போல, பூவிலும் மென்மையாய் தென்றலிலும் இதமாய் அவளை அணுகினான் சத்ய யுகாத்ரன்.
மீண்டும் அவனுக்கு முத்தங்கள் திருப்பித் தர வேண்டுமென்ற நிலை கூட மறந்து, அவனது கைப்பிடியில், அவன் கேட்கும் அசைவுகளுக்கு இசைந்து கொடுத்து, முழுக்க முழுக்கத் தன்னை மொத்தமும் அவனிடம் நிம்மதியாய் கொடுத்து விட்டு, இன்பமெனும் பெருங்கடலில் வீழ்ந்தவளுக்கு எழும் வழி தான் தெரியவில்லை.
அவளிடமிருந்து எதிர் முத்தங்களை அவனும் எதிர்பார்க்கவில்லை. தனது தீண்டலில் நெளியும் அழகு மேனியின் ஒவ்வொரு வளைவுகளும், அவன் மீதிருக்கும் நம்பிக்கையையும் மலையளவு காதலையும் வெளிக்கொணர, காமத்தைக் காட்ட அவன் மட்டும் போதாதா?
மோகமெனும் முடிவிலியில் சிக்கித் திணறியவனுக்கும், மோகம் குறைக்கும் வழி தெரியவில்லை.
இத்தனை வருடங்களாக அவனுள் புதைத்து வைத்திருந்த புத்தம் புது தாபமிது.
புது ரசிப்புகள் அவன் தீட்ட, புது ஸ்பரிசங்கள் அவளானாள்
புது முத்தங்கள் அவன் மீட்ட, புது வெட்கங்கள் அவளானாள்.
புது வளைவுகள் அவனறிய, புது சிணுங்கல்கள் அவளானாள்.
கூடிப் பிரிந்திடும் வேளையிலும் கூட, பெண்ணின் கண்மணிகளில் இதழொற்றிப் புது நேசம் அவன் காட்ட, புதுக்காதல் அவளானாள்.
அவளை விட்டு நொடியும் பிரியாது பக்கவாட்டில் சரிந்த ஆடவன், “இன்னைக்கு என் ஹஸ்பண்ட் டியூட்டி ஓவர் டைம் ஆகிடுச்சுடி!” என்றான் மயக்கம் கலையாது.
அவன் புறம் கழுத்தைத் திருப்பியவளின் கண்களிலும் கிறக்கத்தின் மிச்சமிருக்க,
“ஆனா, நான் இன்னும் என் லவர் டியூட்டியை ஸ்டார்ட் பண்ணல ப்ரொஃபி!” என்றாள் கேலி நகையுடன்.
ஒரு கணம் புரியாமல் அவன் புருவம் சுருக்கிட, அவளோ அவனுக்குப் புரிய வைக்கும் முயற்சியில், இத்தனை நேரம் தான் வாங்கிய முத்தங்களைத் திருப்பித் தரும் நோக்கோடு அவன் மீது சரிந்தாள்.
சத்ய யுகாத்ரனின் இதழ்கள் புன்னகையில் விரிய, “ஐ லவ் யூ இதயா! மை பேபி பாஸ்!” என்று கிசுகிசுத்தவனின் மொத்தக் கம்பீரத்தையும் தன்னுள் சுருட்டிட முனைந்தாள் இதயாம்ரிதா.
ஜன்னல் மெல்லத் திறந்திருந்ததில், அதன் வழி உள் நுழைந்த மென்காற்று முழு அறையையும் தன் வசமாக்கியது போலவே, தத்தம் துணையை வசியப்படுத்தும் முயற்சியில் இறங்கிய இரு இதயங்களின் வேகமூச்சுகளின் அதிர்வலைகள் தாளாது, ஜன்னல் திரைச்சீலையும் அசைந்தாடத் தொடங்கியது.

